Sunday, August 30, 2009

கிச்சடி 31.08.2009



சிங்கப்பூர்ல இருந்து ஜெனீவாவுக்கு வந்த நம்ம ஆபீஸ் நண்பருக்கு உடம்பு கொஞ்சம் சரியில்லாம போச்சு. வறட்டு இருமல். ரெண்டு நாள் ஆகியும் குறையலயேன்னு ஒரு டாக்டர் கிட்ட போனோம். 1 நிமிஷம் நண்பர் சொன்னதை டாக்டர் கேட்டுட்டு 'உங்களுக்கு ரெண்டு ப்ராப்ளம் இருக்கு. தொண்டைல புண் இருக்கு... லங்ஸ் அஃபெக்ட் ஆயிருக்கு... ரேடியோ எடுக்கணும்'னார். ஏ.எம்மா எஃப்.எம்மான்னு கேக்கறதுக்குள்ள எக்ஸ்ரேக்கு ஆளைக் கூப்பிட்டார். எல்லாம் முடிஞ்சு 'ஒண்ணும் பயப்படறபடி ஒண்ணும் இல்லை'ன்னு சொல்லிட்டு 2 வாரத்துக்கு ஆன்டிபயாடிக் மாத்திரை குடுத்தார். அதுவும் 1000mg. அவ்வளவு ஸ்ட்ராங் டோஸெல்லாம் சரியான்னு தெரியல. கூடவே பில்லும் குடுத்தார். 320 ஃப்ரான்க். அடங்கப்பா.... நம்மூர்ல இதுக்கு மிஞ்சிப்போனா 350 ரூபா (8 ஃப்ராங்க்) ஆகலாம். இதுல ஃபாலோ அப் வேறயாம்... 5 நாள் கழிச்சு. போங்கடா.... நீங்களும் உங்க ஆஸ்பத்திரியும்னு குதிகால் பொடனில அடிக்க ஓடிவந்தோம்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ஸுரிக்ல இருந்து ஜெனீவாவுக்கு ரயில்ல போகும்போது படிக்கறதுக்கு எடுத்துக்கிட்ட புத்தகம் 'The Shepherd'. Frederic Forsyth எழுதிய நாவல். ஏற்கெனவே ரெண்டு தரம் படிச்சதுதான்னாலும் ரொம்ப இன்ட்ரெஸ்டிங்கா இருக்கும். உலகப் போர் சமயத்துல, கிறிஸ்துமஸ்க்கு முந்தைய சாயுங்காலம் ஒரு விமானம் கட்டுப்பாடுகளை இழந்து தவிக்கும்போது வேற ஒரு விமானம் வந்து அதை பாதுகாப்பா ஏதோ ஒரு விமானதளத்துல இறக்கி விட்டுட்டுப் போயிடும். அப்பறம்தான் தெரியும் காப்பாத்தின விமானமும் 15 வருஷத்துக்கு முன்னயே ஒரு விபத்துல சிக்கி உருத்தெரியாம எரிஞ்சுபோச்சுன்னும், அந்த விமானியும் இறந்து போயிட்டார்னும். நம்ம இந்திரா சௌந்தரராஜன் டைப் அமானுஷ்ய நாவல்னு வெச்சுக்கங்களேன்.

கொஞ்ச நேரம் கழிச்சு எதிர்ல உக்காந்திருந்தவர் மெள்ள பேச்சுக் குடுக்க ஆரம்பிச்சார். பேச்சு வாக்குல புத்தகத்தைப் பத்தியும் கேட்டார். இதிலெல்லாம் அவருக்கு நம்பிக்கை இல்லைன்னும், எனக்கு நம்பிக்கை இருக்கான்னும் கேட்டார். ஒரு சுவாரஸ்யத்துக்காக எனக்கு நம்பிக்கை உண்டுன்னு சொல்லி வெச்சேன். இன்னும் 2 மணி நேரம் ஓட்டியாகணுமே. கொஞ்ச நேரம் இதைப் பத்தியே பேசின பிறகு நான் சொன்னேன் "காப்பாத்தின விமானி நாந்தான்னு சொன்னா நீங்க நம்பவா போறீங்க?"ன்னு. கூடவே லேப்டாப் பேக்ல தொங்கிக்கிட்டுருந்த சில ஏர் ஃபோர்ஸ் லேபில்களையும் காமிச்சேன். எல்லாம் சிங்கப்பூர் ஏர் ஷோல வாங்கின டுபாக்கூர் லேபில்க. என்ன நினைச்சாரோ சட்டுனு பேசறதை நிறுத்திட்டு வெளிய வேடிக்கை பாக்க ஆரம்பிச்சுட்டார். இறங்கும்போது கூட சொல்லிக்கலை. அதுக்கப்பறம் புத்தகம் படிக்கற மூடே இல்லை. நினைச்சு நினைச்சு சிரிச்சுக்கிட்டிருந்தேன். ஒருவேளை 'இந்தப் பைத்தியம் நம்மளை கடிக்காம விட்டுதே'ன்னு அவரும் பெருமூச்சு விட்டிருக்கலாம்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

நம்மளை மாதிரி 'பிரபல' பதிவர்கள் (நம்பாட்டி போங்க.. எனக்கென்ன..) சினிமாக்களை விமர்சனம்கற பேர்ல கிழி கிழின்னு கிழிக்கிறோமாம். சினிமா உலகே கதிகலங்கி இருக்காம். தமிழ்சினிமா.காம்ல தலையங்கமே எழுதியிருக்காங்க. அடடா... யோசிச்சுப் பாத்தா...

உண்மையா இருந்தா... : ஹய்யோ... நாம எல்லாம் நிஜமாவே பிரபலம் ஆயிட்டோமா? படம் பாக்கப் போறவங்க எல்லாம் பதிவர்களோட விமர்சனத்தைப் பாத்துட்டுத்தான் போறதா வேண்டாமான்னு முடிவு பண்றாங்களா? விகடன், குமுதம் மாதிரி 75 வருஷமா வெளியாகிற பத்திரிக்கைகள்ல வர விமர்சனங்களை விட பதிவர்கள் விமர்சனத்துக்கு வேல்யூ அதிகமா? இனிமே புதுப் படம் ப்ரிவ்யூக்கு பதிவர்களுக்கு அழைப்பு வருமா? பாஸிடிவ்வா விமர்சனம் எழுதினா " ............... அவர்களின் பாராட்டைப் பெற்ற படம்"னு நாளிதழ்கள்லயும் போஸ்டர்கள்லயும் பாக்கலாமா? ஐ... ஜாலியா இருக்கே....

உண்மையா இல்லைன்னா.... : அட போங்க.... நாம இப்பிடியே 'பிரபல'மா இருந்துட்டுப் போறோம்....

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

தங்கமணி பிரபு அவர்களின் நேற்றைய இடுகைல இருந்த வீடியோவைப் பாத்த பிறகு மூச்சே நின்னுடுச்சு. தாலிபான்க கூட கொஞ்சம் பரவால்லயோன்னு தோணிடுச்சு..... இந்த அரக்கர்களுக்கு கொஞ்சமாவது மனிதாபிமானம், இரக்ககுணம் இதெல்லாம் வராதான்னு வேண்டிக்கிறதைத் தவிர வேறு வழி தெரியல....


Thursday, August 27, 2009

வெட்டாப்பு

போன ஒரு மாசமா வேலைப் பளு அதிகமாயிடுச்சு. அது மட்டுமில்லாம ஜெனீவாலயே 1 மாசம் இருக்கும்படியா ஆகிப்போச்சு. அதனால பதிவு எழுதறதுல ஒரு தேக்கம். பழமைபேசியார் சொன்ன மாதிரி ஒரு வெட்டாப்பு விழுந்து போச்சு. எழுத முடியலைன்னாலும் அப்பப்ப ரீடர்ல நாம ஃபாலோ பண்றவங்களைப் படிச்சுக்கிட்டுதான் இருந்தேன்.

சரி... வேலைகளுக்கு நடுவுல போன மாசம் கிடைச்ச சில அனுபவங்களை பகிர்ந்துக்கிட்டு மறுபடியும் எழுத்துப்பணி(!!)யை ஆரம்பிச்சுடுவோம்னுதான் இந்த துரித இடுகை.

1. க்லேஸியர் 3000 (Glacier 3000) : இது ஸ்விஸ் ஆல்ப்ஸ்ல ஒரு முக்கியமான மலையுச்சி. 3000 அடி உசரத்துல இருக்கு. பக்கத்துலயே 'லே தியப்லரே' (Les Diablarets) னு ஒரு இடம். பல சிறந்த விளையாட்டு வீரர்கள், ஹாலிவுட்/பாலிவுட் நடிகர்கள்னு பல பிரபலங்கள் தங்களோட விடுமுறை வீடுகளை இங்க வெச்சுருக்காங்க.

ஜெனீவால இருந்து மோந்த்ரூ போய், அங்கிருந்து ரயில் மாறி ஸ்டாட் (GStaad) போய், அங்கிருந்து பஸ்ல 1/2 மணிநேரப் பயணத்துல தியப்லரே கேபில் பஸ் ஸ்டேஷன் போய்... அங்கிருந்து கேபில் பஸ்ல 1/2 மணி நேரம் போனா... அப்பாடா.... ஒரு வழியா மலை உச்சிக்கு போய் சேரலாம். ரெண்டு மலை உச்சிகளுக்கு நடுவுல எந்த சப்போர்ட்டும் இல்லாம கேபில் பஸ்ல போறது ஒரு த்ரில்லிங் பயணம்.

டூரிஸ்டுகளும், உள்ளூர் மக்களும் கோடைகாலத்துல மலைநடைக்காகவே (hiking) இந்த ஏரியாவுக்கு வராங்க. ஸ்விஸ் ஒப்பன் டென்னிஸ் போட்டி ஒவ்வொரு வருஷமும் 'ஸ்டாட்'லதான் நடக்குது. நான் போன அன்னிக்கு ஃபைனல்ஸ்.

படங்கள்

2. யுங்ஃப்ரோ (Jungfrau) : இது ஐரொப்பாவின் உச்சின்னு சொல்லப்படுது. ஐகெர், மோன்க் மற்றும் யுங்ஃப்ரோயோ (Eiger, Monch & Jungfraujoch) மலை உச்சிகள் மூணும் சேர்ந்தது. டூரிஸ்டுக மொய்க்கிற இடம். ஸ்விஸ் டூர் பட்டியல்ல முதல் இடம்.

ஜெனீவா-பெர்ன்- இன்டர்லாகன்-லாடர்ப்ருன்னன்-க்லெய்ன்-யுங்ப்ஃரோ அப்படின்னு ஒரு நெடும் பயணம். ரயில் மாறி மாறி போய் சேர 5 மணி நேரம் ஆயிடுது. (இதே தூரம் இந்தியாவுலன்னா கண்டிப்பா 12 மணி நேரம் ஆயிடும்.) யுங்ஃப்ரோவுக்கு போற ரயில் பாதை முக்கால்வாசியும் மலையைக் குடைஞ்சு உள்ளயேதான். அதுக்குள்ளயே ரெண்டு மூணு ஸ்டேஷன்க வேற. மேல போனதும் சுத்தி வ்யூ பாக்கும்போது போன அலுப்பெல்லாம் தீந்துடும். கண்கொள்ளாக் காட்சிகள். பரந்த க்லேசியர். அப்பிடியே பனி ஆவியாகி மேகம் கிளம்பறது பாத்துக்கிட்டே இருக்கலாம். ஆல்ப்ஸோட பல முக்கியமான மலை உச்சிகள் எல்லாம் இங்க இருந்தே பாத்துடலாம்.

ஐசை குடைஞ்சு உள்ள ஒரு பெரிய ஐஸ் பேலஸ். அங்கங்க ஐஸ் சிற்பங்கள். குளு குளுன்னு தரை லேசா வழுக்கிக்கிட்ட்டே நின்னு பாக்கறது தனி அனுபவம். அப்பிடியே அங்க 'பாலிவுட் ரெஸ்டாரண்ட்'ல உக்காந்து ஒரு பனோரமிக் வ்யூவோட அட்டகாசமான லஞ்ச். (சும்மா சொல்லக்கூடாது... ஜெனீவால இருக்கற இந்திய ரெஸ்டாரண்டுகளை விட கம்மி விலைல சூப்பர் டேஸ்ட்...)

3. பதிவர் 'டுபுக்கு'வுடன் ஒரு சந்திப்பு : குடும்பத்தோட 1 வாரம் ஸ்விஸ் சுற்றுப்பயணம் வரதா சொல்லியிருந்தார். யதேச்சையா என்னுடைய 2 வார வேலை 4 வாரம் இழுத்துடுச்சு. அவரை சந்திக்கும் வாய்ப்பும் கிடைச்சுது. 4 நாள் ஊரெல்லாம் சுத்திட்டு ஜெனீவா வந்தார். முதல்நாள் சாயங்காலம் ஜெனீவா நீர்ப்பீய்ச்சி (fountain-க்கு தமிழ்!!) பக்கத்துல சந்திச்சோம். 'ஹலோ டுபுக்கு'ன்னு அவங்க ஃபேமிலி முன்னால கூப்பிட சங்கடமா இருக்குமேன்னு நினைச்சேன். நல்லவேளை... மெயில்ல உண்மையான பேர் இருந்ததால அந்த சங்கடம் தீர்ந்தது. நெடுநாளைய நண்பர்கள் மாதிரி டக்குனு ஒட்டிக்கிட்டோம். நாலு நாளும் ப்ரெட், ஜாம்னு கொஞ்சம் காஞ்சு போயிருந்த நாக்குக்கு ஒரு இந்திய ரெஸ்டாரண்டுக்கு போய் ஒரு கட்டு கட்டுனதும் மனுஷன் தெம்பாயிட்டார். மறுநாள் மாலையும் சந்திச்சு இன்னொரு ரெஸ்டாரண்ட்... இன்னொரு கட்டு... (பில்லும் அவரே கட்டிட்டாரு... ரொம்ப நல்லவரு) இரண்டு பொன்மாலைப் பொழுதுகள்.

பதிவர் 'டுபுக்கு', நான் (என் கையில் இருப்பது அவரின் இரண்டாவது பெண்)

Wednesday, July 22, 2009

(சு)வாசித்ததும்.... யோசித்ததும்...

முந்தைய பதிவுகள் ...1 ...2 ...3 ...4 ...5 ...6 ..7



Tao of Physics
Author : Dr Fritjof Capra

விஞ்ஞானம், ஆன்மிகம் இரண்டிலும் நம்பிக்கை உள்ளவர்களுக்கு இந்தப் புத்தகம் மிகவும் பிடிக்கலாம். நவீன இயற்பியலையும் கீழை நாடுகளின் நம்பிக்கைகளையும் இணையாய் வைத்து பார்க்கும் புத்தங்களில் முக்கியமான ஒன்று. பல சர்ச்சைகளைக் கிளப்பியிருந்தாலும் பலராலும் ஏற்றுக்கொள்ளப் பட்டது.

பொதுவா எல்லாரும் சொல்றதுண்டு "நம்ம வேதங்களில் சொல்லாததா? இன்னிக்கு அறிவியல் சொல்ற எல்லாம் எங்காளுக என்னிக்கொ சொல்லி வெச்சுட்டாங்க"ன்னு. இதுவும் அதேமாதிரி வரிசைல ஒரு புத்தகம்னு சிலர் நினைக்கலாம். ஆனால் என் பார்வையில், அவர் சொல்லியிருக்கறது, நவீன இயற்பியல் எப்பிடி கீழை நாடுகளின் தத்துவ கட்டமைப்புக்குள்ள (philosphical framework) தன்னை பொருத்திக் கொள்ள இடம் கொடுக்குதுங்கறதுதான். அதாவது ஒரு அறிவியலாளனுக்கு 'ஆராய்ச்சி'யின் மூலம் ஞானம் கிடைச்சா கீழை நாட்டவருக்கு 'அனுபவ'த்தின் மூலமாவே கிடைச்சுருக்கு. இந்த ஒப்புமை மேலாக பாக்கும்போது கொஞ்சம் வினோதமாத் தெரியலாம். ஏன்னா அறிவியல் சோதனைகள்ங்கறது பல பேர் சேர்ந்து நூதன தொழில்நுட்பங்கள் மூலமாவும் கருவிகள் மூலமாவும் ஆராய்ச்சி செய்து ஒரு முடிவுக்கு வரது. ஆனா மற்றது ஒரு சிலரோட தனிமைல அவங்க தியானத்தின் மூலமா ஒரு அனுபவம் கிடைச்சு அதை ஒரு நம்பிக்கையா வெளியிடறது. அறிவியல் சோதனைகள் மூலமா மறுபடி மறுபடி செய்து பார்த்து ஒரே முடிவுகளை பலமுறை கண்டறியலாம். ஆனா ஆன்மிக அனுபவங்கள்கறது ஒரு சிலருக்கு மட்டுமே ஒரு சில நேரங்களில் நிகழறது. புத்தக ஆசிரியர் சொல்றது என்னன்னா அணுகுமுறைகள் வேற மாதிரி இருந்தாலும் சொல்ல வந்த கருத்துகளோட ஸ்திரத்தன்மையும் நம்பகமும் ஒண்ணேதான்.

"டாவோ"ங்கறதை "பாதை" அல்லது "வழி"ன்னு சொல்லலாம். அறிவியலின் பாதையும் கீழை நாடுகளின் மதம் / நம்பிக்கை சார்ந்த பாதைகளும் கடைசியில் ஒரே இடத்துலதான் சந்திக்கும்... சந்திச்சாகணும். நவீன இயற்பியலாளர்களான நீல்ஸ் போர், ஒப்பன்ஹீமெர், ஹீசென்பெர்க் இவங்கள்லாம் கூட இந்து, புத்த மதங்கள், டாவோயிச தத்துவங்களுக்கும் அறிவியலுக்கும் உள்ள இணைகளைப் பத்தி பேசியிருக்கறதையும் ஆசிரியர் மேற்கோள் காட்டியிருக்காரு.

ஆரம்பத்துலயே ஆசிரியர் காரண ஞானத்துக்கும் (rational knowledge) முழு ஞானத்துக்கும் (absolute knowledge) இருக்கற வித்தியாசங்களை (ஆராய்ச்சி , அனுபவம்) சொல்லி, ஆராய்ச்சியில் நமக்கு இருக்கற எல்லைகள், புலன்களோட திறன் போன்ற நெருக்கடிகளையும், அனுபவத்திற்கு இந்த கட்டுப்பாடுகள் எதுவுமே இல்லாததையும் விளக்கி எழுதியிருக்காரு. ஆனா எதுவா இருந்தாலும் செய்தியின் நம்பகத்தன்மை ரெண்டுலயும் ஒத்துக்கற மாதிரிதான் இருக்குங்கறதையும் தெளிவாக்கிடறாரு.

இன்னும் க்வாண்டம் அறிவியல் பத்தியும், கீழை நாட்டு சித்தாந்தங்களையும் ஒப்புமைப் படுத்தி சொல்லும்போது நமக்கும் இந்து, புத்த மத கோட்பாடுகளுக்கு கொஞ்சம் அறிமுகம் இருக்கறதால சுலபமா புரியுது. ஏத்துக்கவும் முடியுது. ஒரு சின்ன உதாரணம். ஒளி அலையா, துகளான்னு கேக்கும்போது விஞ்ஞானி ஷ்ரோடிங்கர் தன் ஆராய்ச்சி முடிவுல, அது பார்வையைப் பொறுத்தது; சாட்சி பார்க்கும்போது அலையாகவும் பார்க்காதபோது துகளாகவும் (photon) இருக்குன்னு சொன்னார். அறிவியலில் அடிப்படையா everything is objective. No influence from a subject is accepted. இருந்தாலும் அந்த ஒளி அலை ஒரு mathematical wave னு சொன்னதால ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதே மாதிரி, கீழை நாட்டு சித்தாந்தங்கள்ல இந்த ப்ரபஞ்சத்தின் இயக்கத்துக்கெல்லாம் ஒரு பரமசாட்சி இருக்குன்னு சொல்றதையும் சுட்டியிருக்கார்.

பிரபஞ்சத்தோட இயக்கம் ரொம்ப dynamic ஆ இருந்தாலும் அதுல ஒரு ஒழுங்கும் (rhythm) ஒத்திசைவும் (harmony) இருக்கறதையும், இதையே இந்து மதத்தின் நம்பிக்கைப்படி சிவனோட தாண்டவம் (நடராஜர்) உருவகப் படுத்தறதையும் ஒப்பிட்டுப் பேசும்போது ஆச்சரியமாத்தான் இருக்கு.

இந்தப் புத்தகத்தைப் பத்தி என்னால் ரொம்ப எழுத முடியல. அவரே சொல்லியிருக்கற மாதிரி சில விஷயங்களை சுயமா நம்ம புலன்களோட ஆராய்ஞ்சும், கட்டுப்பாடுகள் எதுவுமே இல்லாம கற்பனைலயும் அனுபவிச்சும் பாக்கும்போது ஒவ்வொருவர் பார்வைலயும் கொஞ்சமாவது வித்தியாசம் இருக்கும்கறதால 'புரிதல்'ங்கறதே ஒரு தனி அனுபவமாயிடும்.

படிச்சுப் பாருங்க.... உங்க பார்வை மாறலாம்....

Sunday, July 19, 2009

விழுதாகும் விருதுகள் !!

சிங்கைப் பதிவர் அறிவிலி தடாலடியாக என் பதிவுக்கு இந்த விருதைக் கொடுத்து விட்டார். அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள். சாதாரணமா இது மாதிரி விருதெல்லாம் அங்க இங்க சுத்தி அலுத்துப் போய் கடைசிலதான் நமக்கு வரும். என்னமோ இந்தத் தடவை சீக்கிரமே வந்துடுச்சு. ஆரம்பிச்சு வெச்ச செந்தழல் ரவிக்கு வாழ்த்துகளும் நன்றிகளும்.




இந்த எம்.எல்.எம்.க்கு ஜெயலட்சுமி அக்கா (ஆண்ட்டி??) கிட்டயெல்லாம் ட்யூஷன் எடுக்க வேண்டியதில்லை. கிடைக்கிற கொஞ்சமே கொஞ்சம் நேரத்துல நாம நமக்குத் தெரிஞ்ச, ரெகுலராப் படிக்கற நாலு பேருக்கு தாராளமாக் குடுக்கலாம்.


கிரி. தீவிர ரஜினி ரசிகர். எந்த விஷயத்தைப் பத்தி எழுதினாலும் ஒரு தேர்ந்த நிருபருக்கு உண்டான மெனக்கெடல் இவர் எழுத்துல பாக்கலாம்.


பூக்கடைக்கு விளம்பரம் தேவையா? பதிவு தலைப்பைப் போலவே இவர் எழுத்தும் தெள்ளிய நீரோடை மாதிரி. இப்ப சமீபமா அப்பப்ப கொஞ்சம் வெள்ளம் பெருக்கெடுக்குது.


வித்தியாசமான பேருக்காகவே படிக்க ஆரம்பிச்சேன். இவரோட விக்கிரமாதித்தன் கதைகள் அட்டகாசம். என்னவோ இப்பல்லாம் இவர் அதிகமா எழுதறதில்லை. இதுக்கப்பறமாவது எழுத ஆரம்பிங்க..


ரவிசங்கர். இவரும் ஒரு வித்தியாசமான பதிவர். தமிழ் / ஆங்கில ஹைக்கூக்கள் எழுதுவது மற்றும் படித்தவைகளை நல்ல அறிமுகம் செய்து வைப்பார். சமீபத்துல ராணி, தினத்தந்தி மாதிரி பத்திரிக்கைகளைப் பத்தி ஒரு நினைவோடை எழுதியது என்னை ரொம்பக் கவர்ந்தது.

சொல்லப் போனா எல்லாப் பதிவர்களும் வித்தியாசமான சிந்தனைகளோட வித விதமா எழுதறாங்க. எல்லாமே இண்டரெஸ்டிங்காத்தான் இருக்கு. இருந்தாலும் விருது விதிப்படி 4 பேருக்கு குடுத்து சந்தோஷப்பட்டுக்கணும். மனசுல டக்குனு தோணுன நாலு பேருக்கு இந்த விருதை பாஸ் செய்யறதுல ரொம்பவே சந்தோஷம்.

அண்ணாச்சிகளா.... இந்தத் தம்பி குடுக்கறதை வாங்கிக்கோங்க. அப்பிடியே நீங்களும் பாஸ் பண்ணி விடுங்க.

Wednesday, July 15, 2009

இப்ப என்னதான் பண்றது?


இந்த இடுகை எழுதின நேரமே சரியில்லை போல...

முதல்ல யாரையெல்லாம் வம்புக்கு இழுக்கலாம்னு ஒரு லிஸ்ட் போட்டா, நமக்குன்னு வந்து மெனக்கெட்டு பின்னூட்டம் போடறவங்க நாலு பேரு... அவங்களுக்கும் கரச்சலைக் குடுத்தா எப்பிடின்னு அந்த லிஸ்டைத் எடுத்துட்டேன்.

யாருக்காவது எதிர்பதிவு எழுதலாம்னா முழுசா படிக்கக் கூட விடாம நாம படிச்சுக்கிட்டிருக்கும்போதே பிடுங்கி இடுகையைக் கிழிச்சுப் போட்டுடறாங்க.... சரின்னு ரீடர்ல ஓடிப் போய்ப் பாத்தா ரீடர்ல படம் தெரியறதில்ல... என்ன சொல்லியிருப்பாங்கன்னு யோசிக்கறதுக்குள்ள டைம் ஆயிடுது..

அட.. பின்னூட்டத்துக்காவது எதாவது எடக்கு மடக்கா பதில் சொல்லலாம்னா எல்லா பின்னூட்டமும் டிலீட் பண்ணி வெச்சுருக்காங்க...

ஒவ்வொரு ப்ளாகாப் போய் அவங்க எழுதினதுல எதாவது நுண்ணரசியல் கண்டுபிடிச்சு சாம்பிராணி போடலாம்னா, இடுகை எழுதி முடிச்சவுடனே அதையும் அவங்களே அனானி பேர்ல போட்டுக்கறாங்க....

நம்மளோட அல்லது நண்பர்களோட பழைய பதிவுகள்லயே எதையாவது புடிச்சு எப்பிடியாவது சிண்டு முடியலாம்னு முயற்சி பண்ணினா.... கற்பனை பயங்கரமா ஓடி மொத்த ப்ளாக்கர் சைட்டையே தூக்கணும் போல ஆயிடுமோன்னு தோணுது.

எங்கிட்ட ஈ-மெய்ல் பேக்கப்பும் எதுவும் இல்லை....

சரி.. நமக்கு நாமளே எதிர்பதிவு போட்டுக்கலாம்னு உக்காந்தா இடுகை ரொம்ப ஆபாசமா வருது... தலைப்பு எழுதறதுக்குள்ளயே எரிச்சலாகி எஸ்கேப்....

இப்ப என்னதான் பண்றது?

அவ்வ்வ்வ்... அழுகாச்சியா வருது....

Saturday, July 11, 2009

கலைநகரம் "லூசெர்ன்"



லூசெர்ன். ஸ்விஸ்சோட முக்கிய நகரங்கள்ல ஒண்ணு. கலைகளுக்குன்னே நேந்து விட்ட ஊர். ஓவியத்துறையில் "க்யூபிஸ"த்தை அறிமுகப்படுத்திய 'பாப்லோ பிகாஸோ' வாழ்ந்த ஊர். போன ஞாயிற்றுக்கிழமை லூசெர்னுக்கும்,அதுக்குப் பக்கத்துல இருக்கற 'பிலாடுஸ்' மலைக்கும் நண்பர்களோட (பின்ன... கேமரா இல்லாமயா?) பயணம்.

ஜெனீவால இருந்து 3 மணி நேரம் லூசெர்ன். போய் சேரும்போதே 11 மணி. உடனேயே பிலாடுஸ்க்கு போக டிக்கட் வாங்கிட்டு இன்னொரு பிளாட்ஃபாரத்துல இன்னொரு குட்டி ரயில். பிலாடுஸ்க்கு போய் வரதே ஒரு தனி அனுபவம். லூசெர்ன்ல இருந்து 'அல்ப்னாச்ஸ்டெட்'க்கு ரயில்ல 20 நிமிஷம். அங்கிருந்து உலகின் மிகவும் சாய்வான பாதையில் (48% சாய்வு) போற பல்சக்கர வின்ச் ரயில் 40 நிமிஷம் பிலாடுஸ் மலை உச்சிக்கு. திரும்ப வரும்போது ஒரு கேபிள் பஸ்ல பாதி மலை இறங்கிட்டு (15 நிமிஷம்)அங்கிருந்து சின்னச் சின்ன கேபிள் கார்ல (25 நிமிஷம்) கீழ 'க்ரியன்ஸ்' வந்து பஸ் புடிச்சு (15 நிமிஷம்) லூசெர்ன். அட்டகாசமான பயணம். அதுவும் அந்த வின்ச் ரயில் கிட்டத்தட்ட செங்குத்தா போற மாதிரி இருக்கு. 3-4 ரயிலுக ஒண்ணு பின்னால ஒண்ணு வரிசையா ஏறறது அற்புத காட்சி. ஒத்தை ரயில் பாதைதான். அதனால நடுவுல ஒரு இடத்துல மேல போற ரயில் எல்லாம் ஒதுங்கி நிக்குது. நம்ம ரயிலுக்கு முன்னால பாத்தா பாதையே இல்லை. தண்டவாளம் முடிஞ்சு மொட்டையா இருக்கு. கொஞ்சம் முன்னால பாத்தா ஒரு சின்ன ப்ளாட்ஃபாரத்து மேல ரெண்டு தணடவாளத் துண்டுக இருக்கு. கீழ இறங்கற ரயிலுக இறங்கினதும், அந்த ப்ளாட்ஃபாரம் அப்பிடியே வலது பக்கம் நகர, நம்ம ரயில் பாதையும் முன்னால இருக்கற பாதையும் இணையுது. அப்பறம் மேல போற ரயிலுக எல்லாம் மெள்ள க்ராஸ் பண்ணி ஏறுது. என்னா டெக்னாலஜி.... நடுவுல மலைல குடைஞ்சு வெச்சுருக்கற குகைகள் வழியா போறது... சான்ஸே இல்ல...





ஒரு வழியா மேல போய் சேந்தா கொஞ்சம் ஏமாற்றந்தான். திடீர்னு க்ளைமேட் மாறி ஒரே மேக மூட்டம். கீழ பாத்தா ஒரே மேகமா இருக்கு. ஒண்ணும் தெரியல.லேசா தூரல் வேற. மழை பிச்சுக்கிட்டு ஊத்தப் போற மாதிரி ஆயிடுச்சு. ஓரமா நின்னு காஃபி குடிச்சுட்டு இருக்கும்போடு ந்ம்மளைச் சுத்தி கூட்டமா அல்பைன் காக்கா (alpine crow). கையில இருந்து புடுங்கியே தின்னுடும் போல. கொஞ்சம் பிச்சு தூக்கிப் போட்டா அந்தரத்துலயே கேட்ச் புடிச்சுக்கிட்டு பறக்குதுக. மூணு பேர் அங்க ஸ்விஸ்ஸோட தேசிய இசைக்கருவியான அல்ப்ஹார்ன் (alphorn)வாசிச்சுக்கிட்டு இருந்தாங்க.



கொஞ்சம் தூரல் நின்னதும் மேல ஏறினோம். மலை உச்சியை 360 டிகிரி சுத்திப் பாக்கறதுக்கு குகைகளும் நடைபாதையும் போட்டிருக்காங்க. அட்டா... மேல இருந்து காட்சிகளைப் பாக்கறதுக்கு ரெண்டு கண்ணு போதாது. அதுவும் குற்றாலம் மாதிரி மெல்லிய சாரலோட... அங்கியே எதாவது ஒரு குகைக்குள்ளயே உக்காந்துடலாமான்னு தோணுச்சு. அதுவும் கீழ ஒரு மலை உச்சில ஒரு சர்ச். என்ன ஒரு ரம்மியமான் சூழல் !! ம்ம்ம்.. ஸ்விஸ் மக்கள் குடுத்து வெச்ச்வங்க. ஒரு ரவுண்டு சுத்தி வந்து மேல உச்சிக்குப் போனா அங்க ஏதோ பீடம் மாதிரி இருக்கு. ஏதாவது வானிலை ஆராய்ச்சிக்குன்னு நினைக்கிறேன். அதுல பூரா வந்தவங்க அவங்கவங்க கைவண்னத்தைக் காமிச்சுருந்தாங்க. உலகத்துல எல்லாப் பகுதிகள்ல இருந்தும் மக்கள் வந்து பேரையோ இல்ல வழக்கம் போல "ஐ லவ் ..."னோ எழுதி வெச்சுருக்காங்க. நாங்களும் பூரா தேடிபார்த்தோம்... தமிழ்ல எதுவுமே இல்லை. அடடா... இது சாமி குத்தமாயிடுமேன்னு சின்னதா ஒரு வெண்பா எழுதலாம்னு பாத்தா அப்பன்னு கற்பனைக்குதிரை எங்கியோ மேயப்போயிடுச்சு. சும்மா எதையோ கிறுக்கிட்டு வந்தோம்.



கேபிள் பஸ்ல பாதி மலை இறங்கி கேபிள் காருக்கு மாறற இடத்துல ஒரு கயிறு விளையாட்டு பார்க் (Rope Park) இருக்கு. 25 ஃப்ரான்க் கட்டினா இடுப்பு பாதுகாப்பு பெல்ட், ஹெல்மெட், க்ளவுஸ் தறாங்க. எல்லாம் போட்டுக்கிட்ட பிறகு கம்பிகள்ல கொக்கியை எப்பிடி மாட்றது, எப்பிடி சின்ன உருளை உதவியோட தொங்கிக்கிட்டே போறதுன்னு ஒரு சின்ன ட்ரெய்னிங் செஷன். அப்பறம் நமக்கு நாமே திட்டம்தான். முதல் ரெண்டு விளையாட்டுக கொஞ்சம் பயமா இருந்தாலும் கழைக்கூத்தாடி மாதிரி கம்பி மேல நடந்து அந்தப்பக்கம் போனதும் பயம் போயிடுச்சு. அப்பறம் தொங்கிகிட்டே சர்ர்ர்ர்னு போனது ஜாலியா இருந்தது. அதுக்குப் பிறகு கொஞ்சம் தைரியம் ஜாஸ்தி ஆகி, 50 அடி உசர கம்பத்துல செங்குத்தா இருக்கற ஏணில ஏறி ஒரு கொக்கியைப் புடிச்சு தொங்கி கீழ இறங்கினோம். மேல ஏறி போறதுக்குள்ளயே நாக்கு தள்ளிடுச்சு. கீழ இருந்து ட்ரெய்னர் 'கொக்கியைப் புடிச்சுக்கிடு ஜம்ப் பண்ணு'ங்கறான். இதோ பண்றேன் இதோ பண்றேன்னு 2 நிமிஷம் யோசிச்சிட்டுத்தான் குதிச்சேன். முதல் 10 அடி தடக்குனு இறங்கி அப்பறம் கொஞ்சம் மெள்ள இறங்குது. ஆனா அதுக்குள்ள நமக்குதான் டப்பா டான்ஸ் ஆடிடுச்சு.






இப்பிடி 1 மணி நேரத்துக்கு மேல விளையாடி முடிச்சுட்டு போதுண்டா சாமின்னு கேபிள் கார்ல உக்காந்து கீழ வந்தோம். பஸ்ஸைப் புடிச்சு ஸ்டேஷன் கிட்ட இறங்கினோம். பக்கத்துலயே 'ரோன்' நதி மேல ஒரு மரப்பாலம். அதுக்குப் பக்கத்துல 'நீர் கோபுரம்' (water tower). ஸ்விஸ்ல மிக அதிகமா போட்டோ எடுக்கப்படற இடம். அந்த பாலத்துக்கு உள்ள மேல இருக்கற முக்கோண ஃப்ரேம்கள்ல ஸ்விஸ் வரலாறு ஓவியங்கள். கிட்டத்தட்ட 400 ஓவியங்கள். பிறகு அங்கிருந்து அடுத்த புகழ் பெற்ற 'சாகும் சிங்கம்' (The Dying Lion) பூங்காவுக்குப் போனோம். ஃப்ரான்ஸ் - ஸ்விஸ் சண்டைல இறந்து போன ஸ்விஸ் வீரர்கள் நினைவுச் சின்னம். ஒரு பெரிய சிங்கம் (ஸ்விஸ் தேசிய சின்னம்) முதுகுல பாஞ்ச ஈட்டியோட சாகற தருவாய்ல இருக்கற மாதிரியான ஒரு புடைப்பு சிற்பம். அருமையான் சூழல் அற்புதமான சிற்பக் கலை. முன்னால இருக்கற சின்ன குளத்துல காசை எறியறாங்க. இந்த பழக்கம் எப்பிடி உலகம் முழுக்க பொதுவா இருக்குன்னு ஆச்சரியமா இருக்கு.


அதுக்குள்ள நல்ல பசி. போகும்போதே 'காஞ்சி' ன்னு ஒரு ஹோட்டலை பாத்தோம். போய் சாம்பார் ரசத்தோட சாப்பாடு. சுமாரா இருந்துது. அப்பறம் திரும்ப ஸ்டேஷனுக்கு வந்து 8 மணிக்கு ட்ரெய்னைப் புடிச்சு 11 மணிக்கு ஜெனீவா வந்து சேந்தோம். லூசெர்ன்ல மட்டுமே பார்க்க வேண்டிய இடங்கள் இன்னும் நிறைய. சில வருஷங்களுக்கு முன்னால போனபோது பிகாசோ வீட்டுல மட்டும் 4 மணி நேரம் இருந்தேன். இன்னொரு முறை சாவகாசமா போய் மத்த இடங்களைப் பார்க்கணும். பாக்கலாம்...


மலை மேல இருந்து துண்டு துண்டா 3 படம் எடுத்து ஒரே பனோரமா ஷாட்டா 'ஸ்டிட்ச்' பண்ண படம் இது.... லைட்டிங் கொஞ்சம் வித்தியாசமா இருக்கும்.. அட்ஜஸ்ட் பண்ணிக்கணும்...

Monday, July 6, 2009

இங்கிட்டு மஹேஷ்.... அங்கிட்டு ?



....நீங்கதான்..... நீங்களேதான். பின்ன என்னங்க? நீங்க இல்லாம இவ்வளவு தூரம் வந்திருக்க முடியுமா? என்னதான் மொக்கை போட்டாலும், கவிதை (!!) வடிச்சு இம்சை பண்ணினாலும், வெண்பா படைச்சு துன்புறுத்தினாலும், சிறுகதை எழுதி சிலிர்க்க வெச்சாலும், நெடுங்கதை எழுதி நடுங்க வெச்சாலும், போட்டிக் கதை அனுப்பி பயமுறுத்தினாலும், அறிவியல் புனைவு படைச்சு அலட்டிக்கிட்டாலும், பயணக் கட்டுரைகள் போட்டு பந்தா பண்ணினாலும், கிச்சடி பண்ணி உங்களை பச்சிடி பண்ணினாலும், கடவுளைப் பத்தி எழுதி கல்லா கட்டுனாலும், கடவுள் இருக்கான்னு கேள்வி கேட்டாலும், எதிர்பதிவுல எசப்பாட்டு பாடினாலும், துணைப்பதிவுல திகைக்க வெச்சாலும், சொந்த ஊரைப்பத்தி கொஞ்சம் பெருமை பேசினாலும், பேட்டி எடுத்தாலும், சினிமா விமர்சனம் பண்ணினாலும், படிச்ச புத்தகங்களை உங்களுக்கு பிரிச்சுக் காட்டினாலும், சுயவிமர்சனம் பண்ணிக்கிட்டாலும், சின்ன வயசு அனுபவங்களை அசை போட்டாலும், கற்பனைல பதிவர் சந்திப்புகள் நடத்தினாலும், பகிரங்கக் கடிதம் எழுதினாலும், இவ்வளவு ஏன்..... வலைப்பூவுக்கு "துக்ளக்"னு பேர் வெச்சாக் கூட.... இப்பிடி என்ன குட்டிக்கரணம் போட்டாலும், பல வேலைகளுக்கு நடுவுலயும் வந்து பொறுமையாப் படிச்சுட்டு 'அருமை தல.... கலக்கல்.... ஜூப்பரு... அசத்தல்...' ன்னெல்லாம் வஞ்சனையில்லாம தாராளமா கமெண்ட் போடற உங்களை மாதிரி பதிவர்கள், வாசகர்கள் (சரி...சரி... மேல... மேல...) மற்றும் நண்பர்களோட ஊக்குவிப்பு இல்லைன்னா இப்ப நானெல்லாம் இதை 100வது பதிவுன்னு போட முடியுமா?


யம்மாடி.... மூச்சு வாங்குது !! அண்ணன்களே... தம்பிகளே.... அக்காக்களே... தங்கைகளே... ஆன்றோர்களே.. சான்றோர்களே.. எல்லாருக்கும் நன்றிகள் பல.