Sunday, November 30, 2008

கிச்சடி 30.11.2008

ஹி ஹி ஹி ஹி எல்லாரும் அவியல், கதம்பம், நொறுக்ஸ், துணுக்ஸ்னு போட்டு பட்டய கெளப்புராய்ங்களே... நாமுளும் ஒண்ணு போட்டாத்தேன் என்ன கொறஞ்சுரும்னு "கழிவறையில் அமர்ந்து யோசிக்கும்போது கண நேரத்தில்" தோணுச்சு. அவிங்களோடதெல்லாம் சுவையா மணமா பதமா பக்குவமா இருக்கலாம். மொதல்ல 'பேல்பூரி'ன்னு சொல்லலாம்னு பாத்தேன். அதவிட 'கிச்சடி' பெட்டர்னு தோணுச்சு. கிச்சடில ஒரு சௌகர்யம் எத வேண்ணாலும் போட்டு பண்ணலாம். பாப்போம்... நாம பண்ற கிச்சடி மொத சட்டிய விட்டு எடுக்க முடியுதான்னு.....

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

இந்தியாவை விட்டு வெளிய போயிட்டா, எம்பேரு மகேஷ்ங்கறது நண்பர்க மத்தியில மட்டுந்தான். பாஸ்போர்ட்ல அப்பா பேரு மொதல்ல இருக்கறதால விமானத்துல ஏறுனதுலருந்து 'ராமமூர்த்தி'தான் எங்க போனாலும். எங்கப்பா கிட்ட வெளயாட்டா சொல்றதுண்டு... "பல ஊருகளுக்குப் போறது நானாயிருந்தாலும், உண்மையாப் போறது உங்க பேருதாம்பா"ன்னு. பல சமயம் வேற யாரையோ கூப்புடறாங்களோன்னு ஏமாந்ததும் உண்டு.

ஒருமுறை துபாய் ஏர்போர்ட்ல லவுஞ்சுல போய் நல்லா தூங்கிட்டேன். 9 மணிக்கு ப்ளைட். 8 3/4 மணிக்கு 'மிஸ்டர் ரமாமுர்தி... மிஸ்டர் ரமாமுர்தி..."ன்னு அனவுன்ஸ் பண்ணிக்கிட்டே இருக்காங்க. லேசா காதுல விழுந்தாலும், வேற யாரோன்னு தூக்கத்தை கண்டின்யூ பண்ணேன். நல்லவேளை லவுஞ்ச் மேனேஜர் நான் உள்ள வந்ததை கம்யூட்டர் லிஸ்ட்ல பாத்துட்டு ஒவ்வொருத்தரையா கேட்டுக்கிட்டே வந்து நம்மளை எழுப்பி அனுப்பிச்சு வெச்சாரு. அடிச்சு புடிச்சு ஓடி வந்து விமானத்துல ஏறுனா, எல்லாரும் மேலயும் கீழயும் பாத்துட்டு மூஞ்சியத் திருப்பிக்கறாங்க. பிஸினஸ் க்ளாஸ்ங்கற ஒரே காரணத்துக்காக அந்தப் பணிப்பெண்கள் ஒரு சின்ன சிரிப்பு சிரிச்சுட்டு 'டப்'னு கதவை மூடினாங்க.அப்பவும் எங்கப்பா கிட்ட சொன்னேன் 'நீ கிருஷ்ணன் மாதிரிப்பா... போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் உம்பேருக்குத்தான். இவ்வளவு வயசுக்கு அப்பறமும் நான் பண்ற தப்புக்கு உம்பேருதான் ரிப்பேராகுது". அவுருக்கு சிரிப்பு தாங்கல.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ரீடர்ஸ் டைஜஸ்டுல ஒருமுறை படிச்சது... தேவையேயில்லாத, ஆனா உலகத்துல பலபேரு பண்ற வேலைக:

1. பேஸ்டை கீழ இருந்துதான் அமுக்கி எடுக்கணும்னு ரூல் போடறது
2. கடிகாரத்தை 5 அல்லது 10 நிமிஷம் முன்னால அட்ஜஸ்ட் பண்ணி வெச்சுக்கறது
3. ஹோட்டல் ரூம்கள்ல வெக்கற சின்னச் சின்ன சோப்புகளை சேத்து வெச்சு எடுத்துட்டு வரது
...
...
...

இப்பிடி பலது இருந்துது. முழுசா ஞாபகம் இல்ல. 1 வது நான் பண்றதில்ல. 2வது எனக்கும் உடன்பாடு கிடையாது. இப்பவும் நான் என் வாட்ச்சை ஆபீஸ் கடிகாரத்தோட sync ல வெச்சுருக்கேன். முன்னால வெக்கறவங்க பலபேரு "8:20 ஆ... இது 20 நிமிஷம் ஃபாஸ்ட்.. 8 தான் ஆகுது"ன்னு சொல்லிக்கிட்டே 8:30 க்கு கிளம்பி ஆபீஸ்ல திட்டு வாங்குவாங்க. 3வது நானும் பண்றதுண்டு. கை கழுவ வெச்சுக்கலாம், மொகங்கழுவ வெச்சுக்கலாம்னு... ஆனா உபயோகப்படுத்துனதே இல்ல. ரொம்ப நாள் கழிச்சு எங்கயாவது தட்டுப்படும். அப்பறம் தூக்கி எறியுவோம்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

கடிகாரம்னு சொன்னதும் ஞாபகம் வருது. எங்கூட ஸ்கூல்ல படிச்ச சிராஜ், எவ்வளவோ தடவை சொல்லிக் குடுத்தும் "கெணியாரம்"னு தான் எழுதுவான். அப்ப ராதான்னு ஒரு டீச்சர். அவன் ஒருதடவை பணியாரம் கொண்டு வந்தபோது அவங் கிட்ட அது "படிகாரம்"னு சொல்லிச் சொல்லி அவனைக் கிண்டல் பண்ணி, புரிய வெச்சு அவனைத் திருத்துனாங்க. கடிகாரம் கெணியாரம்னா, பணியாரம் படிகாரம்தானே !!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

5வது வரைக்கும் தமிழ் மீடியத்துல் படிச்சுட்டு, 6வதுக்கு ஆங்கில மீடியம் போனபோது நமக்கு ஏ ஃபார் ஆப்பிள் பி ஃபார் பாய் அளவுக்குத்தான் தெரியும். மொதல் நாள் இங்கிலீஷ் டீச்சர் வந்து (அவர்தான் க்ளாஸ் டீச்சர்) என்னென்ன பாடங்களுக்கு என்னென்ன நோட்டு, எவ்வளவு நோட்டு வாங்கணும்னு லிஸ்ட் சொல்லிக்கிட்டே வந்தாரு. 'ஹோம் ஒர்க்'குக்கு ஒரு நோட் போடச் சொன்னாரு. நான் பின்னால உக்காந்து இருந்ததால சரியா காதுல விழல. 'போமக்' நோட்டுன்னு எழுதிக்கிட்டேன். வீட்டுல போய் காமிச்சா, அப்பாவுக்கு புரியவே இல்ல. 'அது என்னடா போமக் நோட்டு? கேள்விபடாததா இருக்கு?'ன்னாரு. 'அதெல்லாம் தெரியாது... நாளைக்கு ஸ்கூலுக்குப் போகும்போது வேணும்'னு சொன்னேன். அவரும் ரொம்ப நேரம் கொழம்பிப் போயிட்டு அப்பறம் சொன்னாரு 'டேய்.. அது ஹோம் ஒர்க் நோட்டாயிருக்கும்'னு. ஆனாலும் எனக்கு உள்ளூர பயம். நாம எழுதுனது சரியா, அவர் சொன்னது சரியான்னு. ஆனா 6வது முடியற வரைக்கும் க்ளாஸ் டீச்சர் 'போமக்' நோட்டுன்னு எதுவும் மறுபடி கேக்காமலே இருந்து என்னய காப்பாத்துனாரு.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

டெல்லில போய் அண்ணனோட நண்பர்களோட தங்கினபோது, அவங்கதான் சமைப்பாங்க. ஒரு நாள் நான் சீக்கிரம் வந்ததால நான் சமைக்கலாம்னு (முதல் முறையா) ஆரம்பிச்சு உப்புமா பண்ணினேன். சாப்டுட்டு முகுந்தன் கேட்டாரு "எப்பிடி கேவலமா பண்ணினாலும் சுமாரா வரது உப்புமா... அதையே உன்னால எப்பிடி கேவலமா பண்ண முடிஞ்சுது?'ன்னு.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

கிச்சடி இதுக்கு மேல தீஞ்சுரும். டெல்லி உப்புமா மாதிரி இருக்காதுன்னு நினைக்கிறேன்....

Monday, November 24, 2008

லாரென்ஸ் ஆஃப் அரேபியா

முன்னுரை





கர்னல் ஒருவர் மோட்டார் பைக்கில் ஏறி வேகமா போறாரு. போய்க்கிட்டே இருக்காரு. திடீர்னு ரெண்டு சைக்கிள்காரங்க ரோட்டுல எதிர்ல வர, இவுரு தடுமாற சறுக்கி பைக் ஒரு பக்கம் போய் விழுது. கர்னல் போட்டிருந்த கண்ணாடி ஒரு மரத்து கிளைல மாட்டிக்கிட்டு ஊசலாடுது. இப்பிடி படம் ஆரம்பிக்குது.

சர்ச்சுல அவருக்கு இறுதி மரியாதைகள். யார் அந்த கர்னல்? "ஆங்.. கேள்விப் பட்டுருக்கேன்.. பெரிய கவிஞர்... படிப்பாளி..." "அவரைப் பத்தி எனக்கு ரொம்ப அதிகம் தெரியாது" "பெரிய வீரர்... ஒரு சின்னப் படைய வெச்சுக்கிட்டு என்னெல்லாம் பண்ணினாரு..அடேயப்பா..."

லெஃப்டினண்ட் டி.இ.லாரென்ஸ் பிரிட்டிஷ் ராணுவத்துல ஒரு சாதாரண மேப் வரைபவர் (cartographer). ரொம்ப அமைதியான, ஜாலியான, தைரியமான ஆளு. அரசியல் தெரிஞ்சவர். முக்கியமா மத்திய-கிழக்கு நாடுகளைப் பத்தி ரொம்ப தெரியும். முதல் உலகப் போர்ல துருக்கி ஜெர்மனியோட சேந்துக்கிட்டு அரேபியாவை தாக்க முயற்சிக்கும்போது, பிரிட்டனும் ஃப்ரான்சும் அரேபியாவுக்கு ஆதரவு. அரபிகளுக்கு துப்பாக்கி, பீரங்கி, வான்வழி தாக்குதல் இதெல்லாம் புதுசு. அவங்களுக்கு தெரிஞ்சதெல்லாம் ஒட்டகம், குதிரை, வாள்.

அரேபியாவுல இருக்கற இராக் மன்னர் ஃபைசலுடைய நோக்கம் என்ன, நிலைமை எப்படின்னு தெரிஞ்சுக்க, அரேபிய இனமான 'பெதுவன்'களைப் பத்தி நல்லா அறிஞ்ச லாரென்ஸை தந்திரமா அரேபியாவுக்கு வேவு பாக்க அனுப்பறாங்க. அவரும் குஷியா கெளம்பிப் போறாரு. ஆனா அவருக்கே தெரியாது இது அவர் வாழ்க்கைலயும், உலக வரலாற்றுலயும் ஒரு திருப்புமுனையா இருக்கப் போகுதுன்னு. ஒரு வழிகாட்டியோட பாலைவனத்துல ஒட்டகத்துல சவாரி. அரேபியாவுல பல பழங்குடி இனத்தவர்கள் அங்கங்க. ஒற்றுமை கிடையாது. எப்பவும் ஒருத்தரோட ஒருத்தர் சண்டை, வன்மம். எல்லாம் தண்ணிக்காக. வழியில வேற ஒரு இனத்தோட கிணத்துல தண்ணி எடுத்ததுக்காக வழிகாட்டி கொலை செய்யப்படறான். தைரியமா தனி ஆளா எப்பிடியோ ஃபைசல் கிட்ட போய் சேர்றாரு.

ஃபைசலோட பேசும்போதுதான் தெரியுது அவங்களுக்கு பிரிட்டிஷால அவ்வளவா உதவ முடியலன்னு. யோசிச்சுப் பாத்தா துருக்கி துறைமுகமான அகபா (Aqaba) வை கைப்பற்றினாத்தான் அடுத்த அடி எடுக்க முடியும்னு தெரியுது. முக்கியமா இதுக்கு அரேபிய பழங்குடி இனமெல்லாம் ஒண்ணு சேரணும். அகபால இருக்கற பீரங்கிப் படையெல்லாம் கடலைப் பாத்து இருக்கு. ஏன்னா சூயஸ் கால்வாய் வழியாத்தான் அவங்களை அடைய முடியும். இதுதான் வாய்ப்பு, நாம பாலைவனம் வழியாப் போய் தரைத்தாக்குதல் நடத்தலாம்னு முடிவு பண்ணி, ஃபைசல் கிட்டப் பேசி (பிரிட்டனுக்குத் தெரியாம) தலைவன் ஷெரிஃப் அலி கூட ஒரு 50 வீரர்களைக் கூட்டிக்கிட்டு கிளம்பறாங்க. மிகக் கொடுமையான நெஃபுத் பாலைவனத்தைக் கடக்கணும். கடும் வெயில். தண்ணி கிடையாது. 90 மைல் பயணம். இரவுகள்லயே பிரயாணம். போற வழில வேற ஒரு பழங்குடி இனம் ஹுவெதைத் தலைவன் ஔதா கூட ஒரு சமரசம் பேசி, அவங்களும் ஹரித் இனத்தோட சேந்து போருக்கு வராங்க. இது முதல் வெற்றி. லாரென்ஸுக்கும் அரபு உடைகள் போட்டு அவரையும் ஒரு அரபியாவே பாக்க ஆரம்பிக்கறாங்க.

எதிர்பார்த்தது மாதிரியே தரைப்பகுதி பாதுக்காப்பு வீக். அகாபா சுலபமா கைக்கு வருது. கெய்ரோல இருக்கற பிரிட்டிஷ் அதிகாரிகள் கிட்டப் போய் வெற்றியை சொன்னா அவங்களால நம்பவே முடியல. லாரென்ஸ்க்கு பதவி உயர்வு. இப்பொ மேஜர் லாரென்ஸ். அடுத்து டேராவை கைப்பற்ற ஆணை. கொஞ்சம் தடவாளங்கள் எடுத்துக்கிட்டு திரும்பப் போய் துருக்கி ரயில் போக்குவரத்துக்கு குறிவெச்சு அதை தகர்க்கராங்க. பழங்குடிப் படையைக் கூட்டிக்கிட்டுப் போய் டேராவையும் முற்றுகையிடறாங்க.

ஒரு அசட்டுத் தைரியத்துலயும், தானும் ஒரு அரபிங்கறதை யாரும் மறுக்க முடியதுங்கற கர்வத்துலயும் வீதில அலையும்போது துருக்கி ராணுவம் புடிச்சுக்கிட்டுப் போய் லாரென்ஸ் அரப் இல்லன்னு கண்டுக்கறாங்க. அந்த நீலக் கலர் பூனைக் கண்களும், வெள்ளைத்தோலும் காட்டிக் குடுத்துடுது. துருக்கிய தளபதி பே லாரென்சை உடைகளைக் களைஞ்சு அவமானப்படுத்தி
(raped or sodomised-னு வரலாறு சொல்லுது) தூக்கி எறியறாங்க. இந்த அவமானம் தாங்க முடியாம மறுபடி கெய்ரோவுக்கு போய் எனக்கு இந்த வேலையே வேணாம்னு சொல்றாரு. ஆனா அங்க வேற மாதிரி ப்ளான் வெச்சுருக்காங்க அரசியல்வாதிக. டமாஸ்கஸ் கைப்பற்றப்படணும்னு திரும்பவும் தடவாளங்கள் குடுத்து, நீதான் அரபிகளுக்கு தலைமையேற்க முடியும்னு அனுப்பறாங்க. வேற வழியில்லாம, ஒரு வன்மத்தோட டேராவுக்குத் திரும்பறாரு. வன்மத்துல அவருடைய அடிப்படையான் அமைதிக் குணம் போய் போர்க் குணம். படையைக் கூட்டிக்கிட்டுப் போய் "கைதிகள் கிடையாது"ன்னு கோஷம் போட்டுக்கிட்டே துவம்சம் பண்றாங்க. (இந்த "No Prisoners" கோஷம் உலகப்புகழ்) நூத்துக்கணக்குல தலைக உருளுது. லாரென்ஸோட துப்பாக்கிக்கு ரொம்ப வேலை. ரத்தம் படிஞ்ச கத்தியோட லாரென்ஸைப் பாக்க ஷெரிஃப் அலிக்கே முடியல. 'நீயா இப்பிடி...நீயா இப்பிடி..'ன்னு மாஞ்சு போறான்.

இப்பத்தான் சிக்கல். பிரிட்டனும் ஃப்ரான்சும் டமாஸ்கஸ் கைக்கு வந்தா துருக்கியையும் கூடவே அரேபியாவையும் பங்கு போட்டுக்கலாம்னு ஏற்கெனவே ஒப்பந்தம் போட்டாச்சு. லாரென்ஸைப் பொறுத்த வரை, எல்லாத்தையும் அரேபியாவுக்கே குடுத்துடணும். யாரும் கேக்கற மாதிரி இல்ல. இப்ப துருக்கி கையில இருக்கே தவிர, மின்சாரம், தண்ணீர், மருத்துவம் இதையெல்லாம் பராமரிக்க ஃபைசல் கிட்ட போதுமான அறிவோ ஆட்களோ இல்ல. இதத்தான் பிரிட்டனும் எதிர்பார்த்தது. போதாக்குறைக்கு, ஃபைசல் தலைமைல லாரென்ஸ் ஏற்படுத்திய "அரபு தேசிய கவுன்சில்"குள்ளயே மறுபடியும் பழங்குடியினரோட பழைய தகராறுகள ஆரம்பம். ஷெரிஃப் அலியும், ஔதாவும் விலகிப் போக மத்த அரபிகளும் விலக ஆரம்பிக்கறாங்க. இப்ப பிரிட்டனும், ஃப்ரான்சும் ஃபைசல் கிட்ட வந்து பேச்சு வார்த்தை நடத்த ஆரம்பிக்கறாங்க. வேற வழியில்ல. பேருக்கு ஃபைசல் ராஜா. அவரே வேதனையா சொல்றாரு "அரபிக் கொடிக்குக் கீழ பிரிட்டிஷ் பராமரிப்புத்துறைகள்..." பிரிட்டன் தான் நினைச்சதை சாதிச்சுடுது.

லாரென்ஸுக்கு மறுபடி பதவி உயர்வு குடுத்து கர்னல் ஆக்கிடறாங்க. அவரோ இந்த அரசியல் எல்லாம் வெறுத்துப் போய், தன்னுடைய 'ஒன்றுபட்ட அரேபியா" கனவு பாலைவன காத்துல கரைஞ்சு போக சோகமா பிரிட்டனுக்கு திரும்பறாரு.

படத்துல குறிப்பிட்டு சொல்ல வேண்டியது கேமரா. நாயகன் பீட்டர் ஓ'துல் (ஒரிஜினலா மார்லன் ப்ராண்டோ நடிக்க வேண்டியது) ஆண்டனி க்வின் (ஔதா) ஒமர் ஷெரிஃப் (ஷெரிஃப் அலி) மற்றும் அலெக் கின்னஸ் (ஃபைசல்). என்னா நடிப்பு என்னா நடிப்பு !! அதுலயும் தன்னால காப்பாத்தப்பட்ட காசிமை தானே சுட்டுக் கொல்ல வேண்டி வந்ததையும், தன்னோட உதவியாளன் வெடிமருந்து கையாளும்போது விபத்துக்குள்ளாக துருக்கியர் கிட்ட மாட்டக்கூடாதுன்னு தானே சுட்டுக் கொன்னதையும் நினைச்சு குற்ற உணர்ச்சில மருகும்போது...க்ளாஸ் !! அதே ஆளு துருக்கி தளபதி பே கிட்ட நடந்த அவமானத்துக்கப்பறம் அப்பிடியே வெறி புடிச்ச ஆளா மாறும்போதும், அரசியல் வெறுத்து அமைதியா நாடு திரும்பும்போதும்.... என்ன சொல்றது போங்க..... ராஜா ஃபைசலோட அரபிகளுக்கே உரிய typical இங்கிலீஷ் accent - சூப்பர். படம் முழுக்க வசனங்கள்ல இழையோடற மெல்லிய நகைச்சுவை. எல்லாத்துக்கும் மேல எடிட்டிங்கும், சம்பவங்களை கோர்வையா சொன்ன விதமும்... 1962ல 7 Academy விருதுகள் வாங்கத் தகுதியான படம்.

ஒரு வெறி புடிச்ச போரை ஒரு சொட்டு ரத்தத்தைக் காமிக்காம suggestive-ஆ சொல்லியிருக்கற விதத்தைப் பார்க்கும்போது பருத்தி வீரன், சுப்பிரமணியபுரம் படத்துல எல்லாம் அவ்வளவு கொடூரமான க்ளைமாக்ஸ் காட்சிகள் தேவைதானான்னு யோசிக்க வெக்குது.

நிஜ டி.இ.லாரென்ஸ்


ரொம்ப நீளமான பதிவாப் போச்சோ? படமும் நீளந்தான். 218 நிமிடங்கள். வாய்ப்பு கிடைச்சா பாருங்க. படிக்கறதை, சொல்லிக் கேகறதை விட பாக்கும்போது கிடைக்கிற அதிர்வு ரொம்ப நாளைக்கு மனசுல இருக்கும்.

Sunday, November 23, 2008

ஹோட்டல் ர்வாண்டா

மிக சமீபத்தில் பார்த்த, உண்மை சம்பவங்களை ஒட்டிய இரண்டு படங்களைப் பற்றி உங்களோடு கட்டாயமாக பகிர்ந்து கொள்ள வேண்டும். நீங்கள் முன்னமே பார்த்ததாக இருக்கலாம். இரண்டு படங்களிலும் நிகழும் சம்பவங்கள் நம்மை ரொம்பவும் பாதிப்பது ஒருபுறம். ஒரு சிறந்த திரைப்படம் எப்படி இருக்க வேண்டும், அதன் குணாதிசயங்கள் என்ன, சொல்ல வந்ததை இதை விட சிறப்பாக சொல்ல முடியுமா, ஒரு உண்மைச் சம்பவத்தைக் கையாளும்போது எவ்வளவு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்ற பல கேள்விகளுக்கு இந்தப் படங்கள் பதிலளிக்கின்றன.

ஹோட்டல் ர்வாண்டா (Hotel Rwanda)



உகாண்டா, காங்கோ, தான்சானிய நாடுகளுக்கு இடையே பல்லிடுக்குல மாட்டின மாதிரி இருக்கற ஒரு குட்டி மத்திய ஆப்பிரிக்க நாடு ர்வாண்டா. மத்த ஆப்பிரிக்க நாடுக போலவே இதுவும் ஒரு கலவர பூமி. ஹுடு (hutu)மற்றும் டுட்ஸி (tutsi) இன மக்களுக்கு இடையே தீராத சச்சரவு. ஹுடு இனத்தவர் டுட்ஸிக்காரங்களை 'கரப்பான்பூச்சி'ன்னு சொல்ற அளவுக்கு வெறுப்பு. ஒரு கட்டத்துல கலவரம் அதிகமாகி, ஹுடுக்கள் டுட்ஸிக்களை ஆயிரக்கணக்குல கொன்னு குவிக்கறாங்க. கையாலாகாத பூஞ்சை அரசு... ஐ.நா.அமைதி காக்கும் படை வருது. இங்கதான் கதை ஆரம்பிக்குது.

கதை நாயகன் பால் ருஸேஸபகீனா தலைநகர் கிகாலில இருக்கற 'மீ கொலீன்'ங்கற நட்சத்திர ஹோட்டலோட மேனேஜர். ஹுடு இனத்தவர். ஆனா மனைவி தாத்ஸியானா டுட்ஸி இனம். ஹோட்டலை பாதுகாக்கறதுக்காக உள்ளூர் சண்டைகட்சி தலைவர்க, ராணுவ தளபதிகன்னு எல்லாருக்கும் பணம் குடுத்து, ஊத்திக் குடுத்துன்னு ஒரு மாதிரி 'ரேப்போ' மெய்ண்டைன் பண்றாரு. கூடவே தன்னோட குடும்பத்தைக் காப்பாத்தணும்னு ஒரு சுயநலம். ஒரு நாள் கலவரம் அதிகமாகி, பால் தங்கியிருக்கற பகுதில உள்ள எல்லா டுட்ஸிக்களையும் அடிச்சு துவம்சம் பண்ணி, பால் குடும்பத்தையும் சேர்த்து இழுத்துக்கிட்டு போறாங்க. ஆனா பால் கலவரக்காரர்களோட பேரம் பேசி ஹோட்டலுக்குப் போய் கொஞ்சம் பணம் எடுத்து அவங்களுக்குக் குடுத்து எல்லாத்தையும் மீட்டு ஹோட்டல்லயே தங்க வெக்கறாரு.

கொஞ்சம் கொஞ்சமா ஹோட்டல் ஒரு அகதிகள் முகாம் மாதிரி ஆகுது. கலவரக்காரர்கள் தொந்தரவும் அதிகம். ராணுவமும் கண்டுக்காம இருக்குது. பால் தன்னுடைய சக்திக்கு மீறி பலருக்கு லஞ்சம் (பணம், தண்ணி)குடுத்து எப்பிடியோ ஐ.நா. படை உதவியோட ஒரு லாரில எல்லாத்தையும் காப்பாத்த முயற்சி செய்ய, சக ஊழியன் ஒருத்தன் எட்டப்பனா மாறி கலவரக்காரர்களுக்கு தகவல் குடுத்து அந்தத் திட்டத்தை முறியடிக்கறான். பிறகு ஹோட்டலுக்கு தண்ணீர், மின்சார சப்ளை நிறுத்திடறாங்க. ஆனாலு பால் தன்னோட புத்தி சாதுரியத்தாலயும், தைரியத்தாலயும் ஹோட்டல் முதலாளிக, கலவரக்காரர்க, ராணுவத்தினர்னு எல்லார் கிட்டயும் நைச்சியமா பேசி சமாளிக்கறது ஹைலைட். கடைசியா ஒண்ணும் முடியலங்கறபோது தைரியமா ராணுவ தளபதி பிஸிமுங்கோவை ப்ளாக் மெய்ல் பண்ணி மக்களைக் காப்பாத்தறபோது ஒரு தனி மனிதனோட வீரம் அதிர வெக்குது. ஒரு வழியா ஐ.நா.படை உதவியோட உயிரிழப்பு இல்லாம எல்லா மக்களும் பாதுகாப்பா அடுத்த ஊருக்கு போயிடறாங்க.

ஹோட்டலுக்கு காய்கறி, அரிசி வாங்கறதுக்காக கலவரக்காரர்களோட தலைவன் ரடகுண்டா கிட்டயே போய் அதிகப் பணம் குடுத்து வாங்கிகிட்டு வரும்போது இருட்டுல கார் கரடு முரடானா சாலைல போற மாதிரி குதிச்சு குதிச்சு போகுது. சந்தேகப்பட்டு நிறுத்தி எறங்கிப்பாத்தா சாலைல பூரா கொன்னு வீசப்பட்ட உடல்கள். ரூமுக்கு வந்து பால் ஒரு அழுகை அழுவார் பாருங்க, நாயகன் கமல் அழுகையெல்லாம் ரெண்டாவது எடத்துக்கு போயிடும்.

ஒரு உண்மை சம்பவத்தை குரூரமான காட்சிகள் எதுவுமே இல்லாம நிலைமையோட பயங்கரத்தை அவ்வளவு அழகா உணர்த்தியிருக்காங்க. பால் மாதிரி ஒரு சுயநலமான ஆள் கூட சூழ்நிலையால ஒரு பொதுநல ஹீரோவா ஆகறது இயல்பா இருக்கு. பால் நிஜமாவே ர்வாண்டா மக்களோட பெரிய ஹீரோ. பிறகு அவருக்கு பல சர்வதேச விருதுகள் கிடைச்சுது.

நிஜ பால் ருஸேஸபகீனா ஐ.நா விருது வாங்கும்போது...

இது மாதிரி திரைப்படங்கள் இந்தியாவுல ஏன் வருகிறதில்லைன்னு ஏக்கமாவும் வருத்தமாவும் இருக்கு.

இன்னொரு படம் "லாரென்ஸ் ஆஃப் அரேபியா" பத்தி அடுத்த பதிவில்.....

Sunday, November 16, 2008

ஜெனீவா - ஆல்ப்ஸ் டைரி

முன்னாடி, அதுக்கும் முன்னாடின்னு ரெண்டு பதிவு போட்ட பிறகு இது மூணாவது. (இதே வேலையாப் போச்சு... இப்பிடியே ஓட்றா நீயி...)

இன்னிக்கு சனிக்கிழமை காலைல 8 மணி வாக்குல கெளம்பி தங்கியிருக்கற ஹோட்டலுக்கு நேர் எதிர்க்க இருக்கற ட்ரெய்ன் ஸ்டேஷனுக்குப் போனேன். ரோஷெ தி நே (Rochers de Naye) ங்கற ஒரு ஆல்ப்ஸ் உச்சிக்குப் போகலாம்னு திட்டம். ஜெனீவால இருந்து மோந்த்ரூ (Montreux) 1 மணி நேரம். அங்கிருந்து மலை ரயில். நம்ம ஊட்டி மாதிரி தண்டவாளங்களுக்கு நடுவுல பல் சக்கரத்துக்கு ரெண்டு வரிசை இருக்கு. ஏற்றம் சில இடங்கள்ல 220%இருக்கு. ரயில் சாவகாசமா மேல ஏறுது. கிட்டத்தட்ட 1 மணி நேரம். பாதி ஒசரம் போனதுமே எங்க பாத்தாலும் பனியா இருக்கு. மேகங்கள் எல்லாம் நமக்குக் கீழ. நடுவுல அங்கங்க மலை உச்சிகள் மட்டும் தெரியுது. கொள்ளை அழகு. "வானம் கீழே வந்தாலென்ன..." பாட்டு ஞாபகம் வந்தது.







போற வழியில அங்கங்க ஆளுக மப்ளர ஆட்டி ரயில நிறுத்தி ஏறிக்கறாங்க. பெரும்பாலும் பனிச்சறுக்கு விளயாடரவங்க. கீழ சறுக்கி வந்துட்டு, மறுபடி ரயில்ல ஏறி மேல போறாங்க. ரோஷெ தி நே ஸ்டேஷனுக்கு போய் இறங்கிப் பாத்தா சுத்திலும் எங்க பாத்தாலும் பனி ஒரு அடி உசரத்துக்கு விழுந்துருக்கு. செடி கொடியெல்லாம் கருகிப் போய் நுனியில பனிய சொமந்துக்கிட்டு நிக்குதுக. மேல ஒரு பெரிய ரெஸ்டாரண்ட் இருக்கு. வெளியில மலை மேல அஞ்சாறு குடில்கள் இருக்கு. எல்லாம் எஸ்கிமோ மாதிரி இக்ளூ வீடுகள். அதிகபட்சம் 5 பேரு தங்கலாம். ஒரு ராத்திரிக்கு 250 ஃப்ரான்க். (நம்மூரு கணக்குக்கு10000 ருவா...கொள்ளை !!) அதுக்கே பாருங்க பிப்ரவரி வரைக்கும் முன்பதிவு ஆயிருச்சாம். ரெஸ்டாரண்டுக்கு வெளிய மர டேபிள், பென்ச் எல்லாம் பனி விழுந்து பெட் மாதிரி இருக்கு.






இதுக்கு மேல ஒரு 200 மீட்டர் ஒசரத்துல வ்யூ பாயிண்ட் இருக்கு.200 மீட்டர்தான்னாலும் ஒரு கிலோமீட்டர் தூரம் நடக்கணும். நேரா ஏறினா அப்பறம் நேரா சறுக்கி எறங்க வேண்டியதுதான். குறுக்கு மறுக்கா (zig zag) நடக்கணும். கால வெச்ச பொசுக் பொசுக்னு 1 அடி உள்ள எறங்கி ஷூ சாக்ஸ்குள்ள எல்லாம் பனி போய் கிச்சு கிச்சு முட்டுது. அதுனால நமக்கு முன்னால போறவங்க கால வெச்ச குழிலயே நாமளும் மொள்ள கால எட்டு வெச்சு வெச்சு ஏறணும். அப்பிடியும் சில எடங்கள்ல கொஞ்சம் சறுக்கி எழுந்துதான் போனேன். மூச்சு முட்டிருச்சு. தஸ் புஸ்னு மாடு மாதிரி மூக்கு வாய் வழியா பொக பொகயா வருது. மேல போய் அப்பாடான்னு பாத்தா... அட அட அட...என்ன ஒரு panoramic வ்யூ !!! கீழ மேகம்... நடுவுல பனித் தொப்பி போட்ட மலை உச்சிகள்... மேல பிரகாசமா சூரியன்..... இயற்கை... இயற்கை (அபிராமி... அபிராமி...)







திரும்ப கீழ எறங்கரது சர்க்கஸ் மாதிரி ஆயிடுச்சு. எங்க எப்ப சறுக்கும்னே தெரியல. ஒரு வழியா கீழ எறங்கிப் பாத்தா பேண்ட் சூச்சா போன மாதிரி பூரா ஈரம். மறுபடி ட்ரெய்ன் ஏறி வழியில க்ளீயோ (Glion) ங்கற ஸ்டேஷன்லயே எறங்கீட்டேன். அங்கிருந்து மோந்த்ரூவுக்கு நடந்தே கீழ எறங்க யானைப்பாதை மாதிரி இருக்கு. 1 மணி நேர நடை. கீழ எறங்கினப்பறங் கூட கொஞ்ச நேரத்துக்கு கால் தானா மடங்குது. பெறகு ட்ரெய்ன் புடிச்சு ஜெனீவா திரும்பினேன். அதுக்குள்ள சாயங்காலம் மணி 4:30. ரூமுக்கு வந்து சூடா ஒரு காப்பி குடிச்சுட்டு, இதோ பதிவும் போட்டு முடிச்சாச்சு.







நாளைக்கு கிளம்பலாம்னா ஃப்ளைட் எல்லாம் ஃபுல். திங்கள் காலங்காத்தால ஃப்ளைட். சிங்கை போய் சேரும்போது செவ்வாய் அதிகாலை ஆயிடும். அப்பறம் இருக்கவே இருக்கு ஆபீஸ்...ஊடு...

வரலாறு, புவியியல் ஆர்வலர்களுக்காக ஸ்விட்சர்லாந்தைப் பத்தி ஒரு சிறு குறிப்பு: மேற்கு ஐரோப்பிய நாடு. சுத்திலும் ஃப்ரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரியா, ஸ்லொவீனியா நாடுகள். தனி விசா.ஷெங்கன் விசா முறைல ஜனவரி 2009 ல இருந்து சேரலாம்னு எதிர்பார்க்கறாங்க. சேந்தா வசதி. பெரும்பாலான ஐரொப்பிய நாடுகளுக்கு ஒரே விசாவுலா போய் வரலாம். இன்னும் யூரோ நாணயத்துக்கு மாறல. ஆனா யூரோ செல்லுபடியாகும். (கடைகள்ல யூரோ வாங்கிகிட்டு ஃப்ரான்க்ல பாக்கி குடுப்பாங்க யூரோ : ப்ரான்க் கிட்டத்தட்ட 1.3) பெரிய நகரங்கள் ஜெனீவா, ஸ்யூரிக், பெர்ன், லூசெர்ன், லூசேன், லுகானோ, பேசல்.....இதெல்லாம். மிகப் பெரிய நன்னீர் ஏரி 'லெமான் ஏரி' ஒரு பிறை வடிவத்துல இருக்கு. ஜெனீவாவுல ஆரம்பிச்சு வோட் வரைக்கும் கிட்டத்தட்ட 80 கி.மி நீளம், 15 கி.மி அகலம். 600 சதுர கி.மி பரப்பு. பெரும்பாலும் ஜெர்மன் மொழி. தெற்கு, மேற்குல (ஜெனீவா உள்பட) ப்ரென்ச். போதுங்க....


Thursday, November 13, 2008

முத்தமிழ் - எந்தத் திக்கில்?

உலகம் யாவையும் தாம்உள வாக்கலும்
நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார் - அவர்
தலைவர், அன்னவர்க்கே சரண் நாங்களே.
- கவி கம்பன்

எதையோ யோசிச்சுக்கிட்டிருக்கும்போது திடீர்னு இந்த பாட்டு ஞாபகம் வந்தது. (இது பாட்டா, செய்யுளா?) இது ஞாபகம் வந்ததும் கூடவே புலவர் கீரனோட ஞாபகமும் வந்தது.

உடுமலை அரசினர் மேல் நிலைப்பள்ளியில படிக்கும்போது, தி.சு.செந்தில் ஆறுமுகம்னு ஒரு ஆசிரியர் இருந்தாரு. இவர் திரு. சுந்தர ஓதுவா மூர்த்தி சுவாமிகளோட மகன். வருஷத்துக்கு ஒருமுறை இலக்கிய மன்றம் சார்புல "முத்தமிழ் விழா"ன்னு 9 நாளைக்கு நடத்துவாரு. இயல், இசை, நாடகம் ஒண்ணொண்ணுக்கும் 3 நாள். கூடவே வாரியார் சுவாமிகள், புலவர் கீரன், திருக்குறளார் முனுசாமி இவுங்களோட சொற்பொழிவுகளும் தினமும் இருக்கும். முனுசாமி அய்யாவோட சொல்லாடலை விட அவருடைய குரல் வளமும், ஏற்ற இறக்கங்களோட பேசுறதும் கேக்க ரொம்ப சுகமா இருக்கும். வாரியார் சுவாமிகள் சொற்பொழிவுன்னா மொதல் பத்து வரிசை சின்னப் பசங்களுக்குதான். கதை சொல்லிக்கிட்டே வரும்போது திடீர்னு எதாவது கேள்வி கேட்டு டக்குனு பதில் சொல்ற பையனுக்கோ பொண்ணுக்கோ கந்தரனுபூதி, கந்தரலங்காரம்னு ஒரு சின்ன புத்தகத்தை பரிசாக் குடுப்பாரு. ரொம்ப சுலபமான கேள்விகள்தான். சின்னப் பசங்க கிட்ட ஒரு ஈடுபாடு உண்டாக்கணும்கற நோக்கத்துல 3 மணி நேர சொற்பொழிவுக்குள்ள ஒரு 40 பரிசுகளாவது பட்டுவாடா ஆயிரும். நடு நடுவுல துணுக்குகள் சொல்றதும், அதுக்கு அவுரே குலுங்கிக் குலுங்கிச் சிரிக்கரதும் தனி அழகு. அவரோட "கைத்தல நிறைகனி....." உலகப் புகழ். தமிழ் மிமிக்ரி கலைஞர்கள் எல்லாம் முதல்ல கத்துகிற குரல் இவரோடதாத்தான் இருக்கும்.

அப்பறம் புலவர் கீரன். தன்னுடைய ஊனத்தைக் கூட பொருட்படுத்தாம 3 மணி நேரம் உக்காந்த இடத்துல கணீர்னு "உலகம் யாவையும்..." சொல்லி ராமாயணமோ, வில்லிபாரதமோ சொன்னார்னா, அந்தந்த பாத்திரங்களே நம்ம முன்னாடி நின்னு பேசர மாதிரி இருக்கும். திரும்ப திரும்ப படித்த, கேட்ட கதைகளை ஒவ்வொரு முறையும் வித்தியாசமான செய்திகளோடயும், சிந்தனைகளோடயும் கேக்கறவங்களை கட்டிப் போடற மாதிரி சொல்றது புலவர் கீரனுக்கு இணை அவர்தான். நடுவுல சொல்ற கிச்சு கிச்சு மூட்டற குட்டிக் கதைகளும் சுவாரசியமா இருக்கும்.



எல்லாத்துக்கும் மகுடம் வெச்சது மாதிரி இருப்பது R.S.மனோகரின் நாடகங்கள். எங்க பள்ளிக்குள்ள இருக்கற கலா மண்டபத்திலும், GVG கலையரங்கத்திலும் மனோகர் நாடகங்களை பார்ப்பதே ஒரு சுகானுபவம். "இலங்கேஸ்வரன்" நாடகத்தை முதல் முதல்ல "ட்ராமாஸ்கோப்" முறையில கலா மண்டபம் மாதிரியான சுமாரான இடத்துலயே அதை அட்டகாசமா நடத்தி, வழக்கத்துக்கு மாறா பள்ளியிலயே தொடர்ந்து 10 நாள் நடத்தி அசத்தியவர் அவர்.

இப்ப இதெல்லாம் எதுக்குச் சொல்றேன்னா, 90களுக்குப் பிறகு இந்த மாதிரி நிகழ்ச்சிகள் ரொம்பவே குறைஞ்சுக்கிட்டே வந்து, இப்பல்லாம் நடக்கறதே இல்லன்னு கேள்விப்பட்டபோது ரொம்ப சங்கடமா இருந்தது. அதவிட சங்கடம் இதெல்லாம் நேரத்தை வீணாக்கற விஷயம்ங்கற மாதிரி பேசினது.

செந்தில் ஆறுமுகம் மாதிரியான ஆசிரியர்களும் இப்ப இல்ல. இதையெல்லாம் ரசிக்கறதுக்கு மக்களும் இல்ல. இப்ப மக்கள் பாத்து ரசிக்கற ஒரே மேடை 21 இன்ச் டி.வி பொட்டிதான். காலைல எழுந்ததிலிருந்து ராத்திரி தூங்கப் போகற வரைக்கும் மெகாத்தொடர்கள்ங்கற பேர்ல மக்களை மக்கிப் போக வெக்கற அரைவேக்காடு நிகழ்ச்சிகள்தான். எங்க பகல்ல பாக்காம விட்டுப் போச்சுன்ன என்ன பண்றதுன்னு ராத்திரி ஒரு ரௌண்ட் மொதல்லேருந்து திரும்பப் போட்டு வேற படுத்தறாங்க. இதயெல்லாம் பாக்க சகிக்காதுன்னுதான் மேல சொன்னவங்கள்லாம் மேலயே போய் சேந்துட்டாங்க. அங்க இருக்கறவங்க பாக்கியசாலிக.

மங்காத தமிழ்னு எட்டுத் திக்கும் கொட்டச் சொன்னான் ஒரு போக்கத்த கவி. நாம எந்தத் திக்குக்கும் போல. நம்ம வீட்டு சாக்கடையிலயே கொட்டீட்டு, பீட்சா தருவிச்சு சாப்டுட்டு, மினரல் வாட்டர் குடிச்சுட்டு குப்பறப் படுத்து குறட்டை விட்டாச்சு. அட போங்கப்பா.....

Wednesday, November 12, 2008

ஜெனீவா டயரி

முந்தாநாள் போட்ட பதிவப் பாத்தீங்களா?

Jet-de-aqua : World's highest fountain

திங்கள் கிழமை காலைல பேங்குக்கு போயிட்டு எல்லாருக்கும் ஒரு 'ஹாய்' சொல்லிட்டு கெளம்பிட்டேன். ராத்திரிதான் வேலை ஆரம்பிக்கும். வெளிய வந்தா சுள்ளுன்னு சூரியன், கூடவே ஊதக் காத்து. லேசா சாரல். பேங்குல இருந்து ஜன்னல்ல எட்டிப் பாக்கும்போதே தெரிஞ்சுது, இன்னிக்கு ஃபௌண்டன் இருக்குன்னு. அப்பிடியே ஆத்தோரமாவே நடந்து ஏரிக்கு வந்தா ஈயாடுது. குளுருக்கு டூரிஸ்டுக கூட ரூம்லயே மொடங்கி கெடக்காங்க போல. ஃபோட்டோ எடுக்க நல்ல சூழல். கூட்டம் கூட்டமா அன்னங்களும், வாத்துகளும், நாரைகளும். யாரோ ஒரு பாட்டி ஒரு ஒரமா உக்காந்து ரொட்டித் துண்டெல்லாம் பிச்சு பிச்சு அதுகளுக்கு வினியோகம். படம் புடிக்கலாம்னு போனா பாட்டிக்கு ஒரே கோவம். அதுகளையெல்லாம் நான் வெரட்டி விட்டுடுவேன்னு. படம் எடுக்கவே விடல. நமக்கு ஃப்ரென்ச் ஓரளவுதான் புரியும். திட்ட ஆரம்பிக்கறதுக்குள்ள இடத்த காலி பண்ணிட்டேன்.

பக்கத்துலயே தாவரவியல் பூங்கா (Botanical Garden) இருக்கு. வெளிய ஒரு பெரிய திடல்ல போதைமருந்துகளுக்கு எதிராக ஒரு விழிப்புணர்வுக் கூட்டம் நடந்துக்கிட்டுருந்துது. கொஞ்ச நேரம் நின்னு கவனிச்சா ஸ்விஸ் டீனேஜர்க எந்த அளவுக்கு இந்த பழக்கத்துக்கு அடிமையாகிக் கிடக்காங்கன்னு தெரிஞ்சுது. (போன முறை வந்தபோதே சாயங்காலத்துல இருந்தே ஏரிக்கரையோரமா பசங்களும் பொண்ணுகளும் கஞ்சா மாதிரியான பொருட்களை சர்வ சாதாரணமா உபயோகிக்கறதப் பாத்து அரண்டு போயிருக்கேன்.) ஸ்விஸ் நார்கோடிக்ஸ் ப்யூரோவோட சட்டங்கள் இன்னும் கடுமையாக்கப்படணும்னு பேசினாங்க.

Caption: What is the future for our children? Say double no to drugs !!

வெளிய பாலத்துக்கு ரெண்டு பக்கமும் இருந்த குதிரைவீரன் சிலைக என்னை ரொம்ப கவர்ந்தது. போருக்கு போற (கழுகுடன் வீரன்) குதிரை தலை குனிஞ்சும், சமாதானத்துக்குப் போற (புறாவுடன் வீரன்) தலை நிமிர்ந்தும் இருக்கற மாதிரி தோணுச்சு. பூங்காவுக்குள்ள போனா, ஒவ்வொரு மரமும் ஒவ்வொரு கலர்ல இருக்கு. இலையுதிர் காலத்தோட கடைசி நாட்கள். இன்னும் ரெண்டு வாரத்துல எல்லா மரமும் மொட்ட மொட்டயா நிக்கும். சில படங்கள் எடுத்துட்டு ரூமுக்கு திரும்பிட்டேன். கொஞ்சமாவது தூங்கினாத்தான் ராத்திரி பூரா உக்கார முடியும். புதுசா ஒரு இந்திய ரெஸ்டாரண்ட் ஆரம்பிச்சுருக்காங்கன்னு அங்க சாப்பிடப் போனா, அது பேருதான் 'இந்தியா ப்ளாசா' நடத்தறது ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படிக்க வந்த பங்ளாதேஷ் பசங்க. கடுகு எண்ணை சமையல். சுமாரா இருந்துது. இனிமே அந்தக் கடைக்கு போகக்கூடாதுன்னு முடிவு பண்ணிக்கிட்டேன்.

இந்த வாரக்கடைசிக்குள்ள வேலை முடியணும். அப்பிடி முடிஞ்சா, ஒரு நாள் ஆல்ப்ஸ் மலைத்தொடர்ல எதாவது ஒரு மலையுச்சிக்காவது போயிட்டு வரணும். உச்சிகள்ல நல்ல பனி விழுந்திருக்கு. மழை இல்லாம இருக்கணும். இன்னிக்கு காலையிலிருந்து மழை விடாம பெஞ்சுக்கிட்டுருக்கு. வாரம் பூரா இப்பிடித்தான் இருக்கும்கறாங்க. பாக்கலாம்...

கலர் கலரா மரங்களப் பாருங்க....

Tuesday, November 11, 2008

மென் பொருட்களில் என் பொருட்கள்

கொக்கி போட்ட அணிமா வுக்கு வாழ்த்துக்கள்... நல்லாயிருப்பா நல்லாயிரு !!

அது என்ன மேட்டர்னா, நாம அடிக்கடி உபயோகிக்கற மென்ப்பொருட்களப் பத்தி நாலு நல்ல வார்த்தை சொல்லணுமாம். சொல்லிட்டாப் போச்சு....



PDF கோப்புகள் பண்றதுக்கு. இத ஒரு ப்ரிண்டரா சேத்துட்டோம்னா, இது வழியா ப்ரிண்ட் பண்ணும்போது நாம சொல்ற இடத்துல சொல்ற பேர்ல PDF கோப்பா எழுதிரும். சாதாரண ப்ரிண்டரை கையாளர மாதிரியேதான். இலவச வரிசைல கொஞ்சம் விளம்பரங்கள் 15 வினாடிகளுக்கு வரும். அதை பொறுத்துக்கிடோம்னா போதும்.


இது ஒரு 'அகராதி' புடிச்ச மென்பொருள். இத நிறுவியாச்சுன்னா ஸிஸ்டம் ட்ரேல உக்காந்துக்கும். திடீர்னு யாராச்சும் இங்கிலிபீச்சுல மெய்ல் அனுப்பிச்சாலோ, மேனேஜர் குடுத்த டாக்குமெண்ட்ல எதாவது வார்த்தைக்கு அர்த்தம் புரியலைன்னாலோ, அந்த வார்த்தை மேல கர்சர வெச்சு Ctrl+Alt+W அமுக்குங்க.


அப்துல்லா அண்ணன் அறிமுகப் படுத்தினாரு. தமிழ்ல டைப் பண்ண ரொம்ப சுலமான வழி. வசதி என்னன்னா தமிழ் இங்கிலீஷ் ரெண்டுலயும் மாத்தி மாத்தி டைப் பண்ணிக்கிட்டு போய்ட்டே இருக்கலாம். இன்னொரு எடிட்டர்ல எழுதி, காப்பி பண்ணின்னு வில்லங்கமே இல்லை.


நெஜமா சொல்றேன்... இத போட்டதுக்கு அப்பறம் இந்த ரெண்டு வருஷத்துல வைரஸ் தொந்தரவு இல்லவே இல்ல. வாரம் ஒரு தடவையாவது வைரஸ் டேடாபேசை அப்டேட் பண்ணிக்கிறது நல்லது.


Net Meeting -ஐ விட ஒசத்தி. இண்டர்நெட்டும் கண்ட்ரோல் பண்ண வேண்டிய கம்ப்யூட்டர்ல அனுமதியும் இருந்தா போதும். எங்க இருந்தும் எந்த கம்ப்யூட்டரையும் இயக்கலாம். வீட்டுல இருந்து ஆபீஸ் வேலை செய்யணும்னா நமக்கு இதுதான் வசதி.

அவ்வளவுதான்... மத்தபடி சொல்லிக்கற மாதிரி ஒண்ணும் உபயோகிக்கறதில்ல. எதாச்சும் உங்களுக்கு உருப்படியா தேறுதா?

இன்னும் ரெண்டு பேர மாட்டி உடணுமே? நம்ம நண்பர்கள் எல்லாருமே நல்லவங்கதானே? நீங்களா யாராவது எடுத்து தொடருங்களேன்... ப்ளீஸ்....

Sunday, November 9, 2008

ஜெனீவா !!


வேலை நிமித்தமா நேத்து ஜெனீவா வந்தேன். சிங்கப்பூரிலிருந்து 13 மணி நேரம் பறந்து ஸ்யூரிக் (Zurich) வந்து 2 மணி நேரம் காத்திருந்து 1/2 மணி நேரத்தில் ஜெனீவா. (இதுக்கு ஸ்யூரிக்லயே வெளிய வந்து ரயில் புடிச்சு வந்திருந்தாக் கூட சீக்கிரமா வந்திருக்கலாம்.) பிஸினஸ் க்ளாஸ்ல நல்லா தூங்கிட்டு வந்தாலும் 7 மணி நேர வித்தியாசம் இருக்கறதால ஒரு மாதிரி கெறக்கமா இருந்துது. ராத்திரி 12 மணிக்கு மேல வந்து சேந்து ஹோட்டல்ல போய் மறுபடி தூக்கத்தை கண்டின்யூ பண்ணினேன்.

சனிக்கிழமை காலை. நல்ல குளிர். மழைத் தூரல். விசு விசுன்னு காத்து வேற. காலைல இருந்து ராத்திரி 9 மணி வரைக்கும் பேங்குல வேலை. நண்பர்களோட ராத்திரி இந்தியன் ரெஸ்டாரெண்டுல டின்னர். இது ஒரு சோம்பேறி ஊரு. இதுக்கு முன்னால 2-3 தடவை வந்திருக்கேன். இப்ப கொஞ்சம் பரவால்ல. சாயங்காலம் 6 மணி ஆச்சுன்னா ஆபீஸ் மாதிரி கடைகள மூடிட்டு அவனவன் வீட்டுக்கு போயிடுவான். ரெஸ்டாரெண்டுக மட்டும் ஒரு 10:30 மணிக்கு கடைசி ஆர்டர் எடுப்பாங்க. இன்னிக்கு ஞாயிறு லீவு. காலைல எழுந்து ஐக்கிய நாடுகள் சபைக்கு போனேன். ஹோட்டல்ல் இருந்து நடக்கற தூரந்தான். மழை, காத்துனால 13 நம்பர் ட்ராம் புடிச்சு போனேன். கரெக்டா இன்னிக்கு பாத்து சுத்திப் பாக்க அனுமதி இல்லைன்னுட்டாங்க. ஐ.நா. சபைக்கு வெளிய சர்வதேச ஊனமுற்றோர் சங்கம் (Handicap International) , கண்ணி வெடிகளால் ஊனமுற்றவர்கள் நினைவாக பெரிய மர நாற்காலி நினவுச் சின்னம் வெச்சுருக்காங்க. ஒரு கால் உடஞ்ச மாதிரி இருக்கும். அதிகார வர்க்கத்தின் அலட்சியப் போக்கையும் இந்த் சின்னம் ஒரு இடி இடிக்குது.

இப்ப இது இலையுதிர் காலம்கறதால ஊர் பூரா மேபில் மரத்தோட (காஷ்மீர்ல சினார் மரம்னு சொன்னேனே... அதே மர வகைதான் இதுவும்) இலைகள். சின்னதும் பெருசுமா, மஞ்சள், பழுப்பு, ப்ரவுன்னு பாக்கற எடமெல்லாம் இலைக்குப்பை. குப்பைன்னாலும் பாக்க அழகா இருக்கு.


மழை தூரலப் பாத்தா வேலைக்காகாதுன்னு அப்பிடியே நடந்து ஜெனீவா ஏரிப் (Lake Leman) பக்கம் வந்தேன். கரையோரமா நாரைகளும், வாத்துகளும், அன்னங்களும் நீந்திபோறது பாக்க அவ்வளவு அழகு.


ஏரிக்கு நடுவுல உலகின் பெரிய ஃப்வுண்டன் இருக்கு. 500 மீட்டருக்கு மேல பீச்சி அடிக்கும். கெரகம் அதுக்குங்கூட இன்னிக்கு லீவு. போங்கடா.. நீங்களும் உங்க ஊரும்னு மறுபடி ஹோட்டலுக்கே வந்துட்டேன். நண்பர் ஒருத்தரு வீட்டுல மதிய சாப்பாடுக்கு போகணும். அவருக்காக காத்துக்கிட்டுருக்கேன். ராத்திரி வேற ஒரு நண்பரோட டின்னருக்கு போகணும். ரொம்ப டைட் ஷெட்யூல் பாருங்க.. :)

ஐரொப்பிய கட்டுமானக் கலைக்கு உதாரணமா பல பழங்காலக் கட்டிடங்க, சர்ச்சுக, சிற்ப வேலைகன்னு ஊர்ல நிறைய இருக்கு. அடுத்த ஒரு வாரத்துல இன்னுங் கொஞ்சம் ஊரச் சுத்திட்டு எழுதறேன். இப்போதைக்கு இந்தப் படங்களைப் பாருங்க. (படங்களை க்ளிக்கினா பெருசா பாக்கலாம்)

Saturday, November 8, 2008

விளம்பர நாட்கள்

மெக்கானிகல் இஞ்சினீரிங் முடிச்சுட்டு "காக்காசுன்னாலும் கெவுர்மெண்ட்டு காசு"ன்னு வேலை தேடும்போது கெவுர்மெண்டு கம்பெனிகள்லாம் எங்கூட டூ விட்டுட்டாங்க. அப்பறம் டெல்லி போய் நமக்குத் கொஞ்சமே கொஞ்சம் தெரிஞ்ச "கட்டிங் எட்ஜ் டெக்னாலஜி"யான வேர்ட்ஸ்டார், டி-பேஸ் இதுகளை வெச்சு ஒரு உப்புமா கம்பெனில டைரெக்டரா .. சாரி.. டைரெக்டா ஜாயின் பண்ணினேன். ஒரு மாசத்துக்குள்ளயே ஒரு சின்ன விளம்பர ஏஜன்ஸியில தெரிஞ்சவர் மூலம வேலை கெடச்சுது. உப்புமா கம்பெனில மொத மாசம் சம்பளம் வாங்கின மறுநாள் சொல்லாமக் கொள்ளாம ஏஜன்ஸில ஜாயின் பன்ணிட்டேன்.

அப்பத்தான் அந்த ஏஜன்ஸிக்கு ரெண்டு வயசு. கம்ப்யூட்டர்லாம் வாங்கி நெட் ஒர்க் பண்ண ஆரம்பிச்சிருந்தாங்க. நாமதான் "கட்டிங் எட்ஜ் டெக்னாலஜி" எக்ஸ்பர்ட் ஆச்சே.. "அந்த நெட் ஒர்கிங் எல்லாம் கொஞ்சம் பாத்து செய்ங்க"ன்னு அங்க ஸிஸ்டம்ஸ் மேனேஜர் கிட்ட சேத்து விட்டாங்க. ராவோட ராவா நாவெல் நெட் ஒர்க் எல்லாம் படிச்சு எப்பிடியோ செட் பண்ணிணோம். சின்ன ஏஜன்ஸிங்கறதால எல்லா டிபார்ட்மென்ட்லயும் மூக்க நொழைக்கலாம். ஒரு 4 மாசம் போன பின்னாடி, "இது வரைக்கும் என்ன கிழிச்சங்கறத எழுதிக் குடு பாக்கலாம்"ன்னாங்க. சரின்னு நானும் ஒரு பக்கம் எழுதிக் குடுத்தேன். அதப் படிச்சுட்டு "அட இங்கிலீஷ்ல சுமாராவே எழுதரயே.... காபியெல்லாம் எழுத முடியுமா?"ன்னு கேட்டாங்க. எதோ ஒரு ஆர்வத்துல "ஓ... எழுதினாப் போச்சு"ன்னு சொல்லிட்டேன். ஆனா முழு நேரமா இல்ல. அப்பப்ப. அப்ப ஒரு பெரிய ஜப்பானிய ஆடியோ ப்ராண்டுக்கு ஒரு புது கேம்பெய்ன் ஆரம்பிக்க இருந்துது. அதுக்கு "ஒன் வேல்ட்... ஒன் சௌண்ட்.."ன்னு ஒரு பேஸ் லைன் எழுதினோம். அதுக்கு ரொம்ப பெரிய வரவேற்பு. கூடவே டி.டி.பி, அனிமேஷன் எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் செஞ்சு பாக்க ஆரம்பிச்சேன். ராகேஷ் பச்சன்னு ஒரு அனிமேட்டர் இருந்தாரு. ராத்திரியெல்லாம் ரொம்ப நேரம் உக்காந்து சொல்லித் தருவாரு. 3டி ஸ்டுடியோ, அனிமேட்டர் ப்ரோ ரெண்டும் உபயோகிச்சு சின்ன சின்ன அனிமேஷன்ஸ் பண்ணினோம். ஒரு பெரிய ஃப்ரிட்ஜ் விளம்பரத்துக்காக பெங்குயினை வெச்சு சில அனிமேஷன்ஸ் ரொம்ப திருப்தியா செஞ்சோம். ஆனா எல்லாமெ வெளி வரல.





விளம்பர உலகத்துல அப்பிடித்தான். 10 செகண்ட் விளம்பரத்துக்கு 1 மாசம் ஷூட் பண்ணி, எடிட் பண்ணி 10 படம் எடுத்தா, 1 செலக்ட் ஆகலாம். லக் இருந்தா. அதே மாதிரி எட்டு லைன் பேராவுக்காக பத்து பக்கமாவது வேற வேற மாதிரி எழுதிப் பாத்தாத்தான் ஒண்ணாவது கரெக்டா வரும். மெயினா கம்ப்யூட்டர், நெட் ஒர்க், அக்கவுண்டிங் சாஃப்ட்வேர்னு இருந்தாலும், சைடுல அப்பிடியே ஒரு ஹோட்டல், ஒரு பெரிய டெக்ஸ்டைல் ப்ராண்ட், ஒரு கம்பூட்டர் கம்பெனின்னு பல ப்ராண்டுகளுக்கு பேஸ் லைன், காப்பின்னு நிறைய எழுதினேன். கம்ப்யூட்டர் வேலையை விட இது ரொம்ப வித்தியாசமா, சுதந்திரமா இருந்ததாலா ராத்திரி ரொம்ப நேரம் ஆனாலும் மத்த க்ரியேடிவ் டைரெக்டர்க, காப்பி ரைடர்க கூட விவாதங்கள் பண்ணின்னு சுவாரஸ்யமா இருக்கும். ரொம்ப மகிழ்ச்சியோட கழிச்ச நாட்கள் அவை. அங்க நம்ம கற்பனைக்கு எந்த எல்லையும் கிடையாது. எந்த ஒரு விஷயத்தையும் எந்த ஒரு கோணத்துலயும் அணுகலாம். பரிபூரண சுதந்திரம். மத்த ஏஜன்ஸிகளோட / க்ளையன்டுகளோட விளம்பரங்கள் அடங்கிய கார்ட் புக், ஷோ ரீல்கன்னு எது வேணும்னாலும் கிடைக்கும். அது ஒரு நிலாக் காலம்.




அப்பிடியே ஒரு 4 வருஷம், சோனி, ஜே.சி.டி., க்ளாரிட்ஜஸ் ரிசார்ட்ஸ், அமுல் சாக்லேட், லிம்கா, ஃபினோலெக்ஸ், பி.எஸ்.ஐ, ஷா வாலஸ், கெல்வினேட்டர், எலெக்ரோலக்ஸ், காம்பேக் கம்ப்யூட்டர்ஸ், வேல்டு ஃபோன்.... இப்பிடி பல ப்ராண்டுகளோட சம்பந்தப் பட்டு இருந்தேன். காப்பி எழுதறது, விஷுவலைஸ் பண்றது, அனிமேஷன் பண்றதுன்னு பல விதங்கள்ல. கூடவே சாப்ட்வேரும், நெட் ஒர்கிங்கும். மும்பைல, புனேல புது கிளைகள் ஆரம்பிச்சபோது அங்கெல்லாம் கொஞ்ச நாட்கள் இருந்து வேலை செஞ்சது வேற மாதிரியான் அனுபவங்கள்.

பிறகு க்ளையண்டோட தேவைகள் அறிஞ்சு க்ரியேடிவ் ரூட் முடிவு பண்றதும், மீடியா ப்ளானிங்லயும் நொழஞ்சு அந்த பேப்பர்ல/மேகஸின்ல எந்த அளவு விளம்பரம் போடறது, எந்த சேனல்ல எத்தனை செகண்ட் நேரம் வாங்கணும், சிட்டிக்குள்ள எந்த இடங்கள்ல ஹோர்டிங் வெக்கறதுன்னு அந்த வேலைகளையும் கத்துக்கிட்டேன். ஒவ்வொரு நாளும் சேலஞ்சிங்கா இருக்கும். அது மாதிரி சுவாரசியமான நாட்கள் திரும்ப வருமாங்கறது சந்தேகந்தான்.

இப்ப இருக்கறது முழுசா ஐ.டி. யில. பல வங்கிகள், பல நாடுகள்னு சுத்தினாலும், இதுல வேறு விதமான அனுபவங்கள் இருந்தாலும், விளம்பர உலகத்துல இருந்த மாதிரியான கற்பனை சுதந்திரம் கிடையாது. கம்ப்யூட்டரோ, சாஃப்ட்வேரோ அதோட எல்லைக்கு உட்பட்டு என்ன செய்ய முடியுமோ அதுதான் முடியும். சில சமயம் தோணுது திரும்ப விளம்பரனாகப் போயிடலாமான்னு. ஆனா அந்தத் துறையோட முகம் இந்த இடைப்பட்ட காலத்துல ரொம்பவே மாறிப் போச்சு. அதுல நம்மளை நிறுத்திக்க முடியாதோன்னு தோணுது.

வால் : ஒரு ஷூ ப்ராண்ட் லாஞ்ச் பண்ணுபோது, 3 டீசர் விளம்பரங்கள் போட்டோம்.

Day 1 : "69% of the Italian girls want you to slip into them"

Day 2 : "69% of the French girls want you to tie them up"

Day 3 : "69% of the Spanish girls want your toes inside"

அவ்ளோதான்... டெல்லி மாதர் சங்கங்கள், விமென்ஸ் லிப் எல்லாம் ஏஜன்ஸி முன்னாலா தர்ணா பண்ணி, Times of India-ல மொதப் பக்கம் செய்தி வந்து அப்பறம் மன்னிப்பு கோரல், விளம்பரம் வாபஸ்னு ஆகிப் போச்சு. பின்ன... இது கொஞ்சம் ஓவராத்தான் எழுதிட்டோம் :)))

Monday, November 3, 2008

பூலோக சொர்க்கம்(??) காஷ்மீர் ‍ 4

போன மூணு பதிவுலயும் காஷ்மீர்ல இருக்கற சில எடங்களோட அழகை ரசிச்சிருப்பீங்க....வாஸ்தவந்தான்... காஷ்மீர் ரொம்பவே அழகான எடந்தான்... சந்தேகமேயில்லை. அது புவியியல் ரீதியா இந்தியாவுல இருந்தும் அது ஏன் நம்ம எல்லாருக்கும் ரொம்பவே அன்னியப்பட்டு இருக்கு? அது ஏன் நம்ம நாட்டோட மத்த பகுதிகளுக்கு போய் சுதந்திரமா வர மாதிரி முடியாம ஒரு கட்டுப்பாடு இருக்கற மாதிரி ஒரு நெலமை? இத மாத்தறதுக்கு ஏன் நம்ம மத்திய அரசுனால ஏன் முடியல? மொதல்ல அப்பிடி மாத்த முடியுமா.. அவ்வளவு அதிகாரம் நம்ம அரசுக்கு இருக்கான்னு பாத்தா... முடியும், இருக்குன்னு உறுதியா சொல்ல முடியல. இத புரிஞ்சுக்க முயற்சி பண்றதுக்கு, கொஞ்சம் அப்பிடியே பின்னால போய் வரலாறு என்ன சொல்லுதுன்னு பாப்போமா?

சீன் 1 : 1947 அக்டோபர்ல மஹாராஜா ஹரி சிங் ஆட்சியில சுத்துப்பட்டு நாடுகளால ஒரு ஆபத்து வந்தபோது, ஒரு நெருக்கடி காரணமா இந்தியா கிட்ட உதவிக்கு வராரு. நேரு அத எழுத்து மூலமா கேக்கறாரு. ராஜாவும் மௌண்ட்பேட்டனுக்கு தன் நாட்டோட பாதுகாப்புக்காகவும், வந்திருக்கற ஆபத்தை எதிர்த்து போராடவும், தன் நாட்டோட பாதுகாப்பு, தகவல், வெளியுறவு‍ இந்த மூணு துறையையும் இந்தியா நிர்வகிக்க வேண்டியதுன்னு எழுதித் தராரு. கூடவே ஷேக் அப்துல்லாவை பிரதமராகக் கொண்ட இடைக்கால அரசு அமைக்கவும் கேட்டுக்கறாரு.

சீன் 2 : இந்திய அரசும் 1948ல ஐக்கிய நாடுகள் சபைக்கு அதிகாரப் பூர்வமா ஒரு கடிதத்தை அனுப்பி, பாகிஸ்தானோட ஆக்கிரமிப்புக்கு தன்னுடைய எதிர்ப்பையும், பாகிஸ்தான் தன் படைகளை காஷ்மீரிலிருந்து விலக்கிக்கணும்னு பதிவு செய்யுது.

சீன் 3 : இதப் பத்தி ஐக்கிய நாடுகள் சபையில விவாதம் நடக்கும்போது ஷேக் அப்துல்லா பேசும்போது "காஷ்மீரோட இறையாண்மையப் பத்தி ஏன் பாகிஸ்தான் கேள்வி எழுப்புதுன்னு புரியலயே. என் நாட்டுக்கு ஒரு அபாயம். அதை சமாளிக்கறதுக்கு இந்தியா கூட ஒரு உடன் படிக்கை செய்துக்கறோம். இதுல என்ன குழப்பம்னு தெரியல. காஷ்மீருக்கு சுதந்திரம் வேணுமா, ஏன் இந்தியாவுடன் ஒப்பந்தம் போடப் போச்சுன்னெல்லாம் கேட்க எந்த உரிமையும் யாருக்கும் இல்லை. ஐநா சபை நேரில் வந்து நிலைமையை ஆராயட்டும்" அப்பிடின்னு பேசறாரு.

சீன் 4 : 1948 ஆகஸ்டுல ஐநா சபை "இந்தியா, பாகிஸ்தான் இரு நாடுகளும் மொதல்ல சண்டை சச்சரவ நிறுத்திட்டு, படைகளை வாபஸ் வாங்கிட்டு, போர் நிறுத்தம் செய்யணும்; இரு நாடுகளும் சுமுகத் தீர்வுக்கு ஒரு மனதாக முயற்சி செய்யணும்; காஷ்மீர் மக்களோட உணர்வுகளுக்கும் மதிப்பு அளிச்சு, அவங்க சம்மதத்தோட ஒரு பொதுவான் முடிவுக்கு வரணும்" அப்பிடின்னு ஒரு தீர்மானம் நிறவேத்துது. இந்தியாவும் இதை ஒத்துக்கிட்டு தன்னுடைய சம்மதத்தை அளிக்குது. சில நிபந்தனைகளோட. (காஷ்மீரோட இறையாண்மைல‌ பாகிஸ்தானுக்கு எந்தப் பங்கும் கிடையாது; "சுதந்திர காஷ்மீர்" அப்பிடின்னு ஒரு அங்கீகாரம் இல்லை; காஷ்மீரோட உள்விவகாரங்கள்ல பாகிஸ்தானுக்கு எந்த வேலையும் இல்லை; மக்கள் கருத்து (plebiscite) அறியும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்; அப்பிடி மக்கள் சுதந்திரமா கருத்து சொல்ல முடியாத ஒரு சூழ்நிலை இருந்தா அதை சரி செய்ய இந்தியா தேவையான நடவடிக்கைகள் எடுக்கும்.) கூடவே, காஷ்மீருக்கு சில விசேஷ அந்தஸ்தைக் கொடுக்கும் புகழ் பெற்ற "ஆர்டிகில் 370" யும் நம்ம கான்ஸ்டிட்யூஷன்ல சேருது.

இதெல்லாம் பாகிஸ்தானுக்கு ஒத்துக்கவே முடியாமப் போகுது. கர் புர்னு ரெண்டு பக்கமும் கருவிக்கிட்டே இருக்காங்க. அதுக்கு பிறகு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கு இடையில 1965ல போர், 1966ல தாஷ்கண்ட் ஒப்பந்தம் (போனஸா லால் பகதூர் சாஸ்திரி மர்மமான முறையில தாஷ்கண்ட்லயே மரணம்), 1971ல போர், 1972ல சிம்லா ஒப்பந்தம்...... 1974, லஹோர், ஆக்ரா, இஸ்லாமாபாத்.... இப்பிடி பல ஒப்பந்தங்கள்னு தொடர்ந்து போர், சமாதானம், பேச்சு வார்த்தைன்னு வளந்துக்கிட்டே போக, ரெண்டு நாடுகளுக்கும் இது ஒரு ப்ரெஸ்டீஜ் இஷ்யூ ஆகுது. இதுக்கு நடுவுல பாகிஸ்தான் பின்வாசல் வழியா ஆளுகளை அனுப்பி, காஷ்மீர்ல உள்ள சில அடிப்படைவாதிகளை மூளைச்சலவை செய்து, தகிடுதத்தம் பண்ணி அங்க எப்பவும் ஒரு பதட்டமும் அமைதியின்மையும் இருக்கற மாதிரி பாத்துக்குது. நடுவுல நம்ம அரசியல் கட்சிகளும் பிரச்னைகளை கெளப்பி விட்டு நெருப்பு அணையாம பாத்துக்கறாங்க.

பிரச்னை தீர்ந்தா ரெண்டு நாடுகளுக்கும் அரசியல் பண்ண விஷயம் இல்ல. பாகிஸ்தான்ல பருத்தி வெடிக்குதோ இல்லயோ காஷ்மிர்ல தெனம் ரெண்டு குண்டாவது வெடிச்சாத்தான் சாப்பாடு எறங்கும். அந்த அளவுக்கு காஷ்மிர் அவுங்க தினப்படி அரசியல் வாழ்க்கையோட கலந்திருக்கு. ஜின்னாவுல இருந்து ஜர்தாரி வரைக்கும். நடுவுல எத்தனை தலைவர்கள காவு வாங்கியிருக்கு.இந்த சிக்கல்களால 3 பிரிவுக உருவாகுது. இந்தியாவோட இருக்கலாம், பாகிஸ்தானோட போகலாம், ரெண்டு பேரும் வேண்டாம்; சுதந்திரமா நம்மள நாமெ பாத்துக்கலாம்னு.

இந்த சூழ்நிலைல, நாள் மாசம்னு 50 வருஷம் கடந்து போக, பாதிக்கப்பட்டது 2 தலைமுறை. இந்த சச்சரவைப் பாத்து பாத்து எரிச்சலாகி மனசுக்குள்ள வன்மம்தான் வளருது. இதாண்டா சான்ஸ்னு சில இயக்கங்கள் நைஸா இஸ்லாமிய அடிப்படைவாதத்தையும், இந்து அடிப்படைவாதத்தையும் உரம் போட்டு வளர்க்க ஆரம்பிக்க, இப்ப பிரச்சனைக்கு இன்னொரு பரிமாணம். ஊர் ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்ட‌ம். இதுமாதிரி இயக்கங்களுக்கெல்லாம் நல்ல முறையில ஊக்கமும், உதவிகளும் அந்தப் பக்கத்திலிருந்து அட்டகாசமா வருது. வேறென்ன வேணும்? இவங்களுக்கு ஒரே வேலை... பள்ளத்தாக்குல எங்க எந்த சின்னப் பிரச்சனை வந்தாலும் அதை ஒட்டுமொத்தமா காஷ்மீர் பிரச்னையா ஆக்கறது. அதனால பிரச்னைக்கு ஒட்டுமொத்த காரணம் பாகிஸ்தான்னு சொல்லிட முடியாது. இந்தியா, பாகிஸ்தான், காஷ்மீர மக்கள்னு மூணு புள்ளிகள் இணைக்கிற முக்கோணம் அது. ஜியோமிதி விதிகளின்படி "மோஸ்ட் ஸ்டேபில் ஸ்ட்ரக்சர்" முக்கோணம்தான். அதுனாலதானோ என்னவோ, இந்தப் பிரச்னையும் ரொம்பவே ஸ்ட்ராங்கா இருக்கு.

தவிர காஷ்மிரோட வடக்கு பகுதிகளை (Northern Areas) பாகிஸ்தானுக்கும், கிழக்குல அக்ஸாய் சின் பகுதியை சைனாவுக்கும் தாரை வார்த்துக் கொடுத்தது, முசாஃபராபாதை தலைநகரா வெச்சு ஒரு அங்கீகரிக்கப்படாத "ஆசாத் காஷ்மீர்" இருக்கறது எல்லாம் பிரச்னையை மேலும் சிக்கலாக்குது. ஒப்படைக்கப்பட்ட காஷ்மீரோட பகுதிகளை இந்தியா பாதுகாக்கத் தவறிடுச்சுன்னு ஒரு சாராருக்கு கோவம். இதுதான் பாதுக்காக்கற லட்சணம்னா எங்களுக்கு இது தேவையில்லைங்கறாங்க. (ஒரு சின்ன நிகழ்ச்சி சொல்றாங்க. உண்மையான்னு தெரியல. அக்ஸாய் சின்ன் பகுதிய சீனாவுக்கு விட்டுக் குடுக்கும்போது, பாரளுமன்றத்துல நேரு அதை "ஒரு புல் கூட முளைக்காத பனிப் பாலைவனம்"னு சொன்னாராம். பதிலுக்கு ஒரு எம்.பி "உங்க தலை கூடத்தான் முடி முளைக்காத பாலைவனம். அதையும் குடுத்துடலாமா"ன்னு கேட்டாராம். இது எப்பிடி இருக்கு?)

இவ்வளவு ப்ரச்னைகள் இருக்குது. சுமூகத் தீர்வு கிடக்குமா கிடக்காதா? அப்பிடி சுமூகத் தீர்வுன்னு ஒண்ணு இருக்கா? அதுக்கான அரசியல் சூழ்நிலை இருக்கா? மக்களோட கருத்தை அறிய ரெண்டு நாடுகளுக்கும் உண்மையிலேயே ஆர்வம் இருக்கா? சுதந்திரம் குடுக்தா அதை பராமரிக்கறதுக்கான அடிப்படை வசதிகளும் நல்ல தலைமையும் இருக்கா? அங்க இருக்கற சாமான்யனுக்கெ அடுத்த சூரிய உதயத்தை பாக்க முடியுமான்னு உத்தரவாதம் இல்லாத சூழ்நிலையில டூரிஸ்டுகள் பயமில்லாம போய் வர முடியுமா? டூரிஸ்டுகளையே நம்பி இருக்கற பொருளாதாரம் எப்பிடி வளரும்? இப்பிடி ஒரு இடியாப்பப் ப்ரச்னையை கையில வெச்சுக்கிட்டு ரெண்டு நாடுகளும் எவ்வளவு கால்த்துக்கு எத்தனை செலவு செய்ய வேண்டியிருக்கும்? அந்த அதிகப்படி செலவினம் அவங்க அவங்க நாட்டோட முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டையா இருக்கறதை உணருவாங்களா?

எவ்வளவு கேள்விக. இதுக்கெல்லாம் பதில் கிடைக்கிற வரைக்கும் நெஜமாவே அது பூலோக சொர்க்கம்தானாங்கறது பெரிய கேள்விக்குறியா இருக்கு. விமானப் படை அண்ணன், ராணுவ மச்சான்னு இருந்தாத்தான் காஷ்மிருக்கு போக முடியும் போல. இல்லேன்னா ஸ்ரீநகர், லே, லதாக் எல்லாம் ஃபோட்டோவுலதான் பாக்க முடியும்னு தோணுது.

ஓட்டுப் போடுங்கன்னு சொன்னாத்தான் போடுவீங்களா?

Sunday, November 2, 2008

பூலோக சொர்க்கம் காஷ்மீர் - 3



நிஷாத் பாக் (பின்னால தால் ஏரி)


அடுத்த நாள் ஸ்ரீந‌கர்க்கு பக்கத்துல ஒரு மலை மேல இருக்கற "பலுக் போஸ்ட்"ங்கற ஆர்மி போஸ்டுக்கு போக முடிவு பண்ணி (வழக்கம் போல போறதுக்கு முன்னால மதிய உணவுக்கு சொல்லி வெச்சுட்டோம்..‍ஹி ‍ஹி)காலைல கெளம்பினோம். போற வழியில, தால் ஏரிக்கு பக்கத்துல இருக்கற "நிஷாத் பாக்"ங்கற பூங்காவுக்கு போனோம். இது அரசே பராமரிக்கற பூங்கா. மாடி மாடியா 3 மாடி இருக்கு. கீழ் தளத்துல கலர் கலரா டேலியா பூக்கள். ரெண்டாவது தளத்துல ரோஜா, டேலியா, வாடாமல்லி, சாமந்தின்னு பல விதமா பல கலர்கள்ல கொத்து கொத்தா பூக்கள்.அந்தப் பூங்காவுலயே பூக்களோட விதைகளும் விக்கறாங்க. கொஞ்சம் வாங்கிட்டு வந்தோம். நம்ம ஊர் வெயிலுக்கும் காத்துக்கும் வருமான்னு தெரியல.

அப்பிடியே மேல ஏறிப் பின்னால போனா வரிசையா சினார் (chinar) மரங்கள். காஷ்மிர் பள்ளத்தாக்குல ஊசியிலை மரங்களுக்கு அடுத்ததா நிறைய இருக்கறது சினார், போப்லார் (poplar) மற்றும் வில்லோ (willow) மரங்கள்.
சினார் மரங்கள் காஷ்மீரோட கலாச்சாரச் சின்னம். இந்த மரத்தை வெட்டுறது கிடையாது. அரசு தோட்டக்கலைத்துறை ஒவ்வொரு மரத்தையும் நம்பர் போட்டு பராமரிக்கறாங்க. அவங்களோட கைவினைப் பொருட்கள், துணிகள்ல கைவேலைப்பாடு எல்லாத்துலயும் சினார் இலை ஒரு முக்கிய அம்சம். (கனடா நாட்டோட சின்னமே சினார் இலைதான். ஆங்கிலத்துல மேபில் [maple] மரம்) போப்லார் மரம் ரொம்பவே தக்கயான மரம். தீக்குச்சி மாதிரி லேசான பொருட்களுக்கு உபயோகிக்கறாங்க. வில்லோ... ‍ அதேதான்... கிரிக்கேட் பேட் செய்ய உபயோகம் ஆகுது. (வில்லோவுலயே 'அழும் வில்லோ'ன்னு [weeping willow] ஒரு வகை இருக்கு. இதோட கிளைகள் எல்லாம் பூமியப் பாத்து வளைஞ்சு இருக்கும். மழை பெஞ்சா ஒவ்வொரு கிளையிலிருந்தும் தண்ணி ஒழுகுறது மரம் அழற மாதிரி இருக்குமாம்) இன்னொரு சுவாரசியமான விஷயம், இந்த சினார் மரத்தோட இலை ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொரு கலர்ல இருக்கும். பச்சை, மஞ்சள், ப்ரௌன், பழுப்புன்னு.



பல பருவங்களில் சினார் இலைகள்




செல்ல மகள் சஹானா சினார் இலையுடன்

அப்பறம் அங்கிருந்து கெளம்பி பலுக் போனோம். அந்த ஆர்மி போஸ்ட் ஒரு மலையோட உச்சியில இருக்கு. சுமாரான ரோடு, சாய்மானம் அதிகம்கறதால 4வீல் ட்ரைவ் வசதி உள்ள ஜீப், ஜிப்ஸிகள்தான் மேல ஏற முடியும். அடிவாரத்துல (பாதாமி பாக் கண்டோன்மென்ட் BB Cantt) ஆபீஸ்ல இருந்து 2 ஜிப்ஸிக எங்களுக்காக இருந்துது. அப்பிடி வளைஞ்சு வளைஞ்சு குறுகலான பாதையில வேகமா ஓட்டிகிட்டு போனாங்க. அந்த குறுகலான பாதையில லாரிகளும், ட்ரக்குகளும் எப்பிடித்தான் ஓட்ராங்களோ... கரணம் தப்புனா மரணம்...

மேல இருந்து பாத்தா ஸ்ரீநகர் பூராம் தெரியுது. கீழ ஜீலம் நதி நகர்க்குள்ள பாம்பு மாதிரி படுத்திருக்கு. லேசான தூரல் வேற. ரொம்பவே ரம்மியமா இருந்துது. மேகமூட்டமா இருந்ததால ஃபோட்டோக்கள் அதிகமா எடுக்க முடியல.
வழக்கம்போல வயிறு முட்டச் சாப்டுட்டு கீழ எறங்கினோம். அதுலயும் நாங்க வந்த ஜிப்ஸி நடுவுல ஒரு இடத்துல மேல ஏற முடியாம பின்பக்கமா கீழ போகுது. ஆஹா... இது வேறயான்னு கொஞ்சம் பதட்டமாயிடுச்சு. ஆர்மி ட்ரைவர் எப்பிடியோ சமாளிச்சு ஓட்டிட்டாரு. கீழ வந்து மறுபடி நம்ம கார்ல ஏறி மார்க்கெட் பக்கம் போய் நினைவுப் பொருட்கள், துணிகள் எல்லாம் வாங்கிகிட்டு வீடு போய் சேந்தோம். அன்னிக்கு மதியம்தான் நகருக்கு நடுவுல இருக்கற லால் சௌக்ல குண்டு வெடிப்பு வேற. கொஞ்சம் பரபரப்பாத்தான் இருந்துது. அதனால மறுநா வேற எங்கயும் வெளியில போகல. அண்ணனோட விமானப்படை அலுவலகங்கள் எல்லாம் சுத்திப் பாத்துட்டு ஓய்வு. அடுத்த நாள் மதியத்துக்கு மேல டெல்லிக்கு விமான ஏறினோம்.

ஓரளவுக்கு அமைதியான ஸ்ரீநர்ல இருந்து கண்ணுமண்ணு தெரியாம ஒடுற டெல்லிக்கு வந்தா, போலீஸ் என்கௌன்டர்ல 3 தீவிரவாதிகள போட்டு தள்ளியிருக்காங்க. 4 நாள் முந்திதான் தொடர் குண்டு வெடிப்பு வேற. போற எடமெல்லாம் பூனப்பீநாத்தம்பாங்க. அது மாதிரி ஆகிப் போச்சு.

இத்தோட நிறுத்திக்கலாம்னு பாத்தேன். ஆனா பூலோக சொர்க்கம்கிறதை தவிர காஷ்மீரோட அடுத்த பக்கத்தையும் எழுதணும். கொஞ்சம் சீரீசா. வெய்ட் பண்ணுங்க...

மறக்காம ஓட்டுப் போட்டுருங்க....

சிங்கை அறிஞர் அரங்கம்

சிங்கப்பூர் ஹார்பர் ஃப்ரன்ட் ரயில் நிலையத்துல இன்னிக்கு சாயங்காலம் ஒரே பரபரப்பு. வெளிய வந்து செந்தோசா தீவுக்கு போற சிறு ரயில் நிலையத்துக்கு வந்தா அங்க‌யும் ஒரே அமர்க்களம். டிக்கட் ஆபீசர் டிக்கட் குடுத்து குடுத்து களைச்சுப் போய் உக்காந்துருக்காரு. என்னடா இதுன்னு யோசிச்சுக்கிட்டே போனப்பறம்தான் தெரிஞ்சுது நம்ம சிங்கைப் பதிவர்கள் பெருந்திரளாக(!!)செந்தோசா தீவுல ஆசிய‌க் க‌ண்ட‌த்தோட தென்கோடி முனைல‌ கூடியிருந்தாங்க. மொத்தம் 21 பேர்.

மாலை 4:30 மணியிலிருந்து ஒவ்வொருத்தரா வர ஆரம்பிச்சாங்க. விஜய் ஆனந்தும், கோவி.கண்ணனும், வரவங்களுக்கும் செல்போன்ல வழி சொல்லிக்கிட்டே இருந்தாங்க.

"வ‌ந்துட்டீங்களா... பஸ் புடிச்சு டால்ஃபின் லகூன்ல எறங்கி அப்பிடியே பீச் ஓரமா வந்து, தொங்கு பாலத்துல ஏறி இந்தப் பக்கம் வந்துருங்க... நாங்க வெய்ட் பண்றோம்..."

இந்த‌ சந்திப்புல முக்கிய பதிவர்கள் மலேசியாவிலிருந்து வந்திருந்த விக்கி (எ) விக்னேஸ்வரன் மற்றும் திண்டுக்கல் திரு.சுப்பிரமணியம். (இவர் அண்மையில் மறைந்த பதிவர் திருமதி.அனுராதா அவர்களின் கணவர்.)


கோவி.கண்ணன், திரு.சுப்பிரமணியம், மலேசியா "விக்கி"

5 மணி சுமாருக்கு வந்தவங்க ஒருத்தரை ஒருத்தர் அறிமுகம் செய்துகிட்டு கோக் (அட... சொன்னா நம்பணும்.. வெறும் கோக்தான்..) குடிச்சுட்டு இருக்கும்போது இன்னும் சிலரும் வந்து ஜோதில ஐக்கியமானாங்க. விக்கி தன்னைப் பற்றியும், பொதுவாக மலேசிய பதிவுலகத்தைப் பத்தியும் சொன்னாரு. பெறகு, இது மாதிரி சந்திப்புக்கு மொதத் தடவயா போற என்ன மாதிரி "டெபுடன்ட்ஸ்" சுய அறிமுகம் நடந்தது. அப்பறம் திரு சுப்பிரமணியம் பேச வந்தாரு. தன் மனைவியைப் பத்தியும், அவங்களோட கடைசி நாட்களைப் பத்தியும் ரொம்ப உருக்கமா சொன்னாரு. அவங்க மறைவுக்கு பிறகு அவங்களைப் பத்தின எண்ணங்களும், உணர்வுகளும் அந்த அளவுக்கு அவரை ஆக்கிரமித்து இருக்குனு தெரிய வந்தபோது மனசு ரொம்ப கெனத்துப் போச்சு. புற்றுநோய் பத்தின விழிப்புணர்வை எப்பிடி பரப்பறது, எங்க ஆரம்பிக்கறதுன்னு யோசனையா இருக்காரு. தவிர ஒரு புத்தகமும் வெளியிட முயற்சி செய்துகிட்டுருக்காரு. சீக்கிரமே அது நல்ல முறையில் வெளி வந்தா சமுதாயத்துக்கே நன்மை.

அப்பறம் ஃபோட்டோ செஷன், உரையாடல்கள், கலாய்த்தல்கள்னு ஜாலியாப் போச்சு. 7:30 மணி சுமாருக்கு சபையக் கலைச்சுட்டு, ஒரு குருப் லிட்டில் இந்தியா கொடைக்கடையில் இட்லி சாப்பிட போக, மத்தவங்க (நான் உள்பட) வூட்டுக்கு ஜூட்.

ஃபோட்டோ செஷன் (தொப்பியுடன் நான்)

இன்றைய அறிஞர் அரங்க‌த்துக்கு வந்திருந்தவர்கள்:
திரு. சுப்பிரமணியம், விக்னேஸ்வரன், கோவி.கண்ணன், ஜோசப் பால்ராஜ், விஜய் ஆனந்த், "முகவை மைந்தன்" ராம், பாரி அரசு, ஜோதிபாரதி, கிரி, ஜோ மில்டன், கிஷோர், மீனாட்சி சுந்தரம், சிவா, ராம், சிங்கை நாதன், ராஜா, அகரம் அமுதா, பெங்களூர் ராம், சாம்பார்மாஃபியா மற்றும் நான்.


அறிஞர் அரங்கம்

வால் 1: வ‌ந்திருந்த எல்லாப் பதிவர்களுக்கும் விக்கியின் "திருக்குறள் ‍ ஒரு எளிய அறிமுகம்" புத்தகம் அன்புப்பரிசு.

வால் 2 : பாரி அரசுவின் திருமணம். நவம்பர் 24 பட்டுக்கோட்டையில்.

வால் 3 : திரு.சுப்பிரமணியன் அவருடைய மகன் வீட்டுல இருந்து மசால் வடை, சீயம்னு சுவையான பலகாரங்கள்.