Monday, June 14, 2010

ரத்தமும் தக்காளித் தண்ணியும்......

வடிவேல் காமெடி மாதிரிதான் இருக்கு. ஆனா வேதனை.......

1984 போபால் விஷவாயு கசிவுக்கு காரணமான யூனியன் கார்பைடு நிறுவனத்து மேல போட்ட வழக்குல ஒரு வழியா 26 வருஷத்துக்கு அப்பறம் தீர்ப்பு வந்தாச்சு. அவ்வளவு பெரிய பேரிடர். அன்னிக்கு ராத்திரி மட்டுமே 2500 உயிரிழப்பு. அதுக்கு அப்பறமா இந்த 25 வருஷத்துல சாவுகள், உடல் குறைபாடுகள், பிறவிக் குறைபாடுகள், குடிதண்ணீர் மாசு, நிலத்தடி நீர் மாசுன்னு இன்னிக்கு வரைக்கும் அதோட தாக்கம் தொடர்ந்து இருக்கு. இன்னும் எத்தனை உயிர்களை காவு வாங்குமோ தெரியாது.

2010. மெக்சிகோ வளைகுடால ப்ரிடிஷ் பெட்ரோலியம் கம்பெனியோட ஆழ்கடல் எண்ணை கிணறு. 10000 அடி கீழ குழாய் உடைஞ்சு ஒரு நாளைக்கு 40000 பீப்பாய் அளவுக்கு எண்ணைக் கசிவு. 2 மாசம் ஆச்சு. ஆயிரக்கணக்கான சதுரமைல் பரப்புக்கு கடல் மேல எண்ணை மிதக்குது. தண்ணிப் பரப்புக்கு கீழ இருக்கறது இன்னும் கணக்குல எடுத்துக்கல. எடுத்துக்க முடியல. கண்க்கில்லாத கடல் உயிரினங்கள், பறவைகளுக்கு பாதிப்பு. பரவிப் பரவி இப்ப கடற்கரைகளையும் தொட்டாச்சு. சுற்றுச் சூழல் பாதிப்பு, குடிதண்ணீர் பாதிப்பு, காத்துல எண்ணை வீச்சம், கடல்லயே பாதி எண்ணையை எரிக்கறதுல வர புகை, கடலோட மேல்பரப்பு சூடாகுதல்னு அழிவுகள் தொடருது. இன்னிக்கு வரைக்கும் உடைஞ்ச குழாயை முழுசா அடைக்க முடியல. எடுத்த சில முயற்சிகளும் தோல்வி. உலகமே உன்னிப்பா கவனிச்சுக்கிட்டு இருக்கு.

முதல் கொஞ்ச நாளைக்கு நான் இல்லை அவன், நானும் இல்லை இவன்னு ஜல்லியடிச்சுக்கிட்டிருந்தாங்க. ஆனா இந்த எண்ணைக்கசிவுனால ஆன இழப்புகளுக்கு ஒவ்வொரு பைசாவையும் ப்ரிடிஷ் பெட்ரோலியம் கம்பெனி திருப்பியே ஆகணும்னு ஒபாமா கண்டிப்பா சொல்லிட்டாரு. பல பில்லியன் டாலர்கள். இதுல நீக்குப்போக்குக்கு இடமே இல்லைன்னு சொல்லிட்டாரு. நல்ல விஷயந்தான். இது மாதிரி அழிவுகளுக்கு காரணமானவங்க எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும், எவ்வளவு பெரிய நிறுவனமா இருந்தாலும் விடவே கூடாது. முழுப் பொறுப்பையும் சுமந்தே தீரணும். ஒபாமான்னா சும்மாவா?

ஆனா அதே பெருந்தகையாளர் ஒபாமா போபால் விஷவாயு கசிவு இந்தியாவின் உள்நாட்டு ப்ரச்னைன்னு சொல்றாரு. எவ்வளவோ அழுத்தம் குடுத்து யூனியன் கார்பைடு முதலாளிகளுக்கு வெறும் 2500$ அபராதம், 2 வருஷம் சிறை, அதுலயும் அப்பீலுக்கு இடம் இருக்கு. சும்மா உலுலாயிக்கு. இதைப் பத்தி ஒபாமா வாயே திறக்கலியே. ஏன்னா எண்ணை கசிவு அமெரிக்காவுல. விஷவாயு கசிவு இந்தியாவுல. ரெண்டுமே பேரிடர்தான். பெரிய இழப்புகள்தான். மாற்றுக்கருத்தே கிடையாது. ஆனா ஒபாமாவுக்கு.... ஒரு கண்ணுல வெண்ணை இன்னொரு கண்ணுல சுண்ணாம்பு.

அமெரிக்காவுக்கு வந்தா அது ரத்தம். அதுவே இந்தியாவுக்கு வந்தா வெறும் தக்காளித்தண்ணி. ஹ்ம்ம்ம்ம்......