Saturday, January 9, 2010

அவசர உதவிக்கு அமைச்சர்


"தலைவருக்கு இடது கை சுண்டு விரல் லேசா வீங்கியிருக்காமே..... 1/2 மணி நேரம் முன்னாடி கூட நல்லாத்தான் இருந்தாரு. என்னன்னு தெரியலயே? உடனேயே அப்போலோவுக்கு கூட்டிட்டுப் போயிருக்காங்க. ஒரே படபடப்பா இருக்கே? என்னாச்சோ ஏதாச்சோ?..... எதாவது விஷயம் தெரிஞ்சுதாய்யா? அசிஸ்டெண்டுக்கு ஃபோன் போட்டுக் கேட்டுச் சொல்லேன்யா..... அடாடா... அடாடா.... வலின்னு சொல்லி 5 நிமிஷம் கழிச்சுத்தான் போயிருக்காரு... பாவம்... எப்பிடித் தவிச்சாரோ?...."

* * * * * * * * * * * * * * * * *

"என்னங்க இது அநியாயம்.... அம்மாவுக்கு இன்னிக்கு மாஸ்டர் செக்கப்புக்கு போகணும்னு போன மாசமே தெரியுமே.... 8 மணிக்கு ஹாஸ்பிடல்ல இருக்கணும்... இப்பவே மணி 7 ஆச்சு. இன்னும் எப்ப கிளம்பி எப்ப போய்.... ஒருத்தனுக்கும் பொறுப்பே இல்லை... வரானுக பாருங்க தூங்கி வழிஞ்சுக்கிட்டு.... இந்த டிரைவர், செக்ரடரி, சமையல்காரன், செக்யூரிடி எல்லார் சீட்டையும் கிழிச்சாத்தான் அவனுகளுக்கும் புத்தி வரும் மத்தவனுகளுக்கும் பயம் இருக்கும்... என்னன்னு நினைச்சுக்கிட்டுருக்கானுக....ம்ம்...."

* * * * * * * * * * * * * * * * *

"கொடுமையைக் கேட்டீங்களா? அய்யாவுக்கு நேத்து தோட்டத்துக்கு போகும்போதே தலைவலி. அய்யாவே டாக்டர்தான். இருந்தாலும் ஆஸ்ப்ரோ, அனாசின்னு பாக்கெட்லயேவா வெச்சுக்கிட்டு சுத்த முடியும்? ஆனா கூட போனவனுக ஒருத்தன் கிட்டக் கூட ஒரு தலைவலி மாத்தரை கூட இல்லை... இது கூடவா வெச்சுக்க முடியாது? ஒரு ஆத்தரம் அவசரத்துக்கு உதவாத உதவாக்கரைகளையெல்லாம் வெச்சுக்கிட்டு அய்யா பாடு திண்டாட்டந்தான்.... எப்பிடி இருந்த ஆளு...ஹ்ம்ம்ம்..."

* * * * * * * * * * * * * * * * *

டமார்......

அய்யோ.... அம்மா......

க்ரீச்ச்..... க்ரீச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்..... டம்......டம்....

"அய்யய்யோ... வெடிகுண்டா? அய்யோ.... என்ன இது... இன்ஸ்பெக்டரோட காலையே காணோம்... என்னய்யா ரத்தம் இப்பிடி போகுது.... என்ன பண்றது... வாங்கய்யா... ஓடி வாங்கய்யா....."

"என்னய்யா கலாட்டா? நான் வரேன்னு எவனாவது கருப்புக் கொடி காட்றானா?"

"இல்லீங்கய்யா.... எவனோ வெடிகுண்டு வீசிட்டான்யா... இன்ஸ்பெக்டர் கால் போயிடுச்சு.... இன்னும் ரெண்டு பேரு வந்து வெட்டிட்டு ஓடறானுக.... பாக்கவே சகிக்கலைய்யா...."

"அப்பிடியா. ம்ம்ம்.... அதென்ன நம்பருய்யா... 100ஆ... ஓ... அவங்களுக்குத்தான் ப்ரச்னையா?.. ம்ம்ம்.... 106.. 107......ஆங்.... 108. நூத்திஎட்டுக்கு போன் போடுய்யா.... ஆம்புலன்ஸைக் கூப்பிடுங்க....."

"அய்யா.... சொல்லிட்டேங்கய்யா.... எப்பிடியும் வர 1/2 மணி நேரம் ஆகும் போல இருக்குய்யா....."

"அதுக்கு என்னய்யா பண்ண முடியும்.... பாரு இப்பவே டிராஃபிக் ஜாம் ஆகி நம்ம 15 வண்டிக கிளம்பறதே கஷ்டம் போல... என்ன பண்றது.... வெய்ட் பண்ணுவோம்.... யோவ்... நீ என்னய்யா பெரிய கர்ண பரம்பரை... போய் தண்ணி குடுத்துக்கிட்டு இருக்க.... சட்டைல ரத்தக்கரை பட்டா போகவே போகாது தெரியும்ல.... "

"அய்யா.... உயிர் போயிடும் போல இருக்குய்யா... தாமதிக்கக் கூடாதுய்யா... பாவமா இருக்குய்யா.... ரொம்ப நேரம் ஆச்சுய்யா...."

"என்னய்யா பெரிய ரோதனையா இருக்கு.... சரி.... அந்த போலீஸ் வேன்ல ஏத்திக்கிட்டு போங்க..... நமக்கு பாதுகாப்புக்கு வர வேன்.... என்ன பண்றது.... பொதுவாழ்க்கைக்கு வந்தாச்சு... கொஞ்சம் விட்டுக்குடுத்துதான் போகணும்.... எஸ்.ஐ என் கூடவே என் கார்ல வரட்டும்.... "

"அய்யா... உயிர் போயிடுச்சு மாதிரி தெரியுது.... ச்ச்ச்ச்.....ச்ச்ச்ச்..."

".............................................................ம்ம்ம்... ஆக வேண்டியதை கவனிங்க.... நான் கிளம்பறேன்....."

* * * * * * * * * * * * * * * * *

Thursday, January 7, 2010

டிஜம்பர் - மீஜிக் ஜீஜன் இன் சென்னை


டிசம்பர் வந்துட்டா போதும். சென்னைல கர்நாடக சங்கீதம் திகட்டத் திகட்ட புகட்டப்படும். வருஷம் பூரா ஸ்ப்ரெட் பண்ணி வெச்சா நல்லா இருக்கும்னு என்ன கரடியாக் கத்தினாலும் அது என்னவோ ஒரே மாசத்துல ஒரு நாளைக்கு 4 வீதம் 25 சபாக்கள்ல 2000க்கு மேல கச்சேரி, டான்ஸ், ஹரி கதை லொட்டு லொசுக்குன்னு... போட்டு ஒரேடியா தாக்கிடறாங்க. சில சமயம் இங்க போறதா அங்க போறதான்னு ஒரே கன்ஃப்யூஷன் ஆயிடும்.

இது போக ஜெயா, ராஜ், விஜய்னு அவங்க வேற ஒரு தனி டிராக்ல தினம் ஒரு மணி நேரம் சங்கீத சேவை. புடிச்ச சாப்பாடு என்ன, திட்றதுக்கு உபயோகிக்கற வார்த்தை என்னன்னு... கெக்கெ பிக்கேன்னு கேள்விகள் வேற. சம்பிரதாயமா கேக்கற கேள்விகள் "இன்றைய ரசிகர்களுக்கு உங்க அட்வைஸ்?" "அந்தக் காலத்துக்கும் இந்தக் காலத்துக்கும்.............?". ஆற்காட்டார் அப்பப்ப கரண்ட் சப்ளையையை விடற மாதிரி ஒரு சில நயமான கேள்விகளும் அப்பப்ப யாராவது கேட்கறதுண்டு.

* * * * * * * * * * * *

"ஏன் மாமி.... நடபைரவிதானே இது?"

"அதேதான்... எங்காத்து ஸ்ரீநிதி கூட கனமா சங்கதி போடறா... இவ என்னவோ நீர்க்க இழுக்கறா... அது என்ன ரூபியா?"

"ரூபி மாதிரியா தெரியறது? சாதா கல்தான்.... எங்க ஆசாரி அப்பயே சொன்னான்... எல்லாரும் வாயைப் பொளப்பான்னு..... சுதா ரகுநாதன் கூட போன வருஷம் போட்டிருந்தாளே... அதே மாடல்ல இன்னும் ஃபேஷனா.... ஆமா.. சாரி என்ன என்ன போத்தீஸா ஆரெம்கேவியா?"

"ரெண்டும் இல்ல... நல்லி.... "

"அதானே பாத்தேன்... "

* * * * * * * * * * * *

"இந்த வார துக்ளக் படிச்சேளா சார்? ஆனாலும் சோ ரொம்பத்தான் கிண்டல்.... "

"நேத்து டி.எம்.கிருஷ்ணா கேட்டு அசந்துட்டேன்... என்னமா பாடறான்? அதுலயும் அந்த ஷண்முகப்ரியா... ஏ க்ளாஸ்...."

"நேத்து என் ஷட்டகன் பொண்ணு டான்ஸ்.... ஹிண்டு ரிவ்யூ பாருங்கோ..."

"முந்தாநா பார்த்தசாரதில உன்னி கச்சேரில காபி...."

"குழைஞ்சுருப்பானே...."

"அது இல்ல... அறுசுவை நடராஜன் கேண்டீன்ல காபி சாப்டுட்டு சித்தே பேசிப்டு போறதுக்குள்ள 'தனி' வந்துடுத்து.... அப்பறம் கெளம்பிட்டேன்..."

"பாருங்கோ.. பேசிண்டே இருந்ததுல இங்கயும் 'தனி'.... வாங்கோ... போய் மொத ஈடு போண்டா சாப்டுடுவோம்... கூட்டம் அப்பிடும்...."

"ஆமா... இது பாடறது யாரு... மச்சினன் பாஸ் குடுத்தானேன்னு வந்தேன்..."

"யாருக்குத் தெரியும்? சபா செக்ரடரி பக்கத்து ஃப்ளாட்... 4 பாஸ் குடுத்துருக்கார்... நமக்கும் பொழுது போகணுமே..."

* * * * * * * * * * * *

"ராட்டன் ஃபெலோஸ்... எப்பிடி கார் பார்க் பண்ணிருக்கான் பாரு... எங்க போய்த் தொலஞ்சானோ? இப்ப நம்ம காரை எப்பிடி எடுக்கறது?"

"இன்னா சார்... நீ ரிவர்ஸ் வா சார்.... நா பாக்கறேன்... அப்பிடீக்கா லெப்ட் ஒட்ச்சு வா சார்..."

"எப்பிடிப்பா வரது?"

"செரி... அப்டியே குந்தினே இரு. வரப்ப வருவாங்கோ...."

"ஏய்... ஏய்... இந்தாப்பா ஏய்.... போயிட்டானா..... பேதில போக....."

"ஒங்க மூஞ்சியப் பாத்தாலே எல்லாருக்கும் பளிச்னு தெரிஞ்சுடுமே.... இந்த அசத்துக்கெல்லாம் எவன் லைசன்ஸ் குடுத்தான்னு.... "

"திருவாயைத்தான் கொஞ்சம் மூடேன்... "

* * * * * * * * * * * *

(சன்னக் குரலில்....)

"என்னடா ராகம்? சொல்லு பாப்போம்...."

"...."

"பல்லவியே ஆரம்பிச்சாச்சு... இன்னுமா தெரியல? என் ஸ்டூடண்ட்னு வெளில சொல்லிண்டு திரியாத... "

"...."

"அமுக்கராக்கெழங்கு மாதிரி உக்காந்திருக்கறதைப் பாரு...."

".....ம்....ம்..... மலயமாருதமா?"

"ரிஷபம் எங்கேர்ந்து முட்டித்து உன்னை? நாந்தான் செவுத்துல முட்டிக்கணும். வலஜிடா... வலஜி.... ச க ப த நி ச.... புரியறதா?"

"...."

(கொஞ்சம் சத்தமாக...பக்கத்தில் இருப்பவரிடம்)

"எல்லாம் நம்ம ஸ்டூடண்ட்ஸ் சார்.... எல்லாரும் ஜெம்ஸ்... தூக்கத்துல எழுப்பிக் கேட்டாக் கூட பட்டுனு சொல்லிப்பிடுவா.... இந்தாங்கோ விசிட்டிங் கார்ட்... நம்ம கொழந்தேள் யாரான கத்துக்கணும்னு சொல்லுங்கோ...."

* * * * * * * * * * * *

அசல் சங்கீத ரசிகர்கள் மன்னிப்பார்களாக.

Wednesday, January 6, 2010

பாபாஸி சென்னை புக் ஃபேர் 2010

அதிர்ஷ்டவசமாக சென்னையில் இருந்ததால் புத்தக கண்காட்சிக்கு கட்டாயம் போக வேண்டும் என்று இருந்தேன். முதல் நாள் (30ந்தேதி) மாலை நண்பர் போனபோது முதல்வர் தலைமையில் புத்தக வெளியீடுகள் முடிந்து முறைப்படி திறப்பு விழாவுக்கு பிறகுதான் விற்பனை என்று சொல்லிவிட்டார்களாம். பல கடைகளில் அப்போதுதான் புத்தகத்தை அடுக்கவே ஆரம்பித்திருந்தார்களாம். முன்வாசலில் இருந்து கண்காட்சி நுழைவாயில் வரையிலும் போலீஸ்கள் இருந்தும் கூட போவோர் வருவோரை யாரும் எதுவும் விசாரிக்கவோ பரிசோதனைகளோ செய்யவில்லை போல. இத்தனைக்கும் அடுத்த சில மணி நேரத்தில் முதல்வர் வர இருந்திருக்கிறார். யாராவது போய் எதாவது திரிசமன் செய்திருந்தால் என்ன ஆவது? கவலை அளிக்கும் விஷயம்.

மறுநாள் மதியம் புது ஆவடி ரோடு பக்கம் ஒரு வேலையாக போக வேண்டியிருந்ததால் போகும் வழியில் 1:45க்கு காரை நிறுத்தி விட்டு (பார்க்கிங் ஏறக்குறைய காலி) உள்ளே போனால் நுழைவு வாயிலில் சுமாரான கூட்டம். முன்னால் இருந்த நான்கு நுழைவுச்சீட்டு வழங்குமிடங்களிலும் ஒரு 50-60 பேராவது நின்றிருப்பார்கள். 2:05 ஆனபிறகும் நுழைவுச்சீட்டு வழங்கவில்லை. திடீரென ஒரே ஒரு கவுண்டரில் கொடுக்க ஆரம்பிக்க எல்லா கூட்டமும் இங்கே அங்கே என அலைபாய்ந்தனர். உள்ளே கண்காட்சி அலுவலகத்தில் விசாரிக்கப் போனால் "அதான் பேசிட்டிருக்கோம் சார். வாலண்டியர்ஸ் யாரும் இல்லை. என்ன பண்ணலாம்னு டிஸ்கஸ் பண்றோம்" என்றார் ஒருவர். உச்சி மண்டையில் சுர் என்று ஏற "ஏன் சார்.... மதியம் 2 மணிக்கு திறக்கறீங்க. இப்ப போய் வாலண்டியர் இல்லை... என்ன பண்றதுன்னு யோசிக்கிறீங்களே? இவ்வளவு பெரிய கண்காட்சி. ஒவ்வொரு வருஷமும் நல்ல கூட்டமும் வருது. இதைக் கூடவா உங்களுக்கு ஆர்கனைஸ் பண்ண முடியல? கூட்டம் 1:30ல இருந்து வரிசைல நிக்கறாங்க. பாத்துட்டுக் கூடவா எதாவது பண்ணணும்னு தோணலை?" என்று கேட்டதற்கு பதில் இல்லை. பிறகு யாரோ இருவர் கொஞ்சம் சீட்டுகளைத் தூக்கிக் கொண்டு ஒரு கவுண்டருக்கு ஓட பின்னாலேயே போய் மக்கள் சீட்டுகளை வாங்கினர். கவுண்டருக்குள் ஒரு மேசை, நாற்காலி ஒன்றும் இல்லை. எவ்வளவு சீட்டு விற்றது, என்ன கணக்கு.... எப்படி சரி செய்தார்களோ?

இவ்வளவு பெரிய நிகழ்ச்சி. என்னவோ முதல் நாள் மாலைதான் முடிவெடுத்து வேலை செய்ய ஆரம்பித்தது போன்ற தோற்றத்தை கொடுத்தது அதிர்ச்சியாகவும் வருத்தமாகவும் இருந்தது. இந்நாட்களில் "ஈவண்ட் மேனேஜ்மெண்ட்" என்பது ஒரு கலை. நல்ல திட்டமிடல் தேவை. அதுவும் ஒரு வியாபார நோக்கில் நடத்தப்படும் நிகழ்ச்சி கூட இப்படி மந்தமாகக் கையாளப்பட்டால்? அடுத்த கண்காட்சியிலாவது கவனிப்பார்களா?

வேறு வேலைக்காக சீக்கிரம் போக வேண்டியிருந்ததால் விகடன், பயனீர், உயிர்மை, விசாவில் சில புத்தகங்களை வாங்கிக் கொண்டு அரைமணிக்குள் திரும்ப வேண்டியதாயிற்று.

Monday, January 4, 2010

நிகழ்ந்ததும் நிகழாததும்....


எல்லாருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.


ஒரு மாசம் வலையில சிக்காம இருந்தது ஒரு சாதனைதான். இனிமேல்தான் நண்பர்களோட போன மாச இடுகைகளையெல்லாம் படிக்கணும். இந்தியா பயணம். சென்னை போய் இறங்கிய நாள்ல இருந்து பல விதமான வேலைகள். ஆனாலும் முதல் நாளே சைதாப்பேட்டை தண்டோரா ஆஸ்ரமத்தில் மணிஜியையும் கேபிள் சங்கரையும் சந்திக்க முடிந்தது. மணிஜி தயவில், கேபிளார் பரிந்துரையில் தி.நகர் 'மன்சுக்'கில் திவ்யமான குஜராத்தி மீல்ஸ். அதோடு சரி. அதற்குப் பிறகு யாரையும் சந்திக்க முடியவில்லை. அப்துல்லா, ஆதி மற்றும் நர்சிம் ஆகியோருக்கு தொலைபேசியில் அட்டெண்டன்ஸ் மட்டும். எல்லாருமே நல்ல புரிதல் உள்ளவர்கள் என்பதால் வித்தியாசமாக நினைத்துக் கொள்ள மாட்டார்கள். அப்பிடி போடு அருவாளை !!

பிறகு மைசூர், பெண்களூர், எங்களூர் (உடுமலை) மற்றும் கோவை பயணம். கோவையில் இரண்டு வேலைகளுக்கு இடையில் கிடைத்த சைக்கிள் கேப்பில் வேலன் அண்ணாச்சி மற்றும் ஸ்வாமி ஓம்காருடன் ஸ்வாமியின் வீட்டில் ஒரு துரித சந்திப்பு. அண்ணாச்சி ஆபீசில் செல்வேந்திரனையும் சந்திக்க முடிந்ததில் மகிழ்ச்சி. அப்பிடியே அண்ணாச்சி தயவில் வடவள்ளி ஆனந்தா பவனில் ஃபுல் மீல்ஸ். ஓசி சாப்பாடு கணக்கே ஓவரா இருக்கே !!

உடுமலைப்பேட்டையில் உடுமலை.காம் ஆபீஸ் கம் ஷோரூமில் "டீ வித் சிதம்பரம்". நாகா ஊரில் இருந்தாலும் அந்த தினம் வெளியே சென்றிருந்ததால் சந்திக்க முடியவில்லை. பழமைபேசியாருடன் தொலைபேச (மட்டும்) முடிந்தது. வேறு அவசர வேலையாக கிளம்ப வேண்டியதாயிற்று. அவர்களும் கண்டுகொள்ளாமல் இருப்பார்களாக. ரைட்டு !!

மறுபடி சென்னை திரும்பியதும் குடும்பத்துடன் (வழக்கம்போல) கோயில்கள் டூர். திரும்பிய பிறகு கார் ரிப்பேர், வீடு ரிப்பேர், பேங்க், இன்சூரன்ஸ்னு தினமும் 9 டூ 9 பல வேலைகள். லீவுல இருந்த மாதிரியே இல்லை. என்ன வெகேஷனோ போங்க.