Saturday, February 28, 2009

(சு)வாசித்ததும்.... யோசித்ததும்...

முந்தைய பதிவுகள் ...1 ...2 ...3 ...4 ...5 ...6

இந்த புத்தக அறிமுகத் தொடருக்கு "அவனோடே ராவுகள்"னு தலைப்பு வெச்சுருந்தேன். போன முறை அப்துல்லா அண்ணன் தலைப்பை மாத்த சொல்லி வேண்டுகோள் விடுத்தாரு. அவருடைய கருத்தை மதித்து தலைப்பை மாத்தியாச்சு. நன்றி அப்துல்லா.


The Five People You Meet in Heaven
Author : Mitch Albom

இது ஒரு நாவலா, கட்டுரையா, தத்துவ விளக்கப் புத்தகமான்னு ஒரு பட்டிமன்றமே வைக்கலாம். நாவல் வடிவிலான ஒரு உளவியல் புத்தகம்னும் சொல்லலாம். எதுவா இருந்தாலும் படிக்க ரொம்ப சுவாரஸ்யமா இருக்கு. மனித உணர்வுகளை வலிக்கற அளவுக்கு தூண்டி விடுது. கதாநாயகனை நம்மளோட பிரதிநிதின்னு வெச்சு படிச்சா ஆசிரியர் சொல்ல வர செய்திகளோட நம்மள சுலபமா இணைச்சுக்க முடியுது.

படிக்க ஆரம்பிச்சதுமே வித்தியாசம். கதையோட முதல் வரியிலேயே கதாநாயகன் எட்டி (Eddie) இறந்து போகிறான். 86 வயசு. ஒரு அம்யூஸ்மென்ட் பார்க்ல இயந்திரங்களைப் பராமரிக்கிற மெக்கானிக். ஒரு ஜயன்ட் வீல் மாதிரியான ரைட்ல ஒரு பெட்டி கழண்டு விழ, அதுல இருக்கற ஒரு சிறுமிய காப்பாத்தற முயற்சியில் இறந்து போகிறான். இறப்புக்குப் பின்னால அவனுக்கு நிகழ்கிற அனுபவங்கள்தான் புத்தகம்.

எட்டி சொர்க்கத்துக்குப் போகிறான்(ர்?). அது "சொர்க்கம்"தான் அப்படிங்கறது அவனுடைய எண்ணம். தான் இறப்பதற்கு முன் அந்தச் சிறுமியைக் காப்பாற்றினானா இல்லயா என்பது அவனுக்கு தெரியவில்லை. அது ஒரு முள்ளாக குத்துகிறது. அங்கே அவனுக்காக 5 பேர் காத்திருக்கிறார்கள். ஒவ்வொருவரும் அவன் வாழ்க்கையில் ஏதோ ஒரு வகையில் அவனோடு சம்பந்தப்பட்டவர்கள். சிலரை அவனுக்கே தெரியாது. ஒவ்வொருவரும் அவனை சந்திக்க வேண்டும், அவனுக்கு ஒரு செய்தியைச் சொல்ல வேண்டும் என்பதற்காகவே காத்திருக்கிறார்கள். இதெல்லாம் சாத்தியமா, உண்மையா, சொர்க்கம் என்ற ஒன்று உண்டா, இறந்த பின் "சந்திப்புகள்" எப்படி, இது ஆத்திகத்தை ஊக்குவிக்கும் புத்தகமா என்றெல்லாம் பல சந்தேகங்கள் வரலாம். என்னைப் பொறுத்த வரையில் அந்த சந்தேகங்கள் எல்லாம் அநாவசியம். நம்மை நாமே ஒரு தளம் மேலேயிருந்து நமது நிறை குறைகளைப் பார்ப்பது போல இருக்கிறது. அந்த ஒரு அனுபவத்துக்காகவே இந்தப் புத்தகத்தைப் படிக்கலாம்.

தெருவில் குறுக்கே ஓடிய சிறுவன் எட்டியை தவிர்க்க காரைத் திருப்பி ஆக்ஸிடென்டில் இறந்த "ப்ளூ மேன்" அவனது அறியாமையைப் பற்றிப் பேசுகிறார். (இவரை இதற்கு முன் தன் வாழ்வில் எட்டி சந்தித்ததில்லை) பிலிப்பைன்ஸுக்கு போருக்குப் போன எட்டியின் கேப்டன் தனது தியாகத்தைப் பற்றி சொல்கிறார். (வீட்டின் பிரச்னனகளிலிருந்து தப்பிக்க சிறிது காலம் போருக்குச் சென்று கால் ஊனமாகிறான் ) எட்டி வேலை செய்த "ரூபி பியர்" பார்க்கின் நிறுவனரின் மனைவி எட்டியின் அப்பாவின் மறுபக்கத்தை விளக்கி அவரை மன்னித்து விடும்படி சொல்கிறாள். (எட்டியின் அப்பா ஒரு கடுகடு பேர்வழி. அவனுடன் ஒருபோதும் இணக்கமாக இருந்ததில்லை. சிறு வயது முதலே அவர் மீது கடும் வெறுப்புடன் இருக்கிறான் எட்டி. அவன் தாயார்தான் அவனுடைய நெருங்கிய தோழி.) நான்காவதாக அவனுடைய மனைவி மார்கரெட். அன்பைப் பற்றிய சாஸ்வதமான உண்மைகளை விளக்குகிறாள். (எட்டி தன் மனைவியை மிக மிக மிக நேசித்தவன். அவனுடைய 50வது வயதில், கேன்சரில் அவள் இறந்தவுடன் உலகமே இருண்டு போனது போல உணர்ந்தவன்.) கடைசியாக அவனை சந்தித்து ஒவ்வொருவர் வாழ்விற்கும் ஒரு காரணமும் அர்த்தமும் இருக்கிறது என்று எடுத்துச் சொல்வது ஒரு பிலிபினோ சிறுமி. எட்டி இறப்பதற்கு முன்பு அவன் ஜெயண்ட் வீலில் மாட்டிக்கொண்ட சிறுமியைக் காப்பாற்றி விட்டுத்தான் இறந்தான் என்ற உண்மையைச் சொல்லி அவன் மனதில் முள்ளாய்க் குத்திய கேள்விக்கு பதிலளிக்கிறாள். (பிலிப்பைன்ஸில் அவனும், நண்பர்களும், கேப்டனும் சிறையிலிருந்து தப்பி ஓடும்போது சிறைக்கு தீ வைக்கிறார்கள். கடைசி நிமிடத்தில் கட்டிடத்துக்குள் யாரோ இருப்பது போல உணர்ந்து அவரைக் காப்பாற்ற எட்டி முயற்சிப்பதற்குள் எல்லாம் காலி. அந்தச் சிறுமிதான் இவள்.)

வாழும்போது தன் வாழ்க்கை முழுவதும் தான் ஒரு அர்த்தமில்லாத வாழ்க்கை வாழ்வதாகவும், எதற்கும் உபயோகமற்றதாகவும், தன் மீது அன்பு செலுத்தாத தந்தையினால் தான் அடைந்திருக்க வேண்டிய பலவற்றை இழந்து விட்டதாகவும், தன் அன்பு மனைவியை அவளை நேசித்த அளவுக்கு நல்ல நிலைமையில் வைத்திருக்க முடியவில்லை என்ற குற்ற உணர்ச்சியுடனுமே கழித்த எட்டி, இறந்த பின்பு இந்த 5 பேர் சொன்ன செய்திகளின் மூலம் அனைத்திற்கும் விடை காண்கிறான்.

புத்தகத்தை ஆழ்ந்து படிக்கும்போது எட்டி வேறு யாரும் அல்ல, அது நாம்தான் என்பது புரியும். நாம் ஒவ்வொருவரும் மற்றவர்களுடன் எப்படி பிணைந்திருக்கிறோம் என்பதும் புரியும். மனித வாழ்வை சிறந்த முறையில் கழிக்க தேவையான சக மனிதர்களை மதிப்பது/புரிவது (empathy) , தியாகம், மன்னிக்கும் குணம், அன்பு மற்றும் இரக்க குணங்கள் - இவற்றை அவனைச் சந்திக்கும் ஒவ்வொருவரும் வலியுறுத்துகிறார்கள்.

சொல்லியிருக்கிற செய்திகள் போலவே, ஒவ்வொரு அத்தியாயத்துக்கு நடுவிலும் எட்டியின் எதாவது ஒரு பிறந்த நாளில் நடந்த சம்பவத்தைச் சொல்வது என்று கதையின் வடிவமும் வித்தியாசமாக இருக்கிறது. சிறிய புத்தகம்தான். ஆனால் நம்முடன் நெருங்கிய தொடர்பு உள்ளது என்ற வகையில் படித்து முடிக்க தாமதமாகலாம். இது போன்ற புத்தகங்களை ஒரே மூச்சில் படித்து விட்டு அடுத்த புத்தகத்தை எடுப்பது கடினம். மெதுவாக அனுபவித்து படித்தால் அதில் கிடைக்கும் கிளர்ச்சியே தனி. படித்துப் பாருங்கள்.

Friday, February 27, 2009

மணக்கும் தமிழ் !! கலக்கும் பதிவர்கள் !!


ஊர் சனமெல்லாம் எதிர்பாத்து பாத்து கண்ணு பூக்கட்டுமா, காய்க்கட்டுமான்னு இருக்கும்போது தமிழ்மண விருதுகள் அறிவிப்பு வந்தே வந்துடுச்சு. நாம எல்லாரும் நல்ல நல்ல ஓட்டுக போட்டு மொத பத்துல கொண்டாந்து நிறுத்துன பதிவுக பட்டியலையும் பாத்துருப்பீங்க. நம்ம ஆளுக கலக்குன கலக்குல தேர்வுக் குழு ரொம்பவே கலங்கிப் போயிட்டாங்க போல. இம்புட்டு நாளாயிப் போச்சு பாருங்க. எப்பிடியோ நாளானாலும் நல்ல பதிவுக தேர்வானதுக்கு எல்லாருமே நெம்ப சந்தோசமாத்தான் இருப்பீங்க. அப்துல்லா அண்ணன் மாதிரி சிலருக்கு அனுப்புன எல்லாப் பதிவுமே தேர்வானது டபுள் சந்தோசமா இருக்கு... என்ன சொல்றீங்க?

விருது கிடைச்ச எல்லா சக பதிவர்களுக்கும் வாழ்த்துகள். இன்னும் நல்லா கலக்கோ கலக்குன்னு கலக்கி, 2009 விருதுகளை அள்ளீரணும். 2009 விருதுகள் தேர்வு குழுவுக்கு இன்னும் சிரமம் குடுக்கணும். அடுத்த விசுக்கா இன்னும் பல பிரிவுகள்ல விருதுக எதிர்பாக்கலாம்னு மூணாநா ராத்திரி சாமக்கோடங்கி வேற உடுக்கடிச்சுட்டு போச்சு.

நான் அனுப்புன 3 பதிவுகளுக்கும் உங்கள்ல யாரச்சும் தெரியாத்தனமா ஓட்டுப் போட்டுருக்கலாம். அப்பிடிப் போட்ட எல்லாருக்கும் நன்றி. கும்புட்டுக்கறனுங்.

மறுக்கா... விருது கிடைச்ச / கிடைக்காத எல்லாருக்கும் வாழ்த்துகளும் நன்றிகளும்.

Monday, February 23, 2009

பகலில் சில நட்சத்திரங்கள்

காட்சி 1 :

மதியம் 2 மணி. அது ஒரு பெரிய எஃகு நிறுவனம். குளிரூட்டப்பட்ட ரிசப்ஷனில் சோஃபாவில் நான். கண்ணாடிக்கு வெளியே பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

"இப்ப வந்துடுவார் சார்.... இன்னிக்கு வெள்ளிக்கிழமை... கொஞ்சம் லேட்டாகும்"

சர்...ரென்று ஒரு ஸ்கூட்டியை ஓட்டிக் கொண்டு அவர் வருகிறார். வண்டியை நிறுத்தி விட்டு வந்து "வாங்கண்ணே... வாங்கண்ணே... நல்லா இருக்கீங்களா? கிளம்புங்க. போய் லஞ்ச் முடிச்சுட்டு வந்துடுவோம்.... எங்க போலாம்? வெஜிடேரியன்தானே?"

மறுபடியும் ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு ஒரு ஹோட்டலுக்கு போகிறோம். அங்கே ஒரே கூட்டம். ஒரு மூலையில் பி.பி.ஸ்ரீனிவாஸ் தன் நண்பர்களுடன் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். "இப்போதைக்கு டேபிள் கிடைக்காது போல. வாங்க... வேற ஹோட்டலுக்குப் போலாம்.." மறுபடி ஸ்கூட்டி. இன்னொரு ஹோட்டல். அவ்வளவாகக் கூட்டம் இல்லை.

"இதுவும் நல்ல ரெஸ்டாரன்ட்ணே... நீல்கிரீஸ்காரங்களோடது...."

பல விஷயங்களிப் பற்றிப் பேசுகிறோம். ஸ்வாமி ஓம்கார் அகோரிகளைப் பற்றி எழுதியுள்ள பதிவுகள் தன்னை மிகவும் கவர்ந்ததாகக் கூறுகிறார். நான் அந்த வலைப்பூவைக் கண்டிப்பாக நுகர வேண்டும் என்கிறார். மேலும் பல விஷயங்களைப் பேசிக் கொண்டே ஒரு நல்ல உணவும் உண்ட திருப்தியுடன் திரும்ப அவருடைய அலுவலகத்திற்கு சென்று இன்னும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு அந்த நல்ல மனிதரிடமிருந்து விடைபெற மனமில்லாமல் விடைபெற்றுக் கொண்டு திரும்புகிறேன்.

காட்சி 2:

அடுத்த நாள் மதியம் 2 மணி. முழு வண்ணப்படங்களுக்குப் பெயர் போன பரங்கிமலை தியேட்டர். வெளியே மர நிழலில் காரை நிறுத்தி விட்டு காத்திருக்கிறேன். அருகே ஆட்டோ ஸ்டாண்ட். ஒரு ஹோண்டா சிட்டி கார் வந்து நிற்க டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் இறங்குகிறார். "அட... எந்திரன் பட ஷூட்டிங் ரகசியமா நடக்குதுன்னு படிச்சோமே....இவ்வளவு ரகசியமாவா? அப்ப தலைவர் எங்க? ஐஸ் எங்க?"ன்னு யோசிச்சுக்கிட்டே பாத்தா... ஹை... நம்பாளு. "மீட் பண்ணலாம்... மீட் பண்ணலாம்னு 6 நாளா போன் பண்ணிப் பண்ணி கடைசில தியேட்டர் வாசல்ல ஜோதி ஏத்தியாச்சு.

மனுஷன் படு பிஸி. சனிக்கிழமை கூட சின்சியரா வேலை செய்யறவரை தெருவுக்கு இழுத்துட்டேன். வெய்யிலுக்கு கூல எளநி சாப்டுட்டே பேசிக்கிட்டுருக்கும்போது யாரோ ஒரு தாதா வந்து "எவண்டா இங்க ஸ்டாண்டுல காரை நிப்பாட்டுனது?"ங்கற ரேஞ்சுல சவுண்டு விட, நாங்க ரெண்டு பேரும் ஏண்டா வம்புன்னு கொஞ்சம் தள்ளிப் போய் நிறுத்தி பேசிக்கிட்டுருந்தோம். 10 நிமிஷம் பேசறதுக்குள்ள 5 போன். நடுவுல அனுஜன்யா கூட ஒரு போன். இப்பிடி பொளக்கிற வெயில்ல ஒரு 15 நிமிஷம் உலக (!!) விஷயங்களைப் பத்தி விவாதிச்சுட்டு கை குலுக்கி விடை பெற்று..... மற்றொரு நல்ல மனிதருடனான சந்திப்பும் ஷார்ட்-லிவ்ட் ஆகப் போன வருத்தத்துடன்....

அதுசரி.... யாரிந்த நட்சத்திரங்கள்?

முதலாமவர் அப்துல்லா அண்ணன். இரண்டாமவர் "புது யுக கம்பர்" நர்சிம்.

போன வாரம் சென்னைக்கு ஒரு அவசர வேலையாகப் போனபோது இடையில் கிடைத்த வாய்ப்பில் சிறு பதிவர் சந்திப்புகள்.


நர்சிம், நான்

Wednesday, February 11, 2009

"நான் கடவுள்" - புரிந்தும் புரியாமலும்...


"நான் கடவுள்"

போன பதிவுல நம்ம அண்ணன் சொல்லியிருந்தது "மேற்கத்திய நாடுகளில் என்ன விசேஷம் என்றால், தமக்குத் தெரிந்த விஷயத்தை மற்றவர்களுக்குப் புரியும் பாஷையில் எளிதாக எழுதுவது. நம் நாட்டில் அதற்கு நேர் எதிர். எல்லா விஷயங்களும் இங்கு உள்ளன. நமக்கு எளிதாக புரியாத பாஷையில். அவற்றை புரிந்தவர்கள் ஒரு சிலர். அவர்கள் எழுதிய புத்தகங்களோ...புரிவதற்கு தனியாக டியூஷன் வைக்க வேண்டும். வேதங்களும், உபநிஷத்துக்களும், கோட்பாடுகளும், தத்துவங்களும், இறைவனின் பிரதிநிதிகளும் நிறைந்த இந்நாட்டில்....பாமரன் எளிதாக புரிந்து கொள்ளூம் வகையில் நடைமுறைத் தமிழில் புத்தகம் உண்டா? இது என் தனிப்பட்ட அபிப்ராயம். தவறாக இருந்தால் நண்பர்கள் மன்னிக்கவும்."

இதற்கு ஒரு சிறு விளக்கம் சொல்லும் வகையில் இந்தப் பதிவு. இந்து மதத்தின் அடிப்படைகளான வேதம், ஸ்ருதி, ஸ்ம்ருதி, உபனிஷத்கள், சூத்திரங்கள், பல ஆன்றோர்கள், சான்றோர்கள், ரிஷிகள் வேதங்களுக்கு அளித்த பாஷ்யங்கள் போன்றவை கண்டிப்பாக சாதாரணர்களுக்கு சுலபமாகப் புரிந்து கொள்ள கடினம்தான். கொஞ்சம் முயற்சி செய்ய வேண்டியிருக்கும். அவ்வளவுதான்.

அவர்கள் சொல்ல வந்ததெல்லாம் எல்லாவற்றுக்கும் எது ஆதாரமோ அதை அடைய "ஞானம்" ஒன்றே வழி என்பது. அந்த மூல ஆதாரத்தின் சலனமற்ற, களங்கமற்ற, புரிந்துகொள்ள மிகவும் பிரயத்தனப்பட வேண்டிய ஒன்றை வார்த்தைகளால் விளக்குவது மிகவும் கடினம். ஏனெனில், அந்த அனைத்துக்கும் மூலாதாரமான சக்தியை (energy or field) உணர்ந்தவர்களுக்கு, அதைத் தவிர மற்ற எல்லாமே வெறும் மாயை என்பது தெளிவாகி விடுவதால், அப்படிப்பட்ட ஒன்றை முடிந்த வரையில் இருக்கிற வார்த்தைகளைக் கொண்டு விளக்குவது மிகுந்த சிரமமான காரியம். தமிழில் ஒரு சொல்வழக்கு உண்டு. "கண்டவர் விண்டிலர் ; விண்டவர் கண்டிலர்". ஆழ்ந்து பார்த்தால் புரியும். அதற்காக விளக்கிக் கூறமுடியாது என்று விட்டு விடாமல், அப்படி ஒரு விஷயத்தைப் பற்றி முடிந்த வரையில் மிக ஆழமாக, அகலமாக விளக்கத் தலைப்பட்டுள்ளனர்.

"கடவுள்" என்கிற ஒரு கான்செப்ட் (ஆமாம்...அது ஒரு கான்செப்ட்தான் !!) எப்படி அணுகப்பட்டிருக்கிறது என்று பாருங்கள். வேதங்களிலும், உபநிஷத்துகளிலும் குறிப்பிடப் படுகிற "ப்ரம்மன்", "ஆத்மன்", "புருஷன்" போன்றவை அந்த மூல ஆதார சக்தியை சொல்ல பயன்படும் குறியீடுகளே அன்றி அதை பொதுவாக நாம் குறிப்பிடுகிற "கடவுள்" என்பதைக் சொல்பவை அல்ல. அந்த சக்திக்கு நம்மை விட அதிக சக்தி உண்டு என்பதைக் உணர்த்த வேண்டுமானால் நாம் பல கைகளுடனும், தலைகளுடனும், ஆயுதங்களுடனும் கூடிய நம்மைப் போன்ற ஒரு உருவமாக - கடவுளாக - வைத்துக் கொள்ளலாம். நமது கற்பனைக்கும், யோசிக்கும் திறனுக்கும் ஒரு எல்லை உண்டு என்பதால் எல்லாரும் சுலபமாக ஏற்கிற வகையில் 'கடவுளை' உண்டாக்கியிருக்கலாம். "பல மடங்கு" சக்தி என்று பொதுவாகச் சொல்வதற்கு பதிலாக ஒரு ஒப்பீடுக்காக அப்படி உருவகப் படுத்தியிருக்கலாம். ஆனால் விஞ்ஞானமும், மெய்ஞானமும் குவியும் ஒரு புள்ளி இந்த மூலாதார சக்தி.

இந்து மதத்தில் பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் படைத்தல், காத்தல் மற்றும் அழித்தல் (creation, protection & destruction) தொழில்களை செய்வதாக நம்புகிறார்கள். ஆனால் உபநிஷத்துகளில் சொல்லியிருப்பது சக்தியின் வெளிப்பாடு, நிறுவுதல் மற்றும் திரும்பப்பெறுதல் (manifestation, establishment & withdrawal ஸ்ருஷ்டி, ஸ்திதி, லயம்). பிரபஞ்சம் உள்பட அனைத்துமே அந்த மூல ஆதார சக்தியின் வெளிப்பாடுகளே. இதையே 'மாயை' என்றும் சொல்கிறார்கள். அந்த சக்தியிலிருந்து வெளிப்பட்டு, நிலையாக இருப்பது போல தோன்றி, பின் மீண்டும் அந்த சக்தியிடமே அடைந்து விடுகிறது.

இதை விளக்க பிரதானமாக இரண்டு உதாரணங்கள் கூறப்படுகின்றன. ஒன்று தூக்கம். மற்றொன்று மண்பாண்டம். ஆழ்ந்த தூக்கத்தில் நம் எண்ணங்கள் ஓய்ந்து விடுகின்றன. ஆனால் மறுபடி விழித்தவுடன் எண்ணங்கள் "தோன்ற" ஆரம்பித்து விடுகின்றன. "உரு"வாவது இல்லை. மனதின் வெளிப்பாடு (manifest) எண்ணங்கள். அப்படித் 'தோன்றி'ய எண்ணங்கள் நம் மனதில் 'நிலையாக' இருப்பது போல இருக்கின்றன. ஏன் "போல"? மறுபடி தூங்கினால் அவை இருக்காது. நமது மனதினுள்ளே சென்று ஒடுங்கி (லயித்து / withdraw) விடுகின்றன. அதே போல மண்ணாய் இருந்தது, ஒரு பானையாக மாறி பின் உடைந்தாலோ நீரில் கரைந்தாலோ மறுபடி மண்ணோடு மண்ணாய் ஒடுங்கி விடுகிறது.

இது போல எளிய உதாரணங்களின் மூலமாக பல செய்திகளை உள்ளடக்கியிருக்கிறது. அதுவும் ஒரு கட்டுரை போல வரையாமல், தந்தை-மகன், குரு-சீடன், கணவன்-மனைவி, நண்பர்கள் போன்றோரிடையே நடைபெறும் ஒரு கேள்வி-பதில் போலவும், வாத விவாதங்களுடன், தத்துவ விசாரமாகவே இருக்கின்றன. அந்தத் தொன்மையான கால கட்டத்தில் சமஸ்கிருதம் பரவலாகப் பேசப்பட்டு வந்ததாலும், அதன் சொற்களஞ்சியம் மிகப் பரந்தது என்பதாலும் அந்த மொழியிலேயே மூலங்கள் உள்ளன. ஆழ்ந்து கற்று உணரும்போது இன்றைய பல விஞ்ஞானக் கோட்பாடுகளும், நியதிகளும் அவற்றில் விரவி இருப்பதை உணரமுடியும்.

மேற்கத்தவர்கள் எளிதாக எழுதுகிறார்கள், நமது மொழியில் இருப்பது நமக்கு புரியவில்லை என்றால் தவறு யாரிடம்? நமது கலாச்சாரப்படி இது போன்ற விஷயங்களை ஒரு குரு மூலமாக கற்று அறிந்து கொள்வது ஊக்கப்படுத்தப் படுகிறது. ஆனால் அப்படித்தான் கற்க வேண்டும் என்று கட்டாயமில்லை. ஒரு ஒழுங்குமுறைக்காக அதை ஒரு வழியாகச் சொல்லியிருக்கலாம் என்றே தோன்றுகிறது. மேல்நாட்டவர் இங்கு வந்து ஏதோ ஒரு வகையில் கற்று அவர்களுக்கு புரிந்த வகையில் அவர்களுக்கும் நமக்கு தெரிந்த மொழியில் எழுதுகிறார்கள். மேக்ஸ் முல்லர் வேதத்துக்கு விளக்கம் எழுதினார் என்று சிலாகிக்கிறோம். அப்படி ஒரு உயர்வான ஒன்றைக் கற்று, உணர்ந்து ஞானம் அடைந்தவர் அதைப் புத்தகமாகப் போட்டு காசாக்கியிருக்க மாட்டார். அதுவும் ஒரு மாயை என்று உணர்ந்து அந்தர்த்யானி ஆகியிருப்பார்.

நம் நாட்டிலும் கற்றுத் தெளிந்த பல ஆச்சாரியர்கள் தங்களுடைய புரிதலுக்கு ஏற்ப விளக்கங்கள் அளித்திருக்கிறார்கள். இல்லையென்றால் ஒரே வேதாந்தத்திற்கு த்வைதம், அத்வைதம், விசிஷ்டாத்வைதம் என்று பல விளக்கங்கள் கிடைத்திருக்காது. நமக்கு நம்முடைய மொழியை, உலகத்தின் மிக மிக மிக தொன்மையான ஒரு மொழியைக் கற்று இது போன்ற விஷயங்களைத் தெரிந்து கொள்ள ஆர்வம் இல்லை என்பதையும் ஒப்புக் கொள்ள வேண்டும். அவர்கள் இங்கே வந்து வேதங்களைக் கற்று எழுதும் அளவிற்கு உயர முடியும்போது நம்மால் ஏன் முடியவில்லை?

டிஸ்கி : பாலாவின் "நான் கடவுள்" படத்திற்கும் இந்தப் பதிவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
வலையில் படித்த, இதே கருத்தை வலியுறுத்தும் மதுரை சொக்கனின் பதிவு

Saturday, February 7, 2009

அவனோடே ராவுகள் .... 6

முந்தைய பதிவுகள் ...1 ...2 ...3 ...4 ...5


Many Lives Many Masters
Author : Dr Brian Weiss

"இந்த செய்திகளை உலகத்துக்கு சொல்ல வேண்டும் என்ற வைராக்கியத்தை எனக்குள் ஏற்படுத்திக்கொள்ள - அதுவும் நிச்சயமாக என் தொழிலுக்கு ஊறு விளைவிக்கலாம் என்ற ஆபத்துடன் - எனக்கு 4 வருடங்கள் பிடித்தது. ஆனால் இதை பகிர்ந்து கொள்வதால் எனக்கு நேரக்கூடிய இன்னல்களை விட சொல்லாமல் இருப்பது இன்னமும் மோசம் என்று தோன்றியது. நான் ரிஸ்க் எடுக்கத் தயங்கும்போதெல்லாம் என் ஹங்கேரிய தாத்தா மிகுந்த பிரியத்துடனும் குறும்பாகச் சொல்வார் - vat the hell?" - புத்தகத்தின் முன்னுரையில் ஆசிரியர் சொல்லியிருப்பது.

புத்தக ஆசிரியர் ஒரு மனநல மருத்துவர். வாழ்க்கையில் அறிவியல் பூர்வமாக நிறுவ முடியாத எந்த கோட்பாடையும் நியதியையும் மறுத்தவர். ஒன்றை நிரூபிக்கமுடியாது என்றால் அது கிடையாது என்று தீர்மானமாக இருந்தவர். அவர் வாழ்வில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை அவரே சொல்வதுதான் இந்தப் புத்தகம்.

இவர் கொலம்பியா பல்கலைக்கழகத்திலும் யேல் மருத்துவக் கல்லூரியிலும் படித்தவர். அவரிடம் ஒருநாள் கேத்தரின் (27) என்ற மன அழுத்த நோயாளி வருகிறாள். வழக்கமான மருத்துவ முறைகளில் முன்னேற்றம் ஏதும் இல்லாததால் hypnotic regression என்ற ஆழ்நிலை மனக்கட்டுப்பாட்டுக்கு உட்படுத்துகிறார். அப்போது அவருக்கு நேரும் வித்தியாசமான, அதுவரை அவர் அனுபவித்திராத, அவருடைய அறிவுக்கு சவாலாக விளங்கிய அனுபவங்களே இந்தப் புத்தகம். இந்த சிகிச்சையின்போது கேதரின் தன்னுடைய முன்பிறவிகளைப் பற்றியும் (கிட்டத்தட்ட 89 முற்பிறவிகள் !!), இரு பிறவிகளுக்கு இடைப்பட்ட நிகழ்ச்சிகளையும் கூட மிகவும் தெளிவாக நினைவு கூறுகிறாள். டாக்டரால் மறுக்க முடியவில்லை.

தன் ஆராய்ச்சியைத் தொடர்ந்து விர்ஜினியா பல்கலைக்கழகத்தின் டாக்டர் இயான் ஸ்டீவன்சனுடைய ஆய்வுகளில் சில குழந்தைகள் தமக்கு கொஞ்சமும் அறிமுகம் இருக்க வாய்ப்பில்லாத மொழிகளில் கூட பேசுவதைப் (xenoglossy) பற்றி எழுதியிருப்பதை அறிகிறார். கேதரினிடம் இன்னும் சில ஆராய்ச்சிகள் நடத்துகிறார். அதில் முற்பிறவி/மறுபிறவிகளைப் பற்றிய குறிப்புகள் பழைய ஏற்பாட்டில் இருந்ததையும், பின்னால் வந்த ரோமாபுரி மன்னன் கான்ஸ்டன்டைனும் அவன் தாயார் ஹெலினாவும் சர்ச்சுகளின் வளர்ச்சிக்கு இது இடைஞ்சலாக இருக்கும் என்று கருதி அந்தக் குறிப்புகளை நீக்கியதையும் சுட்டியிருக்கிறார்.

புத்தகத்தில் முற்பிறவிகளை விட, கேதரினுக்கு சில ஆசான்களின் குரல்கள் மூலமாகக் கிடைத்த சில செய்திகள் (messages) மிகவும் ஆச்சரியமாக இருக்கின்றன. அவைகளைப் அர்த்தத்தின் ஆழத்தைப் பார்க்கும்போது இந்து மதத்தின் அடிப்படைக் கோட்பாடுகளுடன் மிகவும் ஒத்துப்போவது தெரியும். "கற்று அறிந்து கொள்வது நமக்கிடப்பட்ட கடமை. கற்பதன் மூலம் கடவுளை அறிந்து கொள்வது, கடவுளை நெருங்குவது". வேதம் சொல்வது போல "ஞானானாத் ஏவ கைவல்யம்" - ஞானமே கடவுளை அடையும் வழி. பிரமிப்பாக இருக்கிறது.

ஒருமுறை டாக்டர் ப்ரையன் தனது தந்தையின் மற்றும் இறந்து போன மகனின் குரல்களில் சில செய்திகளை கேட்க நேருகிறது. மற்ற எவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லாத சில செய்திகளை கேதரின் தெளிவாகக் கூறுகிறாள். டாக்டரின் தந்தையின் ஹீப்ரு பெயர், டாக்டரின் மகன் ஒரு இதய நோயின் காரணமாக இறந்துபோனது பற்றி, டாக்டர் மனநல மருத்துவத்துறையை ஏன் தேர்ந்தெடுத்தார் என்பதெல்லாம் விளக்கமாகச் சொல்கிறாள். அவருடைய மகன் பிறந்து ஒரு குறுகிய வாழ்வு வாழ்ந்தது சில கடன்களை தீர்ப்பதற்காக என்று சொல்வது நமது வேதாந்தத்தின் அடிப்படையான கர்மா. "நமக்கு தீர்ப்பதற்கான கடன்கள் இருக்கின்றன. அவை தீராத பட்சத்தில் அவற்றை இன்னொரு பிறவிக்கு எடுத்துச் சென்று தீர்த்தே ஆகவேண்டும்" என்று தனக்கு ஒரு ஆசான் செய்தி சொன்னதாக கேதரின் கூறுகிறாள். இது இந்து மதத்தின் ஆணிவேரான நியதி.

இந்து மதத்தில் பிறந்ததாலோ, அல்லது இந்து மதக் கோட்பாடுகளைப் பற்றி சிறிதளவு தெரிந்திருப்பதாலோ என்னவோ, கேதரினுக்கு ஆசான்களிடமிருந்து கிடைக்கும் ஒவ்வொரு செய்தியையும் நமது வேதாந்தத்தோடு ஒப்பிட்டு அதன் உண்மையான, ஆழமான, தீர்க்கமான அர்த்தத்தை புரிந்து கொள்ள முடிகிறது. தனிப்பட்டமுறையில் எனக்கு இன்னமும் மறுபிறவி போன்ற தத்துவங்களை ஏற்க முடியவில்லை என்றாலும் வேதாந்த்தத்திற்கும் இந்த செய்திகளுக்கும் உள்ள நேரடித் தொடர்பை சுலபமாக உணர முடிகிறது.

இந்தப் புத்தகமே வெறும் கட்டுக்கதையோ என்று பல விமர்சனங்கள் உள்ளன. ஆனால், என்னைப் பொறுத்தவரை, புத்தக ஆசிரியர் தன்னுடைய 50 வருட தொழிலை பணயமாக வைத்து ஒரு கற்பனையான கதையை எழுத வேண்டிய எந்த அவசியமும் இல்லையே !! இத்தனைக்கும் அவர் ஒரு மரியாதைக்குரிய பழுத்த மனநல மருத்துவர். அதோடு மியாமியில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரியில் மனநல மருத்துவப் பிரிவின் தலைவர். நடைமுறையில் இப்படி ஒரு அறிவியலுக்கு அப்பாற்பட்ட செய்தியை புத்தகமாக கொடுப்பதில் அவருக்கு இழப்புதான் அதிகமாக இருக்கலாமே தவிர அடைய ஏதும் இருப்பதாக நான் நினைக்கவில்லை.

ஆசான்களின் சில செய்திகள் - புத்தகத்திலிருந்து :

"கற்பதும், அறிவதும், அதன் மூலம் கடவுளைப் போல ஆவதும் நமது கடமை. அறிவின் மூலம் கடவுளை அடைந்து பிறகு ஓயலாம். பின்பு நாம் திரும்ப வந்து பலருக்கு இதை அறிவுறுத்தி உதவ வேண்டும்"

"பல கடவுளர்கள் உள்ளனர் - நம் ஒவ்வொருவருக்குள்ளும் கடவுள் இருப்பதால்"

"நாம் ஒவ்வொருவரும் எவ்வளவு 'உணர்ந்திருக்கிறோம்' என்பதில் வெவ்வேறு தளங்களில் இருக்கிறோம்.... அது நாம் எந்த அளவுக்கு 'உணர்ந்து ' # எவ்வளவு முன்னேறியிருக்கிறோம் என்பதைப் பொறுத்தது..."

"சர்வம் சக்தி (energy) மயம்... மனிதர்களால் வெளிப்புறத்தை மட்டுமே உணர முடியும். ஆனால் முயன்றால் உட்புறமும் உணர முடியும். சொல்லப்போனால் இயல்பு நிலையில் (physical state) இருப்பது அசாதாரணம். உணர்வு நிலையில் (spiritual state) இருப்பதுதான் நமக்கு இயற்கையாக விதிக்கப்பட்டது"

"மனிதர்கள் அனைவருக்கும் மரணத்தைப் பற்றிய ஒரு விதமான பயம் உண்டு. ஆனால், வாழ்க்கை என்பது முடிவற்றது, இதில் பிறப்பும் இல்லை ; இறப்பும் இல்லை என்பது தெளிவாகி விட்டால் அந்த பயம் அழிந்து விடும்"

இந்தப் புத்தகத்தை ஒரு அறிவியல் சார்ந்த ஆன்மிகப் புத்தகமாகவே நான் பார்த்தேன். மிகவும் வித்தியாசமான வழக்கத்திற்கு மாறான மருத்துவப் புத்தகம். மனநலத்துறையில் பல சர்ச்சைகளைக் கிளப்பி விட்டாலும், யாரும் இந்தப் புத்தகத்தில் உள்ள செய்திகளை ஆணித்தரமாக மறுக்கவில்லை. மாறாக இன்னும் பல ஆராய்ச்சிகளை தூண்டி விட்டு, இன்னும் ஆழமான, அறிவியலுக்கு அப்பாற்பட்ட நிகழ்வுகளை மருத்துவத்திற்கு காட்டியுள்ளது. நான் இதை 6 வருடங்களுக்கு முன்பு படித்ததிலிருந்து இதைத் தொடர்ந்த பல செய்திகளைப் படித்து மிகவும் ஆச்சரியமடைந்துள்ளேன். வாய்ப்பு கிடைக்கும்போது படியுங்கள். உங்களுக்கும் வாழ்வோடு கூடிய ஒரு
வித்தியாசமான வாசிப்பனுபவம் கிடைக்கும்.

# இங்கே 'உணர்வு' என்பது consciousness என்ற அர்த்தத்தில்

Tuesday, February 3, 2009

கிச்சடி 04.02.2009


பரிசல் அப்பயே சொன்னாரு... 'கிச்சடின்னு ஆரம்பிச்சுட்டீங்க... கொஞ்ச நாளைக்கப்பறம் மேட்டர் கிடைக்க கஷ்டமா இருக்கும்னு'. பெரியவங்க சொன்னா சரியாத்தானே இருக்கும் !! ச்சின்னப்பையனா இருந்தா தினம் தினம் விதவிதமா கிச்சடி பண்ணலாம்... நாமதான் க்குட்டிப்பையனாச்சே... அதனால இப்பிடித்தான் மாசம் ஒருக்காதான் போட முடியும்.

நேத்திக்கு தாமிரா அண்ணன் ஏடிஎம் பத்தி ஒரு பதிவு போட்டுருக்காரு. அதைப் படிச்சதும் ஒரு ஃப்ளாஷ்... ஆஹா... க்யூவுல நிக்கறதைப் பத்தி ஒரு கிச்சடி ரெடி பண்ணலாமேன்னு... ஓவர் டு கிச்சடி...

(அப்பாடா... இப்பிடி பில்டப் குடுத்து ரெண்டு பாரா ஓட்டியாச்சு...உஸ்...)

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நமக்கும் SBI ஏடிஎம்முக்கும் கெரகம் ஏதோ பழைய ஜென்மப் பகை இருக்கு. (ஏடிஎம் நம்பியாராமா, நான் கல்யாண்குமாராமா) எப்பப் பணம் எடுக்கப் போனாலும் 'கரண்ட் இல்ல சார்' , 'பணம் போட்டுக்கிட்டுருக்காங்க... 1/2 மணி நேரம் ஆகும் சார்'. ஒரு மினி ஸ்டேட்மென்ட் எடுக்கணும்னு போனா 'பேப்பர் ரோல் தீந்துடுச்சு...பிரிண்ட் பண்ணாது சார்'. அய்யா... பண்மே எடுக்கலை வெறும் பேலன்ஸ் மட்டுமாவது பாக்கலாம்னா 'கம்ப்யூட்டர் டௌன்' இல்ல 'நெட்வொர்க் டௌன்'. ஒரு ஏடிஎம்முக்கு என்னென்ன உபாதைக வரமுடியுமோ அவ்வளவும் வந்துரும். அப்பிடியே ஒரு முகூர்த்த நாள்ல எல்லாம் சரியா இருந்தாலும் வாசல்ல நிக்கற கூட்டத்தைப் பாத்ததுமே 'சரித்தான்..'னு தோணிடும்.

அப்பிடியே பொறும்மையா (?!) வரிசைல நின்னா, நமக்கு முன்னால நிக்கிற நாலு பேரு நண்பர்களாயிருப்பாங்க. நாலு பேருமா சேந்து உள்ள போவாங்க. நமக்கு சந்தேகம் வந்துரும். இவுங்க ஏடிஎம்ல இருந்து பணம் எடுக்க போறாங்களா, ஏடிஎம்மையே எடுத்துக்கிட்டு போகப் போறாங்களான்னு. முதல்ல ஒருத்தர் கார்டை எடுக்க, அதை எப்பிடி எங்க போடணும்னு மத்த 3 பேரும் மூணு இடத்தைக் காட்டுவாங்க. அப்பறம் எங்கயாவது ஒரு குட்டி பாக்கெட் டைரிலயோ, கார்டுக்குப் பின்னாலயேவோ எழுதி வெச்சுருக்கற பின் நம்பரைப் பொறுமையா 4 வாட்டி படிச்சு பாத்துட்டு ஒவ்வொரு நம்பரா அழுத்தி (அழுத்தற அழுத்துல ஏடிஎம்மே ஆடும்) குறைஞ்சது ரெண்டு தடவையாவது தப்பா அழுத்தி, 500க்கு பதிலா 5000ம்னு அழுத்தி அத கேன்சல் பண்ணி.... ஒரு பெரிய போராட்டத்துக்கு அப்பறம் ஒரு வழியா பணம் எடுத்துடுவாங்க. இதே மாதிரி மத்த மூணு பேரும்.... அதுக்கு அப்பறம் நாம போன உடனே ஏடிஎம்முக்கு மூக்குல வேர்த்துடும் "Sorry. This ATM is temporarily out of order. Pl try in another nearest ATM"

போங்கடா... நீங்களும் உங்க ஏடிஎம்மும் !!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

"மர்ஃபி'ஸ் லாஸ்" (Murphy's Laws) அப்பிடின்னு சில வேடிக்கையான விதிகளைப் பத்தி நீங்க படிச்சுருக்கலாம். அதுல க்யூவைப் பத்தி சொல்லியிருக்கறது:

1. எப்பவுமே பக்கத்துக் க்யூ வேகமா நகரும்
2. நீங்க பக்கத்து க்யூவுக்கு மாறி நின்னா, முதல்ல நின்ன க்யூ வேகமா நகரும்.
3. நீங்க மாறி மாறி நின்னு ரெண்டு க்யூவுலயும் பின்னால பின்னால போய், செய்ய வேண்டிய வேலை கோவிந்தாவாகும்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


ஒருமுறை துபாய்ல நடு ராத்திரி இறங்கி On-Arrival Visa எடுக்க அங்க இங்க தேடி அலையும்போது ஒரு பெரிய க்யூவைப் பாத்துட்டு, இதுவா இருக்குமோன்னு க்யூவுல நிக்கற ஒருத்தர் கிட்ட விசாவுக்கான க்யூவான்னு கேட்டேன். அவரு மொத்தமா தலைய ஆட்ட, சரி இதுதான் போலன்னு நானும் நின்னுட்டேன். கொஞ்சம் தள்ளி ஒரு சின்ன கௌண்டர்ல ஒரு பொண்ணு உக்காந்து கம்ப்யூட்டர்ல சாலிடேர் விளையாடிக்கிட்டுருந்துது. "இவ்வளவு பேர் நிக்கறோம்... இன்னொரு கௌண்டர் போடாம இப்பிடி வெட்டியா இருக்காங்களே"ன்னு புலம்பிக்கிட்டு நின்னேன். இந்த க்யூ நகரற மாதிரியே தெரியல. 1/2 மணி நேரம் ஆச்சு ஒருத்தர் கூட நகரலை. என்னாடான்னு யோசிக்கும்போதே யாரோ ஒரு ஆள் வர, முன்னாடி நின்ன மொத்தக் கூட்டமும் மூட்டை முடிச்சத் தூக்கிக்கிட்டு அவன் கூட போயிடுச்சு. நான் மட்டுந்தான் நிக்கிறேன். அப்பறந்தான் தெரிஞ்சுது அது ஏதோ ஒரு டூரிஸ்ட் கூட்டம். வந்தவன் ஒரு ஆர்கனைசர். பக்கத்துல காத்தாடிக்கிட்டு இருந்த கௌண்டர்தான் விசா கௌண்டர். மூஞ்சில வழிஞ்ச வெளக்கெண்ணைல ரெண்டு நாள் வெளக்கெரிக்கலாம்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

படிக்கிற காலத்துல மண்ணெண்ணை, பாமாயில் இதெல்லாம் ரேஷன் கடைல போடறாங்கன்னு தமுக்கு அடிச்சாச்சுன்னா, உடனே எதாவது ஒரு டின், பாட்டிலோட போய் ரேஷன் கடை வாசல்ல நின்னுடணும். அங்க நமக்கு முன்னாலயே 100 பேர் நிப்பாங்க. டின், பாட்டில், குடை, கல்லு, கூடை, குச்சி, சீமாறு, தென்ன மட்ட, டயர் இதெல்லாம் கூட க்யூவுல இருக்கும். 'என்னாதிது சின்னப்புள்ளத்தனமா'ன்னு கேட்டுற முடியாது. ஒவ்வொண்ணும் ஒரு ஆளுக்கு சமம். கடைக்காரன் வந்ததுமே சொல்லிடுவான் "ஒரு டிரம் எண்ணைதான் இருக்கு... சண்டை போடக்கூடாது"ன்னு. ஆனா அந்த ஒரு டிரம்ல (100 லிட்டர்) இருந்து என்னவோ காமதேனு கிட்ட கரக்கற மாதிரி கரந்து 200 லிட்டர் பில் போடுவாங்க. அளக்கிற சீசா ஓட்டையா, பாதி அடைச்சிருக்குமா, அதுல பாதி நுரையா, ஊத்தும்போது சிந்துதா...ம்ஹூம்... எதையும் பாக்கக்கூடாது. நாமளும் 3 மணி நேரம் க்யூவுல நின்னு பில் போட்டுக்கிட்டு எண்ணை ஊத்தறவன் கிட்ட இன்னொரு க்யூவுல நின்னு நம்ம முறை வரும்போது டிரம்ம்மையே கவுத்து ஒரு முக்கா லிட்டர் எடுத்து நம்ம டின்ல ஊத்திட்டு 'அவ்வளவுதான் தம்பி... உள்ள போய் சொல்லி மீதிப் பணத்தை வாங்கிக்கங்க"ன்னு சொல்லி பில்லுக்கு பின்னால எழுதிக் குடுத்துடுவாரு. சரின்னு பின்னால திரும்பிப் பாத்தா நமக்கு ஆனதைப் பாத்தபிறகு நமக்கப்பறம் பில் போட்டவங்க எல்லாம் ரீஃப்ண்ட் க்யூவுல நின்னுக்கிட்டிருப்பாங்க. மறுபடி க்யூவுல நின்னு.....

Monday, February 2, 2009

போரைப் பற்றி சில பேர்


போரைப் பற்றி சிலரின் கருத்துக்கள் :


உருவாக்கப்பட்ட ஒவ்வொரு துப்பாக்கியும், செலுத்தப்பட்ட ஒவ்வொரு போர்க்கப்பலும், எறியப்பட்ட ஒவ்வொரு ராக்கெட்டும், கடைசியில் பார்த்தால், பசிக்கு உணவில்லாத ஒருவனிடமும் குளிருக்கு துணி இல்லாத ஒருவனிடமும் திருடியதற்கு ஒப்பானது. - ஐஷனோவர்

போர் அல்லது மனிதன் : ஏதோ ஒன்றுதான் இருக்க முடியும் - பக்மின்ஸ்டர் ஃபுல்லர்

ஒரு நல்ல போர் அல்லது மோசமான அமைதி எபோதுமே இருந்ததில்லை - பெஞ்சமின் ஃப்ரான்க்ளின்

வக்கற்றவனின் முதல் அடைக்கலம் வன்முறை - ஐசக் அஸிமோவ்

போரை ஆரம்பிப்பது மட்டுமே கிழங்கள். போரிட்டு மாண்டு போவது இளைஞர்கள்தாம் - ஹெர்பெட் ஹூவர்

போரில் இரண்டாவதாக வருபவனுக்கு பரிசு கிடையவே கிடையாது - ஜெனரல் ஒமர் ப்ராட்லி

ஒருவனைப் போரிட்டு கொல்ல வேண்டும் என்ற நிலையில் அமைதியாக இருப்பதனால் ஒரு இழப்பும் இல்லை - வின்ஸ்டன் சர்ச்சில்

ராணுவ ஊழியத்துக்கு செல்ல மறுக்கும் இளைஞர்களே போர்களற்ற உலகத்திற்கு வித்திடுபவர்கள் - ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

உலகில் அனைவரும் சகோதர சகோதரிகள், உலகத்தில் உள்ள சமுத்திரங்களைப் போல. பிறகு ஏன் காற்றும் அலைகளும் அவ்வளவு உக்கிரமாக மோதிக் கொள்கின்றன? - ஹிரோஹிடோ

எவ்வளவு தேவையென்றாலும், என்ன காரணமென்றாலும், போர் ஒரு கிரிமினல் குற்றம் இல்லை என்று சொல்ல முடியாது - எர்னெஸ்ட் ஹெமிங்வே

அடக்குமுறையின் விலை சல்லிசு என்று ஒரு அரசாங்கம் நினக்கும் அந்த நொடியில் போர் ஆரம்பமாகிறது என்று வரலாறு கூறுகிறது - ரொனால்ட் ரீகன்


டிஸ்கி : தமிழாக்கம் மட்டுமே அடியேனுடையது. இந்தப் பதிவுக்கும் இலங்கைல நடக்கற போருக்கும், ரா(ட்சச)ஜபக்சேவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.