Friday, August 29, 2008

அவனோடெ ராவுகள்

வந்தீங்களா? வாங்க.. வாங்க.. தலைப்பப் பாத்துட்டு என்னமோ ஏதோன்னு தோணுச்சா? ரொம்ப சாரி... அது சும்மனாச்சிக்கு வெச்சது... "சிறந்த புத்தகங்கள் - ஒரு எளிய அறிமுகம்" அப்பிடின்னு போட்டிருக்கலாம்தான்.... ஆனா இந்த புத்தகங்களையெல்லாம் பொதுவாக நான் ராத்திரி வேளைகள்ல படிச்சதுனால அப்பிடி தலைப்பு வெச்சேன். (அப்பாடா... தலைப்புக்கு நியாயம் சொல்லியாச்சு)

நான் ரியாத்ல சில மாசங்கள் வேலை செய்ய போனபோது, அங்க வேற ஒண்ணும் பொழுதுபோக்கு இல்லங்கறதால நாங்க தங்கியிருந்த அபார்ட்மென்ட்டுக்கு பக்கத்துல இருந்த "ஜரீர் புக் ஷாப்"தான் ஒரே ஆறுதல். அப்ப படிக்கக் கிடைத்த சில புத்தகங்களை எல்லோருக்கும் அறிமுகம் செஞ்சு வெக்கலாம்னு தோணுச்சு.


The Book of Mirdad : The Strange Story of a Monastery Which Was Once Called the Ark
Author : Mikhail Naimy

இந்த லெபனீய எழுத்தாளருடைய உண்மையான ஒரு அனுபவத்தை ஒட்டி எழுதியதுன்னு சொல்றாரு. பெய்ரூட்டுக்குப் பக்கத்துல இருக்கற ஒரு மலையை ஏற முயற்சி செய்யும்போது மேல ஒரு வித்தியாசமான மனிதரை சந்திக்கறாரு. அந்த மனிதர் 'நீ வருவன்னு தெரியும். மீர்தாத் உன்னப் பத்தியும், உன் அடையாளங்களையும் எழுதி வெச்சுருக்கான்' அப்பிடிங்கறாரு. அந்த புத்தகத்தையும் குடுக்கறாரு. அதுதான் "மீர்தாதின் புத்தகம்". இதப் படிக்கும்போது, நம்ம கீதை, வேதாந்தம், குர்-ஆன், விவிலியம் எல்லாம் நினவுக்கு வர்றதை தவிர்க்கவே முடியாது. மீர்தாத் சொல்ற ஒவ்வொரு கருத்தும் அந்த அளவுக்கு நமக்கு ரொம்ப பரிச்சயமானதா இருக்கு.

மேல சொன்ன மலை மேல இருக்கற மடத்துக்கு ஒரு நாள் மீர்தாத் வந்து சேர்றாரு. ஆனா அந்த மடத்தோட தலைவரா இருக்கறவருக்கு இந்த வரவு ரசிக்கும்படியா இல்ல. மத்த உறுப்பினர்களோட விருப்பத்துக்காக அனுமதிக்கறாரு. மடத் தலைவருக்கு நிறைய நன்கொடை வாங்கி மடத்தை விரிவு படுத்தணும்கறதுதான் குறிக்கோள். நோவாவின் படகு பற்றி படிச்சுருக்கோம். மிர்தாதும் அப்பிடி மனித குலத்தை இன்னொரு பிரளயத்துல இருந்து மீட்டெடுக்க வந்தவன்னு சித்தரிக்கப் படுறாரு. மடத்துக்கு வந்த நாளிலிருந்து மீர்தாத் மெல்ல அவருடைய கருத்துக்களை சொல்ல ஆரம்பிக்கறாரு. தலைவரைத் தவிர மற்ற உறுப்பினர்கள் ஒவ்வொருத்தரா புரிஞ்சுக்கிட்டு மீர்தாத் பக்கம் சாயத் தொடங்கறாங்க. தலைவருக்கு பிடிக்காததுனால பல விதங்கள்ல தொல்லை குடுக்கறாரு. ஆனா அதயெல்லாம் தாண்டி மீர்தாதோட புகழ் பரவ ஆரம்பிக்குது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கருத்தை எடுத்துக்கிட்டு அதப் பத்தி ஆழமா தர்க்கம் பண்ணி, முகத்துல அறையற மாதிரி உண்மைகள எடுத்துச் சொல்லி, மனிதனுடைய (சுய)உணர்வை (consciousness) விரிவு படுத்தி, கடவுளை "உணரவும்", மனிதன் தன்னுடைய "இரட்டைத் தன்மை" (duality) யிலிருந்து வெளிய வரவும் வழிகளைச் சொல்றாரு.

இந்த புத்தகத்தை படிச்சப்பறம் மீர்தாத் ஒரு புனைவுங்கற மாதிரி கூட தோணும். ஏன்னா, எழுதின மிக்கயில் நைமி ரொம்பவுமே கலீல் கிப்ரானின் எழுத்துக்களால பாதிக்கப்பட்டது தெளிவா தெரியுது. கவிதை மாதிரியான நடை. பொறுக்கி எடுத்த மிதமான, மென்மையான வார்த்தைகளைப் படிக்கும்போதே, அதை மீர்தாத் நம்ம முன்னாடி உக்காந்து மென்மையா சொல்ற மாதிரியான உணர்வைக் குடுக்குது. புத்தகத்துல உள்ள கருத்துக்களோட நமக்கு உடன்பாடு இருக்கோ, இல்லயோ, ரொம்பவே ஒரு வித்தியாசமான அனுபவத்தை உணர்ரத்துக்காகவாவது கட்டாயம் படிக்கணும். எனக்கு இதுவரை வேறெந்தப் புத்தகத்தையும் படிக்கும்போதும் கிடைச்சதில்ல. கீதையத் தவிர, கீதைய புத்தகம்னு நெனச்சா. ஒரு உதாரணத்துக்கு கூட புத்தகத்துல இருந்து சில வரிகள எடுத்து போடலாம்னா, என்னோட புரிதல முன் நிறுத்த இஷ்டமில்ல. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமா அதனோட அர்த்தம் புரியலாம். அதுதான் சரியும் கூட. மூலம் லெபனீய மொழியில் இருந்தாலும், ஆங்கில பதிப்புதான் ரொம்ப பாப்புலர். தமிழ் பதிப்பும் இருக்கு. ஆனா, நான் படிக்கல. வாய்ப்பு கிடைச்சா படிங்க. இந்த புத்தகத்தை படிச்சவங்களை எதாவது ஒரு விதத்துல கண்டிப்பா பாதிக்கும்.
டிஸ்கி 1: நான் எந்த மதத்தயோ, மத உணர்வுகளையோ, தனி மனிதக் கருத்துக்களையோ திணிக்கறதாகவோ, மறுக்கிறதாகவோ தயவு பண்ணி நினைக்காதீங்க. இத ஒரு புத்தகம்ங்கற அளவுல மட்டுமே பார்த்தேன். ஆனா, அதுல அடஞ்ச ஒரு பாஸிடிவ்வான பாதிப்பு எல்லாருக்கும் கிடைக்கணும்னு ஒரு ஆசை. அவ்வளவே. புரிஞ்சுக்கிட்டதுக்கு நன்றி.

டிஸ்கி 2: முதல் முறையா எழுதறதால, ஒரு நல்ல புத்தகத்தை நல்ல முறையில உங்களுக்கு அறிமுகப் படுதியிருக்கேனான்னு தெரியல.

Wednesday, August 27, 2008

A For Apple ... தொடர் பதிவு

ஜோசஃப் அண்ணன் போட்ட கொக்கி இங்க... அதுக்கு பதில் இங்க....

நாம அடிக்கடி போய் வர்ற இணைய தளங்களோட லிஸ்ட் - அகர வரிசைல....

amazon.com - புத்தகம், புத்தகம் மேலும் புத்தகம்....
about.com - எதப் பத்தி வேணாலும் கேக்கலாம்.... நல்ல ஒரு வழிகாட்டி...

bbc.co.uk - சூடான செய்திக்கு முந்துங்க....
bseindia.com - காளையா? கரடியா? (அது என்ன எளவோ... போன பணம் போனதுதான்... 21000 த்துல தல கால் புரியாம ஆடுனது என்ன... இப்பொ 14000த்துல நொண்டிக்கிட்டுருக்கறது என்ன... எப்பிடி இருந்த நான் இப்பிடி ஆயிட்டேன்.... போனது போனதுதான்... வராது வராது... தனியா பொலம்பற அளவுக்கு போயிட்டேனே... சொக்கா....)
bookreview.com - அமேசான்ல வாங்கறதுக்கு முன்னாடி... புத்தகத்துக்கு கெடச்சது பூங்கொத்தா, அழுகுன முட்டயான்னு பாத்துக்கிடலாம்..

cricbuzz.com - இதுக்கெல்லாம் விளக்கங் குடுத்தா... .. எதிர்க் கட்சிக்காரன் என்னப் பத்தி என்ன நெனப்பான்?
cooltoad.com - "இசை கேட்டால் புவி அசைந்தாடும்" - அதுவும் இலவசமாக் கெடச்சா....
carnatic.com, carnatica.net - கர்னாடக இசைக்கு இசைவான தளங்கள் - சோகம், பானம், தலவலின்னு வீணாப் போறத்துக்கு பதிலா ராகம், தானம், பல்லவி தெரிஞ்சுக்கலாம்

dictionary.reference.com - இட்டது பட்டானால் வாட்டென்ன?
dawn.com - பாகிஸ்தானின் "தினமணி" - ரொம்ப தைரியமான நாளிதழ் (ஒரே வருத்தம் : அதுல 20 வருடத்துக்கும் மேல தொடர்ந்து எழுதிக்கிட்டுருந்த அயாஸ் அமீர் விலகிட்டார். ஜியா உல் ஹக் ல இருந்து, முஷாரஃப் வரைக்கும் கிழி கிழின்னு கிழிச்சவர்)

e-grocy.com - சிங்கப்பூர்ல முஸ்தஃபாவுக்கு சனி, ஞாயிறுல போய் மளிகை சாமான் வாங்கறது மாதிரி தண்டனை வேற கெடயாது... நெட்ல ஆர்டர் பண்ணா...வூட் மேலே சாமான்...

flickr.com - கூகிளோட புகைப்பட தளம்

google.com - சூரியனுக்கே டார்ச்சா?

healthatoz.com - தலவலிலெருந்து திருகுவலி வரைக்கும்.... புட்டு புட்டு வெக்கறாங்க...

irctc.co.in - கிழக்க போற ரயிலு, மேக்க போற ரயிலு அல்லாத்துக்கும் டிய்டு விக்கறாங்க...
investopedia.com -முதலீட்டுச் சந்தை பற்றிய அகராதி

kodakgallery.com - நம்ம ஃபேவரைட் ஃபோட்டோ சைட்டு... எதயாச்சும் கெக்கெ பிக்கென்னு புடிச்சு, இங்க ஏத்தி விட்டுட்டு சாதி சனத்துக்கு சொல்லி அனுப்பிட்டோம்னா அவிங்க அவிங்க பாத்துக்கிடுவாங்க..

linkedin.com - நட்புகளை சேமிச்சு வெச்சுக்கற தளம். பழய பங்காளிகளையும் புடிச்சரலாம்... புதுக் கூட்டாளிங்களயும் சேத்துக்கிடலாம்

moneycontrol.com - சந்தையில போட்ட பணம் வளர் பிறையா தேய் பிறையான்னு தெரிஞ்சுக்கலாம்... (இப்போதைக்கு அட்ரஸ்: அரோகரா இல்லம், நெ. 111, நாமகிரிப்பேட்டை, கோவிந்தாபுரம்)

ndtv.com - ஒரு நல்ல இந்திய செய்தி தளம்
nseindia.com - கொஞ்சம் சின்ன "காளையா? கரடியா?"

orkut.com - சூரியன்.... டார்ச்...
origami.com - ஜப்பானியக் கலை. காகிதத்தை மடிச்சு மடிச்சு உருவங்கள் செய்ய சொல்லித் தருகிற தளம். நல்ல பொழுதுபோக்கு... வித்தியாசமான கலை....

pmi.org - திட்டப்பணி மேலாண்மை நிறுவனம் (Project Management Institute) நம்ம தொழில் வளர்ச்சிக்கு தேவையான தளம்

questionbank.net - இண்டர்வ்யூவுக்கு போறவங்களுக்குன்னே இருக்கற தளம்.... பெரும்பான்மையான இந்திய சாஃப்ட்வேர் கம்பெனிங்களோட கேள்விகளுடைய தொகுப்பு.

rediff.com - சூரியன்... டார்ச்....

samachar.com - இந்திய செய்தித்தாள் தளங்களோட திரட்டி
sesamestreet.com - குட்டீஸ் கார்னர் - குழந்தைகளுக்கான இணைய விளையாட்டு தளம்...

trekearth.com - பல பயணக்காரர்களோட ஃபோட்டோ பகிர்வு தளம்.
thesauras.reference.com - "இத அப்பிடியும் சொல்லலாம்... அத இப்பிடியும் சொல்லலாம்" ... ஒரு சொல்லுக்கு பல இணைச்சொற்கள் தேட சரியான் தளம்

universe.daylife.com - ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப வித்தியாசமான தளம் - ஒரு தடவ போய்த்தான் பாருங்களேன்..

wikipedia.com - சூரியன்... டார்ச்....

yahoo.com - சூரியன்... டார்ச்....

zuji.com - ஃப்ளைட் டிக்கட்... சீப் டிக்கட்... ஈசி, ஃபாஸ்ட்...


இப்ப நாம கொக்கி போடணுமா? ம்ம்ம்ம்ம்...யார இழுக்கலாம்?

பழமைபேசி - அப்பிடி சுலபமா உட்ருவமா?
அணிலன் - கொஞ்சம் சேட்டய மூட்ட கட்டீட்டு கடமய செய்ங்க பாக்கலாம்
வெயிலான் - கொஞ்சம் நெழல்ல ஒதுங்கி நில்லுங்க...

Rule:
The Tag name is A for Apple
Give preference for regular sites
Ignore your own blogs, sites
Tag 3 People.

Saturday, August 23, 2008

மொளச்சு வரும்போது....2

உடுமலப்பேட்டைய சுத்தி இருக்கற 18 பட்டி கெராமங்களுக்கும் பஞ்சாயத்து யூனியன் ஆபீஸ் தளி ரோட்டுல இருக்கு. அதுக்கு பின்னால ஒரு கிலோ மீட்டர் போல போனா ஒட்டுக்குளம் வரும். அதுக்கு பக்கத்துல பெரிய கவுண்டர் தோட்டம். கவுண்டர் எங்க அப்பாவோட நண்பர். எப்பல்லாம் கரும்பு வெளஞ்சு அறுக்கறாங்களோ, சக்கர மில்லுக்கு அனுப்பிச்சது போக, வெல்லம் காச்சறதுக்காக கொஞ்சம் ஒதுக்கி வெச்சுருவாங்க. ஆலை போடறாங்கன்னு ந்யூஸ் வந்தாச்சுன்னா, ஒடனே வீட்டுலேருந்து ஒரு தூக்குபோசிய நம்ம கைல குடுத்து தேன்பாகு எடுத்துட்டு வர சொல்லிடுவாங்க. ரொம்ப ஆர்வமா எங்க அண்ணன் கூட கெளம்பிருவேன். சொன்ன ஒடனே கெளம்பறதுக்கு காரணம் இருக்கு. அங்க போனா கரும்பு ஜூஸ் கெடைக்கும். அதோட பக்கத்துல வாய்க்கால் ஓரமா இருக்கற நெகாப்பழ மரத்துல ஏறி பழம் பறிச்சு திங்கலாம். கவுண்டர் வீட்டுல வேற தெனமாவும் கடுங்காப்பியும் கெடைக்கும். இதெல்லாம் நெனப்பு வந்தொடனே, நாக்கை சப்பு கொட்டிக்கிட்டு ஒரே ஓட்டம்.

இந்த வெல்லம் காச்சறதே ஒரு ரொம்ப சுவாரசியமா இருக்கும். அனில் ஆயில் இஞ்சினோட பெல்ட் போட்டு கிரஷர் ஒண்ணு ஓடிக்கிட்டே இருக்கும். சோகையை வெட்டி, கணுவெல்லாம் சீவி நீள நீளமா கரும்புகள அடுக்கி வெச்சுருப்பாங்க. ரெவ்வெண்டு கரும்பா கிரஷர்குள்ள பல்லுகளுக்கு நடுவால குடுத்தா, அப்பிடி கரகரன்னு ஜூஸ புழிஞ்சுட்டு சக்க வெளிய வரும். மறுபடி ஒருவாட்டி புழிஞ்சு எடுப்பாங்க. பெரிய கார்ப்பொரேட்டுகள்லாம் இன்னிக்கு சிறு வியாபாரிகள புழியற மாதிரின்னு வெச்சுக்கங்களேன். நம்ம போயி பக்கத்துல நின்னோம்னா கூட ஒரு எலுமிச்சம் பழம், இஞ்சி, புதினாவெல்லாம் வெச்சு ஸ்பெஷல் ஜூஸு கெடைக்கும். அந்தப் பக்கம் சாளைக்குள்ள பெரிய பெரிய (பெரியன்னா...ஒரு 8 அடி விட்டமிருக்கும்) கடாய்ங்க அடுப்புல போட்டிருப்பாங்க. இந்த புழிஞ்ச சாற பக்கிட்டுகள்ள எடுத்துக்கிட்டு போயி, அந்த கடாய்ல ஊத்தி காச்ச ஆரம்பிப்பாங்க.

சைடுல ஒரு பக்கெட்ல காட்டு வெண்டக்காச் செடியோட தண்டுகள வெட்டி தண்ணீல ஊறப்போட்டு நல்லா கலக்கி, அது கொழ கொழன்னு ஒரு கூழ் பதத்துல இருக்கும். கரும்புச் சாறு நல்லா கொதிச்சு வரும்போது இந்த கலவையையும் அதுல ஊத்தீருவாங்க. சாறுல இருக்கற அசுத்தத்த எல்லாம் இது தனியா பிரிச்சு, அப்பிடி நொர மாதிரி மேல மெதந்துக்கிட்டு வரும். அத அப்பிடியே ஒரு பெரிய அகப்பையால அள்ளி எடுத்துருவாங்க. ரெண்டு ஆளுக இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் நின்னுக்கிட்டு கொதிக்கிற சாற கலக்கிக்கிட்டே இருப்பாங்க. இன்னும் நல்லா கொதிச்சதும், ஒண்ணு ரெண்டு பாக்கெட் பொடிகள அதுல சேப்பாங்க. (அது என்ன பவுடர்கன்னு பின்னால தெரிஞ்சுது. சோடியம் ஹைட்ரோசல்பைடும், ஃபார்மல்டிஹைட் சல்ஃபாக்சிலேட்டும்) காட்டு வெண்டக்காயால எடுக்க முடியாத அசுத்தங்கள இது எடுத்துரும்.

இதுக்குள்ள அச்சுவெல்லம் போடற சட்டங்க, மண்ட வெல்லம் புடிக்கிற ஆளுங்க எல்லாம் ரெடியா இருக்கும். கொதிக்கிற சாற டின்னுல எடுத்திக்கிட்டு போயி அச்சுவெல்ல சட்டத்துல ஊத்துவாங்க. (சில சமயம் ஊத்தும்போதே அதுல பொட்டுகடலய கலந்து ஊத்தறதும் உண்டு. அது ஒரு தனி டேஸ்டா இருக்கும்.) மண்ட வெல்லம் புடிக்கிறவங்கதான் பாவம்....சுட சுட அப்பிடி திருப்பதி லட்டு புடிக்கிற மாதிரி உருட்டி உருட்டி காய வெப்பாங்க. ரொம்ப கஷ்டமான வேலை. இதயெல்லாம் ஆ..ன்னு வாய பொளந்துக்கிட்டு பாத்துக்கிட்டிருப்போம். இந்த பொடிக சேப்பாங்கன்னு சொன்னோமில்ல, அதுக்கு முன்னாடி கொஞ்சம் எடுத்து நம்ம தூக்குபோசியில ஊத்தி வெச்சுருவாங்க. (இதுக்குத்தானே போனது!)

ஆனா பாருங்க, இதுக்குள்ள நாம ஒரு 2 லிட்டர் ஜூஸு குடிச்சு, 2 டசன் அச்சு வெல்லம் சாப்ட்டு, 1 கிலோ நெகாப்பழம் தின்னு 'அது வயிறா வெள்ளாவிப் பானையா' ங்கிற மாதிரி இருக்கும். ஒருவழியா தேன்பாக எடுத்துக்கிட்டு வீட்டுக்கு கெளம்புவோம். அம்மாவுக்கும் தெரியும், இந்த வானரங்க என்னல்லாம் கூத்தடிச்சிருக்கும்னு. நம்ம ஊத்த வாய்தான் நெகாப்பழம் தின்னு தின்னு 'ஊதா' வாய் ஆகியிருக்குமே. மறுநா காப்பில நிச்சயம் 2 ஸ்பூன் வெளக்கெண்ண கலந்திருக்கும். இல்லாட்டி இந்த காயலாங்கடையயெல்லாம் கழுவி சுத்தம் பண்றது ரொம்ப கஷ்டம்.

தோட்டத்துக்கு போற வழில, தென்னந்தோப்புல சில மரங்கள்ல கள்ளுக்காக தென்னங்கைகள வெட்டி பானை சொருகி வெச்சுருப்பாங்க. அண்ணனுக்கு திடீர்னு ஒரு ஐடியா. கல்ல வீசி ஒரு பானைய ஒடச்சா என்னன்னு. ரெண்டு மூணு கல்ல விட்டெறிஞ்சு பாத்தோம். ரொம்ப ஒசரம்கறதால ஒரு கல்லும் கிட்ட கூட போகல. ஆனாலும், தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் மாதிரி எறிஞ்சுக்கிட்டே இருந்ததுல ஒரு கல்லு போயி பானைல பட்டு ஓட்டை போட்டிருச்சு. ஆனா சத்தம் நல்லா கேட்டிருச்சு. அந்தப்பக்கம் தேங்கா உரிச்சுக்கிட்டு இருந்தவங்க பாத்துட்டாங்க. ஒடியாந்து ரெண்டு பேரையும் புடிச்சுட்டாங்க. கள்ளு 6 ருவா, பான ஒண்ணார் ருவான்னு கணக்குப் போட்டு ஏழார் ருவா கேட்டு மிரட்றாங்க. நாம வேற சத்தமா அழ ஆரம்பிக்க, அந்தப் பக்கமா சைக்கிள்ள வந்த இன்னொரு கவுண்டர் (அவுரும் அப்பாவுக்கு நண்பர்தான்...உரக்கடை வெச்சுருக்காரு) பாத்துட்டு, அவுங்க கிட்ட சொல்லி விடுவிச்சு கூட்டிக்கிட்டு போயி அவுங்க வீட்டுல காப்பியெல்லாம் குடுத்து அனுப்பிச்சாரு. ஆனா நானும் அண்ணனும் நடந்தத வீட்ல சொல்லல. உரக்கடை கவுண்டரும் அப்பா கிட்ட சொல்லவே இல்ல.

பெரிய கவுண்டர் தோட்டத்துல ஒரு பெரிய கெணறு இருக்கு. அதுல அடிச்ச கூத்துக.... சொல்றேன் சொல்றேன்....

இன்னும் மொளைப்போம்...

Wednesday, August 20, 2008

நீங்க ஏமாந்தவரா, ஏமாறுபவரா?

ரெண்டும் ஒண்ணுதானடான்னு நீங்க மெர்சலாயிட்டீங்களா? நான் ரெண்டுமே. நம்ம நண்பர்களும் நம்மளை மாதிரிதான் இருப்பாங்களோன்னு ஒரு 'இது'. ஹி ஹி....கோச்சுக்காதீங்க... நாமல்லாம் அப்பிடியா பழகறோம்?

அது என்னன்னா, நாம சின்ன வயசுல இருந்தே கொடையப்ப வள்ளலா.... நெத்திலயே வேற இவுரு பெரிய I.V.சசி ((இளிச்ச வாயி) அப்பிடின்னு பச்ச குத்தியிருக்கா...போற வாறவங்களுக்கெல்லாம் இவன ஒரு தட்டு தட்டிப் பாத்தா என்னன்னு தோணும் போல. ஒரு தடவை என்ன ஆச்சு (அட....நாம ஸ்கூல்ல நல்ல புள்ளயா இருக்கயிலன்னு சொல்லணுமாக்கும்!) வீட்ல குமுதமும், தினமணி கதிரும் (அப்ப அது தனி புத்தகம்) வாங்கிட்டு வர சொன்னாங்க. அது அப்பொ பஸ் ஸ்டாண்டுல இருக்கற சாரதா புக் ஸ்டால்லதான் வாங்கறது வழக்கம்.

பஸ் ஸ்டாண்ட் கிட்ட போகும்போது, நம்ம தலைக்குப் பின்னால சுத்தற ஒளி வட்டத்த பாத்துட்டு ஒரு ஆளு நம்ம பக்கம் வந்தாரு. நல்லா வாட்ட சாட்டமா வேற இருந்தாரா, நமக்கு உள்ளூர ஒரு நடுக்கம்.

'டேய்...எங்கடா போற? ம்ம்ம்...கேக்கறனில்ல?'

'பொஸ்தகம் வாங்க'

'ம்ம்ம்...உள்ள பாத்தியா...பூராம் போலீசு...உள்ள போனா கையில கயிறு மாட்டீருவாங்க...தெரியுமில்ல'

'.......'

'எங்கிட்ட காசைக் குடு... நான் போய் வாங்கீட்டு வர்றேன்... சீக்கரம்'

'.....'

'பொஸ்தகம் வாங்கணுமா வேணாமா? ம்ம்ம்ம்...'

'வேணும்'

'அப்ப குடு காச...'

'இந்தாங்க...ஒரு குமுதம் அப்பறம் தினமணி கதிரு'

'இங்கியே நில்லு... உள்ள வராத... போலீசு...பாத்தியல்ல...'

'செரி...'

அம்புட்டுதேன்... இன்னும் என்ன கதை கேக்கறீங்க... என்ன... வீட்ல ஒரு ரூல் தடி ஒடஞ்சது ஒரு எக்ஸ்ட்ரா நட்டம். அங்க அன்னிக்கு போலீசு எதுக்கு வந்தது, ஏன் வந்ததுன்னு இன்னிக்கு வரைக்கும் தெரியாது.

இது ஆச்சா...ஒரு 4 வருசம் முன்னால, மெட்ராஸ் அசோக் பில்லர் சரவண பவன்ல காலைல டிஃபன் சாப்டுட்டு வந்து பைக் ஸ்டார்ட் பண்ணும்போது, ஒரு நடுத்தர வயசுக்காரர் பக்கத்துல வந்தாரு. பாக்க ஜென்டில்மேன் (ஆமா...அர்ஜுன்....உங்களயெல்லாம்....) மாதிரி இருந்தாரு.

'சார்...ஒரு ஸ்மால் ரிக்வஸ்ட்'

இவுரு கூட பேசலாமா வேண்டாமான்னு யோசிக்கும்போதே...

'பயப்படாதீங்க சார், நான் கடலூர்ல கவர்மென்ட் காலேஜுல லெக்சரரா இருக்கேன். பேரு கண்ணன். அம்மாவ இப்ப்த்தான் பஸ் ஏத்தி விட்டேன். எவனோ பர்ச அடிச்சுட்டான். கைல பைசா இல்ல. இப்பொ ஒரு 40 ரூபா இருந்தா கடலூர் போயிடுவேன். போனதும் உங்களுக்கு மணி ஆர்டர் அனுப்பிடறேன். வேற யார்ட்டயும் கேக்க கூச்சமா இருக்கு. கேவலமா பேசறாங்க. ப்ளீஸ் சார்...'

சொல்லும்போதே கண்ல தண்ணி.... இது என்னடாது வம்பா போச்சு..... நமக்குள்ள இருக்கற பாரி, ஓரி, காரி, பேகன், ஆய் எல்லாம் 'அய்யய்யோ.. பாவமே... என்னடா யோசிக்கற... குட்றா... குட்றா..' ங்கறாங்க. ஒடனே கர்ணன் மாதிரி ஒரு 50 ரூபா எடுத்து குடுத்துட்டோம்ல.

'சார்... ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் சார்...உங்க அட்ரஸ் குடுங்க சார்... ப்ளீஸ்... போனதும் மொத வேலயா திருப்பி அனுப்பிடறேன் சார்"

'எழுதிக்குங்க....... .... ..... ..... ... 600089 '

'சரியா பாருங்க சார்'

'ஒக்கே. சரியா இருக்கு.'

'தேங்க்ஸ் சார். வயசுல ரொம்ப சின்னவங்க நீங்க... இல்லாட்டா கால்ல விழுந்திருப்பேன்"

'அட...அதெல்லாம் வேண்டாம் சார்... பாத்து போங்க.. ஜாக்ரதையா இருங்க'

எதோ ஒரு பஸ் வந்ததும், அவர் அத தொரத்திகிட்டுப் போயிட்டார்.

மணி ஆர்டரா ? ம்ம்ம்....வரும்....நெனச்சுக்கிட்டிருங்க. அதுக்கப்பறம் நான் 4 வீடு மாறியாச்சு. ஆனா அந்த சம்பவத்துக்கு அப்பறம் ஒரு மாசம் கழிச்சு அதே எடத்துல, அதே ஆள வேற ஒருத்தர் கிட்ட பேசிக்கிட்டு இருக்கறத பாத்தேன். அந்த அப்பாவியயாவது காப்பாத்தலாமேன்னு கிட்ட போனேன். ஆனா...கிளிக்கு ரக்க மொளச்சு பறந்தே போயிடுத்து. அந்த அப்பாவி கிட்ட விஷயத்த சொல்லிட்டு, சரவண பவன் மேனேஜர் கிட்டயும், செக்யுரிடி கார்டு கிட்டயும் சொல்லிட்டு கெளம்பிட்டேன். அவங்களும் இன்னொரு தடவ அந்த ஆளப் பாத்தா நாங்க கவனிச்சுக்கறோம்னு சொல்லிட்டாங்க.

அதுக்கப்பறம் பல பேர் பல தடவை வந்து உதவி கேட்டிருக்காங்க. ரொம்ப சூதானமா கண்டுக்காம போயிடுவேன். சில சமயம் 'இது ஒரிஜினலோ'ன்னு தோணும். ஆனாலும் இன்னொரு தடவை ஏமாற விருப்பம் இல்ல.

நீங்க எப்பிடி?

Sunday, August 17, 2008

மொளச்சு வரும்போது....1

முன்னுரை:

ரொம்ப ரொம்ப ரொம்ப நெருங்கிய ஃப்ரெண்ட் கேட்டுக்கிட்டதுக்காக இந்த பதிவு தொடர். சின்ன வயசுல நடந்த பல நிகழ்வுகள அவுங்க கிட்ட பகிர்ந்துகிட்டதுண்டு. அதுல சிலதுகள அடிக்கடி ஞாபகம் வந்து கிச்சு கிச்சு மூட்டும்னு பல தடவை சொல்லியிருக்காங்க. இப்பொதான் ப்ளாக்னு ஒண்ணு ஆரம்பிச்சுட்டியே, அது மாதிரி நிகழ்வுகளயெல்லாம் பதிவுகளா போட்டா என்னன்னும் கேட்டாங்க. அதனால இந்த தொடர் கிறுக்கல்கள் அவங்களுக்கு சமர்ப்பணம்.

ஆரம்பிக்கலாமா...

உடுமலப்பேட்டைல இஸ்கோல் படிக்கும்போது, எனக்கு என் ஃப்ரெண்டுகள விட என் அண்ணனோட ஃப்ரெண்டுகதான் அதிகம் பழக்கம். சாயங்காலம் நேதாஜி க்ரௌண்டுக்கு விளையாட போகும்போது கூட அவுங்க கூடத்தான் போறது. இருக்கிறதுலயே சின்ன பையன்கிறதுனால பல சலுகைகள் கிடைக்கும். கிரிக்கெட் வெளயாண்டா மொத பேட்டிங் எனக்குத்தான். பந்து பொறுக்கவும் ரொம்பவெல்லாம் ஓட விட மாட்டாங்க. ஏதாவது திங்க கொண்டு வந்தாலும் எனக்குதான் மொத. அதுலயும் சாரி மாஸ்டர் வீட்டு பசங்களை குறிப்பிட்டு சொல்லணும். நிறைய கிண்டல் பண்ணினாலும் ரொம்ப அன்பா இருப்பாங்க. (பின்னால நான் டெல்லி போனபோது கூட அவுங்க கூடத்தான் அவுங்க ரூம்ல 1 வருஷம் போல இருந்தேன்)

அப்பப்ப என் க்ளாஸ்மேட்டுக கூடவும் வெளயாட போகறதுண்டு. அதுவும் முழு பரீட்சை லீவு விட்டாச்சுன்னா காலங்காத்தாலயே க்ரௌண்டுல ஆஜர் ஆயிடுவோம். (ஸ்கூல் நாள்ல கூட அவ்வளவு சீக்கிரம் எழுந்திரிக்க மாட்டோம். எதாவது பாட்டு வாங்கித்தான் எழுந்திருக்கறது) அப்பறம் முட்டிக்கால் வரைக்கும் புழுதி ஏறி, கப கபன்னு பசி வரும்போதுதான் வீட்டு நெனப்பே வரும். திரும்பி போன ஒடனே எங்கெல்லாம் அடி விழும்னு தெரியாது, ஆனா சகட்டுமேனிக்கு விழும். அதப் பத்தியெல்லாம் யாருக்கு கவலை? குளிச்சு சாப்டுட்டு எப்படா மணி 3 ஆகும்னு பாத்து, 3 அடிச்சவுடனே, பந்தையோ, சைக்கிள் டயரயோ, பட்டமோ, தென்ன மட்டயோ (பேட்டாமா) எடுத்துகிட்டு மறுபடியும் க்ரௌண்டுக்கு போனா, நம்ம கை காலயே யாராவது தொட்டு காமிச்சு இங்கதான் இருக்குன்னு சொல்ற வரைக்கும் இருட்ன பெறகு கிளம்புவோம். மறுபடி அடி...திட்டு...இதெல்லாம் சகஜந்தானே.

இதுல முக்கியமான் ஒரு வெளயாட்டு (!!) ஐஸ் நம்பர். சம்மர்ல கோர்ட்டும் லீவு. நல்ல பெரிய கேம்பஸ் வேற. ஒளிஞ்சு வெளயாட தோதான எடம். மரம், தண்ணித்தொட்டி, கக்கூஸ், அட்டபொட்டின்னு எதுக்குள்ள வேணா ஒளிஞ்சுக்கலாம். ரெண்டே நாள்தான்...எல்லா எடமும் எல்லாருக்கும் தெரிஞ்சு போனதும் கோர்ட்ட விட்ருவோம். பக்கத்துலயே சப் ஜெயில். எல்லா வானரங்களும் அங்க தாவிருவோம். சப் ஜெயில்ல புளிய மரங்க வரிசையா நெறய இருக்கும். சம்மர்ல அதுக வேற காச்சு ரெடியா இருக்கும். குத்தகைக்காரங்க வந்து புளியம் பழங்கள உலுக்கி எடுத்துகிட்டு போன பெறகு, காய்க நெறய இருக்கும். எவனோ ஒருத்தன் அவுங்க வீட்ல புளியங்கா சட்னி அரைச்சத பெருமயா சொல்ல, நாமளே ஏன் பண்ணக் கூடாதுன்னு விவாதிச்சு, ப்ளான் பண்ணோம். அதாவது, ஒவ்வொருத்தனும் ஒவ்வொரு சாமான் கொண்டு வரணும்னு. பெருசா ஒண்ணுமில்ல. உப்பும் பச்ச மொளகாயுந்தான்.

இதுக்கு காலைல இருந்தே, அம்மா எப்பொ அடுக்களைய விட்டு நகருவாங்கன்னு பாத்து, படக்குன்னு இவ்வளவு கல் உப்போ, மொளகாயோ எடுத்து ட்ரவுசர் பாக்கெட்ல போட்டுக்கறது. இதுல ஒருத்தன் உப்ப எடுத்து போட்டுக்கிட்டு மொட்டு வெச்ச டைனசார் மாதிரி (குட்டி போட்ட பூனைன்னு சொல்றது அலுத்துப் போச்சு)அங்கிட்டும் இங்கிட்டும் ஒலாத்தி திருட்டு முழி முழிக்க, அவனோட அக்கா பாத்து என்னடா சங்கதின்னு கேக்க, இவன் ட்ர்வுசர்லயே ஒண்ணுக்கிருக்க, உப்போட உப்பா எல்லாம் கறஞ்சு போச்சு. சரி...இப்போ உப்பு மொளகாயெல்லாம் வந்து சேந்ததும், கொஞ்சம் புளியங்காய அடிச்சு கொண்டார ஒரு டீம் போகும். சட்னி அரைக்கணுமே...அதுக்கு என்ன பண்றது? எடந்தேடி அலஞ்சா... வாகா ஒண்ணு கண்ல பட்டுச்சு. அந்த சப் ஜெயில்ல ஒரு புள்ளயார் கோவில் இருக்கு. புது செல வெச்சுட்டு, பழய செலய ஒரு ஓரமா வேப்ப மரத்துல சாச்சு வெச்சுருந்தாங்க. ஆஹா...சரியான எடம்னு, புள்ளயார குப்பறப் போட்டு, முதுகுல எல்லா ஐட்டத்தையும் வெச்சு, மூஞ்சூரால நல்லா மேல கீழ மசாலா அரைக்கிற மாதிரி அரைச்சு, எடுத்து சாப்டா...அட அட அட பழனி பஞ்சாமிர்தம் தோத்துது.... அம்புட்டு டேஸ்ட்.... எக்கச் சக்கமா தின்னு அவனவனுக்கு வாய்ல புண்ணு, வயித்துல புண்ணுன்னு நாலு நாள் அல்லாடுனது தனி கதை. இதுல வேற நாக்கு பல்லெல்லாம் கூசிக்கிட்டு இருக்கும். வீட்ல சுள்ளுன்னு புளிக் கொழம்பு வெச்சிருப்பாங்க. வேண்டாம்னுஞ் சொல்ல முடியாது... திங்கவும் முடியாது.... மூஞ்சி கோணற கோணல பாக்க சகிக்காது. போட்டோ புடிச்சு ஆனந்த விகடன் அட்ட படமா போடலாம்.

இன்னும் மொளைப்பொம்....


Friday, August 15, 2008

எல்லா பதிவாளுக்கும் சொல்றது என்னன்னா....

அதாகப்பட்டது.... ஆதௌகீர்த்தனாரம்பத்திலே லதானந்தாஸ்ரமத்தில இருந்து பரிசல் அம்பிக்கு ஒரு பகிரங்க கடுதாசி வந்துடுத்து. அத வாசிச்ச பரிசல் அம்பி கோச்சுண்டு, நான் இனிமே கீ போர்டுல வெரல வெச்சா அத இஞ்சி நசுக்கறாப்ல நசுக்கிடுங்கோன்னு சொல்லிப்டு போய்டுத்து. ஒடனே மத்த பதிவாள்ளாம் அம்பிய சமாதானம் பண்ணி, ஏண்டாப்பா, நீ பாட்டுக்கு இப்டி முறுக்கிண்டு போய்ட்டியானா நாங்கள்ளாம் அவியலுக்கும் தொகயலுக்கும் எங்கடா போறதுன்னு வருத்தப் பட்டுண்டா. பாத்தான் அம்பி.... ஆஹா... நாம இப்டி திடீர்னு கரண்டியயும் கல்லோரலையும் தூக்கி அட்டாணில போட்டுட்டா, மத்தவாளுக்கு எவ்ளோ ஸ்ரமம்னு புரிஞ்சுண்டு, திரும்ப வந்தான் பாருங்கோ வேகமா அஞ்சனாபுத்ரன் அனுமனாட்டம்..... வந்து நன்னா வக்கணையா ஒரு அவியலும் பண்ணிப் போட்டான் பாருங்கோ... அவா அவாளுக்கு என்ன சொல்றதுன்னே புரியல.... "பரிசலும் பதிஞ்சான்; பதிவாளும் பதிஞ்சா" அப்டின்னு குசும்ப ராமாயணத்துல சொல்லியிருக்காப்ல பதிஞ்சு தள்ளிட்டா. ஒரு வழியா "பரிசல் கடித காண்டம்" முடிஞ்சுது. பதிவாளும் சந்தோஷமா இருந்தா.

அதனால, இனிமேக் கொண்டு, இந்த பகிரங்க கடுதாசி, அந்தரங்க கடுதாசி, பயங்கர கடுதாசி, மொட்ட கடுதாசி, க்ராப் வெச்ச கடுதாசி எல்லாம் போட்டு தபால் பொட்டிய ரொப்பாம நன்னா நறுக் நறுக்னு ஆளுக்கு நாலு பதிவு போடுங்கோ பாக்கலாம். ம்ம்....ஆகட்டும்...

வரட்டுமாடா பரிசல் அம்பி... ஆத்துல எல்லாத்தையும் கேட்டதா சொல்லு....

"லோகா ஸமஸ்தா ஸுகினோ பவந்து"

நானே நானா....யாரோதானா?

கொஞ்ச நாளாவே சில கேள்விகள் மனசுக்குள்ள மொளச்சுக்கிட்டெ இருக்கு. அதுவும் போன வாரம் என் அண்ணனி(சித்தப்பா பையன்)டமிருந்து வந்த மெயிலப் படிச்சதுக்கப்பறம் ரொம்ப அதிகமாயிடுச்சு. மெயிலிலிருந்த வாசகங்கள் இங்க தேவையில்ல. ஆனா என்ன ரொம்பவே யோசிக்க வெச்சிருச்சு.

அவர் இப்போ சத்தியமங்கலத்துல குடும்பத்தோட நல்லா சந்தோசமாத்தான் இருக்கார். பொறந்தது, படிச்சது எல்லாம் அங்கதான். வேலையும் பக்கத்துலயே ஒரு நல்ல இடத்துல. பக்கத்து வீட்டு பொண்ணையே காதலிச்சு கல்யாணம். காலைல டி வி எஸ் 50 ஒரு மிதி மிதிச்சு வேலைக்கு போயிட்டு, மதியம் சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வந்துட்டு, ஒரு குட்டி தூக்கமும் போட்டுட்டு மறுபடி போனா, பொழுதோட திரும்பிரலாம். அப்பறம் கோயில், பஜனை, திண்ணைன்னு அப்பிடியே பொழுது போயே போயிரும்.

ஆனா நாம ஊர்ல இருக்க புடிக்காம (கூரை...கோழி...வைகுண்டம் ?! ) அங்க இங்க சுத்தி டெல்லி போயி, படிச்ச மெக்கானிகல் இஞ்சினியரிங்குக்கு சம்பந்தமே இல்லாம விளம்பர கம்பேனில சேந்து காப்பி எழுதி, விசுவலைசஷன் அனிமேஷன்லாம் பண்ணி, அப்பிடியே ஏஜன்சிக்கு கம்ப்யூட்டர் செட் பண்றேன், நெட்வொர்க் பண்றேன்னு கிளம்பி...அடடா இந்த ஐ.டி.ல நல்ல காசாம்ல...நாம கோடுன்னு எதையோ தட்டுனா அது வேற உருப்படியா எதையோ செய்யுதே...உட்றக் கூடாது (உக்காந்த எடத்துல காசு பாக்கலாம்...நம்மள மாதிரி சோம்பேறிக்கு (ம்ம்ம்..நோகாம நோம்பிருக்கலாம்....உஸ்ஸ்...இந்த மனசாச்சிக்கு வெவஸ்தையே கிடையாது) செரியான வேலைன்னு முடிவு பண்ணி, அப்பிடி கெளம்பி தருமமிகு மெட்ராசுக்கு வந்தா...எது கேட்டாலும் தெரியாதுங்கறானே...இவன் ரொம்ப நல்லவன்னு நெனச்சு ஒரு எடத்துல வேலைக்கு சேத்திகிட்டாங்க. (அப்பறம் வருத்தப் பட்டிருப்பாங்க) எப்பிடியோ அடிச்சு புடிச்சு இப்பொ இருக்கற எடத்துக்கு வந்தோம்னு வைங்க. (அப்பாடா....சுய புராணம் பாடியாச்சா....இத எல்லாம் படிக்கறாங்க பாரு...அவுங்களைச் சொல்லணும்....ஏய்...இப்போ நீ போப்போறயா இல்லயா..)

செரி....செரி...பாயிண்ட்டுக்கு வந்துட்டம்ல.....

இப்பொ மல்லாக்க படுத்துக்கிட்டு யோசிச்சு பாத்தா....நாம (நாம எப்பவும் நம்மள நாமன்னுதான் சொல்றது) புடிச்சது என்ன, விட்டது என்ன (அட அது இல்லீங்க...நீங்க வேற) இதற்காகத்தான் ஆசைப்பட்டாயா மகேஷ் குமாரா? இவ்வளவு ஊரு ஒலகம் சுத்தி நாலு மனுச (யாருங்க இந்த நாலு பேரு? தொல்லை தாங்க முடியல..) மக்களை பாத்து பேசி பழகி.......

எந்த விதத்துலயாவது நம்மள ஒசத்தீருக்கா....நம்ம எண்ணங்கள்ள எதாவது மாத்தத்தை செஞ்சிருக்கா...கோப தாபம், பொறாமை, பொச்சரிப்பு இதெல்லாம் கொறஞ்சிருக்கா.. சகிப்புத்தன்மை ஊசி மொனயளவாச்சும் வளந்திருக்கா....கூட இருக்கிறவங்கள அனுசரிச்சு போக கத்து குடுத்திருக்கா...மத்தவங்க மனசு நோகாம பேச தெரிஞ்சிருக்கா.... பெத்தவங்க மத்தவங்க கிட்ட தன்மையா இருக்கறமா...நாலு பேருக்கு (மருக்கா...பார்ரா) நல்லது பண்ணுனமா...அட பண்ணனும்னு நெனக்கவாவது நெனச்சமா.... காசு பணம்னு இல்லாட்டியும் சுண்டு வெரல ஒசத்தி எதாவது உதவி பண்ணுனமா.... ... ... ... ... இப்பிடியெல்லாம் யோசிச்சு பாத்தா, பல கேள்விகளுக்கு "இல்ல" ங்கறதுதான் பதிலா இருக்கு. அட வருமானந்தான் அதிகப்படி வருதே.. வீடு மன காரு மத்தது மட்டன்னு.... சந்தோசமாத்தான இருக்கன்னா.... நெசமா? இதுதான் சந்தோசமா? நாமதான் இப்பிடியா...நம்மள மாதிரி சில என்.ஆர்.ஐ-ங்க (Non Reconciliable Individuals ன்னு ஒருத்தரு வெளக்கம் சொன்னாரு) கிட்ட சும்மா கல்ல போட்டு பாத்தா பத்துக்கு எட்டு பழுதில்லாம இதே பாட்டு பாடறாங்க... எங்க தப்பு? யாருகிட்ட தப்பு? ஏன் சுயநலம் பொது நலத்தை அமுக்குது? திருப்திங்கறது ஏன் கிட்ட போனா எட்ட போகுது? உள்ளூர்லயே பலருக்கு கிடைக்கிற நிறைவுங்கிறது ஏன் வெளியில கிடைக்கல? ஆனாலும் ரொம்ப நிறைவா இருக்கிற மாதிரி ஏன் காட்டிக்கிறோம்? ஈகோவுக்கு தீனி போடவா? அப்பிடி என்ன அதுக்கு அசுர பசி...அடங்கவே மாட்டேங்குது....

ரொம்ப சீரீசான பதிவா ஆயிடுச்சோ? இருக்கட்டும் இருக்கட்டும்.... நெதம் கண்ணாடில மூஞ்சிய பாக்கறோம்.... கொஞ்சம் உள்ளயும் பாப்பமேன்னு தோணுச்சு....

பி.கு: இதுல 'நாம'ங்கறது.....ம்ம்ம்..நாமதாங்க....

Monday, August 11, 2008

"லதானந்த்" கடிதமும், பரிசல்காரனும், பின்னே ஞானும்....

"லதானந்த்" கடிதம்

அய்யா,

எனக்கு இந்த தமிழ் வலைப்பூ என்பதே வெகு சமீபமாக அறிமுகமானது. உங்கள் கதைகள் ஒன்றிரண்டு விகடனில் படித்திருக்கிறேன். உங்களை வலையில் பார்த்ததில் (படித்ததில்) மகிழ்ச்சி. உங்கள் டாப் ஸ்லிப் பதிவர் சந்திப்பு பற்றி நேற்றுதான் படித்தேன். மிக ஆச்சரியமாக இருந்தது. உங்கள் ஓய்வு நேரத்தை உகந்த முறையில் செலவிடுவதை அறியும்போது அந்த ஆச்சரியம் இரு மடங்கு அதிகமானது.

அதே போல, பரிசலையும் கடந்த 2,3 வாரங்களாகத்தான் வலைப் பழக்கம். அவருடைய "தினமும் ஒரு பதிவு போடுவது எப்படி?" பதிவைப் படித்தபோதும், சில நாட்களுக்கு முன் நீங்கள் அவரை "பனியன் தொழில் திருப்தி தருகிறதா?" என்று கேட்டபோதும், அவருடைய இன்ன பிற திறமைகளை அறிய நேர்ந்தபோதும், நீங்கள் இப்போது எழுதியுள்ளது போல எனக்கும் தோன்றியது. ஆனால் மிக அண்மைக் கால பழக்கத்தை வைத்து அதை வெளிப்படையாக என்னால் கூற முடியவில்லை.

ஒரு பின்னூட்டத்தில் உங்களை தந்தை போல் பாவிப்பதாக குறிப்பிட்டிருந்தார். அந்த இடத்தில் இருந்து நீங்கள் உண்மையான அக்கறையுடன் எழுதியிருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

எனக்கும் தமிழில் பதிவிட வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டியவர் பரிசல். ஆனால் நீங்கள் குறிப்பிட்டது போல், வலைப் பதிவு ஒரு obsession ஆக மாறி பின்னர் addiction ஆகக் கூடிய அபாயம் நிறையவே இருக்கிறது. இப்போது பரிசல் எடுத்துள்ள முடிவு தற்காலிகமானதாக இருக்கலாம். Knee-jerk விளைவாக இருக்கலாம். அல்லது தெளிந்த முடிவாக இருக்கலாம். எதுவாக இருந்தாலும், அது நல்லதே.

நன்றிகள் பல.

- மஹேஷ்

@ பரிசல் : இவனெல்லாம் பேச வந்துட்டான் என்று நினைக்க வேண்டாம். உங்களுக்கு தெரியாதது அல்ல. "அறிந்தோர் அழ அழ சொல்லுவார் ; மற்றோர் சிரிக்க சிரிக்க சொல்லுவார்". தொடர்ந்து எழுதுங்கள். நேரம் கிடக்கும்போது அளவாக நிறைவாக எழுதுங்கள். உங்கள் திறமை பெரியது. உங்கள் நண்பர் வட்டம் மிகப் பெரியது. நன்றிகள் பல.

Sunday, August 10, 2008

போயும் போயும் "துக்ளக்".....?

என்னங்க செய்ய? பொழப்பு அப்பிடி ஆகிப் போச்சே !! என்னத்த செஞ்சாலும் மொத வாட்டி செரியா வரதில்லை. அப்பறம் இப்பிடி பண்ணலாமா, அப்பிடி பண்ணலாமான்னு ஓசிச்சி ஓசிச்சி மண்டை காஞ்சு போய் பழய படிக்கே திரும்பி வந்து...அட விடுங்க...அந்த கெரகமெல்லாம் இப்பொ எதுக்கு?


ஏதோ வாய்க்கு வந்தது கோதைக்கு பாட்டு...மனசுல தோணுனது மகா மொக்கைன்னு எதையாவது எழுதி வெப்போம். அப்பறம் இங்க வரவங்க பாடு...வந்ததுமில்லாம இதை படிக்கரவங்க பாடுன்னு தோணுச்சு. செரி நேரமும் நல்ல பழுத்த ராகுகாலமா இருக்கு..."இப்பொ இல்லாட்டி எப்போ.." அப்பிடின்னு பாடிக்கிட்டே ஆரம்பிச்சாச்சு. பாவம் பய புள்ளைங்களுக்கும் கும்மி அடிக்க கெரவ்ண்டு வேணுமல்ல...(ஆமாம் பெரிய கெரவ்ண்டு...அவனவன் கும்மி நகர் ஆரம்பிச்சு ப்ளாட் போட்டு வித்துக்கிட்டு இருக்கான்.....)


ஆனா மக்களே.... இதுல எந்தப்பு எதுவுமே இல்ல....எல்லா புகழும்(!) பரிசல்காரனுக்கே...