உடுமலப்பேட்டைய சுத்தி இருக்கற 18 பட்டி கெராமங்களுக்கும் பஞ்சாயத்து யூனியன் ஆபீஸ் தளி ரோட்டுல இருக்கு. அதுக்கு பின்னால ஒரு கிலோ மீட்டர் போல போனா ஒட்டுக்குளம் வரும். அதுக்கு பக்கத்துல பெரிய கவுண்டர் தோட்டம். கவுண்டர் எங்க அப்பாவோட நண்பர். எப்பல்லாம் கரும்பு வெளஞ்சு அறுக்கறாங்களோ, சக்கர மில்லுக்கு அனுப்பிச்சது போக, வெல்லம் காச்சறதுக்காக கொஞ்சம் ஒதுக்கி வெச்சுருவாங்க. ஆலை போடறாங்கன்னு ந்யூஸ் வந்தாச்சுன்னா, ஒடனே வீட்டுலேருந்து ஒரு தூக்குபோசிய நம்ம கைல குடுத்து தேன்பாகு எடுத்துட்டு வர சொல்லிடுவாங்க. ரொம்ப ஆர்வமா எங்க அண்ணன் கூட கெளம்பிருவேன். சொன்ன ஒடனே கெளம்பறதுக்கு காரணம் இருக்கு. அங்க போனா கரும்பு ஜூஸ் கெடைக்கும். அதோட பக்கத்துல வாய்க்கால் ஓரமா இருக்கற நெகாப்பழ மரத்துல ஏறி பழம் பறிச்சு திங்கலாம். கவுண்டர் வீட்டுல வேற தெனமாவும் கடுங்காப்பியும் கெடைக்கும். இதெல்லாம் நெனப்பு வந்தொடனே, நாக்கை சப்பு கொட்டிக்கிட்டு ஒரே ஓட்டம்.
இந்த வெல்லம் காச்சறதே ஒரு ரொம்ப சுவாரசியமா இருக்கும். அனில் ஆயில் இஞ்சினோட பெல்ட் போட்டு கிரஷர் ஒண்ணு ஓடிக்கிட்டே இருக்கும். சோகையை வெட்டி, கணுவெல்லாம் சீவி நீள நீளமா கரும்புகள அடுக்கி வெச்சுருப்பாங்க. ரெவ்வெண்டு கரும்பா கிரஷர்குள்ள பல்லுகளுக்கு நடுவால குடுத்தா, அப்பிடி கரகரன்னு ஜூஸ புழிஞ்சுட்டு சக்க வெளிய வரும். மறுபடி ஒருவாட்டி புழிஞ்சு எடுப்பாங்க. பெரிய கார்ப்பொரேட்டுகள்லாம் இன்னிக்கு சிறு வியாபாரிகள புழியற மாதிரின்னு வெச்சுக்கங்களேன். நம்ம போயி பக்கத்துல நின்னோம்னா கூட ஒரு எலுமிச்சம் பழம், இஞ்சி, புதினாவெல்லாம் வெச்சு ஸ்பெஷல் ஜூஸு கெடைக்கும். அந்தப் பக்கம் சாளைக்குள்ள பெரிய பெரிய (பெரியன்னா...ஒரு 8 அடி விட்டமிருக்கும்) கடாய்ங்க அடுப்புல போட்டிருப்பாங்க. இந்த புழிஞ்ச சாற பக்கிட்டுகள்ள எடுத்துக்கிட்டு போயி, அந்த கடாய்ல ஊத்தி காச்ச ஆரம்பிப்பாங்க.
சைடுல ஒரு பக்கெட்ல காட்டு வெண்டக்காச் செடியோட தண்டுகள வெட்டி தண்ணீல ஊறப்போட்டு நல்லா கலக்கி, அது கொழ கொழன்னு ஒரு கூழ் பதத்துல இருக்கும். கரும்புச் சாறு நல்லா கொதிச்சு வரும்போது இந்த கலவையையும் அதுல ஊத்தீருவாங்க. சாறுல இருக்கற அசுத்தத்த எல்லாம் இது தனியா பிரிச்சு, அப்பிடி நொர மாதிரி மேல மெதந்துக்கிட்டு வரும். அத அப்பிடியே ஒரு பெரிய அகப்பையால அள்ளி எடுத்துருவாங்க. ரெண்டு ஆளுக இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் நின்னுக்கிட்டு கொதிக்கிற சாற கலக்கிக்கிட்டே இருப்பாங்க. இன்னும் நல்லா கொதிச்சதும், ஒண்ணு ரெண்டு பாக்கெட் பொடிகள அதுல சேப்பாங்க. (அது என்ன பவுடர்கன்னு பின்னால தெரிஞ்சுது. சோடியம் ஹைட்ரோசல்பைடும், ஃபார்மல்டிஹைட் சல்ஃபாக்சிலேட்டும்) காட்டு வெண்டக்காயால எடுக்க முடியாத அசுத்தங்கள இது எடுத்துரும்.
இதுக்குள்ள அச்சுவெல்லம் போடற சட்டங்க, மண்ட வெல்லம் புடிக்கிற ஆளுங்க எல்லாம் ரெடியா இருக்கும். கொதிக்கிற சாற டின்னுல எடுத்திக்கிட்டு போயி அச்சுவெல்ல சட்டத்துல ஊத்துவாங்க. (சில சமயம் ஊத்தும்போதே அதுல பொட்டுகடலய கலந்து ஊத்தறதும் உண்டு. அது ஒரு தனி டேஸ்டா இருக்கும்.) மண்ட வெல்லம் புடிக்கிறவங்கதான் பாவம்....சுட சுட அப்பிடி திருப்பதி லட்டு புடிக்கிற மாதிரி உருட்டி உருட்டி காய வெப்பாங்க. ரொம்ப கஷ்டமான வேலை. இதயெல்லாம் ஆ..ன்னு வாய பொளந்துக்கிட்டு பாத்துக்கிட்டிருப்போம். இந்த பொடிக சேப்பாங்கன்னு சொன்னோமில்ல, அதுக்கு முன்னாடி கொஞ்சம் எடுத்து நம்ம தூக்குபோசியில ஊத்தி வெச்சுருவாங்க. (இதுக்குத்தானே போனது!)
ஆனா பாருங்க, இதுக்குள்ள நாம ஒரு 2 லிட்டர் ஜூஸு குடிச்சு, 2 டசன் அச்சு வெல்லம் சாப்ட்டு, 1 கிலோ நெகாப்பழம் தின்னு 'அது வயிறா வெள்ளாவிப் பானையா' ங்கிற மாதிரி இருக்கும். ஒருவழியா தேன்பாக எடுத்துக்கிட்டு வீட்டுக்கு கெளம்புவோம். அம்மாவுக்கும் தெரியும், இந்த வானரங்க என்னல்லாம் கூத்தடிச்சிருக்கும்னு. நம்ம ஊத்த வாய்தான் நெகாப்பழம் தின்னு தின்னு 'ஊதா' வாய் ஆகியிருக்குமே. மறுநா காப்பில நிச்சயம் 2 ஸ்பூன் வெளக்கெண்ண கலந்திருக்கும். இல்லாட்டி இந்த காயலாங்கடையயெல்லாம் கழுவி சுத்தம் பண்றது ரொம்ப கஷ்டம்.
தோட்டத்துக்கு போற வழில, தென்னந்தோப்புல சில மரங்கள்ல கள்ளுக்காக தென்னங்கைகள வெட்டி பானை சொருகி வெச்சுருப்பாங்க. அண்ணனுக்கு திடீர்னு ஒரு ஐடியா. கல்ல வீசி ஒரு பானைய ஒடச்சா என்னன்னு. ரெண்டு மூணு கல்ல விட்டெறிஞ்சு பாத்தோம். ரொம்ப ஒசரம்கறதால ஒரு கல்லும் கிட்ட கூட போகல. ஆனாலும், தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் மாதிரி எறிஞ்சுக்கிட்டே இருந்ததுல ஒரு கல்லு போயி பானைல பட்டு ஓட்டை போட்டிருச்சு. ஆனா சத்தம் நல்லா கேட்டிருச்சு. அந்தப்பக்கம் தேங்கா உரிச்சுக்கிட்டு இருந்தவங்க பாத்துட்டாங்க. ஒடியாந்து ரெண்டு பேரையும் புடிச்சுட்டாங்க. கள்ளு 6 ருவா, பான ஒண்ணார் ருவான்னு கணக்குப் போட்டு ஏழார் ருவா கேட்டு மிரட்றாங்க. நாம வேற சத்தமா அழ ஆரம்பிக்க, அந்தப் பக்கமா சைக்கிள்ள வந்த இன்னொரு கவுண்டர் (அவுரும் அப்பாவுக்கு நண்பர்தான்...உரக்கடை வெச்சுருக்காரு) பாத்துட்டு, அவுங்க கிட்ட சொல்லி விடுவிச்சு கூட்டிக்கிட்டு போயி அவுங்க வீட்டுல காப்பியெல்லாம் குடுத்து அனுப்பிச்சாரு. ஆனா நானும் அண்ணனும் நடந்தத வீட்ல சொல்லல. உரக்கடை கவுண்டரும் அப்பா கிட்ட சொல்லவே இல்ல.
பெரிய கவுண்டர் தோட்டத்துல ஒரு பெரிய கெணறு இருக்கு. அதுல அடிச்ச கூத்துக.... சொல்றேன் சொல்றேன்....
இன்னும் மொளைப்போம்...
அன்னச்சத்திரம் 2025
4 weeks ago


