Friday, September 12, 2008

!!! இடைவேளை !!!

"இடைல" வேலை எல்லாம் இல்லீங்க, இடை இடையே வேலை, வேலைக்கு இடையே விடுமுறை.

இந்தியா பயணம். திரும்பி வர வரைக்கும் கடை லீவு. சந்தோசமா இருங்க. மூணே வாரந்தான். மறுபடி தொந்தரவு குடுக்க ஆரம்பிச்சுடுவேன். சொல்ல முடியாது. அப்பப்ப ஜன்னல் மட்டும் தொறந்து யாவாரம் நடந்தாலும் நடக்கும்.

எல்லாரும் வருத்தப்படற மாதிரியே அப்புராணியா மூஞ்சிய வெச்சுக்கிட்டிருக்கீங்களே... எப்பிடிங்க அது? செரி செரி அங்கிட்டு போனதும் மூஞ்சிய செரி பண்ணிக்கிடலாம்.

இப்பத்திக்கி திட்டம் முதல்ல ஸ்ரீநகர். [அண்ணன் விமானப் படைல விங் கமாண்டரா இருக்காரு] பொறவு டெல்லி, சென்னை, மைசூர், கோவை, உடுமலை, திருப்பூர் எல்லாம் போகறதா இருக்கு. "திருப்பூரா? இது வேறயா... ஊரு விட்டு ஊரு வந்து... விட மாட்டாங்களே"ன்னு பரிசலார் சொல்றது கேக்குது. விடறதாயில்ல. சிங்கை பதிவர்களுக்கு விசேஷமா எதாவது பரிசு குடுத்து அனுப்புவாரு. பொறுப்பா கொண்டாந்து சேக்கோணும். வெயிலான் வேற 1 டசன் T-ஷர்ட் குடுப்பாரு. அதை வேற வாங்கிகிடணும். எவ்வளவு பொறுப்புக....

திரும்பி வந்ததும் "இப்பொ நான் என்ன செய்ய?"ன்னு யாரையும் கேக்கவே வேணாம். "பயணப்பதிவு"ன்னு ஒரு தொடர் போடலாம். "திருப்பூரில் ஒரு திடீர் பதிவர் சந்திப்பு"ன்னு ஃபோட்டோவெல்லாம் [முதுகு மட்டும் இல்லாம முழுசாவே] போட்டு ஒரு பதிவு போடலாம். "சென்னையில் அப்துல்லாவுடன் ஒரு கலந்துரையாடல்" போடலாம். [இரவுல பீர் குடிக்கிறாரு. பகல்ல லேட்டா எழுந்திருக்கறாரு. இதுக்கு நடுவுல ஸ்டெடியா இருக்கிற ஒரு சில நிமிசங்களுக்குள்ள சந்திச்சு பேட்டிய முடிக்கணும்] அப்துல்லா அய்யா மூலமா மற்ற பதிவர்களையும் சந்திக்க முடிஞ்சா அது ஒரு பதிவா போடலாம். [அடடா... ஐடியாவெல்லாம் அவுட் பண்ணிட்டோமோ...] பரவால்ல... ஒரு மாசம் ஜாலியா [நமக்கு ஜாலி... மத்தவங்க காலி] பதிவு போட்டுட்டே இருக்கலாம். அதுக்குள்ள அடுத்த சிங்கை பதிவர் மாநாடு வந்துரும். மொத முறையா போறோம்கிறதால நாந்தான் Minutes of Meeting போடுவேன்னு போட்டுடலாம். [இடைவேளைன்னு சொல்லீட்டு ஒரு முழு நீள ('ள'கரம் ... நன்றி: narsim) படம் ஓட்டுரானே இவனெல்லாம் பதிவு போடலன்னு யார் அழுதது?]

இதுக்கெல்லாம் நடுவுல சென்னைல ஒரு பரிச்ச வேற எழுதி பாஸ் பண்ணியாகணும். எல்லாரும் அதுக்கு ஒரு நிமிசம் பிரார்த்தனை பண்ணுங்க. பண்ணீட்டீங்களா... ரொம்ப நன்றி...

செரி... வரட்டுமா? உடம்ப பாத்துக்கிடுங்க... வேளா வேளக்கி பதிவு போட்டுருங்க... நான் பின்னூட்டம் போடலியேன்னு வருத்தப்படாதீங்க... [ஐயோ... தாங்கலடா சாமி....]

டாட்டா...

[ Chorus : " BON VOYAGE " ]

நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி... [ ஃப்ளைட்டு டேக் ஆஃப் ஆயிருச்சாமா :) ]

Wednesday, September 10, 2008

அவனோடெ ராவுகள்...3

முந்தைய பதிவுகள் ...1 ...2

நீங்க இதுவரைக்கும் போகவே போகாத இடத்துல நீங்க உங்க வாழ்க்கையோட ஒரு பகுதிய கழிச்ச மாதிரியா உணர்ந்திருக்கீங்களா? நீங்க இதுவரைக்கும் உணராத சில உணர்வுகளை அனுபவிச்சுருக்கீங்களா? ரெண்டுமே இந்த புத்தகத்தை படிச்சா கிடைக்கும்.


The Kite Runner
Author : Khaled Hosseini

இந்த புத்தகத்தைப் பத்தி யாரும் சொல்லாத ஒண்ணை நான் சொல்லிட முடியாது. அந்த அளவுக்கு நிறைய பேரு எழுதித் தீர்த்துட்டாங்க. இரண்டு சிறு வயது நண்பர்களுக்கிடையேயான உறவையும், உணர்வுகளையும் பத்தின கதை. காலீத் ஹொஸெய்னியோட முதல் கதைன்னு கற்பூரம் அணைச்சு சத்தியம் பண்ணினாக் கூட நம்ப முடியாது. மனித உணர்வுகள அவ்வளவு அற்புதமா எழுத்துல கொண்டு வந்திருக்காரு.

போர்னாலயும் தீவிரவாதத்துனாலயும் சீரழிஞ்சுக்கிட்டுருக்கற ஆப்கானிஸ்தான்ல நடக்கற கதை. அமீர் ஒரு பணக்கார வீட்டு பையன். ஹாஸன் அவுங்க வீட்டுல வேலைக்காரனோட பையன். கதைல பல அடுக்குகள் இருக்கற மாதிரி தோணலாம். ரெண்டு சிறுவர்களுக்கு நடுவுல இருக்கற நட்பு ஒரு பக்கம், உலகத்தால புறக்கணிக்கப்பட்ட, காலத்தின் கோலத்தால சின்னாபின்னமான ஒரு நாடு மறுபுறம். அப்பாவோட இருவேறு முகங்களை ஏத்துக்கமுடியாத, கோழைத்தனத்தோட போராடுற, குற்ற உணர்ச்சியால மருகுகிற அமீர்ங்கற பணக்கார சிறுவனோட போராட்டம் இன்னொரு பக்கம்.

ஆனா எனக்கென்னமோ, நம்ம எல்லாருக்கும் பொதுவான, சுலபமா நம்மளோட தொடர்பு படுத்திக்க கூடிய, ஆழமான 2 உணர்வுகளை பத்தின கதை மாதிரி தோணுது. கதை நடந்த இடத்துல இருந்து நேர்ல அனுபவிச்ச மாதிரி நம்ம உணர முடியறதுதான் இந்த கதையோட வெற்றின்னு நான் நினைக்கிறேன்.

ஓண்ணு, பழய நினைவுகள். அதுல எதுவுமே சரியாக இல்லாட்டாக் கூட. ஒரே ஆத்துல மறு முறை இறங்க முடியாதுன்னு சொல்லுவாங்க. (One cannot step into the same river) காலம்கற சக்தி பழச முழுசாவோ, பாதியாவோ அழிச்சுடுது. அதுனாலதானோ என்னவோ, நாம் படிச்ச பள்ளிக்கு இன்னிக்கு போனா, கட்டடங்கள் அதே மாதிரி அதே இடத்துல இருந்தாக் கூட, அந்த பழய நினைவுகளை அதே வீரியத்தோட திரும்ப அனுபவிக்க முடியாம போகுது. அதுனாலதான், அமீர் அமெரிக்காவுக்கு போனலும் தன் நண்பனோட பட்டம் விடுற சுகத்தை இழந்து தவிக்கறதை நாமும் உணர முடியுது. அதே மாதிரி, அமீர் காபூலுக்கு திரும்ப வந்து அதோட இன்றைய கோலத்த பாத்து சகிக்க முடியாம மருகறதையும் பார்க்கும்போது எப்பிடி ஆறுதல் சொல்றதுன்னு தவிக்கிறோம்.

ரெண்டாவது குற்ற உணர்ச்சி. நம்மள்ல யாருக்கு இல்லை? தன்னோட உயிர் நண்பனை செய்யாத ஒரு குற்றத்துக்காக தண்டனை அனுபவிக்க வெச்சதுக்கக அமீர் வாழ்க்கை பூராவும், அதை விட்டு வெளிய வர போராடுறான். அது முடியுமா? அமீரோட அப்பா பிறகு ஏதோ காரணத்துனால அமெரிக்கவுக்கு குடும்பத்தோட இடம் பெயர்ந்தாலும், அமீருக்கு நல்ல கல்வியும், நல்ல வாழ்க்கையும் அமைஞ்சாலும், கண் முன்னால நண்பனை எல்லாரும் திருடன்னு ஏசுரதப் பாத்தப்பறமும் தான் ஒண்ணும் செய்ய முடியாம இருந்தத நினைச்சு வருந்தாத நாளே இல்லை. இத்தனைக்கும் அமீர் வேற ஒருத்தனால பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணுக்கு மறு வாழ்வு கொடுக்கறான். ஒரு ஆப்கானிக்கு, இது ஒரு உயர்ந்த தியாகம். அப்பாவோட மறு புறத்தையும் அவர் செய்த, செய்யற கூடாத செயல்களையும் பார்த்து ரொம்பவே வெறுத்துப் போறான்.

பின்னால, தன் நண்பன் ஹாஸனின் மகனோட காபூலுக்கு திரும்ப வரும்போது, அமீருக்கு கிடைச்ச ஒரு சுதந்திரத்தை நாமும் கூடவே முழுமையா உணரலாம். சுமையில்லாத, லேசான ஒரு மனச விட சுதந்திரம் வேற என்ன இருக்க முடியும்னு கேக்கத் தோணுது. அமீர், அந்த சின்னப் பையனோட பட்டத்தை துரத்திக்கிட்டு ஓடும்போது, தொலைந்து போன எல்லாத்தையும் மீட்டுக்க ஒரு வழி கிடைச்சுட்ட மாதிரி தெரியுது.

இதை திரைப்படமாப் பாத்தபோது இன்னும் அழுத்தமா என்னை பாதிச்சுது. முடிஞ்சா இந்த கதைய புத்தகமாகவோ, படமாகவோ பார்க்க முயற்சி பண்ணுங்க. இது மாதிரி நம்ம உணர்வுகளை முழுமையா ஆளுகிற கதைகள் ரொம்ப குறைவு.

Monday, September 8, 2008

வெள்ளிங்கிரி

என்னக்கிம் போல சூரியன் கெளக்க மொளச்சுருச்சு, கோளி கூவாமயெ. வெள்ளிங்கிரி மனசு மட்டும் இருளோன்னு இருக்கு. நேத்து வெளக்கு வெக்கைல காந்திராசு வந்து கத்தீட்டுப் போனது, அணையப்போற சிம்னி வெளக்காட்டம் மனசுக்குள்ள மினுக்கீட்டே இருக்கு. வேலை ஒண்ணும் ஓடல. காந்திராசயும் தப்பு சொல்ல முடியாது. அவன் வட்டிக்குப் பணம் குடுக்கறவன். தருமம் பாத்தா அவன்ற கைக்காசு போயிரும். வெள்ளிங்கிரி நெலம அவனுக்கும் தெரியாம இல்ல. இப்பொத்தான் கால் செரியாயிட்டு வருது. குச்சி இல்லாம நடக்க ஆரம்பிச்சுருக்கான். இனிமேத்தான் ரெண்டு பக்கம் சோலிக்குப் போய் நாலு காசு பாக்கணும். ரூவா 550 குடுத்கு மாசம் எட்டாச்சு. வட்டியே குடுக்க முடியாதவன் அசலுக்கு எங்கிட்டு போவான். இம்புட்டு நாளு கந்திராசு சும்மா இருந்ததே பெரிய விசயம். அவுனுக்கு என்ன நெருக்கடியோ, நேத்து வந்து அந்த கத்து கத்தித் தீத்துட்டான். வெள்ளிங்கிரிக்கும் அவன் சம்சாரத்துக்கும், பய செந்திலுக்கும் ரொம்ப கஸ்டமாயிருச்சு.

'அப்பா...நா இஸ்கோல விட்டு நின்னுக்கிடறேன்... குருசாமி கோட மண்டிக்குப் போயி மூட்ட தூக்குறேன் இல்லாட்டி செக்குல போயி புண்ணாக்காச்சும் அள்ளிப் போட்டுட்டு வாரேன்... உன்னியப் பாக்க நெம்ப சங்கட்டமா இருக்கு'

'ம்க்கும்ம்ம்...பெரிய மனுசன் சொல்லீட்டான்... போடா போய் படிப்பப் பாரு ஒளுங்கா... வேலைக்குப் போறானாமா... மருக்கா இதே மாரி சொன்னா வெளாசிப் போடுவேன்...ஆமா...'

'நீ சும்மா இரு கண்ணு.... எல்லாம் உங்கய்யனும் நானும் பாத்துக்குவோம்... போய் அடுத்த வாரம் பரிச்சக்கி படி...'

செந்திலுக்கு வயசு 12 ஆகுது... நல்லாப் படிச்சு இப்பொ ஏளாப்புல இருக்கான். வெள்ளிங்கிரி ஒரு சாதாரண மரமேறிதான். ஆனா தொழில்ல ரொம்ப ஊக்கமான ஆளு. ஏறுடான்னு சொல்லீட்டா போதும். பொழுதுக்குள்ள 70 தென்ன மரமாவது ஏறி, காய் பறிச்சுப் போட்டு, காஞ்ச மட்டயெல்லம் வெட்டி, வண்டுக எடுது, பன்னாடயெல்லாம் சுத்தம் பண்ணி, நல்லா கைகள விரிச்சு விட்டு, மருந்து வெச்சுன்னு சுத்தமா பண்ணான்னா மரமே பாக்க கெராப்பு வெட்டி விட்ட மாதிரி பளிச்சுன்னு இருக்கும். காத்தடிக்கைல தோப்புல சத்தமே அம்புட்டு சொகமா இருக்கும். தோபுக்காரவிகள்லாம் வெள்ளிங்கிரிதான் வாரோணுமுன்னு ரெண்டு நாள் கூட காத்திருப்பாங்க. அதும் மொத வாட்டி காய் எறக்கணும்னா வெள்ளிங்கிரிதான். ரொம்ப கைராசியான ஆளு.

மரமேற வாய்ப்பில்லாத காலத்துல நாகம்மாளக் கூட்டீட்டு வயல்ல எலி புடிக்கப் போவான். அவென் மூக்கு இருக்குதே, வயல்ல எறங்கினதுமே வளைக எங்கெங்க இருக்குதுன்னு ஒரு நெப்பு தெரிஞ்சுரும். கடப்பாரையப் போட்டான்ன அங்க வளை இருக்கும், நாலு எலியாவது இருக்கும். இவன் இங்கிட்டு தோண்டி வளையோட வாய தொறக்கரதுக்குள்ள நாகம்மா அங்கிட்டு வளையோட மறு வாசல்ல சாக்குப் பையக் கட்டி, கல்லுக வெச்சு, கவுறோட ரெடியா இருப்பா. இவன் வளையோட வாய்ல கொஞ்சம் வக்கிபில்லு போட்டு கொளுத்தி விட்டு, பொக வளைக்குள்ள போறாப்டி விசிறி விடுவான். எலியெல்லாம் மூச்சு முட்டிப் போயி ம்று வாசல் வழியா வெளிய வரும். கணக்கா சாக்குகுள்ளார போய் மாட்டிக்கும். அம்புட்டுதேன். சாக்கு வாயக் கட்டிர வேண்டியதுதேன். கொறஞ்சது ஒரு 150 எலியாச்சும் புடிச்சரலாம். வயல் எலின்ன்ன சும்மா பெருச்சாளி கணக்கா திமுக்குன்னு இருக்கும். ஒண்ணொண்ணும் முக்காக் கிலோவாச்சும் இருக்கும். அமராவதி மொதலப்பண்ணைக்கி கொண்டு போனா எலிக்கு மூணு ருவான்னு சொளயா 500 ரூவாக் கிட்ட கெடைக்கும். ஒரு வாரம் ஓட்டீரலாம்.

ஆனா ஆறு மாசம் முந்தி, மரமேறி சுத்தம் பண்ணைல, மேல மட்டக்குள்ள இருந்து சடக்குன்னு ஒரு பாம்பு வர, இவன் கொஞ்சம் சுதாரிக்கறதுக்குள்ள கால் கவுறு நழுவ, பிடிமானம் போயி 4 மாடி ஒசரத்துல இருந்து பொத்துனு விழுந்தான். இடுப்புக் கிட்ட நல்ல அடி. எடது மொளங்காலுக்குக் கீழ எலும்பு முறிஞ்சு போச்சு. ஆளத் தூக்கி நிறுத்தவே அர மணி நெரமாச்சு. நிக்கவே முடியல. இடுப்பு கடுக்குது. காலு வேற வீங்கிகிட்டே போகுது. அப்பிடியே அள்ளி வண்டில போட்டு ஏரிப்பாளயம் கொண்டு போய் எண்ணக் கட்டு போடறவிக வீட்ல எறக்கீட்டாங்க. புத்தூர் எண்ணக் கட்டு கட்றது கொஞ்சம் மொரட்டு வைத்தியந்தான். பல்லக் கடிச்சுட்டு வலியப் பொறுத்துக்கிட்டன் வெள்ளிங்கிரி. அதுக்கப்பறம் மூணு மாசம் படுத்த கெடையாவே இருந்தான். ஏதோ நாகம்மா தீக்குச்சி அடுக்கறது, நாலு வீட்ல ஏனங்கழுவறதுன்னு சமாளிச்சுக்கிடிருந்தா. இந்த சமயத்துலதா காந்திராசு கிட்ட கொஞ்சம் பொரட்ட வேண்டியதாப் போச்சு. அப்பறம் வெள்ளிங்கிரி கொஞ்சம் கொஞ்சமா தேறி, ரெண்டு மாசம் போல குச்சி வெச்சு நடந்து இப்பொதான் ஒரு மாதிரியா தாங்கித் தாங்கி நடக்கறான். நடையே மாறிப் போச்சு. பழய மாதிரி மரமேற முடியுமான்னெல்லம் சந்தேகந்தான்.

இப்பொ காந்திராசு வேற சத்தம் போட்டதுல மனசொடஞ்சு போயிட்டான். திருப்பிக் குடுக்க ஒணத்தி இல்லாதவன் என்ன இதுக்கு கை நீட்டி வாங்கோணும்னு பேசீட்டான். அந்த வார்த்தை சீரணமே ஆகல. திடீர்னு ஒரு ஓசன வந்துச்சு. மறுக்கா எலி புடிச்சா என்ன? ஆனா நாகம்மாள இழுத்துக்கிட்டு காடு மேடெல்லாம் அலய முடியாது. மூணு நாள்ல பணஞ் சேக்கோணும். எப்பிடி பண்ணலாம்னு இருக்கைலதான் இந்த ஓசனை.

கரண்ட் ஆபீஸ் தாண்டி மேடேறி அங்கிட்டு எறங்கினா எப்சி# குடோனு. 11 குடோனுக இருக்கு அங்க. அல்லாத்துலயும் கெவுர்மெண்டு அரிசி, பருப்புன்னு எதயாச்சும் மூட்ட மூட்டயா சேத்து வெச்சுருக்காங்க. குடோன பாத்துகிடற கனகானும், நடையனும் வெள்ளிங்கிரிக்கு பழக்கமானவிகதான். வாரம் ஒருக்க மாட்டாஸ்பத்திரில குடுக்கற டபிள் ஸ்டாங் மருந்த அரிசி மாவுல வெச்சு உருட்டி உருட்டி 11 குடோன்லயும் அங்கங்க வெப்பாங்க. ராத்திரிக்கி வெச்சுட்டு போனா காலைல பாக்கும்போது எப்பிடியும் ஒரு 100 எலியாச்சும் செத்துக் கெடக்கும். மருந்து வெச்சு செத்த எலின்னா மொதலப்பண்ணைல எடுக்க மாட்டாங்க. மொதலைகளுக்கு ஒண்ணு கிடக்க ஓன்ணு ஆயிருச்ச்சுன்னா.... வெள்ளிங்கிரியும் இதுநா வரைக்கும் இந்த மாதிரி நெனச்சதே இல்ல. இப்பொ கையாலகாத்தனத்துனாலயும், காந்திராசு நாக்கு மேல பல்லப் போட்டு பேசிட்டதாலயும் வேற வழியில்லாம நடையன் கிட்டப் போயி பேசி ராத்திரிக்கு மருந்து வெச்சுட்டு வந்தான். மக்கா நா காலைல பத்து மணிக்கெல்லாம் குடோனுக்குப் போயிட்டான். எரணூரு எலி தேறுச்சு. நேரா அமராவதிக்கு பத்தா நெம்பர் பஸ்ல ஏறிட்டான். இவன் அடிக்கடி வாரவந்தானேன்னு பாரஸ்ட் ஆபீசர் தண்டபாணியும் 3 ருவா மேனிக்கி கணக்குப் போட்டு 600 ருவா குடுத்து வவுச்சர் வாங்கிகிட்டாரு. கைநாட்டு வெக்கைல வெள்ளிங்கிரிக்கு நடுக்கம்.

'என்ரா கை இந்த நடுங்கு நடுங்குது? மேலுக்கு சொகமில்லையா? இன்னம் கால் சரியாகலையா?'

'அதெல்லம் இல்லிங்கய்யா... மூட்டய தூக்கீட்டு வந்ததுல கொஞ்சம் சோந்து போச்சு...அதான்...'

'இருக்கும்.. இருக்கும்... நீயும் பாவம் 6 மாசமா படுத்துட்டியா? இரு டீ சாப்ட்டு போவியாமா?... டேய் தம்பி ரெண்டு பால்டீ சொல்லு...'

டீயக் குடிச்சுபுட்டு கெளம்பீட்டான். வார வழியெல்லாம் எதயோ ஒசிச்சுக்கிட்டே வந்தான். சந்தப்பேட்ட கிட்ட எறங்குனதும் நேரா மண்டிக்குப் போயி காந்திராசப் பாத்து 600 ருவாயாயும் குடுத்துப்போட்டு ரசீது வாங்கிகிட்டான். அவுனும் பெரிய மனசு பண்ணி, வட்டியக் கொறச்சுக் கணக்கை பைசல் பண்ணுனது வெள்ளிங்கிரிக்கு கொஞ்சம் நிம்மதியா இருந்துது.

'தப்ப நெனச்சுகிடாத வெள்ளிங்கிரி, எனக்கு இங்கிட்டு கொஞ்சம் மொடை...அதான் கொஞ்சம் வெரசாப் பேசீட்டேன்... நாகம்மா கிட்டயும் சொல்லீரு...'

'பரவாயில்லண்ணே... என் நெலம இப்பிடி ஆகிப் போச்சு...'

'செரி செரி.... பணம் வேணுமின்னா அடுத்தா வாரங் கேளு...தாரேன்...'

'செரிங்கண்ணே...தேவைன்னா கேக்குறேன்...'

வீட்டுக்கு வந்து நாகம்மா கிட்டடும், செந்திலு கிட்டயும் கடன் பைசல் பண்ணுனத சொன்னான். ஆனா எப்பிடின்னு சொல்லல. வெகு நாளைக்கப்பறம் மூணு பேரும் ஒரு நிம்மதியோட சாப்ட்டு படுத்தாங்க. ஆனா மனசு ஒளச்சலாவே இருந்துது வெள்ளிங்கிரிக்கு. ராத்திரி ஒரு மணி இருக்கும். மொள்ள எந்திரிச்சான். கதவு நெலைக்கு மேல சொருகி வெச்சுருந்த பொட்டலத்துல எப்சி குடோன்ல இருந்து கொண்டாந்த மருந்து ஒரு நெல்லிக்கா அளவுக்கு இருந்துச்சு.

#எப்சி குடோன் - - FCI (Food Corporation of India) godown

Friday, September 5, 2008

அவனோடெ ராவுகள்...2

முந்தய பதிவு ...1

இப்பொ இங்க அறிமுகப்படுத்தப் போற புத்தகம் ரொம்பவே பிரபலமான புத்தகம். உங்கள்ல நிறய பேரு படிச்சுருப்பீங்கன்னு நெனக்கறேன். பெஸ்ட் செல்லர்ஸ் பட்டியல்ல மொதப் பத்துக்குள்ள எடம் புடிச்ச புத்தகம்.

Jonathan Livingston Seagull
Author : Richard Bach






ஜொனாதன் லிவிங்ஸ்டன் ஒரு கடல் நாரை. ஸீ கல் -க்கு தமிழ் இதுதான்னு நினைக்கறேன். தன் கூட்டத்துல இருக்கற மத்த பறவைகள விட ரொம்ப வித்தியாசமானது. மத்ததுகள்லாம் மீன்பிடி படகுக கரைக்கு வந்தொடனே பறந்தடிச்சுக்கிட்டுப் போய் சிந்துனது செதறுனதெல்லம் திங்கணும், வயித்த ரொப்பணும்னு இருக்கறப்போ, ஜொனாதன் மட்டும் வேற மாதிரி யோசிக்கும். இதுதான் வாழ்க்கையா? இதுக்காகத்தான் நாம பொறந்துருக்கமா? அப்பிடி இருக்கவே முடியாது... நமக்கு பறக்கற சக்தி இருக்கு... அதை நல்லா கத்துக்கணும்... உலகத்துலயே மிகச் சிறந்த, மிக வேகமா, மிகுந்த ஆளுமையோட பறக்க கூடிய கடல் நாரையாகணும்னு தீராத ஆசை. அதுக்காக ஒரு நாளைக்கு பல மணி நேரம் தன்னந் தனியா உயரப் போய் பறந்து பழகும். யோசிச்சு யோசிச்சு பறந்து பறந்து பழகி பழகி 215 கி.மீ. வேகத்துல பறக்கக் கத்துக்குது. ரெக்கய எப்பிடி மடக்கி வெச்சுக்கணும், எப்பொ விரிக்கணும், எவ்வளவு விரிக்கணும்கிறதெல்லாம் நிறய தடவ விழுந்து, அடிபட்டு, உயிரே போற மாதிரியான வலிகள உணர்ந்து, தன்னுடைய எல்லைகள தெரிஞ்சு கொஞ்சம் கொஞ்சமா விடா முயற்சியோட பழகி ஓரளவுக்கு தன்னுடைய கனவ நனவாக்குது. ஜொனாதன் இந்த மாதிரி இருக்கறது அதனுடைய அம்மா அப்பவுக்குக் கூட சம்மதமில்ல. அந்த்க் கூட்டத்தோட தல ஜொனாதன பஞ்சாயத்துல நிக்க வெச்சு 'விசாரணை' பண்ணி கூட்டத்தை விட்டு ஒதுக்கி வெச்சுடுது.

ஆனா ஜொனாதன் அதப் பத்தி கவலப்படாம தன்னுடைய பயிற்சிய வேற எடத்துக்குப் போய் தொடருது. ஒரு நாள் அங்க வேற சில கடல் நாரைகள ஜொனாதன விடவும் வேகமா அழகா பறந்துக்கிட்டுருக்கறத பாக்குது. அங்க சல்லிவன்கிற நாரைய சந்திக்குது. அப்பறம்தான் தெரியுது அங்க இருக்கற நாரைகளெல்லாம் ஜொனாதன மாதிரியே பறக்க ஆசைப்பட்டு கூட்டத்துல இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டதுகன்னு. அங்க ஜொனாதன் ரொம்ப சீக்கிரமாவே இன்னும் நெறய கத்துக்குது.
ஒரு நாள் இப்பிடி பறந்துக்கிட்டிருக்கும்போது இன்னொரு மூத்த நாரை 'சியாங்'க சந்திக்குது. சியாங் மணிக்கு 300 கி.மீ வேகத்துல ரொம்ப சுலபமா பறக்கறதயும், கண நேரத்துல பல மைல்கள் தாண்டி போய் வரதயும் பாத்து ஆச்சரியப்பட்டுப் போய் அதுகிட்ட கத்துக்க ஆரம்பிக்குது. இது எப்பிடி சாத்தியம்னு ஜொனாதன் கேக்கறதுக்கு சியாங் சொல்லுது "நினைவோட வேகத்துல எந்த இடத்துக்கு வேணாலும் பறக்கறதுக்கு, மொதல்ல அந்த இடத்துக்கு நாம வந்து சேந்தாச்சுன்னு நம்பணும்". இது புரிய கொஞ்சம் கஷ்டமா இருக்கலாம். ஆனா நம்பிக்கை ஒரு முக்கியமான சக்தின்னு உணர வெக்குது.

இப்பிடி சியாங் கிட்ட நெறய கத்துக்கும்போது சியாங் சொல்ற மாதிரி அன்புதான் எல்லத்தையும் விட பெரியது, நெறய கத்துக்க கத்துக்க, மனமுதிர்ச்சி கிடச்சு, எல்லாத்தயும் விட அன்பு மேலோங்கி நிக்கும்னு புரிஞ்சுக்குது. ஒரு நாள் தன்னோட கூட்டத்துக்கு திரும்பி போய் தன்னுடைய அனுபவத்தையெல்லம் பகிர்ந்துக்கணும், மத்த நாரைகளுக்கும் இப்பிடி உயர வேகமா பறக்கறதையும், அன்போட வலிமையையும் புரிய வெக்கணும்னு தோணுது, சியாங்க் கிட்டயும், சல்லிவன் கிட்டயும் சொல்லீட்டு திரும்புது. ஆனா மத்த நாரைக ஜொனாதன கூட்டத்துல சேத்திக்காம மறுபடி வெரட்டி விட்டுடுதுக. ஆனாலும் ஜொனாதன் கவலப் படாம பறக்கறதுல ஆர்வமிருக்கற ஒரு சில நாரைகள கூட்டிக்கிட்டு போய் தான் கத்துக்கிட்டத எல்லாம் பொறுமயா சொல்லிக் குடுக்குது. வெறுமனே சாப்பிட்டு உயிர் வாழரத விட ஒரு ரெக்கயோட இந்த முனயிலிருந்து மறு ரெக்கயோட அந்த முன வரைக்கும் வெறும் உடம்பு இல்ல, எண்ணங்கள். ஒரு நாரைக்கு இருக்கிற அளவில்லாத சுதந்திரம் பறக்கறது. அத முழுமையா அதனுடைய எல்லை வரைக்கும் கத்துகணும். முடிவுல நம்முடைய திறமைகள் அளவற்றதுன்னு தெரிஞ்சு அதுல ஒரு புரிதல் வரும்போது அளவில்லாத அன்பும் மன்னிக்கிற தன்மையும், இயற்கையோட இணையில்லாத சக்திக்கு முன்னாடி நாம ஒண்ணுமேயில்லங்கற விழிப்புணர்வும் வரும்கிறது ஜொனாதனோட செய்தி. ஜொனாதன் அடுத்த பயணத்த தொடங்குது.

இதுல ஜொனாதன்கிறது வேற யாரும் இல்ல. நாமதான். நம்முடைய திறமையோட எல்லைகள் நமக்குத் தெரியுமா? யோசிச்சுப் பாருங்க. நம்ம வாழ்க்கைல வரப்போற சல்லிவன் யாரு? சியாங் யாரு? நாம அவங்கள சந்திச்சுட்டோமா இல்ல இனிமேத்தானா? கத்துக்க நாம தயாரா? மத்தவங்களுக்கு கத்துக் குடுக்கவும் தயாரா? நாம போக வேண்டிய எடத்துக்கு போய் சேந்தாச்சுன்னு நம்மால தீர்மானமா நெனைக்க முடியுமா? எவ்வளவு கேள்விக.

இந்த புத்தகம் வெறும் 20 பக்கந்தான். மிஞ்சிப் போனா 1 மணி நேரத்துல படிச்சு முடிச்சுரலாம். ஆனா சொல்லியிருக்கற செய்தி.......? அத புரிஞ்சுக்க ஒரு சென்மம் போதாது.

புத்தகத்தோட வரி வடிவத்த மட்டும் படிக்க இங்க க்ளிக் பண்ணுங்க. படிச்சுட்டு முடிஞ்சா இதுல ஒரு பின்னூட்டம் போடுங்க.

Wednesday, September 3, 2008

மொளச்சு வரும்போது...3

பழய பதிவுக இங்க ...1 ...2

பெரிய கவுண்டர் வீட்டுல கெணறு இருக்குன்னு சொன்னொமில்ல... அது கூட கவுண்டர் மனசு மாதிரியே ரொம்ப பெருசு. ரொம்ப ஆழம் கூட. ஒரு 50 அடி ஆழம் இருக்கும். வெய்ய காலத்துல 30 அடி கீழ தண்ணி இருக்கும். மழக்காலத்துலயும், பக்கத்துல இருக்கற ஒட்டுக்கொளத்துக்கு தண்ணி வரத்து (திருமூர்த்தி மலையிலேருந்து உடுமலை வாய்க்கால் வழியா) அதிகமா இருக்கும்போதும், ஒரு ரெண்டு மூணு அடி கீழயே தண்ணிய பாக்கலாம். இப்பிடி தண்ணி மட்டம் மேல கீழ இருக்கும்கறதால மோட்டார் பம்புக்காக கெணத்துக்குள்ள மூணு நாலு இடத்துல கான்க்ரீட் 'பெட்' போட்டுருக்கும். அப்பப்ப பம்ப்பை மாத்தி மாத்தி வெச்சுக்குவாங்க. உள் செவுரு சைடால படிக மாதிரி வெட்டி வெச்சுருக்கும். அப்பிடி அங்கங்க வளந்துருக்கற செடிகள புடிச்சுக்கிட்டே மெள்ள எறங்கணும்.

இந்த எடத்துல எங்க அப்பாவைப் பத்தி கொஞ்சம் தெரிஞ்சுக்கணும். அவுரு மிலிட்டரியில இருந்தபோதே பெரிய நீச்சல் வீரர். பின்னால சென்னை ஐ.ஐ.டி.ல நீச்சல் ப்யிற்சியாளராவும் இருந்தாரு. அதோட மாநில அளவுல 4 முறை டைவிங் சாம்பியன் வேற. அதுனால ஊர்ல பல பேர் அவரை இந்த கெணத்துக்கு கூட்டிட்டு வந்து நீச்சல் கத்து தர சொல்லுவாங்க. அப்போ என்னை, அண்ணனை, அண்ணனோட ஃப்ரெண்டுகளயெல்லாமும் கூட்டிக்கிட்டு போவாரு. ரொம்ப ஸ்ட்ரிக்ட் வாத்தியாரு. நமக்கா தண்ணிய பாத்தாலே ஒடம்பு மரக்கட்ட மாதிரி வெறச்சுக்கும். அப்பறம் எங்க நீச்சல்? அப்பாவோட கூச்சல்தான் அதிகமா இருக்கும். அண்ணனும், ஃப்ரெண்டுகளும் திட்டு வாங்க பயந்துக்கிட்டே ஒழுங்கா கத்துக்கிட்டாங்க. நாம சிங்கம்ல? இதுக்கெல்லாம் பயந்துருவோமா? நல்லா 'கடப்பாரை' நீச்சல் கத்துகிட்டம்ல. கெணத்துல இருந்து எறைக்கிற தண்ணி மொதல்ல ஒரு பெரிய தொட்டில விழுந்து அப்பறமா வாய்க்காலுக்கு போகும். நான் அந்த தொட்டியில போய் இடுப்பளவு தண்ணியில நல்லா ஊறுவேன். 'பொன்னொன்று கண்டேன் ; பெண்ணங்கு இல்லை" பாட்டுல சிவாஜியும், பாலாஜியும் நீச்சல் கொளத்துல ஊறுரதை பாத்திருக்கீங்களா? அதே மாதிரி. ஆன என்னவோ மணிக்கணக்கா நீந்தி களைச்சு போனவனாட்டம் கவுண்டர் வீட்டுல திங்கற தீனிக்கு கொறச்சல் இருக்காது. ஆனா நான் கடசி வரைக்கும் எங்க அப்பா கிட்ட கத்துக்கவே இல்ல. பின்னால என் ஃப்ரெண்டுக கத்து குடுத்தாங்க.

கத்தாழ பெருசா வள்ந்த்ததும் நடுவால இருந்து பெரிய ஒரு தண்டு வளந்து பூ பூக்கும். அந்த தண்ட எடுத்து ரெவ்வெண்டு அடியா வெட்டி வெயில்ல காயப் போடுருவாங்க. நல்லா காஞ்சு அது தக்கை மாதிரி எடையே இல்லாம லேசா ஆயிரும். இத கத்தாழ முட்டின்னு சொல்லுவாங்க. மூக்கணாங் கயிறுக்கான பஞ்சுக் கயிற இந்த முட்டியோட ஒரு பக்கத்துல கட்டிட்டு இன்னொரு முனைய அப்பிடியே விட்டுருவாங்க. நீச்சல் கத்துக்கிறவங்க இந்த முட்டிய முதுகுப் பக்கமா, இடுப்பு கிட்ட வெச்சு வயிரோட சேத்து கட்டிகிடணும். அப்பறம் 100 அடி ஒசரத்துல இருந்து குதிச்சாலும் மெதந்துக்கிட்டே இருக்கலாம். மூழ்கவே மாட்டீங்க. அப்பிடியே கைய கால அடிச்சு கத்துக்க வெண்டியதுதான். ரெண்டு நாளைக்கு அப்பறம், வெறும் கயித்த இடுப்புல கட்டீட்டு இன்னொரு முனைய யாராவது ஒருத்தன் கரையில இருந்து புடிச்சுக்குவான். நாம அப்பிடி நீந்தி வரணும். எதாவதுன்னு அவன் கயித்தப் புடிச்சு இழுத்து கரை சேத்துருவான். இப்பிடி ஒரு ரெண்டு நாள். அவ்வளவுதான். மறு நாள் தனியாவே நீச்சல் அடிக்கணும். இல்லனா பசங்க பேசுர பேச்சுக்கு, பூக்கட்ற நூல்லயே தொங்கி உசுர விட்டுரலாம்.

இப்பிடி கத்துக்கும்போது பின்னால வந்து முட்டிய கழட்டி விட்டுடரது, கரையில நின்னு கயிரு புடிக்கறவன் அப்பிடியே விட்டுட்டு போகறது, தண்ணிப் பாம்புகளுக்கு நடுவுல குதிக்கறது, அது கடிச்சுதுன்னா கடிச்ச எடத்துல சுண்ணாம்பு வெச்சுக்கிட்டு மறுபடி குதிக்கிறது, தண்ணிக்குள்ளார போய் அடுத்தவன் அண்ட்ராயர அவுக்கறதுன்னு ஒரே களேபரமா இருக்கும். ஒரு பெரிய மூங்கில போட்டு ரெண்டு மூணு பேர அத புடிச்சுக்கிட்டே கத்துக்கிட்டு இருப்பாங்க. அந்த மூங்கிலோட ஒரு பக்கமா போய் நாலு பசங்க தொங்குவானுங்க. கத்துக்குட்டிகள்லாம் அலறுரதை பாக்கரதுல தனி சொகம்.

நீச்சல் கத்துகிட்டப்பறம் ஊர்ல ஒரு கெணறு, வாய்க்கால், ஏரி, கொளம், குட்டைன்ன்னு எதயும் விட்ரதில்ல. எங்கியாவது ஒரு ஆள் ஆழத்துக்கு தண்ணி தேங்கியிருந்தா போதும். ஒடனே வானரங்க குதிச்சு கும்மாளம் போட ஆரம்பிச்சுரும். ஒரு நாளைக்கு பத்து தடவ ஒரே ட்ராயரயும் சட்டயயும் காயவெச்சு காயவெச்சு போட்டா 'எலி எதாவது நம்ம சட்டப் பாக்கெட்டுக்குள்ளயே செத்து போய் இருக்கா'ன்னு மத்தவங்களுக்கு சந்தேகம் வர அளவுக்கு நம்ம மேலேருந்து ஒரு "வாசனை" கிளம்பும். வீட்டுக்குள்ள நொழயும்போது நமக்கு முன்னாடி நம்ம 'வாசனை' போகும். லட்சார்ச்சனை ஆரம்பிக்கும். நாம அப்பிடி எதுவுமே நடக்காத மாதிரி நேரா பின்பக்கம் போயி ஒரு குளியலப் போட்டுட்டு அப்பிடி பரிதாபமா ஒரு பார்வை பாத்துட்டு, தட்டுல விழறதை சாப்டுட்டு மறுபடி க்ரவுண்டுக்கு ஜூட்...அதுதான் நீங்க மொத பாகத்துல படிச்சுருப்பிங்களே...

இந்த சமயத்துலதான் சித்தப்பா ஒருத்தரு நமக்கு சங்கீதத்தை அறிமுகம் செஞ்சு வெச்சாரு. அதப் பத்தி....

இன்னும் மொளைப்போம்...

Tuesday, September 2, 2008

அமைதியா ஆர்ப்பாட்டம் பண்ணுங்க பாக்கலாம்

போன வாரம் சிங்கை பிரதமர் ஒரு அறிக்கைல இனிமே சிங்கை மக்களும் தங்கள் கருத்துக்களை வெளி உலகத்துக்கு உரத்துச் சொல்லவும், ஆர்ப்பாட்ட்ங்கள் நடத்தவும் ஒரு எடத்தை ஒதுக்கி குடுக்கும்னு சொன்னாரு. அதுக்காக ஹொம் லிங் பூங்காவுல 'ஸ்பீக்கர்ஸ் கார்னர்'னு ஒரு இடத்தயும் தேர்வு செஞ்சு இருக்காங்க. ஆனா ஆர்ப்பாட்டம் பண்றவங்க முதல்ல பூங்காக்கள் பரமரிப்பு ஆணையத்து கிட்ட விண்ணப்பிச்சு, முன் அனுமதி வாங்கி, அமைதியான் முறையில நடத்தணும். போஸ்டர் ஒட்டிக்கலாம், ஒலி பெருக்கி உபயோகிச்சுக்கலாம் (கட்டுபடுத்தப்பட்ட ஒலி அளவுல), சிறிய அளவுல டெமான்ஸ்ட்ரஷன் பண்ணலாம் அப்பிடியெல்லாம் சில கட்டுப்பாடுகளும் உண்டு.

இது நேத்துலேருந்து அமலுக்கு வந்தது. ஒடனே இங்க இருக்கற நிருபர்களெல்லாம் வாரிச் சுருட்டிக்கிட்டு அந்த எடத்துக்கு பக்கத்துல இருக்கற சாப்பட்டுக் கூடத்துல (food court) ஒரு நல்ல டீக்கடையாப் பாத்து எடம் புடிச்சு ஒக்காந்துட்டாங்க. காலையிலேருந்து ஈ காக்கா வரல. சாயங்காலம் ஒரு 6:30 மணி சுமாருக்கு யாரோ ஒரு பெரியவர் வந்து எதோ ஒரு துண்டு பிரசுரத்தை ஒரு 20 பேருக்கு வினியோகம் பண்ணீட்டு அப்பீட்டு ஆயிட்டாரு. அப்பறம் ஒரு 7 மணிக்கு ஒரு சிறு கூட்டம். வீட்டு வேலை செய்யற பணிப்பெண்களுக்கு எதிரான முறைகேடுகள எதிர்த்து 'அழுகைகளைக் கேட்போர்' (Hearer of Cries) அமைப்புலேருந்து சிலர் வந்து ரெண்டு மூணு போஸ்டர்களை நிறுத்தி வெச்சு, ஒரு பெண்ணுக்கு அடிபட்டு கெடக்கற மாதிரி மேக்-அப் போட்டு ஒக்கார வெச்சு, வரவங்க போறவங்க கிட்ட துண்டு பிரசுரங்களைக் குடுத்துட்டு ஒரு 10 நிமிஷத்துல மூட்டயக் கட்டீட்டு போயிட்டாங்க. பத்திரிக்கையாளர்களுக்கெல்லம் ஏமாற்றம்தான்னாலும், இன்னிக்கு பேப்பர்லயெல்லாம் இதுக்கு நல்ல பப்ளிசிட்டி.

சிங்கப்பூர் மாதிரியான கட்டுப்பாடான நாட்டுல இந்த அளவு மக்களுக்கு ஒரு மேடை அமைச்சு குடுத்து, பேச்சு சுதந்திரம் குடுக்கறது ஒரு நல்ல ஆரம்பம். ஆனாலும் மக்களுக்கு உள்ள ஊறிப்போன கட்டுப்பாடுகள (பயம்??) தளர்த்தி வெளிய கொண்டு வரது ஒரு பெரிய சவால்தான்.