Sunday, August 30, 2009

கிச்சடி 31.08.2009சிங்கப்பூர்ல இருந்து ஜெனீவாவுக்கு வந்த நம்ம ஆபீஸ் நண்பருக்கு உடம்பு கொஞ்சம் சரியில்லாம போச்சு. வறட்டு இருமல். ரெண்டு நாள் ஆகியும் குறையலயேன்னு ஒரு டாக்டர் கிட்ட போனோம். 1 நிமிஷம் நண்பர் சொன்னதை டாக்டர் கேட்டுட்டு 'உங்களுக்கு ரெண்டு ப்ராப்ளம் இருக்கு. தொண்டைல புண் இருக்கு... லங்ஸ் அஃபெக்ட் ஆயிருக்கு... ரேடியோ எடுக்கணும்'னார். ஏ.எம்மா எஃப்.எம்மான்னு கேக்கறதுக்குள்ள எக்ஸ்ரேக்கு ஆளைக் கூப்பிட்டார். எல்லாம் முடிஞ்சு 'ஒண்ணும் பயப்படறபடி ஒண்ணும் இல்லை'ன்னு சொல்லிட்டு 2 வாரத்துக்கு ஆன்டிபயாடிக் மாத்திரை குடுத்தார். அதுவும் 1000mg. அவ்வளவு ஸ்ட்ராங் டோஸெல்லாம் சரியான்னு தெரியல. கூடவே பில்லும் குடுத்தார். 320 ஃப்ரான்க். அடங்கப்பா.... நம்மூர்ல இதுக்கு மிஞ்சிப்போனா 350 ரூபா (8 ஃப்ராங்க்) ஆகலாம். இதுல ஃபாலோ அப் வேறயாம்... 5 நாள் கழிச்சு. போங்கடா.... நீங்களும் உங்க ஆஸ்பத்திரியும்னு குதிகால் பொடனில அடிக்க ஓடிவந்தோம்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ஸுரிக்ல இருந்து ஜெனீவாவுக்கு ரயில்ல போகும்போது படிக்கறதுக்கு எடுத்துக்கிட்ட புத்தகம் 'The Shepherd'. Frederic Forsyth எழுதிய நாவல். ஏற்கெனவே ரெண்டு தரம் படிச்சதுதான்னாலும் ரொம்ப இன்ட்ரெஸ்டிங்கா இருக்கும். உலகப் போர் சமயத்துல, கிறிஸ்துமஸ்க்கு முந்தைய சாயுங்காலம் ஒரு விமானம் கட்டுப்பாடுகளை இழந்து தவிக்கும்போது வேற ஒரு விமானம் வந்து அதை பாதுகாப்பா ஏதோ ஒரு விமானதளத்துல இறக்கி விட்டுட்டுப் போயிடும். அப்பறம்தான் தெரியும் காப்பாத்தின விமானமும் 15 வருஷத்துக்கு முன்னயே ஒரு விபத்துல சிக்கி உருத்தெரியாம எரிஞ்சுபோச்சுன்னும், அந்த விமானியும் இறந்து போயிட்டார்னும். நம்ம இந்திரா சௌந்தரராஜன் டைப் அமானுஷ்ய நாவல்னு வெச்சுக்கங்களேன்.

கொஞ்ச நேரம் கழிச்சு எதிர்ல உக்காந்திருந்தவர் மெள்ள பேச்சுக் குடுக்க ஆரம்பிச்சார். பேச்சு வாக்குல புத்தகத்தைப் பத்தியும் கேட்டார். இதிலெல்லாம் அவருக்கு நம்பிக்கை இல்லைன்னும், எனக்கு நம்பிக்கை இருக்கான்னும் கேட்டார். ஒரு சுவாரஸ்யத்துக்காக எனக்கு நம்பிக்கை உண்டுன்னு சொல்லி வெச்சேன். இன்னும் 2 மணி நேரம் ஓட்டியாகணுமே. கொஞ்ச நேரம் இதைப் பத்தியே பேசின பிறகு நான் சொன்னேன் "காப்பாத்தின விமானி நாந்தான்னு சொன்னா நீங்க நம்பவா போறீங்க?"ன்னு. கூடவே லேப்டாப் பேக்ல தொங்கிக்கிட்டுருந்த சில ஏர் ஃபோர்ஸ் லேபில்களையும் காமிச்சேன். எல்லாம் சிங்கப்பூர் ஏர் ஷோல வாங்கின டுபாக்கூர் லேபில்க. என்ன நினைச்சாரோ சட்டுனு பேசறதை நிறுத்திட்டு வெளிய வேடிக்கை பாக்க ஆரம்பிச்சுட்டார். இறங்கும்போது கூட சொல்லிக்கலை. அதுக்கப்பறம் புத்தகம் படிக்கற மூடே இல்லை. நினைச்சு நினைச்சு சிரிச்சுக்கிட்டிருந்தேன். ஒருவேளை 'இந்தப் பைத்தியம் நம்மளை கடிக்காம விட்டுதே'ன்னு அவரும் பெருமூச்சு விட்டிருக்கலாம்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

நம்மளை மாதிரி 'பிரபல' பதிவர்கள் (நம்பாட்டி போங்க.. எனக்கென்ன..) சினிமாக்களை விமர்சனம்கற பேர்ல கிழி கிழின்னு கிழிக்கிறோமாம். சினிமா உலகே கதிகலங்கி இருக்காம். தமிழ்சினிமா.காம்ல தலையங்கமே எழுதியிருக்காங்க. அடடா... யோசிச்சுப் பாத்தா...

உண்மையா இருந்தா... : ஹய்யோ... நாம எல்லாம் நிஜமாவே பிரபலம் ஆயிட்டோமா? படம் பாக்கப் போறவங்க எல்லாம் பதிவர்களோட விமர்சனத்தைப் பாத்துட்டுத்தான் போறதா வேண்டாமான்னு முடிவு பண்றாங்களா? விகடன், குமுதம் மாதிரி 75 வருஷமா வெளியாகிற பத்திரிக்கைகள்ல வர விமர்சனங்களை விட பதிவர்கள் விமர்சனத்துக்கு வேல்யூ அதிகமா? இனிமே புதுப் படம் ப்ரிவ்யூக்கு பதிவர்களுக்கு அழைப்பு வருமா? பாஸிடிவ்வா விமர்சனம் எழுதினா " ............... அவர்களின் பாராட்டைப் பெற்ற படம்"னு நாளிதழ்கள்லயும் போஸ்டர்கள்லயும் பாக்கலாமா? ஐ... ஜாலியா இருக்கே....

உண்மையா இல்லைன்னா.... : அட போங்க.... நாம இப்பிடியே 'பிரபல'மா இருந்துட்டுப் போறோம்....

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

தங்கமணி பிரபு அவர்களின் நேற்றைய இடுகைல இருந்த வீடியோவைப் பாத்த பிறகு மூச்சே நின்னுடுச்சு. தாலிபான்க கூட கொஞ்சம் பரவால்லயோன்னு தோணிடுச்சு..... இந்த அரக்கர்களுக்கு கொஞ்சமாவது மனிதாபிமானம், இரக்ககுணம் இதெல்லாம் வராதான்னு வேண்டிக்கிறதைத் தவிர வேறு வழி தெரியல....


Thursday, August 27, 2009

வெட்டாப்பு

போன ஒரு மாசமா வேலைப் பளு அதிகமாயிடுச்சு. அது மட்டுமில்லாம ஜெனீவாலயே 1 மாசம் இருக்கும்படியா ஆகிப்போச்சு. அதனால பதிவு எழுதறதுல ஒரு தேக்கம். பழமைபேசியார் சொன்ன மாதிரி ஒரு வெட்டாப்பு விழுந்து போச்சு. எழுத முடியலைன்னாலும் அப்பப்ப ரீடர்ல நாம ஃபாலோ பண்றவங்களைப் படிச்சுக்கிட்டுதான் இருந்தேன்.

சரி... வேலைகளுக்கு நடுவுல போன மாசம் கிடைச்ச சில அனுபவங்களை பகிர்ந்துக்கிட்டு மறுபடியும் எழுத்துப்பணி(!!)யை ஆரம்பிச்சுடுவோம்னுதான் இந்த துரித இடுகை.

1. க்லேஸியர் 3000 (Glacier 3000) : இது ஸ்விஸ் ஆல்ப்ஸ்ல ஒரு முக்கியமான மலையுச்சி. 3000 அடி உசரத்துல இருக்கு. பக்கத்துலயே 'லே தியப்லரே' (Les Diablarets) னு ஒரு இடம். பல சிறந்த விளையாட்டு வீரர்கள், ஹாலிவுட்/பாலிவுட் நடிகர்கள்னு பல பிரபலங்கள் தங்களோட விடுமுறை வீடுகளை இங்க வெச்சுருக்காங்க.

ஜெனீவால இருந்து மோந்த்ரூ போய், அங்கிருந்து ரயில் மாறி ஸ்டாட் (GStaad) போய், அங்கிருந்து பஸ்ல 1/2 மணிநேரப் பயணத்துல தியப்லரே கேபில் பஸ் ஸ்டேஷன் போய்... அங்கிருந்து கேபில் பஸ்ல 1/2 மணி நேரம் போனா... அப்பாடா.... ஒரு வழியா மலை உச்சிக்கு போய் சேரலாம். ரெண்டு மலை உச்சிகளுக்கு நடுவுல எந்த சப்போர்ட்டும் இல்லாம கேபில் பஸ்ல போறது ஒரு த்ரில்லிங் பயணம்.

டூரிஸ்டுகளும், உள்ளூர் மக்களும் கோடைகாலத்துல மலைநடைக்காகவே (hiking) இந்த ஏரியாவுக்கு வராங்க. ஸ்விஸ் ஒப்பன் டென்னிஸ் போட்டி ஒவ்வொரு வருஷமும் 'ஸ்டாட்'லதான் நடக்குது. நான் போன அன்னிக்கு ஃபைனல்ஸ்.

படங்கள்

2. யுங்ஃப்ரோ (Jungfrau) : இது ஐரொப்பாவின் உச்சின்னு சொல்லப்படுது. ஐகெர், மோன்க் மற்றும் யுங்ஃப்ரோயோ (Eiger, Monch & Jungfraujoch) மலை உச்சிகள் மூணும் சேர்ந்தது. டூரிஸ்டுக மொய்க்கிற இடம். ஸ்விஸ் டூர் பட்டியல்ல முதல் இடம்.

ஜெனீவா-பெர்ன்- இன்டர்லாகன்-லாடர்ப்ருன்னன்-க்லெய்ன்-யுங்ப்ஃரோ அப்படின்னு ஒரு நெடும் பயணம். ரயில் மாறி மாறி போய் சேர 5 மணி நேரம் ஆயிடுது. (இதே தூரம் இந்தியாவுலன்னா கண்டிப்பா 12 மணி நேரம் ஆயிடும்.) யுங்ஃப்ரோவுக்கு போற ரயில் பாதை முக்கால்வாசியும் மலையைக் குடைஞ்சு உள்ளயேதான். அதுக்குள்ளயே ரெண்டு மூணு ஸ்டேஷன்க வேற. மேல போனதும் சுத்தி வ்யூ பாக்கும்போது போன அலுப்பெல்லாம் தீந்துடும். கண்கொள்ளாக் காட்சிகள். பரந்த க்லேசியர். அப்பிடியே பனி ஆவியாகி மேகம் கிளம்பறது பாத்துக்கிட்டே இருக்கலாம். ஆல்ப்ஸோட பல முக்கியமான மலை உச்சிகள் எல்லாம் இங்க இருந்தே பாத்துடலாம்.

ஐசை குடைஞ்சு உள்ள ஒரு பெரிய ஐஸ் பேலஸ். அங்கங்க ஐஸ் சிற்பங்கள். குளு குளுன்னு தரை லேசா வழுக்கிக்கிட்ட்டே நின்னு பாக்கறது தனி அனுபவம். அப்பிடியே அங்க 'பாலிவுட் ரெஸ்டாரண்ட்'ல உக்காந்து ஒரு பனோரமிக் வ்யூவோட அட்டகாசமான லஞ்ச். (சும்மா சொல்லக்கூடாது... ஜெனீவால இருக்கற இந்திய ரெஸ்டாரண்டுகளை விட கம்மி விலைல சூப்பர் டேஸ்ட்...)

3. பதிவர் 'டுபுக்கு'வுடன் ஒரு சந்திப்பு : குடும்பத்தோட 1 வாரம் ஸ்விஸ் சுற்றுப்பயணம் வரதா சொல்லியிருந்தார். யதேச்சையா என்னுடைய 2 வார வேலை 4 வாரம் இழுத்துடுச்சு. அவரை சந்திக்கும் வாய்ப்பும் கிடைச்சுது. 4 நாள் ஊரெல்லாம் சுத்திட்டு ஜெனீவா வந்தார். முதல்நாள் சாயங்காலம் ஜெனீவா நீர்ப்பீய்ச்சி (fountain-க்கு தமிழ்!!) பக்கத்துல சந்திச்சோம். 'ஹலோ டுபுக்கு'ன்னு அவங்க ஃபேமிலி முன்னால கூப்பிட சங்கடமா இருக்குமேன்னு நினைச்சேன். நல்லவேளை... மெயில்ல உண்மையான பேர் இருந்ததால அந்த சங்கடம் தீர்ந்தது. நெடுநாளைய நண்பர்கள் மாதிரி டக்குனு ஒட்டிக்கிட்டோம். நாலு நாளும் ப்ரெட், ஜாம்னு கொஞ்சம் காஞ்சு போயிருந்த நாக்குக்கு ஒரு இந்திய ரெஸ்டாரண்டுக்கு போய் ஒரு கட்டு கட்டுனதும் மனுஷன் தெம்பாயிட்டார். மறுநாள் மாலையும் சந்திச்சு இன்னொரு ரெஸ்டாரண்ட்... இன்னொரு கட்டு... (பில்லும் அவரே கட்டிட்டாரு... ரொம்ப நல்லவரு) இரண்டு பொன்மாலைப் பொழுதுகள்.

பதிவர் 'டுபுக்கு', நான் (என் கையில் இருப்பது அவரின் இரண்டாவது பெண்)