Friday, October 23, 2009

80:20

பரேட்டோ (பரோட்டா இல்லீங்க) சொன்னாலும் சொன்னார்.... இந்த 80:20 விதி படற பாடு சொல்லி மாளாது. எது நடந்தாலும் இந்த ஒண்ணைச் சொல்லித் தப்பிச்சுடறாங்க. அவர் சொன்னது "புள்ளியியல் / நிகழ்தகவுப் படி 80 சதவிகித விளைவுகளுக்கு 20 சதவிகித நிகழ்வுகளே காரணம்". இதை நாம பொதுவா, வேலை செய்யற இடங்கள்ல சொல்றோம்... 20பேர்தான் நல்லா உழைக்கறாங்க;பாக்கி 80 பேர் சும்மா சம்பளம் வாங்கறாங்கன்னு. கேக்க நல்லா இருக்கறதாலயும், நாம் அந்த 20க்குள்ள வரோம்னு நாமளே நினைச்சுக்கறதாலயும் (அதுல ஒரு சின்ன திருப்தி!!) இந்த கருத்தை பொதுவா யாரும் எதிர்க்கறதில்லை. சரி... அது எப்பிடியோ போகட்டும்... இந்த 80:20யை நடைமுறை வாழ்க்கைல எப்பிடி பொருத்திப் பாக்கலாம்னு எங்கியோ படிச்சதை சொல்லி வெக்கலாமேன்னு......


அதாவது, நமக்கு பெரும்பாலும் மகிழ்ச்சியையும் நிறைவையும் குடுக்கறது நம்ம வாழ்க்கைல நடக்கற சின்னச் சின்ன நிகழ்வுகள் அல்லது நாம செய்யற சின்னச் சின்ன செயல்கள்தான்னு சொல்றாங்க. உதாரணத்துக்கு நாம 12 மணி நேரம் வேலை செய்யறதுல கிடைக்கிற மகிழ்ச்சியை விட 1 அல்லது 2 மணி நேரம் ப்ளாக் படிக்கறதுல கிடைக்கிற மகிழ்ச்சி அதிகமா இருக்கலாம். குழந்தைக கூட விளையாடற 15 நிமிஷமோ, நண்பர்கள் கூட அரட்டை அடிக்கிற அரைமணி நேரமோ கூடுதல் மகிழ்ச்சி தரலாம். சுய முன்னேறத்துக்காக எடுக்கிற முயற்சிகள், நம்மளோட குறுகிய/நீண்ட கால லட்சியங்களை நோக்கி எடுக்கற சின்னச் சின்ன நடவடிக்கைகள் இதெல்லாம் கூட நமக்கு ஒரு நிறைவைத் தருது. அந்த மாதிரி நிறைவைத் தர நிகழ்வுகளை அடையாளம் கண்டு அதுல நோக்கத்தை செலுத்தி முன்னேற்றம், மகிழ்ச்சி, நிறைவு பெறலாம்ங்கறாங்க.

ஆனா சாதாரணமா இந்த விதி கொஞ்சம் எதிர்மறையாவே கையாளப்படுதோன்னு தோணுது. மேல சொன்ன உதாரணத்துல 80 பேர் உழைச்சா 20 பேர் ஓபியடிக்கற மாதிரி நினைக்கத் தோணும். ஆனா நிஜத்துல 20 பேர் "முடிவுகள் எடுக்கற" (decision making) இடத்துலயும், மீதி 80 பேர் அந்த முடிவுகளை செயல்படுத்தறதுலயும் ஈடுபட வேண்டியிருக்கு. அரசாங்க இயந்திரத்தை எடுத்துக்கிட்டா, திட்டம் போட்டு அதை அறிவிக்கறது மிகச்சில பேர்னாலும், அதை அமல் படுத்தி கடைக்கோடி வரைக்கும் கொண்டு சேர்க்க உழைக்கறவங்க ஏராளம் பேர். ஊர் கூடி தேர் இழுக்கற கதைதான். தேர் இழுக்கணும்னு முடிவு பண்றது 10 பேர் கொண்ட விழாக் கமிட்டி. ஆனா இழுக்கறது?



மேல உள்ள படத்துல பாத்தா 20% வினைதான் 80% பயனுக்கு காரணமா இருக்குன்னு சொல்லுது. மறுபடியும் அந்த அரசாங்க திட்டம் உதாரணத்தையே எடுத்துப்போம். 20 பேர் சேந்து உருவாக்கற திட்டத்தோட முக்கியப் பயன் (கவனிக்க... "திட்ட"த்தோட பயன்..) பலரைப் போய் அடையுது. அந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தற 80 பேரோட உழைப்புனால அந்த திட்டப் பயன் கிடைச்சாலும், கூடவே உப பயன்களா ஒரு திட்டம், அதை செயல்படுத்தற வழிகள்னு சில கட்டமைப்புகளும் (infrastructure), வழிமுறைகளும் (processes) கிடைக்குது. இதை Organisational Assetsனு சொல்லலாம்.

மேல சொன்ன உதாரணம் ஒரு Ideal world நிகழ்வு மாதிரி தோணலாம். ஏன்னா இந்த மாதிரி அடிப்படை விஷயங்களைக் கூட நம்ம "மாண்புமிகு"க்களெல்லாம் கெடுத்து குட்டிச்சுவர் பண்ணி, 80% திட்ட ஒதுக்கீடு 20 பேர் பாக்கெட்ல ஒதுங்கிடுது. மீதி 20% அந்த பயன் உண்மையா யாருக்கெல்லாம் போய் சேரணுமோ, அவங்களுக்கு, இப்பிடி ஒரு திட்டம் இருக்குன்னு அறிவிச்சு விளம்பரம் பண்றதுலயே செலவாயிடுது. அப்பறம் திட்டமாவது பயனாவது? பாருங்க... இவுங்களைப் பத்தி பேச ஆரம்பிச்சாலே மறுபடி நெகடிவ் ரூட்ல போகுது.... :(

பாவம் பரேட்டோ.... இப்பிடி ஆகும்னு நினைச்சுப் பார்த்திருக்க மாட்டார். எதுவா இருந்தாலும் 80:20யை நாம கொஞ்சம் பாசிட்டிவ்வாவே பார்ப்போம்.

Wednesday, October 21, 2009

Taking of Pelham 123 (2009) - சினிமா விமர்சனம்


Taking of Pelham 123 (2009)
John Travolta, Denzel Washington


ஜான் ட்ரவோல்டா, டென்ஸல் வாஷிங்டன்.... ரெண்டு பேரும் சேந்த படம்ன உடனேயே எதிர்பார்ப்பு அதிகம்தான் ஆயிடுச்சு. ந்யூயார்க் மெட்ரோ ரயில்ல கண்ட்ரோல் சென்டர்ல இருக்கற கார்பர் (டென்ஸல்) "பெல்ஹாம் 123" ('பெல்ஹாம் பே' ஸ்டேஷன்கு 01:23 க்கு போய் சேரற ரயில்) நடுவழில நிக்கறதைப் பாக்கறாரு. என்னன்னு விசாரிச்சா ரைடர் (ட்ரவோல்டா) கடத்தி வெச்சுருக்கான்.

முதல் பெட்டியை மட்டும் வெச்சுட்டு மத்ததையெல்லாம் கழட்டி விட்டுட்டு, இருக்கறவங்க பயணக் கைதிகள். 10 மில்லியன் டாலர் கேட்டு மிரட்டரான். அதுவும் 1 மணி நேரத்துக்குள்ள. மீட்பு நடவடிக்கைகளை செய்துக்கிட்டே பணத்துக்கும் ஏற்பாடு செய்யறாங்க. ரயிலுக்குள்ள இருக்கற ஒரு பையனோட லேப்டாப் ஆன்லயே இருக்கு. அதுல வீடியோ ச்சாட் வழியா உள்ள நடக்கறதெல்லாம் தெரிஞ்சாலும் ஒண்ணும் பிரயோசனம் இல்லை.



அந்த காலை கார்பர் அட்டெண்ட் பண்ண வேண்டி வந்ததால, கார்பர் கூடதான் பேசுவேன்னு ரைடர் அடம். அதுக்காக ரயில் ட்ரைவர் பலி. 'என்னடா நடக்குது இங்க?"ன்னு கேட்ட போலீஸ், "மொதல்ல என்னிய சுடு பாக்கலாம்"ன முன்னாள் மிலிட்டரி... எல்லாத்தையும் பொசுக் பொசுக்குன்னு சுடறாங்க. கார்பர் எதோ லஞ்சக் கேஸ்ல மாட்டியிருக்கான்னு தெரிஞ்சு அதைப் பத்தின உண்மைகளையும் கேக்கறான் ரைடர். இடைல ந்யூயார்க் மேயரையும் இழுத்து, அவரோட சில லீலைகளையும் சந்தி சிரிக்க வெச்சு, தான் யாரோ ஒரு மாடல் அழகி கூட ரிசார்டுக்கு போனதைப் பத்தி சொல்லி... என்னடா... சம்பந்தமில்லாம கண்டதையெல்லாம் நோண்டறானேன்னு யோசிச்சா.... பின்னால லிங்க் எல்லாம் புரியுது.



கடத்தலோட நோக்கம் அந்த 10மில்லியன் டாலர் கிடையாது. இந்த நாடகத்தை வெச்சு ஒரு பீதியைக் கிளப்பி ஸ்டாக் மர்கெட்டை சரிய வெச்சு, தங்கம் / கம்மாடிட்டி மார்கெட்டை ஏத்தி... அவன் போர்ட்ஃபோலியோ பல மடங்கு எங்கியோ போறதுக்கான திட்டம். எப்பிடியோ பணத்தையும் கொண்டு சேத்துடறாங்க. கடைசில என்னதான் ஆச்சு? க்ளைமேக்ஸ் கொஞ்சம் சுமார்தான்... என்னை பொறுத்தவரை. இருந்தாலும் படம் நல்லா விறுவிறுப்பா போறதால "ரைட்டு... "ன்னு விட்டுடலாம்.

டென்ஸல், ஜான்.... ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் போட்டி போட்டுக்கிட்டு நடிப்பு. அதுலயும் அந்த லஞ்சம் வாங்கறதை ஒத்துக்கற இடத்துல டென்ஸல்... க்ளாஸ். நெகோஷியெட்டரா வர அந்த அதிகாரியும் அருமை. மேயரை நம்ம ஊர் "மழைக்கு பள்ளிக்கூடத்துல ஒதுங்கின" எம்.எல்.ஏ மாதிரி அறிமுகம் பண்ணினாலும் ஆளு ஷார்ப். இந்த கடத்தல் விளையாட்டு எதுக்காகன்னு டக்குனு புரிஞ்சுகிடறாரு. படத்துல டயலாக்தான் கொஞ்சம் ஓவர்.... அந்த நாலெழுத்து வார்த்தை படற பாடு இருக்கே.... ஒவ்வொரு வாக்கியத்துலயும் ஜஸ்ட் 3 தடவைதான் வருது. மத்தபடி ஓகே. :)

1974ல வந்த படத்டோட ரீமேக். பேஸ்லைன் ஒண்ணா இருந்தாலும் மோடிவ்வை மாத்தி ஒரு சின்ன சுவாரஸ்யம். 1974 மாடல் - கொஞ்சம் வேற மாதிரி இருக்கும். சில சீன்கள் (கேமரா பொசிஷன் கூட) புது வெர்ஷன்ல அப்பிடியே ஷூட் பண்ணியிருக்காங்க. '74 வெர்ஷனைப் பாத்ததில்லைன்னா, முதல்ல இதைப் பாத்துட்டு அப்பறமா பாருங்க. நல்லாவே ரசிக்க முடியும். ரெண்டு படங்களையுமே. எஞ்சாய் மாடி.....

Monday, October 19, 2009

கிச்சடி 19.10.2009


ஒபாமா : உலகத்துல ஒரு இடம் பாக்கி விடாம அமைதியை நிலை நாட்டிட்டார்னு "நோபல்" பரிசு குடுத்தாச்சு. 10 மாசத்துல இவ்வளவு பெரிய சாதனை பண்ண முடியும்னா இன்னும் 5 வருஷத்துல என்னென்ன சாதிப்பாரோ? அதுக்கெல்லாம் பாராட்டி குடுக்கறதுக்கு இன்னும் பெரிய பரிசா எதாவது இப்பவே பண்ணி வெச்சுக்கணும். ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் இங்கிருந்தெல்லாம் மக்கள் இனிமே சர்வ சாதாரணமா அமெரிக்கா போய் வரலாம். அதான்... அமைதிக் கொடி பட படன்னு பறக்குதே....

நண்பர்கள் கிட்ட இதைப் பத்தி சூடான விவாதம் நடக்கும்போது ஒருத்தர் சொன்னார் "அது ஒரு கமிட்டி. சில நியதிகள் வெச்சுருக்காங்க. அதுல ஒபாமா பொருந்தி வரார்னு அவங்க நினைக்கிறாங்க. குடுக்கறாங்க.... எப்பிடி குடுக்கப் போச்சு? ஏன்... எதுக்கு... இதெல்லாம் விவாதிக்க முடியாது"ன்னு சொன்னார். இருக்கலாம். ஆனா "நோபல்" பரிசு என்ன "அண்ணா" விருதா? அதுக்குன்னு ஒரு மரியாதை இல்லையா? இது வரைக்கும் அதை வாங்கினவங்களையும், அவங்களோட சாதனைகளையும் வெச்சுத்தானே அந்த விருதுக்கான தகுதியை நம்மளை மாதிரி சாதாரணமானவங்க ஒப்பீடு செய்ய முடியும்? கோஃபி அன்னான், ஆங் சென் சூ கி மாதிரி தலைவர்களும் ஒபாமாவும் ஒண்ணா? ஒத்துக்க முடியல. இந்த மாதிரி பரிசு குடுத்துட்டா அதுக்கேத்த மாதிரி நடந்துடுவார்னு சில வாதங்கள் இருக்கு. அப்பிடிப் பாத்தா பேசாம "ஒசாமா"வுக்கு குடுத்துருக்கலாம்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் : இவருக்கும் நோபல் பரிசு. ஆனா விஷயம் விருதைப் பத்தி இல்லை. அதுக்கப்பறம் அவர் குடுத்த பேட்டி பத்தி. "யார் யாரோ குப்பன் சுப்பன்லாம் எனக்கும் மெயில் அனுப்பறான். எரிச்சலா வருது"ன்னு சொல்லியிருக்கார். அய்யா, நீங்க ஒரு பெரிய விஞ்ஞானி. உங்களுக்கு இது போல விஷயமெல்லாம் தொந்தரவா இருக்கலாம். தகவல் தொடர்பு சல்லிசா இருக்கற இந்த நவீன உலகத்துல, இந்த மெயில் தொந்தரவுகளை தவிர்க்க எவ்வளவோ சுலபமான வழிகள் இருக்கு. அதுகளை பயன்படுத்தறதை விட்டுட்டு இந்த மாதிரி நிதானமில்லாம பேட்டி குடுக்கறது உங்களை மாதிரி பெரியவங்களுக்கு அழகா?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ரொமான் பொலான்ஸ்கி : சில விஷயங்கள் புரியவே மாட்டேங்குது. 1978ல இருந்து இந்த ஆள் மேல பாலியல் குற்றச்சாட்டுக்காக ஒரு சர்வதேச அரெஸ்ட் வாரெண்ட் இருக்கு. ஆனா பிடிக்க முடியலையாம். 3 வாரம் முந்தி ஸ்விஸ்ல ஸுரிக் ஃபிலிம் ஃபெஸ்டிவல்ல தலைவருக்கு "வாழ்நாள் சாதனையாளர்" விருது வழங்கும் விழாவுக்கு வரும்போது கைது பண்ணிட்டாங்களாம். போன 30 வருஷமா ஃப்ரான்சுக்கும் போலந்துக்கும் போய் வந்துகிட்டு இருக்காரு. ஸ்விஸ்ல "ஸ்டாட்"ல 20 வருஷமா இவருக்கு ஒரு சொகுசு பங்களா இருக்காம். இத்தனை வருஷமா ஸ்விஸ் "ஷெங்கன்" அமைப்புல சேராம தனியா இருந்தபோது கூட இவரைப் பிடிக்க முடியலை. இப்ப தீடீர்னு முழிச்சுக்கிட்டு பிடிச்சுட்டாங்களாம். கேக்கறவன் கேனப்பயன்னா எருமை கூட ஏரொப்பிளேன் ஓட்டும்னு கிராமத்துல சொல்லுவாங்க.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ஒரு விளம்பரம் : சைடு பார்ல நானும் ஒரு வேண்டுகோள் வெச்சு 3 மாசமாச்சு. ஒரு மெயில் கூட வரலை. விடறதாயில்லை. ரீடர்ல படிக்கறவங்களையும் அட்டாக் பண்ணலாம்னு முடிவு பண்ணிட்டேன். தேவையிருந்தா சொல்லுங்கப்பா.


"நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள். மைசூரில் உள்ள என் வீடு தற்போது வாடகைக்கு விட உத்தேசம். உங்களுக்கோ அல்லது உங்கள் நண்பர்கள் / உறவினர்களுக்கு மைசூரில் வாடகைக்கு வீடு தேவையெனில் மேலதிக விவரங்களுக்கு என்னை மின்னஞ்சலிலோ (rmaheshk@gmail.com) தொலைபேசியிலோ (+65 81275347) தொடர்பு கொள்ளவும். நன்றி."


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


!! அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள் !!