Friday, October 23, 2009

80:20

பரேட்டோ (பரோட்டா இல்லீங்க) சொன்னாலும் சொன்னார்.... இந்த 80:20 விதி படற பாடு சொல்லி மாளாது. எது நடந்தாலும் இந்த ஒண்ணைச் சொல்லித் தப்பிச்சுடறாங்க. அவர் சொன்னது "புள்ளியியல் / நிகழ்தகவுப் படி 80 சதவிகித விளைவுகளுக்கு 20 சதவிகித நிகழ்வுகளே காரணம்". இதை நாம பொதுவா, வேலை செய்யற இடங்கள்ல சொல்றோம்... 20பேர்தான் நல்லா உழைக்கறாங்க;பாக்கி 80 பேர் சும்மா சம்பளம் வாங்கறாங்கன்னு. கேக்க நல்லா இருக்கறதாலயும், நாம் அந்த 20க்குள்ள வரோம்னு நாமளே நினைச்சுக்கறதாலயும் (அதுல ஒரு சின்ன திருப்தி!!) இந்த கருத்தை பொதுவா யாரும் எதிர்க்கறதில்லை. சரி... அது எப்பிடியோ போகட்டும்... இந்த 80:20யை நடைமுறை வாழ்க்கைல எப்பிடி பொருத்திப் பாக்கலாம்னு எங்கியோ படிச்சதை சொல்லி வெக்கலாமேன்னு......


அதாவது, நமக்கு பெரும்பாலும் மகிழ்ச்சியையும் நிறைவையும் குடுக்கறது நம்ம வாழ்க்கைல நடக்கற சின்னச் சின்ன நிகழ்வுகள் அல்லது நாம செய்யற சின்னச் சின்ன செயல்கள்தான்னு சொல்றாங்க. உதாரணத்துக்கு நாம 12 மணி நேரம் வேலை செய்யறதுல கிடைக்கிற மகிழ்ச்சியை விட 1 அல்லது 2 மணி நேரம் ப்ளாக் படிக்கறதுல கிடைக்கிற மகிழ்ச்சி அதிகமா இருக்கலாம். குழந்தைக கூட விளையாடற 15 நிமிஷமோ, நண்பர்கள் கூட அரட்டை அடிக்கிற அரைமணி நேரமோ கூடுதல் மகிழ்ச்சி தரலாம். சுய முன்னேறத்துக்காக எடுக்கிற முயற்சிகள், நம்மளோட குறுகிய/நீண்ட கால லட்சியங்களை நோக்கி எடுக்கற சின்னச் சின்ன நடவடிக்கைகள் இதெல்லாம் கூட நமக்கு ஒரு நிறைவைத் தருது. அந்த மாதிரி நிறைவைத் தர நிகழ்வுகளை அடையாளம் கண்டு அதுல நோக்கத்தை செலுத்தி முன்னேற்றம், மகிழ்ச்சி, நிறைவு பெறலாம்ங்கறாங்க.

ஆனா சாதாரணமா இந்த விதி கொஞ்சம் எதிர்மறையாவே கையாளப்படுதோன்னு தோணுது. மேல சொன்ன உதாரணத்துல 80 பேர் உழைச்சா 20 பேர் ஓபியடிக்கற மாதிரி நினைக்கத் தோணும். ஆனா நிஜத்துல 20 பேர் "முடிவுகள் எடுக்கற" (decision making) இடத்துலயும், மீதி 80 பேர் அந்த முடிவுகளை செயல்படுத்தறதுலயும் ஈடுபட வேண்டியிருக்கு. அரசாங்க இயந்திரத்தை எடுத்துக்கிட்டா, திட்டம் போட்டு அதை அறிவிக்கறது மிகச்சில பேர்னாலும், அதை அமல் படுத்தி கடைக்கோடி வரைக்கும் கொண்டு சேர்க்க உழைக்கறவங்க ஏராளம் பேர். ஊர் கூடி தேர் இழுக்கற கதைதான். தேர் இழுக்கணும்னு முடிவு பண்றது 10 பேர் கொண்ட விழாக் கமிட்டி. ஆனா இழுக்கறது?



மேல உள்ள படத்துல பாத்தா 20% வினைதான் 80% பயனுக்கு காரணமா இருக்குன்னு சொல்லுது. மறுபடியும் அந்த அரசாங்க திட்டம் உதாரணத்தையே எடுத்துப்போம். 20 பேர் சேந்து உருவாக்கற திட்டத்தோட முக்கியப் பயன் (கவனிக்க... "திட்ட"த்தோட பயன்..) பலரைப் போய் அடையுது. அந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தற 80 பேரோட உழைப்புனால அந்த திட்டப் பயன் கிடைச்சாலும், கூடவே உப பயன்களா ஒரு திட்டம், அதை செயல்படுத்தற வழிகள்னு சில கட்டமைப்புகளும் (infrastructure), வழிமுறைகளும் (processes) கிடைக்குது. இதை Organisational Assetsனு சொல்லலாம்.

மேல சொன்ன உதாரணம் ஒரு Ideal world நிகழ்வு மாதிரி தோணலாம். ஏன்னா இந்த மாதிரி அடிப்படை விஷயங்களைக் கூட நம்ம "மாண்புமிகு"க்களெல்லாம் கெடுத்து குட்டிச்சுவர் பண்ணி, 80% திட்ட ஒதுக்கீடு 20 பேர் பாக்கெட்ல ஒதுங்கிடுது. மீதி 20% அந்த பயன் உண்மையா யாருக்கெல்லாம் போய் சேரணுமோ, அவங்களுக்கு, இப்பிடி ஒரு திட்டம் இருக்குன்னு அறிவிச்சு விளம்பரம் பண்றதுலயே செலவாயிடுது. அப்பறம் திட்டமாவது பயனாவது? பாருங்க... இவுங்களைப் பத்தி பேச ஆரம்பிச்சாலே மறுபடி நெகடிவ் ரூட்ல போகுது.... :(

பாவம் பரேட்டோ.... இப்பிடி ஆகும்னு நினைச்சுப் பார்த்திருக்க மாட்டார். எதுவா இருந்தாலும் 80:20யை நாம கொஞ்சம் பாசிட்டிவ்வாவே பார்ப்போம்.

14 பேர் என்ன நெனைக்கிறாங்கன்னா..:

அறிவிலி said...

இதை நாங்க மெஷின் ஃபெயிலியர் அனலிஸிஸுக்கு கூட யூஸ் பண்ணுவோம். 20 சதவிகித காரணங்கள்தான் 80 சதவிகித ப்ரேக் டவுன் ஹவர்ஸுக்கு காரணம் என்று....

நல்ல இடுகை..

ஸ்வாமி ஓம்கார் said...

ஈஷாவாசிய உபநிஷத்தில் என்ன சொல்லறாங்கன்னா....


சரி விடுங்க... :)


20:20 விளையாடும் நாட்டில் 80:20 பத்தி பேசிக்கிட்டு...

குடுகுடுப்பை said...

கொல்டிங்க பில்லிங் ரேட்டோன்னு நெனச்சேன்.

ஆனா நீர் வழக்கம்போல உருப்படியான விசயத்தை எழுதிருக்கீர்.

Mahesh said...

நன்றி அறிவிலி.... மீதி 80% காரணங்கள் இந்த 20%டோட உபகாரணங்கள்....

ஸ்வாமி... நன்றி... என்ன சொல்றாங்கன்னு சொல்லலயே :(

நன்றி கு.கு....உருப்படியா? ஹ்ம்ம்ம்... நீங்களாவது சொல்றீங்களே !! நன்றி....

Mahesh said...

@ கு.கு : அதென்ன கொல்டிங்க பில்லிங் ரேட்?

சி தயாளன் said...

உந்த 80:20 பாடமாகவே இருக்கு என்று நினைக்கிறேன்...;-)

velji said...

மேலாண்மை விஷயத்தை சுவராசியமாகவே சொல்லியிருக்கிறீர்கள்!

velji said...

மேலாண்மை விஷயத்தை சுவராசியமாகவே சொல்லியிருக்கிறீர்கள்!

Mahesh said...

நன்றி டொன்லீ.... பாடமா?? இருக்கலாம்...

நன்றி velji....

பாவக்காய் said...

@குகு
>> கொல்டிங்க பில்லிங் ரேட்டோன்னு நெனச்சேன்.

ha ..ha.. !! naanum adhedhaan ninaichen... enna da narsim-kum , idharkkum enna relation-nnu!!

அது சரி(18185106603874041862) said...

//
மேல சொன்ன உதாரணம் ஒரு Ideal world நிகழ்வு மாதிரி தோணலாம். ஏன்னா இந்த மாதிரி அடிப்படை விஷயங்களைக் கூட நம்ம "மாண்புமிகு"க்களெல்லாம் கெடுத்து குட்டிச்சுவர் பண்ணி, 80% திட்ட ஒதுக்கீடு 20 பேர் பாக்கெட்ல ஒதுங்கிடுது. மீதி 20% அந்த பயன் உண்மையா யாருக்கெல்லாம் போய் சேரணுமோ, அவங்களுக்கு, இப்பிடி ஒரு திட்டம் இருக்குன்னு அறிவிச்சு விளம்பரம் பண்றதுலயே செலவாயிடுது.
//

ஸாரி மகேஷ்...

நீங்கள் தவறான தகவலை பரப்புகிறீர்கள்....எண்பது சதவீதம் பாக்கெட்டில் ஒதுங்கி விடுகிறது என்று கேப்டன் கூட சொல்வதில்லை...இப்படி சொல்வதால் நீங்கள் அரசியல்/அதிகார வர்கத்தின் கைக்கூலி என்று நினைக்க வேண்டியிருக்கிறது.... :0)))))

உண்மையில், தொண்ணூறு சதவீதம் அரசியல்/அதிகார முதலைகளுக்கு போகிறது....ஒன்பது சதவீதம் அடிக்கல் நாட்டவும், கல் நட வரும் "மாபெரும் தலைவனை" வாழ்த்தி அல்லைக்கைகள் போஸ்டர் ஒட்டவும், தானைத் தலைவனுக்கு விழா நடத்தவும், அதற்கு மேடை போடவும், அதில் குத்தாட்டம் போட்டு "டமில்" வளர்க்க நடிகைகளை புக் செய்யவும், பொன்னாடைக்கும், திட்டம் பற்றி குடும்ப டி.வி, கட்சி பத்திரிக்கை, அல்லக்கை பத்திரிக்கைகளில் விளம்பரம் செய்யவும் செலவாகிறது...

மீதி இருப்பது ஒரு சதவீதம்....

Mahesh said...

வருகைக்கு நன்றி பாவக்காய்... என்ன கேக்கறீங்கன்னு புரியலயே....

நன்றி அதுசரி.... கரெக்டுங்க !!!

Thamira said...

100 : 100 .. உங்களுக்கான மார்க்.!

Mahesh said...

நன்றி ஆதி.... இன்னிக்கு கொஞ்சம் டைம் கிடைச்சுது போல இருக்கே.... எல்லாத்துக்கும் டாண் டாண்ணு கமெண்ட் போட்டுட்டீங்களே !!!