Wednesday, April 29, 2009

சமாதானம் - சில அவதானங்கள்


உன் குடையின் கீழே இருக்கும் மக்கள் யாவரும் உன்னுடைய மக்கள் என்ற எண்ணம் இல்லாதவரை உன்னால் சமாதானத்தை நிலை நாட்ட முடியாது - புற நானூற்றுப் பாடல்

ஒரு கௌரவத்துடன் சமாதானத்தை நிலை நிறுத்த இயலாதானால், அது சமாதானமாக இருக்க முடியாது - ஜான் ரஸல்

உனக்குள்ளே அமைதி இருந்தால் மட்டுமே உன்னால் உலகத்துக்கு அமைதியை அளிக்க முடியும். குறைந்த பட்சம் உன் நாட்டு மக்களுக்கு. - தாமஸ் கெம்பிஸ்

அடக்குமுறையின் மூலம் சமாதானத்தை அடைய முடியாது.... புரிதலின் மூலம் மட்டுமே அது சாத்தியம் - ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்

போர் முடிவுக்கு வந்து சமாதானம் பிறக்கும் - மரித்த ஒவ்வொரு உயிரும் திரும்ப வருமானால்.... - ஸ்டான்லி பால்ட்வின்

உரிமையுள்ள ஒரு போரை விட ஒருதலைப் பட்சமான சமாதானத்தையே விரும்புகிறேன் - சிசிரோ

யாராலும் ஒரே சமயத்தில் போரை நடத்தவும் சமாதானத்தை நிலை நாட்டவும் முடியாது ; சமாதானம் என்று முழங்கும் கொடுங்கோலர்களைத் தவிர - யாரோ

இரு போர்களுக்கு இடையில் எல்லாருமே தேவதூதர்கள்தான் ; இரு உணவுகளுக்கு இடையில் உண்ணாமல் இருப்பதைப் போல... - கால்மன் மெக்கார்தி

போரில் தந்தைகள் மகன்களை புதைக்கின்றனர் ; சமாதானத்தில் மகன்கள் தந்தைகளைப் புதைக்கின்றனர் - க்ரூசஸ்

முந்தைய பதிவு போரைப் பற்றி சில பேர்

Tuesday, April 28, 2009

உலக பணியிட பாதுகாப்பு நாள் - ஏப்ரல் 28இன்று "உலக பணியிட பாதுகாப்பு நாள்". உலகம் முழுவதும் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் அனைத்து பணியிடங்களிலும் உள்ள தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த ஜுன் 2003ல் நடந்த உலக பணியாளர் மாநாட்டில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஒவ்வொரு வருடமும் ஒரு குறிப்பிட்ட கருத்தை வலியுறுத்தி ஏப்ரல் 28ம் தேதி இந்த நாள் உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. பணியிடத்தில் மாண்டவர்களின் நினைவு நாளாகவும் கூட.

 • பாதுகாப்பான வேலை முறைகள் என்பது ஒரு கலாச்சாரமாகவே மாற வேண்டும் என்று முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
 • பணியில், பணியிடத்தில், பணி முறைகளில் என்று எல்லா இடத்திலும் தொழிலாளியின் உயிருக்கு பாதுகாப்பு என்பது ஒரு அடிப்படை உரிமை என்றும், இது நிர்வாகத்தின் எல்லா நிலைகளிலும் வேறுபாடு பாராட்டாமல் மதிக்கப்பட வேண்டும் என்பதும் வலியுறுத்தப்படுகின்றன.
 • எந்த ஒரு பணி மற்றும் அதன் செய்முறைகளும் விபத்துகள் தவிர்க்கப்பட வேண்டும் என்ற அடிப்படைக் கொள்கையுடன் வடிவமைக்கப்பட வேண்டும்.
 • பாதுகாப்பு விஷயத்தில் பொருளாதார சரிவு, உலகமயமாக்கல், பருவநிலை மாற்றம் என்பது போன்ற எந்த ஒரு வெளிக்காரணமும் இடையூறாக இருக்கக் கூடாது
 • பாதுகாப்பு விஷயத்தில் எந்த நீக்குப் போக்குக்கும் இடம் கொடுக்கக்கூடாது

!! மனித உயிர் விலைமதிப்பற்றது !!

!! பணியிடங்களைப் பாதுகாப்பாக வைத்திருப்போம் !!

!! பாதுகாப்புடன் பணியாற்றுவோம் !!

!! பாதுகாப்பு என்பதை ஒரு கலாச்சாரமாகப் பேணுவோம் !!


இதை ஒட்டிய முந்தைய பதிவு ......

Thursday, April 23, 2009

கிச்சடி 23.04.2009போன வாரத்தில் ஒரு நாள்...

"ஒரே டயர்டா இருக்கு... இன்னிக்கி நைட் நீங்களே எதாவது டிஃபன் பண்ணிடுங்க"

"ம்..."

"உப்புமாவே பண்ணிடுங்க... சீக்கிரம் ஆகும். சாப்ட்டுட்டு தூங்கலாம்.."

"ம்..."

"வெங்காயம் சின்னதா நறுக்குங்க... மொடா மொடாவா நறுக்கிடாதீங்க..."

"ம்..."

"எண்ணை அளவா.... அடுப்பை 'பே'ன்னு எரிய விட்டு கடுகைக் கருக்கிடாதீங்க.. ரவையை நல்லா வறுத்துடுங்க... இல்லாட்டா பச்சை வாசனை புரட்டும்... "

"ம்..."

"ஒரு டம்ளருக்கு 2 டம்ளர் தண்ணி.... ஜாஸ்தி விட்டு களி மாதிரி ஆக்கிடாதீங்க... தண்ணில ரவையை கொஞ்ச கொஞ்சமாப் போட்டு கிளறிக்கிட்டே இருங்க.... கட்டி தட்டிடப் போகுது... உப்பு அளவாப் போடுங்க... உப்புமா ஆக்கிடாதீங்க "

"ம்..."

(10 நிமிஷம் கழிச்சு...........)

"அட.... நல்லா டேஸ்டாவே இருக்கே.... உங்க பொண்ணு இன்னிக்கு ஒரு பிடி பிடிக்கப் போறா... தேங்கா எண்ணையா போட்டீங்க... வாசனையா இருக்கே... கேரட்லாம் போட்டு... அட முந்திரி வேற... மஞ்சள் கொஞ்சமாப் போட்டு அப்பிடி கோல்ட் கலர்ல டாலடிக்குதே... தக்காளி எல்லாம் பொடிப் பொடியாப் போட்டு.... ம்ம்ம்... கொத்தமல்லி தூவி... அட்டகாசமா இருக்கே.... அம்மாடி... ஒரு உப்புமாவை உங்களைப் பண்ண வெக்கறதுக்குள்ள உம்பாடு எம்பாடுன்னு ஆகுதே...."

ஙே !!

நெஜமாவே கிச்சடி பண்ணினேன் !!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

போன வாரம் ஒரே சண்டை வாரமாப் போச்சு !! போன மாசம் பூரா ஜெனிவாவுல செலவு பண்ணதுக்கு (கார்பொரேட் கார்டுலதான்) ஸ்டேட்மென்ட் வந்தது. நேத்திக்கு ட்யூன்னு போட்டு. பொறுமையாப் பேசிப் பிரயோஜனம் இல்லாம காச் மூச்சுனு கத்தி 3 வாரம் எக்ஸ்டென்ஷன் குடுத்தா மகராசி.

3 மாசம் முன்னாடியே கம்பெனி ஸ்பான்சர்ல ஒரு ட்ரெய்னிங் கோர்ஸுக்கு புக் பண்ணி வெச்சுருந்தேன். ஊர்ல இல்லாததால போக முடியல. கோர்ஸ் ஆரம்பிக்கறதுக்கு ஒரு நாள் முன்னாடி மெயில் வருது. "நாளைக்கு க்ளாசுக்குப் போ. இல்லாட்டி கோர்ஸை ட்ராப் பண்ணு"ன்னு. சரி நாம சிங்கப்பூர் போக இன்னும் 2 நாள் இருக்கேன்னு ட்ராப் பண்ணினா "ஓகே. நோ ப்ராப்ளம்ஸ். ட்ராப் ஃபீஸ் 1450$. தேங்க்ஸ்"னு மெயில் வருது. நோ ப்ராப்ளம்ஸா? இப்பத்தானே ஸ்டார்ட் ஆகுது? நமக்கு ஒதுக்கறதே சின்ன பட்ஜெட். அதுலயும் புடுங்குனா? HR-ஐக் கூப்ட்டு "என்னாய்யா சிஸ்டம் வெச்சுருக்கீங்க... எம்ப்ளாயீஸ்க்கு உபயோகப்படாத சிஸ்டம்..."னு வெளு வெளுன்னு வெளுத்ததுக்கப்பறம் "அவன் கூடப் பேசு... இவ கிட்டப் பேசு"ன்னு மெயில் மேல மெயில் போட்டு "அய்யா... இனிமே பண்ண மாட்டோம்... இன்னொரு கோர்ஸ் அப்பறமா சேந்துக்குங்க"ன்னு சொல்ற வரைக்கும் "விட்டேனா பார் !!"னு ஆயிடுச்சு.

இதுதான் இப்பிடின்னா பேங்க்கோட ரெக்ரியேசன் க்ளப் மூலமா ஒவ்வொரு மே 1ந் தேதியும் எதாவது ஒரு தியேட்டர்ல சினிமாக்கு ஃபேமிலி டிக்கட் கிடைக்கும். என்ன கோளாறோ இந்த வருஷ ஆரம்பத்துல இருந்தே க்ளப்போடை ஈவண்டுகளுக்கு எனக்கு மெயிலே வரல. ஊருக்கு திரும்பி வந்த பிறகு பாத்தா எல்லாரும் போய் டிக்கட் வாங்கிட்டு வராங்க. உள்ள தூங்கிக்கிட்டு இருந்த விஜயகாந்த் ஏற்கெனெவே போன ரெண்டு சம்பவத்துல எழுந்து உக்காந்து கண்ணைக் கசக்கிக்கிட்டுருந்தாரு. இப்ப அவருக்கு கண்ணு "ஜிவு ஜிவு"ன்னு செவந்து போச்சு. புள்ளி விவரமாப் போட்டு இன்னொரு "விட்டேனா பார் !!" போர். டிக்கட் எல்லாம் தீந்து போச்சேன்னு கைய விரிச்சவனை வெரட்டி 3 டிக்கட் வாங்கின பிறகு "மன்னிப்பு - எனக்குப் புடிக்காத வார்த்தை"ன்னு சொல்லி அனுப்பிச்சேன்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சமீபத்துல "சுகி சிவம்" ஐயாவோட "கீதை அனுபவம்" சொற்பொழிவு mp3 கிடைச்சுது. சுமார் 18 மணிநேரம் இருக்கும். I-Podல போட்டு ஆபீஸ்க்கு போற வர நேரத்துல கேட்டேன். எனக்கு அவரோட ஸ்டைல் ரொம்பப் பிடிக்கும். ரொம்ப யதார்த்தமா தினசரி வாழ்வியலோட ஒட்டியே பேசுவார். அனாவசிய ஜோடனைகள் இருக்காது. சில சமயம் மழுப்பாம மூஞ்சில அடிச்சாப்லயே இருக்கும். அது பலருக்குப் பிடிக்காம இருக்கலாம். ஆனா எனக்கு அதுதான் அவர் கிட்ட பிடிச்ச விஷயம். உள்ளது உள்ளபடி சொல்லணும்.. எதுக்கு, யாருக்கு பயப்படணும்கற அவரோட நேர்மை வணக்கத்துக்குரியது.

க்ஷெ கீதை சொற்பொழிவு மிக மிக மிக மிக அருமை. சில இடங்கள்ல அவருடைய சிந்தனைக் கோணம் 'அட... இப்பிடியும் பாக்கலாமே இதை... அப்ப இப்பிடி அனுபவிக்கலாமே'ன்னு ஆச்சரியப் பட வெச்சுது. நம்ம சிந்தனையும் அதை ஒட்டி பல திசைகள்ல கிளைத்து வேறு மாதிரியான வித்தியாசமான அனுபவங்களைக் கொடுத்தது. தொய்வு இல்லாம இருக்கறதுக்காக அங்கங்க சின்னச் சின்னக் கதைகளும் சொல்லியிருந்தார். ரொம்ப ரசிச்சேன்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

இந்த மாதிரி கிச்சடி, பிரியாணின்னு போட்டா கடேசில ஒரு கவிதை போடணுமாமில்ல. பயப்படாதீங்க (தாமிரா எனப்பட்ட) ஆதி. சொந்தக் கவிதை கிடையாது.

சுஜாதா ஒரு கட்டுரைல "ஹைக்கூ" அப்பிடின்னா ஒரு ஃபோட்டோ மாதிரி, ஒரு கண சிலிர்ப்பு மாதிரி, முடிஞ்சா ஈற்றடில ஒரு முரண் அல்லது திருப்பம் இருக்கணும்னு சொல்லியிருப்பார். சமீபத்துல பதிவர் ரவி ஆதித்யா பதிவுல படிச்சது.

மழை ஒய்ந்த நேரம்
மரத்தடியில்
மீண்டும் மழை


யோசிச்சுப் பாத்தா நான் உப்புமா பண்ணினது கூட ஒரு ஹைக்கூ மாதிரி....

Monday, April 20, 2009

பணியிடத்தில் பாதுகாப்புபல வருடங்களுக்கு முன்னால் சென்னை எண்ணை சுத்திகரிப்பு ஆலையில் (அப்ப MRL இப்ப CPCL) வேலை செய்யும்போது ஒரு ப்ளான்டுக்குள்ள ஹைட்ரஜன் கம்ப்ரசர்ல ஒரு பிரச்னைன்னு ரிப்பேர் பண்ண நானும் (அப்ப நான் ஒரு அப்ரெண்டிஸ்) ஒரு இஞ்சினீயரும் போனோம். காலை மணி 8:30. முதல்ல உள்ள அடைஞ்சுருக்கற மீதி வாயுவை ட்ரைன் பண்ணணும்னு வால்வைத் திறந்து விட்டுட்டு காத்திருந்தோம். 8:55க்கு டீ ப்ரேக். ஆலை பூரா அங்கங்க காண்டீன்க இருக்கும். சரின்னு டீ, பிஸ்கட் சாப்பிட பக்கத்துல இருந்த கேண்டீனுக்கு போகலாம்னு எழுந்தோம்.

ஒரு பத்தடி தூரம் போயிருப்போம்.... "டொம்"னு பெரிய சத்தம். யாரோ பின்னால இருந்து தள்ளி விட்ட மாதிரி ரெண்டு பேரும் குப்பற விழுந்தோம். என்னடான்னு பின்னால பாத்தா.... ஒரே புகை மண்டலம்..... ஒண்ணுமே தெரியல... அப்பிடியே தவழ்ந்து பக்கத்துல ஒரு செவுத்துக்கு பின்னால போய் நின்னுட்டோம். அன்னிக்குத் தலை தப்பிச்சது தம்பிரான் புண்ணியம். ஹைட்ரஜன் வாயு நிறம், மணம் இல்லாதது. அதனால லீக் ஆனது தெரியல. ஒர்க் பெர்மிட் வாங்கும்போதே பக்கத்துல இருக்கற தண்ணி பைப் திறந்து கம்ப்ரசர் மேல ஸ்ப்ரே பண்ணியிருந்தோம். அப்பிடியும் பக்கத்துல ஒரு இடத்துல நடக்கற வெல்டிங்ல இருந்து வந்த ஸ்பார்க்ல தீ பிடிச்சுடுச்சு. சின்ன விபத்துதான். இழப்பு அதிகமில்லை. இருந்தாலும் நான் டிப்ளமோ படிச்சு முடிச்சு வேலைக்கு சேந்த கொஞ்ச நாள்லயே நடந்தது. அதுவும் ஏப்ரல் மாசம். மறக்கவே முடியாது.

அந்த விபத்துக்கு பிறகு ஆலைல பல பெரிய, சிறிய விபத்துகளை நேர்ல பாத்தேன். நானும் சில சிறிய விபத்துகளை சந்திச்சேன். கூட வேலை செஞ்ச ரெண்டொரு நண்பர்கள் வேலை வேண்டாம்னு போயிட்டாங்க. 15 மாசங்கள் கழிச்சு ஏதேதோ காரணங்கள் சொல்லி (வேறென்ன.... மு.வ... பி.வ தான்) எங்க குரூப்ல 6 பேர் தவிர எங்க எல்லாரையும் வீட்டுக்கு அனுப்பிச்சுட்டாங்க. நானும் அதுக்குப் பிறகு மெக்கானிகல் துறையை விட்டு வேறு துறைக்கு மாறிட்டேன்.

எண்ணை சுத்திகரிப்பு ஆலைல, வேலைல பாதுகாப்புக்காக எடுக்கற சில நடவடிக்கைகள் :

 • விபத்து நேர வாய்ப்பில்லாத கருவிகள்
 • ஆபத்து மிகுந்த பணிகளில் தானியங்கி ரோபோக்கள்
 • sensor based தானியங்கி விபத்து அலாரம்கள்
 • சரியான வேலை முறைகள்
 • முறையான பயிற்சிகள்
 • விதிமுறைகளில் தளர்வு, நீக்குப்போக்குக்கு இடம் கொடுக்காமல் இருத்தல்
 • பாதுகாப்பைப் பத்தி மாசம் ஒரு லெக்சர்
 • அங்கங்க பாதுகாப்பை வலியுறுத்தி ஹ்யூமரஸ் போஸ்டர்கள்
 • விபத்தில்லாத நாட்களுக்கு ஊக்கப் பரிசு
 • விபத்துகளை தவிர்க்கறவங்களுக்கு போனஸ்
 • அப்படிப் பட்டவங்களை ரோல் மாடல் ஆக்கி ஒரு மாசத்துக்கு போஸ்டர்
 • அவங்களை வெச்சு மத்தவங்களை மென்டாரிங் பண்றது
 • வேலையிடத்தை சுத்தமா ஆபத்தில்லாத இடமா வெக்கறது
 • மாக் ட்ரில்கள் நடத்தி ஆபத்துக் காலத்துல எப்பிடி நடந்துக்கணும்னு ஒத்திகை பாக்கறது
 • விபத்துகளை எதிர்பார்த்து ஒரு தொகையை ஒதுக்கி வெச்சு, விபத்துகள் நடக்காம அதுல மிச்சமாகிறதை தொழிலாளிகளுக்கு பிரிச்சு குடுக்கறது
 • .................
 • ................
இவ்வளவு பண்ணியும் விபத்துகள் நிகழ்ந்துக்கிட்டேதான் இருக்கு. சில நேரங்கள்ல இயந்திரக் கோளாறுகளால நடந்தாலும் பல நேரங்கள்ல மனிதத் தவறுகள்தான் (human errors) முதன்மையான காரணமா இருக்கு. எவ்வளவு கடினமான விதிமுறைகள் இருந்தாலும் அதையெல்லாம் மீறி ஒரு காரியத்தை செஞ்சு பாக்கற மனித இயல்பு, ஒரு த்ரில் அனுபவிக்கற மனோபாவம், தன் குடும்பம் மற்றும் சக ஊழியர்களின் குடும்பங்கள் பற்றிய அலட்சியம் இதெல்லாம் இருக்கற வரைக்கும் விபத்துகள் நிகழ்வதை 100% தடுக்க முடியாது.

நான் சுத்திகரிப்பு ஆலையை விட்டு வெளியே வேறு வேலைக்கு போய் விட்டாலும் MRLல பார்த்த விபத்துகளையும் அதோட பாதிப்புகளையும் மறக்க முடியலை. அதுக்காகவே சென்னை அடையாறில் உள்ள "மண்டல தொழிலாளர் பயிலகம்" (Regional Labour Institute) மூலமா சில யோசனைகளை சமர்ப்பிச்சு, அதுல சில பரிந்துரைகள் இந்தியாவில் உள்ள பல சுத்திகரிப்பு ஆலைகள்ல ஒரு வழிமுறையா (process) ஆக்கப்பட்டதுல மனசுல ஓரமா ஒரு சின்ன பெருமையுடன் கூடிய மகிழ்ச்சி. இந்த வருஷமும் ஒரு பரிந்துரை கடைசி கட்டப் பரிசீலனைல இருக்கு. MRLல என்னோட வேலை பாத்த மற்ற நண்பர்களின் உதவியோட இது சாத்தியமாகி இருக்கு.

ஏப்ரல் 28 "பணியிடப் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கிய நாள்". Day for Safety & Health at Work. உலக தொழிலாளர் அமைப்பு (ILO) வருஷா வருஷம் ஒரு தீம் எடுத்துக்கிட்டு எல்லா பணியிடங்கள்லயும் பாதுகாப்பை மேம்படுத்தவும், விபத்துகளை குறைக்கவும் முயற்சிகள் எடுக்கறாங்க. தொழிலாளர்களிடையே அதுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவங்களை மனதளவில் தயார் பண்ணவும் பயிற்சி அளிக்கறாங்க. கடந்த 10 வருஷத்துல விபத்துகள் எவ்வளவோ குறைஞ்சுடுச்சு. எப்பிடியோ விபத்துகள் குறைஞ்சு, உற்பத்தி அதிகமாகி விலைகள் குறைஞ்சா எல்லாருக்கும் மகிழ்ச்சிதான்.

பணியிடத்துல பாதுகாப்புங்கறது ஒவ்வொரு தொழிலாளியின் உரிமை. கடமையும் கூட.


கார்ட்டூன்களுக்கு நன்றி : கார்ட்டூன்ஸ்டாக்.காம்


Monday, April 13, 2009

பெஞ்சமின் பட்டன் - சினிமா விமர்சனம்


The Curious Case of Benjamin Button (2008)
Bradd Pitt, Cate Blanchetகொஞ்ச மாசமா நம்ம லிஸ்ட்ல நிலுவைல இருந்த படம். இப்பப் பாக்கலாம் அப்பறம் பாக்கலாம்னு ஒரு வழியா பாக்க சந்தர்ப்பம் அமைஞ்சுது. '20கள்ல அமெரிக்க எழுத்தாளர் ஸ்காட் ஃபிட்ஸ்ஜெரால்ட் எழுதின ஒரு சிறுகதையை ஒட்டி எடுக்கப்பட்ட படம். முழுக்கற்பனை. இயல்பு வாழ்க்கைல நடக்க சாத்தியமே இல்லாத ஒரு சம்பவத்தை கற்பனை பண்ணி "இப்பிடி நடந்தா எப்படி இருக்கும்?" டைப் கதை.


உலகப் போர் முடிஞ்சு உலகமே அதைக் கொண்டாடற சமயத்துல ஒரு குழந்தை பிறக்குது. பிரசவத்துல தாய் மரணம். அப்பாவுக்கு குழந்தையப் பாக்கவே பிடிக்கல. பிறக்கும்போதே ஒரு 80 வயசுக்குண்டான கிழத்தோற்றம். தோல் சுருங்கி, கண்ல புரையோடி, காது கேக்காம, எலும்பெல்லாம் வலு இல்லாம....... வேறென்ன பண்ணுவான் பணக்காரத் தகப்பன்? குழந்தையை ஒரு காப்பகத்துல விட்டுட்டு ஓடிடறான். 'தெய்வ மகன்' படம் ஞாபகம் வந்துது. ஆனா கதை அது இல்ல.


குழந்தையோட வளர்ச்சி வினோதமா, காலத்தை எதிர்த்து, முடிவுல தொடங்கி, தொடக்கத்துல முடியுது. (அது_சரி : விசு... விசு...) 80 வயசு தாத்தாவா இருந்தவன்(ர்?) கொஞ்சம் கொஞ்சமா இளமையாகி கடைசில.... கடைசில... ஒரு கைகுழந்தையா வளர்ந்து (!!) கண்ணை மூடறான். சிக்கலான ப்ளாட். ஆனா இதுக்கு திரைக்கதை எழுதுனவங்க பாக்கியராஜ் கிட்ட அசிஸ்டெண்டா இருந்துருப்பாங்க போல. நீரோட்டம் மாதிரி க்ளீனா இருக்கு. கதையை ஆரம்பிச்சு, பெஞ்சமினோட பொண்ணை (அவதான் அவன் பொண்ணுன்னு தெரியாமயே) வெச்சே ஒரு டைரியைப் படிக்க வெச்சு, கடைசிப் பகுதியை பெஞ்சமினோட மனைவி வழியா சொல்ல வெச்சு... ரொம்ப மெனக்கெட்டுருக்காங்க.


படம் எடுக்கலாம்னு முடிவு பண்ணி அது பல கை மாறி, கடைசியா எடுத்து முடிச்சு வெளி வர 20 வருஷம் ஆயிருக்கு. ஒருவகைல பாத்தா டிலே ஆனது நல்லதுதான் போல. இல்லாட்டி டெக்னாலஜி உதவியோட மேக்கப் எல்லாம் இவ்வளவு தத்ரூபமா இருந்துருக்குமாங்கறது சந்தேகந்தான். ப்ராட் பிட் நல்ல நடிப்பு. Fall of the Legend பாத்ததுல இருந்தே எனக்கு ப்ராட் பிட்டை ரொம்பப் பிடிக்கும். இந்தப் படத்துலயும் அவனும் காதலியும் காலப்பாதைல எதிர் எதிர் திசைல பயணம் பண்ணி நடுவுல கிட்டத்தட்ட சம வயசுல கல்யாணம் பண்ணி, பெண் குழந்தை பிறக்குது. அதே எதிர் ஓட்டத்துல தன் மகளுக்கு தான் தகப்பனா இருக்க முடியாதுன்னு முடிவு பண்ணி குடும்பத்துக்கு வேணுங்கற ஏற்பாடெல்லாம் செஞ்சுட்டு வீட்டை விட்டு வெளியேறரது, உண்மையான அப்பாவை சந்திக்கறது, வளர்ப்பு அம்மா கிட்ட பாசம்னு ப்ராட் பிட் அமைதியா அனுபவிச்சு நடிச்சுருக்காரு. பாலே டேன்சரா வர கேட் ப்ளான்ஷெவும் அதுக்கு ஈடு குடுத்து நல்ல நடிப்பு. பல இடங்கள்ல வசனங்கள் ஷார்ப்.


ரொம்ப போட்டுக் குழப்பாம தெளிவா எடுத்திருந்தாலும் கேரக்டர்க கொஞ்சம் அதிகந்தான். படத்தோட முடிவுல ஒரு மோண்டாஜ்ல எல்லாக் கேரக்டர்களையும் காட்டி ஒரு சின்ன செய்தி (கார்டு போடாம) சொல்றாங்க.


இந்தப் படத்தை பாத்து முடிச்சதும், நம்ம ஸ்வாமி ஓம்கார் அவரோட அகோரிகள் பத்தின இடுகைகள்ல இதே மாதிரி ஒரு வினோத நிகழ்வைப் பத்தி எழுதியிருந்தது ஞாபகம் வந்துது. அதுலயே அந்த வினோத வழக்கோட சுட்டியும் குடுத்திருந்தார். அந்த இடுகைக்கான சுட்டியும், வழக்கைப் பற்றிய சுட்டியும் கீழே :


http://vediceye.blogspot.com/2009/02/blog-post_19.html


http://en.wikipedia.org/wiki/Bhawal_case

Friday, April 10, 2009

மொளச்சு வரும்போது.... 6

முந்தைய இடுகைகள் ...1 ...2 ...3 ...4 ...5


அஞ்சாம் வகுப்பு வரைக்கும் என்னோட க்ளோஸ் ஃப்ரெண்டுனா அது சிராஜ். க்ளாஸ்லயே அவந்தான் ஒசரமா இருப்பான். நான் அப்ப குள்ள புஸ்கா. ஒரு பாதுகாப்புக்காகவே அவனோடயே சுத்திக்கிட்டுருப்பேன். அவனுக்கு படிப்பு அவ்வளவா ஏறல. பாஸ் பண்றதைப் பத்தியெல்லாம் அவனுக்கு கவலையே இருக்காது. அவனைப் பாஸ் பண்ண வெக்கறதுக்குள்ள வாத்தியார் பாடுதான் திண்டாட்டமாப் போயிடும். சுகுணா டீச்சர், மல்லிகா டீச்சர், பங்கஜம் டீச்சர் இவுங்க மூணு பேரும் அவனை எப்பிடியாவது பாஸ் பண்ண வெச்சுடணும்னு அவனுக்குன்னு தனியா க்ளாஸ் போட்டெல்லாம் முசுவா வேலை பாத்தாங்க. அப்பிடி இப்பிடி தாக்காட்டி அவனை 6ம் வகுப்புக்கு ஹைஸ்கூலுக்கு தள்ளி விட்டுட்டா கொஞ்சம் மூச்சு விட்டுக்கலாம்னு பாத்தாங்க. ம்ம்ம்... நம்மாளு இதுக்கெல்லாம் அசருவானா? ஸ்டூல், குதர, ஏணி, லிஃப்ட்... எது வெச்சாலும் அவன் மண்டைக்கு மட்டும் ஒண்ணும் ஏறல. "நீங்க ரெண்டு பேருந்தான் ஈயும் பீயுமாச்செ... நீயாச்சும் அவனுக்கு சொல்லிக் குடுத்து உங்கூட ஐஸ்கூலுக்கு கூட்டிட்டுப் போயேன்" னாங்க.


சரின்னு லாஜிஸ்டிக்ஸ் எல்லாம் முடிவாச்சு. அதாவது சாயங்காலம் பள்ளியோடம் விட்டதும் நான் அவங்கூட அவன் வீட்டுக்குப் போய் கூடவே படிக்கணும், சொல்லிக் குடுக்கணும். நல்ல முகூர்த்த நாளாப் பாத்து ஆரம்பிச்சோம். அவன் வீடு ரயில்வே கேட்டுக்குப் பக்கத்துல. இன்னும் ஒரு 300 மீட்டர் தள்ளி ரயில்வே ஸ்டேசன். அதுக்கு பக்கத்து வீடு உடுமலைல ரொம்ப ஃபேமஸான ஒரு பேக்கரிக்காரங்க வீடு. பின்னாலயே பன்,ரஸ்க் எல்லாம் பண்றது வாசனை மூக்கத் தொளைக்கும். சிராஜ் வீட்டுக்குள்ளயே ஒரு சின்ன தோட்டம். ரெண்டு ஆடு வேற வளத்துக்கிட்டுருந்தாங்க. இப்பிடி ஒரு இடத்துல படிக்கத் தோணுமா? மொத நாள் மட்டும் கொஞ்ச நேரம் படிச்சோம்னு பேர் பண்ணினோம். அதுக்குள்ளயே அவுங்க அம்மா என்னென்னவோ இனிப்பு காரம்னு திங்கக் குடுத்துக்கிட்டே இருந்தாங்க. அடுத்த நாள்ல இருந்து சிராஜ் அவன் வேலையை காமிக்க ஆரம்பிச்சான்.

மொதல்ல ஆட்டைத் தொரத்திப் புடிச்சு பால் கறந்து குடிப்போம். பச்சைப் பால் லேசா வெதுவெதுன்னு எளஞ்சூட்ல இருக்கும். சும்மா ஒரு கால் டம்ளர்தான் கறப்பான். அதுக்குள்ளயே நாலு ஒதை வாங்குவோம். அப்பறம் பேக்கரி வீட்டுக்குள்ள எட்டிக் குதிச்சு கிச்சனுக்குள்ள போவோம். ரொட்டி பண்றவரு அவனுக்கு ஃப்ரெண்டு. ஆளுக்கு இம்புட்டு ரொட்டி மாவு குடுப்பாரு. சவ சன்னு இனிப்பா இருக்கும். ஒரு பெரிய்ய்ய்ய்ய்ய கரண்டியை அடுப்புக்குள்ள விட்டு தட்டு தட்டா வெளிய எடுத்து வெப்பாரு. ஆறாறு பன்னு ஒரு தட்டுக்கு. அதெல்லாம் கண்ணாடிக் காய்தம் சுத்தி வெக்கறது, பெட்டில அடுக்க்றது, நடுவுல நாங்க ரெண்டு உள்ள தள்றதுன்னு இப்பிடியே பொழுது போயிரும். பன்னா சாப்ட்டுட்டு வயிறு புர்..புர்..ன்னு பொறுமிக்கிட்டே இருக்கும். அஞ்சே முக்காலுக்கு பழனி-பொள்ளாச்சி பாசஞ்சர் ட்ரெய்ன் வரும். கேட்டு போட்டதும் ரெண்டு பேரு ஒடிப் போய் தண்டவாளத்துல கொட்டியிருக்கற ஜல்லிக்கல்லெல்லாம் எடுத்து வரிசையா தண்டவாளத்து மேல வெச்சுருவோம். ரயில் மேல ஏறி எல்லாம் பொடிப் பொடியா ஆயிரும். கேட் கீப்பர் ஜாகீர் மாமா தினமும் எங்களை வெரட்டுவாரு. கல்லு மேல ஏறி ரயில் கவுந்துதுன்னா ரெண்டு பேரும் ஜெயிலுக்குப் போகணும்னு அவர் மெரட்டுனதுல கொஞ்சம் பயந்துதான் போனோம்.

அப்பறம் அதை விட்டுட்டு ரயில் வரதுக்கு முன்னாடி ஸ்டேசனுக்கு போய் நின்னுக்குவோம். கேங்மேன் செல்வராஜ் கூட டவர் மேல ஏறிப் போய் அவர் லைன் மாத்தறதெல்லாம் வேடிக்கை பாப்போம். டவர் மேல இருந்து தூரத்துல் ரயில் லைன் மாறறது, கைகாட்டி எறங்கறது எல்லாம் பாக்க பாக்க ஆசையா இருக்கும். டவர்ல இருக்கற லீவர்கள்ல இருந்து கம்பிக கட்டி தண்டவாளத்தை ஒட்டி சின்ன சின்ன உருளைக வழியா போய் எங்கியோ தூரத்துல இருக்கற கைகாட்டி படக்குனு எறங்கறதெல்லாம் ஆச்சரியமா இருக்கும். மாசம் ஒருக்கா எல்லா உருளைகளுக்கும் கிரீஸ் வெப்பாங்க. நாங்களும் ஒத்தாசை பண்றோம்னு போய் கிரீஸ் டப்பாவை கவுத்த பிறகு "கண்ணுகளா... இனிமே இக்கட்ட வந்தீங்க... வெரலை ஒடிச்சுப் போடுவேன்"ன்னு பாசமா சொன்ன பிறகு அதுவும் போச்சு. ஆறு மணியாச்சுன்னா கேட்டு, கைகாட்டி இதுகள்ல இருக்கற வெளக்குக்கெல்லாம் மண்ணெண்ணை ஊத்தி திரியைத் தூண்டி ஏத்தி வெக்க ஜாகீர் மாமா போவாரு. அவர் கூட கொஞ்ச நாள்.

இப்பிடி வெளையாட்டாவே பொழுது போக்குனமே தவிர மொத நாள் மட்டும் படிச்சதுதான்.அப்பறம் படிக்கவே இல்லை. சிராஜ் வீட்டுலயும் இதைப் பெருசா கண்டுக்கலை. நல்ல பெரிய வசதியான குடும்பம். கடைசில அந்த வருசம் அவன் ஃபெயில் ஆயிட்டான். எனக்குத்தான் ரொம்ப வருத்தமா இருந்துது. வெளயாட்டுத் தோழனை இனிமே அடிக்கடி பாக்க முடியாதுன்னு. அதுக்கு ஏத்த மாதிரி ஹைஸ்கூல்ல ஷிஃப்ட் முறை. காத்தால 6:45 ல இருந்து 1 மணி வரைக்கும்தான் ஸ்கூல். வகுப்பறை பத்தாக்குறையால அப்படி ஒரு ஏற்பாடு. கொஞ்ச நாள்லயே சிராஜோட குடும்பம் பள்ளபட்டிக்கு போயிடுச்சு. பஸ்ஸ்டாண்டுல அவுங்க ஈரோடு பஸ்ல ஏறும்போது ரொம்ப சங்கடமா இருந்துது. சிராஜ் எங்கூட பேசவே இல்ல. அவனோட அம்மாவும் அப்பாவுந்தான் பேசினாங்க. அதுக்கப்பறம் இன்னிக்கு வரைக்கும் அவனை சந்திக்கவே இல்லை. எங்க இருக்கான், என்ன பண்றான் எதுவும் தெரியல.எப்பவும் எதைப்பத்தியும் கவலை இல்லாம வேடிக்கையும் துள்ளலுமா துறுதுறுன்னு இருக்கற அவன் முகம் கடைசியா பஸ்ல ஏறும்போது வாடி இருந்தது மட்டும் ஃபோட்டொ புடிச்ச மாதிரி பச்சக்னு இன்னும் மனசுக்குள்ள இருக்கு. எப்பா சிராஜ்... நீ எங்கடா இருக்க?


எல்லாரும் பழைய தொடர்பு விட்டுப் போன நண்பர்களுக்கு கடுதாசி போட்டுக்கிட்டுருக்காங்க.... இந்த இடுகையை சிராஜ் படிச்சு மறுபடி அவனை சந்திக்க முடிஞ்சா எம்புட்டு நல்லா இருக்கும்?


சிராஜுக்குப் பிறகு 6ல இருந்து 10 வரைக்கும் ஜிகிரி தோஸ்தா இருந்த கிஷோரைப் பத்தி..... அப்பறமா.... இன்னொரு நாளைக்கு....

Wednesday, April 8, 2009

!! Zytglogge !!

போன இடுகைல ஸ்விஸ் தலைநகரம் பெர்ன்ல இருக்கற Zytglogge அப்பிடிங்கற கடிகார கோபுரத்தைப் பத்தி எழுதியிருந்தேன். சில வாசகர்கள் அந்த கடிகாரத்தை படிப்பது எப்படின்னு மெயில்லயும் ஃபோன்லயும் கேட்டாங்க. ஒரு தனி இடுகையாவே போட்டுடலாம்னு தோணுச்சு. பின்ன? இடுகைக்கு விஷயம் கிடைக்கிறதே பெருசு... கிடைச்ச சான்ஸை விடலாமா?

இந்தப் படத்தில் அது காட்டும் நேரம் : மார்ச் 29, ஞாயிறு, 11:30. படத்தை க்ளிக்கி பெரிதாக்கிப் பாருங்க. ஆனா நான் எடுத்தது மார்ச் 29, ஞாயிறு, 12:30. இந்த பிழை எதனால்? ஐரொப்பால ஒவ்வொரு மார்ச் கடைசி ஞாயிற்றுக் கிழமையும் காலை 2 மணிக்கு பகல் நேரததை மிச்சம் பண்றதுக்காக (Day Light Saving) 1 மணி நேரம் கூட்டி வெச்சுடுவாங்க. (மறுபடி இதை செப்டெம்பர் கடைசி ஞாயிறு காலைல 1 மணி நேரம் குறைச்சு வெச்சுடுவாங்க. தானிகி தீனி சரிக போத்துந்தி காதா? இதுவாவது பரவால்ல.... அமெரிக்கால 5 கால பிரிவுக. அவங்க குழப்பம் எப்பிடியோ?) இந்த 1 மணி நேர மாற்றத்தை ஏப்ரல் முதல் ஞாயிற்றுக்கிழமைதான் Zytglogge-ஐ சரி பண்ணிக் காமிப்பாங்களாம். அதுவெ ஒரு பெரிய விவரமான வேலை போல. மாத்தறபோது ஏற்படற நேரப்பிழையை சரிபண்றது அது ஒரு தனி வேலையாம்.


எதோ நமக்கு இருக்கற கொஞ்சமே கொஞ்சம் ஜெர்மன் மொழி ஞான(?!!)த்தை வெச்சு அங்க இருந்த போர்டைப் படிச்சு புரிஞ்சு (!!) எழுதியிருக்கேன். அதுலயும் இந்த ராசி விவகாரமெல்லாம் சரியா தப்பான்னு தெரியல. வானவியல் தெரிஞ்ச நம்ம ஸ்வாமி ஓம்கார் மாதிரி யாரவது உறுதிப்படுத்தலாம்.


ஸ்வாமி ஓம்காரின் விளக்கம் :

அஸ்ட்ரானமிக்கல் விஷயம் மற்றும் சின்ன மாற்றம் தேவை.

நீங்கள் பூமி என குறிப்பிட்டது தான் சந்திரன்.

நிங்கள் சந்திரன் என கூறியது லக்னம் (Ascendant).
சூரியன் - மேஷத்தில்
சந்திரன் - ரிஷபத்தில்
லக்னம் - துலா ராசியில்.
மேற்கண்ட தகவல் வெஸ்டென் ஜோதிடத்தின் அடிப்படையில் இருக்கிறது. நமக்கு ஒரு ராசி முன்பு வரும். இருந்தாலும் இதை கைகடிகாரமாக்கினால் ஜோதிடர்களுக்கு நன்கு பயன்படும்.

மிக்க நன்றி ஸ்வாமி ஓம்கார்.


Sunday, April 5, 2009

ஐன்ஸ்டைனை சந்தித்தேன் !!

ஸ்விஸ் நாடாளுமன்றம் - வெளிய செஸ் விளையாட்டு

ஜெனீவா. போன ஞாயித்துக்கிழமை. எப்பாடு பட்டாவது சீக்கிரம் எந்திரிச்சு எங்கயாவது போய் ஒரு ஃபோட்டோ செஷன் போட்டுடணும்னு தீர்மானித்தோட தூங்கியுங் கூட காலைல எழுந்திருக்கும்போது மணி 8. இதுல வேற பகல் நேரத்தை மிச்சம் பண்றோம்னு அதிகாலை 2 மணிக்கு 3 மணின்னு கடிகாரத்தை திருப்பி வெக்கச் சொன்னது மறந்து போச்சு. ஹோட்டல் ரூம் ஜன்னல் வழியாப் பாத்தா மழை இப்பவோ அப்பவோன்னு வர மாதிரியே இருந்துது. "இவிங்க எப்பவுமே இப்பிடித்தான்"ன்னு நினைச்சுக்கிட்டு பெர்ன் (Berne) வரை போய் வரலாம்னு முடிவு பண்ணினேன். அப்பிடி இப்பிடி கிளம்பும்போது மணி 9:30 ஆயிடுச்சு. 10:15 ட்ரெய்னைப் புடிச்சு 12 மணிக்கு போய்ச் சேந்தேன்.

பெர்ன் ஸ்விஸ்ஸோட தலைநகரம். தம்மாத்தூண்டு ஊரு. மொத்த ஊரையும் நடந்தே சுத்தி வந்துடலாம். யுனெஸ்கோ இதை Heritage Cityன்னு சொல்லி பாதுகாக்குது. ரொம்ப அழகான ஊர். "ஆர்" நதி ஒரு பெரிய "U" மாதிரி வளைஞ்சு ஓடுது. நதியோட "U" டெல்டால பெர்ன். ஸ்விஸ் பாராளுமன்றம் இங்கதான் இருக்கு. மொத்தமா மூணே மூணு தெரு. குறுக்க இணைப்புச் சாலைகள். இதுல நிமிஷத்துக்கு ஒரு ட்ராம். அட்டகாசம் தாங்கலை. சாலைகள்ள அங்கங்க செயற்கை நீறூற்றுக. நல்ல கலை நயமிக்க சிலைகளோட.
:

:

:

:

:

பிரதான சாலைக்கு நடுவுல Zytglogge பெரிய்ய்ய்ய்ய சிக்கலான 24 மணி நேர கடிகார கோபுரம். மணி நிமிஷம் மட்டுமில்லாம சூரியன், சந்திரன் இருக்கும் திசை, மாசம், நாள், 12 ராசிகள்ல சூரியனும் சந்திரனும் இருக்கற ராசி, தேய்பிறையா வளர்பிறையா... எல்லாம் காமிக்குது. இவ்வளவு சிக்கலான இயந்திர கடிகாரத்தை 12வது நூற்றாண்டுலயே செஞ்சு அது இன்னும் ஓடிக்கிட்டும் இருக்கறது ஆச்சரியமா இருக்கு.:

:

:

:

:

ஒரு 3 மணி நேரம் ஊரெல்லாம் சுத்தி முடிச்சுட்டு முக்கியமான இடத்துக்கு போனேன். நம்ம ஐன்ஸ்டைன் ம்யூசியம். இயற்பியல் / வானவியல் ஆர்வலர்களோட கடவுள் ஐன்ஸ்டைன். பிறப்பால யூதர். மேல்படிப்புக்காக ஸுரிக் வந்து அப்பறம் பெர்ன்ல செட்டில் ஆயிட்டாரு. பெர்ன்லதான் உலகப் புகழ் பெற்ற "சார்பியல் தத்துவம் (Theory of Relativity)" வெளியிட்டாரு.

ஒளி துகள்களால் ஆனதுன்னு சொல்லி ஃபோட்டானை அறிமுகப்படுத்திய பிறகு க்வாண்டம் இயற்பியல் பிறந்தது. சார்பியல் தத்துவத்தை எல்லாம் விளக்கறதுக்கு எனக்கு அறிவு கம்மி. அது ரொம்பவே ஒரு சிக்கலான தியரி. சுருக்கமா சொன்னா ஒளியின் வேகம் மாறவே மாறாதது. அதுக்கு பதிலா காலம், தூரம் (time & distance) இது ரெண்டும் கூட குறைஞ்சு அட்ஜஸ்ட் பண்ணிக்கணும். ஒளிவேகத்துல பிரயாணம் பண்ணினா தூரம் அதிகமாக அதிகமாக காலம் குறையும். ஆனா அதுவே பூமி மட்டத்துல நேர் எதிர். நாம அதிகம் பயணம் பண்ணினா அதிக நேரம் ஆகும்.

இந்த தத்துவத்தை ஒரு சாதாரண பந்தோட இயக்கத்தை வெச்சு ஒரு ஒலி-ஒளி படமா விளக்கியிருந்தது மூணு நாலு தடவை பாத்ததும் எனக்கே புரிஞ்சுடுச்சு. அப்பறம், ஈர்ப்பு விசையால ஒளி வளையும்னு கண்டுபுடிச்சு, அதை ஒரு சூரிய கிரகணத்தன்னிக்கு நிருப்பிச்சுருக்காரு. அந்த அடிப்படைல மெர்குரி கிரகத்தோட precession (இதுக்கு தமிழ் என்னங்க?) 100 வருஷத்துல 42.98 ஆர்க்செகண்ட் (1/360 பாகை) மாறுபடுதுன்னு கணக்கு போட்டு சொன்னாராம். நரி வலம் போனாலும் இடம் போனாலும் நம்மளைக் கடிக்காமப் போனா சரின்னு இருக்கற என்னை மாதிரி ஆளுக்கு இதோட முக்கியத்துவமோ விளைவோ புரியல. எல்லாத்தையும் விட பருப்பொருளுக்கும் ஆற்றலுக்கும் இடையே உள்ள தொடர்பை (e=mc2) கண்டுபுடிச்சு வெளியிட்டது பெர்ன்லதான்.

காலமும் தூரமும் பார்வையாளனோட இருப்பைப் பொறுத்து மாறுபடும்னு சொன்னதை எதிர்த்தவங்க எத்தனையோ பேர். ஆனாலும் அதை மறுக்க முடியாம அதுதான் இன்னிய க்வாண்டம் இயற்பியலோட அடிப்படையா இருக்கு. காலப்பரவல் (Time Dilation), தூரக்குறைவு (Distance Contraction) இது ரெண்டும் கற்பனை பண்ணிப் பார்க்க கொஞ்சம் கஷ்டமா இருக்கும். ஆனா அறிவியல் உலகத்தையே புரட்டிப் போட்ட தத்துவங்கள்.

அவரோட பிறப்பு, படிப்பு, வாழ்க்கை எல்லாம் விளக்கமா இருக்கு ம்யூசியத்துல. பல காதல்கள், மனைவிகள், காணாமப் போன முதல் பெண்குழந்தை உட்பட. சின்ன வயசுல தலைவர் என்ன அழகா ஹேண்ட்சமா இருக்காரு. பொண்ணுக சுத்தி சுத்தி வந்துருக்கும்.

வாயப் பொளந்துக்கிட்டு ம்யூசியத்துல மட்டுமே சுத்தமா 4 மணி நேரம் செலவழிச்சேன். என்னோட ரொம்ப நாள் ஆசை நிறைவேறினதுல ரொம்ப சந்தோஷத்தோட திரும்ப பார்லிமெண்ட் பக்கம் வந்து கொஞ்சம் ஃபோட்டோக்கள் எடுத்துட்டு மறுபடி ட்ரெய்ன் புடிச்சு 10 மணி சுமாருக்கு ஜெனீவா திரும்பினேன். மறக்க முடியாத நாள்.

வால் : எந்தக்காலத்துலயோ யாரொ ஒரு ஆளு இந்த ஊர்ல ஒரு கரடிய கொன்னுட்டாராம். அதுனாலயே இந்த ஊருக்கு பேரு "பெர்ன்" (ஜெர்மன்ல கரடின்னு அர்த்தம் வர மாதிரி) ஊருக்குள்ள எங்க பாத்தாலும் கரடி சிலை, படம், பொம்மை........ ஊர் நடுவுல ஒரு பெரிய குழி வெட்டி சின்னச் சின்ன குகைக, மரமெல்லாம் வெச்சு ரெண்டு கரடிகளையும் விட்டுருக்காங்க. அது ஒரு டூரிஸ்ட் ஸ்பாட்.

>வேலைப்பளு அதிகமா இருந்ததால கடைய 1 வாரமா திறக்க முடியல. (திறந்திருந்தா மட்டும் கூட்டம் அலைமோதுதாக்கும்??? ) இனிமே இப்பிடித்தான் இருக்கும்னு நினைக்கிறேன். ப்ராஜெக்ட் முடிவை நெருங்கிக்கிட்டுருக்கு. முடிஞ்சபோது எழுதறேன். (நீயெல்லாம் அடிக்கடி எழுதலைன்னு யார் அழுதா?? எதுக்கு இந்த பில்டப்பெல்லாம் ?ம்ம்ம்...?? )

நான் எடுத்ததுல எனக்குப் புடிச்ச ஃபோட்டோ ஹி.. ஹி..ஜெனீவா தொடர்பான எனது பிற இடுகைகள்:

ஜெனீவா !!