Wednesday, March 24, 2010

த்யானமும் வியாக்யானமும்


போன மாதம் பதிவர்கள் ஸ்வாமி ஓம்காரும் கேபிள்காரும் ... மன்னிக்க... கேபிள் சங்கரும் வந்திருந்தனர். வேலைப்பளு காரணமாக முதல் இரண்டு நாட்கள் தவிர சந்திக்க முடியவில்லை. பதிவர் சந்திப்புக்கும் செல்ல இயலாத நிலை. வந்த மறுநாள் வடபத்திரகாளியம்மன் கோவிலில் திரு.ஓம்காரின் "தினம் தினம் திருமந்திரம்" சொற்பொழிவுக்குப் போனதில் செவிக்கும் வயிற்றுக்கும் நிறையவே உணவு கிடைத்தது.

சொற்பொழிவின் முடிவில் கேள்வி நேரத்தின்போது "த்யானம் செய்வதன் மூலம் நாம் அடையும் பயன்கள் என்ன?" என்ற கேள்வி எழுந்தது. அதற்கு ஸ்வாமி ஓம்கார் பதிலிறுக்கும்போது "பயன்கள் என்று எதுவும் சொல்ல முடியாது. அது ஒரு அனுபவம். அது தனிப்பட்ட முறையில் அவரவர் அனுபவத்தில் உணர வேண்டியது" என்று சொன்னார். அதை ஒட்டி நாமும் ஒரு இடுகை இடலாமே என்று கணநேரத்தில் தோன்றினாலும், இன்றுதான் அதை தட்டச்ச நேரம் கிடைத்தது.

பொறுப்பி : இந்த இடுகையிலுள்ள கருத்துகள் நான் படித்து, கேட்டு, உணர்ந்ததன் மூலமான சொந்தக் கருத்துக்களே.

***

அரசன் ஒருவனுக்கு திடீரென ஒருநாள் ஒரு கேள்வி எழுந்தது. அந்த ஊரிலிருந்த ஒரு ஆசிரமத்தில் உள்ள துறவிகள் என்ன செய்து உயர்ந்த நிலையை அடைந்தார்கள்? தன்னை விட அதிகமாக மக்களால் மதிக்கப் படுவதற்கு என்ன காரணம்? இதை தெரிந்து கொண்டு வரலாம் என்று அங்கே சென்று தலைமை குருவை சந்தித்தான்.

"நீங்களெல்லாம் இங்கே என்ன செய்து இப்படி ஒரு உயர்ந்த நிலையை அடைந்திருக்கிறீர்கள் என்று தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன். கொஞ்சம் விளக்க முடியுமா?

"தாராளமாக. என்னோடு வாருங்கள். இதோ படித்துறை. இங்கே நாங்களெல்லாம் குளிக்கிறோம். இதோ கற்கள். இங்கே துணிகளைத் துவைத்து அந்த மரங்களில் உலர்த்தி காய வைக்கிறோம். பிறகு அதோ அந்த சிறிய கூடத்தில் அமர்ந்து உண்கிறோம். இந்த மடத்தில் மக்களை சந்திக்கிறோம். அவ்வளவுதான்..."

மிகுந்த கோவத்துடன் கேட்டான். "என்னை கேலிக்குள்ளாக்குவது போல இருக்கிறதே? அதோ... அந்த தியான மண்டபத்தில் என்ன செய்கிறீர்கள்? அங்கேதானே விஷயமே இருக்கிறது...."

"அதுவா? நீ என்னிடம் கேட்டது நாங்கள் என்ன செய்கிறோம் என்பது. நாங்கள் செய்வதையெல்லாம்தான் உனக்கு எடுத்துச் சொன்னேன். அந்த தியான மண்டபத்தில் நாங்கள் ஒன்றும் செய்வதில்லை. அதனால்தான் உன்னிடம் சொல்லவில்லை. "

***

த்யானம் "செய்தல்" என்பதே சரியா? த்யானிப்பதே நாம் செய்து கொண்டிருக்கிறவற்றை எல்லாம் ஒவ்வொன்றாக விடுவதற்காகத்தான். தியானம் என்பதன் பொருள் "ஆழ்ந்து நோக்குதல்". மனம் அமைதியாவது ஒன்றுதான் நாம் தியானத்தில் இருப்பதன் மூலம் "அடைவது". ஆனால் மனத்தை ஒருமுகப்படுத்தி தியானத்தில் அமர்வது அவ்வளவு சுலபம் அல்ல. இன்றைய பரபரப்பான உலகில் ஒரே சமயத்தில் பல வேலைகளை (multi tasking) செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கும்போது தியானிப்பது என்பது கடினமான காரியமே. தியானத்தில் இருக்கலாம் என்று அமரும்போதுதான் ரேஷன் சர்க்கரை, மின்வெட்டு, தண்ணீர் வராதது, கொடுத்த கடன் எல்லாம் நினைவில் ஓடும். மனதை ஒருமுகப் படுத்தி எண்ணங்களே இல்லாமல் ஓயச் செய்வது என்பது எளிதில் கைகூடாத ஒரு கலை.

அதனால்தான் நம் முன்னோர்கள் ஏதோ ஒன்றில் மனதை நிறுத்தி அதனை ஆழ்ந்து கவனிப்பதன் மூலம் மனதை அமைதிப்படுத்த முடியும் என்று உணர்ந்தனர். உணர்த்தினர். அதற்கு பக்தி ஒரு சிறந்த வழி எனவும் வலியுறுத்தினர். கண்ணனோ கீதையில் கர்ம யோகத்தை வலியுறுத்தினான். ஏனெனில் பக்தியை வலியுறுத்துவது கூட ஒரு சாராருக்கு ஏதோ ஒன்றைத் திணிப்பது போல இருக்கலாம் என்பதாலும், உலக வாழ்க்கையில் செயல் (கர்மம்) இல்லாமல் இருக்க முடியாது என்பதால் செய்யும் செயலில் மனதை நிறுத்தி செயலையே தியானிப்பதன் மூலம் மனம் அமைதி பெறும் என்பது கண்ணனின் பார்வை.

(ஒரு இடைச்செருகல். கர்ம யோகத்தை சொல்லும்போது "செயலைச் செய்; பலனை எதிர்பாராதே" என்ற விளக்கம் பரவலாக இருக்கிறது. ஆனால் கீதையில் சொன்னது "செயலைச் செய்வதில் மட்டுமே நமக்கு choice உண்டு ; அதன் விளைவில் அல்ல ; எப்போதும்... ; எனவே விளைவில் பற்று இல்லாமல் இரு ; அதற்காக செயல் செய்யாதவனாகவும் இருக்காதே" என்பதே. அதனால்தான் செய்யும் செயலையே தியானித்து செய் என்கிறான் கண்ணன்)

என்றாலும் இப்படித்தான் தியானிக்க வேண்டும், இதுதான் சிறந்த வழி என்றெல்லாம் எதுவும் இல்லை. அவரவருக்கு தெரிந்த முறையில் ஒரு பொருளையோ, ஒரு கருத்தையோ பற்றி ஆழ்ந்து கவனிப்பது கூட ஒரு வகையில் தியானமே. நமக்குப் பிடித்த நடிகர், தலைவர், சினிமா, மலர், பாடல் , முதுகு வலி, கொசுக்கடி.... இப்படி எதை வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் ஆழ்ந்து அனுபவிக்கும்பொழுது முடிவில் அது தன்னை - ஒரு உண்மையை, ஒரே உண்மையை - வெளிப்படுத்தும். அது ஒரு அனுபவம். ஆனந்த அனுபவம். ஒரு உணர்வு. ஒரு awareness. விவரிக்க வார்த்தைகளற்ற உணர்வு. பிறரிடம் விவரிக்க தோன்றக் கூட செய்யாத ஒரு உணர்வு. அந்த awarenessதான் மோட்சம், நிர்வாணம், சூன்யம், enlightenment, liberation என்று பல விதமான வார்த்தைகளால் சொல்லப்படுகிறது.

பக்தி யோகமோ, கர்ம யோகமோ, நாத யோகமோ, ஸ்புரண யோகமோ எதை வேண்டுமானாலும் - அதன் மையக்கருத்து அல்லது தன்மை மனத்தை அமைதிபடுத்துவது ஒன்றே என்று இருக்கிற வரையில் - பின்பற்றலாம். வழி எதுவாக இருந்தாலும் முடிவு ஒன்றுதான். அவரவர் சொந்த அனுபவத்தில் பெறவேண்டிய ஒன்றை யாரும் யாருக்கும் விளக்கவோ, விளங்க வைக்கவோ முடியாது.

அப்படி விளங்க முடியாத ஒன்றுக்காக எதற்காக மெனக்கெட வேண்டும்? விளங்காத புதிராகவே இருந்து விட்டுப் போகட்டுமே.... எனக்கு என்ன இழப்பு வந்து விடும்? மிகச்சரி. தியானத்தில் "அடைவது" என்று ஒன்றும் இல்லை என்பதால் "இழப்பு" என்றும் எதுவும் இல்லை. சரியா?