Monday, March 30, 2009

செப்பு மொழிகளும்.... சிந்தனையும்.....



நம்ம நண்பன் ஒருத்தன். ஸ்கூல்ல தமிழ்ல எப்பவும் அவந்தான் ஃபஸ்ட். தமிழ் நல்லா வருதுங்கறதால எட்டாவதுல தமிழ் மீடியம் போயிட்டான். நான் இங்லீஷ் மீடியம். நாங்க லீவுல எங்க தாத்தா கிட்ட கொஞ்ச நாள் ஹிந்தி கத்துக்க போனபோது என்னை ரொம்ப கிண்டல் பண்ணுவான். அவனுக்கு பயந்தே நானும் அப்பிடி இப்பிடி ஓபியடிச்சுருவேன். ஸ்கூல் படிப்பு முடிஞ்சு பாலிடெக்னிக், காலேஜ்னு வாழ்க்கை வேற மாதிரி போச்சு. பிறகு வேலை தேட ஆரம்பிக்கும்போதுதான் தெரிஞ்சுது நமக்கும் இங்கிலீசுக்கும் நடுவுல ஒரு ஒடஞ்சு போன ராமர் பாலம் கூட இல்லைன்னு.

நம்ம நண்பன் தமிழ் வெறியனாகி தமிழ் முதுகலை முடிச்சு ஆராய்ச்சியெல்லாம் பண்ணி டாக்டரேட் வாங்கிட்டாரு. நான் வேலை தேடி நொந்து போய் டெல்லி போனபோதுதான் மற்ற மொழிகளோட அவசியம் தெரிஞ்சது. ஆஹா... இந்தக் காட்டுக்குள்ளயெல்லாம் தாக்குப் பிடிக்கணும்னா இந்த மூக்குல இங்கிலீசும் அந்த மூக்குல ஹிந்தியுமா மூச்சு விட்டாகணும்னு புரிஞ்சுது. கொஞ்சம் வீக்கா இருந்தாலும் பேஸ்மெண்ட்னு ஒண்ணு இருந்துது. அப்பிடியே புடிச்சு பிக்கப் பண்ணி குட்டிக்கரணம் போட்டு ஓரளவுக்கு கத்துக்கிட்டம்னு வைங்க. சொல்ல வந்தது என்னன்னா, நெல்லூர் தாண்டிட்டா அப்பறம் சோடா உப்பு போட்டாக் கூட தமிழ் பருப்பு வேகறது கொஞ்சம் கஷ்டம்.

நம்ம நண்பர் முற்பட்ட வகுப்புங்கறதாலயும், கொஞ்சம் ரோசக்கார ஆளுங்கறதாலயும் வேலை சுலபமா கிடைக்கல... கிடைச்சதயும் கொஞ்ச நாள்லயே எதாவது காரணத்துக்காக வீசியெறிஞ்சுடுவாரு. இன்னிக்கு அவரு எங்க ஊர் உடுமலைலயே சின்னதா ஜவுளி வியாபாரம் பண்ணிக்கிட்டுருக்காரு. தமிழ் பேரவை, சங்கம் எல்லாம் நடத்தி அதுல இருந்தவங்க எல்லாம் வெளியூரு வெளிநாடுன்னு போயிட்டாங்க. இப்ப ரொம்ப நொந்து வெந்து மருகறாரு. இப்பிடி வாழ்க்கையை வீணடிச்சுட்டமேன்னு. வீண் அப்பிடின்னு சொல்ல முடியாது. ஆனா பொருளாதாரா ரீதில அவ்வளவு தெம்பா இல்ல. அதுக்காக தமிழ் மட்டும் படிச்சவன் கதியெல்லாம் அதோகதின்னு சொல்ல வரல. என்னமோ இவனுக்கு சரியா அமையல. ஆனா மத்த மொழிகளைக் கத்துக்கிட்டுருந்தா அவனோட எல்லைகள் கொஞ்சம் விரிவடைஞ்சுருக்கும். கட்டுப்பாடுகள் கொஞ்சம் தளர்ந்திருக்கும். அவனுக்கான பாதைகள் இன்னும் சில திறந்திருக்கும்.

போன தலைமுறைல தாய்மொழி மட்டுமே தெரிஞ்சவங்க ஒண்ணும் குறைஞ்சு போயிடல. ஆனா இப்ப உள்ள போட்டி மிகுந்த உலகத்துல, பொருளாதாரத்துல நம்மள உயர்த்திக்க போராட வேண்டிய கட்டாயத்துல இருக்கும்போது இன்னொரு மொழி தெரிஞ்சுக்க வேண்டியது அவசியமாகுது. இதை மறுக்க முடியுமா? இன்னொண்ணு. மத்த மொழிகளைக் கத்துக்கும்போது நம்ம தாய்மொழியோட வளமையும் பெருமையும் இன்னும் நல்லா புரியும்.

மேல சொன்ன நண்பனோட நிலை பானைல ஒரு சோறுதான். உங்க வட்டத்துலயே இது மாதிரி பல பேருக இருக்கலாம். மொழிப்பற்று அவசியந்தான். நம்ம மொழியை காப்பாத்தி, சீர்படுத்தி, மேலும் வளப்படுத்தி, அடுத்த தலைமுறைக்கு கொண்டு போற கடமை எல்லாருக்கும் இருக்கு. ஒவ்வொரு மொழியும் தாய் மாதிரிதான். அதுனாலதானே அதை "தாய்" மொழிங்கறோம். எங்க அம்மாதான் நல்ல அம்மா மத்த அம்மாக்கள் எல்லாம் மோசம்னு சொல்லிட முடியுமா? அதே மாதிரிதான் நான் மொழியைப் பாக்கறேன். இந்த மாதிரி செண்டிமெண்ட் எல்லாம் விடுத்துப் பாத்தாக் கூட மொழிங்கறது ஒரு கருவி. மனிதர்களை இணைக்கற கயிறு. அதோட அந்த மக்களோட கலாச்சாரத்தை உள்ளடக்கி இருக்கற கருவூலம். அதைப் பேசற மக்களோட இயல்புகள், உணர்வுகள், எண்ணம் எல்லாம் அதுல பொதிஞ்சு இருக்கு. அது ஒரு முழுமையான கட்டமைப்பு.

ஒரு மொழியைக் கத்துக்கறது இன்னொரு மனிதனா இருக்கறதுக்கு சமம்னு காந்தி சொன்னது அதனாலதான். வேலை கிடைக்கறது, பொருளாதார உயர்வு இதெல்லாம் உபரிப் பயன்கள்தான். மனிதனுக்கு நடக்க கால்கள் இருக்கு. ஆனா தன் கூட்டை விட்டு வெளிய வந்து பறக்கணும்னா அதுக்கு ரெக்கைகள் மொழிகள்தான். நடந்து கடக்கற நேரம் மற்றும் பிரயத்தனத்தையும் பறக்கறதுல செலவழிச்சா எவ்வளவு தூரம் போகலாம்? என் சொந்த அனுபவத்துல, இன்னொரு மொழியைக் கத்துகறதுல இருக்கற பயன்கள் கொஞ்ச நஞ்சம் இல்லை. அது ஒரு தனி சுகம், ஜாலி, மகிழ்ச்சி. இன்னிக்கு இணையத்தோட புண்ணியத்துல உலகம் ஒரு கிராமம்கற அளவுக்கு சுருங்கியாச்சு. அந்த கிராமத்துக்குள்ள நாம ஒரு கூண்டுக்கிளியா இருக்கறது மடத்தனமோன்னு எனக்குத் தோணுது.

என்னுடைய அப்பாவுக்கு கிட்டத்தட்ட 10 இந்திய மொழிகளும், ஒவ்வொண்ணுலயும் 2,3 வட்டார வழக்குகளும் தெரியும். அவரோட நண்பர்கள் பலர் வியாபார விஷயமா வெளி மாநிலங்களுக்கு போகும்போது மொழிக்காகவே அவரையும் கூட்டிக்கிட்டுப் போவாங்க. அவரோட இன்ஸ்பிரேஷனோ என்னவோ நானும் பல இந்திய மொழிகளையும், சில வெளிநாட்டு மொழிகளையும் எழுத, படிக்க, பேசக் கத்துக்கிட்டேன். சிலதுல சர்டிஃபிகேட்களும் வாங்கினேன். சிலது ஜாலிக்காக படிச்சாலும் சரியான இடத்துல அதனுடைய உபயோகம் கணகூடாத் தெரியும்போது பிரமிப்பா இருக்கு. அது அனுபவப்பட்டவங்களுக்கு நல்லாவே புரியும். கிணத்துத்தவளையா இருக்கறதுலயும் ஒரு சுகம் இருந்தாலும், இந்த சுகத்தோட ஒப்பிடும்போது அது ரொம்ப சாதாரணமாத் தெரியுது.

தாய் மொழியைப் போற்றணும். காக்கணும். தப்பே இல்லை. அது நம்ம கடமை. ஆனா மத்த மொழியைப் பேசக் கூடாது, கத்துக்கக் கூடாதுன்னு சொல்றது என்ன நியாயம்னு புரியல. இதெல்லாம் ஒரு தனிமனித உரிமை. நாம எப்பிடி அதுல கட்டுப்பாடுகளைத் திணிக்க முடியும்னு புரியல.

இன்னிக்கி ஜெனிவா உள்ளூர் செய்தித்தாள்ல ஒரு செய்தி. ஸ்விஸ்ல இருக்கற "வெர்பியர்"ங்கற மாகாணத்துல "ஃப்ரென்ச் மட்டும்தான் பேசுவோம்"னு இயக்கம் ஆரம்பிச்சு அதுக்கு அரசாங்கமும் ஊக்கம் குடுக்குதாம். எனக்கு சிரிப்புதான் வந்தது. மேலை நாடு மேலை நாடுங்கறோம். அவங்களும் இந்தக் காலத்துல இவ்வளவு குறுகிய மனப்போக்கோட இருக்காங்களேன்னு. இந்த செய்திதான் இந்த பதிவுக்கு காரணம்.

தாய் மொழியைப் பெருமைப் படுத்துவோம். மற்ற மொழிகளை கத்துக்க முடியாட்டாலும், சிறுமைப் படுத்தாமல் இருப்போம். அடுத்த மொழியை இழிவு படுத்துவது நண்பனோட தாயை இழிவு படுத்தறதுக்கு சமம்.



படிங்க... சிரிங்க.... கார்ட்டூனுக்கு நன்றி : கார்ட்டூன்ஸ்டாக்.காம்

Thursday, March 26, 2009

(அலுமினியப்) பறவைப் பார்வை

சிங்கப்பூர்ல இருந்து ஸுரிக் 13 மணி நேரப் பிரயாணம். சிங்கப்பூர்ல நள்ளிரவு ஃப்ளைட் ஏறினா ஸ்விஸ் டைம் காலைல 7:30க்கு ஸுரிக் வந்து சேரலாம். போன 4 முறையும் இந்த ப்ளைட்தான்ங்கறதால ஏறினதும் நல்லா சீட்டை விரிச்சு படுக்கையைப் போட்டு தூங்கிடுவேன். ஆனா இந்த முறை ஒரு சேஞ்சுக்கு மதிய ஃப்ளைட் பிடிச்சேன். நல்ல வெளிச்சமும் இருந்துது. வானமும் க்ளியரா இருந்துது. திடீர்னு ஒரு யோசனை. போற வழியெல்லாம் படம் புடிச்சு ஒரு Photo Feature பண்ணலாமேன்னு. "என்ன... தூங்க முடியாது.. அவ்வளவுதானே... ரெண்டு மூணு படம் பாத்தாப் போச்சு"ன்னு நினைச்சுக்கிட்டேன்.

ரெண்டு மணிக்கு புறப்பட வேண்டியது ரெண்டே முக்காலுக்குதான் புறப்பட்டது. ஸ்விஸ் டைம் ராத்திரி 8:30 க்கு போய் சேந்தாத்தான் 9:45க்கு ஜெனீவாவுக்கு கடைசி ட்ரெய்னைப் புடிக்கலாம். இது லேட்டாச்சுன்னா ஸுரிக்ல ஃப்ரெண்டு வீட்டுல தங்கிட்டு காலைல கிளம்பலாம்னு உடனே ஒரு மாற்று ப்ளான் யோசிச்சு வெச்சு அவருக்கு போன் பண்ணி சொல்லிட்டேன். ஆனா பைலட் வெரட்டு வெரட்டுனு வெரட்டி கரெக்டா டாண்ணு 8:30க்கு ஸுரிக்ல எறக்கிட்டாரு. போய் டிக்கட் வாங்கிட்டு ஒரு காப்பியும் குடிச்சுட்டு போற அளவுக்கு டைம் இருந்துது. சரி பறந்த வழியைப் பாப்போமா? (டபிள் லேயர் கண்ணாடி ஜன்னல வழியா எடுத்ததால கொஞ்சம் குவாலிட்டி குறைஞ்சு போச்சு. அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம். ) படங்கள் மேல க்ளிக் பண்ணி பெருசாக்கிப் பாக்கலாம்.

டேக் ஆஃப் வரிசைல நம்ம ப்ளேன் 4வதா வெயிட்டிங். முன்னால நம்ம ஏர் இந்தியா மும்பைக்கு போக ரெடியா இருந்துது.

டேக் ஆஃப் ஆனதும் சிங்கப்பூர் வ்யூ






கொஞ்ச நேரத்துலயே மலேஷியா












அப்பறம் அந்தமான் நிகோபார் தீவுகள்


இந்தியா - போபாலுக்கு வடக்க ஏதோ ஒரு இடம்... சரியாத் தெரியல.. ஆனா பக்கத்துல இருக்கற நதி "பார்வதி நதி"


ஆஹா... நம்ம பாகிஸ்தானுக்குள்ள நுழையறோம்... ஹிந்துகுஷ் மலைத்தொடரோட ஒரு பகுதியும், இஸ்லாமாபாத் நோக்கிப் போற சாலையும்







இப்ப ஆப்கானிஸ்தானுக்குள்ள போறோம்....








அடுத்தது துர்க்மெனிஸ்தான்.... க்ளைமேட் அப்பிடியே மாறுது... மலையெல்லாம் பனி கொட்டிக் கிடக்குது...








அப்பறம் கொஞ்சமே கொஞ்ச நேரம் இரான் மேல...


இதுக்குள்ள லேசா இருட்டிடுச்சு. ஒரே மேக மூட்டம் வேற. ஒண்ணுமே தெரியல கண்ணுக்கு. அப்பறம் காஸ்பியன் கடலைக் கடந்து, உக்ரைன், ஸ்லொவாகியா, ஹங்கேரி, ஆஸ்திரியா, ஜெர்மனி கடந்து ஸ்விட்சர்லாந்துல நுழைஞ்சு ஒரு வழியா ஸுரிக் வந்து இறங்கியாச்சு. பயங்கர மழையும் குளிரும். கீழ போய் லக்கேஜ் எல்லாம் கலெக்ட் பண்ணிட்டு ஏர்போர்டுக்கு கீழயே இருக்கற ஸ்டேஷனுக்கு போய்ட்டேன். ஜெனீவாவுக்கு டிக்கெட் வாங்கிட்டு 9:45க்கு ரயில் ஏறினா காலை 1:15க்கு ஜெனிவா. ஸ்டேஷனுக்கு நேர் எதிர்லயே ஹோட்டல். போய் படுக்கைல விழுந்ததுதான் தெரியும். மறுபடி காலை 8:30க்குதான் முழிச்சேன்.

அப்பறம் என்ன? அடுத்த 15 நாளைக்கு வழக்கம் போல ஆபீஸ், ரூம், ஆபீஸ், ரூம்தான்.

நம்ம பரிசல் சொன்ன மாதிரி எனக்கும் மேகங்களை ரொம்பப் பிடிக்கும். அங்கங்க மேகங்களைப் படம் புடிச்சு வெச்சேன். "பயணங்கள் முடிவதில்லை" படத்துல வர "முகிலினங்கள் அலைகிறதே... முகவரிகள் தொலைந்தனவோ?" பாட்டு ஞாபகம் வருதா?









விமானத்துல ஒரு சேனல்ல விமானத்தோட பறக்கும் பாதை (Flight Path), பறந்த தூரம், போக வேண்டிய தூரம், பறக்கற உயரம் எல்லாம் ஓடிக்கிட்டு இருக்கும். சிங்கப்பூர் - ஸுரிக் பயணம் கிட்டத்தட்ட பூமிய 1/4 பங்கு சுத்தற மாதிரி.











பாகிஸ்தான் மேல பறக்கும்போது கொஞ்சம் பாதை மாறி வடக்க போய் மறுபடி மேற்க பறந்தது. பைலட் ரவுண்ட்ஸ் வரும்போது கேட்டதுக்கு அவர் சொன்னார் பாருங்க பதில்... .. 'பக்'னு இருந்துது. தெற்கு ஆப்கானிஸ்தான் மேல பறக்கறது அவ்வளவு சேஃப்டி இல்லன்னு எல்லா விமானங்களும் மத்திய ஆப்கானிஸ்தான் மேலதான் பறக்கணுமாம். இந்த சின்ன மாற்றத்துனாலதான் 13 மணி நேரம் ஆகுதாம். இல்லைன்னா ஒர் மணி நேரம் குறையுமாம்.


சரிங்க... ரொம்ப போரடிச்சுட்டேன்னு நினைக்கிறேன். இத்தோட முடிச்சுக்கறேன். கடைசியா... நம்ம விமானத்துக்கு கீழ இன்னோரு விமானம் பறந்துது. அதையும் ஒரு க்ளிக்.....



Monday, March 23, 2009

சிரியானா - சினிமா விமர்சனம்

Syriana (2005)

George Clooney, Matt Damon


"ஆவதும் ஆயிலாலே... அழிவதும் ஆயிலாலே... " இதுதான் படத்தோட தீம். மொதல்லியே சொல்லிடணும். படத்தை முதல் தடவை பாத்தபோது ஒண்ணுமே புரியல. பிறகு கொஞ்சம் யோசிச்சுட்டு சம்பவங்களை மனசுக்குள்ள கோர்த்துட்டு ரெண்டாவது தடவை பாத்ததும்தான் ஓரளவுக்குப் புரிஞ்சுது.

பெட்ரோலிய அரசியல், ஆயில் இண்டஸ்ட்ரி மேல சில சக்திகளோட இன்ஃப்ளூயன்ஸ், சட்ட, சமுதாய, தனிப்பட்ட ரீதியில அதனுடைய விளைவுகளை சந்திக்கற சிலரையும் பற்றிய கதை.

இரான்ல சில ஏவுகணைகள் திடீர்னு திருடு போகுது ; அமெரிக்காவுல பெரிய ஆயில் கம்பெனி கொன்னெக்ஸ் போய் கில்லீன்கற ஒரு சின்ன ஆயில் கம்பெனியோட சேரறாங்க ; கசகஸ்தான்ல ஒரு எண்ணைகிணறுல ஆயில் எடுக்கற உரிமை சீனாவுக்கு போகுது ; இந்த காண்ட்ராக்ட் விவகாரத்துல எதாவது லஞ்சம் விளையாண்டுருக்குமான்னு விசாரிக்க ஒரு வக்கீல் ; ஒரு நடமாட முடியாத சௌதி எமிர் குடும்பத்துல அண்ணன் தம்பிகளுக்குள்ள அடுத்த எமிர் யாருங்கற தகராறு ; ஸ்விஸ்ல இருக்கற ஒரு எனர்ஜி அனலிஸ்ட்டோட பையன் நீச்சல் குளத்துல ஷாக் அடிச்சு செத்துப் போறான் ; எமிரோட மூத்த பையனை கொலை செய்ய ஆள் புடிக்க ஒரு CIA ஏஜண்டை அனுப்பறாங்க ; பாகிஸ்தான்ல இருந்து வர பல வேலையாட்களுக்கு வேலை போய் சில அடிப்படைவாதிகளோட சேந்து தற்கொலைப் படைகள் அமையுது - எதாவது புரியுதா? தலை சுத்துது இல்ல?

சௌதி எமிரோட இளைய பையனை அமெரிக்கா பணத்தாலயே சாத்தி பொம்மையாக்கிடறாங்க. மூத்தவனோ ஹார்வர்டுல படிச்சு தன் நாட்டு எண்ணை வளத்தை நல்ல முறைல பயன்படுத்தி நாட்டை முன்னேற்றணும்னு துடிக்கறாரு. நடுவுல பையன் செத்துப் போனதை மூலதனமா வெச்சு அந்த எனர்ஜி அனலிஸ்ட் (மேட் டேமன்) எமிரோட மூத்த பையனுக்கு ஆலோசகரா சேந்து தம்பி கிட்ட இருந்து ஆட்சியைக் கைப்பற்ற முயற்சில இறங்கறாங்க. இது நடந்தா அமெரிக்காவுக்கு ஒத்துக்காதுன்னு மூத்த பையனை தீத்துக்கட்ட அமெரிக்கா திட்டம் போடுது. முடிஞ்சுதா?

காண்ட்ராக்ட் கை மாறுனதுல லஞ்சம் இருக்குன்னு கண்டு புடிச்சு அதுக்கு ஒரு பலியாடு தேடுது நீதித்துறை. CIA ஏஜண்ட் (ஜியார்ஜ் க்ளூனி) லெபனான் போய் ஹிஸ்போலா தீவிரவாதிக கிட்ட டீல் போடும்போது சாயம் வெளுத்துப் பொற அமெரிக்கா அவரையே மாட்டி விட்டுடறாங்க. அவரு உடனே கோவமாகி படுகொலை செய்யப்பட இருக்கற எமிரோட மூத்த பையனைக் காப்பாத்த முயற்சி எடுக்கறாரு. காப்பாத்துனாரா?

வேலை போன பாகிஸ்தான் கூலியாளுக வேற வழியில்லாம தற்கொலைப் படைல சேந்து கொன்னெக்ஸ்-கில்லீன் கம்பெனியோட முதல் எண்ணைக் கப்பல் வெளிய போகும்போது அதை தகர்க்க திட்டம் போடறாங்க. பண்ணாங்களா?

பையனுடைய இறப்பைக் கூட வியாபாரம் ஆக்குன கணவனை விட்டு மனைவி பிரிஞ்சு போயிடறா. அவங்க ஒண்ணு சேந்தாங்களா?

எல்லாத்துக்கும் பதில் வேணும்னா படத்தை பாருங்க.

இந்த ஒரு டாக்குமென்டரி மாதிரியான இடியாப்ப படத்தை கட்டிங் ஒட்டிங் பண்ண எடிட்டர் நிஜமாவே பெரிய ஆளுதான். பெரிய சவாலா இருந்துருக்கும். படத்துல காட்சிக்கு காட்சி வேற வேற நாடுக. கசகஸ்தான், இரான், ஸ்பெயின், ஸ்விஸ், துபாய், அமெரிக்கா, லெபனான், பாகிஸ்தான்....

"படம் பயங்கர குழப்பமா இருக்கு. ஃபாலோ பண்ணவே முடியல"ன்னு பரவலான நெகடிவ் பப்ளிசிடி இருந்தாலும், அமெரிக்காவுக்கும் சைனாவுக்கு இடைல இருந்த ஒரு இலைமறை காய்மறையான டீலை படம் நல்லா நக்கலடிச்சுருக்குன்னும் பல விமர்சனங்கள்.

க்ளூனிக்கு ஒரு ஆஸ்கார் வேற கிடைச்சுது. போர்ன் ஐடென்டிடில பாத்த ஆக்சன் ஹீரோ மேட் டேமன் இதுல பாந்தமா அடக்கி வாசிச்சுருக்காரு. படத்துல வரிகளுக்கு நடுவுல படிக்க வேண்டியது நிறைய இருக்கு. நிறைய சப் டெக்ஸ்ட். நிறைய சர்ரொகேஷன். கண்டிப்பா பாத்தே ஆக வேண்டிய படம்னு சொல்ல முடியாது. ஆஃப் பீட் படங்களை விரும்பறவங்களுக்கு இந்தப் படம் பிடிக்கும்.


Thursday, March 19, 2009

வட்டத்துக்குள் பெண்


வட்டத்துக்குள் பெண்ணா?

அல்லது வட்டத்தின் மையம் பெண்ணா?


பெண்ணைச் சுற்றி வட்டமா?

அல்லது ஒரு வட்டத்தினுள் தன்னைத்தானே சிறை வைத்தாளா?


பெண் மற்றோரைச் சார்ந்தவளா?

அல்லது உலகமே அவளைச் சார்ந்ததா?


பெண்ணின் சிந்தனை வட்டம் பெரியதா?

அல்லது உலகம் அவ்வளவு சின்னஞ் சிறியதா?


வட்டத்துக்குள் பெண்ணா?

ஒரு வட்டத்துக்குள் பெண்ணை வைப்பது சாத்தியமா?


கூண்டுக் கிளியாய் வைக்க முற்பட்டதில்

வெற்றி அவளுக்கா?

உயிரற்ற கம்பிகளாய் சூழ்ந்து நின்றதில்

தோல்வி மற்றவர்(வை)களுக்கா?

டிஸ்கி : அப்துல்லா ஒரு தொடர் பதிவிற்காக அழைத்ததன் பேரில் மிகவும் யோசித்து (??!!) வடித்த கவிதை. சுமாரா இருந்தா ஒரு ஸ்மைலியாவது போட்டுட்டுப் போங்க. இல்ல திட்றதா இருந்தா இந்த மாதிரி ரிஸ்க் எடுத்து உங்களையும் ஆபத்துல தள்ளிய அப்துல்லாவைத் திட்டுங்க. [அப்துல்லா: நல்லா வேணும்... வாங்கிக் கட்டிக்க :) ]

அப்பறம் இன்னும் 3 பேரைக் கூப்படணுமாமில்ல... நல்லா கவித எழுதறவங்களைக் கூப்படலாமா?

வாங்க பழமைபேசி (எனக்கு உங்களை விட்டா வேற யாரு இருக்கா?)
வாங்க பரிசல் (டைம் இல்லாட்டா, அனந்த்பாலா எப்பயாச்சும் எழுதி வெச்சுருப்பாரு. மஞ்சப் பையைத் தோண்டி ஒண்ணு எடுத்து விடுங்க)
வாங்க வெயிலான் (உங்களை பதிவு போட வெக்க வேற வழி தெரியல)

Wednesday, March 18, 2009

செக்குமாடு



"வாய்யா கனகு... ஏன்யா லேட்டு? மணியப் பாரு எட்டே முக்கால்.... இதோட ஒனக்கு 4 வார்னிங் குடுத்தாச்சு... டைம் ஆபீஸ் முருகேசன் வேற எதுரா சாக்குன்னு பாத்துக்கிட்டே இருக்கான்....

"இல்லீங்கய்யா... வாரைல சைக்கிள் மேல ஒரு பன்னி வந்து மோதி டிச்சுக்குள்ள விளுந்துட்டனுங்... அதான் பாருங் பேண்டெல்லாம் சகதியாயிருச்சுங்..."

"எதாச்சும் சொல்லுய்யா.... பாதிநா லேட்டா வரது. அப்பறம் நான் ரோஸ்டர் போடறதுக்கு என்ன மரியாத? அவன் மூர்த்தியா கத்தறான். ரிலீவர் எங்க ரிலீவர் எங்கன்னு. உன்னிய பேசாமா வெல்டிங்குக்கு மாத்தீர்ரேன். எக்கேட்டும் கெட்டுப்போ

"அய்யா வேணாம்யா... கண்ணு வலி தாங்க முடியாதுங்கய்யா... இனிமே சரியா வநதருவனுங்..."

"சாமி... வேணாம்யா... குடிகாரன் பேச்சக் கூட நம்பலாம். உன்ற பேச்சக் கேட்டா..."

"அப்பிடியெல்லாம் சொல்லாதீங்கய்யா.... நாந்தான் சரியா வரேன்னு சொல்றனல்லங்... சத்தியமுங்.."

"நீயும் உஞ்சத்தியமும். போய் வேலயப் பாரு. மூர்த்திய ரிலீவ் பண்ணு போ.."

அந்த மில்லில் தனபால் ஒரு சூப்பர்வைசர். 4 டீசல் இஞ்சின்கள் நாள் முழுசும் திணறித் திணறி ஓடி 4MW கரண்ட் நுரை தள்ளும். போடற சத்தத்துல நாம பேசறது நமக்கே கேக்காது. ஷெட் பாத்துக்க ஏழு பேர். மூணு மெக்கானிக், மூணு எலக்ட்ரீசியன், ஒரு கையாள். ஷெட்டுக்குப் பின்னால மிசின் ரூம். லேத், ஷேப்பர், ட்ரில்லர்னு அது வேற ஒரே இறைச்சலா இருக்கும். வெளியில வெல்டிங் வேற ப்ர்ர்ர்ர் ப்ர்ர்ர்ர்னு கண்ணு கூசும். சைடுல சின்ன சின்னதா கூலிங் டவருக ரெண்டு. ஷிப்ட் மெக்கானிக் இஞ்சின்களை கவனிக்க, எலக்ட்ரீஷியன் லோடு பாத்துக்க. கையாள், பம்ப் ஓட்டி டேங்குகள்ல டீசல் நெரப்ப, கூலிங் டவர் தண்ணிக்கு உப்பு கொட்ட, அடைப்பு எடுக்கன்னு வேலை பெண்டு நிமுந்துரும்.

தனபால்தான் எல்லாத்துக்கும் சூப்பரவைசர். ரொம்ப கறாரான ஆளு. அவனைக் கண்டாலே எல்லாருக்கும் கொஞ்சம் பயந்தான். டீ குடிக்கக் கூட 8 நிமிஷம்னா 8 நிமிஷந்தான். பின்னாலயே வந்து நின்னுடுவான். "ம்ம்ம்ம்.. இன்னம் ரெண்டு நிமுசத்துல சாப்பாட்டு சங்கே புடிச்சுருவானுக. தொரைக்கி டீ சாப்ட 1 மணி நேரமா?" வேலையும் நல்லாத் தெரியும். சும்மாவா வாசவி மில்லுல இருந்து தேடிப் புடிச்சு கூட்டியாந்தாங்க. "என்ன லச்சணமா வெல்டிங்.... சும்மா மரவட்டை கணக்கா வரிவரியா இருக்க வேணாம்? கை இந்த நடுங்கு நடுங்குனா...."

தனபால் இந்த வாரம் மெயிண்டனன்ஸ் ஷெட்யூல் போட்டுருந்தான். கிர்லாஸ்கர் கம்பெனியிலருந்து இஞ்சினீயருக வருவாங்க. எந்த இஞ்சினுக்கு எங்க நோவுன்னு பாத்து சொல்லுவானுக. அதுக்கு முந்தி இங்க லாக்புக்கு எல்லாம் ரெடியா இருக்கணும். மூர்த்தியும் சங்கரும் ஒழுங்கா எழுதுவாங்க. மணிக்கொருக்கா எட்டு சிலிண்டர்லயும் டெம்ப்ரேச்சர், டீசல் அளவு, தண்ணி ப்ரசர், லோடு, ஸ்பீடு எல்லாம் அந்த பெரிய ரிஜிஸ்தர்ல பதியணும். கனகு மட்டும் தூங்கிட்டு கடைசி மணியில 8 எண்ட்ரியும் ஒட்டுக்கா எழுதுவான். சும்மா கொஞ்சம் முன்னப்பின்ன மாத்தி மாத்தி.

கனகு மூர்த்திய ரிலீவ் பண்ணிட்டு சேர்ல உக்காந்து பெருசா ஒரு கொட்டாவி விட்டான்.

"அப்பிடியே கவுந்து தூங்கிரு.... வந்த ஒடனே லாக் புக்க பாக்கரானா பாரு. எதுக்கோ என்னவோ போச்சுன்னு வாயப் பொளந்துக்கிட்டு.... " பின்னாலயே தனபால் வந்ததை கவனிக்கலை.

"கிர்லாஸ்கர் ஆளுக 10 மணிக்கு வந்துருவாங்க. ஒண்ணும் மூணும் இன்னக்கி. ரெண்டும் நாலும் நாளை கழிச்சு. இப்பயே போன வருச மெயிண்டனன்ஸ் கார்டுக, பார்ட் இஸ்ட்ரியெல்லாம் எடுத்து வெய்யி. எல்லாம் சொன்னாத்தான் செய்வீங்களோ?" தனபால் கத்தி விட்டு இஞ்சினியருக்கு போன் போட போனான்.

கனகு எல்லாம் எடுத்து வெக்க ஆரம்பிச்சான். அப்படியே எதிர் ஷெட்டுல ஸ்பின்னிங்ல வள்ளி இருக்குதான்னு எட்டிப் பாத்துக்கிட்டான். இஞ்சின்களை ஒரு ரவுண்டு வந்தான்.

"டேய் கதிரு... இங்க வாடா. என்ரா இது? ஆயில் மாத்துனியா? தொடைக்க மாட்ட? இந்நேரம் வளுக்கீருக்கும். அதான் அங்க அம்புட்டு காட்டன் வேஸ்ட் கெடக்குதல்ல. தொட மொதல்ல..." தனபால் மேல இருந்த கோவம் எல்லாம் அவன் மேல கொட்டினான்.

இதுக்குள்ள எலக்ட்ரீஷியன் சேகர் போய் 2 இஞ்சின் நின்னு போனா எந்தெந்த மிசினுகளுக்கு நெறி கட்டும்னு பாத்து பேஸ் மாத்தி விட்டுட்டு வந்தான். தலைல ஒட்டீட்ருந்த பஞ்சை எடுக்க கொஞ்சம் ஏர் புடிச்சுக்கிட்டான்.

"சும்மா அவனைப் போயி வெரட்டிக்கிட்டு... விடு கனகா... வேலையப் பாப்போம். மொத டீ சாப்டு வருவோம். வண்டி வந்துருச்சு". டோக்கனை எடுத்துக்கிட்டு ரெண்டு பேரும் போயிட்டாங்க.

10 மணி. சொன்ன மாதிரியே கரெக்டா வந்துட்டானுக இஞ்சினீயருக. சின்ன பசங்கதான். துறுதுறுன்னு. தனபாலும் வந்ததும் வெளிச்சமா ஒரு மூலைல டேபிளப் போட்டுக்கிட்டு லாக்புக்கை ஒரு நோட்டம். லோடு, டிஸ்ட்ரிப்யூஷன் பழய மெயிண்டனன்ஸ் குறிப்புக எல்லாம் பாத்துட்டு 1ம் இஞ்சின் கிட்ட போய் நின்னாங்க. ஸ்லோ ஸ்பீட் இஞ்சின். "தடக்.. தடக்... தடக்...தடக்..." லோடு "0" ன்னு ஆனதும் ஆஃப் பண்ணியாச்சு. டெம்பரேச்சர் கொறஞ்சதும் மேல ஏறி ஒவ்வொரு சிலிண்டரா செக்கிங் ஆரம்பமாச்சு.

"அஞ்சாவது சிலிண்டர் ஏன் இன்னும் இம்புட்டு சூடா இருக்கு? கூலிங் சரியில்லயா? மேல போய் பாக்கறேன்"னு கனகு சைட் ரெய்லிங் புடிச்சு மேல ஏறினான். ஹெட் இன்னும் சூடு. எக்ஸாஸ்ட் வால்வு ஸ்பிரிங் டைட். சரியா ஓப்பன் ஆகல போல. கீழ எறங்கி இஞ்சினியர் கிட்ட சொல்லிட்டு மறுபடி அடுத்த டீ குடிக்க போனான்.

டீ குடிச்சுட்டு இருக்கும்போதே "தொம்"னு ஒரு சத்தம். அப்பிடியே டீ டம்ளரைப் போட்டுட்டு ஓடி வந்தான். ப்ளாட்ஃபாரத்துல சிந்தியிருந்த ஆயில கதிர் தொடைக்காமயே போயிருக்கான். கணக்கா இஞ்சினீயர் அது மேலயே கால வெச்சு வழுக்கி விழுந்துருக்கான். சைட் ரெய்லிங்ல தலை பட்டு மண்டைக் காயம். ரத்தம் ஒழுகுது.

"சேகரு.... சேகரு...கதிரு.. ஒடியாங்கடா... அய்யய்யோ...."

சேகரும் கதிரும் ஒடி வர, எல்லாருமாச் சேந்து ஆளைத்தூக்கிட்டு ஸ்டோருக்கு ஓடுனாங்க. அங்கதான் பெரிய பஸ்டெய்டு பொட்டி இருக்கு. இஞ்சினீயர் மயக்கமாயிட்டாரு போல. ஓட்டமா ஓடி, ஆளைப் படுக்க வெச்சு, டெட்டால வெச்சு தொடச்சு, பஞ்சு வெச்சு, கட்டுத் துணியால மண்டைய சுத்தி பெரிய கட்டாப் போட்டு விட்டாங்க. அதுக்குள்ள ஓ.எம். கார் ட்ரைவரைக் கூப்ட்டு விட்டு கார் ரெடியா ஸ்டோர் வாசலுக்கு வந்துருச்சு. அப்பிடியே அள்ளிப் போட்டுக்கிட்டு தர்மாஸ்பத்திரிக்கு விரட்டினாங்க.

அட்மிட் பண்ணி, டாக்டருக பாத்துட்டு 4 தையல் போட வேண்டியதாயிடுச்சு. மயக்கம் தெளியில. எப்பிடியும் இன்னும் 2,3 மணி நேரம் ஆகும்னு சொல்லிட்டாங்க. சேகரும் திரும்ப மில்லுக்கு போயிட்டான். இஞ்சினியர் பையனுக்கு வேற தமிழ் தெரியாது. என்ன பண்றதுன்னு புரியாம கனகு மட்டும் அங்கியே தொணைக்கு ஒக்காந்துட்டான்.

தனபால் கிர்லாஸ்கர் கோயமுத்தூர் ஆபீசுக்கு போனைப் போட்டு விசயத்தை சொல்லிட்டான். அவுங்க ஆளை அனுப்பி பாத்துகிறதா சொல்லிட்டாங்க. கோயமுத்தூர்ல இருந்து ஆள் வர அந்தா இந்தான்னு 4 ம்ணி ஆயிருச்சு. வந்தவன் கிட்ட விசயத்தை சொல்லிட்டு கனகு 5 மணியாச்சேன்னு வீட்டுக்கே போயிட்டான்.

மறுநா காலைல மில்லுக்கு போகைல மறுக்கா ஆஸ்பத்திரி வந்து எப்பிடி இருக்கு நெலமைன்னு பாத்துட்டு போனான். சாயங்காலம் டிஸ்சார்ஜ் பண்ணிருவாங்களாம். எதிர்காத்துல மிதிச்சு மில்லுக்கு போய் சேர மணி 8:50.

"வாய்யா கனகு... என்னய்யா லேட்டு? மணியப் பாத்தியல்ல.... நீ இனிமே வெல்டிங்தாய்யா..."

"அய்யா.... இல்லீங்கய்யா... இஞ்சினீயரை பாக்க ஆஸ்பத்திரி போயிருந்தனுங்... எதிர் காத்துல மிதிச்சு வர லேட்டாயிருச்சுங்..."

"எதாச்சும் சாக்கு சொல்லிட்டே இரு... போ..... போய் மூர்த்திய ரிலீவ் பண்ணு... கத்திக்கிட்டு கெடக்கான்........."

பக்கத்துல இருந்த டைம் ஆபீஸ் முருகேசன் சிரிச்சுக்கிட்டான். ஸ்பின்னிங்ல இருந்து வள்ளி எட்டிப் பாத்து தோளை மோவாக்கட்டைல இடிச்சுக்கிட்டா. மேகத்துல மறைஞ்சு கெடந்த சூரியன் பொளீர்னு வெளிய வந்துச்சு.

Sunday, March 15, 2009

தஸ்விதானியா - சினிமா விமர்சனம்


Dasvidaniya (Hindi)

Vinay Pathak, Rajat Kapoor, Neha Dhupia, Ranvir Shorey


2008 நவம்பர்ல ரிலீஸ் ஆனாலும் நமக்கு இப்பத்தான் பாக்க வாய்ப்பு கிடைச்சுது. உங்களையும் என்னையும் போல ஒரு பரமசாது ஒருத்தன் இன்னும் 3 மாசத்துல சாகப் போறோம்னு தெரிஞ்சா என்ன பண்ணுவான்? இப்பிடி ஒரு கான்செப்டை அட்டகாசமா சினிமா ஆக்கின டைரக்டர் ஷஷாந்த் ஷாவுக்கு முதல் சபாஷ். கோடி கோடியாக் கொட்டி மசாலாப் படமா அரைச்சுத் தள்ற பாலிவுட் மாவு மில்லுல இருந்து வந்த ஒரு வித்தியாசமான லோ பட்ஜெட் படம்.

நாயகன் அமர் கௌல் 37 வயசு பேச்சிலர். காது கேக்காத அம்மா கூட பாம்பே அவுட்டர்ல ஒரு ஃப்ளாட்ல குடித்தனம். ஒரு மருந்துக் கம்பெனில அக்கௌண்ட்ஸ் மேனேஜர். தினப்படி வேலையெல்லாம் ஒரு To do லிஸ்ட் போட்டு கிரமமா செய்யற ஆளு. ஆட்டோ ட்ரைவர்ல இருந்து ஆபீஸ் மேனேஜர் வரைக்கும் புழு மாதிரி ட்ரீட் பண்ணினாலும் எதிர்த்து ஒரு வார்த்தை பேச மாட்டான். (மொதல்லயே சொல்லல? உங்களையும் என்னயும் மாதிரின்னு..) அப்பிடி ஆளுக்கு வயித்துவலின்னு டாக்டர்ட்ட போனா கேன்சர் 2வது ஸ்டேஜ்ங்கறாரு. மிஞ்சிப் போனா ஒரு மூணு மாசம் இருக்கலாம். அவ்வளவுதான்... அப்பிடியே நொறுங்கிப் போய் உக்காந்துடறான்.

அப்பதான் வழக்கம் போல மனசாட்சி எதிர்ல வந்து உக்காந்து "டேய் பன்னாடை.. இந்த மாதிரி அல்ப விஷயத்துக்கெல்லாம் லிஸ்ட் போட்டுக்கிட்டு உக்காராம உருப்படியா வாழ்க்கைல விட்டுப்போன பெரிய காரியங்களை இந்த 3 மாசத்துல செய்து முடிக்கப் பாரு"ன்னு சொல்ல, பாதை கொஞ்சம் திரும்புது. புது கார் வாங்கணும், வெளிநாடு போணும், பாஸுக்கு பாஸா ஆகணும், கிடார் கத்துக்கணும், பேப்பர்ல மொதப் பக்கத்துல ஃபோட்டோ வரணும் அப்பிடின்னு குட்டி ஆசைகளையும் சின்ன வயசு காதல், ஃப்ரெண்ட்ஷிப், வீட்டை விட்டு ஓடிப் போன தம்பியை மறுபடி வீட்டுக்கு கூட்டி வரதுங்கற மாதிரி பெரிய ஆசைகளையும் ஒரு 10 ஐட்டம் லிஸ்ட் போட்டு ஒண்ணொண்ணா முடிக்கிறான். எல்லாத்துலயும் சின்ன சின்ன சுவாரஸ்யங்கள் வெச்சுருக்கறது டைரக்டரோட புத்திசாலித்தனம்.

12 வருஷங்களுக்கு பொறகு நண்பனைத் தேடி தாய்லாந்து போனா நண்பனோட மனைவி இவன் ஃப்ரீ ட்ரீட்மெண்ட்டுக்காக வந்துருக்கானோன்னு சந்தேகப்படறாங்க. வெறுத்துப் போய் தெருவுல சுத்தும்போது ஒரு ரஷ்ய விலைமாது வீட்ல போய் கொஞ்ச நாள் இருந்துட்டு வரதெல்லாம் கொஞ்சம் சினிமாத்தனமா இருந்தாலும் ஒக்கே. (அப்பறம் 'தஸ்விதானியா'ன்னு பேர் வெச்சுட்டு ரஷ்ய லிங்க் இல்லேன்னா எப்பிடி?) கொஞ்சம் சோகமான படம்னாலும் முழுக்க மெல்லிய நகைச்சுவை கலந்து இருக்கறது படத்துக்கு பலம். க்ளைமேக்ஸ்? படத்தைப் பாருங்களேன்.

வினய் பாடக் இது மாதிரி ரோலுக்கு பெர்ஃபெக்ட் ஃபிட். 2 வருஷம் முன்னால வந்த Bheja Fry டீம்ல பாதி பேர் இந்தப் படத்துலயும். ரஜத் கபூர் வழக்கம் போல அலட்டல் இல்லாத அமைதியான் நடிப்பு. ஆபீஸ் மேனேஜர் சௌரப் ஷுக்லா (ஹே ராம்ல கமல் ஃப்ரெண்டா வருவாரே அந்த குண்டு நடிகர்) கொஞ்ச நேரமே வந்தாலும் கலக்கல். நேஹா துபியாவும் கெஸ்ட் ரோல் மாதிரிதான். ஆனா நல்லா பண்ணியிருக்காங்க. அந்த விலைமாது கேரக்டருக்கு ஒரு ரஷ்யப் பொண்ணையே நடிக்க வெச்சுருக்காங்க.

படத்துல ஹைலைட் அந்த 3 பாட்டுகளும். புது ம்யூசிக் டைரக்டர் கைலாஷ் கேர். அவரே பாடல்கள் எழுதி பாடவும் செஞ்சுருக்காரு. ஆனா முதல் படம் மாதிரியே இல்ல. மூணுமே மெலடி ஜோனெர். ரொம்ப நாளைக்கப்பறம் இது மாதிரி இதமான பாட்டுகள் பாலிவுட்ல இருந்து. லிரிக்ஸ் அட்டகாசம். சேம்பிள்க்கு....

"zindagi naa mil ajnabi ban ke
bandagi shaamil har dua ban ke "

'தஸ்விதானியா'ன்னா ரஷ்யன்ல (do svisdanya) 'குட்பை'ன்னு அர்த்தமாம். அதுல ஒரு சின்ன pun சேத்து '10 வேலைகள்'னு வரமாதிரி டைட்டில். குடும்பத்தோட பாக்க வேண்டிய படம். பாருங்க... இது மாதிரி கூட மசாலத்தனங்கள் இல்லாம இந்தி சினிமாவுல பண்றாங்கங்கறதுக்காகவாவது பாக்கணும்.

Wednesday, March 11, 2009

பரிசல் போல பதிவிடுவதில் உள்ள 11 சங்கடங்கள் !!

1) நிச்சயமாக எதிர்ப்பதிவு போட மாட்டார்கள் என்ற மூடநம்பிக்கையுடனோ, அடுத்த 10வது நிமிடத்தில் எதிர் பதிவு வரலாம் என்ற நம்பிக்கையுடனோதான் பதிவிட நேரும். இரண்டுமே பதிவருக்கு நன்மை பயக்கக் கூடியதல்ல.

2) பதிவு போட்ட அரை மணி நேரத்தில் "உனக்கு இது தேவையா?" என்று நம்மையே கேட்டுக் கொள்ள நேர்கிறது.

3) ‘இனிமேல் எதிர்பதிவு போட மாட்டேன்’ – இது பொதுவாக பதிவர்கள் சொல்லும் வாசகம். ஆனால் படக் படக்கென்று அதே நாளில் பத்து எதிர்பதிவுகள் வந்து விடுகின்றன.

4) எதிர் பதிவிடுபவர் பெயர் மிஸ்டர்.எக்ஸ் என்று வைத்துக் கொண்டால், பதிவுலகத்தில் வந்த ஓரிரு வாரங்களுக்குத்தான் அவர் மிஸ்டர்.எக்ஸ் ஆக இருக்கிறார். அதற்குப் பிறகு அவர் ‘என்னோட அந்த நல்ல பதிவுக்கு எதிர்பதிவு போட்டவர்’ என்றும், இன்னும் கொஞ்ச நாளில் ‘எதிர் பதிவு போட்டே கும்முபவர்’ என்றும்தான் அவர் பற்றிய பிம்பம் மனதில் படிகிறது.

5) நாம் போட்ட பதிவை ‘நம்மளே அந்தப் பதிவுக்கு எதிர் பதிவாத்தானே இதப் போட்டோம் ; அதுக்கு இவர் மறு எதிர் பதிவு போடறாரே" என்று மறு / மறு மறு எதிர் பதிவு போட்ட பாவத்திற்கு அவரை ஆளாக்குகிறோம்.

6) ஒரிஜினல் பதிவிலிருந்து வாக்கியங்களை அப்படியே உபயோகிப்பது, அதே நடையை பின்பற்றுவது போன்றவற்றை செய்யும் சுதந்திரங்களை வாரி வழங்கி விடுகிறோம். அல்லது அப்படி அவர் அப்படி உபயோகிக்காமல் சொந்த நடையில் எழுதினால் ‘இதப் போய் எதிர்ப்பதிவுன்னு நினைச்சோமே’ என்ற தவிப்புக்கு நம்மை ஆளாக்கிக் கொள்கிறோம்.

7) உண்மையாகவே அந்த எதிர்பதிவைப் போட்டவர் தெரியாமலே போட்டு விட்டதாக சொன்னால், அவர் அப்படிச் சொல்லும்போது அதை நம்ப முடியாமல் அவரைப் பற்றி நாம் தவறாகப் புரிந்து கொள்ள நேர்கிறது. எதிர்பதிவு என்று தெரிந்தே போட்டும் அவர் அப்படிச் சொல்வதானால்... (மீண்டும் 6வது பாராவின் கடைசி வரிகளைப் படிக்க....)

8) எதிர்பதிவு வந்த கடுப்பில் நாமிருக்கும்போது, வேறொரு நண்பர் அவரும் எதிர்பதிவு போட்டுக்கொள்ள அனுமதி கேட்க, நாம் சூடு கண்ட பூனையாய் அவரைக் கடுப்படிக்க, அவர் நம்மைத் தவறாகப் புரிந்து கொள்ள ஏதுவாகிறது.

9) நண்பனுக்குப் பணம் கொடுத்தால் பணம், நட்பு இரண்டையும் இழக்க நேரும் என்று பெர்னாட்ஷா சொன்னது போல, எதிர்பதிவு போட அனுமதி கொடுத்தால் நமது ஒரிஜினல் பதிவின் வீரியம், தாக்கம், ஒரிஜினாலிட்டி மூன்றையுமே நாம் இழக்க நேர்கிறது.

10) எதிர்பதிவை முதலில் படிப்பவர்களுக்கு ஒரிஜினல் பதிவை உடனே படிக்க வேண்டும் என்ற நினைப்பு வருவதில்லை. அதே, எதற்காக இந்த எதிர்பதிவு என்று நிஜமாகவே யோசிப்பவர்கள் ஒரிஜினல் பதிவின் மதிப்புணர்ந்து நிச்சயமாகப் படிப்பார்கள்... (அல்லது அப்படி நாம் நினைத்துக் கொள்கிறோம்!)

11) நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதால்தான் பதிவிடுகிறோம். அதற்கு எதிர்பதிவு வருவதால் அந்த ஒரிஜினல் பதிவை எழுதிய பதிவருக்கு கிடைக்கும் பாராட்டுக்கு நாம் சிறிது தடையாக இருக்கிறோம்.
பரிசலின் ஒரிஜினல் பதிவு (பிராயச்சித்தம் தேடிக்கிறேன் இஃகி இஃகி இஃகி)
டிஸ்கி: இந்தப் பதிவில் வரும் எதுவும் யாரையும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ குறிப்பிடுவதல்ல என இதன் மூலம் உறுதியளிக்கிறேன் !!

Saturday, March 7, 2009

காற்றின் வலி



காற்றைப் போலவே
சுதந்திரமாய் இருக்க முடியுமா?
காற்று போன வழியே
அவனும் போனான்...


காற்றை உணர முடியும்...
காற்றுக்கு உணர்வுகள் உண்டா?
காற்றுக்கு எண்ணங்கள் உண்டா?
காற்றுக்கு உறவுகள் உண்டா?
உறவுகள் உண்டென்றால் பூரண சுதந்திரம் சாத்தியமா?


காற்றைப் போலவே
சுதந்திரமாய் இருக்க முடியுமா?
அவன் காற்றைத் தேடிப் போனான்....


கனவில் காற்றைப் போல மிதந்தான்
காற்றுக்கு கனவுகள் உண்டா?
காற்றுக்கு காதல் உண்டா?
காற்று மரணத்தை அறியுமா?


காற்றைப் போலவே
சுதந்திரமாய் இருக்க முடியுமா?
அவன் காற்றைத் தேடிப் போனான்....


காற்றடைத்த பலூனை குழந்தைகளுக்குப் பிடிக்கும்
காற்றுக்கு குழந்தைகளைப் பிடிக்குமா?
காற்று வழியை மறக்குமா?
காற்றுக்கு வலி இருக்குமா?


காற்றைப் போலவே
சுதந்திரமாய் இருக்க முடியுமா?
அவன் காற்றைத் தேடிப் போனான்....


ஒவ்வொரு உயிரிலும் கலந்த காற்று
அவன் உயிரிலும் கலக்க
அவனைத் தேடிப் போனது...


காற்றைப் போலவே சுதந்திரமாய் இருக்க முடியுமா?

Friday, March 6, 2009

சாக்லெட் நட்பு


2002 நவம்பர் :


பெல்ஜியத் தலைநகர் ப்ருசெல்ஸ். தி க்ராண்ட் ப்ளேஸ். உலக்ப் புகழ் பெற்ற உச்சா போகும் சிறுவனின் சிலையைச் (Manneken Pis) சுற்றி டூரிஸ்டுகளின் கூட்டம். நானும் என்னோட ஓட்டை கேமராவில ஒண்ணு ரெண்டு படங்க எடுத்துக்கறேன். இந்த க்ராண்ட் ப்ளேஸ்லதான் ரெண்டு வருஷத்துக்கு ஒருமுறை பிகோனியாப் பூக்களால மொத்த மைதானத்தையும் அடைச்சு ஒரு பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய "மலர் விரிப்பு" (Flower Carpet) போட்டு உலகத்தயே அசத்துவாங்க. அது ஒரு பெரிய டூரிஸ்ட் அட்ராக்சன்.


பெல்ஜியத்துல வீடுகள்ல செய்யற ஹோம்-மேட் சாக்லேட்டுக ரொம்ப ஃபேமஸ். அங்க போயிட்டு அத வாங்காம வந்தா சொந்தமெல்லாம் எதிரியாயிடும்னு பயந்து அதக் கொஞ்சம் வாங்கணும்னு கெளம்பினேன். எங்க நல்லாருக்கும்னு யாரைக் கேட்டாலும் என்னவோ பெனாத்தறாங்களே ஒழிய நமக்கு ஒண்ணும் புரியல. அப்பிடி ஒரு கடைப் பக்கம் போய் விசாரிச்சுட்டு இருக்கும்போது ஒரு குரல். "ஹான் ஜி... க்யா சாஹியே ஆப்கோ?" திரும்பிப் பாத்தா ஆஹா.... ஆஜானுபாகுவா ஒரு சர்தார்ஜி. 35 வயசுக்கு மேல இருக்கும். பக்கத்து கடை அவரோடதாம். மளிகைக்கடை மாதிரி இருக்கு. அய்யா... இன்னது வேணும்... எங்க நல்லதா கிடைக்கும்னு அவர் கிட்ட கேட்டேன். "அப்பிடியா? ஒரு நல்ல இடம் இருக்கு. கொஞ்சம் தூரம் கண்ட்ரி சைட் போகணும். ஒண்ணு பண்ணுங்க. சரியா 1 மணிக்கு கடைக்கு வாங்க. லன்ச் ப்ரேக்ல நானே கூட்டிக்கிட்டுப் போறேன்"னு சொன்னாரு.


சரின்னு நானும் அங்க இங்க கொஞ்ச சுத்திட்டு மறுபடியும் டாண்ணு 1 மணிக்கு அந்த கடைக்குப் போயிட்டேன். அவரும் கிளம்பிக்கிட்டுருந்தாரு. கடைய சாத்திட்டு பக்கத்து சந்துக்கு போய் கார் எடுத்துட்டு வந்து ஏறச் சொன்னாரு. சிடிய விட்டு வெளிய வந்து ரொம்ப தூரம் வந்துட்டோம். உள்ளூர எனக்கு பயம் "இவர(ன?) நம்பி வந்துட்டமே? நல்லவந்தானா? அடிச்சு போட்டு இருக்கறத புடுங்கிட்டான்னா? பாஸ்போர்ட் திருட்டு வேற இங்க ரொம்ப ஜாஸ்திங்கறாங்களே"ன்னு என்னென்னவோ நினைப்பு. தன்னப் பத்தி (புபிந்தர் சிங்) குடும்பத்தை பத்தியெல்லாம் சொல்லிக்கிட்டே வந்தாரு. 12 வருஷமா ப்ருசெல்ஸ்ல இருக்காரு. அப்பிடி பேசிக்கிட்டே ஒரு கிராமத்துக்குள்ள நுழைஞ்சு ஒரு வீட்டுக்கு முன்னால நிறுத்துனாரு. உள்ள கூட்டிக்கிட்டு போய் என்னவோ பேசி வித விதமா சாக்லேட்டுக வாங்கிக் குடுத்தாரு. விலையும் கொஞ்சம் சகாயமா இருந்துது. திரும்ப கார்ல ஏறி கடைக்கே கொண்டு வந்து விட்டாரு. அப்பறந்தான் நமக்கு நம்பிக்கையே வந்துது. அவர் சாப்பிடக் கூட இல்ல. மறுபடி கடையைத் திறந்து வியாபாரம். கொஞ்ச நேரம் பேசிட்டு கிளம்பிட்டேன். அவர் எதுவும் காசு வாங்கிக்கல. சும்மா சொல்லக்கூடாது... சாக்லேட் அவ்வளவு டேஸ்ட்... இப்பிடியும் ஆளுக இருக்காங்களேன்னு மனசுக்குள்ள வாழ்த்திக்கிட்டே ஊருக்கு கிளம்பினேன்.


2009 மார்ச் 6 :

ஜெனீவா. காலை மணி 10. ட்ரெயின் ஸ்டேஷன் முன்னால ட்ராமுக்காக காத்துக்கிட்டு இருக்கேன். ஒரே பனிப் பொழிவு. மூக்கெல்லாம் மறத்துப் போச்சு. மூக்கு மூஞ்சில இருக்கான்னு அப்பப்ப தடவி தடவி பாத்துக்கிட்டு நிக்கறேன். பின்னால யாரோ ஒரு ஃபேமிலி இந்தில பேசிக்கிட்டு இருக்காங்க. பாத்தா ஒரு சர்தார், சர்தார்ணி, 10-12 வயசுல ஒரு பொண்ணும் பையனும். அவர் கொஞ்சம் சத்தமா பேசிக்கிட்டுருந்தாரு. எங்கேயோ கேட்ட குரலா இருக்கேன்னு திரும்பி நின்னு கவனிச்சுப் பாத்தா..... அட... இவர் அந்த புபிந்தர் சிங்கா? இங்க எப்பிடி? போய் பேசலாமா? நமக்கு வேணா ஞாபகம் இருக்கு... அவருக்கு இருக்குமா? இப்பிடி பல யோசனைகளோட இன்னும் கொஞ்சம் கவனிச்சு பாத்துட்டு, அவராத்தான் இருக்கணும்னு கிட்டப் போய்,


"எக்ஸ்க்யூஸ் மி... நீங்க.... நீங்க புபிந்தர் சிங்கா?". நாலு பேரும் என்னயே உத்துப் பாக்கறாங்க.


"ஆமாம்... நீங்க யாரு? உங்களுக்கு என்னைத் தெரியுமா? எப்பிடி?". நான் ப்ருசெல்ஸில் நடந்ததை ஞாபகப்படுத்துகிறேன்.

"வாவ்... ஏழு வருஷம் முன்னால நடந்தது. எனக்கு சுத்தமா நினைவில்ல. நீங்க இப்ப சொன்ன பிறகு லேசா ஞாபகம் வருது."


"உங்க கடைக்கு ஆயிரம் பேர் வராங்க... போறாங்க... உங்களுக்கு நினைவு வெச்சுக்க அவசியமில்ல... ஆனா என்னை யாருன்னே தெரியாதபோது எனக்கு நீங்க செஞ்ச உதவியை நான் மறக்க முடியாதே"


ஆனா தன்னை ஒருத்தன் அடையாளம் கண்டுக்கிட்டு வந்து பேசறதைப் பாத்து அவரும் குடும்பமும் குஷி ஆயிட்டாங்க. அவங்க ப்ருசெல்ஸை விட்டுட்டு இப்ப இங்க வந்து 3 வருஷம் ஆயிடுச்சாம். இங்க ஒரு கடைல பார்ட்னரா இருக்காராம். இந்த மே மாசம் எல்லாம் செட் ஆனா லண்டன் போயிடுவாங்களாம்.


"வீடு பக்கத்துலதான். வாங்களேன்.... அப்பிடி சாய் சாப்டுக்கிட்டே பேசுவோம்" சரின்னு ட்ராம் ஏறி அவர் கூடவே அவங்க வீட்டுக்கு போய் டீ குடிச்சு, பூரியும் ஹல்வாவும் சாப்டுட்டு கொஞ்ச நேரம் பேசிட்டு ரூமுக்கு வந்துட்டேன். போட்டோவெல்லாம் வேண்டாம்னு அன்பா கண்டிப்பா மறுத்துட்டாரு. நானும் ஏன்னு கேக்கலை.


முதல் சந்திப்புலயும் சரி, இன்னிக்கும் சரி அவரோட பேச்சுல இருந்த கனிவும், உண்மையும், நேர்மையும் ரொம்ப ஆச்சரியப்பட வைக்குது. முதல் சந்திப்பின்போது எனக்கு உள்ளூர ஒரு சந்தேகம் இருந்துக்கிட்டே இருந்தாலும், அதை அவர் கண்டுக்காம இயல்பா இருந்து அந்த சந்தேகத்தை தானா போக்கடிச்சாரு. இன்னிக்கு அந்த சம்பவத்தை ஞாபகப்படுத்தின உடனேயே ரொம்ப நாள் பழகின மாதிரி இயல்பா பேசி டக்குனு வீட்டுக்கும் கூட்டிக்கிட்டுப் போய் உபசரிச்சதும், அந்த குடும்பமும் அதே மாதிரி வித்தியாசமா எடுத்துக்காம நல்லா பழகினதும்.... இன்னும் ஆச்சரியம் தீரல.


இப்பிடியும் அன்பான அனுசரணையான மனுஷங்க இருக்காங்களா? இவுங்க மாதிரி ஆளுகளாலதான் இன்னிக்கும் ரெண்டு சொட்டு மழையாவது பெய்யுதா? ஒரு தனி மனுஷனோட இயல்பு அவன் குடும்பத்தையே இன்ஃப்ளூயன்ஸ் பண்ணுது? பல கேள்விகளோடயும் விலகாத ஆச்சரியத்தோடயும் ஹோட்டலுக்கு திரும்பினேன்.

Tuesday, March 3, 2009

மெகாத் தொடர்களும் மகா டைரக்டர்களும்


இந்த மெகாத்தொடர் எடுக்கற டைரடக்கருக எல்லாம் ஒரே அகடமில பயிற்சி எடுத்தவங்க போல. நம்மூர்லதான் எல்லா மொழிகள்லயும் மெகாத்தொடர், நெடுந்தொடர்னெல்லாம் மொக்கை போட்டு மெகாத் தொந்தரவு குடுக்கறாங்களோன்னு பாத்தா, இப்ப சிங்கப்பூர்ல லோக்கல் சேனல் "வசந்தம்"லயும் ஆரம்பிச்சுட்டாங்க. TRP பிச்சுக்கிட்டு போகுது.

அட... இதுவாவது சகவாச தோஷம்னு தலைல அடிச்சுக்கிட்டா, மலாய், சீன சேனல்கள்லயும் கன ஜோராப் போகுது மெகா மகாத்தொடருக. இங்கிலீஷ் சப்-டைட்டிலோட. சாம்பிளுக்கு கொஞ்சம் பாருங்களேன்.

ஒரு சீனத் தொடர். மக தன்கிட்ட தப்பா நடந்துக்க முயற்சி பண்ணவனை கொன்னுடறா. அவளுக்கு நல்லது பண்றதா நினைச்சு அம்மாவும், தாத்தாவும் போலீஸ்ல சொல்லிடறாங்க. போலீஸ் வந்து பொண்ணை கைது பண்ணுது. இந்த மூணு லைன முக்கா மணி நேரமா காட்றாங்க. பொண்ணு மூஞ்சி, அம்மா மூஞ்சி, தாத்தா மூஞ்சி... எல்லார் கண்ணுலயும் ஒரு சொட்டு கண்ணீர். இப்படி ஒரு 10 நிமிஷம். மயான அமைதி. விசும்பற சத்தம் மட்டும்தான். நடுவுல நடுவுல போலீஸ் கார் ரோட்டுல வர க்ளிப்பிங். நிஜமா ஸ்டேஷன்ல இருந்து கிளம்பி வீட்டுக்கு வர எவ்வளவு நேரம் ஆகுமோ அவ்வளவு நேரம் ஆகுது. கைது பண்ணிட்டு போம்போது ஒவ்வொரு மாடிப்படியிலயும், திருப்பத்துலயும் பொண்ணு அம்மாவை திரும்பி திரும்பி பாத்துக்கிட்டே போகுது. முக்கா மணி நேரத்துல ஒரே டயலாக் " யூ ஆர் அரெஸ்டெட்". அவ்வளவுதான்.

இன்னொரு மலாய் தொடர்ல குட்டிப் பையனுக்கு பிறந்த நாள் பரிசும் வாழ்த்து அட்டையும் வாங்க அம்மாவும் பையனும் கடைக்குப் போறாங்க. லேண்ட்மார்க் மாதிரி ஒரு பெரிய கடைல ஒவ்வொரு கார்டா, ஒவ்வொரு பொம்மையா திருப்பி திருப்பிப் பாத்து ரெண்டு கார்டும் ஒரு பொம்மையும் வாங்கிக்கிட்டு வெளிய வராங்க. ஒரே டயலாக் "மொத்தம் எவ்வளவு ஆச்சு?".

ஒரு சின்ன விடுமுறைல இந்தோனேஷிய தீவு "பின்டான்" போயிருந்தபோது ஹோட்டல்ல பொழுது போகாம டி.வி.ல ஒரு பஹாசா மெகாத் தொடர். மனைவிக்கு உடம்பு சரியில்லன்னு போன் வருது. வெளியூர்ல இருக்கற கணவன் உடனே ஆபீசை விட்டு வந்து பஸ் புடிச்சு, போட் புடிச்சு, ரிக்சா புடிச்சு, நடந்து.... வீட்டுக்குப் போறான். ஒரே டயலாக் "சீக்கிரம் ஏறு".

உலகத்துல எந்த மூலைக்குப் போனாலும், எந்த மொழில பாத்தாலும் மெகாத்தொடர்னா ஒரே ஃபார்முலாதான் போல. எப்பிடித்தான் ஒரே மாதிரி யோசிக்கிறாங்களோ? எல்லாரும் ஒரே கடைல அரிசி வாங்கி அதே சௌபாக்யா டில்டிங் கிரைண்டர்ல போட்டு மாத்தி மாத்தி அரைப்பாங்க போல.

நம்ம தூர்தர்ஷன்ல முன்னல்லாம் ஞாயிறு மதியம் ஹிந்தி தவிர்த்த வேற எதாவது ஒரு மொழிப் படம் போடுவாங்க. 90% அடாசுப் படமா இருக்கும். ஒரு முறை ஒரு அவார்டு வாங்குன மலயாளப் படத்தை போட்டாங்க. "எலிப்பத்தாயம்"னு நினைக்கிறேன். மணிரத்னம் படத்தை விட கம்மி டயலாக். படத்துலயே பெரிய டயலாக் ஒரு நாய் மூணு நிமிஷம் ஊளையிடறதுதான். எனக்கென்னமோ இந்தப மாதிரி படத்தை எடுத்த ஆளுங்கதான் இந்த மெகாத்தொடர்களுக்கெல்லாம் எள்ளுத்தாத்தான்னு தோணுது. (சும்மா டமாசுக்குதான் இந்த ஒப்புமை. சினிமாவை சீரிசா எடுத்துக்கிறவங்க கோச்சுக்காதீங்க.)

இவ்வளவு பேசறியே... இந்த பாடாவதிகளையெல்லாம் உக்காந்து பாத்துட்டு பெருசா பதிவு போட வந்துட்டியான்னு கேக்கலாம். நச்னு கேளுங்க. நறுக்குன்னு கேளுங்க. நம்ம மலாய் நண்பர் ஒருத்தரு இது மாதிரியெல்லாம் தொடர் வருதுன்னு ரொம்ப அலுத்துக்கிட்டாரு. நான் என்னமோ மெகாத்தொடர்லாம் நம்ம "கலாச்சார" சின்னங்கள்னு பெருமையா இருந்தபோது அவர் சொன்னது மடார்னு தலைல அடிச்ச மாதிரி இருந்துது. அப்பறம் அவர் கிட்டயே கேட்டு , என்னதான் ஆயிடும் ; ரெண்டு எபிசோட் பாத்துதான் வைப்போமேன்னு பாத்தேன். அப்ப கீழ வெச்ச ரிமோட்டை அதுக்கப்பறம் எடுக்கல. நாலு சாரிடான் சாப்பிட வேண்டியதாப் போச்சு. இப்பல்லாம் எதோ நம்ம ரேஞ்சுக்கு கார்டூன் நெட்வொர்க், டிஸ்னி சேனல், அனிமல் ப்ளானெட்னு பாத்து கெக்க பிக்கன்னு சிரிச்சுட்டு போயிடறது.

என்னதான் சொன்னாலும் இந்த டைரடக்கர்களோட "திறமை"யையும், யூனிட் ஆளுகளோட பொறுமையையும் பாராட்டியே தீரணும். 30 நிமிஷம் பாக்கற நமக்கே இப்பிடி இருந்தா அதை நாள் முழுக்க எடுக்கற அவங்களுக்கு எப்பிடி இருக்கும். உள்ள இருக்கற அந்த இத்துனூண்டு "க்ரே மேட்டரை" எவ்வளவு கசக்கி புழிஞ்சு, மல்லாக்கவோ குப்பறவோ படுத்து, பொரண்டு யோசிக்கிறாங்க !!!!

பிங்க் பேந்தர் 2 - சினிமா விமர்சனம்

ஜனவரில இருந்தே விளம்பரமா போட்டுத் தாக்கி ரொம்ப எதிர்பார்ப்புகளை தூண்டி விட்ட படம். ஆனா ஹைப் பண்ண அளவுக்கு பெருசா ஒண்ணும் இல்லங்கறது ஏமாத்தம். பிங்க் பேந்தர் விசிறிகள் எல்லாம் "இவ்வளவுதானா?"ங்கற மாதிரி "இதுக்கெல்லாம் விமர்சனம் ஒரு கேடா?"ங்கறாங்க. அதெல்லாம் ஒருபுற ம்இருந்தாலும் 90 நிமிஷம் சிரிப்பு கேரண்டி.

ஸ்டீவ் மார்டினோட ஃப்ரென்ச் ஆக்ஸன்ட் கலந்த பேச்சும், கொணஷ்டைகளும், கார்ட்டூன்ல் வர பிங்க் பேந்தர் பண்ற அத்தனை சேட்டைகளையும் இவர் பண்றதைப் பார்க்கும்போது சிரிப்பு பொத்துக்கிட்டு வருது. பலே திருடன் "டொர்னேடோ" உலகத்துல பல நாடுகள்ல இருக்கற ம்யூசியங்கள்ல இருந்து பல அரிய பொக்கிஷங்களை ஆட்டையப் போடறான். ஃப்ரான்சோட பிங்க் பேந்தர் வைரமும் அம்பேல். ஆளைப் புடிக்க பல நாடுகளோட போலீஸ்களை கொண்ட "ட்ரீம் டீம்" அமைக்கறாங்க. அதுல நம்மாளு ஃப்ரென்ச் இன்ஸ்பெக்டர் ஜாக் க்ளூசோவும். டீம்ல அவனும் இருக்கணும்னு சொன்னதும் கமிஷனர் டாய்லெட்டுக்குள்ள போய் செவுத்துல முட்டிக்கிறார் பாருங்க, நாம சிரிச்சு முடிக்கறதுக்குள்ள நாலு டயலாக் போச்சு.

நம்மாளும் அசிஸ்டென்ட் ஜீன் ரெனொவும் அடிக்கற கூத்துக சரி ரகளை. எல்லாம் ஸ்லாப்ஸ்டிக் ரகம்தான். குறிப்பா சொல்லணும்னா வைன் குடிக்கிறேன் பேர்வழின்னு ஒரு ரெஸ்டாரண்டயே கொளுத்தறது, அதை சரி பண்ணி ரீ-ஒபெனிங் அன்னிக்கு மறுபடியும் கொளுத்தறது, பிஹேவியர் கௌன்சலர் கிட்ட பண்ற ரகளை, ரோம்ல டொர்னேடொ இருக்கற வீட்டுல போய் "துப்பறியறேன் பெருமாளே"ன்னு செக்யூரிடி கேமரா முன்னாலயே போய் நிக்கறது எல்லாம் தியேட்டர்ல சுத்தி இருக்கறவங்க சிரிக்கற சத்தத்துல டயலாக்கே கேக்காது.

படத்துல ஒரு சின்ன ஆச்சரியம் ஐஸ்வர்யா ராய். இந்தியாவுல இருந்த வந்த டிடெக்டிவ்னு சொல்லிட்டு கடைசில பாத்தா அவர்தான் வில்லியாம். ஐஸ்வர்யாவோட மொத்த டயலாக்கையும் ஒரு சிங்கிள் பார்ட் SMSல அனுப்பிச்சுடலாம். அந்த ரோலுக்கு ஐஸ்வர்யா ராய் தேவையான்னு கேக்காதீங்க. படம் வித்தாகணுமே.

நடுவுல நம்மாளுக்கும் டிடெக்டிவ் நிகோலுக்கும் ஒரு லவ் வேற. அதுல குறுக்க ஆண்டி கார்சியா. ஒரு கட்டத்துல கேஸ் சால்வ் ஆயிடுச்சு, பேக்கப்னு சொல்லும்போது மறுபடியும் நம்மாளால ஒரு திடீர் திருப்பம். அப்பறம் நிஜமா கேஸ் முடிஞ்சு எல்லாம் சுபம்.

எல்லாம் பெருந்தலைகளாப் போட்டு இருந்தாலும் ஸ்டீவ்தான் மார்க் அள்றாரு. பின்னணி இசையெல்லாம் நாம கேட்டு கேட்டு பழகின ஒரிஜினல் பிங்க் பேந்தர் ட்யூன்கதான். ஆனாலும் DTSல கேக்கும்போது அட்டகாசமா இருக்கு. 90 நிமிஷம் போனதே தெரியல. சில டயலாக்கெல்லாம் அத்துமீறி இருக்கறதால PG சர்டிபிகேட் குடுத்து சில எதிர்மறை விமர்சனங்களையும் கிளப்பியிருக்கு. இங்கிலீஷ் படத்துல இதெல்லாம் சகஜந்தானே.... மொத்தத்துல நல்ல பொழுதுபோக்கு.

Pink Panther கொஞ்சம் Stink Panther-ஆ இருந்தாலும் Zing Panther !!