Showing posts with label விமர்சனம். Show all posts
Showing posts with label விமர்சனம். Show all posts

Wednesday, October 21, 2009

Taking of Pelham 123 (2009) - சினிமா விமர்சனம்


Taking of Pelham 123 (2009)
John Travolta, Denzel Washington


ஜான் ட்ரவோல்டா, டென்ஸல் வாஷிங்டன்.... ரெண்டு பேரும் சேந்த படம்ன உடனேயே எதிர்பார்ப்பு அதிகம்தான் ஆயிடுச்சு. ந்யூயார்க் மெட்ரோ ரயில்ல கண்ட்ரோல் சென்டர்ல இருக்கற கார்பர் (டென்ஸல்) "பெல்ஹாம் 123" ('பெல்ஹாம் பே' ஸ்டேஷன்கு 01:23 க்கு போய் சேரற ரயில்) நடுவழில நிக்கறதைப் பாக்கறாரு. என்னன்னு விசாரிச்சா ரைடர் (ட்ரவோல்டா) கடத்தி வெச்சுருக்கான்.

முதல் பெட்டியை மட்டும் வெச்சுட்டு மத்ததையெல்லாம் கழட்டி விட்டுட்டு, இருக்கறவங்க பயணக் கைதிகள். 10 மில்லியன் டாலர் கேட்டு மிரட்டரான். அதுவும் 1 மணி நேரத்துக்குள்ள. மீட்பு நடவடிக்கைகளை செய்துக்கிட்டே பணத்துக்கும் ஏற்பாடு செய்யறாங்க. ரயிலுக்குள்ள இருக்கற ஒரு பையனோட லேப்டாப் ஆன்லயே இருக்கு. அதுல வீடியோ ச்சாட் வழியா உள்ள நடக்கறதெல்லாம் தெரிஞ்சாலும் ஒண்ணும் பிரயோசனம் இல்லை.



அந்த காலை கார்பர் அட்டெண்ட் பண்ண வேண்டி வந்ததால, கார்பர் கூடதான் பேசுவேன்னு ரைடர் அடம். அதுக்காக ரயில் ட்ரைவர் பலி. 'என்னடா நடக்குது இங்க?"ன்னு கேட்ட போலீஸ், "மொதல்ல என்னிய சுடு பாக்கலாம்"ன முன்னாள் மிலிட்டரி... எல்லாத்தையும் பொசுக் பொசுக்குன்னு சுடறாங்க. கார்பர் எதோ லஞ்சக் கேஸ்ல மாட்டியிருக்கான்னு தெரிஞ்சு அதைப் பத்தின உண்மைகளையும் கேக்கறான் ரைடர். இடைல ந்யூயார்க் மேயரையும் இழுத்து, அவரோட சில லீலைகளையும் சந்தி சிரிக்க வெச்சு, தான் யாரோ ஒரு மாடல் அழகி கூட ரிசார்டுக்கு போனதைப் பத்தி சொல்லி... என்னடா... சம்பந்தமில்லாம கண்டதையெல்லாம் நோண்டறானேன்னு யோசிச்சா.... பின்னால லிங்க் எல்லாம் புரியுது.



கடத்தலோட நோக்கம் அந்த 10மில்லியன் டாலர் கிடையாது. இந்த நாடகத்தை வெச்சு ஒரு பீதியைக் கிளப்பி ஸ்டாக் மர்கெட்டை சரிய வெச்சு, தங்கம் / கம்மாடிட்டி மார்கெட்டை ஏத்தி... அவன் போர்ட்ஃபோலியோ பல மடங்கு எங்கியோ போறதுக்கான திட்டம். எப்பிடியோ பணத்தையும் கொண்டு சேத்துடறாங்க. கடைசில என்னதான் ஆச்சு? க்ளைமேக்ஸ் கொஞ்சம் சுமார்தான்... என்னை பொறுத்தவரை. இருந்தாலும் படம் நல்லா விறுவிறுப்பா போறதால "ரைட்டு... "ன்னு விட்டுடலாம்.

டென்ஸல், ஜான்.... ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் போட்டி போட்டுக்கிட்டு நடிப்பு. அதுலயும் அந்த லஞ்சம் வாங்கறதை ஒத்துக்கற இடத்துல டென்ஸல்... க்ளாஸ். நெகோஷியெட்டரா வர அந்த அதிகாரியும் அருமை. மேயரை நம்ம ஊர் "மழைக்கு பள்ளிக்கூடத்துல ஒதுங்கின" எம்.எல்.ஏ மாதிரி அறிமுகம் பண்ணினாலும் ஆளு ஷார்ப். இந்த கடத்தல் விளையாட்டு எதுக்காகன்னு டக்குனு புரிஞ்சுகிடறாரு. படத்துல டயலாக்தான் கொஞ்சம் ஓவர்.... அந்த நாலெழுத்து வார்த்தை படற பாடு இருக்கே.... ஒவ்வொரு வாக்கியத்துலயும் ஜஸ்ட் 3 தடவைதான் வருது. மத்தபடி ஓகே. :)

1974ல வந்த படத்டோட ரீமேக். பேஸ்லைன் ஒண்ணா இருந்தாலும் மோடிவ்வை மாத்தி ஒரு சின்ன சுவாரஸ்யம். 1974 மாடல் - கொஞ்சம் வேற மாதிரி இருக்கும். சில சீன்கள் (கேமரா பொசிஷன் கூட) புது வெர்ஷன்ல அப்பிடியே ஷூட் பண்ணியிருக்காங்க. '74 வெர்ஷனைப் பாத்ததில்லைன்னா, முதல்ல இதைப் பாத்துட்டு அப்பறமா பாருங்க. நல்லாவே ரசிக்க முடியும். ரெண்டு படங்களையுமே. எஞ்சாய் மாடி.....

Sunday, September 6, 2009

Inglourious Basterds (2009) - சினிமா விமர்சனம்



க்வென்டின் டரென்டினோவோட இந்தப் படத்தை ஜெனீவால போன மாசம் ரிலீஸான அன்னிக்கே ராத்திரி ஷோவுக்கு போனோம். நாவல் படிக்கிற மாதிரி 5 அத்தியாயங்கள். கொஞ்சம் உண்மை;கொஞ்சம் கற்பனை கலந்த கதை.

இரண்டாம் உலகப் போர் காலத்துல நாசிக்களால் ஆக்கிரமிக்கப் பட்ட ஃப்ரான்ஸ் பகுதில இருக்கற மிச்ச மீதி யூதர்களை தேடிக் கண்டுபிடிச்சு 'மேல' அனுப்பற 'யூத வேட்டைக்காரன்' மேஜர் ஹனஸ் லாண்டா (க்ரிஸ்டஃப் வால்ட்ஸ்). படம் ஆரம்பமே டெரரா இருக்கு. யூதர்கள் ஒளிஞ்சுருக்கற வீட்டுக்குப் போய் பேசிப் பேசியே பயத்தை உண்டாக்கி ஒரு குடும்பத்தையே நாசமாக்கறான். ஒரே ஒரு பொண்ணு 'ஷோசானா' மட்டும் தப்பிச்சு போக விட்டுடறாங்க.

அமெரிக்கப் படையோட ஒரு சின்ன யூதர்கள் பிரிவு (பாஸ்டர்ட்ஸ்) நாசிக்களை வேட்டையாட நார்மண்டிக்கு ரகசியமா வராங்க. ஒரே நோக்கம்... கண்ல படற நாசிக்களையெல்லாம் கொன்னு தலையை (தலையவே இல்லை... ஸ்கால்ப் மட்டும்) சீவணும். குறைஞ்சது 100 பேரை சீவணும். படைத் தலைவன் ஆல்டோ (ப்ராட் பிட்).

முதல் ரீல்ல தப்பிச்சுப் போன பொண்ணு அவங்க அத்தையோட சினிமா தியேட்டரை நிர்வாகம் பண்றா. யதேச்சையா நாசி கொ.ப.செ ஜோசஃப் கோயபல்ஸ் (நம்ம கருணாநிதி சொல்வாரே... அதே ஆளுதான்) எடுத்த ஒரு படத்தோட பிரிவ்யூக்கு இந்த சினிமா ஹாலை தேர்ந்தெடுக்கறாங்க. எல்லா மேல்நிலை நாசித் தலைவர்களும் - ஹிட்லர் உள்பட - எல்லாரும் வருவாங்கன்னு தெரிஞ்சு மொத்தமா பழிவாங்க திட்டம் போடறா ஷோசானா.

இந்த சினிமா ப்ரிவ்யூ விஷயம் தெரிஞ்சு 'ஆபரேஷன் கினோ'ன்னு ஒண்ணு ப்ளான் பண்ணி நாசிக்களை தீத்துக்கட்ட சைடுல ஒரு கும்பல் திட்டம் போட்டு அதுல பாஸ்டர்ட்ஸ் படையும் கூட்டு. உதவிக்கு ஒரு நடிகை வேற.

இப்பிடி ரெண்டு ப்ளான்க கொஞ்சம் கொஞ்சமா நடந்தேறி வர, கடைசில என்னதான் ஆச்சு? ஹிட்லரைக் கொன்னாங்களா? ப்ளான் ஒர்க் அவுட் ஆச்சா? நான் சொல்லி ஸ்பாயில் பண்ண விரும்பல. படத்தையே பார்க்கறது பெட்டர்.

க்வெண்டின் டரென்டினோவோட பெஸ்ட் படம்னு சொல்லலாம். வழக்கம் போல அமர்த்தலான ஃப்ளோ. டயலாக் அதிகமா இருந்தாலும் அதுதான் படத்தோட ஹைலைட். அதுலயும் ப்ராட் பிட்டோட அலட்சியமான அமெரிக்கன் ஆக்ஸெண்ட் கலக்கல்னா, க்ரிஸ்டஃப் வால்ட்ஸோட பேச்சு, பாடி லேங்குவேஜும் கலக்கலோ கலக்கல். பெஸ்ட் ஆக்டர் அவார்ட் வேற. இவர் நடிப்பைப் பாக்கறதுக்காகவே இன்னொரு தடவை போலாம்.

காமெடி கலந்த ஆக்சன் படம்னாலும் (ஹிட்லரைக்கூட காமெடி பீஸ் ஆக்கிட்டாங்க) படத்துல கொஞ்சம் வன்முறை அதிகம். அதுவும் பேஸ்பால் பேட்டால அடிச்சே கொல்றது, நெத்தில கத்தியால அழுத்தமா ஸ்வஸ்திக் போடறது, தொடைக்கு நடுவுல பிஸ்டலை வெச்சு டுமீல், டுமீல்.... இதெல்லாம் சிலரை கொஞ்சம் நெளிய வெக்கலாம். டயலாக் ஃப்ரென்ச், ஜெர்மன், இங்கிலீஷ்னு மாறி மாறி இருக்கு. சப்டைட்டிலோட பாக்கறது பெட்டர்.

மொத்தத்துல கலக்கலான காமெடி கலந்த cold post-WW2 adventure film.

Wednesday, July 22, 2009

(சு)வாசித்ததும்.... யோசித்ததும்...

முந்தைய பதிவுகள் ...1 ...2 ...3 ...4 ...5 ...6 ..7



Tao of Physics
Author : Dr Fritjof Capra

விஞ்ஞானம், ஆன்மிகம் இரண்டிலும் நம்பிக்கை உள்ளவர்களுக்கு இந்தப் புத்தகம் மிகவும் பிடிக்கலாம். நவீன இயற்பியலையும் கீழை நாடுகளின் நம்பிக்கைகளையும் இணையாய் வைத்து பார்க்கும் புத்தங்களில் முக்கியமான ஒன்று. பல சர்ச்சைகளைக் கிளப்பியிருந்தாலும் பலராலும் ஏற்றுக்கொள்ளப் பட்டது.

பொதுவா எல்லாரும் சொல்றதுண்டு "நம்ம வேதங்களில் சொல்லாததா? இன்னிக்கு அறிவியல் சொல்ற எல்லாம் எங்காளுக என்னிக்கொ சொல்லி வெச்சுட்டாங்க"ன்னு. இதுவும் அதேமாதிரி வரிசைல ஒரு புத்தகம்னு சிலர் நினைக்கலாம். ஆனால் என் பார்வையில், அவர் சொல்லியிருக்கறது, நவீன இயற்பியல் எப்பிடி கீழை நாடுகளின் தத்துவ கட்டமைப்புக்குள்ள (philosphical framework) தன்னை பொருத்திக் கொள்ள இடம் கொடுக்குதுங்கறதுதான். அதாவது ஒரு அறிவியலாளனுக்கு 'ஆராய்ச்சி'யின் மூலம் ஞானம் கிடைச்சா கீழை நாட்டவருக்கு 'அனுபவ'த்தின் மூலமாவே கிடைச்சுருக்கு. இந்த ஒப்புமை மேலாக பாக்கும்போது கொஞ்சம் வினோதமாத் தெரியலாம். ஏன்னா அறிவியல் சோதனைகள்ங்கறது பல பேர் சேர்ந்து நூதன தொழில்நுட்பங்கள் மூலமாவும் கருவிகள் மூலமாவும் ஆராய்ச்சி செய்து ஒரு முடிவுக்கு வரது. ஆனா மற்றது ஒரு சிலரோட தனிமைல அவங்க தியானத்தின் மூலமா ஒரு அனுபவம் கிடைச்சு அதை ஒரு நம்பிக்கையா வெளியிடறது. அறிவியல் சோதனைகள் மூலமா மறுபடி மறுபடி செய்து பார்த்து ஒரே முடிவுகளை பலமுறை கண்டறியலாம். ஆனா ஆன்மிக அனுபவங்கள்கறது ஒரு சிலருக்கு மட்டுமே ஒரு சில நேரங்களில் நிகழறது. புத்தக ஆசிரியர் சொல்றது என்னன்னா அணுகுமுறைகள் வேற மாதிரி இருந்தாலும் சொல்ல வந்த கருத்துகளோட ஸ்திரத்தன்மையும் நம்பகமும் ஒண்ணேதான்.

"டாவோ"ங்கறதை "பாதை" அல்லது "வழி"ன்னு சொல்லலாம். அறிவியலின் பாதையும் கீழை நாடுகளின் மதம் / நம்பிக்கை சார்ந்த பாதைகளும் கடைசியில் ஒரே இடத்துலதான் சந்திக்கும்... சந்திச்சாகணும். நவீன இயற்பியலாளர்களான நீல்ஸ் போர், ஒப்பன்ஹீமெர், ஹீசென்பெர்க் இவங்கள்லாம் கூட இந்து, புத்த மதங்கள், டாவோயிச தத்துவங்களுக்கும் அறிவியலுக்கும் உள்ள இணைகளைப் பத்தி பேசியிருக்கறதையும் ஆசிரியர் மேற்கோள் காட்டியிருக்காரு.

ஆரம்பத்துலயே ஆசிரியர் காரண ஞானத்துக்கும் (rational knowledge) முழு ஞானத்துக்கும் (absolute knowledge) இருக்கற வித்தியாசங்களை (ஆராய்ச்சி , அனுபவம்) சொல்லி, ஆராய்ச்சியில் நமக்கு இருக்கற எல்லைகள், புலன்களோட திறன் போன்ற நெருக்கடிகளையும், அனுபவத்திற்கு இந்த கட்டுப்பாடுகள் எதுவுமே இல்லாததையும் விளக்கி எழுதியிருக்காரு. ஆனா எதுவா இருந்தாலும் செய்தியின் நம்பகத்தன்மை ரெண்டுலயும் ஒத்துக்கற மாதிரிதான் இருக்குங்கறதையும் தெளிவாக்கிடறாரு.

இன்னும் க்வாண்டம் அறிவியல் பத்தியும், கீழை நாட்டு சித்தாந்தங்களையும் ஒப்புமைப் படுத்தி சொல்லும்போது நமக்கும் இந்து, புத்த மத கோட்பாடுகளுக்கு கொஞ்சம் அறிமுகம் இருக்கறதால சுலபமா புரியுது. ஏத்துக்கவும் முடியுது. ஒரு சின்ன உதாரணம். ஒளி அலையா, துகளான்னு கேக்கும்போது விஞ்ஞானி ஷ்ரோடிங்கர் தன் ஆராய்ச்சி முடிவுல, அது பார்வையைப் பொறுத்தது; சாட்சி பார்க்கும்போது அலையாகவும் பார்க்காதபோது துகளாகவும் (photon) இருக்குன்னு சொன்னார். அறிவியலில் அடிப்படையா everything is objective. No influence from a subject is accepted. இருந்தாலும் அந்த ஒளி அலை ஒரு mathematical wave னு சொன்னதால ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதே மாதிரி, கீழை நாட்டு சித்தாந்தங்கள்ல இந்த ப்ரபஞ்சத்தின் இயக்கத்துக்கெல்லாம் ஒரு பரமசாட்சி இருக்குன்னு சொல்றதையும் சுட்டியிருக்கார்.

பிரபஞ்சத்தோட இயக்கம் ரொம்ப dynamic ஆ இருந்தாலும் அதுல ஒரு ஒழுங்கும் (rhythm) ஒத்திசைவும் (harmony) இருக்கறதையும், இதையே இந்து மதத்தின் நம்பிக்கைப்படி சிவனோட தாண்டவம் (நடராஜர்) உருவகப் படுத்தறதையும் ஒப்பிட்டுப் பேசும்போது ஆச்சரியமாத்தான் இருக்கு.

இந்தப் புத்தகத்தைப் பத்தி என்னால் ரொம்ப எழுத முடியல. அவரே சொல்லியிருக்கற மாதிரி சில விஷயங்களை சுயமா நம்ம புலன்களோட ஆராய்ஞ்சும், கட்டுப்பாடுகள் எதுவுமே இல்லாம கற்பனைலயும் அனுபவிச்சும் பாக்கும்போது ஒவ்வொருவர் பார்வைலயும் கொஞ்சமாவது வித்தியாசம் இருக்கும்கறதால 'புரிதல்'ங்கறதே ஒரு தனி அனுபவமாயிடும்.

படிச்சுப் பாருங்க.... உங்க பார்வை மாறலாம்....

Monday, April 13, 2009

பெஞ்சமின் பட்டன் - சினிமா விமர்சனம்


The Curious Case of Benjamin Button (2008)
Bradd Pitt, Cate Blanchet



கொஞ்ச மாசமா நம்ம லிஸ்ட்ல நிலுவைல இருந்த படம். இப்பப் பாக்கலாம் அப்பறம் பாக்கலாம்னு ஒரு வழியா பாக்க சந்தர்ப்பம் அமைஞ்சுது. '20கள்ல அமெரிக்க எழுத்தாளர் ஸ்காட் ஃபிட்ஸ்ஜெரால்ட் எழுதின ஒரு சிறுகதையை ஒட்டி எடுக்கப்பட்ட படம். முழுக்கற்பனை. இயல்பு வாழ்க்கைல நடக்க சாத்தியமே இல்லாத ஒரு சம்பவத்தை கற்பனை பண்ணி "இப்பிடி நடந்தா எப்படி இருக்கும்?" டைப் கதை.


உலகப் போர் முடிஞ்சு உலகமே அதைக் கொண்டாடற சமயத்துல ஒரு குழந்தை பிறக்குது. பிரசவத்துல தாய் மரணம். அப்பாவுக்கு குழந்தையப் பாக்கவே பிடிக்கல. பிறக்கும்போதே ஒரு 80 வயசுக்குண்டான கிழத்தோற்றம். தோல் சுருங்கி, கண்ல புரையோடி, காது கேக்காம, எலும்பெல்லாம் வலு இல்லாம....... வேறென்ன பண்ணுவான் பணக்காரத் தகப்பன்? குழந்தையை ஒரு காப்பகத்துல விட்டுட்டு ஓடிடறான். 'தெய்வ மகன்' படம் ஞாபகம் வந்துது. ஆனா கதை அது இல்ல.


குழந்தையோட வளர்ச்சி வினோதமா, காலத்தை எதிர்த்து, முடிவுல தொடங்கி, தொடக்கத்துல முடியுது. (அது_சரி : விசு... விசு...) 80 வயசு தாத்தாவா இருந்தவன்(ர்?) கொஞ்சம் கொஞ்சமா இளமையாகி கடைசில.... கடைசில... ஒரு கைகுழந்தையா வளர்ந்து (!!) கண்ணை மூடறான். சிக்கலான ப்ளாட். ஆனா இதுக்கு திரைக்கதை எழுதுனவங்க பாக்கியராஜ் கிட்ட அசிஸ்டெண்டா இருந்துருப்பாங்க போல. நீரோட்டம் மாதிரி க்ளீனா இருக்கு. கதையை ஆரம்பிச்சு, பெஞ்சமினோட பொண்ணை (அவதான் அவன் பொண்ணுன்னு தெரியாமயே) வெச்சே ஒரு டைரியைப் படிக்க வெச்சு, கடைசிப் பகுதியை பெஞ்சமினோட மனைவி வழியா சொல்ல வெச்சு... ரொம்ப மெனக்கெட்டுருக்காங்க.


படம் எடுக்கலாம்னு முடிவு பண்ணி அது பல கை மாறி, கடைசியா எடுத்து முடிச்சு வெளி வர 20 வருஷம் ஆயிருக்கு. ஒருவகைல பாத்தா டிலே ஆனது நல்லதுதான் போல. இல்லாட்டி டெக்னாலஜி உதவியோட மேக்கப் எல்லாம் இவ்வளவு தத்ரூபமா இருந்துருக்குமாங்கறது சந்தேகந்தான். ப்ராட் பிட் நல்ல நடிப்பு. Fall of the Legend பாத்ததுல இருந்தே எனக்கு ப்ராட் பிட்டை ரொம்பப் பிடிக்கும். இந்தப் படத்துலயும் அவனும் காதலியும் காலப்பாதைல எதிர் எதிர் திசைல பயணம் பண்ணி நடுவுல கிட்டத்தட்ட சம வயசுல கல்யாணம் பண்ணி, பெண் குழந்தை பிறக்குது. அதே எதிர் ஓட்டத்துல தன் மகளுக்கு தான் தகப்பனா இருக்க முடியாதுன்னு முடிவு பண்ணி குடும்பத்துக்கு வேணுங்கற ஏற்பாடெல்லாம் செஞ்சுட்டு வீட்டை விட்டு வெளியேறரது, உண்மையான அப்பாவை சந்திக்கறது, வளர்ப்பு அம்மா கிட்ட பாசம்னு ப்ராட் பிட் அமைதியா அனுபவிச்சு நடிச்சுருக்காரு. பாலே டேன்சரா வர கேட் ப்ளான்ஷெவும் அதுக்கு ஈடு குடுத்து நல்ல நடிப்பு. பல இடங்கள்ல வசனங்கள் ஷார்ப்.


ரொம்ப போட்டுக் குழப்பாம தெளிவா எடுத்திருந்தாலும் கேரக்டர்க கொஞ்சம் அதிகந்தான். படத்தோட முடிவுல ஒரு மோண்டாஜ்ல எல்லாக் கேரக்டர்களையும் காட்டி ஒரு சின்ன செய்தி (கார்டு போடாம) சொல்றாங்க.


இந்தப் படத்தை பாத்து முடிச்சதும், நம்ம ஸ்வாமி ஓம்கார் அவரோட அகோரிகள் பத்தின இடுகைகள்ல இதே மாதிரி ஒரு வினோத நிகழ்வைப் பத்தி எழுதியிருந்தது ஞாபகம் வந்துது. அதுலயே அந்த வினோத வழக்கோட சுட்டியும் குடுத்திருந்தார். அந்த இடுகைக்கான சுட்டியும், வழக்கைப் பற்றிய சுட்டியும் கீழே :


http://vediceye.blogspot.com/2009/02/blog-post_19.html


http://en.wikipedia.org/wiki/Bhawal_case

Monday, March 23, 2009

சிரியானா - சினிமா விமர்சனம்

Syriana (2005)

George Clooney, Matt Damon


"ஆவதும் ஆயிலாலே... அழிவதும் ஆயிலாலே... " இதுதான் படத்தோட தீம். மொதல்லியே சொல்லிடணும். படத்தை முதல் தடவை பாத்தபோது ஒண்ணுமே புரியல. பிறகு கொஞ்சம் யோசிச்சுட்டு சம்பவங்களை மனசுக்குள்ள கோர்த்துட்டு ரெண்டாவது தடவை பாத்ததும்தான் ஓரளவுக்குப் புரிஞ்சுது.

பெட்ரோலிய அரசியல், ஆயில் இண்டஸ்ட்ரி மேல சில சக்திகளோட இன்ஃப்ளூயன்ஸ், சட்ட, சமுதாய, தனிப்பட்ட ரீதியில அதனுடைய விளைவுகளை சந்திக்கற சிலரையும் பற்றிய கதை.

இரான்ல சில ஏவுகணைகள் திடீர்னு திருடு போகுது ; அமெரிக்காவுல பெரிய ஆயில் கம்பெனி கொன்னெக்ஸ் போய் கில்லீன்கற ஒரு சின்ன ஆயில் கம்பெனியோட சேரறாங்க ; கசகஸ்தான்ல ஒரு எண்ணைகிணறுல ஆயில் எடுக்கற உரிமை சீனாவுக்கு போகுது ; இந்த காண்ட்ராக்ட் விவகாரத்துல எதாவது லஞ்சம் விளையாண்டுருக்குமான்னு விசாரிக்க ஒரு வக்கீல் ; ஒரு நடமாட முடியாத சௌதி எமிர் குடும்பத்துல அண்ணன் தம்பிகளுக்குள்ள அடுத்த எமிர் யாருங்கற தகராறு ; ஸ்விஸ்ல இருக்கற ஒரு எனர்ஜி அனலிஸ்ட்டோட பையன் நீச்சல் குளத்துல ஷாக் அடிச்சு செத்துப் போறான் ; எமிரோட மூத்த பையனை கொலை செய்ய ஆள் புடிக்க ஒரு CIA ஏஜண்டை அனுப்பறாங்க ; பாகிஸ்தான்ல இருந்து வர பல வேலையாட்களுக்கு வேலை போய் சில அடிப்படைவாதிகளோட சேந்து தற்கொலைப் படைகள் அமையுது - எதாவது புரியுதா? தலை சுத்துது இல்ல?

சௌதி எமிரோட இளைய பையனை அமெரிக்கா பணத்தாலயே சாத்தி பொம்மையாக்கிடறாங்க. மூத்தவனோ ஹார்வர்டுல படிச்சு தன் நாட்டு எண்ணை வளத்தை நல்ல முறைல பயன்படுத்தி நாட்டை முன்னேற்றணும்னு துடிக்கறாரு. நடுவுல பையன் செத்துப் போனதை மூலதனமா வெச்சு அந்த எனர்ஜி அனலிஸ்ட் (மேட் டேமன்) எமிரோட மூத்த பையனுக்கு ஆலோசகரா சேந்து தம்பி கிட்ட இருந்து ஆட்சியைக் கைப்பற்ற முயற்சில இறங்கறாங்க. இது நடந்தா அமெரிக்காவுக்கு ஒத்துக்காதுன்னு மூத்த பையனை தீத்துக்கட்ட அமெரிக்கா திட்டம் போடுது. முடிஞ்சுதா?

காண்ட்ராக்ட் கை மாறுனதுல லஞ்சம் இருக்குன்னு கண்டு புடிச்சு அதுக்கு ஒரு பலியாடு தேடுது நீதித்துறை. CIA ஏஜண்ட் (ஜியார்ஜ் க்ளூனி) லெபனான் போய் ஹிஸ்போலா தீவிரவாதிக கிட்ட டீல் போடும்போது சாயம் வெளுத்துப் பொற அமெரிக்கா அவரையே மாட்டி விட்டுடறாங்க. அவரு உடனே கோவமாகி படுகொலை செய்யப்பட இருக்கற எமிரோட மூத்த பையனைக் காப்பாத்த முயற்சி எடுக்கறாரு. காப்பாத்துனாரா?

வேலை போன பாகிஸ்தான் கூலியாளுக வேற வழியில்லாம தற்கொலைப் படைல சேந்து கொன்னெக்ஸ்-கில்லீன் கம்பெனியோட முதல் எண்ணைக் கப்பல் வெளிய போகும்போது அதை தகர்க்க திட்டம் போடறாங்க. பண்ணாங்களா?

பையனுடைய இறப்பைக் கூட வியாபாரம் ஆக்குன கணவனை விட்டு மனைவி பிரிஞ்சு போயிடறா. அவங்க ஒண்ணு சேந்தாங்களா?

எல்லாத்துக்கும் பதில் வேணும்னா படத்தை பாருங்க.

இந்த ஒரு டாக்குமென்டரி மாதிரியான இடியாப்ப படத்தை கட்டிங் ஒட்டிங் பண்ண எடிட்டர் நிஜமாவே பெரிய ஆளுதான். பெரிய சவாலா இருந்துருக்கும். படத்துல காட்சிக்கு காட்சி வேற வேற நாடுக. கசகஸ்தான், இரான், ஸ்பெயின், ஸ்விஸ், துபாய், அமெரிக்கா, லெபனான், பாகிஸ்தான்....

"படம் பயங்கர குழப்பமா இருக்கு. ஃபாலோ பண்ணவே முடியல"ன்னு பரவலான நெகடிவ் பப்ளிசிடி இருந்தாலும், அமெரிக்காவுக்கும் சைனாவுக்கு இடைல இருந்த ஒரு இலைமறை காய்மறையான டீலை படம் நல்லா நக்கலடிச்சுருக்குன்னும் பல விமர்சனங்கள்.

க்ளூனிக்கு ஒரு ஆஸ்கார் வேற கிடைச்சுது. போர்ன் ஐடென்டிடில பாத்த ஆக்சன் ஹீரோ மேட் டேமன் இதுல பாந்தமா அடக்கி வாசிச்சுருக்காரு. படத்துல வரிகளுக்கு நடுவுல படிக்க வேண்டியது நிறைய இருக்கு. நிறைய சப் டெக்ஸ்ட். நிறைய சர்ரொகேஷன். கண்டிப்பா பாத்தே ஆக வேண்டிய படம்னு சொல்ல முடியாது. ஆஃப் பீட் படங்களை விரும்பறவங்களுக்கு இந்தப் படம் பிடிக்கும்.


Sunday, March 15, 2009

தஸ்விதானியா - சினிமா விமர்சனம்


Dasvidaniya (Hindi)

Vinay Pathak, Rajat Kapoor, Neha Dhupia, Ranvir Shorey


2008 நவம்பர்ல ரிலீஸ் ஆனாலும் நமக்கு இப்பத்தான் பாக்க வாய்ப்பு கிடைச்சுது. உங்களையும் என்னையும் போல ஒரு பரமசாது ஒருத்தன் இன்னும் 3 மாசத்துல சாகப் போறோம்னு தெரிஞ்சா என்ன பண்ணுவான்? இப்பிடி ஒரு கான்செப்டை அட்டகாசமா சினிமா ஆக்கின டைரக்டர் ஷஷாந்த் ஷாவுக்கு முதல் சபாஷ். கோடி கோடியாக் கொட்டி மசாலாப் படமா அரைச்சுத் தள்ற பாலிவுட் மாவு மில்லுல இருந்து வந்த ஒரு வித்தியாசமான லோ பட்ஜெட் படம்.

நாயகன் அமர் கௌல் 37 வயசு பேச்சிலர். காது கேக்காத அம்மா கூட பாம்பே அவுட்டர்ல ஒரு ஃப்ளாட்ல குடித்தனம். ஒரு மருந்துக் கம்பெனில அக்கௌண்ட்ஸ் மேனேஜர். தினப்படி வேலையெல்லாம் ஒரு To do லிஸ்ட் போட்டு கிரமமா செய்யற ஆளு. ஆட்டோ ட்ரைவர்ல இருந்து ஆபீஸ் மேனேஜர் வரைக்கும் புழு மாதிரி ட்ரீட் பண்ணினாலும் எதிர்த்து ஒரு வார்த்தை பேச மாட்டான். (மொதல்லயே சொல்லல? உங்களையும் என்னயும் மாதிரின்னு..) அப்பிடி ஆளுக்கு வயித்துவலின்னு டாக்டர்ட்ட போனா கேன்சர் 2வது ஸ்டேஜ்ங்கறாரு. மிஞ்சிப் போனா ஒரு மூணு மாசம் இருக்கலாம். அவ்வளவுதான்... அப்பிடியே நொறுங்கிப் போய் உக்காந்துடறான்.

அப்பதான் வழக்கம் போல மனசாட்சி எதிர்ல வந்து உக்காந்து "டேய் பன்னாடை.. இந்த மாதிரி அல்ப விஷயத்துக்கெல்லாம் லிஸ்ட் போட்டுக்கிட்டு உக்காராம உருப்படியா வாழ்க்கைல விட்டுப்போன பெரிய காரியங்களை இந்த 3 மாசத்துல செய்து முடிக்கப் பாரு"ன்னு சொல்ல, பாதை கொஞ்சம் திரும்புது. புது கார் வாங்கணும், வெளிநாடு போணும், பாஸுக்கு பாஸா ஆகணும், கிடார் கத்துக்கணும், பேப்பர்ல மொதப் பக்கத்துல ஃபோட்டோ வரணும் அப்பிடின்னு குட்டி ஆசைகளையும் சின்ன வயசு காதல், ஃப்ரெண்ட்ஷிப், வீட்டை விட்டு ஓடிப் போன தம்பியை மறுபடி வீட்டுக்கு கூட்டி வரதுங்கற மாதிரி பெரிய ஆசைகளையும் ஒரு 10 ஐட்டம் லிஸ்ட் போட்டு ஒண்ணொண்ணா முடிக்கிறான். எல்லாத்துலயும் சின்ன சின்ன சுவாரஸ்யங்கள் வெச்சுருக்கறது டைரக்டரோட புத்திசாலித்தனம்.

12 வருஷங்களுக்கு பொறகு நண்பனைத் தேடி தாய்லாந்து போனா நண்பனோட மனைவி இவன் ஃப்ரீ ட்ரீட்மெண்ட்டுக்காக வந்துருக்கானோன்னு சந்தேகப்படறாங்க. வெறுத்துப் போய் தெருவுல சுத்தும்போது ஒரு ரஷ்ய விலைமாது வீட்ல போய் கொஞ்ச நாள் இருந்துட்டு வரதெல்லாம் கொஞ்சம் சினிமாத்தனமா இருந்தாலும் ஒக்கே. (அப்பறம் 'தஸ்விதானியா'ன்னு பேர் வெச்சுட்டு ரஷ்ய லிங்க் இல்லேன்னா எப்பிடி?) கொஞ்சம் சோகமான படம்னாலும் முழுக்க மெல்லிய நகைச்சுவை கலந்து இருக்கறது படத்துக்கு பலம். க்ளைமேக்ஸ்? படத்தைப் பாருங்களேன்.

வினய் பாடக் இது மாதிரி ரோலுக்கு பெர்ஃபெக்ட் ஃபிட். 2 வருஷம் முன்னால வந்த Bheja Fry டீம்ல பாதி பேர் இந்தப் படத்துலயும். ரஜத் கபூர் வழக்கம் போல அலட்டல் இல்லாத அமைதியான் நடிப்பு. ஆபீஸ் மேனேஜர் சௌரப் ஷுக்லா (ஹே ராம்ல கமல் ஃப்ரெண்டா வருவாரே அந்த குண்டு நடிகர்) கொஞ்ச நேரமே வந்தாலும் கலக்கல். நேஹா துபியாவும் கெஸ்ட் ரோல் மாதிரிதான். ஆனா நல்லா பண்ணியிருக்காங்க. அந்த விலைமாது கேரக்டருக்கு ஒரு ரஷ்யப் பொண்ணையே நடிக்க வெச்சுருக்காங்க.

படத்துல ஹைலைட் அந்த 3 பாட்டுகளும். புது ம்யூசிக் டைரக்டர் கைலாஷ் கேர். அவரே பாடல்கள் எழுதி பாடவும் செஞ்சுருக்காரு. ஆனா முதல் படம் மாதிரியே இல்ல. மூணுமே மெலடி ஜோனெர். ரொம்ப நாளைக்கப்பறம் இது மாதிரி இதமான பாட்டுகள் பாலிவுட்ல இருந்து. லிரிக்ஸ் அட்டகாசம். சேம்பிள்க்கு....

"zindagi naa mil ajnabi ban ke
bandagi shaamil har dua ban ke "

'தஸ்விதானியா'ன்னா ரஷ்யன்ல (do svisdanya) 'குட்பை'ன்னு அர்த்தமாம். அதுல ஒரு சின்ன pun சேத்து '10 வேலைகள்'னு வரமாதிரி டைட்டில். குடும்பத்தோட பாக்க வேண்டிய படம். பாருங்க... இது மாதிரி கூட மசாலத்தனங்கள் இல்லாம இந்தி சினிமாவுல பண்றாங்கங்கறதுக்காகவாவது பாக்கணும்.

Tuesday, March 3, 2009

பிங்க் பேந்தர் 2 - சினிமா விமர்சனம்

ஜனவரில இருந்தே விளம்பரமா போட்டுத் தாக்கி ரொம்ப எதிர்பார்ப்புகளை தூண்டி விட்ட படம். ஆனா ஹைப் பண்ண அளவுக்கு பெருசா ஒண்ணும் இல்லங்கறது ஏமாத்தம். பிங்க் பேந்தர் விசிறிகள் எல்லாம் "இவ்வளவுதானா?"ங்கற மாதிரி "இதுக்கெல்லாம் விமர்சனம் ஒரு கேடா?"ங்கறாங்க. அதெல்லாம் ஒருபுற ம்இருந்தாலும் 90 நிமிஷம் சிரிப்பு கேரண்டி.

ஸ்டீவ் மார்டினோட ஃப்ரென்ச் ஆக்ஸன்ட் கலந்த பேச்சும், கொணஷ்டைகளும், கார்ட்டூன்ல் வர பிங்க் பேந்தர் பண்ற அத்தனை சேட்டைகளையும் இவர் பண்றதைப் பார்க்கும்போது சிரிப்பு பொத்துக்கிட்டு வருது. பலே திருடன் "டொர்னேடோ" உலகத்துல பல நாடுகள்ல இருக்கற ம்யூசியங்கள்ல இருந்து பல அரிய பொக்கிஷங்களை ஆட்டையப் போடறான். ஃப்ரான்சோட பிங்க் பேந்தர் வைரமும் அம்பேல். ஆளைப் புடிக்க பல நாடுகளோட போலீஸ்களை கொண்ட "ட்ரீம் டீம்" அமைக்கறாங்க. அதுல நம்மாளு ஃப்ரென்ச் இன்ஸ்பெக்டர் ஜாக் க்ளூசோவும். டீம்ல அவனும் இருக்கணும்னு சொன்னதும் கமிஷனர் டாய்லெட்டுக்குள்ள போய் செவுத்துல முட்டிக்கிறார் பாருங்க, நாம சிரிச்சு முடிக்கறதுக்குள்ள நாலு டயலாக் போச்சு.

நம்மாளும் அசிஸ்டென்ட் ஜீன் ரெனொவும் அடிக்கற கூத்துக சரி ரகளை. எல்லாம் ஸ்லாப்ஸ்டிக் ரகம்தான். குறிப்பா சொல்லணும்னா வைன் குடிக்கிறேன் பேர்வழின்னு ஒரு ரெஸ்டாரண்டயே கொளுத்தறது, அதை சரி பண்ணி ரீ-ஒபெனிங் அன்னிக்கு மறுபடியும் கொளுத்தறது, பிஹேவியர் கௌன்சலர் கிட்ட பண்ற ரகளை, ரோம்ல டொர்னேடொ இருக்கற வீட்டுல போய் "துப்பறியறேன் பெருமாளே"ன்னு செக்யூரிடி கேமரா முன்னாலயே போய் நிக்கறது எல்லாம் தியேட்டர்ல சுத்தி இருக்கறவங்க சிரிக்கற சத்தத்துல டயலாக்கே கேக்காது.

படத்துல ஒரு சின்ன ஆச்சரியம் ஐஸ்வர்யா ராய். இந்தியாவுல இருந்த வந்த டிடெக்டிவ்னு சொல்லிட்டு கடைசில பாத்தா அவர்தான் வில்லியாம். ஐஸ்வர்யாவோட மொத்த டயலாக்கையும் ஒரு சிங்கிள் பார்ட் SMSல அனுப்பிச்சுடலாம். அந்த ரோலுக்கு ஐஸ்வர்யா ராய் தேவையான்னு கேக்காதீங்க. படம் வித்தாகணுமே.

நடுவுல நம்மாளுக்கும் டிடெக்டிவ் நிகோலுக்கும் ஒரு லவ் வேற. அதுல குறுக்க ஆண்டி கார்சியா. ஒரு கட்டத்துல கேஸ் சால்வ் ஆயிடுச்சு, பேக்கப்னு சொல்லும்போது மறுபடியும் நம்மாளால ஒரு திடீர் திருப்பம். அப்பறம் நிஜமா கேஸ் முடிஞ்சு எல்லாம் சுபம்.

எல்லாம் பெருந்தலைகளாப் போட்டு இருந்தாலும் ஸ்டீவ்தான் மார்க் அள்றாரு. பின்னணி இசையெல்லாம் நாம கேட்டு கேட்டு பழகின ஒரிஜினல் பிங்க் பேந்தர் ட்யூன்கதான். ஆனாலும் DTSல கேக்கும்போது அட்டகாசமா இருக்கு. 90 நிமிஷம் போனதே தெரியல. சில டயலாக்கெல்லாம் அத்துமீறி இருக்கறதால PG சர்டிபிகேட் குடுத்து சில எதிர்மறை விமர்சனங்களையும் கிளப்பியிருக்கு. இங்கிலீஷ் படத்துல இதெல்லாம் சகஜந்தானே.... மொத்தத்துல நல்ல பொழுதுபோக்கு.

Pink Panther கொஞ்சம் Stink Panther-ஆ இருந்தாலும் Zing Panther !!

Saturday, February 28, 2009

(சு)வாசித்ததும்.... யோசித்ததும்...

முந்தைய பதிவுகள் ...1 ...2 ...3 ...4 ...5 ...6

இந்த புத்தக அறிமுகத் தொடருக்கு "அவனோடே ராவுகள்"னு தலைப்பு வெச்சுருந்தேன். போன முறை அப்துல்லா அண்ணன் தலைப்பை மாத்த சொல்லி வேண்டுகோள் விடுத்தாரு. அவருடைய கருத்தை மதித்து தலைப்பை மாத்தியாச்சு. நன்றி அப்துல்லா.


The Five People You Meet in Heaven
Author : Mitch Albom

இது ஒரு நாவலா, கட்டுரையா, தத்துவ விளக்கப் புத்தகமான்னு ஒரு பட்டிமன்றமே வைக்கலாம். நாவல் வடிவிலான ஒரு உளவியல் புத்தகம்னும் சொல்லலாம். எதுவா இருந்தாலும் படிக்க ரொம்ப சுவாரஸ்யமா இருக்கு. மனித உணர்வுகளை வலிக்கற அளவுக்கு தூண்டி விடுது. கதாநாயகனை நம்மளோட பிரதிநிதின்னு வெச்சு படிச்சா ஆசிரியர் சொல்ல வர செய்திகளோட நம்மள சுலபமா இணைச்சுக்க முடியுது.

படிக்க ஆரம்பிச்சதுமே வித்தியாசம். கதையோட முதல் வரியிலேயே கதாநாயகன் எட்டி (Eddie) இறந்து போகிறான். 86 வயசு. ஒரு அம்யூஸ்மென்ட் பார்க்ல இயந்திரங்களைப் பராமரிக்கிற மெக்கானிக். ஒரு ஜயன்ட் வீல் மாதிரியான ரைட்ல ஒரு பெட்டி கழண்டு விழ, அதுல இருக்கற ஒரு சிறுமிய காப்பாத்தற முயற்சியில் இறந்து போகிறான். இறப்புக்குப் பின்னால அவனுக்கு நிகழ்கிற அனுபவங்கள்தான் புத்தகம்.

எட்டி சொர்க்கத்துக்குப் போகிறான்(ர்?). அது "சொர்க்கம்"தான் அப்படிங்கறது அவனுடைய எண்ணம். தான் இறப்பதற்கு முன் அந்தச் சிறுமியைக் காப்பாற்றினானா இல்லயா என்பது அவனுக்கு தெரியவில்லை. அது ஒரு முள்ளாக குத்துகிறது. அங்கே அவனுக்காக 5 பேர் காத்திருக்கிறார்கள். ஒவ்வொருவரும் அவன் வாழ்க்கையில் ஏதோ ஒரு வகையில் அவனோடு சம்பந்தப்பட்டவர்கள். சிலரை அவனுக்கே தெரியாது. ஒவ்வொருவரும் அவனை சந்திக்க வேண்டும், அவனுக்கு ஒரு செய்தியைச் சொல்ல வேண்டும் என்பதற்காகவே காத்திருக்கிறார்கள். இதெல்லாம் சாத்தியமா, உண்மையா, சொர்க்கம் என்ற ஒன்று உண்டா, இறந்த பின் "சந்திப்புகள்" எப்படி, இது ஆத்திகத்தை ஊக்குவிக்கும் புத்தகமா என்றெல்லாம் பல சந்தேகங்கள் வரலாம். என்னைப் பொறுத்த வரையில் அந்த சந்தேகங்கள் எல்லாம் அநாவசியம். நம்மை நாமே ஒரு தளம் மேலேயிருந்து நமது நிறை குறைகளைப் பார்ப்பது போல இருக்கிறது. அந்த ஒரு அனுபவத்துக்காகவே இந்தப் புத்தகத்தைப் படிக்கலாம்.

தெருவில் குறுக்கே ஓடிய சிறுவன் எட்டியை தவிர்க்க காரைத் திருப்பி ஆக்ஸிடென்டில் இறந்த "ப்ளூ மேன்" அவனது அறியாமையைப் பற்றிப் பேசுகிறார். (இவரை இதற்கு முன் தன் வாழ்வில் எட்டி சந்தித்ததில்லை) பிலிப்பைன்ஸுக்கு போருக்குப் போன எட்டியின் கேப்டன் தனது தியாகத்தைப் பற்றி சொல்கிறார். (வீட்டின் பிரச்னனகளிலிருந்து தப்பிக்க சிறிது காலம் போருக்குச் சென்று கால் ஊனமாகிறான் ) எட்டி வேலை செய்த "ரூபி பியர்" பார்க்கின் நிறுவனரின் மனைவி எட்டியின் அப்பாவின் மறுபக்கத்தை விளக்கி அவரை மன்னித்து விடும்படி சொல்கிறாள். (எட்டியின் அப்பா ஒரு கடுகடு பேர்வழி. அவனுடன் ஒருபோதும் இணக்கமாக இருந்ததில்லை. சிறு வயது முதலே அவர் மீது கடும் வெறுப்புடன் இருக்கிறான் எட்டி. அவன் தாயார்தான் அவனுடைய நெருங்கிய தோழி.) நான்காவதாக அவனுடைய மனைவி மார்கரெட். அன்பைப் பற்றிய சாஸ்வதமான உண்மைகளை விளக்குகிறாள். (எட்டி தன் மனைவியை மிக மிக மிக நேசித்தவன். அவனுடைய 50வது வயதில், கேன்சரில் அவள் இறந்தவுடன் உலகமே இருண்டு போனது போல உணர்ந்தவன்.) கடைசியாக அவனை சந்தித்து ஒவ்வொருவர் வாழ்விற்கும் ஒரு காரணமும் அர்த்தமும் இருக்கிறது என்று எடுத்துச் சொல்வது ஒரு பிலிபினோ சிறுமி. எட்டி இறப்பதற்கு முன்பு அவன் ஜெயண்ட் வீலில் மாட்டிக்கொண்ட சிறுமியைக் காப்பாற்றி விட்டுத்தான் இறந்தான் என்ற உண்மையைச் சொல்லி அவன் மனதில் முள்ளாய்க் குத்திய கேள்விக்கு பதிலளிக்கிறாள். (பிலிப்பைன்ஸில் அவனும், நண்பர்களும், கேப்டனும் சிறையிலிருந்து தப்பி ஓடும்போது சிறைக்கு தீ வைக்கிறார்கள். கடைசி நிமிடத்தில் கட்டிடத்துக்குள் யாரோ இருப்பது போல உணர்ந்து அவரைக் காப்பாற்ற எட்டி முயற்சிப்பதற்குள் எல்லாம் காலி. அந்தச் சிறுமிதான் இவள்.)

வாழும்போது தன் வாழ்க்கை முழுவதும் தான் ஒரு அர்த்தமில்லாத வாழ்க்கை வாழ்வதாகவும், எதற்கும் உபயோகமற்றதாகவும், தன் மீது அன்பு செலுத்தாத தந்தையினால் தான் அடைந்திருக்க வேண்டிய பலவற்றை இழந்து விட்டதாகவும், தன் அன்பு மனைவியை அவளை நேசித்த அளவுக்கு நல்ல நிலைமையில் வைத்திருக்க முடியவில்லை என்ற குற்ற உணர்ச்சியுடனுமே கழித்த எட்டி, இறந்த பின்பு இந்த 5 பேர் சொன்ன செய்திகளின் மூலம் அனைத்திற்கும் விடை காண்கிறான்.

புத்தகத்தை ஆழ்ந்து படிக்கும்போது எட்டி வேறு யாரும் அல்ல, அது நாம்தான் என்பது புரியும். நாம் ஒவ்வொருவரும் மற்றவர்களுடன் எப்படி பிணைந்திருக்கிறோம் என்பதும் புரியும். மனித வாழ்வை சிறந்த முறையில் கழிக்க தேவையான சக மனிதர்களை மதிப்பது/புரிவது (empathy) , தியாகம், மன்னிக்கும் குணம், அன்பு மற்றும் இரக்க குணங்கள் - இவற்றை அவனைச் சந்திக்கும் ஒவ்வொருவரும் வலியுறுத்துகிறார்கள்.

சொல்லியிருக்கிற செய்திகள் போலவே, ஒவ்வொரு அத்தியாயத்துக்கு நடுவிலும் எட்டியின் எதாவது ஒரு பிறந்த நாளில் நடந்த சம்பவத்தைச் சொல்வது என்று கதையின் வடிவமும் வித்தியாசமாக இருக்கிறது. சிறிய புத்தகம்தான். ஆனால் நம்முடன் நெருங்கிய தொடர்பு உள்ளது என்ற வகையில் படித்து முடிக்க தாமதமாகலாம். இது போன்ற புத்தகங்களை ஒரே மூச்சில் படித்து விட்டு அடுத்த புத்தகத்தை எடுப்பது கடினம். மெதுவாக அனுபவித்து படித்தால் அதில் கிடைக்கும் கிளர்ச்சியே தனி. படித்துப் பாருங்கள்.

Saturday, February 7, 2009

அவனோடே ராவுகள் .... 6

முந்தைய பதிவுகள் ...1 ...2 ...3 ...4 ...5


Many Lives Many Masters
Author : Dr Brian Weiss

"இந்த செய்திகளை உலகத்துக்கு சொல்ல வேண்டும் என்ற வைராக்கியத்தை எனக்குள் ஏற்படுத்திக்கொள்ள - அதுவும் நிச்சயமாக என் தொழிலுக்கு ஊறு விளைவிக்கலாம் என்ற ஆபத்துடன் - எனக்கு 4 வருடங்கள் பிடித்தது. ஆனால் இதை பகிர்ந்து கொள்வதால் எனக்கு நேரக்கூடிய இன்னல்களை விட சொல்லாமல் இருப்பது இன்னமும் மோசம் என்று தோன்றியது. நான் ரிஸ்க் எடுக்கத் தயங்கும்போதெல்லாம் என் ஹங்கேரிய தாத்தா மிகுந்த பிரியத்துடனும் குறும்பாகச் சொல்வார் - vat the hell?" - புத்தகத்தின் முன்னுரையில் ஆசிரியர் சொல்லியிருப்பது.

புத்தக ஆசிரியர் ஒரு மனநல மருத்துவர். வாழ்க்கையில் அறிவியல் பூர்வமாக நிறுவ முடியாத எந்த கோட்பாடையும் நியதியையும் மறுத்தவர். ஒன்றை நிரூபிக்கமுடியாது என்றால் அது கிடையாது என்று தீர்மானமாக இருந்தவர். அவர் வாழ்வில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை அவரே சொல்வதுதான் இந்தப் புத்தகம்.

இவர் கொலம்பியா பல்கலைக்கழகத்திலும் யேல் மருத்துவக் கல்லூரியிலும் படித்தவர். அவரிடம் ஒருநாள் கேத்தரின் (27) என்ற மன அழுத்த நோயாளி வருகிறாள். வழக்கமான மருத்துவ முறைகளில் முன்னேற்றம் ஏதும் இல்லாததால் hypnotic regression என்ற ஆழ்நிலை மனக்கட்டுப்பாட்டுக்கு உட்படுத்துகிறார். அப்போது அவருக்கு நேரும் வித்தியாசமான, அதுவரை அவர் அனுபவித்திராத, அவருடைய அறிவுக்கு சவாலாக விளங்கிய அனுபவங்களே இந்தப் புத்தகம். இந்த சிகிச்சையின்போது கேதரின் தன்னுடைய முன்பிறவிகளைப் பற்றியும் (கிட்டத்தட்ட 89 முற்பிறவிகள் !!), இரு பிறவிகளுக்கு இடைப்பட்ட நிகழ்ச்சிகளையும் கூட மிகவும் தெளிவாக நினைவு கூறுகிறாள். டாக்டரால் மறுக்க முடியவில்லை.

தன் ஆராய்ச்சியைத் தொடர்ந்து விர்ஜினியா பல்கலைக்கழகத்தின் டாக்டர் இயான் ஸ்டீவன்சனுடைய ஆய்வுகளில் சில குழந்தைகள் தமக்கு கொஞ்சமும் அறிமுகம் இருக்க வாய்ப்பில்லாத மொழிகளில் கூட பேசுவதைப் (xenoglossy) பற்றி எழுதியிருப்பதை அறிகிறார். கேதரினிடம் இன்னும் சில ஆராய்ச்சிகள் நடத்துகிறார். அதில் முற்பிறவி/மறுபிறவிகளைப் பற்றிய குறிப்புகள் பழைய ஏற்பாட்டில் இருந்ததையும், பின்னால் வந்த ரோமாபுரி மன்னன் கான்ஸ்டன்டைனும் அவன் தாயார் ஹெலினாவும் சர்ச்சுகளின் வளர்ச்சிக்கு இது இடைஞ்சலாக இருக்கும் என்று கருதி அந்தக் குறிப்புகளை நீக்கியதையும் சுட்டியிருக்கிறார்.

புத்தகத்தில் முற்பிறவிகளை விட, கேதரினுக்கு சில ஆசான்களின் குரல்கள் மூலமாகக் கிடைத்த சில செய்திகள் (messages) மிகவும் ஆச்சரியமாக இருக்கின்றன. அவைகளைப் அர்த்தத்தின் ஆழத்தைப் பார்க்கும்போது இந்து மதத்தின் அடிப்படைக் கோட்பாடுகளுடன் மிகவும் ஒத்துப்போவது தெரியும். "கற்று அறிந்து கொள்வது நமக்கிடப்பட்ட கடமை. கற்பதன் மூலம் கடவுளை அறிந்து கொள்வது, கடவுளை நெருங்குவது". வேதம் சொல்வது போல "ஞானானாத் ஏவ கைவல்யம்" - ஞானமே கடவுளை அடையும் வழி. பிரமிப்பாக இருக்கிறது.

ஒருமுறை டாக்டர் ப்ரையன் தனது தந்தையின் மற்றும் இறந்து போன மகனின் குரல்களில் சில செய்திகளை கேட்க நேருகிறது. மற்ற எவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லாத சில செய்திகளை கேதரின் தெளிவாகக் கூறுகிறாள். டாக்டரின் தந்தையின் ஹீப்ரு பெயர், டாக்டரின் மகன் ஒரு இதய நோயின் காரணமாக இறந்துபோனது பற்றி, டாக்டர் மனநல மருத்துவத்துறையை ஏன் தேர்ந்தெடுத்தார் என்பதெல்லாம் விளக்கமாகச் சொல்கிறாள். அவருடைய மகன் பிறந்து ஒரு குறுகிய வாழ்வு வாழ்ந்தது சில கடன்களை தீர்ப்பதற்காக என்று சொல்வது நமது வேதாந்தத்தின் அடிப்படையான கர்மா. "நமக்கு தீர்ப்பதற்கான கடன்கள் இருக்கின்றன. அவை தீராத பட்சத்தில் அவற்றை இன்னொரு பிறவிக்கு எடுத்துச் சென்று தீர்த்தே ஆகவேண்டும்" என்று தனக்கு ஒரு ஆசான் செய்தி சொன்னதாக கேதரின் கூறுகிறாள். இது இந்து மதத்தின் ஆணிவேரான நியதி.

இந்து மதத்தில் பிறந்ததாலோ, அல்லது இந்து மதக் கோட்பாடுகளைப் பற்றி சிறிதளவு தெரிந்திருப்பதாலோ என்னவோ, கேதரினுக்கு ஆசான்களிடமிருந்து கிடைக்கும் ஒவ்வொரு செய்தியையும் நமது வேதாந்தத்தோடு ஒப்பிட்டு அதன் உண்மையான, ஆழமான, தீர்க்கமான அர்த்தத்தை புரிந்து கொள்ள முடிகிறது. தனிப்பட்டமுறையில் எனக்கு இன்னமும் மறுபிறவி போன்ற தத்துவங்களை ஏற்க முடியவில்லை என்றாலும் வேதாந்த்தத்திற்கும் இந்த செய்திகளுக்கும் உள்ள நேரடித் தொடர்பை சுலபமாக உணர முடிகிறது.

இந்தப் புத்தகமே வெறும் கட்டுக்கதையோ என்று பல விமர்சனங்கள் உள்ளன. ஆனால், என்னைப் பொறுத்தவரை, புத்தக ஆசிரியர் தன்னுடைய 50 வருட தொழிலை பணயமாக வைத்து ஒரு கற்பனையான கதையை எழுத வேண்டிய எந்த அவசியமும் இல்லையே !! இத்தனைக்கும் அவர் ஒரு மரியாதைக்குரிய பழுத்த மனநல மருத்துவர். அதோடு மியாமியில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரியில் மனநல மருத்துவப் பிரிவின் தலைவர். நடைமுறையில் இப்படி ஒரு அறிவியலுக்கு அப்பாற்பட்ட செய்தியை புத்தகமாக கொடுப்பதில் அவருக்கு இழப்புதான் அதிகமாக இருக்கலாமே தவிர அடைய ஏதும் இருப்பதாக நான் நினைக்கவில்லை.

ஆசான்களின் சில செய்திகள் - புத்தகத்திலிருந்து :

"கற்பதும், அறிவதும், அதன் மூலம் கடவுளைப் போல ஆவதும் நமது கடமை. அறிவின் மூலம் கடவுளை அடைந்து பிறகு ஓயலாம். பின்பு நாம் திரும்ப வந்து பலருக்கு இதை அறிவுறுத்தி உதவ வேண்டும்"

"பல கடவுளர்கள் உள்ளனர் - நம் ஒவ்வொருவருக்குள்ளும் கடவுள் இருப்பதால்"

"நாம் ஒவ்வொருவரும் எவ்வளவு 'உணர்ந்திருக்கிறோம்' என்பதில் வெவ்வேறு தளங்களில் இருக்கிறோம்.... அது நாம் எந்த அளவுக்கு 'உணர்ந்து ' # எவ்வளவு முன்னேறியிருக்கிறோம் என்பதைப் பொறுத்தது..."

"சர்வம் சக்தி (energy) மயம்... மனிதர்களால் வெளிப்புறத்தை மட்டுமே உணர முடியும். ஆனால் முயன்றால் உட்புறமும் உணர முடியும். சொல்லப்போனால் இயல்பு நிலையில் (physical state) இருப்பது அசாதாரணம். உணர்வு நிலையில் (spiritual state) இருப்பதுதான் நமக்கு இயற்கையாக விதிக்கப்பட்டது"

"மனிதர்கள் அனைவருக்கும் மரணத்தைப் பற்றிய ஒரு விதமான பயம் உண்டு. ஆனால், வாழ்க்கை என்பது முடிவற்றது, இதில் பிறப்பும் இல்லை ; இறப்பும் இல்லை என்பது தெளிவாகி விட்டால் அந்த பயம் அழிந்து விடும்"

இந்தப் புத்தகத்தை ஒரு அறிவியல் சார்ந்த ஆன்மிகப் புத்தகமாகவே நான் பார்த்தேன். மிகவும் வித்தியாசமான வழக்கத்திற்கு மாறான மருத்துவப் புத்தகம். மனநலத்துறையில் பல சர்ச்சைகளைக் கிளப்பி விட்டாலும், யாரும் இந்தப் புத்தகத்தில் உள்ள செய்திகளை ஆணித்தரமாக மறுக்கவில்லை. மாறாக இன்னும் பல ஆராய்ச்சிகளை தூண்டி விட்டு, இன்னும் ஆழமான, அறிவியலுக்கு அப்பாற்பட்ட நிகழ்வுகளை மருத்துவத்திற்கு காட்டியுள்ளது. நான் இதை 6 வருடங்களுக்கு முன்பு படித்ததிலிருந்து இதைத் தொடர்ந்த பல செய்திகளைப் படித்து மிகவும் ஆச்சரியமடைந்துள்ளேன். வாய்ப்பு கிடைக்கும்போது படியுங்கள். உங்களுக்கும் வாழ்வோடு கூடிய ஒரு
வித்தியாசமான வாசிப்பனுபவம் கிடைக்கும்.

# இங்கே 'உணர்வு' என்பது consciousness என்ற அர்த்தத்தில்