Saturday, February 7, 2009

அவனோடே ராவுகள் .... 6

முந்தைய பதிவுகள் ...1 ...2 ...3 ...4 ...5


Many Lives Many Masters
Author : Dr Brian Weiss

"இந்த செய்திகளை உலகத்துக்கு சொல்ல வேண்டும் என்ற வைராக்கியத்தை எனக்குள் ஏற்படுத்திக்கொள்ள - அதுவும் நிச்சயமாக என் தொழிலுக்கு ஊறு விளைவிக்கலாம் என்ற ஆபத்துடன் - எனக்கு 4 வருடங்கள் பிடித்தது. ஆனால் இதை பகிர்ந்து கொள்வதால் எனக்கு நேரக்கூடிய இன்னல்களை விட சொல்லாமல் இருப்பது இன்னமும் மோசம் என்று தோன்றியது. நான் ரிஸ்க் எடுக்கத் தயங்கும்போதெல்லாம் என் ஹங்கேரிய தாத்தா மிகுந்த பிரியத்துடனும் குறும்பாகச் சொல்வார் - vat the hell?" - புத்தகத்தின் முன்னுரையில் ஆசிரியர் சொல்லியிருப்பது.

புத்தக ஆசிரியர் ஒரு மனநல மருத்துவர். வாழ்க்கையில் அறிவியல் பூர்வமாக நிறுவ முடியாத எந்த கோட்பாடையும் நியதியையும் மறுத்தவர். ஒன்றை நிரூபிக்கமுடியாது என்றால் அது கிடையாது என்று தீர்மானமாக இருந்தவர். அவர் வாழ்வில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை அவரே சொல்வதுதான் இந்தப் புத்தகம்.

இவர் கொலம்பியா பல்கலைக்கழகத்திலும் யேல் மருத்துவக் கல்லூரியிலும் படித்தவர். அவரிடம் ஒருநாள் கேத்தரின் (27) என்ற மன அழுத்த நோயாளி வருகிறாள். வழக்கமான மருத்துவ முறைகளில் முன்னேற்றம் ஏதும் இல்லாததால் hypnotic regression என்ற ஆழ்நிலை மனக்கட்டுப்பாட்டுக்கு உட்படுத்துகிறார். அப்போது அவருக்கு நேரும் வித்தியாசமான, அதுவரை அவர் அனுபவித்திராத, அவருடைய அறிவுக்கு சவாலாக விளங்கிய அனுபவங்களே இந்தப் புத்தகம். இந்த சிகிச்சையின்போது கேதரின் தன்னுடைய முன்பிறவிகளைப் பற்றியும் (கிட்டத்தட்ட 89 முற்பிறவிகள் !!), இரு பிறவிகளுக்கு இடைப்பட்ட நிகழ்ச்சிகளையும் கூட மிகவும் தெளிவாக நினைவு கூறுகிறாள். டாக்டரால் மறுக்க முடியவில்லை.

தன் ஆராய்ச்சியைத் தொடர்ந்து விர்ஜினியா பல்கலைக்கழகத்தின் டாக்டர் இயான் ஸ்டீவன்சனுடைய ஆய்வுகளில் சில குழந்தைகள் தமக்கு கொஞ்சமும் அறிமுகம் இருக்க வாய்ப்பில்லாத மொழிகளில் கூட பேசுவதைப் (xenoglossy) பற்றி எழுதியிருப்பதை அறிகிறார். கேதரினிடம் இன்னும் சில ஆராய்ச்சிகள் நடத்துகிறார். அதில் முற்பிறவி/மறுபிறவிகளைப் பற்றிய குறிப்புகள் பழைய ஏற்பாட்டில் இருந்ததையும், பின்னால் வந்த ரோமாபுரி மன்னன் கான்ஸ்டன்டைனும் அவன் தாயார் ஹெலினாவும் சர்ச்சுகளின் வளர்ச்சிக்கு இது இடைஞ்சலாக இருக்கும் என்று கருதி அந்தக் குறிப்புகளை நீக்கியதையும் சுட்டியிருக்கிறார்.

புத்தகத்தில் முற்பிறவிகளை விட, கேதரினுக்கு சில ஆசான்களின் குரல்கள் மூலமாகக் கிடைத்த சில செய்திகள் (messages) மிகவும் ஆச்சரியமாக இருக்கின்றன. அவைகளைப் அர்த்தத்தின் ஆழத்தைப் பார்க்கும்போது இந்து மதத்தின் அடிப்படைக் கோட்பாடுகளுடன் மிகவும் ஒத்துப்போவது தெரியும். "கற்று அறிந்து கொள்வது நமக்கிடப்பட்ட கடமை. கற்பதன் மூலம் கடவுளை அறிந்து கொள்வது, கடவுளை நெருங்குவது". வேதம் சொல்வது போல "ஞானானாத் ஏவ கைவல்யம்" - ஞானமே கடவுளை அடையும் வழி. பிரமிப்பாக இருக்கிறது.

ஒருமுறை டாக்டர் ப்ரையன் தனது தந்தையின் மற்றும் இறந்து போன மகனின் குரல்களில் சில செய்திகளை கேட்க நேருகிறது. மற்ற எவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லாத சில செய்திகளை கேதரின் தெளிவாகக் கூறுகிறாள். டாக்டரின் தந்தையின் ஹீப்ரு பெயர், டாக்டரின் மகன் ஒரு இதய நோயின் காரணமாக இறந்துபோனது பற்றி, டாக்டர் மனநல மருத்துவத்துறையை ஏன் தேர்ந்தெடுத்தார் என்பதெல்லாம் விளக்கமாகச் சொல்கிறாள். அவருடைய மகன் பிறந்து ஒரு குறுகிய வாழ்வு வாழ்ந்தது சில கடன்களை தீர்ப்பதற்காக என்று சொல்வது நமது வேதாந்தத்தின் அடிப்படையான கர்மா. "நமக்கு தீர்ப்பதற்கான கடன்கள் இருக்கின்றன. அவை தீராத பட்சத்தில் அவற்றை இன்னொரு பிறவிக்கு எடுத்துச் சென்று தீர்த்தே ஆகவேண்டும்" என்று தனக்கு ஒரு ஆசான் செய்தி சொன்னதாக கேதரின் கூறுகிறாள். இது இந்து மதத்தின் ஆணிவேரான நியதி.

இந்து மதத்தில் பிறந்ததாலோ, அல்லது இந்து மதக் கோட்பாடுகளைப் பற்றி சிறிதளவு தெரிந்திருப்பதாலோ என்னவோ, கேதரினுக்கு ஆசான்களிடமிருந்து கிடைக்கும் ஒவ்வொரு செய்தியையும் நமது வேதாந்தத்தோடு ஒப்பிட்டு அதன் உண்மையான, ஆழமான, தீர்க்கமான அர்த்தத்தை புரிந்து கொள்ள முடிகிறது. தனிப்பட்டமுறையில் எனக்கு இன்னமும் மறுபிறவி போன்ற தத்துவங்களை ஏற்க முடியவில்லை என்றாலும் வேதாந்த்தத்திற்கும் இந்த செய்திகளுக்கும் உள்ள நேரடித் தொடர்பை சுலபமாக உணர முடிகிறது.

இந்தப் புத்தகமே வெறும் கட்டுக்கதையோ என்று பல விமர்சனங்கள் உள்ளன. ஆனால், என்னைப் பொறுத்தவரை, புத்தக ஆசிரியர் தன்னுடைய 50 வருட தொழிலை பணயமாக வைத்து ஒரு கற்பனையான கதையை எழுத வேண்டிய எந்த அவசியமும் இல்லையே !! இத்தனைக்கும் அவர் ஒரு மரியாதைக்குரிய பழுத்த மனநல மருத்துவர். அதோடு மியாமியில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரியில் மனநல மருத்துவப் பிரிவின் தலைவர். நடைமுறையில் இப்படி ஒரு அறிவியலுக்கு அப்பாற்பட்ட செய்தியை புத்தகமாக கொடுப்பதில் அவருக்கு இழப்புதான் அதிகமாக இருக்கலாமே தவிர அடைய ஏதும் இருப்பதாக நான் நினைக்கவில்லை.

ஆசான்களின் சில செய்திகள் - புத்தகத்திலிருந்து :

"கற்பதும், அறிவதும், அதன் மூலம் கடவுளைப் போல ஆவதும் நமது கடமை. அறிவின் மூலம் கடவுளை அடைந்து பிறகு ஓயலாம். பின்பு நாம் திரும்ப வந்து பலருக்கு இதை அறிவுறுத்தி உதவ வேண்டும்"

"பல கடவுளர்கள் உள்ளனர் - நம் ஒவ்வொருவருக்குள்ளும் கடவுள் இருப்பதால்"

"நாம் ஒவ்வொருவரும் எவ்வளவு 'உணர்ந்திருக்கிறோம்' என்பதில் வெவ்வேறு தளங்களில் இருக்கிறோம்.... அது நாம் எந்த அளவுக்கு 'உணர்ந்து ' # எவ்வளவு முன்னேறியிருக்கிறோம் என்பதைப் பொறுத்தது..."

"சர்வம் சக்தி (energy) மயம்... மனிதர்களால் வெளிப்புறத்தை மட்டுமே உணர முடியும். ஆனால் முயன்றால் உட்புறமும் உணர முடியும். சொல்லப்போனால் இயல்பு நிலையில் (physical state) இருப்பது அசாதாரணம். உணர்வு நிலையில் (spiritual state) இருப்பதுதான் நமக்கு இயற்கையாக விதிக்கப்பட்டது"

"மனிதர்கள் அனைவருக்கும் மரணத்தைப் பற்றிய ஒரு விதமான பயம் உண்டு. ஆனால், வாழ்க்கை என்பது முடிவற்றது, இதில் பிறப்பும் இல்லை ; இறப்பும் இல்லை என்பது தெளிவாகி விட்டால் அந்த பயம் அழிந்து விடும்"

இந்தப் புத்தகத்தை ஒரு அறிவியல் சார்ந்த ஆன்மிகப் புத்தகமாகவே நான் பார்த்தேன். மிகவும் வித்தியாசமான வழக்கத்திற்கு மாறான மருத்துவப் புத்தகம். மனநலத்துறையில் பல சர்ச்சைகளைக் கிளப்பி விட்டாலும், யாரும் இந்தப் புத்தகத்தில் உள்ள செய்திகளை ஆணித்தரமாக மறுக்கவில்லை. மாறாக இன்னும் பல ஆராய்ச்சிகளை தூண்டி விட்டு, இன்னும் ஆழமான, அறிவியலுக்கு அப்பாற்பட்ட நிகழ்வுகளை மருத்துவத்திற்கு காட்டியுள்ளது. நான் இதை 6 வருடங்களுக்கு முன்பு படித்ததிலிருந்து இதைத் தொடர்ந்த பல செய்திகளைப் படித்து மிகவும் ஆச்சரியமடைந்துள்ளேன். வாய்ப்பு கிடைக்கும்போது படியுங்கள். உங்களுக்கும் வாழ்வோடு கூடிய ஒரு
வித்தியாசமான வாசிப்பனுபவம் கிடைக்கும்.

# இங்கே 'உணர்வு' என்பது consciousness என்ற அர்த்தத்தில்

15 பேர் என்ன நெனைக்கிறாங்கன்னா..:

முரளிகண்ணன் said...

சுவராசியமான நடையில் நல்ல அறிமுகம்

பழமைபேசி said...

பொறுமை, சகிப்புத்தன்மை: இதுக ரெண்டும் உங்களுக்கு நெம்ப! கூடவே, அதை நாங்க உணர வேணுமின்னு சொல்லாமச் சொல்லி இருக்கீக!! இஃகிஃகி!!!

கபீஷ் said...

//இங்கே 'உணர்வு' என்பது consciousness என்ற அர்த்தத்தில்
//

விழிப்புணர்வு Shall also be mentioned?

’டொன்’ லீ said...

அருமையான உணர்வு பகிர்தல்...:-))

இப்படியான விசயங்கள் புரிந்தும் புரியாமல் இருப்பது சற்றே விந்தை தான் :-)

Mahesh said...

நன்றி முரளிகண்ணன்...

நன்றி பழமைபேசி... ( //பொறுமை, சகிப்புத்தன்மை: இதுக ரெண்டும் உங்களுக்கு நெம்ப! // வெளிய சொல்லிறாதீங்க...)

நன்றி கபீஷ்... என்ன ஆச்சு வேற கடை தொறந்துட்டீங்களா?

நன்றி டொன்லீ.. ஆமா அது கொஞ்சம் விசித்திரம்தான்...

SanJai காந்தி said...

good review..thanks for sharing.. :)

chitravini said...

நல்ல பதிவு. மேற்கத்திய நாடுகளில் என்ன விசேஷம் என்றால், தமக்குத் தெரிந்த விஷயத்தை மற்றவர்களுக்குப் புரியும் பாஷையில் எளிதாக எழுதுவது. நம் நாட்டில் அதற்கு நேர் எதிர். எல்லா விஷயங்களும் இங்கு உள்ளன. நமக்கு எளிதாக புரியாத பாஷையில். அவற்றை புரிந்தவர்கள் ஒரு சிலர். அவர்கள் எழுதிய புத்தகங்களோ...புரிவதற்கு தனியாக டியூஷன் வைக்க வேண்டும். வேதங்களும், உபநிஷத்துக்களும், கோட்பாடுகளும், தத்துவங்களும், இறைவனின் பிரதிநிதிகளும் நிறைந்த இந்நாட்டில்....பாமரன் எளிதாக புரிந்து கொள்ளூம் வகையில் நடைமுறைத் தமிழில் புத்தகம் உண்டா? இது என் தனிப்பட்ட அபிப்ராயம். தவறாக இருந்தால் நண்பர்கள் மன்னிக்கவும்.

வெண்பூ said...

இப்போதுதான் இந்த தொடரோட ஆறு பாகங்களையும் படிச்சேன் மஹேஷ்.. மிக மிக உபயோகமான பதிவு.. ஆச்சர்யமா தேடித் தேடி வித்தியாசமான புத்தகங்களைப் படிக்கிறீங்க. பாராட்டுகள் & நன்றி.

Mahesh said...

மிக்க நன்றி வெண்பூ.... எல்லாத்தையும் படிச்சீங்களா? உங்களுக்கு பொறுமை ரொம்ப ஜாஸ்தி...

டொக்டர்.எம்.கே.முருகானந்தன் said...

சர்ச்சைக்குரிய விடயம் பற்றி அழகான அறிமுகம் தந்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

Mahesh said...

நன்றி டொக்டர்.முருகானந்தம்.... முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

எம்.எம்.அப்துல்லா said...

//"அவனோடே ராவுகள் .... 6"

//

அண்ணே நீங்க தப்பா எடுத்துக்கலன்னா ஒன்னு சொல்றேன்...
நீங்க வந்த புதுசுல அனைவரையும் கவர்வதற்காக இப்படி ஒரு தலைப்பு வச்சீங்க...அது நியாயம். இப்பதான் உங்களை எல்லாருக்கும் தெரியுமே!!!! நீங்க என்ன எழுதுனாலும் நாங்க வந்து படிக்கிறோமே!!! இப்ப இந்த தலைப்பு அவசியமா???

Mahesh said...

@அப்துல்லா :

அண்ணே நீங்க சொல்றது சரிதான்... தொடர்னு ஆரம்பிச்சுட்டமேன்னு அதே பேர்ல போடறேன்... "வாசித்ததும்.. யோசித்ததும்" (formerly அவனோடெ ராவுகள்" னு மாத்திடறேன் :))

Mahesh said...

//நீங்க என்ன எழுதுனாலும் நாங்க வந்து படிக்கிறோமே!!! //

அவ்வ்வ்வ்வ்வ்...

தாமிரா said...

வெண்பூ said...
இப்போதுதான் இந்த தொடரோட ஆறு பாகங்களையும் படிச்சேன் மஹேஷ்.. மிக மிக உபயோகமான பதிவு.. ஆச்சர்யமா தேடித் தேடி வித்தியாசமான புத்தகங்களைப் படிக்கிறீங்க. பாராட்டுகள் & நன்றி.
//

நானும் ஒரு நாள் ஒக்காந்து படிக்குணும்ங்க.. அப்ளை பண்ணி ஒரு வாரம் ஆச்சுது.. இன்னும் ஒரு வாரத்துல வந்துடும்ங்கிறாங்க.. நெட் கனெக்ஷன்தான்.. அப்புறம் என்ன தடங்கல் இருக்கப்போவுது?