Wednesday, February 11, 2009

"நான் கடவுள்" - புரிந்தும் புரியாமலும்...


"நான் கடவுள்"

போன பதிவுல நம்ம அண்ணன் சொல்லியிருந்தது "மேற்கத்திய நாடுகளில் என்ன விசேஷம் என்றால், தமக்குத் தெரிந்த விஷயத்தை மற்றவர்களுக்குப் புரியும் பாஷையில் எளிதாக எழுதுவது. நம் நாட்டில் அதற்கு நேர் எதிர். எல்லா விஷயங்களும் இங்கு உள்ளன. நமக்கு எளிதாக புரியாத பாஷையில். அவற்றை புரிந்தவர்கள் ஒரு சிலர். அவர்கள் எழுதிய புத்தகங்களோ...புரிவதற்கு தனியாக டியூஷன் வைக்க வேண்டும். வேதங்களும், உபநிஷத்துக்களும், கோட்பாடுகளும், தத்துவங்களும், இறைவனின் பிரதிநிதிகளும் நிறைந்த இந்நாட்டில்....பாமரன் எளிதாக புரிந்து கொள்ளூம் வகையில் நடைமுறைத் தமிழில் புத்தகம் உண்டா? இது என் தனிப்பட்ட அபிப்ராயம். தவறாக இருந்தால் நண்பர்கள் மன்னிக்கவும்."

இதற்கு ஒரு சிறு விளக்கம் சொல்லும் வகையில் இந்தப் பதிவு. இந்து மதத்தின் அடிப்படைகளான வேதம், ஸ்ருதி, ஸ்ம்ருதி, உபனிஷத்கள், சூத்திரங்கள், பல ஆன்றோர்கள், சான்றோர்கள், ரிஷிகள் வேதங்களுக்கு அளித்த பாஷ்யங்கள் போன்றவை கண்டிப்பாக சாதாரணர்களுக்கு சுலபமாகப் புரிந்து கொள்ள கடினம்தான். கொஞ்சம் முயற்சி செய்ய வேண்டியிருக்கும். அவ்வளவுதான்.

அவர்கள் சொல்ல வந்ததெல்லாம் எல்லாவற்றுக்கும் எது ஆதாரமோ அதை அடைய "ஞானம்" ஒன்றே வழி என்பது. அந்த மூல ஆதாரத்தின் சலனமற்ற, களங்கமற்ற, புரிந்துகொள்ள மிகவும் பிரயத்தனப்பட வேண்டிய ஒன்றை வார்த்தைகளால் விளக்குவது மிகவும் கடினம். ஏனெனில், அந்த அனைத்துக்கும் மூலாதாரமான சக்தியை (energy or field) உணர்ந்தவர்களுக்கு, அதைத் தவிர மற்ற எல்லாமே வெறும் மாயை என்பது தெளிவாகி விடுவதால், அப்படிப்பட்ட ஒன்றை முடிந்த வரையில் இருக்கிற வார்த்தைகளைக் கொண்டு விளக்குவது மிகுந்த சிரமமான காரியம். தமிழில் ஒரு சொல்வழக்கு உண்டு. "கண்டவர் விண்டிலர் ; விண்டவர் கண்டிலர்". ஆழ்ந்து பார்த்தால் புரியும். அதற்காக விளக்கிக் கூறமுடியாது என்று விட்டு விடாமல், அப்படி ஒரு விஷயத்தைப் பற்றி முடிந்த வரையில் மிக ஆழமாக, அகலமாக விளக்கத் தலைப்பட்டுள்ளனர்.

"கடவுள்" என்கிற ஒரு கான்செப்ட் (ஆமாம்...அது ஒரு கான்செப்ட்தான் !!) எப்படி அணுகப்பட்டிருக்கிறது என்று பாருங்கள். வேதங்களிலும், உபநிஷத்துகளிலும் குறிப்பிடப் படுகிற "ப்ரம்மன்", "ஆத்மன்", "புருஷன்" போன்றவை அந்த மூல ஆதார சக்தியை சொல்ல பயன்படும் குறியீடுகளே அன்றி அதை பொதுவாக நாம் குறிப்பிடுகிற "கடவுள்" என்பதைக் சொல்பவை அல்ல. அந்த சக்திக்கு நம்மை விட அதிக சக்தி உண்டு என்பதைக் உணர்த்த வேண்டுமானால் நாம் பல கைகளுடனும், தலைகளுடனும், ஆயுதங்களுடனும் கூடிய நம்மைப் போன்ற ஒரு உருவமாக - கடவுளாக - வைத்துக் கொள்ளலாம். நமது கற்பனைக்கும், யோசிக்கும் திறனுக்கும் ஒரு எல்லை உண்டு என்பதால் எல்லாரும் சுலபமாக ஏற்கிற வகையில் 'கடவுளை' உண்டாக்கியிருக்கலாம். "பல மடங்கு" சக்தி என்று பொதுவாகச் சொல்வதற்கு பதிலாக ஒரு ஒப்பீடுக்காக அப்படி உருவகப் படுத்தியிருக்கலாம். ஆனால் விஞ்ஞானமும், மெய்ஞானமும் குவியும் ஒரு புள்ளி இந்த மூலாதார சக்தி.

இந்து மதத்தில் பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் படைத்தல், காத்தல் மற்றும் அழித்தல் (creation, protection & destruction) தொழில்களை செய்வதாக நம்புகிறார்கள். ஆனால் உபநிஷத்துகளில் சொல்லியிருப்பது சக்தியின் வெளிப்பாடு, நிறுவுதல் மற்றும் திரும்பப்பெறுதல் (manifestation, establishment & withdrawal ஸ்ருஷ்டி, ஸ்திதி, லயம்). பிரபஞ்சம் உள்பட அனைத்துமே அந்த மூல ஆதார சக்தியின் வெளிப்பாடுகளே. இதையே 'மாயை' என்றும் சொல்கிறார்கள். அந்த சக்தியிலிருந்து வெளிப்பட்டு, நிலையாக இருப்பது போல தோன்றி, பின் மீண்டும் அந்த சக்தியிடமே அடைந்து விடுகிறது.

இதை விளக்க பிரதானமாக இரண்டு உதாரணங்கள் கூறப்படுகின்றன. ஒன்று தூக்கம். மற்றொன்று மண்பாண்டம். ஆழ்ந்த தூக்கத்தில் நம் எண்ணங்கள் ஓய்ந்து விடுகின்றன. ஆனால் மறுபடி விழித்தவுடன் எண்ணங்கள் "தோன்ற" ஆரம்பித்து விடுகின்றன. "உரு"வாவது இல்லை. மனதின் வெளிப்பாடு (manifest) எண்ணங்கள். அப்படித் 'தோன்றி'ய எண்ணங்கள் நம் மனதில் 'நிலையாக' இருப்பது போல இருக்கின்றன. ஏன் "போல"? மறுபடி தூங்கினால் அவை இருக்காது. நமது மனதினுள்ளே சென்று ஒடுங்கி (லயித்து / withdraw) விடுகின்றன. அதே போல மண்ணாய் இருந்தது, ஒரு பானையாக மாறி பின் உடைந்தாலோ நீரில் கரைந்தாலோ மறுபடி மண்ணோடு மண்ணாய் ஒடுங்கி விடுகிறது.

இது போல எளிய உதாரணங்களின் மூலமாக பல செய்திகளை உள்ளடக்கியிருக்கிறது. அதுவும் ஒரு கட்டுரை போல வரையாமல், தந்தை-மகன், குரு-சீடன், கணவன்-மனைவி, நண்பர்கள் போன்றோரிடையே நடைபெறும் ஒரு கேள்வி-பதில் போலவும், வாத விவாதங்களுடன், தத்துவ விசாரமாகவே இருக்கின்றன. அந்தத் தொன்மையான கால கட்டத்தில் சமஸ்கிருதம் பரவலாகப் பேசப்பட்டு வந்ததாலும், அதன் சொற்களஞ்சியம் மிகப் பரந்தது என்பதாலும் அந்த மொழியிலேயே மூலங்கள் உள்ளன. ஆழ்ந்து கற்று உணரும்போது இன்றைய பல விஞ்ஞானக் கோட்பாடுகளும், நியதிகளும் அவற்றில் விரவி இருப்பதை உணரமுடியும்.

மேற்கத்தவர்கள் எளிதாக எழுதுகிறார்கள், நமது மொழியில் இருப்பது நமக்கு புரியவில்லை என்றால் தவறு யாரிடம்? நமது கலாச்சாரப்படி இது போன்ற விஷயங்களை ஒரு குரு மூலமாக கற்று அறிந்து கொள்வது ஊக்கப்படுத்தப் படுகிறது. ஆனால் அப்படித்தான் கற்க வேண்டும் என்று கட்டாயமில்லை. ஒரு ஒழுங்குமுறைக்காக அதை ஒரு வழியாகச் சொல்லியிருக்கலாம் என்றே தோன்றுகிறது. மேல்நாட்டவர் இங்கு வந்து ஏதோ ஒரு வகையில் கற்று அவர்களுக்கு புரிந்த வகையில் அவர்களுக்கும் நமக்கு தெரிந்த மொழியில் எழுதுகிறார்கள். மேக்ஸ் முல்லர் வேதத்துக்கு விளக்கம் எழுதினார் என்று சிலாகிக்கிறோம். அப்படி ஒரு உயர்வான ஒன்றைக் கற்று, உணர்ந்து ஞானம் அடைந்தவர் அதைப் புத்தகமாகப் போட்டு காசாக்கியிருக்க மாட்டார். அதுவும் ஒரு மாயை என்று உணர்ந்து அந்தர்த்யானி ஆகியிருப்பார்.

நம் நாட்டிலும் கற்றுத் தெளிந்த பல ஆச்சாரியர்கள் தங்களுடைய புரிதலுக்கு ஏற்ப விளக்கங்கள் அளித்திருக்கிறார்கள். இல்லையென்றால் ஒரே வேதாந்தத்திற்கு த்வைதம், அத்வைதம், விசிஷ்டாத்வைதம் என்று பல விளக்கங்கள் கிடைத்திருக்காது. நமக்கு நம்முடைய மொழியை, உலகத்தின் மிக மிக மிக தொன்மையான ஒரு மொழியைக் கற்று இது போன்ற விஷயங்களைத் தெரிந்து கொள்ள ஆர்வம் இல்லை என்பதையும் ஒப்புக் கொள்ள வேண்டும். அவர்கள் இங்கே வந்து வேதங்களைக் கற்று எழுதும் அளவிற்கு உயர முடியும்போது நம்மால் ஏன் முடியவில்லை?

டிஸ்கி : பாலாவின் "நான் கடவுள்" படத்திற்கும் இந்தப் பதிவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
வலையில் படித்த, இதே கருத்தை வலியுறுத்தும் மதுரை சொக்கனின் பதிவு

43 பேர் என்ன நெனைக்கிறாங்கன்னா..:

மதுரை சொக்கன் said...

நமக்கெல்லாம் வெள்ளைத்தோல் என்றாலே ஒரு மயக்கம்தான்.நமது வேதங்களைப் பற்றி,வேதாங்கமான சோதிடம் பற்றி,புராணங்கள் பற்றி யாராவது வெள்ளைக்காரன் எழுதினால் வானளாவப் புகழ்வோம்.சங்கர பாஷ்யத்தை,வராஹமிஹிரரைப் புறக்கணிப்போம்.
அருமையான பதிவு.

நசரேயன் said...

/*நமக்கு நம்முடைய மொழியை, உலகத்தின் மிக மிக மிக தொன்மையான ஒரு மொழியைக் கற்று இது போன்ற விஷயங்களைத் தெரிந்து கொள்ள ஆர்வம் இல்லை என்பதையும் ஒப்புக் கொள்ள வேண்டும்*/

உண்மை..

நல்ல பதிவு

இராகவன் நைஜிரியா said...

வணக்கம் மகேஷ்...

உங்களின் தேடல் அதிகரித்து உள்ளது. கேள்வி கேட்பதோடு நில்லாமல், அது ஏன் என்று யோசிக்க ஆரம்பித்திருக்கின்றீர்கள்.

வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நோக்கி நகரத் தொடங்கியுள்ளீர்கள். நிச்சயமாக இது உங்களை முன்னேற்றும்.

ஸ்ரீதர்கண்ணன் said...

யோசிக்க வைத்த ஒரு நல்ல பதிவு. நன்றி மகேஷ் ..

எம்.எம்.அப்துல்லா said...

உள்ளம் பெருங்கோயில்
ஊனுடம்பு ஆலயம்!
சித்தம் அறிந்தோர்க்கு
சீவனே சிவலிங்கம்!

:)

ச்சின்னப் பையன் said...

//அவர்கள் இங்கே வந்து வேதங்களைக் கற்று எழுதும் அளவிற்கு உயர முடியும்போது நம்மால் ஏன் முடியவில்லை?
//

நாம எதையும் எதிர்கேள்வி கேட்பதில்லை. ஆராய்ச்சி செய்வதில்லை. என்ன சொல்ல வர்றாங்கன்னு தெரிஞ்சிக்க முயற்சிப்பதில்லை..

வேதம், ஸ்லோகங்கள் கடகடன்னு சொல்லிட்டுப் போறவங்களை நடுவே நிறுத்தி அதற்கான அர்த்தம் கேளுங்க - 99% தெரியாதுன்னுதான் பதில் வரும்.

கிரி said...

அப்புறமா வரேன்

Mahesh said...

நன்றி மதுரை சொக்கன்.. முதல் வருகைக்கும் கருத்துக்கும்...

நன்றி நசரேயன்...

நன்றி ராகவன்... என்னென்னெவோ பெரிய வார்த்தையெல்லாம் பேசறீங்க... ஒண்ணும் புரியல :)

நன்றி ஸ்ரீதர்கண்ணன்...

நன்றி அப்துல்லா... அட்டகாசம் போங்க !!

நன்றி ச்சின்னப்பையன்... அந்த 99% விஷயம் 100% உண்மை.

வாங்க வாங்க... சாவகாசமா வாங்க கிரி..

பழமைபேசி said...

அட்டகாசம் போங்க !!

Mahesh said...

நன்றி பழமைபேசி... ஆபிஸ்ல ஆணி அதிகம் போல இருக்கு... பதிவுகளையும் காணோம்... பின்னூட்டங்களும் ஒரே வார்த்தைல... ஒடம்பைப் பாத்துக்கோங்க !!

Sri said...

Superb post Mahesh!!! Post more like this. :-)

Mahesh said...

Thanks Sri....

தராசு said...

//நமது கலாச்சாரப்படி இது போன்ற விஷயங்களை ஒரு குரு மூலமாக கற்று அறிந்து கொள்வது ஊக்கப்படுத்தப் படுகிறது. ஆனால் அப்படித்தான் கற்க வேண்டும் என்று கட்டாயமில்லை. //

நல்ல பதிவு மகேஷ்.

கட்டாயமில்லாவிட்டால், ஆன்மீக தேடலுக்கான ரகசியங்கள் ஏன் எளிய மொழியில் எழுதப்படாமல், ஒரு மேல்தட்டு வர்க்கத்தினருக்கு (நான் மேல் தட்டு என்று சொல்வதை ஜாதி என தயவு செய்து புரிந்து கொள்ளாதீர்கள். நான் சொல்வது அதிகம் படித்த வர்க்கத்தினர், அல்லது இந்த வகை எழுத்து வடிவங்களை புரிந்து கொள்ளுமளவிற்கு படித்தவர்களை) மாத்திரம் புரியும்படியே இன்றளவும் வைக்கப்பட்டிருக்கிறது?

Mahesh said...

நன்றி தராசு... வருகைக்கு நன்றி.

உங்கள் கேள்விக்கான பதில் பதிவிலேயே இருக்கிறது. அத்துடன் நமது முனைப்பும் அவசியம் என்பதையும் வலியுறுத்தியிருக்கிறேன்.

வெண்பூ said...

ஏன்? ஏன்? ஏன் இப்படியெல்லாம்? நல்லாத்தானு இருந்தீரு? :))))

கார்க்கி said...

எனக்கு புரியலன்ன்றது புரிஞ்சிடுச்சு

narsim said...

//விஞ்ஞானமும், மெய்ஞானமும் குவியும் ஒரு புள்ளி இந்த மூலாதார சக்தி.//
இந்து மதத்தில் பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் படைத்தல், காத்தல் மற்றும் அழித்தல் (creation, protection & destruction) தொழில்களை செய்வதாக நம்புகிறார்கள். ஆனால் உபநிஷத்துகளில் சொல்லியிருப்பது சக்தியின் வெளிப்பாடு, நிறுவுதல் மற்றும் திரும்பப்பெறுதல் (manifestation, establishment & withdrawal ஸ்ருஷ்டி, ஸ்திதி, லயம்).//
மகேஷ்.. மிக ஆழ்ந்த பதிவு.. தொடர்ந்து இதுபோல எழுதுங்க தல‌

எம்.எம்.அப்துல்லா said...

பஞ்சபூத கூட்டாக இருப்பது உடல். அகண்ட பிரபஞ்சத்தில் அந்தரத்தில் இருக்கும் கோள்களை இழுத்துப் பிடிக்கும் சக்தி எதுவோ அதுவே நம் உடலில் உயிர்.

கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் அனைவருக்குமே இது புரியும். புரிந்தால் சாதி,மத பிரச்சனைக்கு இடம் ஏது??


வேதம்,உபநிஷம்,குரான்,பைபிள் எல்லாம் இருந்தாலும் இன்னைக்கு செத்தா...ஹா...ஹா...ஹா... நாளைக்கு பால் :)

முரளிகண்ணன் said...

பல கோணங்களில் யோசிக்க வைக்கிறது உங்கள் பதிவு.

Mahesh said...

வாங்க வெண்பூ... ஆமா நல்லாத்தானெ இருந்தேன்? என்னாச்சு?ம்ம்ம்?

நன்றி நர்சிம்... இப்பிடியெல்லாம் உசுப்பேத்துங்க அடிக்கடி.. அப்பவாச்சும் நல்லா எழுத வருதான்னு பாக்கறேன்..

வாங்க கார்க்கி... புரிஞ்சுடுச்சா?

நன்றி அப்துல்லா அண்ணே... டுடே டை டுமாரோ மில்க் ஹ ஹ ஹ ஹ்

Mahesh said...

நன்றி முரளிகண்ணன்.....

தராசு said...

//எம்.எம்.அப்துல்லா said...
பஞ்சபூத கூட்டாக இருப்பது உடல். அகண்ட பிரபஞ்சத்தில் அந்தரத்தில் இருக்கும் கோள்களை இழுத்துப் பிடிக்கும் சக்தி எதுவோ அதுவே நம் உடலில் உயிர்.//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்,

அடுத்த "பாலா" உருவாகிட்டிருக்கார்,

உஷார், உஷார்

SPIDEY said...

//எண்ணங்கள் "தோன்ற" ஆரம்பித்து விடுகின்றன. "உரு"வாவது இல்லை//

"தோன்றுதல்" "உருவாகுதல்" இரண்டுக்கும் என்ன வேறுபாடு?

Ramanathan said...

What an amazing post. You made my day.

Anonymous said...

Sorry, navvenathuva intha iyanthira matythil tamil ezuthil solla siramapadum naan ippadi ezuthukiren.

Ayya, puriyatha mozhyil ezuthapadavillai, makkal mozhiyayi maranthu ponathaal vantha vinai. Ondrum illai indru aangila kalakaamal suthamaaga oruvari tamil pesaththeriyaatha tamilan thaan tamilnaatil undu. Naalai ivatgalin vaarisu suthttha tamilil eethavathu sonnal yen thirukkural kooda puriyaatha mozhi endru pulamba vaaippu undu.

Mahesh said...

@ தராசு : ஆமாண்ணே ஆமாம்... அப்துல்லா அண்ணன் கிட்ட கொஞ்சம் சாக்கிரதையாத்தான் இருக்கணும்...

@ ramanathan : thanks man... nowadays u r not regular :(

@ Anonymous : என்னவோ சொல்ல வறீங்கன்னு புரியுது... ஆனா என்னன்னுதான் புரியல :( கொஞ்சம் சிரமப்பட்டவது தமிழ்ல எழுதினா நல்லா இருக்கும். நன்றி.

’டொன்’ லீ said...

அடடா உந்த டிஸ்கியை முதலிலேயே படிச்சிருக்கலாமோ....?

கடவுள்...சிலவேளைகளில் கவிதை..பலவேளைகளில் மாயை...(எனக்கு) :-))

Mahesh said...

நன்றி டொன்லீ... கடவுளைக் கவிதையாப் பாக்கறீங்களே... உங்களுக்கு ஞானம் சித்திச்சாச்சு :)))

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//"மேற்கத்திய நாடுகளில் என்ன விசேஷம் என்றால், தமக்குத் தெரிந்த விஷயத்தை மற்றவர்களுக்குப் புரியும் பாஷையில் எளிதாக எழுதுவது. நம் நாட்டில் அதற்கு நேர் எதிர். எல்லா விஷயங்களும் இங்கு உள்ளன. நமக்கு எளிதாக புரியாத பாஷையில். அவற்றை புரிந்தவர்கள் ஒரு சிலர். அவர்கள் எழுதிய புத்தகங்களோ...புரிவதற்கு தனியாக டியூஷன் வைக்க வேண்டும். வேதங்களும், உபநிஷத்துக்களும், கோட்பாடுகளும், தத்துவங்களும், இறைவனின் பிரதிநிதிகளும் நிறைந்த இந்நாட்டில்....பாமரன் எளிதாக புரிந்து கொள்ளூம் வகையில் நடைமுறைத் தமிழில் புத்தகம் உண்டா? இது என் தனிப்பட்ட அபிப்ராயம். தவறாக இருந்தால் நண்பர்கள் மன்னிக்கவும்."//

இந்தப் பாமரனுக்கும் இதுதான் உண்மையாகப் படுகிறது.
"காசுதான் கடவுள்"
"காசேதான் கடவுள்"

கும்க்கி said...

நான் கடவுள் விமர்சனம் போடுவிங்கன்னு வந்து பார்தேன்..அதையெல்லாம் தாண்டி எங்கியோ போய்டிங்கண்ணே.
ஆனா நம்ம பல்ப்பு கொஞ்ஜம் டிம் அண்ணே.

Mahesh said...

நன்றி ஜோஹன் பாரிஸ்... காசேதான் கடவுள் ! மிகச் சரி !! :

நன்றி கும்க்கி... படம் பாத்து விமர்சனம் பண்றதுல நம்ம பல்பு ஃப்யூஸ்ங்க :))

தாமிரா said...

நாலு தடவை வந்து லைட்டா கிளாம்ஸ் உட்டுட்டு ஓடிட்டேன்.. இப்பதான் முடிச்சேன்.. அண்ணே பெரிய ஆளுண்ணே நீங்க..

அப்பிடியே..
கார்க்கி said...
எனக்கு புரியலன்ன்றது புரிஞ்சிடுச்சு// ஒரு ரிப்பீட்டு.!

எம்.எம்.அப்துல்லா said...

//அடுத்த "பாலா" உருவாகிட்டிருக்கார்,

உஷார், உஷார்
//

அண்ணே ஏன் இந்தக் கொல வெறி????

மங்களூர் சிவா said...

நல்லாதான் கேக்குறீங்க டீட்டெய்லு ஆனா பதில் என்கிட்ட இல்லியேேஏஏஏஏ
:((

Mahesh said...

நன்றி தாமிரா... //அண்ணே பெரிய ஆளுண்ணே நீங்க..// உங்களுக்குத் தெரியுது... அவ்வ்வ்வ்வ்வ்

நன்றி சிவா... ரொம்ப நாளா நம்ம கடைப்பக்கம் காத்து வாங்கக் கூட வரல நீங்க.... :(

விடுங்க அப்துல்லா... தராசு அண்னன் சொன்னதுக்காக எல்லாம் நாம நம்ம வேலைய விட்டுற முடியுமா? :)))))))

கிரி said...

மகேஷ் பெரிய விஷயம் எல்லாம் எழுதறீங்க..

எனக்கு அவ்வளவா புரியல ..

Mahesh said...

நன்றி கிரி... பெரிய விஷயம் எல்லாம் ஒண்ணும் இல்லீங்க... என்னமோ நமக்குத் தெரிஞ்சதை நமக்கு புரிஞ்ச விதத்துல எழுதியிருக்கேன். அதுக்காக இதை பின்நவீனத்துவத்துல சேத்துடாதீங்க......:))))))))

வேத்தியன் said...

மிக நல்ல பதிவு...

chitravini said...

நான் ஏதோ உளரப்போய், அது ஒரு நல்ல பதிவுக்கு காரணமாக இருந்தது எனும்போது நிறைவாக இருக்கிறது. இருந்தாலும் இன்னும் சில அபிப்ராயங்கள்! இன்றைய தலைமுறையிலும், நடைமுறையிலும் 'தேடுதல்' என்பது வெறும் 'பொருளீட்டுதல்' என்றாகியதனால், 'ஞானம் தேடுதல்' அர்த்தமற்ற சொல்லாகி விட்டது. இருந்தாலும், படித்தவர்களிலும், படிக்காத பாமரனிடர்களிலும் ஒரு சிலர், அந்த 'கடவுள்' என்னும் 'கான்செப்டை' புரிந்து கொள்ள முயலும் போது, தற்போதுள்ள 'உபகரணங்கள்' வழக்குமுறைச் சொற்றொடரில் இல்லாததால் படித்தவர் அந்த 'சக்தி' நிலையை அறிய முயன்று தன்னை மேலும் குழப்பிக் கொள்கிறார். பாமரனோ, எதுக்கு வம்பு என்ற மன நிலையில், தனக்கு மீறிய ஒரு சக்தி இப்படித்தான் உள்ளது என்ற கற்பனையில் ஆழ்ந்த நம்பிக்கை வைத்து அதில் 'ஞானம்' அடைய முயல்கிறான். அன்றைய 'பாஷை' இன்று வழக்கு முறையில் இல்லாததாலோ அல்லது தற்போதைய 'பாஷை'யில், 'ஞானத்தின்' ரகசியங்களை எளிய முறையில் புரிய வைக்க முடியாத காரணத்தினாலோ, நம் கற்றறிந்த ஆன்றோரும், சான்றோரும், இறைவனின் பிரதிநிதிகளும், இந்த கலியுகத்தில், அவரவர்க்கு இஷ்டமான தெய்வத்தின் 'நாமஸ்மரணை' செய்தாலே 'ஞானம்' சித்திக்கும் என்ற சித்தாந்தத்தை முன் வைத்தார்களோ என்று எனக்கு தோன்றுகிறது. ஒருவேளை 'துவாரபயுகத்தில்' இருந்தவர்களின் 'மனநிலை'யை 'கலியுகத்தில்' உள்ளவர்களின் 'மனநிலை'யுடன் ஒப்பிடும்போது, அவர்கள் நம்மைவிட ஒருசில படிகள் 'உயர்ந்திருந்திருப்பார்களோ' என்று ஐயப்படும்படி தோன்றுகிறது. இது என், மறுபடியும், தனிப்பட்ட ஒரு அபிப்ராயம். சமீபத்தில் ஒரு புத்தகம் படித்தேன்...'KA' by Roberto Calusso....a book into the minds of Hindu Gods and Godesseச். பல விஷயங்களில் மாற்றி யோசிக்க வைக்கிறது. மகேஷ், படித்துவிட்டு ஒரு நல்ல பதிவு போடவும். விவாதிக்கலாம். நீண்ட பதிவுக்கு நண்பர்கள் மன்னிக்கவும்.

chitravini said...

Sorry, I misspelt the author. He is Roberto Calasso, not Calusso.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு மகேஷ்,

கண்கள் இல்லாத ஊரில் வண்ணத்தை பற்றியும், காது இல்லாதவர்கள் ஊரில் சங்கீதத்தை பற்றியும் வகுப்பு எடுக்கிறீர்கள்.

ஆதிசங்கரரை பற்றி தெரிந்து கொள்ள மெக்மேலனை தான் தேடவேண்டி இருக்கிறது. இது தான் நம் நிலை.


சினிமா, கவிதை என உருப்படாத சில பதிவுகள் போடுங்கள். இல்லையென்றால் நான் மட்டும் தான் இங்கே வரவேண்டி இருக்கும்.. :))

இந்தியா, வேதம் கலாச்சாரம் என
பிரபல எழுத்தாளரை போல நீண்ட பதிவு :))

அருமையான பதிவு.

Mahesh said...

நன்றி ஸ்வாமி ஓம்கார்... முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஸ்ரீதர் said...

//அவர்கள் சொல்ல வந்ததெல்லாம் எல்லாவற்றுக்கும் எது ஆதாரமோ அதை அடைய "ஞானம்" ஒன்றே வழி என்பது. அந்த மூல ஆதாரத்தின் சலனமற்ற, களங்கமற்ற, புரிந்துகொள்ள மிகவும் பிரயத்தனப்பட வேண்டிய ஒன்றை வார்த்தைகளால் விளக்குவது மிகவும் கடினம்.//

மிகவும் சரி.அருமையான பதிவு மகேஷ்.மிக்க நன்றி.