Showing posts with label கதை. Show all posts
Showing posts with label கதை. Show all posts

Monday, May 4, 2009

புலியும் புலி சார்ந்த வனமும்...


"அலோக், ராகேஷ், வெங்கட்..... வாங்கடா போய் தூங்கலாம்... நாள் பூரா பஸ்ல வந்தது அலுப்பா இருக்கு.... காலைல சீக்கிரம் வேற கிளம்பணும்... எவ்வளவுதாண்டா குடிப்பீங்க? ஓசில கிடைச்சா ஒம்பது பாட்டிலாடா?"

"ஓயே... பப்பு.. ஜா.. ஜா... தூத் பீ கே சோ ஜா... ஜா மேரா முன்னா..."

"ஹா.... ஹா... ஹ்ஹோஹோ... ஹா"

"சிரிங்கடா... நல்லா சிரிங்க... குடிச்சு கொடல் வெந்து ஓஞ்சு போங்க... எவனாவது காட்டேஜுக்குள்ள வாந்தி கீந்தி பண்ணினீங்க... மவனுகளா... நாளைக்கு டெல்லிக்கு நாலு தந்திதான் போகும்..."

நான் வெறுப்புடன் அவர்களை சபித்துக் கொண்டே எங்கள் காட்டேஜுக்குத் திரும்பினேன்.

'மணி இப்பவே பத்தரை. இனி எப்ப வந்து எப்ப தூங்குவானுக? 7 மணிக்காவது கெளம்பினாத்தான் சரியா இருக்கும்... இவுனுகளை நம்பி ப்ரொகிராம் போட்டேனே... நம்ம புத்தியை எதால அடிச்சா தேவலாம்?'

எங்கள் டெல்லி அலுவலகத்தின் நிறுவன நாளை ஒட்டி எல்லாருமாக நைனிதால் டூர். ஒரு வாரத்துக்கு நைனிதால், பீம்தால், சாத்தால் எல்லாம் போவதாக திட்டம். இன்று காலை கிளம்பி மாலை 6 மணிக்கு ராம்நகர் வந்து க்ளாரிட்ஜஸ் ரிசார்ட்ஸ் வந்து சேர்ந்தோம். முதல் 3-4 மணி நேரங்கள் வ.வா.ச. மாதிரி பாட்டும் கூத்துமாக ஜாலியாகப் போனாலும், டேராடூன் தாண்டியதும் மலைப்பாதைப் பயணம் மிகவும் அலுப்பாக இருந்தது. வந்து இறங்கி எல்லோருக்கும் காட்டேஜ் கொடுத்து, குளித்து விட்டு வந்து சுவையான இரவு சாப்பாட்டிற்குப் பின் தூங்கலாம் என்றால் இந்தக் கழுதைகள் என்னவோ இனிமேல் உலகத்தில் குடிப்பதற்கு வெறும் தண்ணீரைத் தவிர எதுவும் கிடைக்காது என்பது போல மண்டுகிறார்கள்.

டிசம்பர் மாதம் என்பதால் நல்ல குளிர். ஸ்வெட்டர் போட்டு மேலே மூன்று அடுக்கு ஜேக்கெட்டையும் தாண்டி குளிர் உறைத்தது. நானும் வர்கீஸும் அசெம்பிளி ஹாலில் இருந்த விறகு அடுப்பிற்குப் பக்கத்தில் சிறிது நேரம் குளிர் காய்ந்து விட்டு எங்கள் காட்டேஜுக்குச் சென்றோம். நான் கொஞ்ச நேரத்தில் ரஜாய்க்குள்ளே சுகமாக உறங்கிப் போனேன்.

காலை 6:30 க்கு எழுந்தபோது ஒவ்வொருவனும் ஒவ்வொரு இடத்தில் கோணல் மாணலாய் படுத்திருந்தனர். நிலைமையைப் பார்த்தால் மட்டையால் அடித்து எழுப்பினால் ஒழிய இந்த மட்டைகள் எழுந்திருக்க மாட்டார்கள் போலத் தோன்றியது. காலைக்கடன்களை முடித்து குளித்துவிட்டு வெளியே வந்து பார்த்தேன். அப்போதுதான் கவனித்தேன். எங்கள் காட்டேஜுக்கு பின்புறம் "கோசி" ஆறு அமைதியாக ஓடிக் கொண்டிருந்தது. இந்த ரிசார்ட் மலையடிவாரத்தில் ஒடுங்கி இருந்ததிலும் ஒரு அழகு இருந்தது. அந்த அதிகாலைக் குளிரிலும் வர்கீஸ் ஆற்றில் நீந்திக் குளித்துக் கொண்டிருந்தான். எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

"அதெல்லாம் முதல்ல குதிக்கற பாரு... அப்பத்தான் விர்ர்ர்ர்ர்னு குளிர் ஏறர மாதிரி இருக்கும். நல்லா ரெண்டு முங்கல் போட்டுட்டேன்னு வெச்சுக்க... குளுராவது... கிளுராவது.... ஒண்ணும் தெரியாது.... என்னமா இருக்கு தெரியுமா?"

"அட போப்பா... தண்ணியைப் பாத்தாலே கண்ணு வெறைக்குது... குளிக்கிறதா? நன நல்லா சுடு தண்ணில குளிச்சுட்டு வந்துட்டேன்... சரி... சீக்கிரம் வா... பசிக்குது... சாப்ட்டுட்டு போவோம்..."

"இதோ வந்துட்டேன்... ரெண்டே நிமிஷம்..."

தொபீர் என்று அவன் நீரில் குதிக்கும் சத்தக் கேட்டது. நான் காலைக் குளிரையும் ரம்மியமான சுற்றுப்புறத்தையும் ரசித்தபடி மெள்ள நடந்து உணவுக்கூடத்துக்கு வந்தேன். எங்கள் அலுவலகத்தின் டைரக்டர்கள் இருவர் அங்கே பேசிக் கொண்டு அமர்ந்திருந்தனர். நானும் கொஞ்சம் ரொட்டி, ஜாம், பழங்கள், தேனீர் எல்லாம் எடுத்துக் கொண்டு அவர்கள் அருகே சென்று அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது வர்கீசும் இன்னும் சிலரும் வந்தனர்.

உணவுக்குப் பிறகு நான், வர்கீஸ், அலோக் மூவரும் ஆளுக்கொரு சைக்கிளை எடுத்துக் கொண்டு வெளியே வந்தோம். நாங்கள் தங்கியிருந்த ரிசார்டில் இருந்து 8 கி.மீ தூரத்தில் "ஜிம் கார்பெட் தேசிய பூங்கா ம்யூசியம்" இருப்பதாக மேப்பில் பார்த்து விட்டு வெளியே வந்த பிறகுதான் தெரிந்தது மலையின் மேலே ஏற வேண்டும் என்று. ஆனாலும் போயே தீர்வது என்ற முடிவு செய்யும்போது ராகேஷும் வந்து சேர்ந்தான்.

"முஜே சோட் கர் நிகல் கயே ந? கமீனே...."

"சாலே... தூ கூப் பீகர் சோ ரஹா தா... பதா நை கப் உடேகா.... பியகர் சாலா...."

"டீக் ஹை.. டீக் ஹை... சல்...சல்... ஸ்யாதா ஜபான் மத் சலாவ்..."

நால்வரும் மெதுவாக மேலே ஏற ஆரம்பித்தோம். வழியில் யாரோ ஒருவன் சொன்னதைக் கேட்டு தார்ச்சாலையில் வளைந்து வளைந்து போகாமல், சைக்கிளைத் தலைக்கு மேலே தூக்கிக் கொண்டு ஆற்றின் குறுக்கே நடந்து சென்று அக்கரையில் ஏறி காட்டுப் பாதை வழியாக சென்றோம். வழியில் ஆற்றின் நடுவே இருந்த உயரமான ஒரு மண் குன்றின் மேலே இருக்கும் ஒரு தேவி கோயிலையும் பார்த்து விட்டு கார்பெட் ம்யூசியம் சென்று சேர்ந்தோம்.

ம்யூசியத்தின் உள்ளே ப்ரிட்டிஷ் ராணுவ அதிகாரியும், சிறந்த வேட்டைக்காரரும், குமாவோன், தெராய் பகுதிகளில் சுற்றிக் கொண்டிருந்த சில ஆட்கொல்லிப் புலிகளை வேட்டையாடி அந்தப் பகுதி மக்களைக் காப்பாற்றியவருமான "ஜிம்" கார்பெட் என்ற மனிதரின் வாழ்க்கை வரலாறு, அவர் எடுத்த புகைப்படங்கள், பாடம் செய்த அவரால் கொல்லப்பட்ட புலிகள் எல்லாம் பார்வைக்கு இருந்தன. அவர் எழுதிய "Maneaters of Kumaon" புத்தகமும் விற்பனைக்கு இருந்தது. அவர் நினைவாகவே 4000 அடி உயரத்தில் 500 சதுர கி.மி பரப்பில் "கார்பெட் தேசிய பூங்கா" அமைக்கப்பட்டு புலிகளின் சரணாலயமாக ஆக்கப்பட்டு, "பெங்கால் டைகர்" போன்ற அழிவின் விளிம்பில் இருக்கும் புலி இனங்களை அரசு பாதுகாத்து வருகிறது.

ம்யூசியத்தை சுற்றிப் பார்த்து விட்டு வெளியே வரும்போது நல்ல மேகமூட்டம். வெளிச்சம் மிகவும் குறைவாக இருந்தது. வரும்போதுதான் ஏற்றம் என்று குறுக்கு வழியில் வந்தோம். இறங்குபோது சாலை வழியாகவே போகலாம், சும்மா உட்கார்ந்திருந்தால் போதும் என்று முடிவு செய்தோம். இரண்டு சைக்கிள்களின் சக்கரங்கள் பஞ்சர் ஆகியிருந்ததை அப்போதுதான் கவனித்தோம். அந்த இடத்தில் சைக்கிள் ரிப்பேர் செய்யும் கடைகள் எதுவும் கிடையாது என்றும் ராம்நகர்தான் போகவேண்டும் என்று ம்யூசியம் கீப்பர் சொன்னார். எல்லாமே ஸ்போர்ட்ஸ் வகை சைக்கிள்களாக இருந்ததால் கேரியர் கிடையாது. இருந்தால் கேரியரில் ஒருவர் உட்கார்ந்து கொண்டு மற்ற சைக்கிளை கையால் பிடித்துக் கொண்டு ஓட்டி வந்து விடலாம். அதற்கும் வழியில்லை. பிறகு எல்லாருமே சைக்கிள்களைத் தள்ளிக் கொண்டு நடக்க ஆரம்பித்தோம். சாலையின் இரு புறமும் உயர்ந்த அடர்ந்த மரங்கள் இருந்ததால் வெளிச்சம் ரொம்பவே குறைவாக இருந்தது. மறைந்த தேவன் அவர்கள் எழுதுவது போல "கையெழுத்து மறையும் நேரம்" போல இருந்தது. அவ்வப்போது தாண்டிச் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்குடன் சென்றன.

ராகேஷ் கொஞ்ச நேரத்திலேயே சோர்ந்து விட்டான். நடுவில் அலோக் வேறு அந்த இடத்தில் அந்த நேரத்தில் புலி வந்து விட்டால் என்ன செய்வது என்று புலம்பிக் கொண்டிருந்தான். அந்த ம்யூசியம் கீப்பர் வேறு எங்களிடம் பேசுகையில், குளிர் காலங்களில் பகல் நேரத்தில் புலிகள் வெயிலுக்காக சுதந்திரமாகச் சுற்றி வரும் என்றும், அந்த 500 சது கி.மீ மொத்தப் பரப்பும் சரணாலயம் என்பதால் எங்கு வேண்டுமானாலும் அவற்றைப் பார்க்க முடியும் என்றும் சொல்லியிருந்தார். எல்லோருக்குமே கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது.

பயத்தை விரட்ட சத்தமாகப் பேசிக் கொண்டும் அட்டகாசமாகச் சிரித்துக் கொண்டும் நடந்தோம். பசி வேறு அதிகமாகிக் கொண்டிருந்தது. ஒருவனும் ஒரு பாட்டில் தண்ணீர் கூட கொண்டு வரவில்லை. ஒரே ஒரு கேமிரா மட்டும்தான் இருந்தது. அது கூட ம்யூசியம் வருவதற்குள்ளாகவே 36 படமும் எடுத்து முடிந்திருந்தது.

சாலையோரத்தில் அத்தி பூத்தாற் போல இருந்த அந்த டீக்கடையைப் பார்த்தோம். காணாது கண்டவர்கள் போல சைக்கிளைப் போட்டு விட்டு போய் டீ குடித்து, பிஸ்கட் தின்று விட்டு, கொறித்துக் கொண்டே போக சமோசா, ப்ரெட் பகோடா எல்லாம் சேகரித்துக் கொண்டு மறுபடி நடக்க ஆரம்பித்தோம். இன்னும் இருட்டு. அப்போது சாலையின் ஒரு பக்கத்திலிருந்து யாரோ ஒரு பெரியவர் வந்து எங்களோடு நடக்க ஆரம்பித்தார். பார்வைக்கு நன்கு படித்தவர் போல இருந்தார். 75 வயது இருக்கும். ஏதோ ஒரு பாட்டை முனகிக் கொண்டே வந்தார். நாங்கள் அவரை கவனித்ததும் பேசுவதை நிறுத்தி விட்டோம்.

அவரே எங்களோடு பேச ஆரம்பித்தார். நாங்கள் யார், எங்கிருந்து வருகிறோம், என்ன செய்கிறோம் என்றெல்லாம் கேட்டு விட்டு, அலோக்கின் புலி பற்றிய பயங்களையும் புலம்பல்களையும் கேட்டவுடன் சிரிக்க ஆரம்பித்தார். அவர் அந்த பகுதியில் பல ஆண்டுகளாக இருப்பதாகவும், பலமுறை புலிகளை நேரில் பார்த்திருப்பதாகவும் சொன்னார். பிறகு புலிகளின் சில விசித்திரமான பழக்கங்கள், குணங்கள் போன்றவற்றை விவரித்துக் கொண்டு வந்தார். நாங்கள்தான் சோர்ந்து போய் நடை தளர்ந்ததே தவிர அவர் களைப்படைந்ததாகவே தெரியவில்லை. அவர் ராம்நகர் மார்கெட்டுக்கு போக வேண்டும். அது நாங்கள் தங்கியிருந்த ரிசார்டையும் தாண்டி 5 கி.மீ. தூரத்தில் இருந்தது. எங்களுக்கோ ஆச்சரியம். அதுவும் அவர் தினமும் மார்கெட்டுக்கு போய்வருவதாக சொன்னதும் ஆச்சரியம் அதிகமானது.

புலிகள் தொடர்பான சுவையான பல நிகழ்ச்சிகளையும், செய்திகளையும் எங்களுடன் பகிர்ந்து கொண்டார். சிறிது நேரத்தில் எங்கள் ரிசார்டுக்கு அருகில் வந்து விட்டோம். மற்ற சில நண்பர்களும் அங்கே சாலையோரத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். சிலர் எங்கள் அருகே வந்து விசாரித்தனர். அவர்களுக்கும் அந்த பெரியவரை அறிமுகம் செய்து வைக்க விரும்பியும், முடிந்தால் புலிகளைப் பற்றி அவரை நிறையப் பேசவைக்க வேண்டும் என்று கேட்கலாம் என்றும் நினைத்து அவரை அழைக்கத் திரும்பினோம்.

அங்கே..... யாரும் இல்லை !!

சாலையின் மறுபக்கம் அவர் நின்றிருந்த இடத்தில் ஒரு சிறிய அறிவிப்புப் பலகை இருந்தது. அதில் காணப்பட்டது :

"The great hunter, saviour of Kumaon, Jim Corbett ,was fatally attacked by a tiger here in April 1955"

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

அடுத்த இரண்டு நாட்கள் நாங்கள் ஜீப்பிலும், யானை மீதும் அமர்ந்து பூங்காவினுள் புலிகளைப் பார்க்க காடு முழுவதும் சுற்றியதும், ஒரு புலியைக் கூட பார்க்க முடியாததும், புலிகளின் கால்தடங்களை மட்டுமே பார்த்ததும், பீம்தால், சாத்தால் எல்லாம் பார்த்து டில்லி திரும்பும் வரை அலோக்கின் ஜுரம் குறையாமல் இருந்ததும் அவ்வளவு முக்கியமில்லாத விஷயங்கள்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


டிஸ்கி : இது 99% உண்மைக் கதை. எந்த 1% கற்பனை என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகிறேன்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


Edward James "Jim" Corbett (25 July 1875 – 19 April 1955)


படங்களுக்கு நன்றி : விக்கிபீடியா

Wednesday, March 18, 2009

செக்குமாடு



"வாய்யா கனகு... ஏன்யா லேட்டு? மணியப் பாரு எட்டே முக்கால்.... இதோட ஒனக்கு 4 வார்னிங் குடுத்தாச்சு... டைம் ஆபீஸ் முருகேசன் வேற எதுரா சாக்குன்னு பாத்துக்கிட்டே இருக்கான்....

"இல்லீங்கய்யா... வாரைல சைக்கிள் மேல ஒரு பன்னி வந்து மோதி டிச்சுக்குள்ள விளுந்துட்டனுங்... அதான் பாருங் பேண்டெல்லாம் சகதியாயிருச்சுங்..."

"எதாச்சும் சொல்லுய்யா.... பாதிநா லேட்டா வரது. அப்பறம் நான் ரோஸ்டர் போடறதுக்கு என்ன மரியாத? அவன் மூர்த்தியா கத்தறான். ரிலீவர் எங்க ரிலீவர் எங்கன்னு. உன்னிய பேசாமா வெல்டிங்குக்கு மாத்தீர்ரேன். எக்கேட்டும் கெட்டுப்போ

"அய்யா வேணாம்யா... கண்ணு வலி தாங்க முடியாதுங்கய்யா... இனிமே சரியா வநதருவனுங்..."

"சாமி... வேணாம்யா... குடிகாரன் பேச்சக் கூட நம்பலாம். உன்ற பேச்சக் கேட்டா..."

"அப்பிடியெல்லாம் சொல்லாதீங்கய்யா.... நாந்தான் சரியா வரேன்னு சொல்றனல்லங்... சத்தியமுங்.."

"நீயும் உஞ்சத்தியமும். போய் வேலயப் பாரு. மூர்த்திய ரிலீவ் பண்ணு போ.."

அந்த மில்லில் தனபால் ஒரு சூப்பர்வைசர். 4 டீசல் இஞ்சின்கள் நாள் முழுசும் திணறித் திணறி ஓடி 4MW கரண்ட் நுரை தள்ளும். போடற சத்தத்துல நாம பேசறது நமக்கே கேக்காது. ஷெட் பாத்துக்க ஏழு பேர். மூணு மெக்கானிக், மூணு எலக்ட்ரீசியன், ஒரு கையாள். ஷெட்டுக்குப் பின்னால மிசின் ரூம். லேத், ஷேப்பர், ட்ரில்லர்னு அது வேற ஒரே இறைச்சலா இருக்கும். வெளியில வெல்டிங் வேற ப்ர்ர்ர்ர் ப்ர்ர்ர்ர்னு கண்ணு கூசும். சைடுல சின்ன சின்னதா கூலிங் டவருக ரெண்டு. ஷிப்ட் மெக்கானிக் இஞ்சின்களை கவனிக்க, எலக்ட்ரீஷியன் லோடு பாத்துக்க. கையாள், பம்ப் ஓட்டி டேங்குகள்ல டீசல் நெரப்ப, கூலிங் டவர் தண்ணிக்கு உப்பு கொட்ட, அடைப்பு எடுக்கன்னு வேலை பெண்டு நிமுந்துரும்.

தனபால்தான் எல்லாத்துக்கும் சூப்பரவைசர். ரொம்ப கறாரான ஆளு. அவனைக் கண்டாலே எல்லாருக்கும் கொஞ்சம் பயந்தான். டீ குடிக்கக் கூட 8 நிமிஷம்னா 8 நிமிஷந்தான். பின்னாலயே வந்து நின்னுடுவான். "ம்ம்ம்ம்.. இன்னம் ரெண்டு நிமுசத்துல சாப்பாட்டு சங்கே புடிச்சுருவானுக. தொரைக்கி டீ சாப்ட 1 மணி நேரமா?" வேலையும் நல்லாத் தெரியும். சும்மாவா வாசவி மில்லுல இருந்து தேடிப் புடிச்சு கூட்டியாந்தாங்க. "என்ன லச்சணமா வெல்டிங்.... சும்மா மரவட்டை கணக்கா வரிவரியா இருக்க வேணாம்? கை இந்த நடுங்கு நடுங்குனா...."

தனபால் இந்த வாரம் மெயிண்டனன்ஸ் ஷெட்யூல் போட்டுருந்தான். கிர்லாஸ்கர் கம்பெனியிலருந்து இஞ்சினீயருக வருவாங்க. எந்த இஞ்சினுக்கு எங்க நோவுன்னு பாத்து சொல்லுவானுக. அதுக்கு முந்தி இங்க லாக்புக்கு எல்லாம் ரெடியா இருக்கணும். மூர்த்தியும் சங்கரும் ஒழுங்கா எழுதுவாங்க. மணிக்கொருக்கா எட்டு சிலிண்டர்லயும் டெம்ப்ரேச்சர், டீசல் அளவு, தண்ணி ப்ரசர், லோடு, ஸ்பீடு எல்லாம் அந்த பெரிய ரிஜிஸ்தர்ல பதியணும். கனகு மட்டும் தூங்கிட்டு கடைசி மணியில 8 எண்ட்ரியும் ஒட்டுக்கா எழுதுவான். சும்மா கொஞ்சம் முன்னப்பின்ன மாத்தி மாத்தி.

கனகு மூர்த்திய ரிலீவ் பண்ணிட்டு சேர்ல உக்காந்து பெருசா ஒரு கொட்டாவி விட்டான்.

"அப்பிடியே கவுந்து தூங்கிரு.... வந்த ஒடனே லாக் புக்க பாக்கரானா பாரு. எதுக்கோ என்னவோ போச்சுன்னு வாயப் பொளந்துக்கிட்டு.... " பின்னாலயே தனபால் வந்ததை கவனிக்கலை.

"கிர்லாஸ்கர் ஆளுக 10 மணிக்கு வந்துருவாங்க. ஒண்ணும் மூணும் இன்னக்கி. ரெண்டும் நாலும் நாளை கழிச்சு. இப்பயே போன வருச மெயிண்டனன்ஸ் கார்டுக, பார்ட் இஸ்ட்ரியெல்லாம் எடுத்து வெய்யி. எல்லாம் சொன்னாத்தான் செய்வீங்களோ?" தனபால் கத்தி விட்டு இஞ்சினியருக்கு போன் போட போனான்.

கனகு எல்லாம் எடுத்து வெக்க ஆரம்பிச்சான். அப்படியே எதிர் ஷெட்டுல ஸ்பின்னிங்ல வள்ளி இருக்குதான்னு எட்டிப் பாத்துக்கிட்டான். இஞ்சின்களை ஒரு ரவுண்டு வந்தான்.

"டேய் கதிரு... இங்க வாடா. என்ரா இது? ஆயில் மாத்துனியா? தொடைக்க மாட்ட? இந்நேரம் வளுக்கீருக்கும். அதான் அங்க அம்புட்டு காட்டன் வேஸ்ட் கெடக்குதல்ல. தொட மொதல்ல..." தனபால் மேல இருந்த கோவம் எல்லாம் அவன் மேல கொட்டினான்.

இதுக்குள்ள எலக்ட்ரீஷியன் சேகர் போய் 2 இஞ்சின் நின்னு போனா எந்தெந்த மிசினுகளுக்கு நெறி கட்டும்னு பாத்து பேஸ் மாத்தி விட்டுட்டு வந்தான். தலைல ஒட்டீட்ருந்த பஞ்சை எடுக்க கொஞ்சம் ஏர் புடிச்சுக்கிட்டான்.

"சும்மா அவனைப் போயி வெரட்டிக்கிட்டு... விடு கனகா... வேலையப் பாப்போம். மொத டீ சாப்டு வருவோம். வண்டி வந்துருச்சு". டோக்கனை எடுத்துக்கிட்டு ரெண்டு பேரும் போயிட்டாங்க.

10 மணி. சொன்ன மாதிரியே கரெக்டா வந்துட்டானுக இஞ்சினீயருக. சின்ன பசங்கதான். துறுதுறுன்னு. தனபாலும் வந்ததும் வெளிச்சமா ஒரு மூலைல டேபிளப் போட்டுக்கிட்டு லாக்புக்கை ஒரு நோட்டம். லோடு, டிஸ்ட்ரிப்யூஷன் பழய மெயிண்டனன்ஸ் குறிப்புக எல்லாம் பாத்துட்டு 1ம் இஞ்சின் கிட்ட போய் நின்னாங்க. ஸ்லோ ஸ்பீட் இஞ்சின். "தடக்.. தடக்... தடக்...தடக்..." லோடு "0" ன்னு ஆனதும் ஆஃப் பண்ணியாச்சு. டெம்பரேச்சர் கொறஞ்சதும் மேல ஏறி ஒவ்வொரு சிலிண்டரா செக்கிங் ஆரம்பமாச்சு.

"அஞ்சாவது சிலிண்டர் ஏன் இன்னும் இம்புட்டு சூடா இருக்கு? கூலிங் சரியில்லயா? மேல போய் பாக்கறேன்"னு கனகு சைட் ரெய்லிங் புடிச்சு மேல ஏறினான். ஹெட் இன்னும் சூடு. எக்ஸாஸ்ட் வால்வு ஸ்பிரிங் டைட். சரியா ஓப்பன் ஆகல போல. கீழ எறங்கி இஞ்சினியர் கிட்ட சொல்லிட்டு மறுபடி அடுத்த டீ குடிக்க போனான்.

டீ குடிச்சுட்டு இருக்கும்போதே "தொம்"னு ஒரு சத்தம். அப்பிடியே டீ டம்ளரைப் போட்டுட்டு ஓடி வந்தான். ப்ளாட்ஃபாரத்துல சிந்தியிருந்த ஆயில கதிர் தொடைக்காமயே போயிருக்கான். கணக்கா இஞ்சினீயர் அது மேலயே கால வெச்சு வழுக்கி விழுந்துருக்கான். சைட் ரெய்லிங்ல தலை பட்டு மண்டைக் காயம். ரத்தம் ஒழுகுது.

"சேகரு.... சேகரு...கதிரு.. ஒடியாங்கடா... அய்யய்யோ...."

சேகரும் கதிரும் ஒடி வர, எல்லாருமாச் சேந்து ஆளைத்தூக்கிட்டு ஸ்டோருக்கு ஓடுனாங்க. அங்கதான் பெரிய பஸ்டெய்டு பொட்டி இருக்கு. இஞ்சினீயர் மயக்கமாயிட்டாரு போல. ஓட்டமா ஓடி, ஆளைப் படுக்க வெச்சு, டெட்டால வெச்சு தொடச்சு, பஞ்சு வெச்சு, கட்டுத் துணியால மண்டைய சுத்தி பெரிய கட்டாப் போட்டு விட்டாங்க. அதுக்குள்ள ஓ.எம். கார் ட்ரைவரைக் கூப்ட்டு விட்டு கார் ரெடியா ஸ்டோர் வாசலுக்கு வந்துருச்சு. அப்பிடியே அள்ளிப் போட்டுக்கிட்டு தர்மாஸ்பத்திரிக்கு விரட்டினாங்க.

அட்மிட் பண்ணி, டாக்டருக பாத்துட்டு 4 தையல் போட வேண்டியதாயிடுச்சு. மயக்கம் தெளியில. எப்பிடியும் இன்னும் 2,3 மணி நேரம் ஆகும்னு சொல்லிட்டாங்க. சேகரும் திரும்ப மில்லுக்கு போயிட்டான். இஞ்சினியர் பையனுக்கு வேற தமிழ் தெரியாது. என்ன பண்றதுன்னு புரியாம கனகு மட்டும் அங்கியே தொணைக்கு ஒக்காந்துட்டான்.

தனபால் கிர்லாஸ்கர் கோயமுத்தூர் ஆபீசுக்கு போனைப் போட்டு விசயத்தை சொல்லிட்டான். அவுங்க ஆளை அனுப்பி பாத்துகிறதா சொல்லிட்டாங்க. கோயமுத்தூர்ல இருந்து ஆள் வர அந்தா இந்தான்னு 4 ம்ணி ஆயிருச்சு. வந்தவன் கிட்ட விசயத்தை சொல்லிட்டு கனகு 5 மணியாச்சேன்னு வீட்டுக்கே போயிட்டான்.

மறுநா காலைல மில்லுக்கு போகைல மறுக்கா ஆஸ்பத்திரி வந்து எப்பிடி இருக்கு நெலமைன்னு பாத்துட்டு போனான். சாயங்காலம் டிஸ்சார்ஜ் பண்ணிருவாங்களாம். எதிர்காத்துல மிதிச்சு மில்லுக்கு போய் சேர மணி 8:50.

"வாய்யா கனகு... என்னய்யா லேட்டு? மணியப் பாத்தியல்ல.... நீ இனிமே வெல்டிங்தாய்யா..."

"அய்யா.... இல்லீங்கய்யா... இஞ்சினீயரை பாக்க ஆஸ்பத்திரி போயிருந்தனுங்... எதிர் காத்துல மிதிச்சு வர லேட்டாயிருச்சுங்..."

"எதாச்சும் சாக்கு சொல்லிட்டே இரு... போ..... போய் மூர்த்திய ரிலீவ் பண்ணு... கத்திக்கிட்டு கெடக்கான்........."

பக்கத்துல இருந்த டைம் ஆபீஸ் முருகேசன் சிரிச்சுக்கிட்டான். ஸ்பின்னிங்ல இருந்து வள்ளி எட்டிப் பாத்து தோளை மோவாக்கட்டைல இடிச்சுக்கிட்டா. மேகத்துல மறைஞ்சு கெடந்த சூரியன் பொளீர்னு வெளிய வந்துச்சு.

Monday, September 8, 2008

வெள்ளிங்கிரி

என்னக்கிம் போல சூரியன் கெளக்க மொளச்சுருச்சு, கோளி கூவாமயெ. வெள்ளிங்கிரி மனசு மட்டும் இருளோன்னு இருக்கு. நேத்து வெளக்கு வெக்கைல காந்திராசு வந்து கத்தீட்டுப் போனது, அணையப்போற சிம்னி வெளக்காட்டம் மனசுக்குள்ள மினுக்கீட்டே இருக்கு. வேலை ஒண்ணும் ஓடல. காந்திராசயும் தப்பு சொல்ல முடியாது. அவன் வட்டிக்குப் பணம் குடுக்கறவன். தருமம் பாத்தா அவன்ற கைக்காசு போயிரும். வெள்ளிங்கிரி நெலம அவனுக்கும் தெரியாம இல்ல. இப்பொத்தான் கால் செரியாயிட்டு வருது. குச்சி இல்லாம நடக்க ஆரம்பிச்சுருக்கான். இனிமேத்தான் ரெண்டு பக்கம் சோலிக்குப் போய் நாலு காசு பாக்கணும். ரூவா 550 குடுத்கு மாசம் எட்டாச்சு. வட்டியே குடுக்க முடியாதவன் அசலுக்கு எங்கிட்டு போவான். இம்புட்டு நாளு கந்திராசு சும்மா இருந்ததே பெரிய விசயம். அவுனுக்கு என்ன நெருக்கடியோ, நேத்து வந்து அந்த கத்து கத்தித் தீத்துட்டான். வெள்ளிங்கிரிக்கும் அவன் சம்சாரத்துக்கும், பய செந்திலுக்கும் ரொம்ப கஸ்டமாயிருச்சு.

'அப்பா...நா இஸ்கோல விட்டு நின்னுக்கிடறேன்... குருசாமி கோட மண்டிக்குப் போயி மூட்ட தூக்குறேன் இல்லாட்டி செக்குல போயி புண்ணாக்காச்சும் அள்ளிப் போட்டுட்டு வாரேன்... உன்னியப் பாக்க நெம்ப சங்கட்டமா இருக்கு'

'ம்க்கும்ம்ம்...பெரிய மனுசன் சொல்லீட்டான்... போடா போய் படிப்பப் பாரு ஒளுங்கா... வேலைக்குப் போறானாமா... மருக்கா இதே மாரி சொன்னா வெளாசிப் போடுவேன்...ஆமா...'

'நீ சும்மா இரு கண்ணு.... எல்லாம் உங்கய்யனும் நானும் பாத்துக்குவோம்... போய் அடுத்த வாரம் பரிச்சக்கி படி...'

செந்திலுக்கு வயசு 12 ஆகுது... நல்லாப் படிச்சு இப்பொ ஏளாப்புல இருக்கான். வெள்ளிங்கிரி ஒரு சாதாரண மரமேறிதான். ஆனா தொழில்ல ரொம்ப ஊக்கமான ஆளு. ஏறுடான்னு சொல்லீட்டா போதும். பொழுதுக்குள்ள 70 தென்ன மரமாவது ஏறி, காய் பறிச்சுப் போட்டு, காஞ்ச மட்டயெல்லம் வெட்டி, வண்டுக எடுது, பன்னாடயெல்லாம் சுத்தம் பண்ணி, நல்லா கைகள விரிச்சு விட்டு, மருந்து வெச்சுன்னு சுத்தமா பண்ணான்னா மரமே பாக்க கெராப்பு வெட்டி விட்ட மாதிரி பளிச்சுன்னு இருக்கும். காத்தடிக்கைல தோப்புல சத்தமே அம்புட்டு சொகமா இருக்கும். தோபுக்காரவிகள்லாம் வெள்ளிங்கிரிதான் வாரோணுமுன்னு ரெண்டு நாள் கூட காத்திருப்பாங்க. அதும் மொத வாட்டி காய் எறக்கணும்னா வெள்ளிங்கிரிதான். ரொம்ப கைராசியான ஆளு.

மரமேற வாய்ப்பில்லாத காலத்துல நாகம்மாளக் கூட்டீட்டு வயல்ல எலி புடிக்கப் போவான். அவென் மூக்கு இருக்குதே, வயல்ல எறங்கினதுமே வளைக எங்கெங்க இருக்குதுன்னு ஒரு நெப்பு தெரிஞ்சுரும். கடப்பாரையப் போட்டான்ன அங்க வளை இருக்கும், நாலு எலியாவது இருக்கும். இவன் இங்கிட்டு தோண்டி வளையோட வாய தொறக்கரதுக்குள்ள நாகம்மா அங்கிட்டு வளையோட மறு வாசல்ல சாக்குப் பையக் கட்டி, கல்லுக வெச்சு, கவுறோட ரெடியா இருப்பா. இவன் வளையோட வாய்ல கொஞ்சம் வக்கிபில்லு போட்டு கொளுத்தி விட்டு, பொக வளைக்குள்ள போறாப்டி விசிறி விடுவான். எலியெல்லாம் மூச்சு முட்டிப் போயி ம்று வாசல் வழியா வெளிய வரும். கணக்கா சாக்குகுள்ளார போய் மாட்டிக்கும். அம்புட்டுதேன். சாக்கு வாயக் கட்டிர வேண்டியதுதேன். கொறஞ்சது ஒரு 150 எலியாச்சும் புடிச்சரலாம். வயல் எலின்ன்ன சும்மா பெருச்சாளி கணக்கா திமுக்குன்னு இருக்கும். ஒண்ணொண்ணும் முக்காக் கிலோவாச்சும் இருக்கும். அமராவதி மொதலப்பண்ணைக்கி கொண்டு போனா எலிக்கு மூணு ருவான்னு சொளயா 500 ரூவாக் கிட்ட கெடைக்கும். ஒரு வாரம் ஓட்டீரலாம்.

ஆனா ஆறு மாசம் முந்தி, மரமேறி சுத்தம் பண்ணைல, மேல மட்டக்குள்ள இருந்து சடக்குன்னு ஒரு பாம்பு வர, இவன் கொஞ்சம் சுதாரிக்கறதுக்குள்ள கால் கவுறு நழுவ, பிடிமானம் போயி 4 மாடி ஒசரத்துல இருந்து பொத்துனு விழுந்தான். இடுப்புக் கிட்ட நல்ல அடி. எடது மொளங்காலுக்குக் கீழ எலும்பு முறிஞ்சு போச்சு. ஆளத் தூக்கி நிறுத்தவே அர மணி நெரமாச்சு. நிக்கவே முடியல. இடுப்பு கடுக்குது. காலு வேற வீங்கிகிட்டே போகுது. அப்பிடியே அள்ளி வண்டில போட்டு ஏரிப்பாளயம் கொண்டு போய் எண்ணக் கட்டு போடறவிக வீட்ல எறக்கீட்டாங்க. புத்தூர் எண்ணக் கட்டு கட்றது கொஞ்சம் மொரட்டு வைத்தியந்தான். பல்லக் கடிச்சுட்டு வலியப் பொறுத்துக்கிட்டன் வெள்ளிங்கிரி. அதுக்கப்பறம் மூணு மாசம் படுத்த கெடையாவே இருந்தான். ஏதோ நாகம்மா தீக்குச்சி அடுக்கறது, நாலு வீட்ல ஏனங்கழுவறதுன்னு சமாளிச்சுக்கிடிருந்தா. இந்த சமயத்துலதா காந்திராசு கிட்ட கொஞ்சம் பொரட்ட வேண்டியதாப் போச்சு. அப்பறம் வெள்ளிங்கிரி கொஞ்சம் கொஞ்சமா தேறி, ரெண்டு மாசம் போல குச்சி வெச்சு நடந்து இப்பொதான் ஒரு மாதிரியா தாங்கித் தாங்கி நடக்கறான். நடையே மாறிப் போச்சு. பழய மாதிரி மரமேற முடியுமான்னெல்லம் சந்தேகந்தான்.

இப்பொ காந்திராசு வேற சத்தம் போட்டதுல மனசொடஞ்சு போயிட்டான். திருப்பிக் குடுக்க ஒணத்தி இல்லாதவன் என்ன இதுக்கு கை நீட்டி வாங்கோணும்னு பேசீட்டான். அந்த வார்த்தை சீரணமே ஆகல. திடீர்னு ஒரு ஓசன வந்துச்சு. மறுக்கா எலி புடிச்சா என்ன? ஆனா நாகம்மாள இழுத்துக்கிட்டு காடு மேடெல்லாம் அலய முடியாது. மூணு நாள்ல பணஞ் சேக்கோணும். எப்பிடி பண்ணலாம்னு இருக்கைலதான் இந்த ஓசனை.

கரண்ட் ஆபீஸ் தாண்டி மேடேறி அங்கிட்டு எறங்கினா எப்சி# குடோனு. 11 குடோனுக இருக்கு அங்க. அல்லாத்துலயும் கெவுர்மெண்டு அரிசி, பருப்புன்னு எதயாச்சும் மூட்ட மூட்டயா சேத்து வெச்சுருக்காங்க. குடோன பாத்துகிடற கனகானும், நடையனும் வெள்ளிங்கிரிக்கு பழக்கமானவிகதான். வாரம் ஒருக்க மாட்டாஸ்பத்திரில குடுக்கற டபிள் ஸ்டாங் மருந்த அரிசி மாவுல வெச்சு உருட்டி உருட்டி 11 குடோன்லயும் அங்கங்க வெப்பாங்க. ராத்திரிக்கி வெச்சுட்டு போனா காலைல பாக்கும்போது எப்பிடியும் ஒரு 100 எலியாச்சும் செத்துக் கெடக்கும். மருந்து வெச்சு செத்த எலின்னா மொதலப்பண்ணைல எடுக்க மாட்டாங்க. மொதலைகளுக்கு ஒண்ணு கிடக்க ஓன்ணு ஆயிருச்ச்சுன்னா.... வெள்ளிங்கிரியும் இதுநா வரைக்கும் இந்த மாதிரி நெனச்சதே இல்ல. இப்பொ கையாலகாத்தனத்துனாலயும், காந்திராசு நாக்கு மேல பல்லப் போட்டு பேசிட்டதாலயும் வேற வழியில்லாம நடையன் கிட்டப் போயி பேசி ராத்திரிக்கு மருந்து வெச்சுட்டு வந்தான். மக்கா நா காலைல பத்து மணிக்கெல்லாம் குடோனுக்குப் போயிட்டான். எரணூரு எலி தேறுச்சு. நேரா அமராவதிக்கு பத்தா நெம்பர் பஸ்ல ஏறிட்டான். இவன் அடிக்கடி வாரவந்தானேன்னு பாரஸ்ட் ஆபீசர் தண்டபாணியும் 3 ருவா மேனிக்கி கணக்குப் போட்டு 600 ருவா குடுத்து வவுச்சர் வாங்கிகிட்டாரு. கைநாட்டு வெக்கைல வெள்ளிங்கிரிக்கு நடுக்கம்.

'என்ரா கை இந்த நடுங்கு நடுங்குது? மேலுக்கு சொகமில்லையா? இன்னம் கால் சரியாகலையா?'

'அதெல்லம் இல்லிங்கய்யா... மூட்டய தூக்கீட்டு வந்ததுல கொஞ்சம் சோந்து போச்சு...அதான்...'

'இருக்கும்.. இருக்கும்... நீயும் பாவம் 6 மாசமா படுத்துட்டியா? இரு டீ சாப்ட்டு போவியாமா?... டேய் தம்பி ரெண்டு பால்டீ சொல்லு...'

டீயக் குடிச்சுபுட்டு கெளம்பீட்டான். வார வழியெல்லாம் எதயோ ஒசிச்சுக்கிட்டே வந்தான். சந்தப்பேட்ட கிட்ட எறங்குனதும் நேரா மண்டிக்குப் போயி காந்திராசப் பாத்து 600 ருவாயாயும் குடுத்துப்போட்டு ரசீது வாங்கிகிட்டான். அவுனும் பெரிய மனசு பண்ணி, வட்டியக் கொறச்சுக் கணக்கை பைசல் பண்ணுனது வெள்ளிங்கிரிக்கு கொஞ்சம் நிம்மதியா இருந்துது.

'தப்ப நெனச்சுகிடாத வெள்ளிங்கிரி, எனக்கு இங்கிட்டு கொஞ்சம் மொடை...அதான் கொஞ்சம் வெரசாப் பேசீட்டேன்... நாகம்மா கிட்டயும் சொல்லீரு...'

'பரவாயில்லண்ணே... என் நெலம இப்பிடி ஆகிப் போச்சு...'

'செரி செரி.... பணம் வேணுமின்னா அடுத்தா வாரங் கேளு...தாரேன்...'

'செரிங்கண்ணே...தேவைன்னா கேக்குறேன்...'

வீட்டுக்கு வந்து நாகம்மா கிட்டடும், செந்திலு கிட்டயும் கடன் பைசல் பண்ணுனத சொன்னான். ஆனா எப்பிடின்னு சொல்லல. வெகு நாளைக்கப்பறம் மூணு பேரும் ஒரு நிம்மதியோட சாப்ட்டு படுத்தாங்க. ஆனா மனசு ஒளச்சலாவே இருந்துது வெள்ளிங்கிரிக்கு. ராத்திரி ஒரு மணி இருக்கும். மொள்ள எந்திரிச்சான். கதவு நெலைக்கு மேல சொருகி வெச்சுருந்த பொட்டலத்துல எப்சி குடோன்ல இருந்து கொண்டாந்த மருந்து ஒரு நெல்லிக்கா அளவுக்கு இருந்துச்சு.

#எப்சி குடோன் - - FCI (Food Corporation of India) godown