Monday, September 8, 2008

வெள்ளிங்கிரி

என்னக்கிம் போல சூரியன் கெளக்க மொளச்சுருச்சு, கோளி கூவாமயெ. வெள்ளிங்கிரி மனசு மட்டும் இருளோன்னு இருக்கு. நேத்து வெளக்கு வெக்கைல காந்திராசு வந்து கத்தீட்டுப் போனது, அணையப்போற சிம்னி வெளக்காட்டம் மனசுக்குள்ள மினுக்கீட்டே இருக்கு. வேலை ஒண்ணும் ஓடல. காந்திராசயும் தப்பு சொல்ல முடியாது. அவன் வட்டிக்குப் பணம் குடுக்கறவன். தருமம் பாத்தா அவன்ற கைக்காசு போயிரும். வெள்ளிங்கிரி நெலம அவனுக்கும் தெரியாம இல்ல. இப்பொத்தான் கால் செரியாயிட்டு வருது. குச்சி இல்லாம நடக்க ஆரம்பிச்சுருக்கான். இனிமேத்தான் ரெண்டு பக்கம் சோலிக்குப் போய் நாலு காசு பாக்கணும். ரூவா 550 குடுத்கு மாசம் எட்டாச்சு. வட்டியே குடுக்க முடியாதவன் அசலுக்கு எங்கிட்டு போவான். இம்புட்டு நாளு கந்திராசு சும்மா இருந்ததே பெரிய விசயம். அவுனுக்கு என்ன நெருக்கடியோ, நேத்து வந்து அந்த கத்து கத்தித் தீத்துட்டான். வெள்ளிங்கிரிக்கும் அவன் சம்சாரத்துக்கும், பய செந்திலுக்கும் ரொம்ப கஸ்டமாயிருச்சு.

'அப்பா...நா இஸ்கோல விட்டு நின்னுக்கிடறேன்... குருசாமி கோட மண்டிக்குப் போயி மூட்ட தூக்குறேன் இல்லாட்டி செக்குல போயி புண்ணாக்காச்சும் அள்ளிப் போட்டுட்டு வாரேன்... உன்னியப் பாக்க நெம்ப சங்கட்டமா இருக்கு'

'ம்க்கும்ம்ம்...பெரிய மனுசன் சொல்லீட்டான்... போடா போய் படிப்பப் பாரு ஒளுங்கா... வேலைக்குப் போறானாமா... மருக்கா இதே மாரி சொன்னா வெளாசிப் போடுவேன்...ஆமா...'

'நீ சும்மா இரு கண்ணு.... எல்லாம் உங்கய்யனும் நானும் பாத்துக்குவோம்... போய் அடுத்த வாரம் பரிச்சக்கி படி...'

செந்திலுக்கு வயசு 12 ஆகுது... நல்லாப் படிச்சு இப்பொ ஏளாப்புல இருக்கான். வெள்ளிங்கிரி ஒரு சாதாரண மரமேறிதான். ஆனா தொழில்ல ரொம்ப ஊக்கமான ஆளு. ஏறுடான்னு சொல்லீட்டா போதும். பொழுதுக்குள்ள 70 தென்ன மரமாவது ஏறி, காய் பறிச்சுப் போட்டு, காஞ்ச மட்டயெல்லம் வெட்டி, வண்டுக எடுது, பன்னாடயெல்லாம் சுத்தம் பண்ணி, நல்லா கைகள விரிச்சு விட்டு, மருந்து வெச்சுன்னு சுத்தமா பண்ணான்னா மரமே பாக்க கெராப்பு வெட்டி விட்ட மாதிரி பளிச்சுன்னு இருக்கும். காத்தடிக்கைல தோப்புல சத்தமே அம்புட்டு சொகமா இருக்கும். தோபுக்காரவிகள்லாம் வெள்ளிங்கிரிதான் வாரோணுமுன்னு ரெண்டு நாள் கூட காத்திருப்பாங்க. அதும் மொத வாட்டி காய் எறக்கணும்னா வெள்ளிங்கிரிதான். ரொம்ப கைராசியான ஆளு.

மரமேற வாய்ப்பில்லாத காலத்துல நாகம்மாளக் கூட்டீட்டு வயல்ல எலி புடிக்கப் போவான். அவென் மூக்கு இருக்குதே, வயல்ல எறங்கினதுமே வளைக எங்கெங்க இருக்குதுன்னு ஒரு நெப்பு தெரிஞ்சுரும். கடப்பாரையப் போட்டான்ன அங்க வளை இருக்கும், நாலு எலியாவது இருக்கும். இவன் இங்கிட்டு தோண்டி வளையோட வாய தொறக்கரதுக்குள்ள நாகம்மா அங்கிட்டு வளையோட மறு வாசல்ல சாக்குப் பையக் கட்டி, கல்லுக வெச்சு, கவுறோட ரெடியா இருப்பா. இவன் வளையோட வாய்ல கொஞ்சம் வக்கிபில்லு போட்டு கொளுத்தி விட்டு, பொக வளைக்குள்ள போறாப்டி விசிறி விடுவான். எலியெல்லாம் மூச்சு முட்டிப் போயி ம்று வாசல் வழியா வெளிய வரும். கணக்கா சாக்குகுள்ளார போய் மாட்டிக்கும். அம்புட்டுதேன். சாக்கு வாயக் கட்டிர வேண்டியதுதேன். கொறஞ்சது ஒரு 150 எலியாச்சும் புடிச்சரலாம். வயல் எலின்ன்ன சும்மா பெருச்சாளி கணக்கா திமுக்குன்னு இருக்கும். ஒண்ணொண்ணும் முக்காக் கிலோவாச்சும் இருக்கும். அமராவதி மொதலப்பண்ணைக்கி கொண்டு போனா எலிக்கு மூணு ருவான்னு சொளயா 500 ரூவாக் கிட்ட கெடைக்கும். ஒரு வாரம் ஓட்டீரலாம்.

ஆனா ஆறு மாசம் முந்தி, மரமேறி சுத்தம் பண்ணைல, மேல மட்டக்குள்ள இருந்து சடக்குன்னு ஒரு பாம்பு வர, இவன் கொஞ்சம் சுதாரிக்கறதுக்குள்ள கால் கவுறு நழுவ, பிடிமானம் போயி 4 மாடி ஒசரத்துல இருந்து பொத்துனு விழுந்தான். இடுப்புக் கிட்ட நல்ல அடி. எடது மொளங்காலுக்குக் கீழ எலும்பு முறிஞ்சு போச்சு. ஆளத் தூக்கி நிறுத்தவே அர மணி நெரமாச்சு. நிக்கவே முடியல. இடுப்பு கடுக்குது. காலு வேற வீங்கிகிட்டே போகுது. அப்பிடியே அள்ளி வண்டில போட்டு ஏரிப்பாளயம் கொண்டு போய் எண்ணக் கட்டு போடறவிக வீட்ல எறக்கீட்டாங்க. புத்தூர் எண்ணக் கட்டு கட்றது கொஞ்சம் மொரட்டு வைத்தியந்தான். பல்லக் கடிச்சுட்டு வலியப் பொறுத்துக்கிட்டன் வெள்ளிங்கிரி. அதுக்கப்பறம் மூணு மாசம் படுத்த கெடையாவே இருந்தான். ஏதோ நாகம்மா தீக்குச்சி அடுக்கறது, நாலு வீட்ல ஏனங்கழுவறதுன்னு சமாளிச்சுக்கிடிருந்தா. இந்த சமயத்துலதா காந்திராசு கிட்ட கொஞ்சம் பொரட்ட வேண்டியதாப் போச்சு. அப்பறம் வெள்ளிங்கிரி கொஞ்சம் கொஞ்சமா தேறி, ரெண்டு மாசம் போல குச்சி வெச்சு நடந்து இப்பொதான் ஒரு மாதிரியா தாங்கித் தாங்கி நடக்கறான். நடையே மாறிப் போச்சு. பழய மாதிரி மரமேற முடியுமான்னெல்லம் சந்தேகந்தான்.

இப்பொ காந்திராசு வேற சத்தம் போட்டதுல மனசொடஞ்சு போயிட்டான். திருப்பிக் குடுக்க ஒணத்தி இல்லாதவன் என்ன இதுக்கு கை நீட்டி வாங்கோணும்னு பேசீட்டான். அந்த வார்த்தை சீரணமே ஆகல. திடீர்னு ஒரு ஓசன வந்துச்சு. மறுக்கா எலி புடிச்சா என்ன? ஆனா நாகம்மாள இழுத்துக்கிட்டு காடு மேடெல்லாம் அலய முடியாது. மூணு நாள்ல பணஞ் சேக்கோணும். எப்பிடி பண்ணலாம்னு இருக்கைலதான் இந்த ஓசனை.

கரண்ட் ஆபீஸ் தாண்டி மேடேறி அங்கிட்டு எறங்கினா எப்சி# குடோனு. 11 குடோனுக இருக்கு அங்க. அல்லாத்துலயும் கெவுர்மெண்டு அரிசி, பருப்புன்னு எதயாச்சும் மூட்ட மூட்டயா சேத்து வெச்சுருக்காங்க. குடோன பாத்துகிடற கனகானும், நடையனும் வெள்ளிங்கிரிக்கு பழக்கமானவிகதான். வாரம் ஒருக்க மாட்டாஸ்பத்திரில குடுக்கற டபிள் ஸ்டாங் மருந்த அரிசி மாவுல வெச்சு உருட்டி உருட்டி 11 குடோன்லயும் அங்கங்க வெப்பாங்க. ராத்திரிக்கி வெச்சுட்டு போனா காலைல பாக்கும்போது எப்பிடியும் ஒரு 100 எலியாச்சும் செத்துக் கெடக்கும். மருந்து வெச்சு செத்த எலின்னா மொதலப்பண்ணைல எடுக்க மாட்டாங்க. மொதலைகளுக்கு ஒண்ணு கிடக்க ஓன்ணு ஆயிருச்ச்சுன்னா.... வெள்ளிங்கிரியும் இதுநா வரைக்கும் இந்த மாதிரி நெனச்சதே இல்ல. இப்பொ கையாலகாத்தனத்துனாலயும், காந்திராசு நாக்கு மேல பல்லப் போட்டு பேசிட்டதாலயும் வேற வழியில்லாம நடையன் கிட்டப் போயி பேசி ராத்திரிக்கு மருந்து வெச்சுட்டு வந்தான். மக்கா நா காலைல பத்து மணிக்கெல்லாம் குடோனுக்குப் போயிட்டான். எரணூரு எலி தேறுச்சு. நேரா அமராவதிக்கு பத்தா நெம்பர் பஸ்ல ஏறிட்டான். இவன் அடிக்கடி வாரவந்தானேன்னு பாரஸ்ட் ஆபீசர் தண்டபாணியும் 3 ருவா மேனிக்கி கணக்குப் போட்டு 600 ருவா குடுத்து வவுச்சர் வாங்கிகிட்டாரு. கைநாட்டு வெக்கைல வெள்ளிங்கிரிக்கு நடுக்கம்.

'என்ரா கை இந்த நடுங்கு நடுங்குது? மேலுக்கு சொகமில்லையா? இன்னம் கால் சரியாகலையா?'

'அதெல்லம் இல்லிங்கய்யா... மூட்டய தூக்கீட்டு வந்ததுல கொஞ்சம் சோந்து போச்சு...அதான்...'

'இருக்கும்.. இருக்கும்... நீயும் பாவம் 6 மாசமா படுத்துட்டியா? இரு டீ சாப்ட்டு போவியாமா?... டேய் தம்பி ரெண்டு பால்டீ சொல்லு...'

டீயக் குடிச்சுபுட்டு கெளம்பீட்டான். வார வழியெல்லாம் எதயோ ஒசிச்சுக்கிட்டே வந்தான். சந்தப்பேட்ட கிட்ட எறங்குனதும் நேரா மண்டிக்குப் போயி காந்திராசப் பாத்து 600 ருவாயாயும் குடுத்துப்போட்டு ரசீது வாங்கிகிட்டான். அவுனும் பெரிய மனசு பண்ணி, வட்டியக் கொறச்சுக் கணக்கை பைசல் பண்ணுனது வெள்ளிங்கிரிக்கு கொஞ்சம் நிம்மதியா இருந்துது.

'தப்ப நெனச்சுகிடாத வெள்ளிங்கிரி, எனக்கு இங்கிட்டு கொஞ்சம் மொடை...அதான் கொஞ்சம் வெரசாப் பேசீட்டேன்... நாகம்மா கிட்டயும் சொல்லீரு...'

'பரவாயில்லண்ணே... என் நெலம இப்பிடி ஆகிப் போச்சு...'

'செரி செரி.... பணம் வேணுமின்னா அடுத்தா வாரங் கேளு...தாரேன்...'

'செரிங்கண்ணே...தேவைன்னா கேக்குறேன்...'

வீட்டுக்கு வந்து நாகம்மா கிட்டடும், செந்திலு கிட்டயும் கடன் பைசல் பண்ணுனத சொன்னான். ஆனா எப்பிடின்னு சொல்லல. வெகு நாளைக்கப்பறம் மூணு பேரும் ஒரு நிம்மதியோட சாப்ட்டு படுத்தாங்க. ஆனா மனசு ஒளச்சலாவே இருந்துது வெள்ளிங்கிரிக்கு. ராத்திரி ஒரு மணி இருக்கும். மொள்ள எந்திரிச்சான். கதவு நெலைக்கு மேல சொருகி வெச்சுருந்த பொட்டலத்துல எப்சி குடோன்ல இருந்து கொண்டாந்த மருந்து ஒரு நெல்லிக்கா அளவுக்கு இருந்துச்சு.

#எப்சி குடோன் - - FCI (Food Corporation of India) godown

21 பேர் என்ன நெனைக்கிறாங்கன்னா..:

பழமைபேசி said...

படப்பு வாசனை மட்டுந்தான் புடுச்சு இருக்கேன்... நல்லா இருக்கு..... ப்டப்ப உங்குறதுக்கு மறுபடியும் காலைல வருவேன்....

பழமைபேசி said...

நாட்டுல வளர்ச்சின்னு பேசிட்டு இருக்குற இந்த நேரத்துல இன்னமும் நாப்பது சதம் பேருக்கு இதான் நெலமை.

ஊர் வாசம் நல்லாவே உங்க நடைல தெறிக்குது..... நாம இப்படியே அப்ப அப்ப எழுதி வெக்கனும். எதிர் காலத்துல நமக்கே கூட பிரயோசனமா இருக்கும்.

பழமைபேசி said...

//
சாமி என்னமோ தெரியல...ஏதோ டெலிபதின்னு நெனக்கறேன்... நேத்து நானும் ஒரு கத எழுத ஆரம்பிச்சேன்... நீங்க ஒண்ணு போட்டுட்டீங்க.. எனக்கு இதுதான் மொத கத...இது வர எழுதினதில்ல... கொஞ்ச நாளா யோசிச்சு எழுதிட்டு இன்னிக்கு போட்டுட்டேன்.. படிச்சு உங்க கருத்த சொல்லுங்க.
//

மகேசு, இப்ப எல்லாம் அந்த மண்வாசனை மருவிட்டே இருக்கு. அதுக்குப் பல காரணங்கள். ஆகவே, நாம அந்த வட்டார வழக்குல இந்த மாதிரி நிறயப் பதியனும்.
மறந்து போன பல சொல்லுகளை நினைவு படுத்தி இருக்கீங்க...... தொடர்ந்து எழுதுங்க.... நானும் செய்யுறேன்.

புதுகை.அப்துல்லா said...

உங்களோட போன பதிவுல நானும்,பரிசலும் போட்ட பின்னூட்டத்துக்கு நீங்க பதில் குடுக்காததால இந்த பதிவில் இருந்து வெளிநடப்பு செய்கிறேன். :))

Mahesh said...

@ அப்துல்லா :

தப்புதாண்ணே..... எப்பிடியோ விட்டுப் போச்சு.... நீங்க எவ்வளவு நல்லவரு வல்லவரு... உங்கள மாதிரி நண்பர்க தர ஊக்கத்துலதான் நானெல்லாம் எளுதி கிளிச்சுக்கிட்டுருக்கேன்... நீங்களும் வெளிநடப்பு செஞ்ச.... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்......வேணாம் வேணாம்....அளுதுருவேன்.... என்னண்ணே 'கன்னி முயற்சி' எப்பிடி இருக்கு? கொஞ்சமாச்சும் எழுத வருதா??

ஜோசப் பால்ராஜ் said...

லதானந்த் மாமவுக்கு அப்றம் கொங்கு வாசனை வீசுற எழுத்து இங்கத்தான் கிடக்கு. நெம்ப சந்தோசம். நல்லா கதை எழுதியிருக்கீங்க. அந்த வெள்ளங்கிரி மவன் செந்திலுக்குதானே இட ஒதுக்கீடு உதவனும்? வெள்ளங்கிரிக்கு தெரியுமா அப்டி ஒரு இடஒதுக்கீடு இருக்குன்னு? எய்ட்ஸ் விளம்பரம், அவிங்க அவிங்களோட ஆட்சியின் சாதனைகள சொல்றதுக்குன்னு பல கோடி அரசு பணத்த செலவு பண்றாய்ங்கள்ல? ஏன் இட ஒதுக்கீட்ட பத்தி கிராமங்கள்ல எடுத்துச் சொல்லி ஏழை புள்ளைங்க தொடர்ந்து படிக்க உதவ கூடாது?

Mahesh said...

@ பழமைபேசி :

நன்றி... இன்னும் உங்களை மாதிரியெல்லாம் இன்னும் இயல்பா, வழக்கு மாறாம எழுத இன்னும் மெனக்கெடணும்னு நெனைக்கறேன்.... இது என்னோட முதல் முயற்சி... எனக்கு அவ்வளவா திருப்தி இல்ல...ஏன்னா ரொம்ப புதுசான கருன்னு சொல்ல முடியாது, களம் வேணும்னா புதுசா இருக்கலாம் (அதாவது நான் அறிஞ்ச வரைக்கும்) மத்தபடி சாதாரண கதைதான்னு நெனக்கறேன்....என்னால முடிஞ்ச அளவுக்கு கதயோட ஒட்டம் கெட்டுப்போகாம எழுத முயற்சி பண்ணேன்... ஏதாவது குறைகள கவனிச்சீங்கன்னா சொல்லுங்க... என்ன சொல்றீங்க?

புதுகை.அப்துல்லா said...

மகேஷ்! வேலைகளுக்கு இடையே உங்க பதிவைப் படித்ததால் விரிவாக பின்னூட்டம் இடமுடியாது சும்மா டமாசுக்கு போட்ட பின்னூட்டம்தான் முதல் பின்னூட்டம்.சீரியசா எடுத்துக்கவேண்டாம்.

புதுகை.அப்துல்லா said...

என்னண்ணே 'கன்னி முயற்சி' எப்பிடி இருக்கு?
//

ஜோசப் அண்ணே சொன்னமாதிரி கொங்கு வாசனை பிரமாதம். ஆமா நல்லாயிருக்கான்னு என்னையப் பாத்து கேக்குறீக? நானே ஓரு ப்ரீ.கே.ஜி. எங்கிட்ட போயி....நல்ல ஆளுயா நீரு ;)

குடுகுடுப்பை said...

//ஜோசப் அண்ணே சொன்னமாதிரி கொங்கு வாசனை பிரமாதம். ஆமா நல்லாயிருக்கான்னு என்னையப் பாத்து கேக்குறீக? நானே ஓரு ப்ரீ.கே.ஜி. எங்கிட்ட போயி....நல்ல ஆளுயா நீரு ;)//

நாங்க என்னத்த சொல்றது

பழமைபேசி said...

//இது என்னோட முதல் முயற்சி... எனக்கு அவ்வளவா திருப்தி இல்ல...
//
அப்பிடியெல்லாம் நினைக்காதீங்க..... நல்லா வந்து இருக்கு..... எழுத எழுத, அந்த நடை நல்லா வரும்.... எழுதிக்கிட்டே இருங்க....

//ஏதாவது குறைகள கவனிச்சீங்கன்னா சொல்லுங்க... என்ன சொல்றீங்க?//

எழுதும்போது, மண்ணுல இருந்து ஆகாசத்துக்குப் போகோனும், அப்புறம் ஆகாசத்துல பறந்துட்டு மண்ணுக்கு வரோனும். அவ்வளவு தான்....

வெண்பூ said...

அருமை மகேஷ்... அற்புதமான நடை.

Mahesh said...

@ அப்துல்லா :

என்னய நீங்க கலாய்க்கறதும், நீங்க என்னய கலாய்க்கறதும்.... ஒரே வெளாட்டுத்தான் போங்க !!!

Mahesh said...

@ ஜோசஃப் :

வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி !!! நீங்க சொல்றது வாஸ்தவந்தான்.... ஆனா இந்த விசயத்துல நாம எல்லோருமே ஒரு கையாலாகாத்தனத்தோடதான் இருக்கோம்.... :(

Mahesh said...

@ குடுகுடுப்பை :

அப்பாடா... நம்ம கடைக்கு நல்ல காலம் பொறந்துருச்சுடோய்....

Mahesh said...

@ வெண்பூ :

வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி..... அடிக்கடி வந்து போங்க...

Mahesh said...

@ பழமைபேசி :

நீங்க சொல்ற அதே பேச்சுத்தான்....நீங்க தர ஊக்கத்துலதான் வண்டி ஓடுது :))

பரிசல்காரன் said...

கதையை விடுங்க..

உங்க மின்னஞ்சல்கள் மூலமா உங்க ஆங்கில அறிவை தெரிஞ்சவன் அப்படிங்கற முறைல சொல்றேன்..

நீங்க இப்படி வட்டார வழக்குல வெளுத்துக் கட்டியிருக்கறது ஆச்சர்யமா இருக்கு சாரே!

தூள்!

கிரி said...

மகேஷ் நீங்க கோவையா :-)

உங்களுக்குள்ள இப்படி ஒரு கதை திறமையா !! வாழ்த்துக்கள். க்ளோபஸ் மட்டும் தான் பார்ப்பீங்கன்னு நினைத்தேன் :-))))

Mahesh said...

@ பரிசல் :

மிக்க நன்றி !! எல்லாரும் எழுதறத பாத்துட்டு எழுத வந்தவந்தான் நானும். ஆனா எழுத ஆரம்பிச்சப்பறம் ஓட்டம் தன்னால வந்தது எனக்கே பெரிய ஆச்சரியம். உங்களைப் போல ஆட்களோட ஊக்குவிப்பும் ஒரு முக்கிய காரணம்.

Mahesh said...

@ கிரி :

ஆமா கிரி....கோவையேதான்...உடுமலைப்பேட்டை....

க்ளோபஸையே பாத்து போரடிச்சதாலதான் இதுமாதிரி ventilation வேண்டியிருக்கு...