Sunday, August 17, 2008

மொளச்சு வரும்போது....1

முன்னுரை:

ரொம்ப ரொம்ப ரொம்ப நெருங்கிய ஃப்ரெண்ட் கேட்டுக்கிட்டதுக்காக இந்த பதிவு தொடர். சின்ன வயசுல நடந்த பல நிகழ்வுகள அவுங்க கிட்ட பகிர்ந்துகிட்டதுண்டு. அதுல சிலதுகள அடிக்கடி ஞாபகம் வந்து கிச்சு கிச்சு மூட்டும்னு பல தடவை சொல்லியிருக்காங்க. இப்பொதான் ப்ளாக்னு ஒண்ணு ஆரம்பிச்சுட்டியே, அது மாதிரி நிகழ்வுகளயெல்லாம் பதிவுகளா போட்டா என்னன்னும் கேட்டாங்க. அதனால இந்த தொடர் கிறுக்கல்கள் அவங்களுக்கு சமர்ப்பணம்.

ஆரம்பிக்கலாமா...

உடுமலப்பேட்டைல இஸ்கோல் படிக்கும்போது, எனக்கு என் ஃப்ரெண்டுகள விட என் அண்ணனோட ஃப்ரெண்டுகதான் அதிகம் பழக்கம். சாயங்காலம் நேதாஜி க்ரௌண்டுக்கு விளையாட போகும்போது கூட அவுங்க கூடத்தான் போறது. இருக்கிறதுலயே சின்ன பையன்கிறதுனால பல சலுகைகள் கிடைக்கும். கிரிக்கெட் வெளயாண்டா மொத பேட்டிங் எனக்குத்தான். பந்து பொறுக்கவும் ரொம்பவெல்லாம் ஓட விட மாட்டாங்க. ஏதாவது திங்க கொண்டு வந்தாலும் எனக்குதான் மொத. அதுலயும் சாரி மாஸ்டர் வீட்டு பசங்களை குறிப்பிட்டு சொல்லணும். நிறைய கிண்டல் பண்ணினாலும் ரொம்ப அன்பா இருப்பாங்க. (பின்னால நான் டெல்லி போனபோது கூட அவுங்க கூடத்தான் அவுங்க ரூம்ல 1 வருஷம் போல இருந்தேன்)

அப்பப்ப என் க்ளாஸ்மேட்டுக கூடவும் வெளயாட போகறதுண்டு. அதுவும் முழு பரீட்சை லீவு விட்டாச்சுன்னா காலங்காத்தாலயே க்ரௌண்டுல ஆஜர் ஆயிடுவோம். (ஸ்கூல் நாள்ல கூட அவ்வளவு சீக்கிரம் எழுந்திரிக்க மாட்டோம். எதாவது பாட்டு வாங்கித்தான் எழுந்திருக்கறது) அப்பறம் முட்டிக்கால் வரைக்கும் புழுதி ஏறி, கப கபன்னு பசி வரும்போதுதான் வீட்டு நெனப்பே வரும். திரும்பி போன ஒடனே எங்கெல்லாம் அடி விழும்னு தெரியாது, ஆனா சகட்டுமேனிக்கு விழும். அதப் பத்தியெல்லாம் யாருக்கு கவலை? குளிச்சு சாப்டுட்டு எப்படா மணி 3 ஆகும்னு பாத்து, 3 அடிச்சவுடனே, பந்தையோ, சைக்கிள் டயரயோ, பட்டமோ, தென்ன மட்டயோ (பேட்டாமா) எடுத்துகிட்டு மறுபடியும் க்ரௌண்டுக்கு போனா, நம்ம கை காலயே யாராவது தொட்டு காமிச்சு இங்கதான் இருக்குன்னு சொல்ற வரைக்கும் இருட்ன பெறகு கிளம்புவோம். மறுபடி அடி...திட்டு...இதெல்லாம் சகஜந்தானே.

இதுல முக்கியமான் ஒரு வெளயாட்டு (!!) ஐஸ் நம்பர். சம்மர்ல கோர்ட்டும் லீவு. நல்ல பெரிய கேம்பஸ் வேற. ஒளிஞ்சு வெளயாட தோதான எடம். மரம், தண்ணித்தொட்டி, கக்கூஸ், அட்டபொட்டின்னு எதுக்குள்ள வேணா ஒளிஞ்சுக்கலாம். ரெண்டே நாள்தான்...எல்லா எடமும் எல்லாருக்கும் தெரிஞ்சு போனதும் கோர்ட்ட விட்ருவோம். பக்கத்துலயே சப் ஜெயில். எல்லா வானரங்களும் அங்க தாவிருவோம். சப் ஜெயில்ல புளிய மரங்க வரிசையா நெறய இருக்கும். சம்மர்ல அதுக வேற காச்சு ரெடியா இருக்கும். குத்தகைக்காரங்க வந்து புளியம் பழங்கள உலுக்கி எடுத்துகிட்டு போன பெறகு, காய்க நெறய இருக்கும். எவனோ ஒருத்தன் அவுங்க வீட்ல புளியங்கா சட்னி அரைச்சத பெருமயா சொல்ல, நாமளே ஏன் பண்ணக் கூடாதுன்னு விவாதிச்சு, ப்ளான் பண்ணோம். அதாவது, ஒவ்வொருத்தனும் ஒவ்வொரு சாமான் கொண்டு வரணும்னு. பெருசா ஒண்ணுமில்ல. உப்பும் பச்ச மொளகாயுந்தான்.

இதுக்கு காலைல இருந்தே, அம்மா எப்பொ அடுக்களைய விட்டு நகருவாங்கன்னு பாத்து, படக்குன்னு இவ்வளவு கல் உப்போ, மொளகாயோ எடுத்து ட்ரவுசர் பாக்கெட்ல போட்டுக்கறது. இதுல ஒருத்தன் உப்ப எடுத்து போட்டுக்கிட்டு மொட்டு வெச்ச டைனசார் மாதிரி (குட்டி போட்ட பூனைன்னு சொல்றது அலுத்துப் போச்சு)அங்கிட்டும் இங்கிட்டும் ஒலாத்தி திருட்டு முழி முழிக்க, அவனோட அக்கா பாத்து என்னடா சங்கதின்னு கேக்க, இவன் ட்ர்வுசர்லயே ஒண்ணுக்கிருக்க, உப்போட உப்பா எல்லாம் கறஞ்சு போச்சு. சரி...இப்போ உப்பு மொளகாயெல்லாம் வந்து சேந்ததும், கொஞ்சம் புளியங்காய அடிச்சு கொண்டார ஒரு டீம் போகும். சட்னி அரைக்கணுமே...அதுக்கு என்ன பண்றது? எடந்தேடி அலஞ்சா... வாகா ஒண்ணு கண்ல பட்டுச்சு. அந்த சப் ஜெயில்ல ஒரு புள்ளயார் கோவில் இருக்கு. புது செல வெச்சுட்டு, பழய செலய ஒரு ஓரமா வேப்ப மரத்துல சாச்சு வெச்சுருந்தாங்க. ஆஹா...சரியான எடம்னு, புள்ளயார குப்பறப் போட்டு, முதுகுல எல்லா ஐட்டத்தையும் வெச்சு, மூஞ்சூரால நல்லா மேல கீழ மசாலா அரைக்கிற மாதிரி அரைச்சு, எடுத்து சாப்டா...அட அட அட பழனி பஞ்சாமிர்தம் தோத்துது.... அம்புட்டு டேஸ்ட்.... எக்கச் சக்கமா தின்னு அவனவனுக்கு வாய்ல புண்ணு, வயித்துல புண்ணுன்னு நாலு நாள் அல்லாடுனது தனி கதை. இதுல வேற நாக்கு பல்லெல்லாம் கூசிக்கிட்டு இருக்கும். வீட்ல சுள்ளுன்னு புளிக் கொழம்பு வெச்சிருப்பாங்க. வேண்டாம்னுஞ் சொல்ல முடியாது... திங்கவும் முடியாது.... மூஞ்சி கோணற கோணல பாக்க சகிக்காது. போட்டோ புடிச்சு ஆனந்த விகடன் அட்ட படமா போடலாம்.

இன்னும் மொளைப்பொம்....


21 பேர் என்ன நெனைக்கிறாங்கன்னா..:

ஜோசப் பால்ராஜ் said...

அருமையான அனுபவ பதிவு..
நீங்க ஏன் இவ்வளவு நாள் எழுதாம இருந்தீங்க? அடிச்சு பட்டைய கிளப்புங்க சாரே.

Mahesh said...

@ ஜோசப்: அடடா.... நன்றி அண்ணே.... உங்களுக்கு ரொம்ப பரந்த மனசு....

அணிலன் said...

படிக்கும்போதே பல் கூசுது....ஆரம்பமே அமர்க்களமா இருக்கு....பதிவுச் சேவை தொடரட்டும்...

பி.கு.: மத்தவங்கன்னா இதோட விட்ரலாம்...ஆனா நம்ம ஏரியா ஆச்சே....உங்களுக்கு புரியும்...அதனாலே கோயம்புத்தூர் லொள்ளு கொஞ்சம் பண்ண தப்பில்லையே?.....உடுமலை ஊர் எப்படி உருவாச்சு தெரியுமா....? ;-)

Mahesh said...

@ அணிலன் :

அய்யா வாங்க.... கொங்கு = லொள்ளு .... அடிங்க அடிங்க...

அணிலன் said...

கோயம்புத்தூர்-மதுரை பஸ் பயணிகளின் இயற்கை உபாதை வெளிப்பட முதல் பஸ் ஒரு இடத்திலே நின்னுது. அத பார்த்து அடுத்த பஸ் நின்னுது...அட நாலு பேர் சேர்ந்தாப்ல ஒரு 10 நிமிஷம் நிக்கிறாங்களே, வியாபாரம் பார்க்கலாம்ன்னு பக்கத்து கிராமத்துல இருக்க ஒருத்தன் ஒரு சைக்கிள தள்ளிகிட்டு வந்து கேன்ல டீ சப்ளை பண்ண ஆரம்பிச்சான்...அட இங்க கூட டீ கிடக்குதே...கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கலாம்ன்னு டிரைவர் எல்லாம் வண்டிய நிறுத்த ஆரம்பிச்சாங்க....வண்டி பாத்து நிமிஷம் நின்னாலே இவ்ளோ வியாபாரம் ஆகுதே, நாலு பெஞ்சை போட்ட இன்னும் கொஞ்சம் காசு பார்க்கலாம்ன்னு டீ சப்ளை பண்றவன் ஒரு சின்ன டீக்கடை போட்டான்...அத பார்த்த இன்னொருத்தன் ஒரு ஹோட்டல் போட்டான்.. அட பத்து நிமிஷம் நின்ன வண்டி அரை மணி நேரம் நிற்க....மக்கள் எல்லாம் இருட்டுல நிக்கிறாங்கலேன்னு ஒரு சோடியம் லைட் அரசாங்கம் போட்டுச்சு....பார்ரா...லைட்...ஹோட்டல்..கடைன்னு எப்பவும் வசதியா இருக்கேன்னு அந்த பக்கம் நாலு பேரு குடிசை போட்டான்....இப்பிடியே படிப்படியா படையப்பா மாதிரி வளர்ந்த ஊர் எது தெரியுமா?....ஆனா எவ்ளோ வளர்ந்தாலும் பழச மறக்காம இன்னும் மக்கள் கோயம்புத்தூர்-மதுரை பஸ்ல போனா..........

சாரி....ஓவர் லொல்லாயிருச்சோ!!!

Mahesh said...

@ அணிலன் :

உடுமலை ரொம்பவே என்டர்ப்ரைசிங்கான ஊருங்கறதை எவ்வளவு அழகா சொல்லிட்டீங்க....

பரிசல்காரன் said...

தலைவா....

ரொம்ப ஜோரா எழுதறீங்க!!

நேதாஜி க்ரவுண்ட்ல கல்லு பொறுக்கற நீங்களும் வந்தீங்களா??

டெல்லீல முகுந்தன் கூடவா தங்குனீங்க?

சாரி மாஸ்டரும், எங்கப்பாவும் கேரம் போர்டு வெளையாடினா ஒரு கேமுக்கு (29 பாய்ண்ட்) 2 நாளா விளையாடுவாங்களாம்!!

உங்க பதிவையெல்லாம் படிக்கறப்போ அவ்ளோ சந்தோஷமாயிருக்கும் நண்பா...!

You're coming closer to me!!!

Mahesh said...

@ பரிசல்:

நன்றி... வசிஷ்டர் வாயால ப்ரம்மரிஷி.... அப்பொ இனிமே பதிவு போட்டு தாக்கலாங்கறீங்க.....

ஆமா... முகுந்தன் கூடத்தான் தங்கி இருந்தேன்.. அவர் இப்பொ யூ.எஸ்ல ஃபீனிக்ஸ்ல இருக்காரு. அப்பொ உங்களுக்கு கோபு-வையும் நல்லா தெரிஞ்சுருக்கணுமே...

Mahesh said...

@ பரிசல்:

29 பாயிண்டுக்கு 2 நாளா ? நாங்கள்ளாம் ஸ்ட்ரைக்கர் எடுத்தா செஞ்சுரிதான்... ஹி ஹி :D

புதுகை.அப்துல்லா said...

// தென்ன மட்டயோ (பேட்டாமா)//

நினைத்து இரசித்துச் சிரித்து மகிழ்ந்தேன்

புதுகை.அப்துல்லா said...

மறுபடி அடி...திட்டு...இதெல்லாம் சகஜந்தானே.
//

திரும்பத் திரும்ப அடிய‌ வாங்கிட்டு கொஞ்சமும் அசராம அவ்வளவு நல்லவய்ங்களா இருந்துருக்கோம் :)

புதுகை.அப்துல்லா said...

பெருசா ஒண்ணுமில்ல. உப்பும் பச்ச மொளகாயுந்தான்.
//

இதே மாதி நாங்களும் எல்லாம் எடுத்துகிட்டு போய் தண்ணிய மட்டும் மறந்து அப்புறம் நாக்கு எரிச்சலுக்கு குடிக்க தண்ணி இல்லாம நாய் மாதிரி நாக்க தொங்கப் போட்டுக்கிட்டே வீட்டுக்கு வந்தோம்

புதுகை.அப்துல்லா said...

வீட்ல சுள்ளுன்னு புளிக் கொழம்பு வெச்சிருப்பாங்க. வேண்டாம்னுஞ் சொல்ல முடியாது... திங்கவும் முடியாது....//

கரெக்டா இந்த மாதிரி டயத்துலன்னே எப்படித்தான் பண்ணுவாய்ங்களோ?

புதுகை.அப்துல்லா said...

அருமைண்ணே!அருமைண்ணே! பொதுவா யாராவது தொடர் எழுதுனா முடிக்கிற வரைக்கும் பின்னூட்டம் போட மாட்டேன்.முழுசா எழுதுனத்துக்கு அப்புறம் க‌டைசி பதிவுலதான் கருத்து சொல்லுவேன்(நம்ப கருத்த எவன் மதிக்கிறான், அது தனி கதை). ஆனா முதல் முறையா என் கொள்கையை(?) தளர்த்தி உங்க தொடரும் பதிவுல பின்னூட்டம் போட்டுருக்கேன். அந்த அளவிற்கு அருமையா இருக்குண்ணே.

Mahesh said...

@ அப்துல்லா :

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ..

வரிக்கு வரி ரசிச்சு, நமக்காக கொள்கையெல்லாம் தளர்த்தி.... டச் பண்ணிட்டீங்கண்ணே !!!

Xavier said...

அமர்களமான ஆரம்பம்! வாழ்த்துக்கள். தினமும் எழுதுங்க.

சி தயாளன் said...

நல்லாயிருக்கு. உங்கள் எழுத்து நடை வித்தியாசமாயிருக்கு.. தொடர்ந்து எழுதுங்கள்

Mahesh said...

@ xavier :

டாங்க்ஸ் ணா !! அப்பப்பொ எட்டிப் பாருங்க.

@ டொன் லீ:

வருகைக்கு நன்றி. வாழ்த்துக்கு நன்றி, நன்றி

பழமைபேசி said...

பழமைபேசி said...
மகேசு, உடுமலைங்றதை மறுபடியும் மறுபடியும் நிரூபணம் செய்யுறீங்களே? ஆக்கப்பூர்வமா இருக்கீங்க...

இரைந்து, இரைஞ்சி ---- சிதறிக்கிடப்பது, இரைந்து (மூச்சு வாங்கி)
இறைந்து --- மனமார வேண்டுதல்

Anonymous said...

//மறுபடி அடி...திட்டு...இதெல்லாம் சகஜந்தானே.//
//உப்போட உப்பா எல்லாம் கறஞ்சு போச்சு//
மனம் விட்டு சிரித்தேன். சிறப்பாக எழுதுகிறீர்கள்.

மோகன்.

Mahesh said...

வாங்க pathivu... மொத வருகை...வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...