Showing posts with label கிச்சடி. Show all posts
Showing posts with label கிச்சடி. Show all posts

Sunday, May 9, 2010

கிச்சடி 11.05.2010

"சொறா" படத்தைப் பாக்காமயே நிறையப் பேர் நிறைய எழுதியாச்சு. நான் ஒருத்தந்தான் பாக்கின்னு நினைக்கிறேன். அது ஒரு குறையா இருக்கலாமா? நம்ம நண்பர்கள் வட்டத்துல பேசும்போது கேட்டவை:

"கமல் ஒரே படத்துல் பத்து ரோல்ல நடிச்சாரு ; விசய் பத்து படத்துல ஒரே ரோல்ல நடிக்கிறாரு (!!) "

"நல்ல வேளை.... ஒவ்வொரு படத்துலயும் வேற வேற ஹீரொயின்க... இல்லாட்டா என்ன படம் பாத்துக்கிட்டுருக்கோம்னே தெரியாது"

"இது ஒருதடவை பாக்கறதுக்கு வேட்டைக்காரன் 100 தடவை பாக்கலாம்"

"அம்பது படம் ஆயிடுச்சா? சீக்கிரம் அரசியலுக்கு இழுத்துக்கிட்டு போங்கப்பா.... அங்கயாவது வேற மாதிரி நடிக்கிறாரான்னு பாக்கலாம்"

*****************************



சிங்கப்பூரின் ரொம்பவும் எதிர்பார்க்கப்பட்ட "மரினா பே சேண்ஸ்" உல்லாச/சூதாட்ட நகரம் (சிலருக்கு நரகம்) திறந்தாச்சு. (அதுலயும் அந்த டி.என்.ஏ ஏணி மாதிரி நடைபாலம்... க்ளாஸ்... அது ஒரு ஆர்கிடெக்சுரல் மார்வல்!!) சூதாடறதுக்கு க்யூவுல நின்னு என்னவோ தலைவர் படம் ரிலீஸ் முதல் ஷோ பாக்கற மாதிரி திடுதிடுன்னு ஓடறாங்க மக்கள். யார் அதிர்ஷ்டம் எப்பிடியோ? திறந்து 3 வாரம் ஆச்சு. தினமும் ஏதாவது பிரச்னைக இருந்துக்கிட்டே இருக்கு போல. "கரண்ட் இல்ல ; ஏசி நின்னு போச்சு ; லிஃப்ட்ல மாட்டிக்கிட்டாங்க ; சிங்கப்பூர் இமேஜ் டேமேஜ்"ன்னு தினம் ஒரு புலம்பல். இதெல்லாம் நமக்கு சாதாரணமப்பா.




*****************************

நண்பர் ஒருத்தர் சவுதில வேலை பாக்கறார். ஊருக்கு வந்துபோக 3 மாசம் முன்னாலயே லீவு வாங்கி, டிக்கட் எல்லாம் புக் பண்ணிட்டு, கிளம்பறதுக்கு 2 நாள் முன்னால போய் ஆபீஸ்ல பாஸ்போர்ட் கேட்டிருக்காரு. பகீர் !!! பாஸ்போர்ட்டைக் காணோமாம் !! மறுநாளும் அகப்படல. நொந்து போய், கிளம்பற அன்னிக்கு கார்த்தால போய் நானே தேடிப் பாக்கறேன்னு சொல்லி தேடியிருக்காரு. இன்னொரு பகீர் !! டேபிள் ஆடுதுன்னு டேபிள் காலுக்கு முட்டுக் குடுக்கறதுக்காக ரெண்டு பாஸ்போர்ட்டுகளை வெச்சுருக்காங்க. எப்பிடிடா இப்பிடியெல்லாம் யோசிக்கிறீங்கன்னு மனசுக்குள்ள வசவு பாடிட்டு, அடிச்சு புடிச்சு ஊர் வந்து சேந்தாச்சு. ஆனா அவங்க ரொம்ப சாதாரணமா "அதான் கிடைச்சுடுச்சுல்ல... கெளம்பு கெளம்பு காத்து வரட்டும்"னு விரட்டிட்டாங்களாம். மூளை தலைக்குள்ளதான் இருக்கா இல்லை முட்டில இருக்கான்னு புலம்பித் தள்ளிட்டாரு. ராட்சசன் உசுரு ஏழு கடல் ஏழு மலை தாண்டி ஒரு கிளி கிட்ட இருக்குங்கற மாதிரி, நம்ம உசுரு அந்த பாஸ்போர்ட். அதுவும் சவுதி மாதிரி நாட்டுல.... ம்ம்.... என்ன சொல்ல?

*****************************

ஓசில டிக்கட் கிடைச்சுதுன்னு "அயர்ன் மேன் 2" குடும்பத்தோட போனோம். காமிக் புக்கை விடவும் காமிக்கலா இருந்தது. படம் அமெரிக்காவுல ஹிட்டாம். என்னங்கடா உங்க ரசனை? டைட்டானிக், பொசைடான், ஐடி4, ஆர்மகெட்டான்ன்னு பிரமாண்ட படங்களை எடுத்த கை காயறதுக்குள்ள இது மாதிரி பேத்தல் படங்களும் எடுக்கறீங்க. அம்புட்டு பெருசா ஒரு வில்லனை டெவலப் பண்ணிட்டு பொசுக்குனு அவன் கதையை முடிச்சுட்டு, கதையை முடிக்க முடியாம.... போங்கப்பா. அடுத்த"அயர்ன் மேன்3" ஓசி டிக்கட் கிடைச்சா ....பாக்கலாம்......பாத்துட்டு இதே மாதிரி......

*****************************

Sunday, February 21, 2010

கிச்சடி 08.03.2010


மன்னிக்கணும் மக்களே.... ரொம்ப நாளாச்சு வலைப்பக்கமா வந்து. "ஏன் இன்னும் எழுதல? என்னதான் வேலைன்னாலும் ஒரு இடுகை கூட எழுத முடியாதா என்ன? எப்ப அடுத்த இடுகை வரும்னு உங்க திண்ணைலயே குத்த வெச்சு உக்காந்து முட்டி வலிக்குது. சீக்கிரம்... சீக்கிரம்.... " இப்பிடியெல்லாம் தினமும் ஏகப்பட்ட கடுதாசி, மெயில், ஃபோன் வந்ததுன்னு சொன்னா நீங்க நம்பவா போறீங்க? ஒரு 'பிரபல' பதிவன் வாழ்க்கைல இதெல்லாம் சாதாரணமப்பான்னு கவுண்டர் தட்டிக் குடுத்ததுனால போனாப் போகுதுன்னு விட்டுட்டு மறுபடி வந்தாச்சு. ம்ம்..ம்ம்.. மேல... மேல....

* * * * * * * * * * * * * * *

கொஞ்ச நாள் அசந்து மறந்து இருந்தா நாட்டுல என்னென்னமோ நடந்து போச்சு.

முதல்ல மகிழ்ச்சிகள் :

- கேபிளார் & பரிசலாரின் புத்தக வெளியீடுகள்
- கேபிளார் வழக்கம்போல தினம் 5000, 6000 ஹிட்டுனு போட்டு 8 லட்சம்
தாண்டிட்டார்
- நண்பர் அருமை அண்ணன் அப்துல்லா மூணு இடுகைகள் எழுதிட்டார்
- சிங்கை சிங்கம் "அறிவிலி ராஜேஷ்" இடுகைகளை கடுகு, ஜெ.மோ. போன்ற ஜாம்பவான்கள் பரிந்துரைத்திருக்கிறார்கள்
- பல புதிய பதிவர்கள் வருகை

எல்லாருக்கும் ஊர்ல உலகத்துல இருக்கற எல்லா சாமி மற்றும் ஆசாமிகளோட ஆசிகளும் வாழ்த்துகளும். சும்மா வெச்சுக்கோங்க.....

சில அசௌகரியங்கள் :

- பழமையார் vs வினவு குரூப்
- தண்டோரா vs வினவு குரூப்
- பரிசலாருக்கு நேர்ந்த விபத்து

எல்லாரும் இப்ப பரம சௌக்கியம்.

* * * * * * * * * * * * * * *

கதவைத் தொறந்து வெச்சா காத்து வருமா? வரும் வரும். ஆனா கேமராவை ஆன் பண்ணி வெச்சா? என்னென்னமோ வந்துது.

"நித்தமும் ஆனந்தமே" சொன்னவர் வீட்டினுள்
சத்தமின்றி யோர்கருவி வைத்து - அத்தனையும்
அம்பலம் ஏற்றிட அயராது (உ)ழைத்திட்ட
பின்புலத் தாருக்கு நன்றி.

* * * * * * * * * * * * * * *

சமீபத்துலதான் "அபியும் நானும்" டிவில பாத்தேன். சில டயலாக்குகள் அற்புதம். குறிப்பா "உனக்கு சரியான வாழ்க்கைத் துணையைத் தேடிக்கறது உன்னோட உரிமை மட்டுமில்லை; கடமையும் கூட"ன்னு பிரகாஷ்ராஜ் த்ரிஷா கிட்ட சொல்றது.... அருமை. ராதாமோகனுக்கு சுத்திப் போடணும்.

இன்னொரு படம் "The Shahshawnk Redemption". படத்தைப் பத்தியோ மார்கன் ஃப்ரீமன் நடிப்பைப் பத்தியோ, டைரக்சன், எடிட்டிங் பத்தியோ சொல்ல எனக்கு அவ்வளவு அறிவு இல்லை. வாய்ப்பு கிடைச்சா நீங்களே பாத்து அனுபவியுங்க.

நம்மாளு க்றிஸ்டஃப் வால்ட்ஸ் ஆஸ்கார் வாங்கிட்டாரு. Inglourious Bastards பத்தி நான் ரொம்ப சிலாகிச்சு எழுதும்போதே நினைச்சேன். இதெல்லாம் போய் ஊருக்குள்ள சொல்லுங்க "அண்ணன் நல்லவரு ; ம்ம்ம்ம்... வல்லவரு ; ஆஸ்காராலாஜி தெரிஞ்சவரு "ன்னு.

* * * * * * * * * * * * * * *

கீ போர்ட் கத்துக்கணும்னு ரொம்ப நாளா ஆசை. நம்ம ஆசையைப் பாத்து புல்லரிச்சுப் போன ஒரு நண்பர் "ஆஹா... அதுக்கென்ன... நானாச்சு"ன்னு சொல்லிக் குடுக்க ஆரம்பிச்சுட்டாரு. அடுத்த மாசம் "பில்ஹார்மோனிக்" ஆர்கெஸ்டிராவுல ஒரு சிம்ஃபனி பண்ணலாமான்னு யோசிச்சுக்கிட்டுருக்கேன். "ஹங்கேரில அவுக கூப்டாக ; லண்டன்ல இவுக கூப்டாக ; ஆஸ்திரியாவுல அல்லாரும் கூப்டாக" அப்பிடின்னெல்லாம் நான் பீலா உடற ஆள் கிடையாதுன்னு உங்களுக்குத் தெரியாதா என்ன?

ஆகவே, ஆன்றோர்களே சான்றோர்களே... கீ போர்ட் (அல்லது எதோ ஒண்ணு) கத்துக்க ஆசையிருந்தா உட்னே ஆரம்பிங்க. என்ன மாதிரி ஏப்ப சாப்பைகளே கத்துக்க முடியும்போது நீங்கள்லாம் ஓஹோ..... அப்பறம் நான் "தேவாரம்" கம்போஸ் பண்ண ஹங்கேரிக்கு கூட்டிக்கிட்டு போகலைன்னு வருத்தப் பட்டு பிரயோஜனம் இல்லை

* * * * * * * * * * * * * * *

Monday, November 16, 2009

கிச்சடி 16.11.2009


3 வருஷமா இழுத்தடிச்சுக்கிட்டுருந்த ப்ராஜெக்ட் போன திங்கள்கிழமை ஒருவழியா கரை சேந்துது. டீம்ல இருந்த எல்லாரும் விட்ட பெருமூச்சுல ஜெனீவால இருந்த மரங்கள்ல இருந்த இலைக அம்புட்டும் உதுந்து போச்சு. ஆனா உழைச்ச உழைப்பு வீண் போகாம ரொம்ப தொல்லை பண்ணாம, எதிர் பார்த்ததை விட ஸ்மூத்தாவே "கட்-ஓவர்" ஆனதுல ஒரு நிறைவு, சந்தோஷம். அப்பாடான்னு....சிங்கப்பூர் திரும்பியாச்சு. ஒரு மாசமா பதிவுகள் பக்கம் ரெகுலரா (!!) வரமுடியாம போச்சு. (அப்பிடியே வந்துட்டாலும்.... வந்து ஒரு கவிதை எழுதிட்டாலும்னு ஆதி முனகறது கேக்குது... இருக்கட்டும்... இருக்கட்டும்...) இனிமே ரெகுலரா வந்து போக முயற்சி பண்ணலாம்னா இன்னும் ரெண்டு வாரத்துல இந்தியாவுக்கு வெகேஷன்ல.....

ஆகவே மகாஜனங்களே.... ஜனவரி வரைக்கும் இப்ப மாதிரியே இருக்கலாம், ஜனவரிக்கு அப்பறம் இதே நிலைமை நீடிக்கலாம் அல்லது முன்னேறலாம் அல்லது இன்னும் மோசமடையலாம்... சே !! இந்த மனுஷன் ரமணன் ரொம்பவே இன்ஃப்ளூயன்ஸ் பண்றாரே !!!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


"சிறு கூடுன்னாலும் தன் வீடு"ன்னு இருக்கணும்னு, வாடகை குடுத்து கட்டுபடியாகாம, தலைகீழா நின்னு தண்ணி குடிச்சு ஒரு வீடு வாங்கி குடிபோயாச்சு. அதுவும் நான் ஜெனிவாக்கு (வழக்கம்போல) வேலை நிமித்தமா போய் திரும்பி வரதுக்குள்ள, மனைவியும் மகளும் "இவனை நம்புனா அவ்வளவுதாண்டே..."ன்னு சாமான் செட்டைத் தூக்கிக்கிட்டு வண்டி புடிச்சு வீடு மாறிப் போயிட்டாங்க. பழைய வீட்டுல இருந்து ஊருக்குப் போயிட்டு திரும்ப வரும்போது புது வீட்டுக்கு போறது த்ரில்லிங்காத்தான் இருந்தது.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

பிரபல பதிவர் மற்றும் கவிஞர் "அனுஜன்யா" அவர்கள் சென்ற வாரம் பணி நிமித்தமாக சிங்கப்பூர் வந்து 3 நாட்கள் தங்கி, பணி முடிந்து பின் தாயகம் திரும்பிச் சென்றிருக்கிறார். வயதில் அவர் மிகவும் இளையராக இருப்பதாலும், சிங்கப்பூரில் உள்ள மற்ற பதிவர்கள் மிகவும் மூத்தவர்களாக இருப்பதாலும் அன்னார் இங்கு எவரையும் சந்திக்கவில்லை. இதை "சிங்கை பதிவர் குழுமம்" மிகுந்த ஆதுரத்துடன் கண்டனம் செய்கிறது என்பதை இங்கு பதிவு செய்து கொள்கிறேன். அத்துடன் இனி அவரது ஒவ்வொரு கவிதைக்கும் விளக்கம் கேட்டே தீருவது என்ற தீர்மானமும்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சென்னை வழக்கம்போல... கடும் வெயிலுக்குப் பிறகு, வறட்சி நிவாரண நிதி வாங்கி ஏப்பம் விடலாமான்னு மஞ்சத்துண்டு போட்டுக்கிட்டு யோசிச்சுக்கிட்டு இருக்கும்போதே, வெள்ளமும் வந்தாச்சு. கோபாலபுரத்தில் வசிக்கும் குடிசைவாழ் மக்கள் கருணையுடனும், அன்புடனும் நிதிகள் பல பெற்று எல்லா நலமும் வளமும் பெற "அன்னை"யின் அருள் பெருகுவதாக.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சென்னை பதிவர் சந்திப்பு மழை காரணமா ரெண்டு முறை தள்ளி வெச்சுட்டாங்க. கலந்துக்க நினைச்சு எதிர்பார்ர்புகளோட இருந்த நிறைய புதிய பதிவர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றமா இருந்திருக்கலாம். இருந்தாலும், பதிவர்களை சந்திக்க விடாம பெய்யற மழையும் ரொம்ப தேவையா இருக்கறதால... தண்ணியெல்லாம் வடிஞ்சு கொஞ்சம் பளிச்னு ஆனபிறகு சந்திக்கலாமே. அட்டெண்டன்சும் சுமாரா இருக்கும்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

"கேபிள் சங்கர்" அவர்களோட தந்தையாரின் மறைவுக்கு அஞ்சலிகள். அன்னாரது ஆன்மா சாந்தி அடையவும், கேபிள் சங்கர் குடும்பத்தார் சோகத்திலிருந்து மீண்டு வரவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்போம். யுவகிருஷ்ணா பின்னூட்டத்தில் சொல்லியிருப்பது போல ஒரு தகப்பனின் மரணம் மிகப் பெரிய துயரம்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

Monday, October 19, 2009

கிச்சடி 19.10.2009


ஒபாமா : உலகத்துல ஒரு இடம் பாக்கி விடாம அமைதியை நிலை நாட்டிட்டார்னு "நோபல்" பரிசு குடுத்தாச்சு. 10 மாசத்துல இவ்வளவு பெரிய சாதனை பண்ண முடியும்னா இன்னும் 5 வருஷத்துல என்னென்ன சாதிப்பாரோ? அதுக்கெல்லாம் பாராட்டி குடுக்கறதுக்கு இன்னும் பெரிய பரிசா எதாவது இப்பவே பண்ணி வெச்சுக்கணும். ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் இங்கிருந்தெல்லாம் மக்கள் இனிமே சர்வ சாதாரணமா அமெரிக்கா போய் வரலாம். அதான்... அமைதிக் கொடி பட படன்னு பறக்குதே....

நண்பர்கள் கிட்ட இதைப் பத்தி சூடான விவாதம் நடக்கும்போது ஒருத்தர் சொன்னார் "அது ஒரு கமிட்டி. சில நியதிகள் வெச்சுருக்காங்க. அதுல ஒபாமா பொருந்தி வரார்னு அவங்க நினைக்கிறாங்க. குடுக்கறாங்க.... எப்பிடி குடுக்கப் போச்சு? ஏன்... எதுக்கு... இதெல்லாம் விவாதிக்க முடியாது"ன்னு சொன்னார். இருக்கலாம். ஆனா "நோபல்" பரிசு என்ன "அண்ணா" விருதா? அதுக்குன்னு ஒரு மரியாதை இல்லையா? இது வரைக்கும் அதை வாங்கினவங்களையும், அவங்களோட சாதனைகளையும் வெச்சுத்தானே அந்த விருதுக்கான தகுதியை நம்மளை மாதிரி சாதாரணமானவங்க ஒப்பீடு செய்ய முடியும்? கோஃபி அன்னான், ஆங் சென் சூ கி மாதிரி தலைவர்களும் ஒபாமாவும் ஒண்ணா? ஒத்துக்க முடியல. இந்த மாதிரி பரிசு குடுத்துட்டா அதுக்கேத்த மாதிரி நடந்துடுவார்னு சில வாதங்கள் இருக்கு. அப்பிடிப் பாத்தா பேசாம "ஒசாமா"வுக்கு குடுத்துருக்கலாம்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் : இவருக்கும் நோபல் பரிசு. ஆனா விஷயம் விருதைப் பத்தி இல்லை. அதுக்கப்பறம் அவர் குடுத்த பேட்டி பத்தி. "யார் யாரோ குப்பன் சுப்பன்லாம் எனக்கும் மெயில் அனுப்பறான். எரிச்சலா வருது"ன்னு சொல்லியிருக்கார். அய்யா, நீங்க ஒரு பெரிய விஞ்ஞானி. உங்களுக்கு இது போல விஷயமெல்லாம் தொந்தரவா இருக்கலாம். தகவல் தொடர்பு சல்லிசா இருக்கற இந்த நவீன உலகத்துல, இந்த மெயில் தொந்தரவுகளை தவிர்க்க எவ்வளவோ சுலபமான வழிகள் இருக்கு. அதுகளை பயன்படுத்தறதை விட்டுட்டு இந்த மாதிரி நிதானமில்லாம பேட்டி குடுக்கறது உங்களை மாதிரி பெரியவங்களுக்கு அழகா?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ரொமான் பொலான்ஸ்கி : சில விஷயங்கள் புரியவே மாட்டேங்குது. 1978ல இருந்து இந்த ஆள் மேல பாலியல் குற்றச்சாட்டுக்காக ஒரு சர்வதேச அரெஸ்ட் வாரெண்ட் இருக்கு. ஆனா பிடிக்க முடியலையாம். 3 வாரம் முந்தி ஸ்விஸ்ல ஸுரிக் ஃபிலிம் ஃபெஸ்டிவல்ல தலைவருக்கு "வாழ்நாள் சாதனையாளர்" விருது வழங்கும் விழாவுக்கு வரும்போது கைது பண்ணிட்டாங்களாம். போன 30 வருஷமா ஃப்ரான்சுக்கும் போலந்துக்கும் போய் வந்துகிட்டு இருக்காரு. ஸ்விஸ்ல "ஸ்டாட்"ல 20 வருஷமா இவருக்கு ஒரு சொகுசு பங்களா இருக்காம். இத்தனை வருஷமா ஸ்விஸ் "ஷெங்கன்" அமைப்புல சேராம தனியா இருந்தபோது கூட இவரைப் பிடிக்க முடியலை. இப்ப தீடீர்னு முழிச்சுக்கிட்டு பிடிச்சுட்டாங்களாம். கேக்கறவன் கேனப்பயன்னா எருமை கூட ஏரொப்பிளேன் ஓட்டும்னு கிராமத்துல சொல்லுவாங்க.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ஒரு விளம்பரம் : சைடு பார்ல நானும் ஒரு வேண்டுகோள் வெச்சு 3 மாசமாச்சு. ஒரு மெயில் கூட வரலை. விடறதாயில்லை. ரீடர்ல படிக்கறவங்களையும் அட்டாக் பண்ணலாம்னு முடிவு பண்ணிட்டேன். தேவையிருந்தா சொல்லுங்கப்பா.


"நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள். மைசூரில் உள்ள என் வீடு தற்போது வாடகைக்கு விட உத்தேசம். உங்களுக்கோ அல்லது உங்கள் நண்பர்கள் / உறவினர்களுக்கு மைசூரில் வாடகைக்கு வீடு தேவையெனில் மேலதிக விவரங்களுக்கு என்னை மின்னஞ்சலிலோ (rmaheshk@gmail.com) தொலைபேசியிலோ (+65 81275347) தொடர்பு கொள்ளவும். நன்றி."


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


!! அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள் !!

Sunday, August 30, 2009

கிச்சடி 31.08.2009



சிங்கப்பூர்ல இருந்து ஜெனீவாவுக்கு வந்த நம்ம ஆபீஸ் நண்பருக்கு உடம்பு கொஞ்சம் சரியில்லாம போச்சு. வறட்டு இருமல். ரெண்டு நாள் ஆகியும் குறையலயேன்னு ஒரு டாக்டர் கிட்ட போனோம். 1 நிமிஷம் நண்பர் சொன்னதை டாக்டர் கேட்டுட்டு 'உங்களுக்கு ரெண்டு ப்ராப்ளம் இருக்கு. தொண்டைல புண் இருக்கு... லங்ஸ் அஃபெக்ட் ஆயிருக்கு... ரேடியோ எடுக்கணும்'னார். ஏ.எம்மா எஃப்.எம்மான்னு கேக்கறதுக்குள்ள எக்ஸ்ரேக்கு ஆளைக் கூப்பிட்டார். எல்லாம் முடிஞ்சு 'ஒண்ணும் பயப்படறபடி ஒண்ணும் இல்லை'ன்னு சொல்லிட்டு 2 வாரத்துக்கு ஆன்டிபயாடிக் மாத்திரை குடுத்தார். அதுவும் 1000mg. அவ்வளவு ஸ்ட்ராங் டோஸெல்லாம் சரியான்னு தெரியல. கூடவே பில்லும் குடுத்தார். 320 ஃப்ரான்க். அடங்கப்பா.... நம்மூர்ல இதுக்கு மிஞ்சிப்போனா 350 ரூபா (8 ஃப்ராங்க்) ஆகலாம். இதுல ஃபாலோ அப் வேறயாம்... 5 நாள் கழிச்சு. போங்கடா.... நீங்களும் உங்க ஆஸ்பத்திரியும்னு குதிகால் பொடனில அடிக்க ஓடிவந்தோம்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ஸுரிக்ல இருந்து ஜெனீவாவுக்கு ரயில்ல போகும்போது படிக்கறதுக்கு எடுத்துக்கிட்ட புத்தகம் 'The Shepherd'. Frederic Forsyth எழுதிய நாவல். ஏற்கெனவே ரெண்டு தரம் படிச்சதுதான்னாலும் ரொம்ப இன்ட்ரெஸ்டிங்கா இருக்கும். உலகப் போர் சமயத்துல, கிறிஸ்துமஸ்க்கு முந்தைய சாயுங்காலம் ஒரு விமானம் கட்டுப்பாடுகளை இழந்து தவிக்கும்போது வேற ஒரு விமானம் வந்து அதை பாதுகாப்பா ஏதோ ஒரு விமானதளத்துல இறக்கி விட்டுட்டுப் போயிடும். அப்பறம்தான் தெரியும் காப்பாத்தின விமானமும் 15 வருஷத்துக்கு முன்னயே ஒரு விபத்துல சிக்கி உருத்தெரியாம எரிஞ்சுபோச்சுன்னும், அந்த விமானியும் இறந்து போயிட்டார்னும். நம்ம இந்திரா சௌந்தரராஜன் டைப் அமானுஷ்ய நாவல்னு வெச்சுக்கங்களேன்.

கொஞ்ச நேரம் கழிச்சு எதிர்ல உக்காந்திருந்தவர் மெள்ள பேச்சுக் குடுக்க ஆரம்பிச்சார். பேச்சு வாக்குல புத்தகத்தைப் பத்தியும் கேட்டார். இதிலெல்லாம் அவருக்கு நம்பிக்கை இல்லைன்னும், எனக்கு நம்பிக்கை இருக்கான்னும் கேட்டார். ஒரு சுவாரஸ்யத்துக்காக எனக்கு நம்பிக்கை உண்டுன்னு சொல்லி வெச்சேன். இன்னும் 2 மணி நேரம் ஓட்டியாகணுமே. கொஞ்ச நேரம் இதைப் பத்தியே பேசின பிறகு நான் சொன்னேன் "காப்பாத்தின விமானி நாந்தான்னு சொன்னா நீங்க நம்பவா போறீங்க?"ன்னு. கூடவே லேப்டாப் பேக்ல தொங்கிக்கிட்டுருந்த சில ஏர் ஃபோர்ஸ் லேபில்களையும் காமிச்சேன். எல்லாம் சிங்கப்பூர் ஏர் ஷோல வாங்கின டுபாக்கூர் லேபில்க. என்ன நினைச்சாரோ சட்டுனு பேசறதை நிறுத்திட்டு வெளிய வேடிக்கை பாக்க ஆரம்பிச்சுட்டார். இறங்கும்போது கூட சொல்லிக்கலை. அதுக்கப்பறம் புத்தகம் படிக்கற மூடே இல்லை. நினைச்சு நினைச்சு சிரிச்சுக்கிட்டிருந்தேன். ஒருவேளை 'இந்தப் பைத்தியம் நம்மளை கடிக்காம விட்டுதே'ன்னு அவரும் பெருமூச்சு விட்டிருக்கலாம்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

நம்மளை மாதிரி 'பிரபல' பதிவர்கள் (நம்பாட்டி போங்க.. எனக்கென்ன..) சினிமாக்களை விமர்சனம்கற பேர்ல கிழி கிழின்னு கிழிக்கிறோமாம். சினிமா உலகே கதிகலங்கி இருக்காம். தமிழ்சினிமா.காம்ல தலையங்கமே எழுதியிருக்காங்க. அடடா... யோசிச்சுப் பாத்தா...

உண்மையா இருந்தா... : ஹய்யோ... நாம எல்லாம் நிஜமாவே பிரபலம் ஆயிட்டோமா? படம் பாக்கப் போறவங்க எல்லாம் பதிவர்களோட விமர்சனத்தைப் பாத்துட்டுத்தான் போறதா வேண்டாமான்னு முடிவு பண்றாங்களா? விகடன், குமுதம் மாதிரி 75 வருஷமா வெளியாகிற பத்திரிக்கைகள்ல வர விமர்சனங்களை விட பதிவர்கள் விமர்சனத்துக்கு வேல்யூ அதிகமா? இனிமே புதுப் படம் ப்ரிவ்யூக்கு பதிவர்களுக்கு அழைப்பு வருமா? பாஸிடிவ்வா விமர்சனம் எழுதினா " ............... அவர்களின் பாராட்டைப் பெற்ற படம்"னு நாளிதழ்கள்லயும் போஸ்டர்கள்லயும் பாக்கலாமா? ஐ... ஜாலியா இருக்கே....

உண்மையா இல்லைன்னா.... : அட போங்க.... நாம இப்பிடியே 'பிரபல'மா இருந்துட்டுப் போறோம்....

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

தங்கமணி பிரபு அவர்களின் நேற்றைய இடுகைல இருந்த வீடியோவைப் பாத்த பிறகு மூச்சே நின்னுடுச்சு. தாலிபான்க கூட கொஞ்சம் பரவால்லயோன்னு தோணிடுச்சு..... இந்த அரக்கர்களுக்கு கொஞ்சமாவது மனிதாபிமானம், இரக்ககுணம் இதெல்லாம் வராதான்னு வேண்டிக்கிறதைத் தவிர வேறு வழி தெரியல....


Wednesday, June 10, 2009

கிச்சடி 13.06.2009

போன வாரம் ஒரு சொந்த வேலையா அடியேன் சென்னை விஜயம். வந்த அன்னிக்கே நண்பர் ஆதிக்கு போன் பண்ணி அட்டெண்டன்ஸ் போட்டுட்டேன். ஆச்சச்சச்சச்சரியமா சாயுங்காலம் அவரே வீட்டுக்கு வரேன்னு சொன்னார். ஆஹா... இதை விட என்ன வேணும்? தலைவர் வந்தார். வீட்டுக்குள்ள 10 நிமிஷமும் பார்க்கிங்ல 1 மணி நேரமும் பேசினோம். அவரோட ரசனைகள், எண்ண ஓட்டங்கள்... எல்லாமே ஒருவித ஆச்சரியமா இருந்தது. எல்லாத்துக்கும் மேல அவரிடம் ரொம்ப பிடிச்சது நெகடிவ் விமர்சனங்களை எந்த விதமான வெறுப்பும் இல்லாம சொல்றது. Being critical without prejudice is an art....யாரோ சொன்னது.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சிடிக்குள்ள ஒரு வேலையா சுத்திக்கிட்டுருந்தபோது அண்ணன் அப்துல்லாவையும் சந்திச்சு ஒரு சலாம் போட்டுட்டு வந்தேன். கவுண்டமணி மாதிரி "நாங்கள்லாம் பிசி.... பிசி மீன்ஸ் பிசி...."ன்னெல்லாம் அலப்பறை பண்ணாம வழக்கம் போல கலகலப்பான சந்திப்பு. கொஞ்சமே கொஞ்ச நேரம்னாலும் நிறைவா இருந்தது. அதுலயும் அவர் "ஆதி உங்க வீட்டுக்கே வந்தாரா? நீங்க பெரிய ஆளுதான்..."னு சொன்னபோது ஆதியை நெனைச்சு பெருமையா இருந்தது. If I only had a little humility, I'd be perfect - டெட் டர்னர் சொன்னது எவ்வளவு உண்மை !!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

பொருளாதாரம் சறுக்குதா சுருங்குதான்னு அனலிஸ்டுக மண்டையை ஒடச்சுக்கிட்டுருக்காங்க. ஆனா ஜவுளிக்கடைலயும், நகைக்கடைலயும் மக்கள் அலைமோதறதைப் பாத்தா தலை சுத்துது. ரியல் எஸ்டேட்காரங்க "எங்க போயிடுவீங்க? எங்க கிட்டத்தானே வந்தாகணும்..."ன்னு பல்லைக் குத்திக்கிட்டு சாவகாசமா உக்காந்திருக்காங்க. ஸ்பென்சர்லயும், சென்னை சென்டர்லயும் பார்க்கிங் கிடைக்க 1 மணி நேரம் ஆகுது. சத்யம், ஐ-நாக்ஸ் வீக் எண்ட்லயெல்லாம் ஹவுஸ் ஃபுல்லாம். பிஸ்ஸா டெலிவரி சுறுசுறுப்பா நடந்துக்கிட்டுதான் இருக்கு. மொபைல் நெட் ஒர்க் ட்ராஃபிக் அதிகமாயிருக்காம். புதுசா இன்னும் சில மொபைல் ஆபரேட்டர்க வேற.

எங்க ஏரியால இருக்கற ஒரு சிறுவர் இல்லத்துக்குப் போனபோது கேட்ட செய்தி: அந்த இல்லத்துக்கு ஐ.டி.ல வேலை செய்யற பலர் - குறிப்பா பேச்சிலர்ஸ் - கிட்ட இருந்து வர நன்கொடைகள் அறவே நின்னு போச்சாம். போன பத்திக்கும் இந்த செய்திக்கும் தொடர்பு இருக்கா? When you need to trim the corners, try not to choose left or right. Choose the wrong one.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சென்னை இன்டெர்நேஷனல் டெர்மினல். ராத்திரி 10 மணிக்கும் 2 மணிக்கும் நடுவுல கிட்டத்தட்ட ஒரு டஜன் டிபார்ச்சர்ஸ் ஏழெட்டு அரைவல்ஸ். பயணிகள் கூட்டம் அலை மோதுது. ரெண்டே ரெண்டு எக்ஸ்-ரே மெஷின்கதான். செக்-இன் க்யூ க்ளியர் ஆக 3 மணி நேரம் ஆகுது. "ஏர்போர்ட் மேனேஜர்" கிட்ட போய் புகார் பண்ணலாம்னு போனா அவர் மேஜை மேல காலைப் போட்டுக்கிட்டு கண்ணை மூடிக்கிட்டு இருக்காரு (யோசிக்கிறாராம் !!). இன்னும் ஏழெட்டு பேர் அரட்டை அடிச்சுக்கிட்டு இருக்காங்க. "போங்க சார்.... இவ்வளவு பேர் நிக்கிறாங்க இல்ல... எல்லாம் க்ளியர் ஆகும் போங்க.... ராத்திரி நேரம் ஸ்டாஃப் கம்மி. நீங்கதான் சீக்கிரம் வரணும்..."

இமிக்ரேஷன்ல க்யூ. செக்யூரிடி செக் க்யூ பயமுறுத்துது. லவுஞ் அக்சஸ் இருக்கறவங்க கூட நேரமாயிடும்னு பயந்து போகாததால லவுஞ்செல்லாம் ஈயாடுது. "டிபார்ச்சர் அனௌன்ஸ் பண்ணிட்டாங்க.... என்னை முன்னாடி அனுப்புங்க"ன்னு அவனவன் கதறரான். "அட... போய் க்யூல நில்லுங்க... போர்டிங் பாஸ் வாங்கிட்டீங்க இல்ல... உங்களை விட்டுட்டு போயிட மாட்டாங்க...." எல்லா ஃப்ளைட்டும் குறைஞ்சது 1/2 மணி நேரமாவது டிலே. ப்ளானிங்குக்கு ஸ்பெல்லிங் கூட தெரியாது போல. Failing to plan is planning to fail.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

Thursday, April 23, 2009

கிச்சடி 23.04.2009



போன வாரத்தில் ஒரு நாள்...

"ஒரே டயர்டா இருக்கு... இன்னிக்கி நைட் நீங்களே எதாவது டிஃபன் பண்ணிடுங்க"

"ம்..."

"உப்புமாவே பண்ணிடுங்க... சீக்கிரம் ஆகும். சாப்ட்டுட்டு தூங்கலாம்.."

"ம்..."

"வெங்காயம் சின்னதா நறுக்குங்க... மொடா மொடாவா நறுக்கிடாதீங்க..."

"ம்..."

"எண்ணை அளவா.... அடுப்பை 'பே'ன்னு எரிய விட்டு கடுகைக் கருக்கிடாதீங்க.. ரவையை நல்லா வறுத்துடுங்க... இல்லாட்டா பச்சை வாசனை புரட்டும்... "

"ம்..."

"ஒரு டம்ளருக்கு 2 டம்ளர் தண்ணி.... ஜாஸ்தி விட்டு களி மாதிரி ஆக்கிடாதீங்க... தண்ணில ரவையை கொஞ்ச கொஞ்சமாப் போட்டு கிளறிக்கிட்டே இருங்க.... கட்டி தட்டிடப் போகுது... உப்பு அளவாப் போடுங்க... உப்புமா ஆக்கிடாதீங்க "

"ம்..."

(10 நிமிஷம் கழிச்சு...........)

"அட.... நல்லா டேஸ்டாவே இருக்கே.... உங்க பொண்ணு இன்னிக்கு ஒரு பிடி பிடிக்கப் போறா... தேங்கா எண்ணையா போட்டீங்க... வாசனையா இருக்கே... கேரட்லாம் போட்டு... அட முந்திரி வேற... மஞ்சள் கொஞ்சமாப் போட்டு அப்பிடி கோல்ட் கலர்ல டாலடிக்குதே... தக்காளி எல்லாம் பொடிப் பொடியாப் போட்டு.... ம்ம்ம்... கொத்தமல்லி தூவி... அட்டகாசமா இருக்கே.... அம்மாடி... ஒரு உப்புமாவை உங்களைப் பண்ண வெக்கறதுக்குள்ள உம்பாடு எம்பாடுன்னு ஆகுதே...."

ஙே !!

நெஜமாவே கிச்சடி பண்ணினேன் !!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

போன வாரம் ஒரே சண்டை வாரமாப் போச்சு !! போன மாசம் பூரா ஜெனிவாவுல செலவு பண்ணதுக்கு (கார்பொரேட் கார்டுலதான்) ஸ்டேட்மென்ட் வந்தது. நேத்திக்கு ட்யூன்னு போட்டு. பொறுமையாப் பேசிப் பிரயோஜனம் இல்லாம காச் மூச்சுனு கத்தி 3 வாரம் எக்ஸ்டென்ஷன் குடுத்தா மகராசி.

3 மாசம் முன்னாடியே கம்பெனி ஸ்பான்சர்ல ஒரு ட்ரெய்னிங் கோர்ஸுக்கு புக் பண்ணி வெச்சுருந்தேன். ஊர்ல இல்லாததால போக முடியல. கோர்ஸ் ஆரம்பிக்கறதுக்கு ஒரு நாள் முன்னாடி மெயில் வருது. "நாளைக்கு க்ளாசுக்குப் போ. இல்லாட்டி கோர்ஸை ட்ராப் பண்ணு"ன்னு. சரி நாம சிங்கப்பூர் போக இன்னும் 2 நாள் இருக்கேன்னு ட்ராப் பண்ணினா "ஓகே. நோ ப்ராப்ளம்ஸ். ட்ராப் ஃபீஸ் 1450$. தேங்க்ஸ்"னு மெயில் வருது. நோ ப்ராப்ளம்ஸா? இப்பத்தானே ஸ்டார்ட் ஆகுது? நமக்கு ஒதுக்கறதே சின்ன பட்ஜெட். அதுலயும் புடுங்குனா? HR-ஐக் கூப்ட்டு "என்னாய்யா சிஸ்டம் வெச்சுருக்கீங்க... எம்ப்ளாயீஸ்க்கு உபயோகப்படாத சிஸ்டம்..."னு வெளு வெளுன்னு வெளுத்ததுக்கப்பறம் "அவன் கூடப் பேசு... இவ கிட்டப் பேசு"ன்னு மெயில் மேல மெயில் போட்டு "அய்யா... இனிமே பண்ண மாட்டோம்... இன்னொரு கோர்ஸ் அப்பறமா சேந்துக்குங்க"ன்னு சொல்ற வரைக்கும் "விட்டேனா பார் !!"னு ஆயிடுச்சு.

இதுதான் இப்பிடின்னா பேங்க்கோட ரெக்ரியேசன் க்ளப் மூலமா ஒவ்வொரு மே 1ந் தேதியும் எதாவது ஒரு தியேட்டர்ல சினிமாக்கு ஃபேமிலி டிக்கட் கிடைக்கும். என்ன கோளாறோ இந்த வருஷ ஆரம்பத்துல இருந்தே க்ளப்போடை ஈவண்டுகளுக்கு எனக்கு மெயிலே வரல. ஊருக்கு திரும்பி வந்த பிறகு பாத்தா எல்லாரும் போய் டிக்கட் வாங்கிட்டு வராங்க. உள்ள தூங்கிக்கிட்டு இருந்த விஜயகாந்த் ஏற்கெனெவே போன ரெண்டு சம்பவத்துல எழுந்து உக்காந்து கண்ணைக் கசக்கிக்கிட்டுருந்தாரு. இப்ப அவருக்கு கண்ணு "ஜிவு ஜிவு"ன்னு செவந்து போச்சு. புள்ளி விவரமாப் போட்டு இன்னொரு "விட்டேனா பார் !!" போர். டிக்கட் எல்லாம் தீந்து போச்சேன்னு கைய விரிச்சவனை வெரட்டி 3 டிக்கட் வாங்கின பிறகு "மன்னிப்பு - எனக்குப் புடிக்காத வார்த்தை"ன்னு சொல்லி அனுப்பிச்சேன்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சமீபத்துல "சுகி சிவம்" ஐயாவோட "கீதை அனுபவம்" சொற்பொழிவு mp3 கிடைச்சுது. சுமார் 18 மணிநேரம் இருக்கும். I-Podல போட்டு ஆபீஸ்க்கு போற வர நேரத்துல கேட்டேன். எனக்கு அவரோட ஸ்டைல் ரொம்பப் பிடிக்கும். ரொம்ப யதார்த்தமா தினசரி வாழ்வியலோட ஒட்டியே பேசுவார். அனாவசிய ஜோடனைகள் இருக்காது. சில சமயம் மழுப்பாம மூஞ்சில அடிச்சாப்லயே இருக்கும். அது பலருக்குப் பிடிக்காம இருக்கலாம். ஆனா எனக்கு அதுதான் அவர் கிட்ட பிடிச்ச விஷயம். உள்ளது உள்ளபடி சொல்லணும்.. எதுக்கு, யாருக்கு பயப்படணும்கற அவரோட நேர்மை வணக்கத்துக்குரியது.

க்ஷெ கீதை சொற்பொழிவு மிக மிக மிக மிக அருமை. சில இடங்கள்ல அவருடைய சிந்தனைக் கோணம் 'அட... இப்பிடியும் பாக்கலாமே இதை... அப்ப இப்பிடி அனுபவிக்கலாமே'ன்னு ஆச்சரியப் பட வெச்சுது. நம்ம சிந்தனையும் அதை ஒட்டி பல திசைகள்ல கிளைத்து வேறு மாதிரியான வித்தியாசமான அனுபவங்களைக் கொடுத்தது. தொய்வு இல்லாம இருக்கறதுக்காக அங்கங்க சின்னச் சின்னக் கதைகளும் சொல்லியிருந்தார். ரொம்ப ரசிச்சேன்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

இந்த மாதிரி கிச்சடி, பிரியாணின்னு போட்டா கடேசில ஒரு கவிதை போடணுமாமில்ல. பயப்படாதீங்க (தாமிரா எனப்பட்ட) ஆதி. சொந்தக் கவிதை கிடையாது.

சுஜாதா ஒரு கட்டுரைல "ஹைக்கூ" அப்பிடின்னா ஒரு ஃபோட்டோ மாதிரி, ஒரு கண சிலிர்ப்பு மாதிரி, முடிஞ்சா ஈற்றடில ஒரு முரண் அல்லது திருப்பம் இருக்கணும்னு சொல்லியிருப்பார். சமீபத்துல பதிவர் ரவி ஆதித்யா பதிவுல படிச்சது.

மழை ஒய்ந்த நேரம்
மரத்தடியில்
மீண்டும் மழை


யோசிச்சுப் பாத்தா நான் உப்புமா பண்ணினது கூட ஒரு ஹைக்கூ மாதிரி....

Tuesday, February 3, 2009

கிச்சடி 04.02.2009


பரிசல் அப்பயே சொன்னாரு... 'கிச்சடின்னு ஆரம்பிச்சுட்டீங்க... கொஞ்ச நாளைக்கப்பறம் மேட்டர் கிடைக்க கஷ்டமா இருக்கும்னு'. பெரியவங்க சொன்னா சரியாத்தானே இருக்கும் !! ச்சின்னப்பையனா இருந்தா தினம் தினம் விதவிதமா கிச்சடி பண்ணலாம்... நாமதான் க்குட்டிப்பையனாச்சே... அதனால இப்பிடித்தான் மாசம் ஒருக்காதான் போட முடியும்.

நேத்திக்கு தாமிரா அண்ணன் ஏடிஎம் பத்தி ஒரு பதிவு போட்டுருக்காரு. அதைப் படிச்சதும் ஒரு ஃப்ளாஷ்... ஆஹா... க்யூவுல நிக்கறதைப் பத்தி ஒரு கிச்சடி ரெடி பண்ணலாமேன்னு... ஓவர் டு கிச்சடி...

(அப்பாடா... இப்பிடி பில்டப் குடுத்து ரெண்டு பாரா ஓட்டியாச்சு...உஸ்...)

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நமக்கும் SBI ஏடிஎம்முக்கும் கெரகம் ஏதோ பழைய ஜென்மப் பகை இருக்கு. (ஏடிஎம் நம்பியாராமா, நான் கல்யாண்குமாராமா) எப்பப் பணம் எடுக்கப் போனாலும் 'கரண்ட் இல்ல சார்' , 'பணம் போட்டுக்கிட்டுருக்காங்க... 1/2 மணி நேரம் ஆகும் சார்'. ஒரு மினி ஸ்டேட்மென்ட் எடுக்கணும்னு போனா 'பேப்பர் ரோல் தீந்துடுச்சு...பிரிண்ட் பண்ணாது சார்'. அய்யா... பண்மே எடுக்கலை வெறும் பேலன்ஸ் மட்டுமாவது பாக்கலாம்னா 'கம்ப்யூட்டர் டௌன்' இல்ல 'நெட்வொர்க் டௌன்'. ஒரு ஏடிஎம்முக்கு என்னென்ன உபாதைக வரமுடியுமோ அவ்வளவும் வந்துரும். அப்பிடியே ஒரு முகூர்த்த நாள்ல எல்லாம் சரியா இருந்தாலும் வாசல்ல நிக்கற கூட்டத்தைப் பாத்ததுமே 'சரித்தான்..'னு தோணிடும்.

அப்பிடியே பொறும்மையா (?!) வரிசைல நின்னா, நமக்கு முன்னால நிக்கிற நாலு பேரு நண்பர்களாயிருப்பாங்க. நாலு பேருமா சேந்து உள்ள போவாங்க. நமக்கு சந்தேகம் வந்துரும். இவுங்க ஏடிஎம்ல இருந்து பணம் எடுக்க போறாங்களா, ஏடிஎம்மையே எடுத்துக்கிட்டு போகப் போறாங்களான்னு. முதல்ல ஒருத்தர் கார்டை எடுக்க, அதை எப்பிடி எங்க போடணும்னு மத்த 3 பேரும் மூணு இடத்தைக் காட்டுவாங்க. அப்பறம் எங்கயாவது ஒரு குட்டி பாக்கெட் டைரிலயோ, கார்டுக்குப் பின்னாலயேவோ எழுதி வெச்சுருக்கற பின் நம்பரைப் பொறுமையா 4 வாட்டி படிச்சு பாத்துட்டு ஒவ்வொரு நம்பரா அழுத்தி (அழுத்தற அழுத்துல ஏடிஎம்மே ஆடும்) குறைஞ்சது ரெண்டு தடவையாவது தப்பா அழுத்தி, 500க்கு பதிலா 5000ம்னு அழுத்தி அத கேன்சல் பண்ணி.... ஒரு பெரிய போராட்டத்துக்கு அப்பறம் ஒரு வழியா பணம் எடுத்துடுவாங்க. இதே மாதிரி மத்த மூணு பேரும்.... அதுக்கு அப்பறம் நாம போன உடனே ஏடிஎம்முக்கு மூக்குல வேர்த்துடும் "Sorry. This ATM is temporarily out of order. Pl try in another nearest ATM"

போங்கடா... நீங்களும் உங்க ஏடிஎம்மும் !!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

"மர்ஃபி'ஸ் லாஸ்" (Murphy's Laws) அப்பிடின்னு சில வேடிக்கையான விதிகளைப் பத்தி நீங்க படிச்சுருக்கலாம். அதுல க்யூவைப் பத்தி சொல்லியிருக்கறது:

1. எப்பவுமே பக்கத்துக் க்யூ வேகமா நகரும்
2. நீங்க பக்கத்து க்யூவுக்கு மாறி நின்னா, முதல்ல நின்ன க்யூ வேகமா நகரும்.
3. நீங்க மாறி மாறி நின்னு ரெண்டு க்யூவுலயும் பின்னால பின்னால போய், செய்ய வேண்டிய வேலை கோவிந்தாவாகும்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


ஒருமுறை துபாய்ல நடு ராத்திரி இறங்கி On-Arrival Visa எடுக்க அங்க இங்க தேடி அலையும்போது ஒரு பெரிய க்யூவைப் பாத்துட்டு, இதுவா இருக்குமோன்னு க்யூவுல நிக்கற ஒருத்தர் கிட்ட விசாவுக்கான க்யூவான்னு கேட்டேன். அவரு மொத்தமா தலைய ஆட்ட, சரி இதுதான் போலன்னு நானும் நின்னுட்டேன். கொஞ்சம் தள்ளி ஒரு சின்ன கௌண்டர்ல ஒரு பொண்ணு உக்காந்து கம்ப்யூட்டர்ல சாலிடேர் விளையாடிக்கிட்டுருந்துது. "இவ்வளவு பேர் நிக்கறோம்... இன்னொரு கௌண்டர் போடாம இப்பிடி வெட்டியா இருக்காங்களே"ன்னு புலம்பிக்கிட்டு நின்னேன். இந்த க்யூ நகரற மாதிரியே தெரியல. 1/2 மணி நேரம் ஆச்சு ஒருத்தர் கூட நகரலை. என்னாடான்னு யோசிக்கும்போதே யாரோ ஒரு ஆள் வர, முன்னாடி நின்ன மொத்தக் கூட்டமும் மூட்டை முடிச்சத் தூக்கிக்கிட்டு அவன் கூட போயிடுச்சு. நான் மட்டுந்தான் நிக்கிறேன். அப்பறந்தான் தெரிஞ்சுது அது ஏதோ ஒரு டூரிஸ்ட் கூட்டம். வந்தவன் ஒரு ஆர்கனைசர். பக்கத்துல காத்தாடிக்கிட்டு இருந்த கௌண்டர்தான் விசா கௌண்டர். மூஞ்சில வழிஞ்ச வெளக்கெண்ணைல ரெண்டு நாள் வெளக்கெரிக்கலாம்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

படிக்கிற காலத்துல மண்ணெண்ணை, பாமாயில் இதெல்லாம் ரேஷன் கடைல போடறாங்கன்னு தமுக்கு அடிச்சாச்சுன்னா, உடனே எதாவது ஒரு டின், பாட்டிலோட போய் ரேஷன் கடை வாசல்ல நின்னுடணும். அங்க நமக்கு முன்னாலயே 100 பேர் நிப்பாங்க. டின், பாட்டில், குடை, கல்லு, கூடை, குச்சி, சீமாறு, தென்ன மட்ட, டயர் இதெல்லாம் கூட க்யூவுல இருக்கும். 'என்னாதிது சின்னப்புள்ளத்தனமா'ன்னு கேட்டுற முடியாது. ஒவ்வொண்ணும் ஒரு ஆளுக்கு சமம். கடைக்காரன் வந்ததுமே சொல்லிடுவான் "ஒரு டிரம் எண்ணைதான் இருக்கு... சண்டை போடக்கூடாது"ன்னு. ஆனா அந்த ஒரு டிரம்ல (100 லிட்டர்) இருந்து என்னவோ காமதேனு கிட்ட கரக்கற மாதிரி கரந்து 200 லிட்டர் பில் போடுவாங்க. அளக்கிற சீசா ஓட்டையா, பாதி அடைச்சிருக்குமா, அதுல பாதி நுரையா, ஊத்தும்போது சிந்துதா...ம்ஹூம்... எதையும் பாக்கக்கூடாது. நாமளும் 3 மணி நேரம் க்யூவுல நின்னு பில் போட்டுக்கிட்டு எண்ணை ஊத்தறவன் கிட்ட இன்னொரு க்யூவுல நின்னு நம்ம முறை வரும்போது டிரம்ம்மையே கவுத்து ஒரு முக்கா லிட்டர் எடுத்து நம்ம டின்ல ஊத்திட்டு 'அவ்வளவுதான் தம்பி... உள்ள போய் சொல்லி மீதிப் பணத்தை வாங்கிக்கங்க"ன்னு சொல்லி பில்லுக்கு பின்னால எழுதிக் குடுத்துடுவாரு. சரின்னு பின்னால திரும்பிப் பாத்தா நமக்கு ஆனதைப் பாத்தபிறகு நமக்கப்பறம் பில் போட்டவங்க எல்லாம் ரீஃப்ண்ட் க்யூவுல நின்னுக்கிட்டிருப்பாங்க. மறுபடி க்யூவுல நின்னு.....

Saturday, December 20, 2008

கிச்சடி 20.12.2008


சே... ஒரு கிச்சடி பண்ண 3 வாரமாகுது... அப்ப நான் அவியல் பண்ண ஒரு வருஷமாகும் போல..... போடறதுதான் போடறோம் ஒரு thematic -ஆ போடலாம்னு ஒரு (விபரீத!!) யோசனை... இந்த கிச்சடியோட theme - "பயணம்".

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

உடுமலைல இருக்கும்போது நானும் அண்ணனும் (சித்தப்பா மகன்) திடீர்னு பழனிக்கு நடை பயணம் கிளம்பிடுவோம். சாயங்காலம் 6 மணிக்கு குட்டைப்பிள்ளையாருக்கு ஒரு தேங்கா பிரிமியம் கட்டீட்டு நடக்க ஆரம்பிச்சா, விடியக்காலை 4 அல்லது 5 மணிக்கு பழனி போய் சேந்துரலாம். 36 கி.மீ.

ஒரு தடவை அப்பிடி போய்ட்டு வரும்போது பழனி பஸ்ஸ்டாண்டுல ஒரே கூட்டம். அண்ணன் மொட்டை வேற. உடுமலைக்குன்னு தனியா பஸ் கிடையாது. பொள்ளாச்சி அல்லது கோவை போற பஸ்ல ஏறணும். கண்டக்டர் "உடுமலை டிக்கட் எல்லாம் வெய்ட் பண்ணுங்க. பொள்ளாச்சி, கோவை எல்லாம் முதல்ல ஏறுங்க"ன்னாரு. நாங்க பொள்ளாச்சின்னு சொல்லிக்கிட்டே போய் ஏறி உக்காந்துட்டோம். பஸ்ல இருந்த கூட்டத்துக்கு, கண்டக்டர் டிக்கட்டுக்கு எங்க கிட்ட வரும்போது பஸ் பழனிலேருந்து ஆறேழு கி.மி. வெளிய வந்தாச்சு. அண்ணன் பந்தாவா "உடுமலை 2"ங்கவும், கண்டக்டருக்கு ஒரே கோவம். "ஏய் மொட்டை, நாந்தான் உடுமலையெல்லாம் ஏறாதேன்னு சொன்னேனில்ல... திமிர் புடிச்சவனுக... உம் மொட்டையும் கண்ணாடியும்..."னு திட்டிக்கிட்டே டிக்கட் குடுத்தாரு. அண்ணன் ஒண்ணும் பேசல. அப்பறம் உடுமலைல இறங்கும்போது அண்ணன் கண்டக்டர் கிட்டப் போய் "யோவ்... உன் வீட்டுக்கு நான் வந்து பொண்ணு கேட்டா மொட்டை, கண்ணாடி பத்தியெல்லாம் பேசு... இல்லாட்டி...$%^!@^#$%&!@&*....."எனக்கா ஒரே சிரிப்பு. கண்டக்டர் இதை எதிர்பார்க்கல. அதுவும் பத்து பேர் முன்னாடி சொல்லவும் ஒரு மாதிரி ஆயிடுச்சு. "சாரி தம்பி... எதோ கோவத்துல சொல்லிட்டேன்... அதுக்குன்னு இப்பிடியா..."ன்னு சமாதானம் பேசுனாரு. அதுக்கப்பறம் பழனிலேருந்து உடுமலைக்கு பஸ்ல வரும்போதெல்லாம் இந்த சம்பவம் ஞாபகத்துக்கு வந்து சிரிப்பு வரும்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

லக்சம்பர்க்ல வேலை நிமித்தமா கொஞ்ச நாள் இருந்தபோது, ஒருமுறை ரயில்ல ப்ருஸல்ஸ் போனேன். 4 மணி நேரப் பயணம். போய்ட்டு அன்னிக்கு இரவே திரும்பிடலாம்னு ப்ளான். போகும்போதே அந்த ரூட்டுக்கான டைம்டேபிளையும் எடுத்துக்கிட்டேன். ப்ருஸ்லஸ் போயிட்டு ஊரெல்லாம் சுத்திட்டு சாயங்காலம் 6:35 ரயிலப் புடிச்சுடலாம்னு ப்ளான் போட்டேன். ஒருமணி நேரத்துக்கு ஒரு ரயில் இருக்கு. மறுநாள் விடிகாலை சென்னைக்கு வேற கிளம்பணும்.

சாயங்காலம் 6:25க்கு ஸ்டேஷன் வந்துட்டேன். "இப்பதாங்க ரயில் கெளம்பிப் போச்சு"ன்னாங்க. "என்னடாது... நம்மூர்ல லேட்டாத்தான் கெளம்புவாங்க, இவுங்க நேரத்துக்கு கெளம்புவாங்கன்னு பாத்தா முன்னாலயே கெளம்பறாங்களே... ஒரு வேளை நம்ம வாட்சுதான் ஸ்லோவான்னு பாத்தா ஸ்டேஷன் கடிகாரமும் வாட்சும் சரியாத்தானெ இருக்கு..." இப்பிடியெல்லாம் யோசிச்சுக்கிட்டே, அடுத்த ரயிலுக்கு ஒரு மணி நேரம் இருக்கேன்னு பக்கத்துல இருக்கற ஒரு ம்யூசியத்துல போய் சுத்திட்டு மறுபடி 7:20க்கெல்லாம் வந்தேன். நான் போக வேண்டிய ரயில் கதவைச் சாத்தி கெளம்பி போயிட்டுருக்கு. ஒண்ணுமே புரியல. என்னடா... இப்பிடி கோட்டை விடுறமேன்னு எரிச்சல். இனிமே எங்கயும் போகக் கூடாது. அடுத்த ரயிலையும் விட்டா மறுநா காலைல 4 மணிக்கு மேலதான். ஒரு பென்சுல உக்காந்துட்டேன். இங்க கூடவா நம்மள இப்பிடி சுத்த விடுறானுகன்னு அந்த டைம் டேபிளத் திருப்பித் திருப்பிப் பாத்துக்கிட்டுருந்தேன். அது ஒரு நோட்டிஸ் மாதிரி இருந்துது. ஒரு பக்கம் லக்ஸ்-ப்ருஸல்ஸ் ரயில் நேரங்கள், பின் பக்கம் ப்ருஸல்ஸ்-லக்ஸ் ரயில் நேரங்கள். நான் மாத்திப் பாத்துருக்கேன். வர ரயிலுக ஒவ்வொரு மணி 35 நிமிஷத்துக்கும் போற ரயிலுக ஒவ்வொரு மணி 20 நிமிஷத்துக்கும். மூஞ்சில மூணு லிட்டர் அசடு வழிய 1 மணி நேரம் உக்காந்து கடைசி ரயிலப் புடிச்சு 12:30 மணிக்கு லக்ஸ் வந்து சேந்தேன். ஹோட்டலுக்குப் போய் பேக் பண்ணி, 1 மணி நேரம் மட்டும் தூங்கி காலைல கெளம்பி சென்னை. ம்ம்ம்... மறக்கவே முடியாது.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

இந்த வருஷம் ஆரம்பத்துல குடும்பத்தோட சென்னைல. சென்னைல இருந்து சிங்கப்பூருக்கு விடிகாலை 2 மணிக்கு ஒண்ணு, மதியம் 2 மணிக்கு ஒண்ணுன்னு ஏர் இண்டியா எக்ஸ்ப்ரஸ் விமானம் இருந்துது. (இப்ப டைம் மாத்திட்டாங்க). மனைவிக்கும், குழந்தைக்கும் ஏஜண்ட் கிட்ட ஞாயித்துக்கிழமை மதியம் ரெண்டு மணி விமானத்துக்கு புக் பண்ண சொன்னேன். அவங்களும் போன் பண்ணி "சார் ரெண்டு மணி ஃப்ளைட் புக் பண்ணியாச்சு. டிக்கட் வீட்டுக்கு அனுப்பிச்சுட்டோம்"னாங்க.

நாங்க கூலா ஞாயித்துக்கிழமை காலைல சாப்டுட்டு 11 மணிக்கு கெளம்பும்போது யதேச்சையா டிக்கட்டப் பாத்தா, அது விடிகாலை ரெண்டு மணிக்கு புக் ஆகியிருக்கு. ஒருத்தர ஒருத்தர் மூஞ்சியப் பாத்துக்கிட்டோம். அப்பறம் என்ன... தூக்கிட்டு ஓடு ஏர் இண்டியா ஆபீஸுக்கு. அவங்க "பாத்தா படிச்சவன் மாதிரி இருக்க..."ங்கற மாதிரி ஒரு பார்வை பாத்துட்டு "சார்.. நோ-ஷோவுக்கு ரீஃபண்ட் டிக்கட் ஃபேர் மட்டுந்தான். அதுவும் 15 நாள் கழிச்சுதான். நீங்க வேற டிக்கத்தான் வாங்கணும்"னு நிர்தாட்சண்யமா சொல்லிட்டாங்க. வேற வழி?

இந்த பட்ஜெட் ஏர்லைன்ஸ்ல எல்லாம் டிக்கட் காசு கால் பங்குதான். மீதி முக்காவாசியும் ஏர்போர்ட் டேக்ஸ். அது திரும்ப கிடைக்காது. நம்ம முதல்வரே சொல்ற மாதிரி என் ஜாதகத்தை நொந்துக்கிட்டேன்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

அதேமாதிரி நம்ம மாமா ஒருத்தர் முதல்லயே போக வர டிக்கட் புக் பண்ணிட்டு, அப்பறமா எதோ காரணத்துக்காக பயணத்தை ஒரு நாள் prepone பண்ணிட்டாரு. போற டிக்கட்ட மாத்தினவரு வர டிக்கட்ட மாத்த மறந்துட்டாரு. கோவைல வேலையை முடிச்சுட்டு திரும்ப சென்னைக்கு வர நீலகிரில ஏறி தூங்கிட்டாரு. திருப்பூர்ல ஒருத்தர் ஏறி "சார்.. இது என்னோட பெர்த்..."ங்க இவருக்கு தூக்கக் கலக்கத்துல ஒண்ணும் புரியல. டி.டி.ஆர் வந்து பாத்துட்டு சொன்னப்பறம்தான் தெரிஞ்சுது அது மறுநாளைக்கான டிக்கட். அப்பறம் ஜெனெரல் கம்பார்ட்மெண்ட்ல உக்காந்து காட்பாடிக்கப்பறம் பெர்த் கிடைச்சு....

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

இப்பல்லாம் டைம் டேபிள், டிக்கட் எல்லாம் ஒரு தடவைக்கு ரெண்டு தடவை பாத்துடறது. சந்தேகத்துக்கு பக்கத்துக இருக்கறவங்க கிட்ட சங்கிலி முருகன் மாதிரி 'ஏங்க... நான் கரெக்டாத்தானே படிக்கிறேன்னு" அவங்களையும் ஒரு தடவை பாக்க சொல்லி கேட்டுக்கறது. என்ன பண்றது? பட்டாத்தானே தெரியுது படிச்ச முட்டாளுக்கு.

Sunday, November 30, 2008

கிச்சடி 30.11.2008

ஹி ஹி ஹி ஹி எல்லாரும் அவியல், கதம்பம், நொறுக்ஸ், துணுக்ஸ்னு போட்டு பட்டய கெளப்புராய்ங்களே... நாமுளும் ஒண்ணு போட்டாத்தேன் என்ன கொறஞ்சுரும்னு "கழிவறையில் அமர்ந்து யோசிக்கும்போது கண நேரத்தில்" தோணுச்சு. அவிங்களோடதெல்லாம் சுவையா மணமா பதமா பக்குவமா இருக்கலாம். மொதல்ல 'பேல்பூரி'ன்னு சொல்லலாம்னு பாத்தேன். அதவிட 'கிச்சடி' பெட்டர்னு தோணுச்சு. கிச்சடில ஒரு சௌகர்யம் எத வேண்ணாலும் போட்டு பண்ணலாம். பாப்போம்... நாம பண்ற கிச்சடி மொத சட்டிய விட்டு எடுக்க முடியுதான்னு.....

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

இந்தியாவை விட்டு வெளிய போயிட்டா, எம்பேரு மகேஷ்ங்கறது நண்பர்க மத்தியில மட்டுந்தான். பாஸ்போர்ட்ல அப்பா பேரு மொதல்ல இருக்கறதால விமானத்துல ஏறுனதுலருந்து 'ராமமூர்த்தி'தான் எங்க போனாலும். எங்கப்பா கிட்ட வெளயாட்டா சொல்றதுண்டு... "பல ஊருகளுக்குப் போறது நானாயிருந்தாலும், உண்மையாப் போறது உங்க பேருதாம்பா"ன்னு. பல சமயம் வேற யாரையோ கூப்புடறாங்களோன்னு ஏமாந்ததும் உண்டு.

ஒருமுறை துபாய் ஏர்போர்ட்ல லவுஞ்சுல போய் நல்லா தூங்கிட்டேன். 9 மணிக்கு ப்ளைட். 8 3/4 மணிக்கு 'மிஸ்டர் ரமாமுர்தி... மிஸ்டர் ரமாமுர்தி..."ன்னு அனவுன்ஸ் பண்ணிக்கிட்டே இருக்காங்க. லேசா காதுல விழுந்தாலும், வேற யாரோன்னு தூக்கத்தை கண்டின்யூ பண்ணேன். நல்லவேளை லவுஞ்ச் மேனேஜர் நான் உள்ள வந்ததை கம்யூட்டர் லிஸ்ட்ல பாத்துட்டு ஒவ்வொருத்தரையா கேட்டுக்கிட்டே வந்து நம்மளை எழுப்பி அனுப்பிச்சு வெச்சாரு. அடிச்சு புடிச்சு ஓடி வந்து விமானத்துல ஏறுனா, எல்லாரும் மேலயும் கீழயும் பாத்துட்டு மூஞ்சியத் திருப்பிக்கறாங்க. பிஸினஸ் க்ளாஸ்ங்கற ஒரே காரணத்துக்காக அந்தப் பணிப்பெண்கள் ஒரு சின்ன சிரிப்பு சிரிச்சுட்டு 'டப்'னு கதவை மூடினாங்க.அப்பவும் எங்கப்பா கிட்ட சொன்னேன் 'நீ கிருஷ்ணன் மாதிரிப்பா... போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் உம்பேருக்குத்தான். இவ்வளவு வயசுக்கு அப்பறமும் நான் பண்ற தப்புக்கு உம்பேருதான் ரிப்பேராகுது". அவுருக்கு சிரிப்பு தாங்கல.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ரீடர்ஸ் டைஜஸ்டுல ஒருமுறை படிச்சது... தேவையேயில்லாத, ஆனா உலகத்துல பலபேரு பண்ற வேலைக:

1. பேஸ்டை கீழ இருந்துதான் அமுக்கி எடுக்கணும்னு ரூல் போடறது
2. கடிகாரத்தை 5 அல்லது 10 நிமிஷம் முன்னால அட்ஜஸ்ட் பண்ணி வெச்சுக்கறது
3. ஹோட்டல் ரூம்கள்ல வெக்கற சின்னச் சின்ன சோப்புகளை சேத்து வெச்சு எடுத்துட்டு வரது
...
...
...

இப்பிடி பலது இருந்துது. முழுசா ஞாபகம் இல்ல. 1 வது நான் பண்றதில்ல. 2வது எனக்கும் உடன்பாடு கிடையாது. இப்பவும் நான் என் வாட்ச்சை ஆபீஸ் கடிகாரத்தோட sync ல வெச்சுருக்கேன். முன்னால வெக்கறவங்க பலபேரு "8:20 ஆ... இது 20 நிமிஷம் ஃபாஸ்ட்.. 8 தான் ஆகுது"ன்னு சொல்லிக்கிட்டே 8:30 க்கு கிளம்பி ஆபீஸ்ல திட்டு வாங்குவாங்க. 3வது நானும் பண்றதுண்டு. கை கழுவ வெச்சுக்கலாம், மொகங்கழுவ வெச்சுக்கலாம்னு... ஆனா உபயோகப்படுத்துனதே இல்ல. ரொம்ப நாள் கழிச்சு எங்கயாவது தட்டுப்படும். அப்பறம் தூக்கி எறியுவோம்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

கடிகாரம்னு சொன்னதும் ஞாபகம் வருது. எங்கூட ஸ்கூல்ல படிச்ச சிராஜ், எவ்வளவோ தடவை சொல்லிக் குடுத்தும் "கெணியாரம்"னு தான் எழுதுவான். அப்ப ராதான்னு ஒரு டீச்சர். அவன் ஒருதடவை பணியாரம் கொண்டு வந்தபோது அவங் கிட்ட அது "படிகாரம்"னு சொல்லிச் சொல்லி அவனைக் கிண்டல் பண்ணி, புரிய வெச்சு அவனைத் திருத்துனாங்க. கடிகாரம் கெணியாரம்னா, பணியாரம் படிகாரம்தானே !!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

5வது வரைக்கும் தமிழ் மீடியத்துல் படிச்சுட்டு, 6வதுக்கு ஆங்கில மீடியம் போனபோது நமக்கு ஏ ஃபார் ஆப்பிள் பி ஃபார் பாய் அளவுக்குத்தான் தெரியும். மொதல் நாள் இங்கிலீஷ் டீச்சர் வந்து (அவர்தான் க்ளாஸ் டீச்சர்) என்னென்ன பாடங்களுக்கு என்னென்ன நோட்டு, எவ்வளவு நோட்டு வாங்கணும்னு லிஸ்ட் சொல்லிக்கிட்டே வந்தாரு. 'ஹோம் ஒர்க்'குக்கு ஒரு நோட் போடச் சொன்னாரு. நான் பின்னால உக்காந்து இருந்ததால சரியா காதுல விழல. 'போமக்' நோட்டுன்னு எழுதிக்கிட்டேன். வீட்டுல போய் காமிச்சா, அப்பாவுக்கு புரியவே இல்ல. 'அது என்னடா போமக் நோட்டு? கேள்விபடாததா இருக்கு?'ன்னாரு. 'அதெல்லாம் தெரியாது... நாளைக்கு ஸ்கூலுக்குப் போகும்போது வேணும்'னு சொன்னேன். அவரும் ரொம்ப நேரம் கொழம்பிப் போயிட்டு அப்பறம் சொன்னாரு 'டேய்.. அது ஹோம் ஒர்க் நோட்டாயிருக்கும்'னு. ஆனாலும் எனக்கு உள்ளூர பயம். நாம எழுதுனது சரியா, அவர் சொன்னது சரியான்னு. ஆனா 6வது முடியற வரைக்கும் க்ளாஸ் டீச்சர் 'போமக்' நோட்டுன்னு எதுவும் மறுபடி கேக்காமலே இருந்து என்னய காப்பாத்துனாரு.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

டெல்லில போய் அண்ணனோட நண்பர்களோட தங்கினபோது, அவங்கதான் சமைப்பாங்க. ஒரு நாள் நான் சீக்கிரம் வந்ததால நான் சமைக்கலாம்னு (முதல் முறையா) ஆரம்பிச்சு உப்புமா பண்ணினேன். சாப்டுட்டு முகுந்தன் கேட்டாரு "எப்பிடி கேவலமா பண்ணினாலும் சுமாரா வரது உப்புமா... அதையே உன்னால எப்பிடி கேவலமா பண்ண முடிஞ்சுது?'ன்னு.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

கிச்சடி இதுக்கு மேல தீஞ்சுரும். டெல்லி உப்புமா மாதிரி இருக்காதுன்னு நினைக்கிறேன்....