ஹி ஹி ஹி ஹி எல்லாரும் அவியல், கதம்பம், நொறுக்ஸ், துணுக்ஸ்னு போட்டு பட்டய கெளப்புராய்ங்களே... நாமுளும் ஒண்ணு போட்டாத்தேன் என்ன கொறஞ்சுரும்னு "கழிவறையில் அமர்ந்து யோசிக்கும்போது கண நேரத்தில்" தோணுச்சு. அவிங்களோடதெல்லாம் சுவையா மணமா பதமா பக்குவமா இருக்கலாம். மொதல்ல 'பேல்பூரி'ன்னு சொல்லலாம்னு பாத்தேன். அதவிட 'கிச்சடி' பெட்டர்னு தோணுச்சு. கிச்சடில ஒரு சௌகர்யம் எத வேண்ணாலும் போட்டு பண்ணலாம். பாப்போம்... நாம பண்ற கிச்சடி மொத சட்டிய விட்டு எடுக்க முடியுதான்னு.....
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இந்தியாவை விட்டு வெளிய போயிட்டா, எம்பேரு மகேஷ்ங்கறது நண்பர்க மத்தியில மட்டுந்தான். பாஸ்போர்ட்ல அப்பா பேரு மொதல்ல இருக்கறதால விமானத்துல ஏறுனதுலருந்து 'ராமமூர்த்தி'தான் எங்க போனாலும். எங்கப்பா கிட்ட வெளயாட்டா சொல்றதுண்டு... "பல ஊருகளுக்குப் போறது நானாயிருந்தாலும், உண்மையாப் போறது உங்க பேருதாம்பா"ன்னு. பல சமயம் வேற யாரையோ கூப்புடறாங்களோன்னு ஏமாந்ததும் உண்டு.
ஒருமுறை துபாய் ஏர்போர்ட்ல லவுஞ்சுல போய் நல்லா தூங்கிட்டேன். 9 மணிக்கு ப்ளைட். 8 3/4 மணிக்கு 'மிஸ்டர் ரமாமுர்தி... மிஸ்டர் ரமாமுர்தி..."ன்னு அனவுன்ஸ் பண்ணிக்கிட்டே இருக்காங்க. லேசா காதுல விழுந்தாலும், வேற யாரோன்னு தூக்கத்தை கண்டின்யூ பண்ணேன். நல்லவேளை லவுஞ்ச் மேனேஜர் நான் உள்ள வந்ததை கம்யூட்டர் லிஸ்ட்ல பாத்துட்டு ஒவ்வொருத்தரையா கேட்டுக்கிட்டே வந்து நம்மளை எழுப்பி அனுப்பிச்சு வெச்சாரு. அடிச்சு புடிச்சு ஓடி வந்து விமானத்துல ஏறுனா, எல்லாரும் மேலயும் கீழயும் பாத்துட்டு மூஞ்சியத் திருப்பிக்கறாங்க. பிஸினஸ் க்ளாஸ்ங்கற ஒரே காரணத்துக்காக அந்தப் பணிப்பெண்கள் ஒரு சின்ன சிரிப்பு சிரிச்சுட்டு 'டப்'னு கதவை மூடினாங்க.அப்பவும் எங்கப்பா கிட்ட சொன்னேன் 'நீ கிருஷ்ணன் மாதிரிப்பா... போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் உம்பேருக்குத்தான். இவ்வளவு வயசுக்கு அப்பறமும் நான் பண்ற தப்புக்கு உம்பேருதான் ரிப்பேராகுது". அவுருக்கு சிரிப்பு தாங்கல.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ரீடர்ஸ் டைஜஸ்டுல ஒருமுறை படிச்சது... தேவையேயில்லாத, ஆனா உலகத்துல பலபேரு பண்ற வேலைக:
1. பேஸ்டை கீழ இருந்துதான் அமுக்கி எடுக்கணும்னு ரூல் போடறது
2. கடிகாரத்தை 5 அல்லது 10 நிமிஷம் முன்னால அட்ஜஸ்ட் பண்ணி வெச்சுக்கறது
3. ஹோட்டல் ரூம்கள்ல வெக்கற சின்னச் சின்ன சோப்புகளை சேத்து வெச்சு எடுத்துட்டு வரது
...
...
...
இப்பிடி பலது இருந்துது. முழுசா ஞாபகம் இல்ல. 1 வது நான் பண்றதில்ல. 2வது எனக்கும் உடன்பாடு கிடையாது. இப்பவும் நான் என் வாட்ச்சை ஆபீஸ் கடிகாரத்தோட sync ல வெச்சுருக்கேன். முன்னால வெக்கறவங்க பலபேரு "8:20 ஆ... இது 20 நிமிஷம் ஃபாஸ்ட்.. 8 தான் ஆகுது"ன்னு சொல்லிக்கிட்டே 8:30 க்கு கிளம்பி ஆபீஸ்ல திட்டு வாங்குவாங்க. 3வது நானும் பண்றதுண்டு. கை கழுவ வெச்சுக்கலாம், மொகங்கழுவ வெச்சுக்கலாம்னு... ஆனா உபயோகப்படுத்துனதே இல்ல. ரொம்ப நாள் கழிச்சு எங்கயாவது தட்டுப்படும். அப்பறம் தூக்கி எறியுவோம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கடிகாரம்னு சொன்னதும் ஞாபகம் வருது. எங்கூட ஸ்கூல்ல படிச்ச சிராஜ், எவ்வளவோ தடவை சொல்லிக் குடுத்தும் "கெணியாரம்"னு தான் எழுதுவான். அப்ப ராதான்னு ஒரு டீச்சர். அவன் ஒருதடவை பணியாரம் கொண்டு வந்தபோது அவங் கிட்ட அது "படிகாரம்"னு சொல்லிச் சொல்லி அவனைக் கிண்டல் பண்ணி, புரிய வெச்சு அவனைத் திருத்துனாங்க. கடிகாரம் கெணியாரம்னா, பணியாரம் படிகாரம்தானே !!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
5வது வரைக்கும் தமிழ் மீடியத்துல் படிச்சுட்டு, 6வதுக்கு ஆங்கில மீடியம் போனபோது நமக்கு ஏ ஃபார் ஆப்பிள் பி ஃபார் பாய் அளவுக்குத்தான் தெரியும். மொதல் நாள் இங்கிலீஷ் டீச்சர் வந்து (அவர்தான் க்ளாஸ் டீச்சர்) என்னென்ன பாடங்களுக்கு என்னென்ன நோட்டு, எவ்வளவு நோட்டு வாங்கணும்னு லிஸ்ட் சொல்லிக்கிட்டே வந்தாரு. 'ஹோம் ஒர்க்'குக்கு ஒரு நோட் போடச் சொன்னாரு. நான் பின்னால உக்காந்து இருந்ததால சரியா காதுல விழல. 'போமக்' நோட்டுன்னு எழுதிக்கிட்டேன். வீட்டுல போய் காமிச்சா, அப்பாவுக்கு புரியவே இல்ல. 'அது என்னடா போமக் நோட்டு? கேள்விபடாததா இருக்கு?'ன்னாரு. 'அதெல்லாம் தெரியாது... நாளைக்கு ஸ்கூலுக்குப் போகும்போது வேணும்'னு சொன்னேன். அவரும் ரொம்ப நேரம் கொழம்பிப் போயிட்டு அப்பறம் சொன்னாரு 'டேய்.. அது ஹோம் ஒர்க் நோட்டாயிருக்கும்'னு. ஆனாலும் எனக்கு உள்ளூர பயம். நாம எழுதுனது சரியா, அவர் சொன்னது சரியான்னு. ஆனா 6வது முடியற வரைக்கும் க்ளாஸ் டீச்சர் 'போமக்' நோட்டுன்னு எதுவும் மறுபடி கேக்காமலே இருந்து என்னய காப்பாத்துனாரு.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
டெல்லில போய் அண்ணனோட நண்பர்களோட தங்கினபோது, அவங்கதான் சமைப்பாங்க. ஒரு நாள் நான் சீக்கிரம் வந்ததால நான் சமைக்கலாம்னு (முதல் முறையா) ஆரம்பிச்சு உப்புமா பண்ணினேன். சாப்டுட்டு முகுந்தன் கேட்டாரு "எப்பிடி கேவலமா பண்ணினாலும் சுமாரா வரது உப்புமா... அதையே உன்னால எப்பிடி கேவலமா பண்ண முடிஞ்சுது?'ன்னு.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கிச்சடி இதுக்கு மேல தீஞ்சுரும். டெல்லி உப்புமா மாதிரி இருக்காதுன்னு நினைக்கிறேன்....
அன்னச்சத்திரம் 2025
4 weeks ago


