Showing posts with label நிகழ்வு. Show all posts
Showing posts with label நிகழ்வு. Show all posts

Thursday, October 23, 2008

மொளச்சு வரும்போது...4

பழைய பதிவுகள் ...1 ...2 ...3



ஊர்ல இருக்கற வானரங்களுக்கும் அக்ரஹாரத்துக்கும் இருக்கற பந்தம் அலாதியானது. மார்கழி மாசம் ஆச்சுன்னா எல்லாத்துக்கும் பக்தி எங்கேருந்தோ பீரிக்கிட்டு (நன்றி: வெ.ஆ.மூர்த்தி) வந்துரும். காலங்காத்தால 5 1/2 மணிக்கெல்லாம் ட்ராயர் மேலயே ஒரு வெள்ளத் துண்ட வேட்டி மாதிரி கட்டிக்கிட்டு (அரணாக்கயருக்குள்ள சொருகி வெச்சுக்கணும்... இல்லன்னா நம்ம க்ளாஸ்மேட்டு பொண்ணு வீட்டு வாசல்ல நின்னு அரிசி வாங்கற நேரம் பாத்து அவுந்து மானத்த வாங்கும்) அக்ரஹாரத்து க்ருஷ்ணன் கோயில் மாமா வீட்டுல இருந்து கிளம்பி அப்பிடி மேக்க அக்ரஹாரம் பூரா ஒரு ஊர்வலம். பத்து பேர் பாடிக்கிட்டே போனா பத்து கொரலும் தனித் தனியாக் கேக்கும்.. அவ்வளவு 'ஸின்க்'கா பாடுவாங்க. வீடு வீடா நின்னு கை கால் கழுவி, அரிசி வாங்கி பையில போட்டுக்கிட்டே போய், தளி ரோட்டுல லெஃப்ட். குட்டைப்பிள்ளயார் கோவில் வாசல்ல "கணேச சரணம் ; சரணம் கணேசா"ன்னு ஓங்கி ஒரு கொரல் பாடிட்டு, மறுக்கா லெஃப்ட். கச்சேரி வீதில சப்ஜெயில், கோர்ட்டு, ஜேகப் டாக்டர் வீடு தாண்டி லெஃப்ட். கொஞ்ச தூரம் போனா மறுபடி அக்ரஹாரம். ரைட்ல திரும்பினா அனுமார் கோயில்.

நாமளும் சும்மாவோ இல்ல ஒரு ஜால்ராவத் தட்டிக்கிட்டேவோ போனா, கடைசீல ஒரு 7 மணி வாக்குல அனுமார் கோயிலுக்கு போய் சேரும்போது வெண்பொங்கலோ, சக்கரப் பொங்கலோ, சுண்டலோ சூடா ரெடியா இருக்கும். நமக்கா பொறுமையே இருக்காது. கவுண்டமணி "கெடா எப்ப வெட்டுவாங்க?"ன்னு பொலம்பற மாதிரி, "அனுமாருக்குதான் வெண்ண பூசியாச்சுல்ல?" "அதான் பூஜை முடிஞ்சுதில்ல?"ன்னு பொங்கல் பாத்திரம் இருக்கற டேபிளையே பாத்துக்கிட்டு உக்காந்திருப்போம். மொதல்லயே பாதாம் எல, வாழை எலன்னு நல்லா பெருசு பெருசா எடுத்து வெச்சுருப்போம். பிரசாதம் குடுக்கறவரு பாத்தரத்து கிட்ட போனவுடனேயெ வானரமெல்லாம் ரெடியாயிரும். ஆனாலும் "இதுக்கு ஒண்ணும் நாங்க ஆலாப் பறக்கல"ங்கற மாதிரி அப்பிடி முஞ்சிய அப்பாவி மாதிரி வெச்சுக்குவோம். கொறவஞ் சாடை கொறத்திக்குத் தெரியாதா? "வாங்கடா...வந்து தொலைங்க"ன்னு அப்பிடியே ஆசை(!)யாக் கூப்புடுவாரு. "நீங்க கூப்டீங்க...அதுனால வரோம்"ங்கற தோரணைல போய் மொதலா நின்னுடுவோம். கையில இருக்கற எல பூராம் பரப்பி போடச் சொல்லி (இதுல என்ன வெக்கம்?!) வாங்கிகிட்டு பின் பக்கமாப் போயி ஒக்காந்து சாப்டுட்டு திரும்பி வந்து, பாத்தரம் இன்னும் இருக்குன்னு தெரிஞ்சா மறுக்கா நின்னு மறுக்கா திட்டு வாங்கிக்கிட்டே இன்னொடு ரௌண்டு சாப்டுட்டு ஒரு ஏப்பத்தையும் விட்டுட்டு வீட்டுக்குப் போனா, டிஃபன் சாப்ட்டு ஸ்கூலுக்கு கெளம்ப சரியா இருக்கும்.

அக்ரஹாரம் அனுமார் கோவில்ல அடிக்கடி எதாவது காலட்சேபம், கச்சேரின்னு நடந்துக்கிட்டே இருக்கும். கூட்டம்னு ஒண்ணும் பெருசா இருக்காது. 25, 30 பேர் இருந்தாலே அதிகம். "ரெண்டு மாசமா பொண்ணு பாட்டு கத்துண்டு இருக்கா... சரளி வரிசை முடிஞ்சது... கொரல் எழஞ்சு வருது"ன்னு யாராவது அவுங்க வீட்டுப் பொண்ணை மேடையேத்தி விட்ருவாங்க. அது பாவம் கடேசி லைன்ல ஒக்காந்து கண்ணை உருட்டி உருட்டி மெரட்ற அப்பாவப் பாத்துக்கிட்டே எதாவது பாடும். ஸ்ருதி, ராகம், தாளம் இதெல்லாம் பாக்காம இருந்தா, அது பாடற பாட்டு (!!) நல்லா இருக்கும். இல்லேன்னா கேக்கறவங்க படற பாடு இருக்கே....

சரி, விஷயத்துக்கு வரேன். எங்க சித்தப்பாவுக்கு உடுக்கம்பாளையத்துல இருந்து வல்லக்குண்டாபுரத்துக்கு ட்ரான்ஸ்ஃபர் ஆயிருச்சு. சித்தப்பா, சித்தி ரெண்டு பேருமே ஒரே ஸ்கூல்ல வாத்தியாருக. சித்தப்பா பசங்களும் ஹை ஸ்கூல்ல படிக்கிறதால உடுமலைக்கே வீடு மாத்தி வந்துட்டாங்க. அக்ரஹாரத்துலதான் வீடு. அவருக்கு பாட்டுல நல்ல இன்ட்ரஸ்ட். அதுவும் சீர்காழி கோவிந்தராஜன் பாட்டுன்னா அப்பிடியே சொல்லு பிசகாம அதே கொரல்ல நல்லா கணீர்னு பாடுவாரு. கண்ணை மூடிக்கிட்டு கேட்டா, சீர்காழி பாடற மாதிரியே இருக்கும். அனுமார் கோவில் கச்சேரிக வேற அவர உசுப்பி விட்ருச்சு. விட்டேனா பார்!னு 'கமிட்டி' ஆளுகளோட சோடி சேந்துகிட்டாரு. அப்பப்ப இவரையும் மேடையேத்தி உட்ருவாங்க. இவுரும் அருமையா சீர்காழி பாட்டா பாடினதுல கூட்டமும் கொஞ்சம் சேர ஆரம்பிச்சுது. 'சீர்காழி எதிரொலி'ன்னு பட்டம் வேற குடுத்தாங்க.

நானும் பாலிடெக்னிக் படிச்சுட்டு வேலை தேடி அலைஞ்சுக்கிட்டிருக்குபோது, நெதம் சாயங்காலமானா அவுங்க வீட்டுக்கு போயிர்றது. அண்ணனும் ஒரு மில்லுல ஆடிட்டரா இருந்தாரு. அவுருக்கு செஸ் வெளயாட்டுன்னா உசுரு. 6 மணி போல வந்துட்டார்னா நானும் அவுரும் வாசத் திண்னைல போர்ட வெச்சுக்கிட்டு நேரம் போறது தெரியாம வெளயாடிக்கிட்டுருப்போம். சித்தப்பா உள்ள ஆர்மோனியத்த வெச்சுக்கிட்டு ப்ரேக்டீஸ் பண்ணிகிட்டுருப்பாரு.

ஒருநா அண்ணன் வர லேட்டாயிரும்னு சொல்லிட்டாரு. சித்தப்பா மட்டும் தனியா வழக்கம் போல ப்ரேக்டீஸ்ல இருந்தாரு.

"வாடா.... அம்பி இன்னிக்கு வர லேட்டாகும்... ஒக்காரு... தனன்னன்னன்ன்ன..... காலத்தை உருவாக்கும் காரணனே... "

"எப்ப வருவான்?"

"9 மணி ஆகும்னான். சும்மாத்தானெ இருக்க... அப்பிடி பாட்டு கத்துக்கோயேன்.. வா வா நானே சங்கீதம் சொல்லித் தரேன்..."

நமக்கும் இதுக்குள்ள ஒரளவுக்கு கர்னாடக சங்கீதம் மேல ஒரு 'இது' இருந்துது. சரி...கேப்பமேன்னு ஒக்காந்துட்டேன்.

"உனக்கு என்ன கட்டை வருதுன்னு பாப்பமா... எங்க...பாடு..சாஆஆஆ"

"சாஆஆஆ"

"பாஆஆஆ"

"பாஆஆஆ"

"சாஆஆஆ"

"சாஆஆஆ"

"ம்ம்ம்ம்...1 1/2 க‌ட்டை... கொர‌ல் ரொம்ப‌ ஒட‌ஞ்சு போச்சு... பாட‌ப் பாட‌ ச‌ரியாயிடும்"

"சிம்பிளா சொல்லித் த‌ரேன்... இப்ப‌ மொத‌ல்ல‌ ம‌ல‌ஹ‌ரி...பாரு...வெள்ளை, க‌ருப்பு, வெள்ளை, க‌ருப்பு, வெள்ளை, க‌ருப்பு, வெள்ளை, க‌ருப்பு... அப்பிடியே பின்னால‌ வ‌ர‌ணும்... புரிஞ்சுதா?"

"................"

"என்னடா முழிக்கற.... வெள்ளை, கருப்பு, கருப்பு, வெள்ளை வெள்ளை, கருப்பு, கருப்பு... சங்கராபரணம்"

இவ்வளவு ஈஸியா இருக்கு...இதுக்கா சங்கர சாஸ்திரி மூணு மணி நேரப் படத்துல அப்பிடி உசுர விட்டாரு?ன்னு நமக்கு யோசனை.

"இப்ப கருப்பு, கருப்பு....................இது கல்யாணி"

"..........." நல்லவேளயா அண்ணன் அதுக்குள்ள வந்துட்டாரு.

"மாட்னியா? நன்ன வேணும்... அப்பா... ரிட்யர் ஆனப்பறம் கழுத்துல மாட்டிக்க‌றா மாதிரி சின்ன ஆர்மோனியமா வாங்கித் தரேன்.. பீச் தாம்பரம் ரூட்டுக்கு சீசன் பாஸ் வாங்கித் தரேன்... மேல கீழ போய் சீர்காழியே வந்து போதும்கற வரைக்கும் பாடிண்டே இரு"

"போடா..ஞானசூன்யம்.. ஒனக்கென்ன தெரியும்... அவனுக்கு இன்ட்ரெஸ்ட் இருக்கு.. கத்துத்தர நான் இருக்கேன்... பாடிட்டுப் போறான்.. போய் வேலயப் பாரு"

"ஆமாண்டா சீர்காழி எதிரொலிக்கு எசப்பாட்டுன்னு பட்டம் வாங்கிக்கோ... ஒழுங்கா வந்து செஸ் வெளயாடு... பாடறானாம்"

"இல்ல... நெஜமாவே இன்ட்ரஸ்டா இருக்கு... தெனம் ஒரு 1/2 மணி நேரம் கத்துக்கறேனே..."

"பாரு... பத்தே நிமிஷத்துல அவன கட்டிப் போட்டுட்டேன் பாரு.. என் சங்கீதத்தோட மகிமை... அடுத்த ஹனுமத் ஜெயந்திக்கு இவன் பாடறான்.. நானாச்சு... நீ மட்டும் தெனம் வந்துடு"

"ஆகட்டும் சித்தப்பா... இன்னிக்கு இது போதும்.. நாளைலேந்து..."

"பாரு அம்பி... அவனை நீதான் கெடுக்கற... சிம்பிள்.. கருப்பு வெள்ள இத வெச்சே சொல்லித் தந்துடுவேன்"

இப்பிடியே கொஞ்ச நாள் ப்ளாக் & ஒயிட்ல பாடம் (!!) நடந்துது. நமக்கோ கலர் கலரா கனவு. ஹனுமத் ஜெயந்தில பாடறோம், கோவிலுக்கு உள்ள, வெளிய வீடுகள்ல, தெருவுலன்னு 1000 பேர் நாம பாடறத கேக்கறாங்க. நல்லா பாடிட்டுருக்கறப்ப யார் அபஸ்வரமா....டர்ர்ர்ர்ர்ர்.....

"நாசமாப் போச்சு.. ஏண்டா... இப்பிடியா போட்டு அமுக்குவ, துருத்தியே கிழிஞ்சு போச்சு பாரு.. நல்ல ஆர்மோனியம்... இப்ப இத சரி பண்ண பழனிக்கு எடுத்துண்டு போயாகணும்..."

அத்தோட நம்ம சங்கீதப் பாடமும் டர்ர்ர்ர்ர்ர்ர்... சரி...இனிமே சமுதாயத்தை சோதிக்க வேண்டாம்... கேக்கறதோட நிறுத்திக்குவோம்னு...

சங்கீதத்துக்கு "மங்களம்...சுப மங்களம்"
(மொளைப்போம்...)

Wednesday, September 3, 2008

மொளச்சு வரும்போது...3

பழய பதிவுக இங்க ...1 ...2

பெரிய கவுண்டர் வீட்டுல கெணறு இருக்குன்னு சொன்னொமில்ல... அது கூட கவுண்டர் மனசு மாதிரியே ரொம்ப பெருசு. ரொம்ப ஆழம் கூட. ஒரு 50 அடி ஆழம் இருக்கும். வெய்ய காலத்துல 30 அடி கீழ தண்ணி இருக்கும். மழக்காலத்துலயும், பக்கத்துல இருக்கற ஒட்டுக்கொளத்துக்கு தண்ணி வரத்து (திருமூர்த்தி மலையிலேருந்து உடுமலை வாய்க்கால் வழியா) அதிகமா இருக்கும்போதும், ஒரு ரெண்டு மூணு அடி கீழயே தண்ணிய பாக்கலாம். இப்பிடி தண்ணி மட்டம் மேல கீழ இருக்கும்கறதால மோட்டார் பம்புக்காக கெணத்துக்குள்ள மூணு நாலு இடத்துல கான்க்ரீட் 'பெட்' போட்டுருக்கும். அப்பப்ப பம்ப்பை மாத்தி மாத்தி வெச்சுக்குவாங்க. உள் செவுரு சைடால படிக மாதிரி வெட்டி வெச்சுருக்கும். அப்பிடி அங்கங்க வளந்துருக்கற செடிகள புடிச்சுக்கிட்டே மெள்ள எறங்கணும்.

இந்த எடத்துல எங்க அப்பாவைப் பத்தி கொஞ்சம் தெரிஞ்சுக்கணும். அவுரு மிலிட்டரியில இருந்தபோதே பெரிய நீச்சல் வீரர். பின்னால சென்னை ஐ.ஐ.டி.ல நீச்சல் ப்யிற்சியாளராவும் இருந்தாரு. அதோட மாநில அளவுல 4 முறை டைவிங் சாம்பியன் வேற. அதுனால ஊர்ல பல பேர் அவரை இந்த கெணத்துக்கு கூட்டிட்டு வந்து நீச்சல் கத்து தர சொல்லுவாங்க. அப்போ என்னை, அண்ணனை, அண்ணனோட ஃப்ரெண்டுகளயெல்லாமும் கூட்டிக்கிட்டு போவாரு. ரொம்ப ஸ்ட்ரிக்ட் வாத்தியாரு. நமக்கா தண்ணிய பாத்தாலே ஒடம்பு மரக்கட்ட மாதிரி வெறச்சுக்கும். அப்பறம் எங்க நீச்சல்? அப்பாவோட கூச்சல்தான் அதிகமா இருக்கும். அண்ணனும், ஃப்ரெண்டுகளும் திட்டு வாங்க பயந்துக்கிட்டே ஒழுங்கா கத்துக்கிட்டாங்க. நாம சிங்கம்ல? இதுக்கெல்லாம் பயந்துருவோமா? நல்லா 'கடப்பாரை' நீச்சல் கத்துகிட்டம்ல. கெணத்துல இருந்து எறைக்கிற தண்ணி மொதல்ல ஒரு பெரிய தொட்டில விழுந்து அப்பறமா வாய்க்காலுக்கு போகும். நான் அந்த தொட்டியில போய் இடுப்பளவு தண்ணியில நல்லா ஊறுவேன். 'பொன்னொன்று கண்டேன் ; பெண்ணங்கு இல்லை" பாட்டுல சிவாஜியும், பாலாஜியும் நீச்சல் கொளத்துல ஊறுரதை பாத்திருக்கீங்களா? அதே மாதிரி. ஆன என்னவோ மணிக்கணக்கா நீந்தி களைச்சு போனவனாட்டம் கவுண்டர் வீட்டுல திங்கற தீனிக்கு கொறச்சல் இருக்காது. ஆனா நான் கடசி வரைக்கும் எங்க அப்பா கிட்ட கத்துக்கவே இல்ல. பின்னால என் ஃப்ரெண்டுக கத்து குடுத்தாங்க.

கத்தாழ பெருசா வள்ந்த்ததும் நடுவால இருந்து பெரிய ஒரு தண்டு வளந்து பூ பூக்கும். அந்த தண்ட எடுத்து ரெவ்வெண்டு அடியா வெட்டி வெயில்ல காயப் போடுருவாங்க. நல்லா காஞ்சு அது தக்கை மாதிரி எடையே இல்லாம லேசா ஆயிரும். இத கத்தாழ முட்டின்னு சொல்லுவாங்க. மூக்கணாங் கயிறுக்கான பஞ்சுக் கயிற இந்த முட்டியோட ஒரு பக்கத்துல கட்டிட்டு இன்னொரு முனைய அப்பிடியே விட்டுருவாங்க. நீச்சல் கத்துக்கிறவங்க இந்த முட்டிய முதுகுப் பக்கமா, இடுப்பு கிட்ட வெச்சு வயிரோட சேத்து கட்டிகிடணும். அப்பறம் 100 அடி ஒசரத்துல இருந்து குதிச்சாலும் மெதந்துக்கிட்டே இருக்கலாம். மூழ்கவே மாட்டீங்க. அப்பிடியே கைய கால அடிச்சு கத்துக்க வெண்டியதுதான். ரெண்டு நாளைக்கு அப்பறம், வெறும் கயித்த இடுப்புல கட்டீட்டு இன்னொரு முனைய யாராவது ஒருத்தன் கரையில இருந்து புடிச்சுக்குவான். நாம அப்பிடி நீந்தி வரணும். எதாவதுன்னு அவன் கயித்தப் புடிச்சு இழுத்து கரை சேத்துருவான். இப்பிடி ஒரு ரெண்டு நாள். அவ்வளவுதான். மறு நாள் தனியாவே நீச்சல் அடிக்கணும். இல்லனா பசங்க பேசுர பேச்சுக்கு, பூக்கட்ற நூல்லயே தொங்கி உசுர விட்டுரலாம்.

இப்பிடி கத்துக்கும்போது பின்னால வந்து முட்டிய கழட்டி விட்டுடரது, கரையில நின்னு கயிரு புடிக்கறவன் அப்பிடியே விட்டுட்டு போகறது, தண்ணிப் பாம்புகளுக்கு நடுவுல குதிக்கறது, அது கடிச்சுதுன்னா கடிச்ச எடத்துல சுண்ணாம்பு வெச்சுக்கிட்டு மறுபடி குதிக்கிறது, தண்ணிக்குள்ளார போய் அடுத்தவன் அண்ட்ராயர அவுக்கறதுன்னு ஒரே களேபரமா இருக்கும். ஒரு பெரிய மூங்கில போட்டு ரெண்டு மூணு பேர அத புடிச்சுக்கிட்டே கத்துக்கிட்டு இருப்பாங்க. அந்த மூங்கிலோட ஒரு பக்கமா போய் நாலு பசங்க தொங்குவானுங்க. கத்துக்குட்டிகள்லாம் அலறுரதை பாக்கரதுல தனி சொகம்.

நீச்சல் கத்துகிட்டப்பறம் ஊர்ல ஒரு கெணறு, வாய்க்கால், ஏரி, கொளம், குட்டைன்ன்னு எதயும் விட்ரதில்ல. எங்கியாவது ஒரு ஆள் ஆழத்துக்கு தண்ணி தேங்கியிருந்தா போதும். ஒடனே வானரங்க குதிச்சு கும்மாளம் போட ஆரம்பிச்சுரும். ஒரு நாளைக்கு பத்து தடவ ஒரே ட்ராயரயும் சட்டயயும் காயவெச்சு காயவெச்சு போட்டா 'எலி எதாவது நம்ம சட்டப் பாக்கெட்டுக்குள்ளயே செத்து போய் இருக்கா'ன்னு மத்தவங்களுக்கு சந்தேகம் வர அளவுக்கு நம்ம மேலேருந்து ஒரு "வாசனை" கிளம்பும். வீட்டுக்குள்ள நொழயும்போது நமக்கு முன்னாடி நம்ம 'வாசனை' போகும். லட்சார்ச்சனை ஆரம்பிக்கும். நாம அப்பிடி எதுவுமே நடக்காத மாதிரி நேரா பின்பக்கம் போயி ஒரு குளியலப் போட்டுட்டு அப்பிடி பரிதாபமா ஒரு பார்வை பாத்துட்டு, தட்டுல விழறதை சாப்டுட்டு மறுபடி க்ரவுண்டுக்கு ஜூட்...அதுதான் நீங்க மொத பாகத்துல படிச்சுருப்பிங்களே...

இந்த சமயத்துலதான் சித்தப்பா ஒருத்தரு நமக்கு சங்கீதத்தை அறிமுகம் செஞ்சு வெச்சாரு. அதப் பத்தி....

இன்னும் மொளைப்போம்...

Saturday, August 23, 2008

மொளச்சு வரும்போது....2

உடுமலப்பேட்டைய சுத்தி இருக்கற 18 பட்டி கெராமங்களுக்கும் பஞ்சாயத்து யூனியன் ஆபீஸ் தளி ரோட்டுல இருக்கு. அதுக்கு பின்னால ஒரு கிலோ மீட்டர் போல போனா ஒட்டுக்குளம் வரும். அதுக்கு பக்கத்துல பெரிய கவுண்டர் தோட்டம். கவுண்டர் எங்க அப்பாவோட நண்பர். எப்பல்லாம் கரும்பு வெளஞ்சு அறுக்கறாங்களோ, சக்கர மில்லுக்கு அனுப்பிச்சது போக, வெல்லம் காச்சறதுக்காக கொஞ்சம் ஒதுக்கி வெச்சுருவாங்க. ஆலை போடறாங்கன்னு ந்யூஸ் வந்தாச்சுன்னா, ஒடனே வீட்டுலேருந்து ஒரு தூக்குபோசிய நம்ம கைல குடுத்து தேன்பாகு எடுத்துட்டு வர சொல்லிடுவாங்க. ரொம்ப ஆர்வமா எங்க அண்ணன் கூட கெளம்பிருவேன். சொன்ன ஒடனே கெளம்பறதுக்கு காரணம் இருக்கு. அங்க போனா கரும்பு ஜூஸ் கெடைக்கும். அதோட பக்கத்துல வாய்க்கால் ஓரமா இருக்கற நெகாப்பழ மரத்துல ஏறி பழம் பறிச்சு திங்கலாம். கவுண்டர் வீட்டுல வேற தெனமாவும் கடுங்காப்பியும் கெடைக்கும். இதெல்லாம் நெனப்பு வந்தொடனே, நாக்கை சப்பு கொட்டிக்கிட்டு ஒரே ஓட்டம்.

இந்த வெல்லம் காச்சறதே ஒரு ரொம்ப சுவாரசியமா இருக்கும். அனில் ஆயில் இஞ்சினோட பெல்ட் போட்டு கிரஷர் ஒண்ணு ஓடிக்கிட்டே இருக்கும். சோகையை வெட்டி, கணுவெல்லாம் சீவி நீள நீளமா கரும்புகள அடுக்கி வெச்சுருப்பாங்க. ரெவ்வெண்டு கரும்பா கிரஷர்குள்ள பல்லுகளுக்கு நடுவால குடுத்தா, அப்பிடி கரகரன்னு ஜூஸ புழிஞ்சுட்டு சக்க வெளிய வரும். மறுபடி ஒருவாட்டி புழிஞ்சு எடுப்பாங்க. பெரிய கார்ப்பொரேட்டுகள்லாம் இன்னிக்கு சிறு வியாபாரிகள புழியற மாதிரின்னு வெச்சுக்கங்களேன். நம்ம போயி பக்கத்துல நின்னோம்னா கூட ஒரு எலுமிச்சம் பழம், இஞ்சி, புதினாவெல்லாம் வெச்சு ஸ்பெஷல் ஜூஸு கெடைக்கும். அந்தப் பக்கம் சாளைக்குள்ள பெரிய பெரிய (பெரியன்னா...ஒரு 8 அடி விட்டமிருக்கும்) கடாய்ங்க அடுப்புல போட்டிருப்பாங்க. இந்த புழிஞ்ச சாற பக்கிட்டுகள்ள எடுத்துக்கிட்டு போயி, அந்த கடாய்ல ஊத்தி காச்ச ஆரம்பிப்பாங்க.

சைடுல ஒரு பக்கெட்ல காட்டு வெண்டக்காச் செடியோட தண்டுகள வெட்டி தண்ணீல ஊறப்போட்டு நல்லா கலக்கி, அது கொழ கொழன்னு ஒரு கூழ் பதத்துல இருக்கும். கரும்புச் சாறு நல்லா கொதிச்சு வரும்போது இந்த கலவையையும் அதுல ஊத்தீருவாங்க. சாறுல இருக்கற அசுத்தத்த எல்லாம் இது தனியா பிரிச்சு, அப்பிடி நொர மாதிரி மேல மெதந்துக்கிட்டு வரும். அத அப்பிடியே ஒரு பெரிய அகப்பையால அள்ளி எடுத்துருவாங்க. ரெண்டு ஆளுக இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் நின்னுக்கிட்டு கொதிக்கிற சாற கலக்கிக்கிட்டே இருப்பாங்க. இன்னும் நல்லா கொதிச்சதும், ஒண்ணு ரெண்டு பாக்கெட் பொடிகள அதுல சேப்பாங்க. (அது என்ன பவுடர்கன்னு பின்னால தெரிஞ்சுது. சோடியம் ஹைட்ரோசல்பைடும், ஃபார்மல்டிஹைட் சல்ஃபாக்சிலேட்டும்) காட்டு வெண்டக்காயால எடுக்க முடியாத அசுத்தங்கள இது எடுத்துரும்.

இதுக்குள்ள அச்சுவெல்லம் போடற சட்டங்க, மண்ட வெல்லம் புடிக்கிற ஆளுங்க எல்லாம் ரெடியா இருக்கும். கொதிக்கிற சாற டின்னுல எடுத்திக்கிட்டு போயி அச்சுவெல்ல சட்டத்துல ஊத்துவாங்க. (சில சமயம் ஊத்தும்போதே அதுல பொட்டுகடலய கலந்து ஊத்தறதும் உண்டு. அது ஒரு தனி டேஸ்டா இருக்கும்.) மண்ட வெல்லம் புடிக்கிறவங்கதான் பாவம்....சுட சுட அப்பிடி திருப்பதி லட்டு புடிக்கிற மாதிரி உருட்டி உருட்டி காய வெப்பாங்க. ரொம்ப கஷ்டமான வேலை. இதயெல்லாம் ஆ..ன்னு வாய பொளந்துக்கிட்டு பாத்துக்கிட்டிருப்போம். இந்த பொடிக சேப்பாங்கன்னு சொன்னோமில்ல, அதுக்கு முன்னாடி கொஞ்சம் எடுத்து நம்ம தூக்குபோசியில ஊத்தி வெச்சுருவாங்க. (இதுக்குத்தானே போனது!)

ஆனா பாருங்க, இதுக்குள்ள நாம ஒரு 2 லிட்டர் ஜூஸு குடிச்சு, 2 டசன் அச்சு வெல்லம் சாப்ட்டு, 1 கிலோ நெகாப்பழம் தின்னு 'அது வயிறா வெள்ளாவிப் பானையா' ங்கிற மாதிரி இருக்கும். ஒருவழியா தேன்பாக எடுத்துக்கிட்டு வீட்டுக்கு கெளம்புவோம். அம்மாவுக்கும் தெரியும், இந்த வானரங்க என்னல்லாம் கூத்தடிச்சிருக்கும்னு. நம்ம ஊத்த வாய்தான் நெகாப்பழம் தின்னு தின்னு 'ஊதா' வாய் ஆகியிருக்குமே. மறுநா காப்பில நிச்சயம் 2 ஸ்பூன் வெளக்கெண்ண கலந்திருக்கும். இல்லாட்டி இந்த காயலாங்கடையயெல்லாம் கழுவி சுத்தம் பண்றது ரொம்ப கஷ்டம்.

தோட்டத்துக்கு போற வழில, தென்னந்தோப்புல சில மரங்கள்ல கள்ளுக்காக தென்னங்கைகள வெட்டி பானை சொருகி வெச்சுருப்பாங்க. அண்ணனுக்கு திடீர்னு ஒரு ஐடியா. கல்ல வீசி ஒரு பானைய ஒடச்சா என்னன்னு. ரெண்டு மூணு கல்ல விட்டெறிஞ்சு பாத்தோம். ரொம்ப ஒசரம்கறதால ஒரு கல்லும் கிட்ட கூட போகல. ஆனாலும், தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் மாதிரி எறிஞ்சுக்கிட்டே இருந்ததுல ஒரு கல்லு போயி பானைல பட்டு ஓட்டை போட்டிருச்சு. ஆனா சத்தம் நல்லா கேட்டிருச்சு. அந்தப்பக்கம் தேங்கா உரிச்சுக்கிட்டு இருந்தவங்க பாத்துட்டாங்க. ஒடியாந்து ரெண்டு பேரையும் புடிச்சுட்டாங்க. கள்ளு 6 ருவா, பான ஒண்ணார் ருவான்னு கணக்குப் போட்டு ஏழார் ருவா கேட்டு மிரட்றாங்க. நாம வேற சத்தமா அழ ஆரம்பிக்க, அந்தப் பக்கமா சைக்கிள்ள வந்த இன்னொரு கவுண்டர் (அவுரும் அப்பாவுக்கு நண்பர்தான்...உரக்கடை வெச்சுருக்காரு) பாத்துட்டு, அவுங்க கிட்ட சொல்லி விடுவிச்சு கூட்டிக்கிட்டு போயி அவுங்க வீட்டுல காப்பியெல்லாம் குடுத்து அனுப்பிச்சாரு. ஆனா நானும் அண்ணனும் நடந்தத வீட்ல சொல்லல. உரக்கடை கவுண்டரும் அப்பா கிட்ட சொல்லவே இல்ல.

பெரிய கவுண்டர் தோட்டத்துல ஒரு பெரிய கெணறு இருக்கு. அதுல அடிச்ச கூத்துக.... சொல்றேன் சொல்றேன்....

இன்னும் மொளைப்போம்...

Wednesday, August 20, 2008

நீங்க ஏமாந்தவரா, ஏமாறுபவரா?

ரெண்டும் ஒண்ணுதானடான்னு நீங்க மெர்சலாயிட்டீங்களா? நான் ரெண்டுமே. நம்ம நண்பர்களும் நம்மளை மாதிரிதான் இருப்பாங்களோன்னு ஒரு 'இது'. ஹி ஹி....கோச்சுக்காதீங்க... நாமல்லாம் அப்பிடியா பழகறோம்?

அது என்னன்னா, நாம சின்ன வயசுல இருந்தே கொடையப்ப வள்ளலா.... நெத்திலயே வேற இவுரு பெரிய I.V.சசி ((இளிச்ச வாயி) அப்பிடின்னு பச்ச குத்தியிருக்கா...போற வாறவங்களுக்கெல்லாம் இவன ஒரு தட்டு தட்டிப் பாத்தா என்னன்னு தோணும் போல. ஒரு தடவை என்ன ஆச்சு (அட....நாம ஸ்கூல்ல நல்ல புள்ளயா இருக்கயிலன்னு சொல்லணுமாக்கும்!) வீட்ல குமுதமும், தினமணி கதிரும் (அப்ப அது தனி புத்தகம்) வாங்கிட்டு வர சொன்னாங்க. அது அப்பொ பஸ் ஸ்டாண்டுல இருக்கற சாரதா புக் ஸ்டால்லதான் வாங்கறது வழக்கம்.

பஸ் ஸ்டாண்ட் கிட்ட போகும்போது, நம்ம தலைக்குப் பின்னால சுத்தற ஒளி வட்டத்த பாத்துட்டு ஒரு ஆளு நம்ம பக்கம் வந்தாரு. நல்லா வாட்ட சாட்டமா வேற இருந்தாரா, நமக்கு உள்ளூர ஒரு நடுக்கம்.

'டேய்...எங்கடா போற? ம்ம்ம்...கேக்கறனில்ல?'

'பொஸ்தகம் வாங்க'

'ம்ம்ம்...உள்ள பாத்தியா...பூராம் போலீசு...உள்ள போனா கையில கயிறு மாட்டீருவாங்க...தெரியுமில்ல'

'.......'

'எங்கிட்ட காசைக் குடு... நான் போய் வாங்கீட்டு வர்றேன்... சீக்கரம்'

'.....'

'பொஸ்தகம் வாங்கணுமா வேணாமா? ம்ம்ம்ம்...'

'வேணும்'

'அப்ப குடு காச...'

'இந்தாங்க...ஒரு குமுதம் அப்பறம் தினமணி கதிரு'

'இங்கியே நில்லு... உள்ள வராத... போலீசு...பாத்தியல்ல...'

'செரி...'

அம்புட்டுதேன்... இன்னும் என்ன கதை கேக்கறீங்க... என்ன... வீட்ல ஒரு ரூல் தடி ஒடஞ்சது ஒரு எக்ஸ்ட்ரா நட்டம். அங்க அன்னிக்கு போலீசு எதுக்கு வந்தது, ஏன் வந்ததுன்னு இன்னிக்கு வரைக்கும் தெரியாது.

இது ஆச்சா...ஒரு 4 வருசம் முன்னால, மெட்ராஸ் அசோக் பில்லர் சரவண பவன்ல காலைல டிஃபன் சாப்டுட்டு வந்து பைக் ஸ்டார்ட் பண்ணும்போது, ஒரு நடுத்தர வயசுக்காரர் பக்கத்துல வந்தாரு. பாக்க ஜென்டில்மேன் (ஆமா...அர்ஜுன்....உங்களயெல்லாம்....) மாதிரி இருந்தாரு.

'சார்...ஒரு ஸ்மால் ரிக்வஸ்ட்'

இவுரு கூட பேசலாமா வேண்டாமான்னு யோசிக்கும்போதே...

'பயப்படாதீங்க சார், நான் கடலூர்ல கவர்மென்ட் காலேஜுல லெக்சரரா இருக்கேன். பேரு கண்ணன். அம்மாவ இப்ப்த்தான் பஸ் ஏத்தி விட்டேன். எவனோ பர்ச அடிச்சுட்டான். கைல பைசா இல்ல. இப்பொ ஒரு 40 ரூபா இருந்தா கடலூர் போயிடுவேன். போனதும் உங்களுக்கு மணி ஆர்டர் அனுப்பிடறேன். வேற யார்ட்டயும் கேக்க கூச்சமா இருக்கு. கேவலமா பேசறாங்க. ப்ளீஸ் சார்...'

சொல்லும்போதே கண்ல தண்ணி.... இது என்னடாது வம்பா போச்சு..... நமக்குள்ள இருக்கற பாரி, ஓரி, காரி, பேகன், ஆய் எல்லாம் 'அய்யய்யோ.. பாவமே... என்னடா யோசிக்கற... குட்றா... குட்றா..' ங்கறாங்க. ஒடனே கர்ணன் மாதிரி ஒரு 50 ரூபா எடுத்து குடுத்துட்டோம்ல.

'சார்... ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் சார்...உங்க அட்ரஸ் குடுங்க சார்... ப்ளீஸ்... போனதும் மொத வேலயா திருப்பி அனுப்பிடறேன் சார்"

'எழுதிக்குங்க....... .... ..... ..... ... 600089 '

'சரியா பாருங்க சார்'

'ஒக்கே. சரியா இருக்கு.'

'தேங்க்ஸ் சார். வயசுல ரொம்ப சின்னவங்க நீங்க... இல்லாட்டா கால்ல விழுந்திருப்பேன்"

'அட...அதெல்லாம் வேண்டாம் சார்... பாத்து போங்க.. ஜாக்ரதையா இருங்க'

எதோ ஒரு பஸ் வந்ததும், அவர் அத தொரத்திகிட்டுப் போயிட்டார்.

மணி ஆர்டரா ? ம்ம்ம்....வரும்....நெனச்சுக்கிட்டிருங்க. அதுக்கப்பறம் நான் 4 வீடு மாறியாச்சு. ஆனா அந்த சம்பவத்துக்கு அப்பறம் ஒரு மாசம் கழிச்சு அதே எடத்துல, அதே ஆள வேற ஒருத்தர் கிட்ட பேசிக்கிட்டு இருக்கறத பாத்தேன். அந்த அப்பாவியயாவது காப்பாத்தலாமேன்னு கிட்ட போனேன். ஆனா...கிளிக்கு ரக்க மொளச்சு பறந்தே போயிடுத்து. அந்த அப்பாவி கிட்ட விஷயத்த சொல்லிட்டு, சரவண பவன் மேனேஜர் கிட்டயும், செக்யுரிடி கார்டு கிட்டயும் சொல்லிட்டு கெளம்பிட்டேன். அவங்களும் இன்னொரு தடவ அந்த ஆளப் பாத்தா நாங்க கவனிச்சுக்கறோம்னு சொல்லிட்டாங்க.

அதுக்கப்பறம் பல பேர் பல தடவை வந்து உதவி கேட்டிருக்காங்க. ரொம்ப சூதானமா கண்டுக்காம போயிடுவேன். சில சமயம் 'இது ஒரிஜினலோ'ன்னு தோணும். ஆனாலும் இன்னொரு தடவை ஏமாற விருப்பம் இல்ல.

நீங்க எப்பிடி?