Showing posts with label ஆட்டை. Show all posts
Showing posts with label ஆட்டை. Show all posts

Wednesday, August 20, 2008

நீங்க ஏமாந்தவரா, ஏமாறுபவரா?

ரெண்டும் ஒண்ணுதானடான்னு நீங்க மெர்சலாயிட்டீங்களா? நான் ரெண்டுமே. நம்ம நண்பர்களும் நம்மளை மாதிரிதான் இருப்பாங்களோன்னு ஒரு 'இது'. ஹி ஹி....கோச்சுக்காதீங்க... நாமல்லாம் அப்பிடியா பழகறோம்?

அது என்னன்னா, நாம சின்ன வயசுல இருந்தே கொடையப்ப வள்ளலா.... நெத்திலயே வேற இவுரு பெரிய I.V.சசி ((இளிச்ச வாயி) அப்பிடின்னு பச்ச குத்தியிருக்கா...போற வாறவங்களுக்கெல்லாம் இவன ஒரு தட்டு தட்டிப் பாத்தா என்னன்னு தோணும் போல. ஒரு தடவை என்ன ஆச்சு (அட....நாம ஸ்கூல்ல நல்ல புள்ளயா இருக்கயிலன்னு சொல்லணுமாக்கும்!) வீட்ல குமுதமும், தினமணி கதிரும் (அப்ப அது தனி புத்தகம்) வாங்கிட்டு வர சொன்னாங்க. அது அப்பொ பஸ் ஸ்டாண்டுல இருக்கற சாரதா புக் ஸ்டால்லதான் வாங்கறது வழக்கம்.

பஸ் ஸ்டாண்ட் கிட்ட போகும்போது, நம்ம தலைக்குப் பின்னால சுத்தற ஒளி வட்டத்த பாத்துட்டு ஒரு ஆளு நம்ம பக்கம் வந்தாரு. நல்லா வாட்ட சாட்டமா வேற இருந்தாரா, நமக்கு உள்ளூர ஒரு நடுக்கம்.

'டேய்...எங்கடா போற? ம்ம்ம்...கேக்கறனில்ல?'

'பொஸ்தகம் வாங்க'

'ம்ம்ம்...உள்ள பாத்தியா...பூராம் போலீசு...உள்ள போனா கையில கயிறு மாட்டீருவாங்க...தெரியுமில்ல'

'.......'

'எங்கிட்ட காசைக் குடு... நான் போய் வாங்கீட்டு வர்றேன்... சீக்கரம்'

'.....'

'பொஸ்தகம் வாங்கணுமா வேணாமா? ம்ம்ம்ம்...'

'வேணும்'

'அப்ப குடு காச...'

'இந்தாங்க...ஒரு குமுதம் அப்பறம் தினமணி கதிரு'

'இங்கியே நில்லு... உள்ள வராத... போலீசு...பாத்தியல்ல...'

'செரி...'

அம்புட்டுதேன்... இன்னும் என்ன கதை கேக்கறீங்க... என்ன... வீட்ல ஒரு ரூல் தடி ஒடஞ்சது ஒரு எக்ஸ்ட்ரா நட்டம். அங்க அன்னிக்கு போலீசு எதுக்கு வந்தது, ஏன் வந்ததுன்னு இன்னிக்கு வரைக்கும் தெரியாது.

இது ஆச்சா...ஒரு 4 வருசம் முன்னால, மெட்ராஸ் அசோக் பில்லர் சரவண பவன்ல காலைல டிஃபன் சாப்டுட்டு வந்து பைக் ஸ்டார்ட் பண்ணும்போது, ஒரு நடுத்தர வயசுக்காரர் பக்கத்துல வந்தாரு. பாக்க ஜென்டில்மேன் (ஆமா...அர்ஜுன்....உங்களயெல்லாம்....) மாதிரி இருந்தாரு.

'சார்...ஒரு ஸ்மால் ரிக்வஸ்ட்'

இவுரு கூட பேசலாமா வேண்டாமான்னு யோசிக்கும்போதே...

'பயப்படாதீங்க சார், நான் கடலூர்ல கவர்மென்ட் காலேஜுல லெக்சரரா இருக்கேன். பேரு கண்ணன். அம்மாவ இப்ப்த்தான் பஸ் ஏத்தி விட்டேன். எவனோ பர்ச அடிச்சுட்டான். கைல பைசா இல்ல. இப்பொ ஒரு 40 ரூபா இருந்தா கடலூர் போயிடுவேன். போனதும் உங்களுக்கு மணி ஆர்டர் அனுப்பிடறேன். வேற யார்ட்டயும் கேக்க கூச்சமா இருக்கு. கேவலமா பேசறாங்க. ப்ளீஸ் சார்...'

சொல்லும்போதே கண்ல தண்ணி.... இது என்னடாது வம்பா போச்சு..... நமக்குள்ள இருக்கற பாரி, ஓரி, காரி, பேகன், ஆய் எல்லாம் 'அய்யய்யோ.. பாவமே... என்னடா யோசிக்கற... குட்றா... குட்றா..' ங்கறாங்க. ஒடனே கர்ணன் மாதிரி ஒரு 50 ரூபா எடுத்து குடுத்துட்டோம்ல.

'சார்... ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் சார்...உங்க அட்ரஸ் குடுங்க சார்... ப்ளீஸ்... போனதும் மொத வேலயா திருப்பி அனுப்பிடறேன் சார்"

'எழுதிக்குங்க....... .... ..... ..... ... 600089 '

'சரியா பாருங்க சார்'

'ஒக்கே. சரியா இருக்கு.'

'தேங்க்ஸ் சார். வயசுல ரொம்ப சின்னவங்க நீங்க... இல்லாட்டா கால்ல விழுந்திருப்பேன்"

'அட...அதெல்லாம் வேண்டாம் சார்... பாத்து போங்க.. ஜாக்ரதையா இருங்க'

எதோ ஒரு பஸ் வந்ததும், அவர் அத தொரத்திகிட்டுப் போயிட்டார்.

மணி ஆர்டரா ? ம்ம்ம்....வரும்....நெனச்சுக்கிட்டிருங்க. அதுக்கப்பறம் நான் 4 வீடு மாறியாச்சு. ஆனா அந்த சம்பவத்துக்கு அப்பறம் ஒரு மாசம் கழிச்சு அதே எடத்துல, அதே ஆள வேற ஒருத்தர் கிட்ட பேசிக்கிட்டு இருக்கறத பாத்தேன். அந்த அப்பாவியயாவது காப்பாத்தலாமேன்னு கிட்ட போனேன். ஆனா...கிளிக்கு ரக்க மொளச்சு பறந்தே போயிடுத்து. அந்த அப்பாவி கிட்ட விஷயத்த சொல்லிட்டு, சரவண பவன் மேனேஜர் கிட்டயும், செக்யுரிடி கார்டு கிட்டயும் சொல்லிட்டு கெளம்பிட்டேன். அவங்களும் இன்னொரு தடவ அந்த ஆளப் பாத்தா நாங்க கவனிச்சுக்கறோம்னு சொல்லிட்டாங்க.

அதுக்கப்பறம் பல பேர் பல தடவை வந்து உதவி கேட்டிருக்காங்க. ரொம்ப சூதானமா கண்டுக்காம போயிடுவேன். சில சமயம் 'இது ஒரிஜினலோ'ன்னு தோணும். ஆனாலும் இன்னொரு தடவை ஏமாற விருப்பம் இல்ல.

நீங்க எப்பிடி?