Sunday, November 23, 2008

ஹோட்டல் ர்வாண்டா

மிக சமீபத்தில் பார்த்த, உண்மை சம்பவங்களை ஒட்டிய இரண்டு படங்களைப் பற்றி உங்களோடு கட்டாயமாக பகிர்ந்து கொள்ள வேண்டும். நீங்கள் முன்னமே பார்த்ததாக இருக்கலாம். இரண்டு படங்களிலும் நிகழும் சம்பவங்கள் நம்மை ரொம்பவும் பாதிப்பது ஒருபுறம். ஒரு சிறந்த திரைப்படம் எப்படி இருக்க வேண்டும், அதன் குணாதிசயங்கள் என்ன, சொல்ல வந்ததை இதை விட சிறப்பாக சொல்ல முடியுமா, ஒரு உண்மைச் சம்பவத்தைக் கையாளும்போது எவ்வளவு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்ற பல கேள்விகளுக்கு இந்தப் படங்கள் பதிலளிக்கின்றன.

ஹோட்டல் ர்வாண்டா (Hotel Rwanda)உகாண்டா, காங்கோ, தான்சானிய நாடுகளுக்கு இடையே பல்லிடுக்குல மாட்டின மாதிரி இருக்கற ஒரு குட்டி மத்திய ஆப்பிரிக்க நாடு ர்வாண்டா. மத்த ஆப்பிரிக்க நாடுக போலவே இதுவும் ஒரு கலவர பூமி. ஹுடு (hutu)மற்றும் டுட்ஸி (tutsi) இன மக்களுக்கு இடையே தீராத சச்சரவு. ஹுடு இனத்தவர் டுட்ஸிக்காரங்களை 'கரப்பான்பூச்சி'ன்னு சொல்ற அளவுக்கு வெறுப்பு. ஒரு கட்டத்துல கலவரம் அதிகமாகி, ஹுடுக்கள் டுட்ஸிக்களை ஆயிரக்கணக்குல கொன்னு குவிக்கறாங்க. கையாலாகாத பூஞ்சை அரசு... ஐ.நா.அமைதி காக்கும் படை வருது. இங்கதான் கதை ஆரம்பிக்குது.

கதை நாயகன் பால் ருஸேஸபகீனா தலைநகர் கிகாலில இருக்கற 'மீ கொலீன்'ங்கற நட்சத்திர ஹோட்டலோட மேனேஜர். ஹுடு இனத்தவர். ஆனா மனைவி தாத்ஸியானா டுட்ஸி இனம். ஹோட்டலை பாதுகாக்கறதுக்காக உள்ளூர் சண்டைகட்சி தலைவர்க, ராணுவ தளபதிகன்னு எல்லாருக்கும் பணம் குடுத்து, ஊத்திக் குடுத்துன்னு ஒரு மாதிரி 'ரேப்போ' மெய்ண்டைன் பண்றாரு. கூடவே தன்னோட குடும்பத்தைக் காப்பாத்தணும்னு ஒரு சுயநலம். ஒரு நாள் கலவரம் அதிகமாகி, பால் தங்கியிருக்கற பகுதில உள்ள எல்லா டுட்ஸிக்களையும் அடிச்சு துவம்சம் பண்ணி, பால் குடும்பத்தையும் சேர்த்து இழுத்துக்கிட்டு போறாங்க. ஆனா பால் கலவரக்காரர்களோட பேரம் பேசி ஹோட்டலுக்குப் போய் கொஞ்சம் பணம் எடுத்து அவங்களுக்குக் குடுத்து எல்லாத்தையும் மீட்டு ஹோட்டல்லயே தங்க வெக்கறாரு.

கொஞ்சம் கொஞ்சமா ஹோட்டல் ஒரு அகதிகள் முகாம் மாதிரி ஆகுது. கலவரக்காரர்கள் தொந்தரவும் அதிகம். ராணுவமும் கண்டுக்காம இருக்குது. பால் தன்னுடைய சக்திக்கு மீறி பலருக்கு லஞ்சம் (பணம், தண்ணி)குடுத்து எப்பிடியோ ஐ.நா. படை உதவியோட ஒரு லாரில எல்லாத்தையும் காப்பாத்த முயற்சி செய்ய, சக ஊழியன் ஒருத்தன் எட்டப்பனா மாறி கலவரக்காரர்களுக்கு தகவல் குடுத்து அந்தத் திட்டத்தை முறியடிக்கறான். பிறகு ஹோட்டலுக்கு தண்ணீர், மின்சார சப்ளை நிறுத்திடறாங்க. ஆனாலு பால் தன்னோட புத்தி சாதுரியத்தாலயும், தைரியத்தாலயும் ஹோட்டல் முதலாளிக, கலவரக்காரர்க, ராணுவத்தினர்னு எல்லார் கிட்டயும் நைச்சியமா பேசி சமாளிக்கறது ஹைலைட். கடைசியா ஒண்ணும் முடியலங்கறபோது தைரியமா ராணுவ தளபதி பிஸிமுங்கோவை ப்ளாக் மெய்ல் பண்ணி மக்களைக் காப்பாத்தறபோது ஒரு தனி மனிதனோட வீரம் அதிர வெக்குது. ஒரு வழியா ஐ.நா.படை உதவியோட உயிரிழப்பு இல்லாம எல்லா மக்களும் பாதுகாப்பா அடுத்த ஊருக்கு போயிடறாங்க.

ஹோட்டலுக்கு காய்கறி, அரிசி வாங்கறதுக்காக கலவரக்காரர்களோட தலைவன் ரடகுண்டா கிட்டயே போய் அதிகப் பணம் குடுத்து வாங்கிகிட்டு வரும்போது இருட்டுல கார் கரடு முரடானா சாலைல போற மாதிரி குதிச்சு குதிச்சு போகுது. சந்தேகப்பட்டு நிறுத்தி எறங்கிப்பாத்தா சாலைல பூரா கொன்னு வீசப்பட்ட உடல்கள். ரூமுக்கு வந்து பால் ஒரு அழுகை அழுவார் பாருங்க, நாயகன் கமல் அழுகையெல்லாம் ரெண்டாவது எடத்துக்கு போயிடும்.

ஒரு உண்மை சம்பவத்தை குரூரமான காட்சிகள் எதுவுமே இல்லாம நிலைமையோட பயங்கரத்தை அவ்வளவு அழகா உணர்த்தியிருக்காங்க. பால் மாதிரி ஒரு சுயநலமான ஆள் கூட சூழ்நிலையால ஒரு பொதுநல ஹீரோவா ஆகறது இயல்பா இருக்கு. பால் நிஜமாவே ர்வாண்டா மக்களோட பெரிய ஹீரோ. பிறகு அவருக்கு பல சர்வதேச விருதுகள் கிடைச்சுது.

நிஜ பால் ருஸேஸபகீனா ஐ.நா விருது வாங்கும்போது...

இது மாதிரி திரைப்படங்கள் இந்தியாவுல ஏன் வருகிறதில்லைன்னு ஏக்கமாவும் வருத்தமாவும் இருக்கு.

இன்னொரு படம் "லாரென்ஸ் ஆஃப் அரேபியா" பத்தி அடுத்த பதிவில்.....

14 பேர் என்ன நெனைக்கிறாங்கன்னா..:

வெண்பூ said...

நல்ல விமர்சனம் மஹேஷ்.. நல்ல படங்களை அவ்வப்போது இது போல பகிர்ந்து கொள்ளுங்கள்..

Anonymous said...

see this movie The Pianist

Anonymous said...

//ஹோட்டலுக்கு காய்கறி, அரிசி வாங்கறதுக்காக கலவரக்காரர்களோட தலைவன் ரடகுண்டா கிட்டயே போய் அதிகப் பணம் குடுத்து வாங்கிகிட்டு வரும்போது இருட்டுல கார் கரடு முரடானா சாலைல போற மாதிரி குதிச்சு குதிச்சு போகுது. சந்தேகப்பட்டு நிறுத்தி எறங்கிப்பாத்தா சாலைல பூரா கொன்னு வீசப்பட்ட உடல்கள்.//

படத்துல இந்தப் பகுதியப் பாக்கும்போது மனசு ஒரு மாதிரி ஆயிருச்சு. நேர்ல பார்த்த பதைபதைப்பு. பால் மிக நேர்த்தியான நடிப்ப வெளிப்படுத்தியிருப்பார்.

அவரது நிர்வாகிகளைச் சமாளிப்பது மிக நல்ல நடிப்பின் வெளிப்பாடு.

இதுபோல் ஒரு திரைப்படம், அதுவும் தமிழிலா? ஏன் இந்த விபரீத ஆசை. நமக்கு விதிச்சது குத்துப்பாட்டும் எட்டு பைட்டும்தான்.

ஆட்காட்டி said...

நான் பார்த்திருக்கிறன்.
உங்களுக்கு வேறு உணர்வுகள் வரவில்லையா?

Dubukku said...

ஆஹா இந்தப் படம் நம்ம பார்க்கவேண்டிய லிஸ்ட்ல இருக்குது அதுனால பதிவ முழுசா(கதை ஆரம்பிக்கிற இடத்துலேர்ந்து) படிக்கலை..மன்னிசிக்கோங்க...

நானும் கேள்விப் பட்டேன் ரொம்ப நல்ல படம்ன்னு

Mahesh said...

நன்றி வெண்பூ...

நன்றி அனானி... முயற்சி செய்கிறேன்..

நன்றி வடகரை வேலன்... அய்யோ அது படற வெக்கற காட்சி...

நன்றி ஆட்காட்டி... ஒரு genocide ஐ பார்க்கும்போது படம் கிளறி விட்ட உணர்வுகளை வார்த்தைல கொட்ட முடியாது...

வாங்க டுபுக்கு... நீங்க படத்தை விமர்சனம் பண்ற பாணியே தனி.. சீக்கிரம் பாத்துட்டு எழுதுங்க...

பழமைபேசி said...

படிச்சாவது தெரிஞ்சுக்குற வாய்ப்பைக் குடுத்தீங்க....நன்றி!

Mahesh said...

@ பழமைபேசி : அங்க இருந்துக்கிட்டு நீங்க எல்லாப் படமும் பாக்க முடியுமே !!!! :))

Shan Panchavarnam said...

The way you have criticized this movie is good. If you would have thrown little bit about ‘Rwanda genocide’, it would have been better.

Please read complete article about Rwanda genocide’ like “the 1994 genocide in Rwanda resulted in the systematic massacre of 800,000 Tutsis and moderate Hutus in less than 100 days. The events occurred while the international community closed its eyes”
http://www.rwanda-genocide.org/

மதிபாலா said...

உண்மைதான் , நான் பார்த்த திரைப்படங்களில் மிக முக்கியமானது இந்தப்படம்.......

அதில் குறிப்பிட வேண்டிய ஒரு காட்சி , ஐ.நாவின் வாகனங்கள் வெள்ளையர்களை / தனது ஊழியர்களை மட்டும் ஏற்றிச் செல்லும் போது அங்கே ஏக்கமாக நின்று கொண்டிருக்கும் ஹோட்டலில் தஞ்சம் புகுந்த டூட்ஸி இன அகதிகள் அமைதியாக நின்றிருக்கும் அந்தக் காட்சி.......

நாங்கள் என்ன பாவம் செய்தோம் , டூட்ஸி இனத்தவனாக பிறந்ததைத் தவிர என்ற எண்ணத்தில் சில சிறுவர்களும் !

கண்களைக் குளமாக்கும் அந்தக் காட்சி...

சற்றேறக்குறைய நமது ஈழத்துச் சகோதரர்களின் நிலையும் அதுதானே என்று எண்ணும் போது , வேதனை இன்னுமே ஒரு படி அதிகரிக்கிறது...

Mahesh said...

@ shan panchavarnam :

genocide பத்தி சொல்ல ஆரம்பிச்சா அது ரொம்ப கொடூரமா இருக்கும். அதனாலதான் சினிமாவை பத்தி மட்டும் எழுதினேன்.

@ மதிபாலா :

கரெக்டுங்க... நீங்க்ச் சொல்ற அந்தக் காட்சி ரொம்ப பரிதாபமா இருக்கும். ஆனா போனவங்களும் அடி வாங்கி திரும்ப ஹோட்டலுக்கெ வரும்போது இவுங்க போகாததே நல்லதுன்னு தோணும்.

மங்களூர் சிவா said...

விமரிசனம் படிக்கவே மிக அருமையாக இருக்கு.

Mahesh said...

நன்றி சிவா....

chitravini said...

நீண்ட நாட்களுக்குப் பிறகு பதிவு செய்யும் பாக்கியம் இன்று கிடைத்தது. இரண்டு நல்ல படங்களைப் பற்றிய இரண்டு நல்ல பதிவுகள். இந்த மாதிரி படங்கள் ஏன் இந்தியாவில் எடுக்கப்படுவதில்லை என்று மகேஷ் கேட்டிருந்தார். நல்ல கேள்வி. ஏனெனில் நாம் மற்றவர்களின் உணர்வுகளுக்கும், நம்மை சுற்றி நடப்பவைகளுக்கும் ஆழ்ந்த, மனப்பூர்வமான மதிப்பு கொடுப்பதில்லை. ஏதோ மேலோட்டமான ஒரு பார்வையும், உதட்டளவில் அனுதாபமும்தான். அப்படி ஓரிருவர் இருந்தாலும், அப்படியே அவர்கள் அதை திரைப்படமாக்க முயற்ச்சித்தாலும், வணிக ரீதியில் அது ஓடுமா, ஓடாதா என்ற பயத்தினாலும்....குதிரைக்கு கடிவாளம் போட்டது போல், காதலன், காதலி, வில்லன், குத்துப்பாட்டு, சோகப்பாட்டு, சண்டை, நல்ல முடிவு என்று அரைத்த மாவையே அரைத்துக் கொண்டுள்ளோம். அதிலும் ஒரு சோகமான முடிவுள்ள படமாக இருந்தால் அது ஓடாது. இப்படி இருக்கையில், சமூகத்தைப் பாதித்த, மக்களின் எண்ணங்களை மாற்றிய படங்களை யார் எடுப்பார்கள்? எடுத்தாலும் எந்த முன்னணி நடிகர் அதில் நடிப்பார்? அப்படியே நடித்தாலும் யார் பார்ப்பார்கள்? ஒரு சில வரலாற்று சரித்திரப் படங்களைத் தவிர, சமூக உணர்வு உள்ள படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.