Saturday, October 25, 2008

பூலோக சொர்க்கம் காஷ்மீர்

வெறிச்சொடி இருக்கும் தால் ஏரி

போன மாசம் லீவுல ஸ்ரீந‌கர் போய்ட்டு ஒரு வாரம் இருந்துட்டு வந்தோம். திரும்ப வந்து ஒரு மாசம் போல ஆச்சு. ஆனா அது ஏற்படுத்தின பாதிப்பு இன்னும் பல வருசங்களுக்கு இருக்கும்.

அண்ணன் இப்பொதைக்கு ஸ்ரீநகர்ல (இந்திய விமானப் படை) இருக்கறதால தங்கறதுக்கெல்லாம் ஒரு ப்ரச்னையும் இல்ல. டெல்லிலேந்து‍ ஸ்ரீநகர் போகற விமானமெல்லாம் நேரத்துக்கு கெளம்பும்னு சொல்ல முடியாது. நாங்க‌ போக இருந்த ஃப்ளைட்டும் கடைசி நேரத்துல கேன்சல் ஆகி, அடிச்சு புடிச்சு இன்னொண்ணுல புக் பண்ணி மதியம் போய் சேந்தோம். போகும்போதே ஸ்ரீநகர்க்கு கொஞ்சம் முன்னாலயே ஏர் டர்புலன்ஸ்னு விமானம் தூக்கி தூக்கிப் போட்டுச்சு. ஏற்கெனவே கலவரமா இருக்கற ஊருக்குப் போறோம்... இதுல விமானம் வேற வயித்துல புளியக் கரச்சுது.

போன மறுநாள். தால் ஏரி போய் வருவோம்னு கெளம்பினோம். 3,4 மாசமாவே அமர்நாத் ப்ரச்னையால குண்டு வெடிப்பு, ஊரடங்கு உத்தரவுன்னு ஒரே அமர்க்களம். என்னமோ நாங்க இருந்த 6 நாளும் ஊரடங்கு இல்ல. ஆனா பதட்டமான சூழ்நிலைய நல்லா உணர முடிஞ்சுது. குண்டு வெடிச்சு செவுரு உடஞ்ச மேம்பாலம், தீ வெச்சு எரிஞ்சு போன மார்க்கெட் கட்டடம், டூரிஸ்டுகளே இல்லாத தால் ஏரி, வழக்கத்துக்கு மாறா கரையோரமா நிக்கற நூத்துக் கணக்கான சவாரி படகுகளும், படகு வீடுகளும் நெலமைய சொல்லாமலே வெளக்கமா சொல்லுதுக. நாங்க வாடகைக்கு எடுத்த படகு (கஷ்மீரில "ஷிகாரி") ஒட்டி சொன்னாரு, அவுருக்கு ஒரு மாசங்கழிச்சு சவாரி கெடச்சுருக்காம். கேகவே ரொம்ப கஷ்டமாயிருந்துது. சாதாரணமா படகுக கரையிலயே நிக்காது. அவ்வளவு டூரிஸ்டுக கூட்டம் நெரியும். என்னவோ காஷ்மீரோட தலயெழுத்து... சொர்க்கம் மாதிரியான எடத்துல எவனுக்கும் நிம்மதி இல்ல‌, உயிருக்கு உத்தரவாதம் இல்ல, யாவாரம் இல்ல, அன்னாடப் பொழப்புக்கே ததிங்கிணத்தோம் போடறாங்க. நேர்ல பாக்கும்போது சீரணமே ஆகல.

நானும் அண்ணனும்

படகுல போயிட்டுருக்கும்போதே கூடவே படகுல வந்து யாவாரம், பிச்சை எல்லாம் நடக்குது. யாவரிக குங்குமப்பூ, ஷிலாஜித் மாதிரி ரொம்ம்ம்ம்ம்ப காஸ்ட்லி அயிட்டங்க, காய்தக்கூழ்ல பண்ணின வேலைப்படு அதிகமுள்ள‌‌ சின்ன/பெரிய‌ பொம்மைக, ராசிக்கல்லுக, வெள்ளி நகைகன்னு சகலமும் விக்கறாங்க. ஏரிக்கு நடுவுல ஒரு பெரிய மார்க்கெட்டே இருக்கு. துணிக்கடை, மருந்துக் கடைன்னு எல்லாம் இருக்கு. அப்பிடியே படகை ஓரங்கட்டி ஒரு காஃபா குடிச்சோம். (காஃபாங்கறது இஞ்சி, ஏலம், பிஸ்தா, பாதாம்னு எல்லாம் போட்டு டீ மாதிரி இருக்கும்) அப்பிடியே ஒரு ரவுண்டு போய்ட்டு திரும்ப கரைக்கு வந்து ஒரு தாபாவுல மதியச் சாப்பாடு முடிச்சுட்டு ஞாயிறு சந்தைக்குப் போனோம். வெகு நாளைக்கு அப்பறம் சந்தை போடறாங்க போல... "இன்னக்கே வாங்கிறணும்டா, நாளைக்கு கெடைக்காது"ங்கறது மாதிரி மக்க ஓடி ஓடி வாங்கறாங்க. பழசு, புதுசுன்னு எல்லாம் கெடைக்குது. ஆனா தெருவுல எங்க பாத்தாலும், பத்தடிக்கு ரெண்டு BSF ஜவான்க நிக்கறாங்க. ஒருத்தர் கிட்ட பேச்சு குடுத்தபோது அவிக பொலம்பல் அதுக்கு மேல. பாவம்... ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மாதிரி கஷ்டம். ஊரு நெலம அப்பிடி.

டூரிஸ்டுகளுக்காக காத்திருக்கற சவாரிப்படகுகள்

அப்பறம் "சஷ்மஷாஹி பூங்கா" (Chashm Shahi Park) வுக்குப் போனோம். ஒரு சின்ன மலை மேல இருக்கற பூங்கா. நல்ல சீசன்கறதால பூக்களோ பூக்கள்...கலர் கலரா... இயற்கையோட கைவண்ணம். நெறய இனிப்பு தின்னா தெகட்டும். ஆனா இம்புட்டு வித விதமா, கலர் கலரா, சின்னதும் பெருசுமா, ஒத்தையா, கொத்துக் கொத்தா பூக்கள கண்கொள்ளாம பாத்துக்கிட்டே இருக்கலாம். ஒரு எடத்துல நம்ம சங்ககால பூன்னு சொல்ற "செங்காந்தள்" பூ கூட இருக்கு.

செங்காந்தள்

பூவில் வண்டு கூடும் கண்டு....

இந்தப் பூங்காவுக்குள்ள ஒரு நன்னீர் ஊத்து இருக்கு. சும்மா ஜில்லுன்னு கல்கண்டு மாதிரி தண்ணி கொட்டிக்கிட்டே இருக்கு. பாட்டில்லயும் கேன்லயும் புடிச்சுக்கிட்டு போய்ட்டே இருக்காங்க. இதுல இருந்துதான் இன்னிக்கும் டெல்லில இருக்கற நேரு குடும்பத்துக்கு நெதம் தண்ணி போகுதாம். கேமராவே "டே...போதும்டா"ன்னு சலிச்சுக்கற வரைக்கும் பூக்களயெல்லாம் படம் எடுத்துக்கிட்ட பெறகு, பக்கத்துலயே இன்னும் கொஞ்சம் மேல இருக்கற "பரி மஹல்"க்கு போனோம். அது ஒரு சின்னமா (Heritage Site) அகழ்வாரய்ச்சித்துறை பாதுகாக்கறாங்க. அங்க இருந்து பாத்தா ஸ்ரீநகர் அழகா ரம்மியமா இருக்கு. ஹைதராபாத்துல சார்மினார் மாதிரி, தால் ஏரிக்கு நடுவுல நாலு சினார் மரங்க‌ இருக்கு. அத "சார் சினார்"ங்கறாங்க. அது இங்க இருந்து பாத்தா அட்டகாசமா இருக்கு."தால் ஏரி நடுவுல "சார் சினார்" (தெரியுதா??)

அவ்வளவுதான்... மொத நாள் அதுக்கு மேல சுத்த தெம்பு இல்ல... வீடு போய் சேந்தோம்.

நாங்க அந்த வாரம் சுத்திப் பாத்த குல்மார்க், சோனாமார்க் பத்தி, காஷ்மீர் பத்தி, சினார் மரம் பத்தியெல்லாம்... வாரேன்... அடுத்த பதிவுல சொல்றேன்...

மத்தபடி, எடுத்த 100க்கும் மேல படங்கள இங்க பதிவல போட முடியாது. Online album க்கு தொடுப்பு இதோ. அங்க போய் பாத்துக்கங்க...

ம்ம்ம்...ஓட்டு...மறக்காம போட்டுட்டுப் போங்க.

17 பேர் என்ன நெனைக்கிறாங்கன்னா..:

பழமைபேசி said...

இப்ப போய்ட்டு, மறுபடியும் வர்றேன்.

பழமைபேசி said...
This comment has been removed by the author.
பழமைபேசி said...

காஷ்மீர் போயி வ‌ந்து
காப்புரிமை கோராமலே
நல்ல நல்ல படமும்
போட்டு நாலுங்கலந்து
நயமாச் சொல்லி
நாம‌ளும் போயிவ‌ந்த‌
உண‌ர்வைக் கொடுத்தாரு
ம‌னுச‌ன் ம‌கேசு!
சொல்லு சபாசு!!
இல்ல‌ ப‌வுசு!!!
வ‌ர‌ட்டும் ம‌வுசு!!!!

உருப்புடாதது_அணிமா said...

நாங்க திரும்பி வந்துடோம்ல இனி பட்டைய கிளப்பிடுவோம்ல//..

தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

மீண்டும் பிறகு வருகிறேன் ..

( இப்போதைக்கு அப்பீட்ட்டு அப்பாலிக்க ரிப்பீட்டு)

உருப்புடாதது_அணிமா said...

நாங்க திரும்பி வந்துடோம்ல இனி பட்டைய கிளப்பிடுவோம்ல//..

தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

மீண்டும் பிறகு வருகிறேன் ..

( இப்போதைக்கு அப்பீட்ட்டு அப்பாலிக்க ரிப்பீட்டு)

Mahesh said...

@ பழமைபேசி : வாங்க கவிஞரே... கவிதைக்கு நன்றி !!!

@ அணிமா : சீக்கிரம் வாங்க... அப்ரைசல் எப்பிடி இருந்துச்சு?

sivam said...

அருமையான எழுத்து. மேலும் இன்தமிழில் பகிர்ந்து கொள்ள 'இன் தமிழுக்கு' In-Tamil.com வாருங்கள். இன் தமிழ் மூலம் உங்கள் இணைய தள வாசகர்களை பெருக்குங்கள்.

Anonymous said...

மகேஷ் அண்ணே,

உங்களுக்கும், குடும்பத்தினருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள். இப்ப இருக்கற நெலமையில, ஸ்ரீநகர நாங்கல்லாம் நேர்ல போய் பாக்க முடியாது. உங்க பதிவு வழியாவே பாத்துக்குறோம். செங்காந்தள் மலர், எப்பவோ சின்ன வயசுல பாத்தது. மறுபடியும் பார்க்க, வாய்ப்பு வழங்கிய உங்களுக்கு நன்றி.

சித்ரா மனோ

Mahesh said...

@ சிவம் :

நன்றி... இணைத்து விட்டேன்

@ சித்ரா மனோ :

நன்றி... எஙகள் தீபாவளி வாழ்த்துக்கள் உங்களுக்கும்... ஆஸ்திரேலியாவுல கொண்டாடறீங்களா?

வெண்பூ said...

காஷ்மீரில் சுற்றுலாவா? பொறாமையா இருக்கு.. படங்களை பார்த்தேன்.. அருமை.

வருங்கால முதல்வர் said...

நல்ல படங்கள், சிரிநகர பதிவுலதான் நாங்கெல்லாம் பாக்கனும்.

புதுகை.அப்துல்லா said...

இம்புட்டு அழகான ஊர கெடுத்து குடிச்சுவரா ஆக்குன பாக்கிஸ்தான் அரசு பாவிகள என்ன சொல்லி.... வயித்தெரியிறது அண்ணே.

Mahesh said...

வருங்கால முதல்வருக்கு, வெண்பூவுக்கு நன்றி....

@ அப்துல்லா : நீங்க சொல்றது பாதிதான் சரி.. மீதி நாமளெ கெடுத்துக்கிட்டது... பின்னால எழுதறேன்

சதங்கா (Sathanga) said...

அருமையான படங்கள் மற்றும் அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

Mahesh said...

வாங்க சதங்கா... வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

நிறைய வலைப்பூகள் வெச்சுருக்கீங்க...
அட்டகாசமான புகைப்படங்கள் இருக்கு உங்க வலைப்பூவுல...

chitravini said...

உண்மையிலேயே....இந்த ஊர் சொர்க்கம்தான். சந்தேகமேயில்லை. ஆனால், இங்குள்ள மக்கள் அதை அனுபவிக்கக் கொடுத்து வைக்கவில்லை என்றே எண்ணுகிறேன். பலவித காரணங்களால் இந்த அழகான பூமி கவனிக்கப் படாமல் கண்ணீர் விட்டுக்கொண்டு இருக்கிறது....நாய் பெற்ற தெங்கம் பழம் போல!...சில இடங்கள்...பள்ளத்தாக்கில்...நாம் சென்றதால்தான் அதன் அமைதியும், அழகும் பாதிக்கப் பட்டதோ என்று தோன்றும் அளவுக்கு வியக்க வைக்கின்றன. என்ன செய்வது...மலரையும் கொடுத்து முள்ளையும் அல்லவா கொடுத்தவன் இறைவன்...! விடிவு காலம் வரும். நம்பிக்கை உள்ளது.

கிரி said...

மகேஷ் நான் கூட உங்களை ரோஜா படத்துல மாதிரி யாரும் கடத்திட்டு போயடுவாங்கலோன்னு பயந்துட்டேன் :-))))