மறுநாள் மதியம் புது ஆவடி ரோடு பக்கம் ஒரு வேலையாக போக வேண்டியிருந்ததால் போகும் வழியில் 1:45க்கு காரை நிறுத்தி விட்டு (பார்க்கிங் ஏறக்குறைய காலி) உள்ளே போனால் நுழைவு வாயிலில் சுமாரான கூட்டம். முன்னால் இருந்த நான்கு நுழைவுச்சீட்டு வழங்குமிடங்களிலும் ஒரு 50-60 பேராவது நின்றிருப்பார்கள். 2:05 ஆனபிறகும் நுழைவுச்சீட்டு வழங்கவில்லை. திடீரென ஒரே ஒரு கவுண்டரில் கொடுக்க ஆரம்பிக்க எல்லா கூட்டமும் இங்கே அங்கே என அலைபாய்ந்தனர். உள்ளே கண்காட்சி அலுவலகத்தில் விசாரிக்கப் போனால் "அதான் பேசிட்டிருக்கோம் சார். வாலண்டியர்ஸ் யாரும் இல்லை. என்ன பண்ணலாம்னு டிஸ்கஸ் பண்றோம்" என்றார் ஒருவர். உச்சி மண்டையில் சுர் என்று ஏற "ஏன் சார்.... மதியம் 2 மணிக்கு திறக்கறீங்க. இப்ப போய் வாலண்டியர் இல்லை... என்ன பண்றதுன்னு யோசிக்கிறீங்களே? இவ்வளவு பெரிய கண்காட்சி. ஒவ்வொரு வருஷமும் நல்ல கூட்டமும் வருது. இதைக் கூடவா உங்களுக்கு ஆர்கனைஸ் பண்ண முடியல? கூட்டம் 1:30ல இருந்து வரிசைல நிக்கறாங்க. பாத்துட்டுக் கூடவா எதாவது பண்ணணும்னு தோணலை?" என்று கேட்டதற்கு பதில் இல்லை. பிறகு யாரோ இருவர் கொஞ்சம் சீட்டுகளைத் தூக்கிக் கொண்டு ஒரு கவுண்டருக்கு ஓட பின்னாலேயே போய் மக்கள் சீட்டுகளை வாங்கினர். கவுண்டருக்குள் ஒரு மேசை, நாற்காலி ஒன்றும் இல்லை. எவ்வளவு சீட்டு விற்றது, என்ன கணக்கு.... எப்படி சரி செய்தார்களோ?
இவ்வளவு பெரிய நிகழ்ச்சி. என்னவோ முதல் நாள் மாலைதான் முடிவெடுத்து வேலை செய்ய ஆரம்பித்தது போன்ற தோற்றத்தை கொடுத்தது அதிர்ச்சியாகவும் வருத்தமாகவும் இருந்தது. இந்நாட்களில் "ஈவண்ட் மேனேஜ்மெண்ட்" என்பது ஒரு கலை. நல்ல திட்டமிடல் தேவை. அதுவும் ஒரு வியாபார நோக்கில் நடத்தப்படும் நிகழ்ச்சி கூட இப்படி மந்தமாகக் கையாளப்பட்டால்? அடுத்த கண்காட்சியிலாவது கவனிப்பார்களா?
வேறு வேலைக்காக சீக்கிரம் போக வேண்டியிருந்ததால் விகடன், பயனீர், உயிர்மை, விசாவில் சில புத்தகங்களை வாங்கிக் கொண்டு அரைமணிக்குள் திரும்ப வேண்டியதாயிற்று.








