Wednesday, March 18, 2009

செக்குமாடு



"வாய்யா கனகு... ஏன்யா லேட்டு? மணியப் பாரு எட்டே முக்கால்.... இதோட ஒனக்கு 4 வார்னிங் குடுத்தாச்சு... டைம் ஆபீஸ் முருகேசன் வேற எதுரா சாக்குன்னு பாத்துக்கிட்டே இருக்கான்....

"இல்லீங்கய்யா... வாரைல சைக்கிள் மேல ஒரு பன்னி வந்து மோதி டிச்சுக்குள்ள விளுந்துட்டனுங்... அதான் பாருங் பேண்டெல்லாம் சகதியாயிருச்சுங்..."

"எதாச்சும் சொல்லுய்யா.... பாதிநா லேட்டா வரது. அப்பறம் நான் ரோஸ்டர் போடறதுக்கு என்ன மரியாத? அவன் மூர்த்தியா கத்தறான். ரிலீவர் எங்க ரிலீவர் எங்கன்னு. உன்னிய பேசாமா வெல்டிங்குக்கு மாத்தீர்ரேன். எக்கேட்டும் கெட்டுப்போ

"அய்யா வேணாம்யா... கண்ணு வலி தாங்க முடியாதுங்கய்யா... இனிமே சரியா வநதருவனுங்..."

"சாமி... வேணாம்யா... குடிகாரன் பேச்சக் கூட நம்பலாம். உன்ற பேச்சக் கேட்டா..."

"அப்பிடியெல்லாம் சொல்லாதீங்கய்யா.... நாந்தான் சரியா வரேன்னு சொல்றனல்லங்... சத்தியமுங்.."

"நீயும் உஞ்சத்தியமும். போய் வேலயப் பாரு. மூர்த்திய ரிலீவ் பண்ணு போ.."

அந்த மில்லில் தனபால் ஒரு சூப்பர்வைசர். 4 டீசல் இஞ்சின்கள் நாள் முழுசும் திணறித் திணறி ஓடி 4MW கரண்ட் நுரை தள்ளும். போடற சத்தத்துல நாம பேசறது நமக்கே கேக்காது. ஷெட் பாத்துக்க ஏழு பேர். மூணு மெக்கானிக், மூணு எலக்ட்ரீசியன், ஒரு கையாள். ஷெட்டுக்குப் பின்னால மிசின் ரூம். லேத், ஷேப்பர், ட்ரில்லர்னு அது வேற ஒரே இறைச்சலா இருக்கும். வெளியில வெல்டிங் வேற ப்ர்ர்ர்ர் ப்ர்ர்ர்ர்னு கண்ணு கூசும். சைடுல சின்ன சின்னதா கூலிங் டவருக ரெண்டு. ஷிப்ட் மெக்கானிக் இஞ்சின்களை கவனிக்க, எலக்ட்ரீஷியன் லோடு பாத்துக்க. கையாள், பம்ப் ஓட்டி டேங்குகள்ல டீசல் நெரப்ப, கூலிங் டவர் தண்ணிக்கு உப்பு கொட்ட, அடைப்பு எடுக்கன்னு வேலை பெண்டு நிமுந்துரும்.

தனபால்தான் எல்லாத்துக்கும் சூப்பரவைசர். ரொம்ப கறாரான ஆளு. அவனைக் கண்டாலே எல்லாருக்கும் கொஞ்சம் பயந்தான். டீ குடிக்கக் கூட 8 நிமிஷம்னா 8 நிமிஷந்தான். பின்னாலயே வந்து நின்னுடுவான். "ம்ம்ம்ம்.. இன்னம் ரெண்டு நிமுசத்துல சாப்பாட்டு சங்கே புடிச்சுருவானுக. தொரைக்கி டீ சாப்ட 1 மணி நேரமா?" வேலையும் நல்லாத் தெரியும். சும்மாவா வாசவி மில்லுல இருந்து தேடிப் புடிச்சு கூட்டியாந்தாங்க. "என்ன லச்சணமா வெல்டிங்.... சும்மா மரவட்டை கணக்கா வரிவரியா இருக்க வேணாம்? கை இந்த நடுங்கு நடுங்குனா...."

தனபால் இந்த வாரம் மெயிண்டனன்ஸ் ஷெட்யூல் போட்டுருந்தான். கிர்லாஸ்கர் கம்பெனியிலருந்து இஞ்சினீயருக வருவாங்க. எந்த இஞ்சினுக்கு எங்க நோவுன்னு பாத்து சொல்லுவானுக. அதுக்கு முந்தி இங்க லாக்புக்கு எல்லாம் ரெடியா இருக்கணும். மூர்த்தியும் சங்கரும் ஒழுங்கா எழுதுவாங்க. மணிக்கொருக்கா எட்டு சிலிண்டர்லயும் டெம்ப்ரேச்சர், டீசல் அளவு, தண்ணி ப்ரசர், லோடு, ஸ்பீடு எல்லாம் அந்த பெரிய ரிஜிஸ்தர்ல பதியணும். கனகு மட்டும் தூங்கிட்டு கடைசி மணியில 8 எண்ட்ரியும் ஒட்டுக்கா எழுதுவான். சும்மா கொஞ்சம் முன்னப்பின்ன மாத்தி மாத்தி.

கனகு மூர்த்திய ரிலீவ் பண்ணிட்டு சேர்ல உக்காந்து பெருசா ஒரு கொட்டாவி விட்டான்.

"அப்பிடியே கவுந்து தூங்கிரு.... வந்த ஒடனே லாக் புக்க பாக்கரானா பாரு. எதுக்கோ என்னவோ போச்சுன்னு வாயப் பொளந்துக்கிட்டு.... " பின்னாலயே தனபால் வந்ததை கவனிக்கலை.

"கிர்லாஸ்கர் ஆளுக 10 மணிக்கு வந்துருவாங்க. ஒண்ணும் மூணும் இன்னக்கி. ரெண்டும் நாலும் நாளை கழிச்சு. இப்பயே போன வருச மெயிண்டனன்ஸ் கார்டுக, பார்ட் இஸ்ட்ரியெல்லாம் எடுத்து வெய்யி. எல்லாம் சொன்னாத்தான் செய்வீங்களோ?" தனபால் கத்தி விட்டு இஞ்சினியருக்கு போன் போட போனான்.

கனகு எல்லாம் எடுத்து வெக்க ஆரம்பிச்சான். அப்படியே எதிர் ஷெட்டுல ஸ்பின்னிங்ல வள்ளி இருக்குதான்னு எட்டிப் பாத்துக்கிட்டான். இஞ்சின்களை ஒரு ரவுண்டு வந்தான்.

"டேய் கதிரு... இங்க வாடா. என்ரா இது? ஆயில் மாத்துனியா? தொடைக்க மாட்ட? இந்நேரம் வளுக்கீருக்கும். அதான் அங்க அம்புட்டு காட்டன் வேஸ்ட் கெடக்குதல்ல. தொட மொதல்ல..." தனபால் மேல இருந்த கோவம் எல்லாம் அவன் மேல கொட்டினான்.

இதுக்குள்ள எலக்ட்ரீஷியன் சேகர் போய் 2 இஞ்சின் நின்னு போனா எந்தெந்த மிசினுகளுக்கு நெறி கட்டும்னு பாத்து பேஸ் மாத்தி விட்டுட்டு வந்தான். தலைல ஒட்டீட்ருந்த பஞ்சை எடுக்க கொஞ்சம் ஏர் புடிச்சுக்கிட்டான்.

"சும்மா அவனைப் போயி வெரட்டிக்கிட்டு... விடு கனகா... வேலையப் பாப்போம். மொத டீ சாப்டு வருவோம். வண்டி வந்துருச்சு". டோக்கனை எடுத்துக்கிட்டு ரெண்டு பேரும் போயிட்டாங்க.

10 மணி. சொன்ன மாதிரியே கரெக்டா வந்துட்டானுக இஞ்சினீயருக. சின்ன பசங்கதான். துறுதுறுன்னு. தனபாலும் வந்ததும் வெளிச்சமா ஒரு மூலைல டேபிளப் போட்டுக்கிட்டு லாக்புக்கை ஒரு நோட்டம். லோடு, டிஸ்ட்ரிப்யூஷன் பழய மெயிண்டனன்ஸ் குறிப்புக எல்லாம் பாத்துட்டு 1ம் இஞ்சின் கிட்ட போய் நின்னாங்க. ஸ்லோ ஸ்பீட் இஞ்சின். "தடக்.. தடக்... தடக்...தடக்..." லோடு "0" ன்னு ஆனதும் ஆஃப் பண்ணியாச்சு. டெம்பரேச்சர் கொறஞ்சதும் மேல ஏறி ஒவ்வொரு சிலிண்டரா செக்கிங் ஆரம்பமாச்சு.

"அஞ்சாவது சிலிண்டர் ஏன் இன்னும் இம்புட்டு சூடா இருக்கு? கூலிங் சரியில்லயா? மேல போய் பாக்கறேன்"னு கனகு சைட் ரெய்லிங் புடிச்சு மேல ஏறினான். ஹெட் இன்னும் சூடு. எக்ஸாஸ்ட் வால்வு ஸ்பிரிங் டைட். சரியா ஓப்பன் ஆகல போல. கீழ எறங்கி இஞ்சினியர் கிட்ட சொல்லிட்டு மறுபடி அடுத்த டீ குடிக்க போனான்.

டீ குடிச்சுட்டு இருக்கும்போதே "தொம்"னு ஒரு சத்தம். அப்பிடியே டீ டம்ளரைப் போட்டுட்டு ஓடி வந்தான். ப்ளாட்ஃபாரத்துல சிந்தியிருந்த ஆயில கதிர் தொடைக்காமயே போயிருக்கான். கணக்கா இஞ்சினீயர் அது மேலயே கால வெச்சு வழுக்கி விழுந்துருக்கான். சைட் ரெய்லிங்ல தலை பட்டு மண்டைக் காயம். ரத்தம் ஒழுகுது.

"சேகரு.... சேகரு...கதிரு.. ஒடியாங்கடா... அய்யய்யோ...."

சேகரும் கதிரும் ஒடி வர, எல்லாருமாச் சேந்து ஆளைத்தூக்கிட்டு ஸ்டோருக்கு ஓடுனாங்க. அங்கதான் பெரிய பஸ்டெய்டு பொட்டி இருக்கு. இஞ்சினீயர் மயக்கமாயிட்டாரு போல. ஓட்டமா ஓடி, ஆளைப் படுக்க வெச்சு, டெட்டால வெச்சு தொடச்சு, பஞ்சு வெச்சு, கட்டுத் துணியால மண்டைய சுத்தி பெரிய கட்டாப் போட்டு விட்டாங்க. அதுக்குள்ள ஓ.எம். கார் ட்ரைவரைக் கூப்ட்டு விட்டு கார் ரெடியா ஸ்டோர் வாசலுக்கு வந்துருச்சு. அப்பிடியே அள்ளிப் போட்டுக்கிட்டு தர்மாஸ்பத்திரிக்கு விரட்டினாங்க.

அட்மிட் பண்ணி, டாக்டருக பாத்துட்டு 4 தையல் போட வேண்டியதாயிடுச்சு. மயக்கம் தெளியில. எப்பிடியும் இன்னும் 2,3 மணி நேரம் ஆகும்னு சொல்லிட்டாங்க. சேகரும் திரும்ப மில்லுக்கு போயிட்டான். இஞ்சினியர் பையனுக்கு வேற தமிழ் தெரியாது. என்ன பண்றதுன்னு புரியாம கனகு மட்டும் அங்கியே தொணைக்கு ஒக்காந்துட்டான்.

தனபால் கிர்லாஸ்கர் கோயமுத்தூர் ஆபீசுக்கு போனைப் போட்டு விசயத்தை சொல்லிட்டான். அவுங்க ஆளை அனுப்பி பாத்துகிறதா சொல்லிட்டாங்க. கோயமுத்தூர்ல இருந்து ஆள் வர அந்தா இந்தான்னு 4 ம்ணி ஆயிருச்சு. வந்தவன் கிட்ட விசயத்தை சொல்லிட்டு கனகு 5 மணியாச்சேன்னு வீட்டுக்கே போயிட்டான்.

மறுநா காலைல மில்லுக்கு போகைல மறுக்கா ஆஸ்பத்திரி வந்து எப்பிடி இருக்கு நெலமைன்னு பாத்துட்டு போனான். சாயங்காலம் டிஸ்சார்ஜ் பண்ணிருவாங்களாம். எதிர்காத்துல மிதிச்சு மில்லுக்கு போய் சேர மணி 8:50.

"வாய்யா கனகு... என்னய்யா லேட்டு? மணியப் பாத்தியல்ல.... நீ இனிமே வெல்டிங்தாய்யா..."

"அய்யா.... இல்லீங்கய்யா... இஞ்சினீயரை பாக்க ஆஸ்பத்திரி போயிருந்தனுங்... எதிர் காத்துல மிதிச்சு வர லேட்டாயிருச்சுங்..."

"எதாச்சும் சாக்கு சொல்லிட்டே இரு... போ..... போய் மூர்த்திய ரிலீவ் பண்ணு... கத்திக்கிட்டு கெடக்கான்........."

பக்கத்துல இருந்த டைம் ஆபீஸ் முருகேசன் சிரிச்சுக்கிட்டான். ஸ்பின்னிங்ல இருந்து வள்ளி எட்டிப் பாத்து தோளை மோவாக்கட்டைல இடிச்சுக்கிட்டா. மேகத்துல மறைஞ்சு கெடந்த சூரியன் பொளீர்னு வெளிய வந்துச்சு.

Sunday, March 15, 2009

தஸ்விதானியா - சினிமா விமர்சனம்


Dasvidaniya (Hindi)

Vinay Pathak, Rajat Kapoor, Neha Dhupia, Ranvir Shorey


2008 நவம்பர்ல ரிலீஸ் ஆனாலும் நமக்கு இப்பத்தான் பாக்க வாய்ப்பு கிடைச்சுது. உங்களையும் என்னையும் போல ஒரு பரமசாது ஒருத்தன் இன்னும் 3 மாசத்துல சாகப் போறோம்னு தெரிஞ்சா என்ன பண்ணுவான்? இப்பிடி ஒரு கான்செப்டை அட்டகாசமா சினிமா ஆக்கின டைரக்டர் ஷஷாந்த் ஷாவுக்கு முதல் சபாஷ். கோடி கோடியாக் கொட்டி மசாலாப் படமா அரைச்சுத் தள்ற பாலிவுட் மாவு மில்லுல இருந்து வந்த ஒரு வித்தியாசமான லோ பட்ஜெட் படம்.

நாயகன் அமர் கௌல் 37 வயசு பேச்சிலர். காது கேக்காத அம்மா கூட பாம்பே அவுட்டர்ல ஒரு ஃப்ளாட்ல குடித்தனம். ஒரு மருந்துக் கம்பெனில அக்கௌண்ட்ஸ் மேனேஜர். தினப்படி வேலையெல்லாம் ஒரு To do லிஸ்ட் போட்டு கிரமமா செய்யற ஆளு. ஆட்டோ ட்ரைவர்ல இருந்து ஆபீஸ் மேனேஜர் வரைக்கும் புழு மாதிரி ட்ரீட் பண்ணினாலும் எதிர்த்து ஒரு வார்த்தை பேச மாட்டான். (மொதல்லயே சொல்லல? உங்களையும் என்னயும் மாதிரின்னு..) அப்பிடி ஆளுக்கு வயித்துவலின்னு டாக்டர்ட்ட போனா கேன்சர் 2வது ஸ்டேஜ்ங்கறாரு. மிஞ்சிப் போனா ஒரு மூணு மாசம் இருக்கலாம். அவ்வளவுதான்... அப்பிடியே நொறுங்கிப் போய் உக்காந்துடறான்.

அப்பதான் வழக்கம் போல மனசாட்சி எதிர்ல வந்து உக்காந்து "டேய் பன்னாடை.. இந்த மாதிரி அல்ப விஷயத்துக்கெல்லாம் லிஸ்ட் போட்டுக்கிட்டு உக்காராம உருப்படியா வாழ்க்கைல விட்டுப்போன பெரிய காரியங்களை இந்த 3 மாசத்துல செய்து முடிக்கப் பாரு"ன்னு சொல்ல, பாதை கொஞ்சம் திரும்புது. புது கார் வாங்கணும், வெளிநாடு போணும், பாஸுக்கு பாஸா ஆகணும், கிடார் கத்துக்கணும், பேப்பர்ல மொதப் பக்கத்துல ஃபோட்டோ வரணும் அப்பிடின்னு குட்டி ஆசைகளையும் சின்ன வயசு காதல், ஃப்ரெண்ட்ஷிப், வீட்டை விட்டு ஓடிப் போன தம்பியை மறுபடி வீட்டுக்கு கூட்டி வரதுங்கற மாதிரி பெரிய ஆசைகளையும் ஒரு 10 ஐட்டம் லிஸ்ட் போட்டு ஒண்ணொண்ணா முடிக்கிறான். எல்லாத்துலயும் சின்ன சின்ன சுவாரஸ்யங்கள் வெச்சுருக்கறது டைரக்டரோட புத்திசாலித்தனம்.

12 வருஷங்களுக்கு பொறகு நண்பனைத் தேடி தாய்லாந்து போனா நண்பனோட மனைவி இவன் ஃப்ரீ ட்ரீட்மெண்ட்டுக்காக வந்துருக்கானோன்னு சந்தேகப்படறாங்க. வெறுத்துப் போய் தெருவுல சுத்தும்போது ஒரு ரஷ்ய விலைமாது வீட்ல போய் கொஞ்ச நாள் இருந்துட்டு வரதெல்லாம் கொஞ்சம் சினிமாத்தனமா இருந்தாலும் ஒக்கே. (அப்பறம் 'தஸ்விதானியா'ன்னு பேர் வெச்சுட்டு ரஷ்ய லிங்க் இல்லேன்னா எப்பிடி?) கொஞ்சம் சோகமான படம்னாலும் முழுக்க மெல்லிய நகைச்சுவை கலந்து இருக்கறது படத்துக்கு பலம். க்ளைமேக்ஸ்? படத்தைப் பாருங்களேன்.

வினய் பாடக் இது மாதிரி ரோலுக்கு பெர்ஃபெக்ட் ஃபிட். 2 வருஷம் முன்னால வந்த Bheja Fry டீம்ல பாதி பேர் இந்தப் படத்துலயும். ரஜத் கபூர் வழக்கம் போல அலட்டல் இல்லாத அமைதியான் நடிப்பு. ஆபீஸ் மேனேஜர் சௌரப் ஷுக்லா (ஹே ராம்ல கமல் ஃப்ரெண்டா வருவாரே அந்த குண்டு நடிகர்) கொஞ்ச நேரமே வந்தாலும் கலக்கல். நேஹா துபியாவும் கெஸ்ட் ரோல் மாதிரிதான். ஆனா நல்லா பண்ணியிருக்காங்க. அந்த விலைமாது கேரக்டருக்கு ஒரு ரஷ்யப் பொண்ணையே நடிக்க வெச்சுருக்காங்க.

படத்துல ஹைலைட் அந்த 3 பாட்டுகளும். புது ம்யூசிக் டைரக்டர் கைலாஷ் கேர். அவரே பாடல்கள் எழுதி பாடவும் செஞ்சுருக்காரு. ஆனா முதல் படம் மாதிரியே இல்ல. மூணுமே மெலடி ஜோனெர். ரொம்ப நாளைக்கப்பறம் இது மாதிரி இதமான பாட்டுகள் பாலிவுட்ல இருந்து. லிரிக்ஸ் அட்டகாசம். சேம்பிள்க்கு....

"zindagi naa mil ajnabi ban ke
bandagi shaamil har dua ban ke "

'தஸ்விதானியா'ன்னா ரஷ்யன்ல (do svisdanya) 'குட்பை'ன்னு அர்த்தமாம். அதுல ஒரு சின்ன pun சேத்து '10 வேலைகள்'னு வரமாதிரி டைட்டில். குடும்பத்தோட பாக்க வேண்டிய படம். பாருங்க... இது மாதிரி கூட மசாலத்தனங்கள் இல்லாம இந்தி சினிமாவுல பண்றாங்கங்கறதுக்காகவாவது பாக்கணும்.

Wednesday, March 11, 2009

பரிசல் போல பதிவிடுவதில் உள்ள 11 சங்கடங்கள் !!

1) நிச்சயமாக எதிர்ப்பதிவு போட மாட்டார்கள் என்ற மூடநம்பிக்கையுடனோ, அடுத்த 10வது நிமிடத்தில் எதிர் பதிவு வரலாம் என்ற நம்பிக்கையுடனோதான் பதிவிட நேரும். இரண்டுமே பதிவருக்கு நன்மை பயக்கக் கூடியதல்ல.

2) பதிவு போட்ட அரை மணி நேரத்தில் "உனக்கு இது தேவையா?" என்று நம்மையே கேட்டுக் கொள்ள நேர்கிறது.

3) ‘இனிமேல் எதிர்பதிவு போட மாட்டேன்’ – இது பொதுவாக பதிவர்கள் சொல்லும் வாசகம். ஆனால் படக் படக்கென்று அதே நாளில் பத்து எதிர்பதிவுகள் வந்து விடுகின்றன.

4) எதிர் பதிவிடுபவர் பெயர் மிஸ்டர்.எக்ஸ் என்று வைத்துக் கொண்டால், பதிவுலகத்தில் வந்த ஓரிரு வாரங்களுக்குத்தான் அவர் மிஸ்டர்.எக்ஸ் ஆக இருக்கிறார். அதற்குப் பிறகு அவர் ‘என்னோட அந்த நல்ல பதிவுக்கு எதிர்பதிவு போட்டவர்’ என்றும், இன்னும் கொஞ்ச நாளில் ‘எதிர் பதிவு போட்டே கும்முபவர்’ என்றும்தான் அவர் பற்றிய பிம்பம் மனதில் படிகிறது.

5) நாம் போட்ட பதிவை ‘நம்மளே அந்தப் பதிவுக்கு எதிர் பதிவாத்தானே இதப் போட்டோம் ; அதுக்கு இவர் மறு எதிர் பதிவு போடறாரே" என்று மறு / மறு மறு எதிர் பதிவு போட்ட பாவத்திற்கு அவரை ஆளாக்குகிறோம்.

6) ஒரிஜினல் பதிவிலிருந்து வாக்கியங்களை அப்படியே உபயோகிப்பது, அதே நடையை பின்பற்றுவது போன்றவற்றை செய்யும் சுதந்திரங்களை வாரி வழங்கி விடுகிறோம். அல்லது அப்படி அவர் அப்படி உபயோகிக்காமல் சொந்த நடையில் எழுதினால் ‘இதப் போய் எதிர்ப்பதிவுன்னு நினைச்சோமே’ என்ற தவிப்புக்கு நம்மை ஆளாக்கிக் கொள்கிறோம்.

7) உண்மையாகவே அந்த எதிர்பதிவைப் போட்டவர் தெரியாமலே போட்டு விட்டதாக சொன்னால், அவர் அப்படிச் சொல்லும்போது அதை நம்ப முடியாமல் அவரைப் பற்றி நாம் தவறாகப் புரிந்து கொள்ள நேர்கிறது. எதிர்பதிவு என்று தெரிந்தே போட்டும் அவர் அப்படிச் சொல்வதானால்... (மீண்டும் 6வது பாராவின் கடைசி வரிகளைப் படிக்க....)

8) எதிர்பதிவு வந்த கடுப்பில் நாமிருக்கும்போது, வேறொரு நண்பர் அவரும் எதிர்பதிவு போட்டுக்கொள்ள அனுமதி கேட்க, நாம் சூடு கண்ட பூனையாய் அவரைக் கடுப்படிக்க, அவர் நம்மைத் தவறாகப் புரிந்து கொள்ள ஏதுவாகிறது.

9) நண்பனுக்குப் பணம் கொடுத்தால் பணம், நட்பு இரண்டையும் இழக்க நேரும் என்று பெர்னாட்ஷா சொன்னது போல, எதிர்பதிவு போட அனுமதி கொடுத்தால் நமது ஒரிஜினல் பதிவின் வீரியம், தாக்கம், ஒரிஜினாலிட்டி மூன்றையுமே நாம் இழக்க நேர்கிறது.

10) எதிர்பதிவை முதலில் படிப்பவர்களுக்கு ஒரிஜினல் பதிவை உடனே படிக்க வேண்டும் என்ற நினைப்பு வருவதில்லை. அதே, எதற்காக இந்த எதிர்பதிவு என்று நிஜமாகவே யோசிப்பவர்கள் ஒரிஜினல் பதிவின் மதிப்புணர்ந்து நிச்சயமாகப் படிப்பார்கள்... (அல்லது அப்படி நாம் நினைத்துக் கொள்கிறோம்!)

11) நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதால்தான் பதிவிடுகிறோம். அதற்கு எதிர்பதிவு வருவதால் அந்த ஒரிஜினல் பதிவை எழுதிய பதிவருக்கு கிடைக்கும் பாராட்டுக்கு நாம் சிறிது தடையாக இருக்கிறோம்.
பரிசலின் ஒரிஜினல் பதிவு (பிராயச்சித்தம் தேடிக்கிறேன் இஃகி இஃகி இஃகி)
டிஸ்கி: இந்தப் பதிவில் வரும் எதுவும் யாரையும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ குறிப்பிடுவதல்ல என இதன் மூலம் உறுதியளிக்கிறேன் !!

Saturday, March 7, 2009

காற்றின் வலி



காற்றைப் போலவே
சுதந்திரமாய் இருக்க முடியுமா?
காற்று போன வழியே
அவனும் போனான்...


காற்றை உணர முடியும்...
காற்றுக்கு உணர்வுகள் உண்டா?
காற்றுக்கு எண்ணங்கள் உண்டா?
காற்றுக்கு உறவுகள் உண்டா?
உறவுகள் உண்டென்றால் பூரண சுதந்திரம் சாத்தியமா?


காற்றைப் போலவே
சுதந்திரமாய் இருக்க முடியுமா?
அவன் காற்றைத் தேடிப் போனான்....


கனவில் காற்றைப் போல மிதந்தான்
காற்றுக்கு கனவுகள் உண்டா?
காற்றுக்கு காதல் உண்டா?
காற்று மரணத்தை அறியுமா?


காற்றைப் போலவே
சுதந்திரமாய் இருக்க முடியுமா?
அவன் காற்றைத் தேடிப் போனான்....


காற்றடைத்த பலூனை குழந்தைகளுக்குப் பிடிக்கும்
காற்றுக்கு குழந்தைகளைப் பிடிக்குமா?
காற்று வழியை மறக்குமா?
காற்றுக்கு வலி இருக்குமா?


காற்றைப் போலவே
சுதந்திரமாய் இருக்க முடியுமா?
அவன் காற்றைத் தேடிப் போனான்....


ஒவ்வொரு உயிரிலும் கலந்த காற்று
அவன் உயிரிலும் கலக்க
அவனைத் தேடிப் போனது...


காற்றைப் போலவே சுதந்திரமாய் இருக்க முடியுமா?

Friday, March 6, 2009

சாக்லெட் நட்பு


2002 நவம்பர் :


பெல்ஜியத் தலைநகர் ப்ருசெல்ஸ். தி க்ராண்ட் ப்ளேஸ். உலக்ப் புகழ் பெற்ற உச்சா போகும் சிறுவனின் சிலையைச் (Manneken Pis) சுற்றி டூரிஸ்டுகளின் கூட்டம். நானும் என்னோட ஓட்டை கேமராவில ஒண்ணு ரெண்டு படங்க எடுத்துக்கறேன். இந்த க்ராண்ட் ப்ளேஸ்லதான் ரெண்டு வருஷத்துக்கு ஒருமுறை பிகோனியாப் பூக்களால மொத்த மைதானத்தையும் அடைச்சு ஒரு பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய "மலர் விரிப்பு" (Flower Carpet) போட்டு உலகத்தயே அசத்துவாங்க. அது ஒரு பெரிய டூரிஸ்ட் அட்ராக்சன்.


பெல்ஜியத்துல வீடுகள்ல செய்யற ஹோம்-மேட் சாக்லேட்டுக ரொம்ப ஃபேமஸ். அங்க போயிட்டு அத வாங்காம வந்தா சொந்தமெல்லாம் எதிரியாயிடும்னு பயந்து அதக் கொஞ்சம் வாங்கணும்னு கெளம்பினேன். எங்க நல்லாருக்கும்னு யாரைக் கேட்டாலும் என்னவோ பெனாத்தறாங்களே ஒழிய நமக்கு ஒண்ணும் புரியல. அப்பிடி ஒரு கடைப் பக்கம் போய் விசாரிச்சுட்டு இருக்கும்போது ஒரு குரல். "ஹான் ஜி... க்யா சாஹியே ஆப்கோ?" திரும்பிப் பாத்தா ஆஹா.... ஆஜானுபாகுவா ஒரு சர்தார்ஜி. 35 வயசுக்கு மேல இருக்கும். பக்கத்து கடை அவரோடதாம். மளிகைக்கடை மாதிரி இருக்கு. அய்யா... இன்னது வேணும்... எங்க நல்லதா கிடைக்கும்னு அவர் கிட்ட கேட்டேன். "அப்பிடியா? ஒரு நல்ல இடம் இருக்கு. கொஞ்சம் தூரம் கண்ட்ரி சைட் போகணும். ஒண்ணு பண்ணுங்க. சரியா 1 மணிக்கு கடைக்கு வாங்க. லன்ச் ப்ரேக்ல நானே கூட்டிக்கிட்டுப் போறேன்"னு சொன்னாரு.


சரின்னு நானும் அங்க இங்க கொஞ்ச சுத்திட்டு மறுபடியும் டாண்ணு 1 மணிக்கு அந்த கடைக்குப் போயிட்டேன். அவரும் கிளம்பிக்கிட்டுருந்தாரு. கடைய சாத்திட்டு பக்கத்து சந்துக்கு போய் கார் எடுத்துட்டு வந்து ஏறச் சொன்னாரு. சிடிய விட்டு வெளிய வந்து ரொம்ப தூரம் வந்துட்டோம். உள்ளூர எனக்கு பயம் "இவர(ன?) நம்பி வந்துட்டமே? நல்லவந்தானா? அடிச்சு போட்டு இருக்கறத புடுங்கிட்டான்னா? பாஸ்போர்ட் திருட்டு வேற இங்க ரொம்ப ஜாஸ்திங்கறாங்களே"ன்னு என்னென்னவோ நினைப்பு. தன்னப் பத்தி (புபிந்தர் சிங்) குடும்பத்தை பத்தியெல்லாம் சொல்லிக்கிட்டே வந்தாரு. 12 வருஷமா ப்ருசெல்ஸ்ல இருக்காரு. அப்பிடி பேசிக்கிட்டே ஒரு கிராமத்துக்குள்ள நுழைஞ்சு ஒரு வீட்டுக்கு முன்னால நிறுத்துனாரு. உள்ள கூட்டிக்கிட்டு போய் என்னவோ பேசி வித விதமா சாக்லேட்டுக வாங்கிக் குடுத்தாரு. விலையும் கொஞ்சம் சகாயமா இருந்துது. திரும்ப கார்ல ஏறி கடைக்கே கொண்டு வந்து விட்டாரு. அப்பறந்தான் நமக்கு நம்பிக்கையே வந்துது. அவர் சாப்பிடக் கூட இல்ல. மறுபடி கடையைத் திறந்து வியாபாரம். கொஞ்ச நேரம் பேசிட்டு கிளம்பிட்டேன். அவர் எதுவும் காசு வாங்கிக்கல. சும்மா சொல்லக்கூடாது... சாக்லேட் அவ்வளவு டேஸ்ட்... இப்பிடியும் ஆளுக இருக்காங்களேன்னு மனசுக்குள்ள வாழ்த்திக்கிட்டே ஊருக்கு கிளம்பினேன்.


2009 மார்ச் 6 :

ஜெனீவா. காலை மணி 10. ட்ரெயின் ஸ்டேஷன் முன்னால ட்ராமுக்காக காத்துக்கிட்டு இருக்கேன். ஒரே பனிப் பொழிவு. மூக்கெல்லாம் மறத்துப் போச்சு. மூக்கு மூஞ்சில இருக்கான்னு அப்பப்ப தடவி தடவி பாத்துக்கிட்டு நிக்கறேன். பின்னால யாரோ ஒரு ஃபேமிலி இந்தில பேசிக்கிட்டு இருக்காங்க. பாத்தா ஒரு சர்தார், சர்தார்ணி, 10-12 வயசுல ஒரு பொண்ணும் பையனும். அவர் கொஞ்சம் சத்தமா பேசிக்கிட்டுருந்தாரு. எங்கேயோ கேட்ட குரலா இருக்கேன்னு திரும்பி நின்னு கவனிச்சுப் பாத்தா..... அட... இவர் அந்த புபிந்தர் சிங்கா? இங்க எப்பிடி? போய் பேசலாமா? நமக்கு வேணா ஞாபகம் இருக்கு... அவருக்கு இருக்குமா? இப்பிடி பல யோசனைகளோட இன்னும் கொஞ்சம் கவனிச்சு பாத்துட்டு, அவராத்தான் இருக்கணும்னு கிட்டப் போய்,


"எக்ஸ்க்யூஸ் மி... நீங்க.... நீங்க புபிந்தர் சிங்கா?". நாலு பேரும் என்னயே உத்துப் பாக்கறாங்க.


"ஆமாம்... நீங்க யாரு? உங்களுக்கு என்னைத் தெரியுமா? எப்பிடி?". நான் ப்ருசெல்ஸில் நடந்ததை ஞாபகப்படுத்துகிறேன்.

"வாவ்... ஏழு வருஷம் முன்னால நடந்தது. எனக்கு சுத்தமா நினைவில்ல. நீங்க இப்ப சொன்ன பிறகு லேசா ஞாபகம் வருது."


"உங்க கடைக்கு ஆயிரம் பேர் வராங்க... போறாங்க... உங்களுக்கு நினைவு வெச்சுக்க அவசியமில்ல... ஆனா என்னை யாருன்னே தெரியாதபோது எனக்கு நீங்க செஞ்ச உதவியை நான் மறக்க முடியாதே"


ஆனா தன்னை ஒருத்தன் அடையாளம் கண்டுக்கிட்டு வந்து பேசறதைப் பாத்து அவரும் குடும்பமும் குஷி ஆயிட்டாங்க. அவங்க ப்ருசெல்ஸை விட்டுட்டு இப்ப இங்க வந்து 3 வருஷம் ஆயிடுச்சாம். இங்க ஒரு கடைல பார்ட்னரா இருக்காராம். இந்த மே மாசம் எல்லாம் செட் ஆனா லண்டன் போயிடுவாங்களாம்.


"வீடு பக்கத்துலதான். வாங்களேன்.... அப்பிடி சாய் சாப்டுக்கிட்டே பேசுவோம்" சரின்னு ட்ராம் ஏறி அவர் கூடவே அவங்க வீட்டுக்கு போய் டீ குடிச்சு, பூரியும் ஹல்வாவும் சாப்டுட்டு கொஞ்ச நேரம் பேசிட்டு ரூமுக்கு வந்துட்டேன். போட்டோவெல்லாம் வேண்டாம்னு அன்பா கண்டிப்பா மறுத்துட்டாரு. நானும் ஏன்னு கேக்கலை.


முதல் சந்திப்புலயும் சரி, இன்னிக்கும் சரி அவரோட பேச்சுல இருந்த கனிவும், உண்மையும், நேர்மையும் ரொம்ப ஆச்சரியப்பட வைக்குது. முதல் சந்திப்பின்போது எனக்கு உள்ளூர ஒரு சந்தேகம் இருந்துக்கிட்டே இருந்தாலும், அதை அவர் கண்டுக்காம இயல்பா இருந்து அந்த சந்தேகத்தை தானா போக்கடிச்சாரு. இன்னிக்கு அந்த சம்பவத்தை ஞாபகப்படுத்தின உடனேயே ரொம்ப நாள் பழகின மாதிரி இயல்பா பேசி டக்குனு வீட்டுக்கும் கூட்டிக்கிட்டுப் போய் உபசரிச்சதும், அந்த குடும்பமும் அதே மாதிரி வித்தியாசமா எடுத்துக்காம நல்லா பழகினதும்.... இன்னும் ஆச்சரியம் தீரல.


இப்பிடியும் அன்பான அனுசரணையான மனுஷங்க இருக்காங்களா? இவுங்க மாதிரி ஆளுகளாலதான் இன்னிக்கும் ரெண்டு சொட்டு மழையாவது பெய்யுதா? ஒரு தனி மனுஷனோட இயல்பு அவன் குடும்பத்தையே இன்ஃப்ளூயன்ஸ் பண்ணுது? பல கேள்விகளோடயும் விலகாத ஆச்சரியத்தோடயும் ஹோட்டலுக்கு திரும்பினேன்.

Tuesday, March 3, 2009

மெகாத் தொடர்களும் மகா டைரக்டர்களும்


இந்த மெகாத்தொடர் எடுக்கற டைரடக்கருக எல்லாம் ஒரே அகடமில பயிற்சி எடுத்தவங்க போல. நம்மூர்லதான் எல்லா மொழிகள்லயும் மெகாத்தொடர், நெடுந்தொடர்னெல்லாம் மொக்கை போட்டு மெகாத் தொந்தரவு குடுக்கறாங்களோன்னு பாத்தா, இப்ப சிங்கப்பூர்ல லோக்கல் சேனல் "வசந்தம்"லயும் ஆரம்பிச்சுட்டாங்க. TRP பிச்சுக்கிட்டு போகுது.

அட... இதுவாவது சகவாச தோஷம்னு தலைல அடிச்சுக்கிட்டா, மலாய், சீன சேனல்கள்லயும் கன ஜோராப் போகுது மெகா மகாத்தொடருக. இங்கிலீஷ் சப்-டைட்டிலோட. சாம்பிளுக்கு கொஞ்சம் பாருங்களேன்.

ஒரு சீனத் தொடர். மக தன்கிட்ட தப்பா நடந்துக்க முயற்சி பண்ணவனை கொன்னுடறா. அவளுக்கு நல்லது பண்றதா நினைச்சு அம்மாவும், தாத்தாவும் போலீஸ்ல சொல்லிடறாங்க. போலீஸ் வந்து பொண்ணை கைது பண்ணுது. இந்த மூணு லைன முக்கா மணி நேரமா காட்றாங்க. பொண்ணு மூஞ்சி, அம்மா மூஞ்சி, தாத்தா மூஞ்சி... எல்லார் கண்ணுலயும் ஒரு சொட்டு கண்ணீர். இப்படி ஒரு 10 நிமிஷம். மயான அமைதி. விசும்பற சத்தம் மட்டும்தான். நடுவுல நடுவுல போலீஸ் கார் ரோட்டுல வர க்ளிப்பிங். நிஜமா ஸ்டேஷன்ல இருந்து கிளம்பி வீட்டுக்கு வர எவ்வளவு நேரம் ஆகுமோ அவ்வளவு நேரம் ஆகுது. கைது பண்ணிட்டு போம்போது ஒவ்வொரு மாடிப்படியிலயும், திருப்பத்துலயும் பொண்ணு அம்மாவை திரும்பி திரும்பி பாத்துக்கிட்டே போகுது. முக்கா மணி நேரத்துல ஒரே டயலாக் " யூ ஆர் அரெஸ்டெட்". அவ்வளவுதான்.

இன்னொரு மலாய் தொடர்ல குட்டிப் பையனுக்கு பிறந்த நாள் பரிசும் வாழ்த்து அட்டையும் வாங்க அம்மாவும் பையனும் கடைக்குப் போறாங்க. லேண்ட்மார்க் மாதிரி ஒரு பெரிய கடைல ஒவ்வொரு கார்டா, ஒவ்வொரு பொம்மையா திருப்பி திருப்பிப் பாத்து ரெண்டு கார்டும் ஒரு பொம்மையும் வாங்கிக்கிட்டு வெளிய வராங்க. ஒரே டயலாக் "மொத்தம் எவ்வளவு ஆச்சு?".

ஒரு சின்ன விடுமுறைல இந்தோனேஷிய தீவு "பின்டான்" போயிருந்தபோது ஹோட்டல்ல பொழுது போகாம டி.வி.ல ஒரு பஹாசா மெகாத் தொடர். மனைவிக்கு உடம்பு சரியில்லன்னு போன் வருது. வெளியூர்ல இருக்கற கணவன் உடனே ஆபீசை விட்டு வந்து பஸ் புடிச்சு, போட் புடிச்சு, ரிக்சா புடிச்சு, நடந்து.... வீட்டுக்குப் போறான். ஒரே டயலாக் "சீக்கிரம் ஏறு".

உலகத்துல எந்த மூலைக்குப் போனாலும், எந்த மொழில பாத்தாலும் மெகாத்தொடர்னா ஒரே ஃபார்முலாதான் போல. எப்பிடித்தான் ஒரே மாதிரி யோசிக்கிறாங்களோ? எல்லாரும் ஒரே கடைல அரிசி வாங்கி அதே சௌபாக்யா டில்டிங் கிரைண்டர்ல போட்டு மாத்தி மாத்தி அரைப்பாங்க போல.

நம்ம தூர்தர்ஷன்ல முன்னல்லாம் ஞாயிறு மதியம் ஹிந்தி தவிர்த்த வேற எதாவது ஒரு மொழிப் படம் போடுவாங்க. 90% அடாசுப் படமா இருக்கும். ஒரு முறை ஒரு அவார்டு வாங்குன மலயாளப் படத்தை போட்டாங்க. "எலிப்பத்தாயம்"னு நினைக்கிறேன். மணிரத்னம் படத்தை விட கம்மி டயலாக். படத்துலயே பெரிய டயலாக் ஒரு நாய் மூணு நிமிஷம் ஊளையிடறதுதான். எனக்கென்னமோ இந்தப மாதிரி படத்தை எடுத்த ஆளுங்கதான் இந்த மெகாத்தொடர்களுக்கெல்லாம் எள்ளுத்தாத்தான்னு தோணுது. (சும்மா டமாசுக்குதான் இந்த ஒப்புமை. சினிமாவை சீரிசா எடுத்துக்கிறவங்க கோச்சுக்காதீங்க.)

இவ்வளவு பேசறியே... இந்த பாடாவதிகளையெல்லாம் உக்காந்து பாத்துட்டு பெருசா பதிவு போட வந்துட்டியான்னு கேக்கலாம். நச்னு கேளுங்க. நறுக்குன்னு கேளுங்க. நம்ம மலாய் நண்பர் ஒருத்தரு இது மாதிரியெல்லாம் தொடர் வருதுன்னு ரொம்ப அலுத்துக்கிட்டாரு. நான் என்னமோ மெகாத்தொடர்லாம் நம்ம "கலாச்சார" சின்னங்கள்னு பெருமையா இருந்தபோது அவர் சொன்னது மடார்னு தலைல அடிச்ச மாதிரி இருந்துது. அப்பறம் அவர் கிட்டயே கேட்டு , என்னதான் ஆயிடும் ; ரெண்டு எபிசோட் பாத்துதான் வைப்போமேன்னு பாத்தேன். அப்ப கீழ வெச்ச ரிமோட்டை அதுக்கப்பறம் எடுக்கல. நாலு சாரிடான் சாப்பிட வேண்டியதாப் போச்சு. இப்பல்லாம் எதோ நம்ம ரேஞ்சுக்கு கார்டூன் நெட்வொர்க், டிஸ்னி சேனல், அனிமல் ப்ளானெட்னு பாத்து கெக்க பிக்கன்னு சிரிச்சுட்டு போயிடறது.

என்னதான் சொன்னாலும் இந்த டைரடக்கர்களோட "திறமை"யையும், யூனிட் ஆளுகளோட பொறுமையையும் பாராட்டியே தீரணும். 30 நிமிஷம் பாக்கற நமக்கே இப்பிடி இருந்தா அதை நாள் முழுக்க எடுக்கற அவங்களுக்கு எப்பிடி இருக்கும். உள்ள இருக்கற அந்த இத்துனூண்டு "க்ரே மேட்டரை" எவ்வளவு கசக்கி புழிஞ்சு, மல்லாக்கவோ குப்பறவோ படுத்து, பொரண்டு யோசிக்கிறாங்க !!!!

பிங்க் பேந்தர் 2 - சினிமா விமர்சனம்

ஜனவரில இருந்தே விளம்பரமா போட்டுத் தாக்கி ரொம்ப எதிர்பார்ப்புகளை தூண்டி விட்ட படம். ஆனா ஹைப் பண்ண அளவுக்கு பெருசா ஒண்ணும் இல்லங்கறது ஏமாத்தம். பிங்க் பேந்தர் விசிறிகள் எல்லாம் "இவ்வளவுதானா?"ங்கற மாதிரி "இதுக்கெல்லாம் விமர்சனம் ஒரு கேடா?"ங்கறாங்க. அதெல்லாம் ஒருபுற ம்இருந்தாலும் 90 நிமிஷம் சிரிப்பு கேரண்டி.

ஸ்டீவ் மார்டினோட ஃப்ரென்ச் ஆக்ஸன்ட் கலந்த பேச்சும், கொணஷ்டைகளும், கார்ட்டூன்ல் வர பிங்க் பேந்தர் பண்ற அத்தனை சேட்டைகளையும் இவர் பண்றதைப் பார்க்கும்போது சிரிப்பு பொத்துக்கிட்டு வருது. பலே திருடன் "டொர்னேடோ" உலகத்துல பல நாடுகள்ல இருக்கற ம்யூசியங்கள்ல இருந்து பல அரிய பொக்கிஷங்களை ஆட்டையப் போடறான். ஃப்ரான்சோட பிங்க் பேந்தர் வைரமும் அம்பேல். ஆளைப் புடிக்க பல நாடுகளோட போலீஸ்களை கொண்ட "ட்ரீம் டீம்" அமைக்கறாங்க. அதுல நம்மாளு ஃப்ரென்ச் இன்ஸ்பெக்டர் ஜாக் க்ளூசோவும். டீம்ல அவனும் இருக்கணும்னு சொன்னதும் கமிஷனர் டாய்லெட்டுக்குள்ள போய் செவுத்துல முட்டிக்கிறார் பாருங்க, நாம சிரிச்சு முடிக்கறதுக்குள்ள நாலு டயலாக் போச்சு.

நம்மாளும் அசிஸ்டென்ட் ஜீன் ரெனொவும் அடிக்கற கூத்துக சரி ரகளை. எல்லாம் ஸ்லாப்ஸ்டிக் ரகம்தான். குறிப்பா சொல்லணும்னா வைன் குடிக்கிறேன் பேர்வழின்னு ஒரு ரெஸ்டாரண்டயே கொளுத்தறது, அதை சரி பண்ணி ரீ-ஒபெனிங் அன்னிக்கு மறுபடியும் கொளுத்தறது, பிஹேவியர் கௌன்சலர் கிட்ட பண்ற ரகளை, ரோம்ல டொர்னேடொ இருக்கற வீட்டுல போய் "துப்பறியறேன் பெருமாளே"ன்னு செக்யூரிடி கேமரா முன்னாலயே போய் நிக்கறது எல்லாம் தியேட்டர்ல சுத்தி இருக்கறவங்க சிரிக்கற சத்தத்துல டயலாக்கே கேக்காது.

படத்துல ஒரு சின்ன ஆச்சரியம் ஐஸ்வர்யா ராய். இந்தியாவுல இருந்த வந்த டிடெக்டிவ்னு சொல்லிட்டு கடைசில பாத்தா அவர்தான் வில்லியாம். ஐஸ்வர்யாவோட மொத்த டயலாக்கையும் ஒரு சிங்கிள் பார்ட் SMSல அனுப்பிச்சுடலாம். அந்த ரோலுக்கு ஐஸ்வர்யா ராய் தேவையான்னு கேக்காதீங்க. படம் வித்தாகணுமே.

நடுவுல நம்மாளுக்கும் டிடெக்டிவ் நிகோலுக்கும் ஒரு லவ் வேற. அதுல குறுக்க ஆண்டி கார்சியா. ஒரு கட்டத்துல கேஸ் சால்வ் ஆயிடுச்சு, பேக்கப்னு சொல்லும்போது மறுபடியும் நம்மாளால ஒரு திடீர் திருப்பம். அப்பறம் நிஜமா கேஸ் முடிஞ்சு எல்லாம் சுபம்.

எல்லாம் பெருந்தலைகளாப் போட்டு இருந்தாலும் ஸ்டீவ்தான் மார்க் அள்றாரு. பின்னணி இசையெல்லாம் நாம கேட்டு கேட்டு பழகின ஒரிஜினல் பிங்க் பேந்தர் ட்யூன்கதான். ஆனாலும் DTSல கேக்கும்போது அட்டகாசமா இருக்கு. 90 நிமிஷம் போனதே தெரியல. சில டயலாக்கெல்லாம் அத்துமீறி இருக்கறதால PG சர்டிபிகேட் குடுத்து சில எதிர்மறை விமர்சனங்களையும் கிளப்பியிருக்கு. இங்கிலீஷ் படத்துல இதெல்லாம் சகஜந்தானே.... மொத்தத்துல நல்ல பொழுதுபோக்கு.

Pink Panther கொஞ்சம் Stink Panther-ஆ இருந்தாலும் Zing Panther !!