Wednesday, November 12, 2008

ஜெனீவா டயரி

முந்தாநாள் போட்ட பதிவப் பாத்தீங்களா?

Jet-de-aqua : World's highest fountain

திங்கள் கிழமை காலைல பேங்குக்கு போயிட்டு எல்லாருக்கும் ஒரு 'ஹாய்' சொல்லிட்டு கெளம்பிட்டேன். ராத்திரிதான் வேலை ஆரம்பிக்கும். வெளிய வந்தா சுள்ளுன்னு சூரியன், கூடவே ஊதக் காத்து. லேசா சாரல். பேங்குல இருந்து ஜன்னல்ல எட்டிப் பாக்கும்போதே தெரிஞ்சுது, இன்னிக்கு ஃபௌண்டன் இருக்குன்னு. அப்பிடியே ஆத்தோரமாவே நடந்து ஏரிக்கு வந்தா ஈயாடுது. குளுருக்கு டூரிஸ்டுக கூட ரூம்லயே மொடங்கி கெடக்காங்க போல. ஃபோட்டோ எடுக்க நல்ல சூழல். கூட்டம் கூட்டமா அன்னங்களும், வாத்துகளும், நாரைகளும். யாரோ ஒரு பாட்டி ஒரு ஒரமா உக்காந்து ரொட்டித் துண்டெல்லாம் பிச்சு பிச்சு அதுகளுக்கு வினியோகம். படம் புடிக்கலாம்னு போனா பாட்டிக்கு ஒரே கோவம். அதுகளையெல்லாம் நான் வெரட்டி விட்டுடுவேன்னு. படம் எடுக்கவே விடல. நமக்கு ஃப்ரென்ச் ஓரளவுதான் புரியும். திட்ட ஆரம்பிக்கறதுக்குள்ள இடத்த காலி பண்ணிட்டேன்.

பக்கத்துலயே தாவரவியல் பூங்கா (Botanical Garden) இருக்கு. வெளிய ஒரு பெரிய திடல்ல போதைமருந்துகளுக்கு எதிராக ஒரு விழிப்புணர்வுக் கூட்டம் நடந்துக்கிட்டுருந்துது. கொஞ்ச நேரம் நின்னு கவனிச்சா ஸ்விஸ் டீனேஜர்க எந்த அளவுக்கு இந்த பழக்கத்துக்கு அடிமையாகிக் கிடக்காங்கன்னு தெரிஞ்சுது. (போன முறை வந்தபோதே சாயங்காலத்துல இருந்தே ஏரிக்கரையோரமா பசங்களும் பொண்ணுகளும் கஞ்சா மாதிரியான பொருட்களை சர்வ சாதாரணமா உபயோகிக்கறதப் பாத்து அரண்டு போயிருக்கேன்.) ஸ்விஸ் நார்கோடிக்ஸ் ப்யூரோவோட சட்டங்கள் இன்னும் கடுமையாக்கப்படணும்னு பேசினாங்க.

Caption: What is the future for our children? Say double no to drugs !!

வெளிய பாலத்துக்கு ரெண்டு பக்கமும் இருந்த குதிரைவீரன் சிலைக என்னை ரொம்ப கவர்ந்தது. போருக்கு போற (கழுகுடன் வீரன்) குதிரை தலை குனிஞ்சும், சமாதானத்துக்குப் போற (புறாவுடன் வீரன்) தலை நிமிர்ந்தும் இருக்கற மாதிரி தோணுச்சு. பூங்காவுக்குள்ள போனா, ஒவ்வொரு மரமும் ஒவ்வொரு கலர்ல இருக்கு. இலையுதிர் காலத்தோட கடைசி நாட்கள். இன்னும் ரெண்டு வாரத்துல எல்லா மரமும் மொட்ட மொட்டயா நிக்கும். சில படங்கள் எடுத்துட்டு ரூமுக்கு திரும்பிட்டேன். கொஞ்சமாவது தூங்கினாத்தான் ராத்திரி பூரா உக்கார முடியும். புதுசா ஒரு இந்திய ரெஸ்டாரண்ட் ஆரம்பிச்சுருக்காங்கன்னு அங்க சாப்பிடப் போனா, அது பேருதான் 'இந்தியா ப்ளாசா' நடத்தறது ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படிக்க வந்த பங்ளாதேஷ் பசங்க. கடுகு எண்ணை சமையல். சுமாரா இருந்துது. இனிமே அந்தக் கடைக்கு போகக்கூடாதுன்னு முடிவு பண்ணிக்கிட்டேன்.

இந்த வாரக்கடைசிக்குள்ள வேலை முடியணும். அப்பிடி முடிஞ்சா, ஒரு நாள் ஆல்ப்ஸ் மலைத்தொடர்ல எதாவது ஒரு மலையுச்சிக்காவது போயிட்டு வரணும். உச்சிகள்ல நல்ல பனி விழுந்திருக்கு. மழை இல்லாம இருக்கணும். இன்னிக்கு காலையிலிருந்து மழை விடாம பெஞ்சுக்கிட்டுருக்கு. வாரம் பூரா இப்பிடித்தான் இருக்கும்கறாங்க. பாக்கலாம்...

கலர் கலரா மரங்களப் பாருங்க....

Tuesday, November 11, 2008

மென் பொருட்களில் என் பொருட்கள்

கொக்கி போட்ட அணிமா வுக்கு வாழ்த்துக்கள்... நல்லாயிருப்பா நல்லாயிரு !!

அது என்ன மேட்டர்னா, நாம அடிக்கடி உபயோகிக்கற மென்ப்பொருட்களப் பத்தி நாலு நல்ல வார்த்தை சொல்லணுமாம். சொல்லிட்டாப் போச்சு....



PDF கோப்புகள் பண்றதுக்கு. இத ஒரு ப்ரிண்டரா சேத்துட்டோம்னா, இது வழியா ப்ரிண்ட் பண்ணும்போது நாம சொல்ற இடத்துல சொல்ற பேர்ல PDF கோப்பா எழுதிரும். சாதாரண ப்ரிண்டரை கையாளர மாதிரியேதான். இலவச வரிசைல கொஞ்சம் விளம்பரங்கள் 15 வினாடிகளுக்கு வரும். அதை பொறுத்துக்கிடோம்னா போதும்.


இது ஒரு 'அகராதி' புடிச்ச மென்பொருள். இத நிறுவியாச்சுன்னா ஸிஸ்டம் ட்ரேல உக்காந்துக்கும். திடீர்னு யாராச்சும் இங்கிலிபீச்சுல மெய்ல் அனுப்பிச்சாலோ, மேனேஜர் குடுத்த டாக்குமெண்ட்ல எதாவது வார்த்தைக்கு அர்த்தம் புரியலைன்னாலோ, அந்த வார்த்தை மேல கர்சர வெச்சு Ctrl+Alt+W அமுக்குங்க.


அப்துல்லா அண்ணன் அறிமுகப் படுத்தினாரு. தமிழ்ல டைப் பண்ண ரொம்ப சுலமான வழி. வசதி என்னன்னா தமிழ் இங்கிலீஷ் ரெண்டுலயும் மாத்தி மாத்தி டைப் பண்ணிக்கிட்டு போய்ட்டே இருக்கலாம். இன்னொரு எடிட்டர்ல எழுதி, காப்பி பண்ணின்னு வில்லங்கமே இல்லை.


நெஜமா சொல்றேன்... இத போட்டதுக்கு அப்பறம் இந்த ரெண்டு வருஷத்துல வைரஸ் தொந்தரவு இல்லவே இல்ல. வாரம் ஒரு தடவையாவது வைரஸ் டேடாபேசை அப்டேட் பண்ணிக்கிறது நல்லது.


Net Meeting -ஐ விட ஒசத்தி. இண்டர்நெட்டும் கண்ட்ரோல் பண்ண வேண்டிய கம்ப்யூட்டர்ல அனுமதியும் இருந்தா போதும். எங்க இருந்தும் எந்த கம்ப்யூட்டரையும் இயக்கலாம். வீட்டுல இருந்து ஆபீஸ் வேலை செய்யணும்னா நமக்கு இதுதான் வசதி.

அவ்வளவுதான்... மத்தபடி சொல்லிக்கற மாதிரி ஒண்ணும் உபயோகிக்கறதில்ல. எதாச்சும் உங்களுக்கு உருப்படியா தேறுதா?

இன்னும் ரெண்டு பேர மாட்டி உடணுமே? நம்ம நண்பர்கள் எல்லாருமே நல்லவங்கதானே? நீங்களா யாராவது எடுத்து தொடருங்களேன்... ப்ளீஸ்....

Sunday, November 9, 2008

ஜெனீவா !!


வேலை நிமித்தமா நேத்து ஜெனீவா வந்தேன். சிங்கப்பூரிலிருந்து 13 மணி நேரம் பறந்து ஸ்யூரிக் (Zurich) வந்து 2 மணி நேரம் காத்திருந்து 1/2 மணி நேரத்தில் ஜெனீவா. (இதுக்கு ஸ்யூரிக்லயே வெளிய வந்து ரயில் புடிச்சு வந்திருந்தாக் கூட சீக்கிரமா வந்திருக்கலாம்.) பிஸினஸ் க்ளாஸ்ல நல்லா தூங்கிட்டு வந்தாலும் 7 மணி நேர வித்தியாசம் இருக்கறதால ஒரு மாதிரி கெறக்கமா இருந்துது. ராத்திரி 12 மணிக்கு மேல வந்து சேந்து ஹோட்டல்ல போய் மறுபடி தூக்கத்தை கண்டின்யூ பண்ணினேன்.

சனிக்கிழமை காலை. நல்ல குளிர். மழைத் தூரல். விசு விசுன்னு காத்து வேற. காலைல இருந்து ராத்திரி 9 மணி வரைக்கும் பேங்குல வேலை. நண்பர்களோட ராத்திரி இந்தியன் ரெஸ்டாரெண்டுல டின்னர். இது ஒரு சோம்பேறி ஊரு. இதுக்கு முன்னால 2-3 தடவை வந்திருக்கேன். இப்ப கொஞ்சம் பரவால்ல. சாயங்காலம் 6 மணி ஆச்சுன்னா ஆபீஸ் மாதிரி கடைகள மூடிட்டு அவனவன் வீட்டுக்கு போயிடுவான். ரெஸ்டாரெண்டுக மட்டும் ஒரு 10:30 மணிக்கு கடைசி ஆர்டர் எடுப்பாங்க. இன்னிக்கு ஞாயிறு லீவு. காலைல எழுந்து ஐக்கிய நாடுகள் சபைக்கு போனேன். ஹோட்டல்ல் இருந்து நடக்கற தூரந்தான். மழை, காத்துனால 13 நம்பர் ட்ராம் புடிச்சு போனேன். கரெக்டா இன்னிக்கு பாத்து சுத்திப் பாக்க அனுமதி இல்லைன்னுட்டாங்க. ஐ.நா. சபைக்கு வெளிய சர்வதேச ஊனமுற்றோர் சங்கம் (Handicap International) , கண்ணி வெடிகளால் ஊனமுற்றவர்கள் நினைவாக பெரிய மர நாற்காலி நினவுச் சின்னம் வெச்சுருக்காங்க. ஒரு கால் உடஞ்ச மாதிரி இருக்கும். அதிகார வர்க்கத்தின் அலட்சியப் போக்கையும் இந்த் சின்னம் ஒரு இடி இடிக்குது.

இப்ப இது இலையுதிர் காலம்கறதால ஊர் பூரா மேபில் மரத்தோட (காஷ்மீர்ல சினார் மரம்னு சொன்னேனே... அதே மர வகைதான் இதுவும்) இலைகள். சின்னதும் பெருசுமா, மஞ்சள், பழுப்பு, ப்ரவுன்னு பாக்கற எடமெல்லாம் இலைக்குப்பை. குப்பைன்னாலும் பாக்க அழகா இருக்கு.


மழை தூரலப் பாத்தா வேலைக்காகாதுன்னு அப்பிடியே நடந்து ஜெனீவா ஏரிப் (Lake Leman) பக்கம் வந்தேன். கரையோரமா நாரைகளும், வாத்துகளும், அன்னங்களும் நீந்திபோறது பாக்க அவ்வளவு அழகு.


ஏரிக்கு நடுவுல உலகின் பெரிய ஃப்வுண்டன் இருக்கு. 500 மீட்டருக்கு மேல பீச்சி அடிக்கும். கெரகம் அதுக்குங்கூட இன்னிக்கு லீவு. போங்கடா.. நீங்களும் உங்க ஊரும்னு மறுபடி ஹோட்டலுக்கே வந்துட்டேன். நண்பர் ஒருத்தரு வீட்டுல மதிய சாப்பாடுக்கு போகணும். அவருக்காக காத்துக்கிட்டுருக்கேன். ராத்திரி வேற ஒரு நண்பரோட டின்னருக்கு போகணும். ரொம்ப டைட் ஷெட்யூல் பாருங்க.. :)

ஐரொப்பிய கட்டுமானக் கலைக்கு உதாரணமா பல பழங்காலக் கட்டிடங்க, சர்ச்சுக, சிற்ப வேலைகன்னு ஊர்ல நிறைய இருக்கு. அடுத்த ஒரு வாரத்துல இன்னுங் கொஞ்சம் ஊரச் சுத்திட்டு எழுதறேன். இப்போதைக்கு இந்தப் படங்களைப் பாருங்க. (படங்களை க்ளிக்கினா பெருசா பாக்கலாம்)

Saturday, November 8, 2008

விளம்பர நாட்கள்

மெக்கானிகல் இஞ்சினீரிங் முடிச்சுட்டு "காக்காசுன்னாலும் கெவுர்மெண்ட்டு காசு"ன்னு வேலை தேடும்போது கெவுர்மெண்டு கம்பெனிகள்லாம் எங்கூட டூ விட்டுட்டாங்க. அப்பறம் டெல்லி போய் நமக்குத் கொஞ்சமே கொஞ்சம் தெரிஞ்ச "கட்டிங் எட்ஜ் டெக்னாலஜி"யான வேர்ட்ஸ்டார், டி-பேஸ் இதுகளை வெச்சு ஒரு உப்புமா கம்பெனில டைரெக்டரா .. சாரி.. டைரெக்டா ஜாயின் பண்ணினேன். ஒரு மாசத்துக்குள்ளயே ஒரு சின்ன விளம்பர ஏஜன்ஸியில தெரிஞ்சவர் மூலம வேலை கெடச்சுது. உப்புமா கம்பெனில மொத மாசம் சம்பளம் வாங்கின மறுநாள் சொல்லாமக் கொள்ளாம ஏஜன்ஸில ஜாயின் பன்ணிட்டேன்.

அப்பத்தான் அந்த ஏஜன்ஸிக்கு ரெண்டு வயசு. கம்ப்யூட்டர்லாம் வாங்கி நெட் ஒர்க் பண்ண ஆரம்பிச்சிருந்தாங்க. நாமதான் "கட்டிங் எட்ஜ் டெக்னாலஜி" எக்ஸ்பர்ட் ஆச்சே.. "அந்த நெட் ஒர்கிங் எல்லாம் கொஞ்சம் பாத்து செய்ங்க"ன்னு அங்க ஸிஸ்டம்ஸ் மேனேஜர் கிட்ட சேத்து விட்டாங்க. ராவோட ராவா நாவெல் நெட் ஒர்க் எல்லாம் படிச்சு எப்பிடியோ செட் பண்ணிணோம். சின்ன ஏஜன்ஸிங்கறதால எல்லா டிபார்ட்மென்ட்லயும் மூக்க நொழைக்கலாம். ஒரு 4 மாசம் போன பின்னாடி, "இது வரைக்கும் என்ன கிழிச்சங்கறத எழுதிக் குடு பாக்கலாம்"ன்னாங்க. சரின்னு நானும் ஒரு பக்கம் எழுதிக் குடுத்தேன். அதப் படிச்சுட்டு "அட இங்கிலீஷ்ல சுமாராவே எழுதரயே.... காபியெல்லாம் எழுத முடியுமா?"ன்னு கேட்டாங்க. எதோ ஒரு ஆர்வத்துல "ஓ... எழுதினாப் போச்சு"ன்னு சொல்லிட்டேன். ஆனா முழு நேரமா இல்ல. அப்பப்ப. அப்ப ஒரு பெரிய ஜப்பானிய ஆடியோ ப்ராண்டுக்கு ஒரு புது கேம்பெய்ன் ஆரம்பிக்க இருந்துது. அதுக்கு "ஒன் வேல்ட்... ஒன் சௌண்ட்.."ன்னு ஒரு பேஸ் லைன் எழுதினோம். அதுக்கு ரொம்ப பெரிய வரவேற்பு. கூடவே டி.டி.பி, அனிமேஷன் எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் செஞ்சு பாக்க ஆரம்பிச்சேன். ராகேஷ் பச்சன்னு ஒரு அனிமேட்டர் இருந்தாரு. ராத்திரியெல்லாம் ரொம்ப நேரம் உக்காந்து சொல்லித் தருவாரு. 3டி ஸ்டுடியோ, அனிமேட்டர் ப்ரோ ரெண்டும் உபயோகிச்சு சின்ன சின்ன அனிமேஷன்ஸ் பண்ணினோம். ஒரு பெரிய ஃப்ரிட்ஜ் விளம்பரத்துக்காக பெங்குயினை வெச்சு சில அனிமேஷன்ஸ் ரொம்ப திருப்தியா செஞ்சோம். ஆனா எல்லாமெ வெளி வரல.





விளம்பர உலகத்துல அப்பிடித்தான். 10 செகண்ட் விளம்பரத்துக்கு 1 மாசம் ஷூட் பண்ணி, எடிட் பண்ணி 10 படம் எடுத்தா, 1 செலக்ட் ஆகலாம். லக் இருந்தா. அதே மாதிரி எட்டு லைன் பேராவுக்காக பத்து பக்கமாவது வேற வேற மாதிரி எழுதிப் பாத்தாத்தான் ஒண்ணாவது கரெக்டா வரும். மெயினா கம்ப்யூட்டர், நெட் ஒர்க், அக்கவுண்டிங் சாஃப்ட்வேர்னு இருந்தாலும், சைடுல அப்பிடியே ஒரு ஹோட்டல், ஒரு பெரிய டெக்ஸ்டைல் ப்ராண்ட், ஒரு கம்பூட்டர் கம்பெனின்னு பல ப்ராண்டுகளுக்கு பேஸ் லைன், காப்பின்னு நிறைய எழுதினேன். கம்ப்யூட்டர் வேலையை விட இது ரொம்ப வித்தியாசமா, சுதந்திரமா இருந்ததாலா ராத்திரி ரொம்ப நேரம் ஆனாலும் மத்த க்ரியேடிவ் டைரெக்டர்க, காப்பி ரைடர்க கூட விவாதங்கள் பண்ணின்னு சுவாரஸ்யமா இருக்கும். ரொம்ப மகிழ்ச்சியோட கழிச்ச நாட்கள் அவை. அங்க நம்ம கற்பனைக்கு எந்த எல்லையும் கிடையாது. எந்த ஒரு விஷயத்தையும் எந்த ஒரு கோணத்துலயும் அணுகலாம். பரிபூரண சுதந்திரம். மத்த ஏஜன்ஸிகளோட / க்ளையன்டுகளோட விளம்பரங்கள் அடங்கிய கார்ட் புக், ஷோ ரீல்கன்னு எது வேணும்னாலும் கிடைக்கும். அது ஒரு நிலாக் காலம்.




அப்பிடியே ஒரு 4 வருஷம், சோனி, ஜே.சி.டி., க்ளாரிட்ஜஸ் ரிசார்ட்ஸ், அமுல் சாக்லேட், லிம்கா, ஃபினோலெக்ஸ், பி.எஸ்.ஐ, ஷா வாலஸ், கெல்வினேட்டர், எலெக்ரோலக்ஸ், காம்பேக் கம்ப்யூட்டர்ஸ், வேல்டு ஃபோன்.... இப்பிடி பல ப்ராண்டுகளோட சம்பந்தப் பட்டு இருந்தேன். காப்பி எழுதறது, விஷுவலைஸ் பண்றது, அனிமேஷன் பண்றதுன்னு பல விதங்கள்ல. கூடவே சாப்ட்வேரும், நெட் ஒர்கிங்கும். மும்பைல, புனேல புது கிளைகள் ஆரம்பிச்சபோது அங்கெல்லாம் கொஞ்ச நாட்கள் இருந்து வேலை செஞ்சது வேற மாதிரியான் அனுபவங்கள்.

பிறகு க்ளையண்டோட தேவைகள் அறிஞ்சு க்ரியேடிவ் ரூட் முடிவு பண்றதும், மீடியா ப்ளானிங்லயும் நொழஞ்சு அந்த பேப்பர்ல/மேகஸின்ல எந்த அளவு விளம்பரம் போடறது, எந்த சேனல்ல எத்தனை செகண்ட் நேரம் வாங்கணும், சிட்டிக்குள்ள எந்த இடங்கள்ல ஹோர்டிங் வெக்கறதுன்னு அந்த வேலைகளையும் கத்துக்கிட்டேன். ஒவ்வொரு நாளும் சேலஞ்சிங்கா இருக்கும். அது மாதிரி சுவாரசியமான நாட்கள் திரும்ப வருமாங்கறது சந்தேகந்தான்.

இப்ப இருக்கறது முழுசா ஐ.டி. யில. பல வங்கிகள், பல நாடுகள்னு சுத்தினாலும், இதுல வேறு விதமான அனுபவங்கள் இருந்தாலும், விளம்பர உலகத்துல இருந்த மாதிரியான கற்பனை சுதந்திரம் கிடையாது. கம்ப்யூட்டரோ, சாஃப்ட்வேரோ அதோட எல்லைக்கு உட்பட்டு என்ன செய்ய முடியுமோ அதுதான் முடியும். சில சமயம் தோணுது திரும்ப விளம்பரனாகப் போயிடலாமான்னு. ஆனா அந்தத் துறையோட முகம் இந்த இடைப்பட்ட காலத்துல ரொம்பவே மாறிப் போச்சு. அதுல நம்மளை நிறுத்திக்க முடியாதோன்னு தோணுது.

வால் : ஒரு ஷூ ப்ராண்ட் லாஞ்ச் பண்ணுபோது, 3 டீசர் விளம்பரங்கள் போட்டோம்.

Day 1 : "69% of the Italian girls want you to slip into them"

Day 2 : "69% of the French girls want you to tie them up"

Day 3 : "69% of the Spanish girls want your toes inside"

அவ்ளோதான்... டெல்லி மாதர் சங்கங்கள், விமென்ஸ் லிப் எல்லாம் ஏஜன்ஸி முன்னாலா தர்ணா பண்ணி, Times of India-ல மொதப் பக்கம் செய்தி வந்து அப்பறம் மன்னிப்பு கோரல், விளம்பரம் வாபஸ்னு ஆகிப் போச்சு. பின்ன... இது கொஞ்சம் ஓவராத்தான் எழுதிட்டோம் :)))

Monday, November 3, 2008

பூலோக சொர்க்கம்(??) காஷ்மீர் ‍ 4

போன மூணு பதிவுலயும் காஷ்மீர்ல இருக்கற சில எடங்களோட அழகை ரசிச்சிருப்பீங்க....வாஸ்தவந்தான்... காஷ்மீர் ரொம்பவே அழகான எடந்தான்... சந்தேகமேயில்லை. அது புவியியல் ரீதியா இந்தியாவுல இருந்தும் அது ஏன் நம்ம எல்லாருக்கும் ரொம்பவே அன்னியப்பட்டு இருக்கு? அது ஏன் நம்ம நாட்டோட மத்த பகுதிகளுக்கு போய் சுதந்திரமா வர மாதிரி முடியாம ஒரு கட்டுப்பாடு இருக்கற மாதிரி ஒரு நெலமை? இத மாத்தறதுக்கு ஏன் நம்ம மத்திய அரசுனால ஏன் முடியல? மொதல்ல அப்பிடி மாத்த முடியுமா.. அவ்வளவு அதிகாரம் நம்ம அரசுக்கு இருக்கான்னு பாத்தா... முடியும், இருக்குன்னு உறுதியா சொல்ல முடியல. இத புரிஞ்சுக்க முயற்சி பண்றதுக்கு, கொஞ்சம் அப்பிடியே பின்னால போய் வரலாறு என்ன சொல்லுதுன்னு பாப்போமா?

சீன் 1 : 1947 அக்டோபர்ல மஹாராஜா ஹரி சிங் ஆட்சியில சுத்துப்பட்டு நாடுகளால ஒரு ஆபத்து வந்தபோது, ஒரு நெருக்கடி காரணமா இந்தியா கிட்ட உதவிக்கு வராரு. நேரு அத எழுத்து மூலமா கேக்கறாரு. ராஜாவும் மௌண்ட்பேட்டனுக்கு தன் நாட்டோட பாதுகாப்புக்காகவும், வந்திருக்கற ஆபத்தை எதிர்த்து போராடவும், தன் நாட்டோட பாதுகாப்பு, தகவல், வெளியுறவு‍ இந்த மூணு துறையையும் இந்தியா நிர்வகிக்க வேண்டியதுன்னு எழுதித் தராரு. கூடவே ஷேக் அப்துல்லாவை பிரதமராகக் கொண்ட இடைக்கால அரசு அமைக்கவும் கேட்டுக்கறாரு.

சீன் 2 : இந்திய அரசும் 1948ல ஐக்கிய நாடுகள் சபைக்கு அதிகாரப் பூர்வமா ஒரு கடிதத்தை அனுப்பி, பாகிஸ்தானோட ஆக்கிரமிப்புக்கு தன்னுடைய எதிர்ப்பையும், பாகிஸ்தான் தன் படைகளை காஷ்மீரிலிருந்து விலக்கிக்கணும்னு பதிவு செய்யுது.

சீன் 3 : இதப் பத்தி ஐக்கிய நாடுகள் சபையில விவாதம் நடக்கும்போது ஷேக் அப்துல்லா பேசும்போது "காஷ்மீரோட இறையாண்மையப் பத்தி ஏன் பாகிஸ்தான் கேள்வி எழுப்புதுன்னு புரியலயே. என் நாட்டுக்கு ஒரு அபாயம். அதை சமாளிக்கறதுக்கு இந்தியா கூட ஒரு உடன் படிக்கை செய்துக்கறோம். இதுல என்ன குழப்பம்னு தெரியல. காஷ்மீருக்கு சுதந்திரம் வேணுமா, ஏன் இந்தியாவுடன் ஒப்பந்தம் போடப் போச்சுன்னெல்லாம் கேட்க எந்த உரிமையும் யாருக்கும் இல்லை. ஐநா சபை நேரில் வந்து நிலைமையை ஆராயட்டும்" அப்பிடின்னு பேசறாரு.

சீன் 4 : 1948 ஆகஸ்டுல ஐநா சபை "இந்தியா, பாகிஸ்தான் இரு நாடுகளும் மொதல்ல சண்டை சச்சரவ நிறுத்திட்டு, படைகளை வாபஸ் வாங்கிட்டு, போர் நிறுத்தம் செய்யணும்; இரு நாடுகளும் சுமுகத் தீர்வுக்கு ஒரு மனதாக முயற்சி செய்யணும்; காஷ்மீர் மக்களோட உணர்வுகளுக்கும் மதிப்பு அளிச்சு, அவங்க சம்மதத்தோட ஒரு பொதுவான் முடிவுக்கு வரணும்" அப்பிடின்னு ஒரு தீர்மானம் நிறவேத்துது. இந்தியாவும் இதை ஒத்துக்கிட்டு தன்னுடைய சம்மதத்தை அளிக்குது. சில நிபந்தனைகளோட. (காஷ்மீரோட இறையாண்மைல‌ பாகிஸ்தானுக்கு எந்தப் பங்கும் கிடையாது; "சுதந்திர காஷ்மீர்" அப்பிடின்னு ஒரு அங்கீகாரம் இல்லை; காஷ்மீரோட உள்விவகாரங்கள்ல பாகிஸ்தானுக்கு எந்த வேலையும் இல்லை; மக்கள் கருத்து (plebiscite) அறியும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்; அப்பிடி மக்கள் சுதந்திரமா கருத்து சொல்ல முடியாத ஒரு சூழ்நிலை இருந்தா அதை சரி செய்ய இந்தியா தேவையான நடவடிக்கைகள் எடுக்கும்.) கூடவே, காஷ்மீருக்கு சில விசேஷ அந்தஸ்தைக் கொடுக்கும் புகழ் பெற்ற "ஆர்டிகில் 370" யும் நம்ம கான்ஸ்டிட்யூஷன்ல சேருது.

இதெல்லாம் பாகிஸ்தானுக்கு ஒத்துக்கவே முடியாமப் போகுது. கர் புர்னு ரெண்டு பக்கமும் கருவிக்கிட்டே இருக்காங்க. அதுக்கு பிறகு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கு இடையில 1965ல போர், 1966ல தாஷ்கண்ட் ஒப்பந்தம் (போனஸா லால் பகதூர் சாஸ்திரி மர்மமான முறையில தாஷ்கண்ட்லயே மரணம்), 1971ல போர், 1972ல சிம்லா ஒப்பந்தம்...... 1974, லஹோர், ஆக்ரா, இஸ்லாமாபாத்.... இப்பிடி பல ஒப்பந்தங்கள்னு தொடர்ந்து போர், சமாதானம், பேச்சு வார்த்தைன்னு வளந்துக்கிட்டே போக, ரெண்டு நாடுகளுக்கும் இது ஒரு ப்ரெஸ்டீஜ் இஷ்யூ ஆகுது. இதுக்கு நடுவுல பாகிஸ்தான் பின்வாசல் வழியா ஆளுகளை அனுப்பி, காஷ்மீர்ல உள்ள சில அடிப்படைவாதிகளை மூளைச்சலவை செய்து, தகிடுதத்தம் பண்ணி அங்க எப்பவும் ஒரு பதட்டமும் அமைதியின்மையும் இருக்கற மாதிரி பாத்துக்குது. நடுவுல நம்ம அரசியல் கட்சிகளும் பிரச்னைகளை கெளப்பி விட்டு நெருப்பு அணையாம பாத்துக்கறாங்க.

பிரச்னை தீர்ந்தா ரெண்டு நாடுகளுக்கும் அரசியல் பண்ண விஷயம் இல்ல. பாகிஸ்தான்ல பருத்தி வெடிக்குதோ இல்லயோ காஷ்மிர்ல தெனம் ரெண்டு குண்டாவது வெடிச்சாத்தான் சாப்பாடு எறங்கும். அந்த அளவுக்கு காஷ்மிர் அவுங்க தினப்படி அரசியல் வாழ்க்கையோட கலந்திருக்கு. ஜின்னாவுல இருந்து ஜர்தாரி வரைக்கும். நடுவுல எத்தனை தலைவர்கள காவு வாங்கியிருக்கு.இந்த சிக்கல்களால 3 பிரிவுக உருவாகுது. இந்தியாவோட இருக்கலாம், பாகிஸ்தானோட போகலாம், ரெண்டு பேரும் வேண்டாம்; சுதந்திரமா நம்மள நாமெ பாத்துக்கலாம்னு.

இந்த சூழ்நிலைல, நாள் மாசம்னு 50 வருஷம் கடந்து போக, பாதிக்கப்பட்டது 2 தலைமுறை. இந்த சச்சரவைப் பாத்து பாத்து எரிச்சலாகி மனசுக்குள்ள வன்மம்தான் வளருது. இதாண்டா சான்ஸ்னு சில இயக்கங்கள் நைஸா இஸ்லாமிய அடிப்படைவாதத்தையும், இந்து அடிப்படைவாதத்தையும் உரம் போட்டு வளர்க்க ஆரம்பிக்க, இப்ப பிரச்சனைக்கு இன்னொரு பரிமாணம். ஊர் ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்ட‌ம். இதுமாதிரி இயக்கங்களுக்கெல்லாம் நல்ல முறையில ஊக்கமும், உதவிகளும் அந்தப் பக்கத்திலிருந்து அட்டகாசமா வருது. வேறென்ன வேணும்? இவங்களுக்கு ஒரே வேலை... பள்ளத்தாக்குல எங்க எந்த சின்னப் பிரச்சனை வந்தாலும் அதை ஒட்டுமொத்தமா காஷ்மீர் பிரச்னையா ஆக்கறது. அதனால பிரச்னைக்கு ஒட்டுமொத்த காரணம் பாகிஸ்தான்னு சொல்லிட முடியாது. இந்தியா, பாகிஸ்தான், காஷ்மீர மக்கள்னு மூணு புள்ளிகள் இணைக்கிற முக்கோணம் அது. ஜியோமிதி விதிகளின்படி "மோஸ்ட் ஸ்டேபில் ஸ்ட்ரக்சர்" முக்கோணம்தான். அதுனாலதானோ என்னவோ, இந்தப் பிரச்னையும் ரொம்பவே ஸ்ட்ராங்கா இருக்கு.

தவிர காஷ்மிரோட வடக்கு பகுதிகளை (Northern Areas) பாகிஸ்தானுக்கும், கிழக்குல அக்ஸாய் சின் பகுதியை சைனாவுக்கும் தாரை வார்த்துக் கொடுத்தது, முசாஃபராபாதை தலைநகரா வெச்சு ஒரு அங்கீகரிக்கப்படாத "ஆசாத் காஷ்மீர்" இருக்கறது எல்லாம் பிரச்னையை மேலும் சிக்கலாக்குது. ஒப்படைக்கப்பட்ட காஷ்மீரோட பகுதிகளை இந்தியா பாதுகாக்கத் தவறிடுச்சுன்னு ஒரு சாராருக்கு கோவம். இதுதான் பாதுக்காக்கற லட்சணம்னா எங்களுக்கு இது தேவையில்லைங்கறாங்க. (ஒரு சின்ன நிகழ்ச்சி சொல்றாங்க. உண்மையான்னு தெரியல. அக்ஸாய் சின்ன் பகுதிய சீனாவுக்கு விட்டுக் குடுக்கும்போது, பாரளுமன்றத்துல நேரு அதை "ஒரு புல் கூட முளைக்காத பனிப் பாலைவனம்"னு சொன்னாராம். பதிலுக்கு ஒரு எம்.பி "உங்க தலை கூடத்தான் முடி முளைக்காத பாலைவனம். அதையும் குடுத்துடலாமா"ன்னு கேட்டாராம். இது எப்பிடி இருக்கு?)

இவ்வளவு ப்ரச்னைகள் இருக்குது. சுமூகத் தீர்வு கிடக்குமா கிடக்காதா? அப்பிடி சுமூகத் தீர்வுன்னு ஒண்ணு இருக்கா? அதுக்கான அரசியல் சூழ்நிலை இருக்கா? மக்களோட கருத்தை அறிய ரெண்டு நாடுகளுக்கும் உண்மையிலேயே ஆர்வம் இருக்கா? சுதந்திரம் குடுக்தா அதை பராமரிக்கறதுக்கான அடிப்படை வசதிகளும் நல்ல தலைமையும் இருக்கா? அங்க இருக்கற சாமான்யனுக்கெ அடுத்த சூரிய உதயத்தை பாக்க முடியுமான்னு உத்தரவாதம் இல்லாத சூழ்நிலையில டூரிஸ்டுகள் பயமில்லாம போய் வர முடியுமா? டூரிஸ்டுகளையே நம்பி இருக்கற பொருளாதாரம் எப்பிடி வளரும்? இப்பிடி ஒரு இடியாப்பப் ப்ரச்னையை கையில வெச்சுக்கிட்டு ரெண்டு நாடுகளும் எவ்வளவு கால்த்துக்கு எத்தனை செலவு செய்ய வேண்டியிருக்கும்? அந்த அதிகப்படி செலவினம் அவங்க அவங்க நாட்டோட முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டையா இருக்கறதை உணருவாங்களா?

எவ்வளவு கேள்விக. இதுக்கெல்லாம் பதில் கிடைக்கிற வரைக்கும் நெஜமாவே அது பூலோக சொர்க்கம்தானாங்கறது பெரிய கேள்விக்குறியா இருக்கு. விமானப் படை அண்ணன், ராணுவ மச்சான்னு இருந்தாத்தான் காஷ்மிருக்கு போக முடியும் போல. இல்லேன்னா ஸ்ரீநகர், லே, லதாக் எல்லாம் ஃபோட்டோவுலதான் பாக்க முடியும்னு தோணுது.

ஓட்டுப் போடுங்கன்னு சொன்னாத்தான் போடுவீங்களா?

Sunday, November 2, 2008

பூலோக சொர்க்கம் காஷ்மீர் - 3



நிஷாத் பாக் (பின்னால தால் ஏரி)


அடுத்த நாள் ஸ்ரீந‌கர்க்கு பக்கத்துல ஒரு மலை மேல இருக்கற "பலுக் போஸ்ட்"ங்கற ஆர்மி போஸ்டுக்கு போக முடிவு பண்ணி (வழக்கம் போல போறதுக்கு முன்னால மதிய உணவுக்கு சொல்லி வெச்சுட்டோம்..‍ஹி ‍ஹி)காலைல கெளம்பினோம். போற வழியில, தால் ஏரிக்கு பக்கத்துல இருக்கற "நிஷாத் பாக்"ங்கற பூங்காவுக்கு போனோம். இது அரசே பராமரிக்கற பூங்கா. மாடி மாடியா 3 மாடி இருக்கு. கீழ் தளத்துல கலர் கலரா டேலியா பூக்கள். ரெண்டாவது தளத்துல ரோஜா, டேலியா, வாடாமல்லி, சாமந்தின்னு பல விதமா பல கலர்கள்ல கொத்து கொத்தா பூக்கள்.அந்தப் பூங்காவுலயே பூக்களோட விதைகளும் விக்கறாங்க. கொஞ்சம் வாங்கிட்டு வந்தோம். நம்ம ஊர் வெயிலுக்கும் காத்துக்கும் வருமான்னு தெரியல.

அப்பிடியே மேல ஏறிப் பின்னால போனா வரிசையா சினார் (chinar) மரங்கள். காஷ்மிர் பள்ளத்தாக்குல ஊசியிலை மரங்களுக்கு அடுத்ததா நிறைய இருக்கறது சினார், போப்லார் (poplar) மற்றும் வில்லோ (willow) மரங்கள்.
சினார் மரங்கள் காஷ்மீரோட கலாச்சாரச் சின்னம். இந்த மரத்தை வெட்டுறது கிடையாது. அரசு தோட்டக்கலைத்துறை ஒவ்வொரு மரத்தையும் நம்பர் போட்டு பராமரிக்கறாங்க. அவங்களோட கைவினைப் பொருட்கள், துணிகள்ல கைவேலைப்பாடு எல்லாத்துலயும் சினார் இலை ஒரு முக்கிய அம்சம். (கனடா நாட்டோட சின்னமே சினார் இலைதான். ஆங்கிலத்துல மேபில் [maple] மரம்) போப்லார் மரம் ரொம்பவே தக்கயான மரம். தீக்குச்சி மாதிரி லேசான பொருட்களுக்கு உபயோகிக்கறாங்க. வில்லோ... ‍ அதேதான்... கிரிக்கேட் பேட் செய்ய உபயோகம் ஆகுது. (வில்லோவுலயே 'அழும் வில்லோ'ன்னு [weeping willow] ஒரு வகை இருக்கு. இதோட கிளைகள் எல்லாம் பூமியப் பாத்து வளைஞ்சு இருக்கும். மழை பெஞ்சா ஒவ்வொரு கிளையிலிருந்தும் தண்ணி ஒழுகுறது மரம் அழற மாதிரி இருக்குமாம்) இன்னொரு சுவாரசியமான விஷயம், இந்த சினார் மரத்தோட இலை ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொரு கலர்ல இருக்கும். பச்சை, மஞ்சள், ப்ரௌன், பழுப்புன்னு.



பல பருவங்களில் சினார் இலைகள்




செல்ல மகள் சஹானா சினார் இலையுடன்

அப்பறம் அங்கிருந்து கெளம்பி பலுக் போனோம். அந்த ஆர்மி போஸ்ட் ஒரு மலையோட உச்சியில இருக்கு. சுமாரான ரோடு, சாய்மானம் அதிகம்கறதால 4வீல் ட்ரைவ் வசதி உள்ள ஜீப், ஜிப்ஸிகள்தான் மேல ஏற முடியும். அடிவாரத்துல (பாதாமி பாக் கண்டோன்மென்ட் BB Cantt) ஆபீஸ்ல இருந்து 2 ஜிப்ஸிக எங்களுக்காக இருந்துது. அப்பிடி வளைஞ்சு வளைஞ்சு குறுகலான பாதையில வேகமா ஓட்டிகிட்டு போனாங்க. அந்த குறுகலான பாதையில லாரிகளும், ட்ரக்குகளும் எப்பிடித்தான் ஓட்ராங்களோ... கரணம் தப்புனா மரணம்...

மேல இருந்து பாத்தா ஸ்ரீநகர் பூராம் தெரியுது. கீழ ஜீலம் நதி நகர்க்குள்ள பாம்பு மாதிரி படுத்திருக்கு. லேசான தூரல் வேற. ரொம்பவே ரம்மியமா இருந்துது. மேகமூட்டமா இருந்ததால ஃபோட்டோக்கள் அதிகமா எடுக்க முடியல.
வழக்கம்போல வயிறு முட்டச் சாப்டுட்டு கீழ எறங்கினோம். அதுலயும் நாங்க வந்த ஜிப்ஸி நடுவுல ஒரு இடத்துல மேல ஏற முடியாம பின்பக்கமா கீழ போகுது. ஆஹா... இது வேறயான்னு கொஞ்சம் பதட்டமாயிடுச்சு. ஆர்மி ட்ரைவர் எப்பிடியோ சமாளிச்சு ஓட்டிட்டாரு. கீழ வந்து மறுபடி நம்ம கார்ல ஏறி மார்க்கெட் பக்கம் போய் நினைவுப் பொருட்கள், துணிகள் எல்லாம் வாங்கிகிட்டு வீடு போய் சேந்தோம். அன்னிக்கு மதியம்தான் நகருக்கு நடுவுல இருக்கற லால் சௌக்ல குண்டு வெடிப்பு வேற. கொஞ்சம் பரபரப்பாத்தான் இருந்துது. அதனால மறுநா வேற எங்கயும் வெளியில போகல. அண்ணனோட விமானப்படை அலுவலகங்கள் எல்லாம் சுத்திப் பாத்துட்டு ஓய்வு. அடுத்த நாள் மதியத்துக்கு மேல டெல்லிக்கு விமான ஏறினோம்.

ஓரளவுக்கு அமைதியான ஸ்ரீநர்ல இருந்து கண்ணுமண்ணு தெரியாம ஒடுற டெல்லிக்கு வந்தா, போலீஸ் என்கௌன்டர்ல 3 தீவிரவாதிகள போட்டு தள்ளியிருக்காங்க. 4 நாள் முந்திதான் தொடர் குண்டு வெடிப்பு வேற. போற எடமெல்லாம் பூனப்பீநாத்தம்பாங்க. அது மாதிரி ஆகிப் போச்சு.

இத்தோட நிறுத்திக்கலாம்னு பாத்தேன். ஆனா பூலோக சொர்க்கம்கிறதை தவிர காஷ்மீரோட அடுத்த பக்கத்தையும் எழுதணும். கொஞ்சம் சீரீசா. வெய்ட் பண்ணுங்க...

மறக்காம ஓட்டுப் போட்டுருங்க....

சிங்கை அறிஞர் அரங்கம்

சிங்கப்பூர் ஹார்பர் ஃப்ரன்ட் ரயில் நிலையத்துல இன்னிக்கு சாயங்காலம் ஒரே பரபரப்பு. வெளிய வந்து செந்தோசா தீவுக்கு போற சிறு ரயில் நிலையத்துக்கு வந்தா அங்க‌யும் ஒரே அமர்க்களம். டிக்கட் ஆபீசர் டிக்கட் குடுத்து குடுத்து களைச்சுப் போய் உக்காந்துருக்காரு. என்னடா இதுன்னு யோசிச்சுக்கிட்டே போனப்பறம்தான் தெரிஞ்சுது நம்ம சிங்கைப் பதிவர்கள் பெருந்திரளாக(!!)செந்தோசா தீவுல ஆசிய‌க் க‌ண்ட‌த்தோட தென்கோடி முனைல‌ கூடியிருந்தாங்க. மொத்தம் 21 பேர்.

மாலை 4:30 மணியிலிருந்து ஒவ்வொருத்தரா வர ஆரம்பிச்சாங்க. விஜய் ஆனந்தும், கோவி.கண்ணனும், வரவங்களுக்கும் செல்போன்ல வழி சொல்லிக்கிட்டே இருந்தாங்க.

"வ‌ந்துட்டீங்களா... பஸ் புடிச்சு டால்ஃபின் லகூன்ல எறங்கி அப்பிடியே பீச் ஓரமா வந்து, தொங்கு பாலத்துல ஏறி இந்தப் பக்கம் வந்துருங்க... நாங்க வெய்ட் பண்றோம்..."

இந்த‌ சந்திப்புல முக்கிய பதிவர்கள் மலேசியாவிலிருந்து வந்திருந்த விக்கி (எ) விக்னேஸ்வரன் மற்றும் திண்டுக்கல் திரு.சுப்பிரமணியம். (இவர் அண்மையில் மறைந்த பதிவர் திருமதி.அனுராதா அவர்களின் கணவர்.)


கோவி.கண்ணன், திரு.சுப்பிரமணியம், மலேசியா "விக்கி"

5 மணி சுமாருக்கு வந்தவங்க ஒருத்தரை ஒருத்தர் அறிமுகம் செய்துகிட்டு கோக் (அட... சொன்னா நம்பணும்.. வெறும் கோக்தான்..) குடிச்சுட்டு இருக்கும்போது இன்னும் சிலரும் வந்து ஜோதில ஐக்கியமானாங்க. விக்கி தன்னைப் பற்றியும், பொதுவாக மலேசிய பதிவுலகத்தைப் பத்தியும் சொன்னாரு. பெறகு, இது மாதிரி சந்திப்புக்கு மொதத் தடவயா போற என்ன மாதிரி "டெபுடன்ட்ஸ்" சுய அறிமுகம் நடந்தது. அப்பறம் திரு சுப்பிரமணியம் பேச வந்தாரு. தன் மனைவியைப் பத்தியும், அவங்களோட கடைசி நாட்களைப் பத்தியும் ரொம்ப உருக்கமா சொன்னாரு. அவங்க மறைவுக்கு பிறகு அவங்களைப் பத்தின எண்ணங்களும், உணர்வுகளும் அந்த அளவுக்கு அவரை ஆக்கிரமித்து இருக்குனு தெரிய வந்தபோது மனசு ரொம்ப கெனத்துப் போச்சு. புற்றுநோய் பத்தின விழிப்புணர்வை எப்பிடி பரப்பறது, எங்க ஆரம்பிக்கறதுன்னு யோசனையா இருக்காரு. தவிர ஒரு புத்தகமும் வெளியிட முயற்சி செய்துகிட்டுருக்காரு. சீக்கிரமே அது நல்ல முறையில் வெளி வந்தா சமுதாயத்துக்கே நன்மை.

அப்பறம் ஃபோட்டோ செஷன், உரையாடல்கள், கலாய்த்தல்கள்னு ஜாலியாப் போச்சு. 7:30 மணி சுமாருக்கு சபையக் கலைச்சுட்டு, ஒரு குருப் லிட்டில் இந்தியா கொடைக்கடையில் இட்லி சாப்பிட போக, மத்தவங்க (நான் உள்பட) வூட்டுக்கு ஜூட்.

ஃபோட்டோ செஷன் (தொப்பியுடன் நான்)

இன்றைய அறிஞர் அரங்க‌த்துக்கு வந்திருந்தவர்கள்:
திரு. சுப்பிரமணியம், விக்னேஸ்வரன், கோவி.கண்ணன், ஜோசப் பால்ராஜ், விஜய் ஆனந்த், "முகவை மைந்தன்" ராம், பாரி அரசு, ஜோதிபாரதி, கிரி, ஜோ மில்டன், கிஷோர், மீனாட்சி சுந்தரம், சிவா, ராம், சிங்கை நாதன், ராஜா, அகரம் அமுதா, பெங்களூர் ராம், சாம்பார்மாஃபியா மற்றும் நான்.


அறிஞர் அரங்கம்

வால் 1: வ‌ந்திருந்த எல்லாப் பதிவர்களுக்கும் விக்கியின் "திருக்குறள் ‍ ஒரு எளிய அறிமுகம்" புத்தகம் அன்புப்பரிசு.

வால் 2 : பாரி அரசுவின் திருமணம். நவம்பர் 24 பட்டுக்கோட்டையில்.

வால் 3 : திரு.சுப்பிரமணியன் அவருடைய மகன் வீட்டுல இருந்து மசால் வடை, சீயம்னு சுவையான பலகாரங்கள்.