Saturday, November 8, 2008

விளம்பர நாட்கள்

மெக்கானிகல் இஞ்சினீரிங் முடிச்சுட்டு "காக்காசுன்னாலும் கெவுர்மெண்ட்டு காசு"ன்னு வேலை தேடும்போது கெவுர்மெண்டு கம்பெனிகள்லாம் எங்கூட டூ விட்டுட்டாங்க. அப்பறம் டெல்லி போய் நமக்குத் கொஞ்சமே கொஞ்சம் தெரிஞ்ச "கட்டிங் எட்ஜ் டெக்னாலஜி"யான வேர்ட்ஸ்டார், டி-பேஸ் இதுகளை வெச்சு ஒரு உப்புமா கம்பெனில டைரெக்டரா .. சாரி.. டைரெக்டா ஜாயின் பண்ணினேன். ஒரு மாசத்துக்குள்ளயே ஒரு சின்ன விளம்பர ஏஜன்ஸியில தெரிஞ்சவர் மூலம வேலை கெடச்சுது. உப்புமா கம்பெனில மொத மாசம் சம்பளம் வாங்கின மறுநாள் சொல்லாமக் கொள்ளாம ஏஜன்ஸில ஜாயின் பன்ணிட்டேன்.

அப்பத்தான் அந்த ஏஜன்ஸிக்கு ரெண்டு வயசு. கம்ப்யூட்டர்லாம் வாங்கி நெட் ஒர்க் பண்ண ஆரம்பிச்சிருந்தாங்க. நாமதான் "கட்டிங் எட்ஜ் டெக்னாலஜி" எக்ஸ்பர்ட் ஆச்சே.. "அந்த நெட் ஒர்கிங் எல்லாம் கொஞ்சம் பாத்து செய்ங்க"ன்னு அங்க ஸிஸ்டம்ஸ் மேனேஜர் கிட்ட சேத்து விட்டாங்க. ராவோட ராவா நாவெல் நெட் ஒர்க் எல்லாம் படிச்சு எப்பிடியோ செட் பண்ணிணோம். சின்ன ஏஜன்ஸிங்கறதால எல்லா டிபார்ட்மென்ட்லயும் மூக்க நொழைக்கலாம். ஒரு 4 மாசம் போன பின்னாடி, "இது வரைக்கும் என்ன கிழிச்சங்கறத எழுதிக் குடு பாக்கலாம்"ன்னாங்க. சரின்னு நானும் ஒரு பக்கம் எழுதிக் குடுத்தேன். அதப் படிச்சுட்டு "அட இங்கிலீஷ்ல சுமாராவே எழுதரயே.... காபியெல்லாம் எழுத முடியுமா?"ன்னு கேட்டாங்க. எதோ ஒரு ஆர்வத்துல "ஓ... எழுதினாப் போச்சு"ன்னு சொல்லிட்டேன். ஆனா முழு நேரமா இல்ல. அப்பப்ப. அப்ப ஒரு பெரிய ஜப்பானிய ஆடியோ ப்ராண்டுக்கு ஒரு புது கேம்பெய்ன் ஆரம்பிக்க இருந்துது. அதுக்கு "ஒன் வேல்ட்... ஒன் சௌண்ட்.."ன்னு ஒரு பேஸ் லைன் எழுதினோம். அதுக்கு ரொம்ப பெரிய வரவேற்பு. கூடவே டி.டி.பி, அனிமேஷன் எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் செஞ்சு பாக்க ஆரம்பிச்சேன். ராகேஷ் பச்சன்னு ஒரு அனிமேட்டர் இருந்தாரு. ராத்திரியெல்லாம் ரொம்ப நேரம் உக்காந்து சொல்லித் தருவாரு. 3டி ஸ்டுடியோ, அனிமேட்டர் ப்ரோ ரெண்டும் உபயோகிச்சு சின்ன சின்ன அனிமேஷன்ஸ் பண்ணினோம். ஒரு பெரிய ஃப்ரிட்ஜ் விளம்பரத்துக்காக பெங்குயினை வெச்சு சில அனிமேஷன்ஸ் ரொம்ப திருப்தியா செஞ்சோம். ஆனா எல்லாமெ வெளி வரல.





விளம்பர உலகத்துல அப்பிடித்தான். 10 செகண்ட் விளம்பரத்துக்கு 1 மாசம் ஷூட் பண்ணி, எடிட் பண்ணி 10 படம் எடுத்தா, 1 செலக்ட் ஆகலாம். லக் இருந்தா. அதே மாதிரி எட்டு லைன் பேராவுக்காக பத்து பக்கமாவது வேற வேற மாதிரி எழுதிப் பாத்தாத்தான் ஒண்ணாவது கரெக்டா வரும். மெயினா கம்ப்யூட்டர், நெட் ஒர்க், அக்கவுண்டிங் சாஃப்ட்வேர்னு இருந்தாலும், சைடுல அப்பிடியே ஒரு ஹோட்டல், ஒரு பெரிய டெக்ஸ்டைல் ப்ராண்ட், ஒரு கம்பூட்டர் கம்பெனின்னு பல ப்ராண்டுகளுக்கு பேஸ் லைன், காப்பின்னு நிறைய எழுதினேன். கம்ப்யூட்டர் வேலையை விட இது ரொம்ப வித்தியாசமா, சுதந்திரமா இருந்ததாலா ராத்திரி ரொம்ப நேரம் ஆனாலும் மத்த க்ரியேடிவ் டைரெக்டர்க, காப்பி ரைடர்க கூட விவாதங்கள் பண்ணின்னு சுவாரஸ்யமா இருக்கும். ரொம்ப மகிழ்ச்சியோட கழிச்ச நாட்கள் அவை. அங்க நம்ம கற்பனைக்கு எந்த எல்லையும் கிடையாது. எந்த ஒரு விஷயத்தையும் எந்த ஒரு கோணத்துலயும் அணுகலாம். பரிபூரண சுதந்திரம். மத்த ஏஜன்ஸிகளோட / க்ளையன்டுகளோட விளம்பரங்கள் அடங்கிய கார்ட் புக், ஷோ ரீல்கன்னு எது வேணும்னாலும் கிடைக்கும். அது ஒரு நிலாக் காலம்.




அப்பிடியே ஒரு 4 வருஷம், சோனி, ஜே.சி.டி., க்ளாரிட்ஜஸ் ரிசார்ட்ஸ், அமுல் சாக்லேட், லிம்கா, ஃபினோலெக்ஸ், பி.எஸ்.ஐ, ஷா வாலஸ், கெல்வினேட்டர், எலெக்ரோலக்ஸ், காம்பேக் கம்ப்யூட்டர்ஸ், வேல்டு ஃபோன்.... இப்பிடி பல ப்ராண்டுகளோட சம்பந்தப் பட்டு இருந்தேன். காப்பி எழுதறது, விஷுவலைஸ் பண்றது, அனிமேஷன் பண்றதுன்னு பல விதங்கள்ல. கூடவே சாப்ட்வேரும், நெட் ஒர்கிங்கும். மும்பைல, புனேல புது கிளைகள் ஆரம்பிச்சபோது அங்கெல்லாம் கொஞ்ச நாட்கள் இருந்து வேலை செஞ்சது வேற மாதிரியான் அனுபவங்கள்.

பிறகு க்ளையண்டோட தேவைகள் அறிஞ்சு க்ரியேடிவ் ரூட் முடிவு பண்றதும், மீடியா ப்ளானிங்லயும் நொழஞ்சு அந்த பேப்பர்ல/மேகஸின்ல எந்த அளவு விளம்பரம் போடறது, எந்த சேனல்ல எத்தனை செகண்ட் நேரம் வாங்கணும், சிட்டிக்குள்ள எந்த இடங்கள்ல ஹோர்டிங் வெக்கறதுன்னு அந்த வேலைகளையும் கத்துக்கிட்டேன். ஒவ்வொரு நாளும் சேலஞ்சிங்கா இருக்கும். அது மாதிரி சுவாரசியமான நாட்கள் திரும்ப வருமாங்கறது சந்தேகந்தான்.

இப்ப இருக்கறது முழுசா ஐ.டி. யில. பல வங்கிகள், பல நாடுகள்னு சுத்தினாலும், இதுல வேறு விதமான அனுபவங்கள் இருந்தாலும், விளம்பர உலகத்துல இருந்த மாதிரியான கற்பனை சுதந்திரம் கிடையாது. கம்ப்யூட்டரோ, சாஃப்ட்வேரோ அதோட எல்லைக்கு உட்பட்டு என்ன செய்ய முடியுமோ அதுதான் முடியும். சில சமயம் தோணுது திரும்ப விளம்பரனாகப் போயிடலாமான்னு. ஆனா அந்தத் துறையோட முகம் இந்த இடைப்பட்ட காலத்துல ரொம்பவே மாறிப் போச்சு. அதுல நம்மளை நிறுத்திக்க முடியாதோன்னு தோணுது.

வால் : ஒரு ஷூ ப்ராண்ட் லாஞ்ச் பண்ணுபோது, 3 டீசர் விளம்பரங்கள் போட்டோம்.

Day 1 : "69% of the Italian girls want you to slip into them"

Day 2 : "69% of the French girls want you to tie them up"

Day 3 : "69% of the Spanish girls want your toes inside"

அவ்ளோதான்... டெல்லி மாதர் சங்கங்கள், விமென்ஸ் லிப் எல்லாம் ஏஜன்ஸி முன்னாலா தர்ணா பண்ணி, Times of India-ல மொதப் பக்கம் செய்தி வந்து அப்பறம் மன்னிப்பு கோரல், விளம்பரம் வாபஸ்னு ஆகிப் போச்சு. பின்ன... இது கொஞ்சம் ஓவராத்தான் எழுதிட்டோம் :)))

Monday, November 3, 2008

பூலோக சொர்க்கம்(??) காஷ்மீர் ‍ 4

போன மூணு பதிவுலயும் காஷ்மீர்ல இருக்கற சில எடங்களோட அழகை ரசிச்சிருப்பீங்க....வாஸ்தவந்தான்... காஷ்மீர் ரொம்பவே அழகான எடந்தான்... சந்தேகமேயில்லை. அது புவியியல் ரீதியா இந்தியாவுல இருந்தும் அது ஏன் நம்ம எல்லாருக்கும் ரொம்பவே அன்னியப்பட்டு இருக்கு? அது ஏன் நம்ம நாட்டோட மத்த பகுதிகளுக்கு போய் சுதந்திரமா வர மாதிரி முடியாம ஒரு கட்டுப்பாடு இருக்கற மாதிரி ஒரு நெலமை? இத மாத்தறதுக்கு ஏன் நம்ம மத்திய அரசுனால ஏன் முடியல? மொதல்ல அப்பிடி மாத்த முடியுமா.. அவ்வளவு அதிகாரம் நம்ம அரசுக்கு இருக்கான்னு பாத்தா... முடியும், இருக்குன்னு உறுதியா சொல்ல முடியல. இத புரிஞ்சுக்க முயற்சி பண்றதுக்கு, கொஞ்சம் அப்பிடியே பின்னால போய் வரலாறு என்ன சொல்லுதுன்னு பாப்போமா?

சீன் 1 : 1947 அக்டோபர்ல மஹாராஜா ஹரி சிங் ஆட்சியில சுத்துப்பட்டு நாடுகளால ஒரு ஆபத்து வந்தபோது, ஒரு நெருக்கடி காரணமா இந்தியா கிட்ட உதவிக்கு வராரு. நேரு அத எழுத்து மூலமா கேக்கறாரு. ராஜாவும் மௌண்ட்பேட்டனுக்கு தன் நாட்டோட பாதுகாப்புக்காகவும், வந்திருக்கற ஆபத்தை எதிர்த்து போராடவும், தன் நாட்டோட பாதுகாப்பு, தகவல், வெளியுறவு‍ இந்த மூணு துறையையும் இந்தியா நிர்வகிக்க வேண்டியதுன்னு எழுதித் தராரு. கூடவே ஷேக் அப்துல்லாவை பிரதமராகக் கொண்ட இடைக்கால அரசு அமைக்கவும் கேட்டுக்கறாரு.

சீன் 2 : இந்திய அரசும் 1948ல ஐக்கிய நாடுகள் சபைக்கு அதிகாரப் பூர்வமா ஒரு கடிதத்தை அனுப்பி, பாகிஸ்தானோட ஆக்கிரமிப்புக்கு தன்னுடைய எதிர்ப்பையும், பாகிஸ்தான் தன் படைகளை காஷ்மீரிலிருந்து விலக்கிக்கணும்னு பதிவு செய்யுது.

சீன் 3 : இதப் பத்தி ஐக்கிய நாடுகள் சபையில விவாதம் நடக்கும்போது ஷேக் அப்துல்லா பேசும்போது "காஷ்மீரோட இறையாண்மையப் பத்தி ஏன் பாகிஸ்தான் கேள்வி எழுப்புதுன்னு புரியலயே. என் நாட்டுக்கு ஒரு அபாயம். அதை சமாளிக்கறதுக்கு இந்தியா கூட ஒரு உடன் படிக்கை செய்துக்கறோம். இதுல என்ன குழப்பம்னு தெரியல. காஷ்மீருக்கு சுதந்திரம் வேணுமா, ஏன் இந்தியாவுடன் ஒப்பந்தம் போடப் போச்சுன்னெல்லாம் கேட்க எந்த உரிமையும் யாருக்கும் இல்லை. ஐநா சபை நேரில் வந்து நிலைமையை ஆராயட்டும்" அப்பிடின்னு பேசறாரு.

சீன் 4 : 1948 ஆகஸ்டுல ஐநா சபை "இந்தியா, பாகிஸ்தான் இரு நாடுகளும் மொதல்ல சண்டை சச்சரவ நிறுத்திட்டு, படைகளை வாபஸ் வாங்கிட்டு, போர் நிறுத்தம் செய்யணும்; இரு நாடுகளும் சுமுகத் தீர்வுக்கு ஒரு மனதாக முயற்சி செய்யணும்; காஷ்மீர் மக்களோட உணர்வுகளுக்கும் மதிப்பு அளிச்சு, அவங்க சம்மதத்தோட ஒரு பொதுவான் முடிவுக்கு வரணும்" அப்பிடின்னு ஒரு தீர்மானம் நிறவேத்துது. இந்தியாவும் இதை ஒத்துக்கிட்டு தன்னுடைய சம்மதத்தை அளிக்குது. சில நிபந்தனைகளோட. (காஷ்மீரோட இறையாண்மைல‌ பாகிஸ்தானுக்கு எந்தப் பங்கும் கிடையாது; "சுதந்திர காஷ்மீர்" அப்பிடின்னு ஒரு அங்கீகாரம் இல்லை; காஷ்மீரோட உள்விவகாரங்கள்ல பாகிஸ்தானுக்கு எந்த வேலையும் இல்லை; மக்கள் கருத்து (plebiscite) அறியும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்; அப்பிடி மக்கள் சுதந்திரமா கருத்து சொல்ல முடியாத ஒரு சூழ்நிலை இருந்தா அதை சரி செய்ய இந்தியா தேவையான நடவடிக்கைகள் எடுக்கும்.) கூடவே, காஷ்மீருக்கு சில விசேஷ அந்தஸ்தைக் கொடுக்கும் புகழ் பெற்ற "ஆர்டிகில் 370" யும் நம்ம கான்ஸ்டிட்யூஷன்ல சேருது.

இதெல்லாம் பாகிஸ்தானுக்கு ஒத்துக்கவே முடியாமப் போகுது. கர் புர்னு ரெண்டு பக்கமும் கருவிக்கிட்டே இருக்காங்க. அதுக்கு பிறகு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கு இடையில 1965ல போர், 1966ல தாஷ்கண்ட் ஒப்பந்தம் (போனஸா லால் பகதூர் சாஸ்திரி மர்மமான முறையில தாஷ்கண்ட்லயே மரணம்), 1971ல போர், 1972ல சிம்லா ஒப்பந்தம்...... 1974, லஹோர், ஆக்ரா, இஸ்லாமாபாத்.... இப்பிடி பல ஒப்பந்தங்கள்னு தொடர்ந்து போர், சமாதானம், பேச்சு வார்த்தைன்னு வளந்துக்கிட்டே போக, ரெண்டு நாடுகளுக்கும் இது ஒரு ப்ரெஸ்டீஜ் இஷ்யூ ஆகுது. இதுக்கு நடுவுல பாகிஸ்தான் பின்வாசல் வழியா ஆளுகளை அனுப்பி, காஷ்மீர்ல உள்ள சில அடிப்படைவாதிகளை மூளைச்சலவை செய்து, தகிடுதத்தம் பண்ணி அங்க எப்பவும் ஒரு பதட்டமும் அமைதியின்மையும் இருக்கற மாதிரி பாத்துக்குது. நடுவுல நம்ம அரசியல் கட்சிகளும் பிரச்னைகளை கெளப்பி விட்டு நெருப்பு அணையாம பாத்துக்கறாங்க.

பிரச்னை தீர்ந்தா ரெண்டு நாடுகளுக்கும் அரசியல் பண்ண விஷயம் இல்ல. பாகிஸ்தான்ல பருத்தி வெடிக்குதோ இல்லயோ காஷ்மிர்ல தெனம் ரெண்டு குண்டாவது வெடிச்சாத்தான் சாப்பாடு எறங்கும். அந்த அளவுக்கு காஷ்மிர் அவுங்க தினப்படி அரசியல் வாழ்க்கையோட கலந்திருக்கு. ஜின்னாவுல இருந்து ஜர்தாரி வரைக்கும். நடுவுல எத்தனை தலைவர்கள காவு வாங்கியிருக்கு.இந்த சிக்கல்களால 3 பிரிவுக உருவாகுது. இந்தியாவோட இருக்கலாம், பாகிஸ்தானோட போகலாம், ரெண்டு பேரும் வேண்டாம்; சுதந்திரமா நம்மள நாமெ பாத்துக்கலாம்னு.

இந்த சூழ்நிலைல, நாள் மாசம்னு 50 வருஷம் கடந்து போக, பாதிக்கப்பட்டது 2 தலைமுறை. இந்த சச்சரவைப் பாத்து பாத்து எரிச்சலாகி மனசுக்குள்ள வன்மம்தான் வளருது. இதாண்டா சான்ஸ்னு சில இயக்கங்கள் நைஸா இஸ்லாமிய அடிப்படைவாதத்தையும், இந்து அடிப்படைவாதத்தையும் உரம் போட்டு வளர்க்க ஆரம்பிக்க, இப்ப பிரச்சனைக்கு இன்னொரு பரிமாணம். ஊர் ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்ட‌ம். இதுமாதிரி இயக்கங்களுக்கெல்லாம் நல்ல முறையில ஊக்கமும், உதவிகளும் அந்தப் பக்கத்திலிருந்து அட்டகாசமா வருது. வேறென்ன வேணும்? இவங்களுக்கு ஒரே வேலை... பள்ளத்தாக்குல எங்க எந்த சின்னப் பிரச்சனை வந்தாலும் அதை ஒட்டுமொத்தமா காஷ்மீர் பிரச்னையா ஆக்கறது. அதனால பிரச்னைக்கு ஒட்டுமொத்த காரணம் பாகிஸ்தான்னு சொல்லிட முடியாது. இந்தியா, பாகிஸ்தான், காஷ்மீர மக்கள்னு மூணு புள்ளிகள் இணைக்கிற முக்கோணம் அது. ஜியோமிதி விதிகளின்படி "மோஸ்ட் ஸ்டேபில் ஸ்ட்ரக்சர்" முக்கோணம்தான். அதுனாலதானோ என்னவோ, இந்தப் பிரச்னையும் ரொம்பவே ஸ்ட்ராங்கா இருக்கு.

தவிர காஷ்மிரோட வடக்கு பகுதிகளை (Northern Areas) பாகிஸ்தானுக்கும், கிழக்குல அக்ஸாய் சின் பகுதியை சைனாவுக்கும் தாரை வார்த்துக் கொடுத்தது, முசாஃபராபாதை தலைநகரா வெச்சு ஒரு அங்கீகரிக்கப்படாத "ஆசாத் காஷ்மீர்" இருக்கறது எல்லாம் பிரச்னையை மேலும் சிக்கலாக்குது. ஒப்படைக்கப்பட்ட காஷ்மீரோட பகுதிகளை இந்தியா பாதுகாக்கத் தவறிடுச்சுன்னு ஒரு சாராருக்கு கோவம். இதுதான் பாதுக்காக்கற லட்சணம்னா எங்களுக்கு இது தேவையில்லைங்கறாங்க. (ஒரு சின்ன நிகழ்ச்சி சொல்றாங்க. உண்மையான்னு தெரியல. அக்ஸாய் சின்ன் பகுதிய சீனாவுக்கு விட்டுக் குடுக்கும்போது, பாரளுமன்றத்துல நேரு அதை "ஒரு புல் கூட முளைக்காத பனிப் பாலைவனம்"னு சொன்னாராம். பதிலுக்கு ஒரு எம்.பி "உங்க தலை கூடத்தான் முடி முளைக்காத பாலைவனம். அதையும் குடுத்துடலாமா"ன்னு கேட்டாராம். இது எப்பிடி இருக்கு?)

இவ்வளவு ப்ரச்னைகள் இருக்குது. சுமூகத் தீர்வு கிடக்குமா கிடக்காதா? அப்பிடி சுமூகத் தீர்வுன்னு ஒண்ணு இருக்கா? அதுக்கான அரசியல் சூழ்நிலை இருக்கா? மக்களோட கருத்தை அறிய ரெண்டு நாடுகளுக்கும் உண்மையிலேயே ஆர்வம் இருக்கா? சுதந்திரம் குடுக்தா அதை பராமரிக்கறதுக்கான அடிப்படை வசதிகளும் நல்ல தலைமையும் இருக்கா? அங்க இருக்கற சாமான்யனுக்கெ அடுத்த சூரிய உதயத்தை பாக்க முடியுமான்னு உத்தரவாதம் இல்லாத சூழ்நிலையில டூரிஸ்டுகள் பயமில்லாம போய் வர முடியுமா? டூரிஸ்டுகளையே நம்பி இருக்கற பொருளாதாரம் எப்பிடி வளரும்? இப்பிடி ஒரு இடியாப்பப் ப்ரச்னையை கையில வெச்சுக்கிட்டு ரெண்டு நாடுகளும் எவ்வளவு கால்த்துக்கு எத்தனை செலவு செய்ய வேண்டியிருக்கும்? அந்த அதிகப்படி செலவினம் அவங்க அவங்க நாட்டோட முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டையா இருக்கறதை உணருவாங்களா?

எவ்வளவு கேள்விக. இதுக்கெல்லாம் பதில் கிடைக்கிற வரைக்கும் நெஜமாவே அது பூலோக சொர்க்கம்தானாங்கறது பெரிய கேள்விக்குறியா இருக்கு. விமானப் படை அண்ணன், ராணுவ மச்சான்னு இருந்தாத்தான் காஷ்மிருக்கு போக முடியும் போல. இல்லேன்னா ஸ்ரீநகர், லே, லதாக் எல்லாம் ஃபோட்டோவுலதான் பாக்க முடியும்னு தோணுது.

ஓட்டுப் போடுங்கன்னு சொன்னாத்தான் போடுவீங்களா?

Sunday, November 2, 2008

பூலோக சொர்க்கம் காஷ்மீர் - 3



நிஷாத் பாக் (பின்னால தால் ஏரி)


அடுத்த நாள் ஸ்ரீந‌கர்க்கு பக்கத்துல ஒரு மலை மேல இருக்கற "பலுக் போஸ்ட்"ங்கற ஆர்மி போஸ்டுக்கு போக முடிவு பண்ணி (வழக்கம் போல போறதுக்கு முன்னால மதிய உணவுக்கு சொல்லி வெச்சுட்டோம்..‍ஹி ‍ஹி)காலைல கெளம்பினோம். போற வழியில, தால் ஏரிக்கு பக்கத்துல இருக்கற "நிஷாத் பாக்"ங்கற பூங்காவுக்கு போனோம். இது அரசே பராமரிக்கற பூங்கா. மாடி மாடியா 3 மாடி இருக்கு. கீழ் தளத்துல கலர் கலரா டேலியா பூக்கள். ரெண்டாவது தளத்துல ரோஜா, டேலியா, வாடாமல்லி, சாமந்தின்னு பல விதமா பல கலர்கள்ல கொத்து கொத்தா பூக்கள்.அந்தப் பூங்காவுலயே பூக்களோட விதைகளும் விக்கறாங்க. கொஞ்சம் வாங்கிட்டு வந்தோம். நம்ம ஊர் வெயிலுக்கும் காத்துக்கும் வருமான்னு தெரியல.

அப்பிடியே மேல ஏறிப் பின்னால போனா வரிசையா சினார் (chinar) மரங்கள். காஷ்மிர் பள்ளத்தாக்குல ஊசியிலை மரங்களுக்கு அடுத்ததா நிறைய இருக்கறது சினார், போப்லார் (poplar) மற்றும் வில்லோ (willow) மரங்கள்.
சினார் மரங்கள் காஷ்மீரோட கலாச்சாரச் சின்னம். இந்த மரத்தை வெட்டுறது கிடையாது. அரசு தோட்டக்கலைத்துறை ஒவ்வொரு மரத்தையும் நம்பர் போட்டு பராமரிக்கறாங்க. அவங்களோட கைவினைப் பொருட்கள், துணிகள்ல கைவேலைப்பாடு எல்லாத்துலயும் சினார் இலை ஒரு முக்கிய அம்சம். (கனடா நாட்டோட சின்னமே சினார் இலைதான். ஆங்கிலத்துல மேபில் [maple] மரம்) போப்லார் மரம் ரொம்பவே தக்கயான மரம். தீக்குச்சி மாதிரி லேசான பொருட்களுக்கு உபயோகிக்கறாங்க. வில்லோ... ‍ அதேதான்... கிரிக்கேட் பேட் செய்ய உபயோகம் ஆகுது. (வில்லோவுலயே 'அழும் வில்லோ'ன்னு [weeping willow] ஒரு வகை இருக்கு. இதோட கிளைகள் எல்லாம் பூமியப் பாத்து வளைஞ்சு இருக்கும். மழை பெஞ்சா ஒவ்வொரு கிளையிலிருந்தும் தண்ணி ஒழுகுறது மரம் அழற மாதிரி இருக்குமாம்) இன்னொரு சுவாரசியமான விஷயம், இந்த சினார் மரத்தோட இலை ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொரு கலர்ல இருக்கும். பச்சை, மஞ்சள், ப்ரௌன், பழுப்புன்னு.



பல பருவங்களில் சினார் இலைகள்




செல்ல மகள் சஹானா சினார் இலையுடன்

அப்பறம் அங்கிருந்து கெளம்பி பலுக் போனோம். அந்த ஆர்மி போஸ்ட் ஒரு மலையோட உச்சியில இருக்கு. சுமாரான ரோடு, சாய்மானம் அதிகம்கறதால 4வீல் ட்ரைவ் வசதி உள்ள ஜீப், ஜிப்ஸிகள்தான் மேல ஏற முடியும். அடிவாரத்துல (பாதாமி பாக் கண்டோன்மென்ட் BB Cantt) ஆபீஸ்ல இருந்து 2 ஜிப்ஸிக எங்களுக்காக இருந்துது. அப்பிடி வளைஞ்சு வளைஞ்சு குறுகலான பாதையில வேகமா ஓட்டிகிட்டு போனாங்க. அந்த குறுகலான பாதையில லாரிகளும், ட்ரக்குகளும் எப்பிடித்தான் ஓட்ராங்களோ... கரணம் தப்புனா மரணம்...

மேல இருந்து பாத்தா ஸ்ரீநகர் பூராம் தெரியுது. கீழ ஜீலம் நதி நகர்க்குள்ள பாம்பு மாதிரி படுத்திருக்கு. லேசான தூரல் வேற. ரொம்பவே ரம்மியமா இருந்துது. மேகமூட்டமா இருந்ததால ஃபோட்டோக்கள் அதிகமா எடுக்க முடியல.
வழக்கம்போல வயிறு முட்டச் சாப்டுட்டு கீழ எறங்கினோம். அதுலயும் நாங்க வந்த ஜிப்ஸி நடுவுல ஒரு இடத்துல மேல ஏற முடியாம பின்பக்கமா கீழ போகுது. ஆஹா... இது வேறயான்னு கொஞ்சம் பதட்டமாயிடுச்சு. ஆர்மி ட்ரைவர் எப்பிடியோ சமாளிச்சு ஓட்டிட்டாரு. கீழ வந்து மறுபடி நம்ம கார்ல ஏறி மார்க்கெட் பக்கம் போய் நினைவுப் பொருட்கள், துணிகள் எல்லாம் வாங்கிகிட்டு வீடு போய் சேந்தோம். அன்னிக்கு மதியம்தான் நகருக்கு நடுவுல இருக்கற லால் சௌக்ல குண்டு வெடிப்பு வேற. கொஞ்சம் பரபரப்பாத்தான் இருந்துது. அதனால மறுநா வேற எங்கயும் வெளியில போகல. அண்ணனோட விமானப்படை அலுவலகங்கள் எல்லாம் சுத்திப் பாத்துட்டு ஓய்வு. அடுத்த நாள் மதியத்துக்கு மேல டெல்லிக்கு விமான ஏறினோம்.

ஓரளவுக்கு அமைதியான ஸ்ரீநர்ல இருந்து கண்ணுமண்ணு தெரியாம ஒடுற டெல்லிக்கு வந்தா, போலீஸ் என்கௌன்டர்ல 3 தீவிரவாதிகள போட்டு தள்ளியிருக்காங்க. 4 நாள் முந்திதான் தொடர் குண்டு வெடிப்பு வேற. போற எடமெல்லாம் பூனப்பீநாத்தம்பாங்க. அது மாதிரி ஆகிப் போச்சு.

இத்தோட நிறுத்திக்கலாம்னு பாத்தேன். ஆனா பூலோக சொர்க்கம்கிறதை தவிர காஷ்மீரோட அடுத்த பக்கத்தையும் எழுதணும். கொஞ்சம் சீரீசா. வெய்ட் பண்ணுங்க...

மறக்காம ஓட்டுப் போட்டுருங்க....

சிங்கை அறிஞர் அரங்கம்

சிங்கப்பூர் ஹார்பர் ஃப்ரன்ட் ரயில் நிலையத்துல இன்னிக்கு சாயங்காலம் ஒரே பரபரப்பு. வெளிய வந்து செந்தோசா தீவுக்கு போற சிறு ரயில் நிலையத்துக்கு வந்தா அங்க‌யும் ஒரே அமர்க்களம். டிக்கட் ஆபீசர் டிக்கட் குடுத்து குடுத்து களைச்சுப் போய் உக்காந்துருக்காரு. என்னடா இதுன்னு யோசிச்சுக்கிட்டே போனப்பறம்தான் தெரிஞ்சுது நம்ம சிங்கைப் பதிவர்கள் பெருந்திரளாக(!!)செந்தோசா தீவுல ஆசிய‌க் க‌ண்ட‌த்தோட தென்கோடி முனைல‌ கூடியிருந்தாங்க. மொத்தம் 21 பேர்.

மாலை 4:30 மணியிலிருந்து ஒவ்வொருத்தரா வர ஆரம்பிச்சாங்க. விஜய் ஆனந்தும், கோவி.கண்ணனும், வரவங்களுக்கும் செல்போன்ல வழி சொல்லிக்கிட்டே இருந்தாங்க.

"வ‌ந்துட்டீங்களா... பஸ் புடிச்சு டால்ஃபின் லகூன்ல எறங்கி அப்பிடியே பீச் ஓரமா வந்து, தொங்கு பாலத்துல ஏறி இந்தப் பக்கம் வந்துருங்க... நாங்க வெய்ட் பண்றோம்..."

இந்த‌ சந்திப்புல முக்கிய பதிவர்கள் மலேசியாவிலிருந்து வந்திருந்த விக்கி (எ) விக்னேஸ்வரன் மற்றும் திண்டுக்கல் திரு.சுப்பிரமணியம். (இவர் அண்மையில் மறைந்த பதிவர் திருமதி.அனுராதா அவர்களின் கணவர்.)


கோவி.கண்ணன், திரு.சுப்பிரமணியம், மலேசியா "விக்கி"

5 மணி சுமாருக்கு வந்தவங்க ஒருத்தரை ஒருத்தர் அறிமுகம் செய்துகிட்டு கோக் (அட... சொன்னா நம்பணும்.. வெறும் கோக்தான்..) குடிச்சுட்டு இருக்கும்போது இன்னும் சிலரும் வந்து ஜோதில ஐக்கியமானாங்க. விக்கி தன்னைப் பற்றியும், பொதுவாக மலேசிய பதிவுலகத்தைப் பத்தியும் சொன்னாரு. பெறகு, இது மாதிரி சந்திப்புக்கு மொதத் தடவயா போற என்ன மாதிரி "டெபுடன்ட்ஸ்" சுய அறிமுகம் நடந்தது. அப்பறம் திரு சுப்பிரமணியம் பேச வந்தாரு. தன் மனைவியைப் பத்தியும், அவங்களோட கடைசி நாட்களைப் பத்தியும் ரொம்ப உருக்கமா சொன்னாரு. அவங்க மறைவுக்கு பிறகு அவங்களைப் பத்தின எண்ணங்களும், உணர்வுகளும் அந்த அளவுக்கு அவரை ஆக்கிரமித்து இருக்குனு தெரிய வந்தபோது மனசு ரொம்ப கெனத்துப் போச்சு. புற்றுநோய் பத்தின விழிப்புணர்வை எப்பிடி பரப்பறது, எங்க ஆரம்பிக்கறதுன்னு யோசனையா இருக்காரு. தவிர ஒரு புத்தகமும் வெளியிட முயற்சி செய்துகிட்டுருக்காரு. சீக்கிரமே அது நல்ல முறையில் வெளி வந்தா சமுதாயத்துக்கே நன்மை.

அப்பறம் ஃபோட்டோ செஷன், உரையாடல்கள், கலாய்த்தல்கள்னு ஜாலியாப் போச்சு. 7:30 மணி சுமாருக்கு சபையக் கலைச்சுட்டு, ஒரு குருப் லிட்டில் இந்தியா கொடைக்கடையில் இட்லி சாப்பிட போக, மத்தவங்க (நான் உள்பட) வூட்டுக்கு ஜூட்.

ஃபோட்டோ செஷன் (தொப்பியுடன் நான்)

இன்றைய அறிஞர் அரங்க‌த்துக்கு வந்திருந்தவர்கள்:
திரு. சுப்பிரமணியம், விக்னேஸ்வரன், கோவி.கண்ணன், ஜோசப் பால்ராஜ், விஜய் ஆனந்த், "முகவை மைந்தன்" ராம், பாரி அரசு, ஜோதிபாரதி, கிரி, ஜோ மில்டன், கிஷோர், மீனாட்சி சுந்தரம், சிவா, ராம், சிங்கை நாதன், ராஜா, அகரம் அமுதா, பெங்களூர் ராம், சாம்பார்மாஃபியா மற்றும் நான்.


அறிஞர் அரங்கம்

வால் 1: வ‌ந்திருந்த எல்லாப் பதிவர்களுக்கும் விக்கியின் "திருக்குறள் ‍ ஒரு எளிய அறிமுகம்" புத்தகம் அன்புப்பரிசு.

வால் 2 : பாரி அரசுவின் திருமணம். நவம்பர் 24 பட்டுக்கோட்டையில்.

வால் 3 : திரு.சுப்பிரமணியன் அவருடைய மகன் வீட்டுல இருந்து மசால் வடை, சீயம்னு சுவையான பலகாரங்கள்.

Thursday, October 30, 2008

பூலோக சொர்க்கம் காஷ்மீர் - 2

பனித்தொப்பி அணிந்த மலைகள்

மறுநா குல்மார்க் (Gulmarg) போகறதா திட்டம். காலைலயே கெளம்பிட்டோம். அண்னன் அவரோட ஆர்மி நண்பர் கிட்ட மொதல்லயே சொல்லி வெச்சுருந்தாரு. ஸ்ரீநகர் - ஊரி வழியில இடது பக்கம் போகணும். சுமார் 120 கி.மி பயணம். 3 மணி நேரத்துல போயிடலாம். அவ்வளவா ட்ராஃபிக் இல்ல. போற வழியெல்லாம் பச்சப் பசேல்னு இருக்கு. நெல்லு போட்ருக்காங்க. தை மாசம் அறுவடைக்கு தயாராயிடும். வரப்புல நம்ம பக்கம் புளியமரம் இருக்கற மாதிரி அங்க ஆப்பிள் மரங்க இருக்கு. சில மரங்கள்ல கொத்து கொத்தா ஆப்பிள். 11 மணி சுமாருக்கு குல்மார்க் போய் சேந்தோம்.

அண்ணனோட நண்பர் அவரே கைப்பட சமைச்சு ரெடியா வெச்சுருந்தாரு. நல்லா மூக்குப்புடிக்க சாப்டுட்டு, அப்பிடியே கொஞ்சம் மேல போனோம். அங்க ஆர்மியோட விருந்தினர் குடில்கள் இருக்கு. (குடில்களா அது.... 7 ஸ்டார் ஹோட்டல் சூட் மாதிரி இருக்கு... ஜகுஸி கூட இருக்கு) நல்ல இளம் வெயில். அங்கங்க மேக மூட்டம். மலை உச்சிகள்ல பனி படிஞ்சு வெயிலுக்கு சின்ன ஆறு மாதிரி உருகி ஓடி வருது. வெயில்ல பாக்க ஒரு வெள்ளி ரிப்பன் மாதிரி மினுக்குது. குடிலுக்கு வெளிய பெரிய பூந்தோட்டம். நல்ல சூடா டீ கெடச்சா நல்லா இருக்குமேன்னு நினைக்கும்போதே டீ வந்துடுது. அட.. நாம நிக்கறது எதாவது கற்பக மரத்துக்கு கீழயான்னு ஆச்சரியமா இருந்துது.

குலமார்க்ல விசேஷமானது "கோண்டோலா"ன்னு (Gondola) சொல்ற கேபிள்கார் பயணம். டூரிஸ்டுக இல்லாததால ஒடாதுன்னு சொல்லிட்டாங்க. ஒரே ஏமாத்தமாப் போச்சு. ஆனாலும் விடல. இன்னும் சில ஆர்மிக் காரங்களும் இதுக்குன்னெ வந்திருந்தாங்க. அதனால சரின்னு ஓட்ட சம்மதிச்சாங்க. இந்த கேபிள் கார் ரென்டு கட்டமா இருக்கு. முதல் கட்டத்துல குல்மார்க்ல இருந்து ஒரு 500 மிட்டர் உசரத்துல இருக்கற கோங்டோரிக்கு (Kongdori) போகலாம். ரெண்டாவது கட்டத்துல, அங்க இருந்து இன்னும் மேல 500 மீட்டர் போகலாம். ஆனா ரெண்டாவது கட்டம் டுரிஸ்டுக இல்லாததால சில மாசங்களாவே ஓட்டமே இல்ல. அத ஓட்ட முடியாதுன்னு சொல்லிட்டாங்க. வந்தவரைக்கும் லாபம்னு கோங்டோரி போனோம். குட்டி குட்டி கேபிள் கார்ல நாலு பேர் உக்காரலாம். வரிசையா பெட்டிக வந்துகிட்டே இருக்கும். ஸ்டேஷனுக்குள்ள வந்ததும் வேற ட்ராக்குக்கு மாறி மெதுவா நகரும். கதவு தானா தெறந்துக்கும். அப்பிடியே ஏறி உக்காந்துட்டம்னா மறுபடி மெயின் ட்ராக்குக்கு மாறி வேகமா மேல போகுது. சுமாரா 20 மிட்டர் உயரம் இருக்கலாம். 50 மிட்டருக்கு ஒரு டவர் இருக்கு.
கோண்டோலா பயணம்

15 நிமிஷ பயணம். மேல போயிட்டோம். அப்பிடியே பெட்டி மெதுவா நகரும்போதெ இறங்கி வெளிய போனோம். பின்னால பெரிய மைதானம் மாதிரி இருக்கு. குதிரைக்காரங்க கிட்டப் பேசி ஆளுக்கொரு குதிரை மேல ஏறி கொஞ்ச தூரத்துல இருக்கற ஒரு சின்ன அருவிய பாக்கப் போனோம். 2 கி.மி தூரம்தான்னாலும், கரடு மொரடான பாதைல குதிரை எப்ப நம்மள கீழ தள்ளுமோங்கற பயத்தோடயே சவாரி. நம்ம குதிரைக்காரர் வேற தனியா விட்டுட்டாரு. குதிரை நம்மள விட புத்திசாலின்னாரு. அதுக்கு மேல நான் ஒண்ணும் பேசல. சும்மா கொஞ்ஞ்ஞ்ஞ்சமா தண்ணி ஓடிக்கிட்டுருந்துது. சுத்திப் பாத்துட்டு திரும்பிட்டோம். திரும்ப வரும்போதுதான் இன்னும் கஷ்டம். இறக்கத்துல குதிரை தட்டு தடுமாறிக்கிட்டே போகுது. புரவிபாளையம் அய்யனார்தான் காப்பாத்தணும்னு வேண்டிகிட்டேன்.

நானும் என்னுடைய அண்ணியும்

மறுபடி பெட்டில ஏறி கீழ வந்து சேந்தோம். இதுக்கே 3 மணிக்கு மேல ஆயிடுச்சு. திரும்ப ஸ்ரீநகர் வரும்போது 6:30 மணி போல ஆயிடுச்சு. வீடு வந்து, எடுத்த ஃபோட்டோவெல்லாம் பாத்து, திருத்தி......

பீர் பஞ்சால்


இங்க ஒரு சின்ன செய்தி. பொதுவா எல்லாரும் நினைக்கறது காஷ்மீர்ல இருக்கறது இமய மலைன்னு. ஆனா காஷ்மீர்ல பல மலைத்தொடர்கள் இருக்கு. காரகோரம், ஷிவாலிக், பீர் பஞ்சால், மேற்கு இமயம்... இப்பிடி இன்னும் சிலது கூட இருக்கு. குல்மார்க் இருக்கறது பீர் பஞ்சால் மலைத்தொடர்ல. காரகோரம்ல தான் K2 (எவெரெஸ்டுக்கு அடுத்தது) மலைஉச்சி, பல்டோரோ க்ளேசியர் எல்லாம் இருக்கு. நங்க பர்பத் தொடர் POKல இருக்கு.

அடுத்த நாள் சோனாமார்க் பயணம். அதுவும் 3 மணி நேர தூரத்துல இருக்கு. மலைப்பாதை வளைஞ்சு வளைஞ்சு போகுது. ட்ரக்குகளும் டேங்கர் லாரிகளும் (99% டாடா வண்டிக) சர்புர்னு போறதப் பாத்தாலே பயமா இருக்கு. வலப்பக்கம் சரிவுல சிந்து நதி சலசலன்னு ஓடுது. பல இடங்கள்ல மலைச்சரிவுனால பாதிரோடுதான். குளிர் வரதுக்குள்ள வேல முடியணும்னு ரோடு போடற வேலை ஜரூரா நடந்துக்கிடுருந்துது. நிறைய இடங்கள்ல நதியக் கடக்க வேண்டியிருக்கு. பல பாலங்கள் இரும்புதகடுகளால் ஆனது. ஒரு வண்டி அகலந்தான். எதிர்ல வர வண்டி போகற வரை காத்திருந்துதான் போகணும். பஸ்களை குறிப்பிட்டு சொல்லணும். நாலு டயர்களுக்கு மேல ஒரு பெரிய இரும்புப்பெட்டி. அது எப்பிடி ஓடுது, மக்கள் எப்பிடி அதுல தைரியமா பயணம் பண்றாங்கங்கறது இன்னும் எனக்கு தெளிவாகல.


ஒருவழியா சோனாமார்க் போய் சேந்தோம். அதி உயர போர்ப் பள்ளி (High Altitude War School - HAWS) அங்கதான் இருக்கு. கேம்பஸ்க்கு உள்ள இருக்கற மெஸ்லதான் மதிய உணவுக்கு சொல்லி வெச்சுருந்துது. அந்த மெஸ் இருக்கற எடத்தப் பாக்க கண்ணு ரெண்டு போதாது. சுத்திலும் மலை. அடிவாரத்துல மெஸ், வெளிய அரை வட்டமா படிப்படியா ஒரு பூந்தோட்டம். என்னா கலருக, டிசைனுக... அதெல்லாம் சென்மத்துக்கும் மறக்க முடியாத அனுபவம்.

அப்பிடி ஒரு ரம்மியமான இடத்துல மதிய உணவு. சுடச்சுட பூரி சென்னா, வெஜிடபில் புலவு. வாயத் தொறந்தா காக்கா வ்ந்து கொத்திக்கிட்டு போற அளவுக்கு சாப்டுட்டு... கேமரா பேட்டரி தீரற வரைக்கும் பூக்களயும் மக்களயும் ஃபோட்டோ புடிச்சுட்டு திரும்ப மனசில்லாம திரும்பினோம். வர வழியில நதியில கொஞ்சம் கையக் கால நனச்சுக்கிட்ட்டோம். உருகி வர பனிதானே...சும்மா ஜில்ல்ல்ல்ல்ல்லுனு... ஆஹ்ஹ்ஹா...


நாங்கள்...

ரொம்ப பெரிய பதிவாப் போயிருச்சு.... இன்னொரு பகுதி போட்டு முடிச்சுரலாம்.. சரியா?

Wednesday, October 29, 2008

வலைப்பூ ஆரம்பிக்க மாட்டேன் - சச்சின் பேட்டி


"வாங்க சச்சின்... எங்க இவ்வளவு தூரம்?.... ஆச்சரியமா இருக்குது... மொதல்ல வாழ்துக்களை பிடிங்க 12000 ரன் அடிச்சதுக்கு..."

"அது என்னங்க பெருசு.... இப்ப இது உங்களோட 25வது பதிவுன்னு தெரிஞ்சதும் ஒடோடி வந்தேன்.... இன் ஃபாக்ட் 24வது பதிவு படிச்சதுமே டிக்கட் புக் பண்ணிட்டேன்... நேர்ல வந்து சந்திக்கணும்னு..."

"அய்யோ... ரொம்ப புகழாதீங்க... கூச்சமா இருக்கு.."

"இன்னும் புகழவே ஆரம்பிக்கல...அதுக்குள்ள.... ஏங்க உங்க ப்ளாக்குன்னா எனக்கு உசுரு... தெனமும் நீங்க எழுதறீங்களோ இல்லயோ... நான் எல்லாப் பதிவுகளையும் தெனம் ஒரு வாட்டியாவது படிச்சுட்டுதான் தூங்குவேன்"

"அப்பிடியா.... அமாம்... 12000 ரன் அடிச்சு முடிச்ச பெறகு எப்பிடி இருந்துச்சு?"

"சும்மா ஜிவ்வுன்னு இருந்துச்சு... இப்ப உங்களுக்கு இருக்கற மாதிரி...."

"அட... மறுபடி புகழறீங்க.... எப்பிடி.. ரொம்ப கஷ்டமா இருந்துச்சோ?"

"புகழறதுல என்னங்க கஷ்டம்?"

"அது இல்லீங்க... ரன் அடிக்கறதுக்கு..."

"பின்ன... முதுகு வலி பின்னிடுச்சு... நானாவது ஆஃப்டர் ஆல் 12000 ரன்... நீங்க 25 (கண்ணை முழிச்சு கைய அகல விரிச்சு ஆச்சரியமா பேசறாரு) பதிவு போட்டிங்களே... உங்களுக்கு கஷ்டமா இல்லயா?"

"நமக்கென்ன கஷ்டம்... படிக்கறவங்களுக்குத்தானே.... அத ஏன் கேக்கறீங்க.... ராப்பகலா யோசிச்சு(!!) மூளைய(!!) கசக்கி புழிஞ்சு ஒரு பதிவு போடறதுக்குள்ள நாக்கு தள்ளிடும்.... எனக்கு மொதல்ல பரிச்சயமான பரிசல்காரரை கேட்டுப்பாருங்க.. அப்பத் தெரியும்... அவரெல்லாம் 100க்கு மேல போட்டாச்சு தெரியுமா... "

"அய்யய்யோ... அவ்வளவு கஷ்டமா?"

"எழுதற நம்மள விடுங்க, பின்னூட்டம் போடறவங்களை யோசிச்சுப் பாருங்க.... விஜய் ஆனந்த் மாதிரி சிரிப்பான் போடுறவங்க கீ போர்டுல கோலன், ப்ரேக்கெட் இந்த ரெண்டு கீயும் தேஞ்சு போய் அடிக்கடி கீபோர்டே மாத்த வேண்டி வருது.... ர்ர்ரிப்பீட்டேய்னு கமெண்ட் போடறவங்க மேல பீவாசுவும் ராம்குமாரும் கேஸ் போடப் போறாங்களாம், அப்துல்லா அண்ணனுக்கு ஒவ்வொரு பதிவையும் கண்ணுல வெளக்கெண்ண விட்டுப் படிச்சுட்டு எதாவ்து நுண்ணரசியலக் கண்டுபுடிச்சு சிண்டு முடியறதுக்கு ரொம்ப மெனக்கெட வேண்டியிருக்கு... பழமைபேசிக்கு மொதல்ல அட்டென்டன்ஸ் போட்டுட்டு அப்பறமா வந்து படிக்க வேண்டியிருக்கு, குடுகுடுப்பையாருக்கு நடுச்சாமம் வரைக்கு வெய்ட் பண்ணணும்... இப்பிடி பலருக்கு பல கஷ்டங்கள்..... பதிவு போடறதும், படிச்சு பின்னூட்டம் போடறதும் சும்மாவா..."

"அம்மாடி..... இதுல இவ்வளவு விஷயம் இருக்கா..."

"பின்ன... சும்மா உங்களை மாதிரி பேடைக் கட்டுனமா, பேட்டை புடிச்சமா, பங்களாதேஷையும் ஸிம்பாப்வேவையும் போட்டு வெளாசினமாங்கற மாதிரியான சோலியா இது..."

"அதென்னமோ வாஸ்தவந்தான்...."

"உங்களுக்காவது பேப்பர் காரங்களும் டி.விக்காரங்களும் வெளம்பரம் பண்ணுவாங்க... ஆனா நாங்க... பதிவு போட்டா மட்டும் போதுமா... தமிழ்மணத்துல இணைச்சு, தமிலிஷ்ல இணைச்சு, ஓட்டு போடுங்கன்னு மெரட்டி.. (கெஞ்சி..) அதெல்லாம் பெரிய வேலைங்க....."

"பிஹைண்ட் தி ஸ்க்ரீன்ஸ் இவ்வளவு இருக்கா....."

"எப்பிடியோ அடிச்சு புடிச்சு நானும் 25 பதிவு போட்டுட்டேன்... நேர்ல வந்து வாழ்த்தினதுக்கு நன்றி..."

"ரொம்ப நன்றிங்க... நான் கூட ப்ளாக் ஒண்ணு ஆரம்பிக்கலாம்னு யோசிச்சேன்... ஆனா இப்பத் தோணுது இன்னும் ஒரு வருஷத்துக்குள்ள 13000 அடிக்கறது ஈசியா இருக்கும் போல இருக்கே..."

"ஆமாம்... நீங்க அதுல கான்சன்ட்ரேட் பண்ணுங்க... வாழ்த்துக்கள்"

அப்பாடா... ஒரு ஆளை ப்ளாக் ஆரம்பிக்க விடாம தொரத்தரதுக்குள்ள உம்பாடு எம்பாடுன்னு ஆயிருது... இப்பவே கண்ணக் கட்டுதே...

மக்களே... என்னயும் மதிச்சு, நம்ம பதிவுகளையும் படிச்சு, அதுக்கு பின்னூட்டமும் போட்டு நாட்டுக்கு பெரும் தொண்டாற்றும் உங்களுக்கெல்லாம் எப்பிடி நன்றி சொல்றதுன்னே தெரியல. அடிக்கடி வாங்க... பாராட்டோ, திட்டோ பதிஞ்சுட்டுப் போங்க.

நல்லாயிருங்க மக்களே... நல்ல்ல்ல்ல்ல்ல்ல்லாயிருங்க....

நன்றி....நன்றி.....நன்றி....நன்றி....நன்றி.....நன்றி....நன்றி.....நன்றி...

Saturday, October 25, 2008

பூலோக சொர்க்கம் காஷ்மீர்

வெறிச்சொடி இருக்கும் தால் ஏரி

போன மாசம் லீவுல ஸ்ரீந‌கர் போய்ட்டு ஒரு வாரம் இருந்துட்டு வந்தோம். திரும்ப வந்து ஒரு மாசம் போல ஆச்சு. ஆனா அது ஏற்படுத்தின பாதிப்பு இன்னும் பல வருசங்களுக்கு இருக்கும்.

அண்ணன் இப்பொதைக்கு ஸ்ரீநகர்ல (இந்திய விமானப் படை) இருக்கறதால தங்கறதுக்கெல்லாம் ஒரு ப்ரச்னையும் இல்ல. டெல்லிலேந்து‍ ஸ்ரீநகர் போகற விமானமெல்லாம் நேரத்துக்கு கெளம்பும்னு சொல்ல முடியாது. நாங்க‌ போக இருந்த ஃப்ளைட்டும் கடைசி நேரத்துல கேன்சல் ஆகி, அடிச்சு புடிச்சு இன்னொண்ணுல புக் பண்ணி மதியம் போய் சேந்தோம். போகும்போதே ஸ்ரீநகர்க்கு கொஞ்சம் முன்னாலயே ஏர் டர்புலன்ஸ்னு விமானம் தூக்கி தூக்கிப் போட்டுச்சு. ஏற்கெனவே கலவரமா இருக்கற ஊருக்குப் போறோம்... இதுல விமானம் வேற வயித்துல புளியக் கரச்சுது.

போன மறுநாள். தால் ஏரி போய் வருவோம்னு கெளம்பினோம். 3,4 மாசமாவே அமர்நாத் ப்ரச்னையால குண்டு வெடிப்பு, ஊரடங்கு உத்தரவுன்னு ஒரே அமர்க்களம். என்னமோ நாங்க இருந்த 6 நாளும் ஊரடங்கு இல்ல. ஆனா பதட்டமான சூழ்நிலைய நல்லா உணர முடிஞ்சுது. குண்டு வெடிச்சு செவுரு உடஞ்ச மேம்பாலம், தீ வெச்சு எரிஞ்சு போன மார்க்கெட் கட்டடம், டூரிஸ்டுகளே இல்லாத தால் ஏரி, வழக்கத்துக்கு மாறா கரையோரமா நிக்கற நூத்துக் கணக்கான சவாரி படகுகளும், படகு வீடுகளும் நெலமைய சொல்லாமலே வெளக்கமா சொல்லுதுக. நாங்க வாடகைக்கு எடுத்த படகு (கஷ்மீரில "ஷிகாரி") ஒட்டி சொன்னாரு, அவுருக்கு ஒரு மாசங்கழிச்சு சவாரி கெடச்சுருக்காம். கேகவே ரொம்ப கஷ்டமாயிருந்துது. சாதாரணமா படகுக கரையிலயே நிக்காது. அவ்வளவு டூரிஸ்டுக கூட்டம் நெரியும். என்னவோ காஷ்மீரோட தலயெழுத்து... சொர்க்கம் மாதிரியான எடத்துல எவனுக்கும் நிம்மதி இல்ல‌, உயிருக்கு உத்தரவாதம் இல்ல, யாவாரம் இல்ல, அன்னாடப் பொழப்புக்கே ததிங்கிணத்தோம் போடறாங்க. நேர்ல பாக்கும்போது சீரணமே ஆகல.

நானும் அண்ணனும்

படகுல போயிட்டுருக்கும்போதே கூடவே படகுல வந்து யாவாரம், பிச்சை எல்லாம் நடக்குது. யாவரிக குங்குமப்பூ, ஷிலாஜித் மாதிரி ரொம்ம்ம்ம்ம்ப காஸ்ட்லி அயிட்டங்க, காய்தக்கூழ்ல பண்ணின வேலைப்படு அதிகமுள்ள‌‌ சின்ன/பெரிய‌ பொம்மைக, ராசிக்கல்லுக, வெள்ளி நகைகன்னு சகலமும் விக்கறாங்க. ஏரிக்கு நடுவுல ஒரு பெரிய மார்க்கெட்டே இருக்கு. துணிக்கடை, மருந்துக் கடைன்னு எல்லாம் இருக்கு. அப்பிடியே படகை ஓரங்கட்டி ஒரு காஃபா குடிச்சோம். (காஃபாங்கறது இஞ்சி, ஏலம், பிஸ்தா, பாதாம்னு எல்லாம் போட்டு டீ மாதிரி இருக்கும்) அப்பிடியே ஒரு ரவுண்டு போய்ட்டு திரும்ப கரைக்கு வந்து ஒரு தாபாவுல மதியச் சாப்பாடு முடிச்சுட்டு ஞாயிறு சந்தைக்குப் போனோம். வெகு நாளைக்கு அப்பறம் சந்தை போடறாங்க போல... "இன்னக்கே வாங்கிறணும்டா, நாளைக்கு கெடைக்காது"ங்கறது மாதிரி மக்க ஓடி ஓடி வாங்கறாங்க. பழசு, புதுசுன்னு எல்லாம் கெடைக்குது. ஆனா தெருவுல எங்க பாத்தாலும், பத்தடிக்கு ரெண்டு BSF ஜவான்க நிக்கறாங்க. ஒருத்தர் கிட்ட பேச்சு குடுத்தபோது அவிக பொலம்பல் அதுக்கு மேல. பாவம்... ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மாதிரி கஷ்டம். ஊரு நெலம அப்பிடி.

டூரிஸ்டுகளுக்காக காத்திருக்கற சவாரிப்படகுகள்

அப்பறம் "சஷ்மஷாஹி பூங்கா" (Chashm Shahi Park) வுக்குப் போனோம். ஒரு சின்ன மலை மேல இருக்கற பூங்கா. நல்ல சீசன்கறதால பூக்களோ பூக்கள்...கலர் கலரா... இயற்கையோட கைவண்ணம். நெறய இனிப்பு தின்னா தெகட்டும். ஆனா இம்புட்டு வித விதமா, கலர் கலரா, சின்னதும் பெருசுமா, ஒத்தையா, கொத்துக் கொத்தா பூக்கள கண்கொள்ளாம பாத்துக்கிட்டே இருக்கலாம். ஒரு எடத்துல நம்ம சங்ககால பூன்னு சொல்ற "செங்காந்தள்" பூ கூட இருக்கு.

செங்காந்தள்

பூவில் வண்டு கூடும் கண்டு....

இந்தப் பூங்காவுக்குள்ள ஒரு நன்னீர் ஊத்து இருக்கு. சும்மா ஜில்லுன்னு கல்கண்டு மாதிரி தண்ணி கொட்டிக்கிட்டே இருக்கு. பாட்டில்லயும் கேன்லயும் புடிச்சுக்கிட்டு போய்ட்டே இருக்காங்க. இதுல இருந்துதான் இன்னிக்கும் டெல்லில இருக்கற நேரு குடும்பத்துக்கு நெதம் தண்ணி போகுதாம். கேமராவே "டே...போதும்டா"ன்னு சலிச்சுக்கற வரைக்கும் பூக்களயெல்லாம் படம் எடுத்துக்கிட்ட பெறகு, பக்கத்துலயே இன்னும் கொஞ்சம் மேல இருக்கற "பரி மஹல்"க்கு போனோம். அது ஒரு சின்னமா (Heritage Site) அகழ்வாரய்ச்சித்துறை பாதுகாக்கறாங்க. அங்க இருந்து பாத்தா ஸ்ரீநகர் அழகா ரம்மியமா இருக்கு. ஹைதராபாத்துல சார்மினார் மாதிரி, தால் ஏரிக்கு நடுவுல நாலு சினார் மரங்க‌ இருக்கு. அத "சார் சினார்"ங்கறாங்க. அது இங்க இருந்து பாத்தா அட்டகாசமா இருக்கு.



"தால் ஏரி நடுவுல "சார் சினார்" (தெரியுதா??)

அவ்வளவுதான்... மொத நாள் அதுக்கு மேல சுத்த தெம்பு இல்ல... வீடு போய் சேந்தோம்.

நாங்க அந்த வாரம் சுத்திப் பாத்த குல்மார்க், சோனாமார்க் பத்தி, காஷ்மீர் பத்தி, சினார் மரம் பத்தியெல்லாம்... வாரேன்... அடுத்த பதிவுல சொல்றேன்...

மத்தபடி, எடுத்த 100க்கும் மேல படங்கள இங்க பதிவல போட முடியாது. Online album க்கு தொடுப்பு இதோ. அங்க போய் பாத்துக்கங்க...

ம்ம்ம்...ஓட்டு...மறக்காம போட்டுட்டுப் போங்க.