Wednesday, May 18, 2011

யூ டூ யூரோ?


போர்ச்சுகல். உலக வரைபடத்தை உருவாக்குவதற்கு மிகவும் உதவிய நாடு. கிட்டத்தட்ட 6 நூற்றாண்டுகள் உலகின் பல்வேறு பகுதிகளை ஆண்ட நாடு. கடைசியாக (90களின் பிற்பகுதியில்) இடத்தைக் காலி செய்தது மக்காவ் (சைனா) என்று நினைக்கிறேன். "ஐரோப்பிய பொருளாதார யூனியன்" (European Economic Zone) என்று பேச ஆரம்பித்த காலத்திலிருந்து யூனியனில் இருந்து வரும் நாடு. பொருளாதாரத்தில், வாழ்க்கைத்தரத்தில் முன்னேறிய, மனித வளம் மிக்க, அமைதியான நாடு.

ஆனால் இதெல்லாம் இன்று "பொய்யாய்... பழங்கதையாய்..." போய், கிரீஸ், அயர்லாந்துக்கு அடுத்ததாக பொருளாதாரத்தில் அதல பாதாளத்தில் வீழ்ந்து தவிக்கிறது. வீழ்ச்சி என்றால் சாதாரண வீழ்ச்சி இல்லை. மொத்த உள்நாட்டு உற்பத்தியைப் போல 225% கடன். தற்போதைய நிலையை சமாளிக்க ஏறத்தாழ 80 பில்லியன் யூரோ தேவைப்படலாம். சென்ற மாதத்தில்உலக வங்கியும், யூனியனும் கடன் ஒப்பந்தங்கள் செய்துள்ளன. போர்ச்சுகலும் தன் பங்குக்கு செலவினங்களை அடியோடு குறைத்தாக வேண்டும். ஒரு யூரோவிற்கு நூறு காசுகள் என்று ஒவ்வொரு யூரோவின் மதிப்பையும் உணர வேண்டும்.

ஆனால், இப்படியே எவ்வளவு காலத்திற்கு ஒவ்வொரு ஐரோப்பிய நாட்டின் பொருளாதார பிரச்னைகளை சமாளிக்க முடியும்? சென்ற வருடம் கிரீஸ் வீழ்ச்சியின்போதே இந்தக் கேள்வி எழுந்தது. (இது பற்றிய முந்தைய இடுகை) இந்த வீழ்ச்சிகளின் காரணம் "யூரோ"தானா? கிடையவே கிடையாது.... இருக்கலாம்.... வேறென்ன... என்று பல சித்தாந்தங்கள் கிளம்பின. ஆனால் பொதுவான பொருளாதார விதிகள், நாணய மதிப்பு மற்றும் நாணயமாற்று முறைகள், முதலீடுகள் என்றெல்லாம் பார்க்கும்போது, ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு போட்டித்தன்மை என்பது மிக முக்கியமான ஒன்று. மனிதவளம், உள்நாட்டு உற்பத்தி இவற்றுடன் கூட சர்வதேச சந்தை பொருளாதாரத்தில் நாணயமாற்று இன்றியமையாத ஒன்று.

சீனாவின் நாணயமாற்று கொள்கையில் குற்றம் கண்டுபிடித்தவர்கள் பலர். ஆனால் இன்று குறைந்த முதலீடு ; கூடுதல் உற்பத்தி ; மிகக்குறைந்த விலை ; மிகப்பெரிய சந்தை என்று வேறு எந்த நாட்டைச் சொல்ல முடியும்? அமெரிக்க கருவூல செயலர்கள் சீனாவுக்கு நேரில் சென்று நாணயமாற்று விகிதங்களை சிறிதளவாவது தளர்த்தக் கோருமளவுக்கு போட்டித்தன்மையை தக்க வைத்துக்கொண்டுள்ளது. அதே சமயம் நாணயச் சந்தையில் நேரடியாகத் தலையிட்டு 'யுவான்' மதிப்பை ஏற்றத் தாழ்வுகளில் இருந்து பாதுகாக்க, நாணயச்சந்தைக்கென ஒரு தனி பண முறையைக் கொண்டு வந்து அதிலும் தன் போட்டித்தன்மையை வளர்க்கிறது.

ஒருங்கிணந்த ஐரோப்பிய பொருளாதாரம் என்ற கனவை நனவாக்கி சாதனை படைத்தாலும், கொஞ்சம் அவசரப்பட்டு விட்டோமோ என்ற எண்ணம் இப்போது வலுப்பெற ஆரம்பித்திருக்கிறது. சீனாவைப் போல வேறு ஒரு மாற்று நாணய முறை வரும் சாத்தியக் கூறுகளும் உள்ளன. ஒரு நேர்மையான, பாரபட்சமில்லாத பொருளாதார அழுத்த சோதனைகள் (economic stress tests) மூலம் யூனியனுக்குள் இருக்கும் நாடுகளை வகைப்படுத்தி ஒரு 'மென் யூரோ' (soft euro) அறிமுகப்படுத்தப்படலாம். நாடுகள் இந்த மாற்று நாணயத்தை கையாண்டு தங்கள் போட்டித்தன்மையைத் தக்கவைத்துக் கொள்ள ஒரு வாய்ப்பு இருக்கிறது. காத்திருந்து பார்க்க வேண்டும்.

இப்போது போர்ச்சுகலுக்குப் பிறகு அடுத்த நெருக்கடி இத்தாலியில். அதன் அளவு 1 டிரில்லியன் யூரோ அளவுக்கு இருக்கலாம் என்ற அனுமானங்கள் மிகுந்த கலக்கத்தை ஏற்படுத்துகின்றன. எத்தனை காலம் ஜெர்மனி இந்த சரிவுகளை தாங்க முன்வரும் என்பது கேள்விக்குறி. வரி செலுத்தும் சாமானியன் அரசாங்கத்தை எதிர்க் கேள்வி கேட்கும் காலம் தொலைவில் இல்லை.

இரண்டு உலகப் போர்களின் தொடக்கமும் ஜெர்மனி. இன்று உலக பொருளாதார சரிவை தாங்குவதிலும் பெரும்பங்கு வகிப்பது ஜெர்மனி.


Saturday, April 30, 2011

உறங்குவது போலும்........


நண்பருடன் ஒரு சிறிய விவாதம். தூக்கத்தில் நாம் மிகுந்த நேரத்தை விரயம் செய்கிறோம் (non-productive) என்றார். அதுவும் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் 2 மணி நேரத்துக்கு மேல் தூங்குவது அவசியமற்றது ; ஒரு நாளைக்கு 16 மணி நேரம் என்று வாரத்துக்கு 6 நாட்கள் (96 மணி நேரம்) வேலை செய்ய அனுமதிக்கும்படி பணியாளர் சட்டங்கள் மாற்றப்பட வேண்டும் என்றார். இத்தனைக்கும் அவருடையே சகோதரர் ஒரு மருத்துவர்.

நல்ல பொழுதையெல்லாம் தூங்கிக் கழிப்பவர்களைப் பற்றி பேசவில்லை. நிஜமாகவே தூக்கம் என்பது நேர விரயமா? மனிதனுக்கு ஒரு நாளைக்கு 6 மணி நேரத் தூக்கம் அவசியம் என்று மருத்துவ அறிவியல் சொல்கிறது. இல்லாது போனால், மனித உடல்கூற்றுப் படி, இயக்கமும் உற்பத்தி திறனும் மங்கி, வளரும் நாடு என்ற நிலையிலிருந்து இறங்கி வளர்ச்சி குன்றிய நாடாகத்தான் போகும்.

அது நிற்க. விவாதம் தொடர்ந்தது. அறிவியல், மருத்துவம் , வானவியல் இவையெல்லாம் வாழ்வியலில் கலக்கும் முன்பிருந்து இருக்கும் வேதம் என்ன சொல்கிறது? ("வேதம்" என்பது, மதம் - குறிப்பாக இந்து மதம் -மற்றும் ஆத்திகம் தொடர்புடையது என்ற கருத்து உடையவர்கள் இந்த வரியுடன் திரும்பி விடலாம்). வேதங்களைப் பொறுத்தவரை மதம், ஆத்திகம் போன்றவை மிக மலிவான விஷயங்கள். அவற்றின் ஆழமும், அகலமும் இந்த பிரபஞ்சத்தை விடவும் அதிகம்.

இன்று அறிவியல் பிரபஞ்சம் தோன்றியது எப்படி என்ற கேள்விக்கு பதில் தேட முயன்று கொண்டிருக்கிறது . (இது பற்றிய முந்தைய இடுகை) அறிவியல் முயல வேண்டும். உண்மை என்பது தேடி அறிந்தே தீர வேண்டிய ஒன்று. ஆனால், இன்றைய நிலையில் அறிவியலின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ள பல் செய்திகள் எத்தனையோ காலத்திற்கு முன்பே வேதங்களில் இருக்கின்றன என்பது ஒரு ஆச்சரியமே.

கடவுள் ஒளி உண்டாகட்டும் ; பூமி உண்டாகட்டும் ; உயிர்கள் உண்டாகட்டும் என்று நினைத்தார், படைத்தார் என்பது பரவலான நம்பிக்கை. போலவே, 2012-ல் பிரளயத்தில் (deluge) உலகம் அழியும் ; உலகமே நீரில் மூழ்கி விடும் என்பது போன்ற நம்பிக்கைகளும் பல மதங்களிலும் பரவலாக நம்பப்படுகிறது. ஆனால் வேதமோ, இதையெல்லாம் விடு ; 'நித்யப் பிரளயம்" என்று ஒன்று நாள்தோறும் உனக்குள்ளேயே நிகழ்வது உனக்குத் தெரியுமா என்கிறது. அதுதான் 'தூக்கம்'. எப்படி?

"லயம்" என்றால் ஓய்தல் அல்லது ஒன்றுதல் என்று கூறலாம். நாம் சுய உணர்வுடன் (consciousness) இருக்கும்போது நம் மனதில் உள்ள என்ணங்கள், நாம் தூங்கும்போது கொஞ்சம் கொஞ்சமாக அடங்கி, ஒடுங்கி, ஓய்ந்து, ஒரு புள்ளியில் 'லயித்து' (withdrawn / unmanifest) விடுகின்றன. மறுபடி விழிக்கையில், 'மனம்' என்பதும் அதில் எண்ணங்கள் என்பதும் மறுபடி 'தோன்றி' (manifest) நம் சுய உணர்வின் புலனுக்கு தென்படுகின்றன. (இது பற்றிய முந்தைய இடுகை) நாம் தூங்கி விழிக்கும்போது, உடலுக்கு ஒரு புத்துணர்ச்சியும் கிடைக்கிறது. இது எங்கிருந்து வந்தது?

இந்தப் பிரபஞ்சத்தில் நம் சுயஉணர்வுக்கு புலப்படும் / புரியும் ஒவ்வொரு பொருளும் அணுக்கள் / துகள்களால் ஆனது என்று அறிவியல் கூறுகிறது. அந்த அணுக்கள் / துகள்களுக்கும் அப்பாற்பட்டதை "வெளி" (field) என்கிறது. அதை அறியத்தான் அறிவியல் முயன்று கொண்டிருக்கிறது. அந்த ஒன்றை, அந்த ஆனந்தமான அமைதியை, அந்த மூலசக்தியை (energy) வேதம் "பிரம்மம்" என்றும், நம் சுய உணர்வில் புலப்படுவை எல்லாம் அதன் வெளிப்பாடுகளே (manifests) என்றும் கூறுகிறது. தூக்கம் ஒரு வகையான தியானம். நாம் தூங்கும்போது நிகழும் பிரளயத்தில், நம் மனம் அதன் மூலமான சத்தில் லயித்து, மீண்டும் வெளிப்படும்போது புத்துணர்வுடன் வெளிப்படுகிறது. எப்படி கடலில் ஒரு அலை எழுந்து, கடலிலேயே விழுந்து, கடலோடு லயித்து, மறுபடி இன்னொரு அலையாக எழுகிறதோ அதைப் போலவே. எந்த மூலசக்தியின் வெளிப்பாடாக மனமும், எண்ணங்களும் தோன்றினவோ, அதே மூலசக்தியிடம் லயித்து மீண்டும் தோன்றும்போது புத்துணர்வும், அதன் காரணமாக உடலியக்கமும், நமது அன்றாட வாழ்வும் நிகழ்கின்றன. அந்தப் புத்துணர்வு இல்லாமல் உடல் உழைப்பும், உற்பத்தித் திறனும் இல்லை. மனம் ஓயாமல், உடலுக்கு சக்தி கிடைக்காது. புத்துணர்ச்சி பெறுவது என்பதையும் தாண்டி, நம் இருப்பை, இந்தப் பிரபஞ்சத்தின் பேருண்மையை நமக்குப் புரிய வைப்பதும் தூக்கமே.

நாம் உணரும் இந்தப் பிரபஞ்சத்தின் தோற்றமும், மறைவும், அதில் உயிர்களின் பிறப்பும், இறப்பும் கூட அந்த மூலசக்தியின் அலைகளே.

"உறங்குவது போலும் சாக்காடு ; உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு"

"புனரபி ஜனனம் ; புனரபி மரணம்"

வால் : இதையெல்லாம் ஒருபுறம். மறுபுறம், பணியாளர் நலன்கள், அது தொடர்பான சட்டங்கள், அடிப்படை பொருளாதார விதிகள் இவற்றையெல்லாம் பார்க்கும்பொழுதும் வாரத்திற்கு 40 மணி நேரம் பணி என்பது சரியான ஒன்றுதான். மேலும் மேலும் பணி நேரத்தைக் கூட்டுவது பல விதங்களிலும் பாதிப்புதான். Only be counter productive.

Wednesday, April 20, 2011

மீண்டும் ஜே.கே.பி. !!!


பட்ட கால்லயேதான் படும். மறுபடியும் எழுத வந்தாச்சு. மீண்டும் ஜே.கே.பி. !!! பயப்படாதீங்க. ஒரேடியா அடிக்க மாட்டேன். தெளிய வெச்சு தெளிய வெச்சுதான் அடிப்பேன்.

6 மாசமா எழுத முடியாம போனாக் கூட அப்பிடி இப்பிடின்னு 98 பேர் இன்னும் நம்மளை நம்பிக்கிட்டிருக்காங்க. 1 மாசம் முன்னால எதேச்சையா பார்த்தபோது 100 பேர் !!! அடடா.. .எழுதாததுக்கே 100ன்னா எழுதியிருந்தா 1000 ஆயிருக்குமோ... அலெக்ஸால அலேக்கா தூக்கி மொத 10ல உக்காத்தி வெச்சுருப்பாங்களோன்னு நினைச்சதும் உண்டு. இப்பதான் தெரியுது... வழி தவறி வந்து ரெண்டு நிமிஷம் திண்ணைல உக்காந்துட்டு... இந்த அக்கப்போருக்கு வெயில்லயே அலையலாம்னு ஓடிட்டாங்க. பாவம்... பொழச்சுப் போகட்டும்.

* * * * * * * * * * *

தேர்தல் முடிஞ்சு எல்லாரும் நகம், விரல், கை, கால், பக்கத்துல இருக்கறவங்க குரல்வளைன்னு எதையாவது கடிச்சுக்கிட்டே பதட்டமா இருக்கலாம். அல்லது "ஹ்ம்ம்ம்.... பச்சாப் பசங்க.... 1 மாசம்... 30 நாள்.... எவ்வளோ சவுகரியம்... என்னென்ன பண்ணலாம் தெரியுமா?"ன்னு குமரிமுத்து மாதிரி சிரிச்சுக்கிட்டு இருக்கலாம். ஆனா பத்திரிக்கைகளுக்கு அல்வா டைம். "கிராமங்களில் கருத்து கணிப்பு", "மக்களின் மனத் துடிப்பு"ன்னு எதையாவது அடிச்சு விட்டு, குட்டையக் கொழப்பி கல்லா கட்டலாம். எஞ்சாய் பண்ணுங்க மக்களே !!

* * * * * * * * * * *

துக்ளக்ல (அட.. .ஒரிஜினல் துக்ளக்ல...) 'சோ' எழுதியிருந்ததைப் படிக்கும்போது சிப்பு சிப்பா வந்தது. இவங்களும் இலவசம், அவங்களும் இலவசம்னு சொல்லிட்டதால "இலவசம்"ங்கற ஃபேக்டர் அடிபட்டு போகுதாம். என்னா லாஜிக் !!! வடிவேலு, சிங்கமுத்துவை எல்லாம் இஞ்சித்தண்ணில கரைச்சு குடிச்சு ஏப்பம் விட்டுட்டார். சரி.... ஆதரிக்கறதுன்னு முடிவு செஞ்ச பிறகு லாஜிக்கெல்லாம் பாத்தா முடியுமா? ஆனா இப்பிடியே லாஜிக் பாத்தா எப்பிடி இருக்கும்னு யோசிச்சு பாத்தா.....

"ரெண்டு பேரும் இனிமே லட்சம் கோடிக்கு அதிகமா ஊழல் பண்றதில்லைனு சொல்லிட்டதால ஊழல் ஃபேக்டர் அடிபட்டு போகுது."

"ரெண்டு பேரும் எதிர்கட்சி பிரமுகர்களை குண்டு வெச்சு மட்டுமே கொல்வோம், அருவாளால வெட்டமாட்டோம்னு சொல்லிட்டதால வன்முறை ஃபேக்டர் அடிபட்டு போகுது."

"சொந்தப் பிரச்னைன்னா மட்டுமே டெல்லிக்கு போவோம் ; மத்த பிரச்னைக்கு எல்லாம் புறா கால்ல சீட்டு கட்டி அனுப்புவோம்னு ரெண்டு பேருமே சொல்லிட்டதால டெல்லிக்கு காவடி தூக்கற ஃபேக்டர் அடிபட்டு போகுது."

'சோ' மேல இருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையும் போயிடுச்சு.

* * * * * * * * * * *

சிங்கைலயும் அடுத்த மாசம் 7ந் தேதி தேர்தல். முதல் முறையா இங்க நேரடியா பாக்கறேன். என் வரையில இங்க ரொம்ப வித்தியாசமா இருக்கு. தேர்தல் முறைகள்ல இல்ல ; அரசியல்வாதிகளும் மக்களும் தேர்தலை அணுகற முறைல. நேரடியான கேள்விகள் கேக்கறாங்க. பிரதமர்ல இருந்து எல்லாரும் அதை விட வெளிப்படையா பதில் சொல்றாங்க. நெகடிவ்வா பார்க்கறவங்களும் இருக்காங்க. நான் ரொம்ப ஆர்வமா பாத்துக்கிட்டுருக்கேன். அநேகமா அங்க ரிசல்ட் வரும்போது இங்கயும் வந்துடும்னு நினைக்கிறேன்.

* * * * * * * * * * *

வழக்கம்போல போரடிச்சாச்சு. அப்பறம் பாக்கலாம். _/\_

Monday, October 11, 2010

பா.கே.ப.இ

வேற என்ன? அதேதான். சிங்கைல ரெண்டாம் நாளே கொஞ்சம் காத்தாடினாலும், மூணாம் நாள் போய் பார்த்தோம். நிறைய எழுதணும்தான். டெக்னிகலா சுபீரியர் படம். ஆனா, க்ரிடிகலா எழுதினா வயித்தெரிச்சல் கோஷ்டிங்கறாங்க. சிலரெல்லாம் விமர்சனம் எழுதியிருக்கவே வேண்டாம்னு வேற. அந்தப் படத்தை சொன்னாங்களா... இந்தப் படத்தை மட்டும் சொல்றாங்களேன்னு கேள்விகள். நாளைக்கு கல்மாடி மேல விசாரணை வெச்சா, அவரும் 'ராசாவைக் கேட்டிங்களா? லாலுவைக் கேட்டிங்களா? என்னை மட்டும் கேக்கறீங்களே'ன்னு சொல்லிட்டு போயிட்டே இருக்கலாம். என்னுடைய பார்வையில்:

1. இவ்வளவு கோடி பணத்தைப் போட்டு மீண்டும் ஒரு காதல் கதைன்னு எடுக்காம, இன்னும் தெம்பாவே பண்ணியிருக்கலாம்.
2. 'ஆர்டிஃபீசியல் இண்டெலிஜன்ஸ்' - கான்செப்ட் ரொம்பவே டைல்யூட் ஆயிடுச்சு.
3. ஒரு ப்ரோடோடைப், மாஸ் ப்ரொடக்சன்க்கு போகணும்னா ஒரு க்ரிடிகல் வால்யூம் வேணும். அது எதுவுமே இல்லாம செல் மாதிரி இரட்டிப்பாகி நூற்றுக்கணக்கா பல்கிப் பெருகறது.....ஹ்ம்ம்ம்...
4. இந்த மாதிரி ப்ராஜெக்ட் எல்லாம் ஒரு ஆராய்ச்சி நிறுவனம் ஃபண்ட் பண்ணி நடக்கறது. ஆனா, என்னமோ தன் சொந்த சொத்து மாதிரி தனக்கு எதிரியா நினைக்கிற ரோபோவை வெட்டி(!!!) பெருங்குடி குப்பை மேட்டுல போடறது...ம்ஹூம்ம்ம்...

சுஜாதா இருந்திருந்தார்னா இன்னும் பெட்டராயிருந்திருக்குமோன்னு சில கருத்துகள். ஆனா அவர் இருந்தபோது, அவரைப் பக்கத்துல வெச்சுக்கிட்டே, அவரே எழுதின "விக்ரம்" கதையை நாறடிச்சாங்க. அந்தப் படத்துக்கு கமல் வேற. சரி.... போதும்.

"காதல் அணுக்கள்" பாடல். ஒரு சந்தேகம். "செந்தேனில் வஸாபி...." வஸாபி ஒரு ஜப்பானிய கிழங்கு. மொளகா மாதிரி காரம். அதைத் தேனில் ஊறப்போட்டா ரெண்டுமே சகிக்குமான்னு தெரியல. ஒரு வேளை "செந்தேளன்ன வஸாபி..."யா இருக்குமோ? அம்மிணி கண்ணு அவ்வளவு ஷார்ப்பா?

நண்பர் ஃபேஸ்புக்ல எழுதியிருந்தார். "முதல் டெஸ்ட் மேட்ச் கடைசி ஓவர்கள்ல விவிஎஸ்ஸை கொஞ்சம் 'கன்னிங் லிப் ரீடிங்' பண்ணினேன். ஓஜாவை திட்ற மாதிரி இருந்தது"ன்னு. இப்பிடி ஒரு லிப் ரீடிங் தேவையான்னு கமெண்ட். அதுக்கு அவர் சொன்ன பதில் டாப். "அவனவன் இதழ்ல கதையே எழுதறான். படிக்கலைன்னா கோச்சுக்க மாட்டானா?". நன்றி ஸ்ரீஜி.

காமன்வெல்த் விளையாட்டு. அந்த ஊழல் சந்தி சிரிச்சாச்சு. 70000 கோடியாம். எத்தனை சைபர்னு எண்ணும்போதே கொட்டாவி வருது. அட... வீட்டுக்கு கட்டிக்கிட்டு போங்கப்பா. அதையெல்லாம் நாங்க ஒண்ணுமே சொல்ல முடியாது; வெறுமனே வேடிக்கை பாத்துட்டு, பஸ்லயும், ஃபேஸ்புக்லயும், ட்விட்டர்லயும் பேசி பொழுது போக்கிப்போம். போட்ட பட்ஜெட்ல உள்ளூர் விளையாட்டு வீரர்களையும் கொஞ்சம் கவனிச்சு நல்ல பயிற்சி குடுத்திருக்கலாமே. குமுதம்களும், விகடன்களும் வசதியில்லாத எத்தனையோ விளையாட்டு வீரர்களைப் பத்தி எழுதியிருக்காங்க. அந்த அபாக்கியவான்களும் கண்ல தண்ணி வர கெஞ்சியிருக்காங்க. அவங்கள்லாம் கண்லயே படலயா? இவ்வளவு ஊழல் பண்ணியாச்சு. பயிற்சின்னு தனியா ஒரு பட்ஜெட் போட்டு அதுலயும் கொஞ்சம் ஏப்பம் விட்டிருந்தாலும் மிச்சமாவது அந்த பாவப்பட்ட ஜீவன்களுக்கு போயிருக்கும். என்ன செய்ய? மேரா பாரத் மஹான் !!

கொசுறு : ஃபேஸ்புக்கை "முகநூல்"னு தமிழ்ப்'படு'த்தறாங்க. அப்பிடிப் பாத்தா ட்விட்டரை "கீச்சான்"ன்னு மொழிபெயர்க்கலாமே. ட்விட்டை "கீச்"சுன்னும் ட்விட்டுகிறேன்கறதை "கீச்சுகிறேன்"ன்னும் சொல்லலாமே. சில அடிப்படை விதிகளின்படி பெயர்ச்சொற்களை மொழிபெயர்க்கக் கூடாது. அப்படியேதான் பாவிக்கணும்னு சொல்றாங்க. ஃபேஸ்புக், ட்விட்டர், கூகில் இதெல்லாம் ப்ராண்ட் பெயர்கள். அப்படியே இருக்கட்டுமே. (சிங்கையில் நமது பதிவர்கள் ப்ராண்டுக்கு "பொரிம்பு" என்ற அழகான பதத்தை உபயோகிக்கிறார்கள்)

Sunday, July 25, 2010

பா.கே.ப.இ.




போனவார சென்னைப் பயணத்தின்போது.........

பார்த்தது : போக்குவரத்து நெசவாளர்கள் (traffic weavers)னு கேள்விப்பட்டிருக்கேன். சென்னை இரண்டு சக்கர வாகன ஓட்டிகளோட சாகசங்களை நேர்ல பாத்தபோதுதான் புரிஞ்சது. ஊடுபாவு மாதிரி இங்க இருந்து அங்க... அங்க இருந்து இங்கன்னு... கிடைக்கிற சின்னச் சின்ன இடைவெளிகள்ல புகுந்து புகுந்து ஓட்டறதைப் பாக்கவே பயமா இருக்கு. அதுவும் முன்னால ஒரு பையன், பின்னால மனைவி (கைல குழந்தை) நடுவுல ஒரு பொண்ணுன்னு போறதைப் பாக்கும்போது.... நினைக்க சங்கடமா இருந்தாலும் 'நம்ம வண்டில வந்து இடிச்சு விழாம இருக்கணுமே; அனாவசிய சிக்கல்ல சிக்காம இருக்கணுமே'ங்கற சுயநல எண்ணம் வராம இல்லை. அலைபேசக் கூடாது, தலைக்கவசம் போடணும்னு எல்லாம் கரடியாக் கத்தறாங்க. (யாரும் கேக்கறதில்லைங்கறது வேற விஷயம்) இந்தமாதிரி ஏகப்பட்ட பேர் உக்காந்து போகக்கூடாதுன்னு ஒரு சட்டம் கிடையாதா?

கேட்டது : படம், எழுதியது, பாடியது.... எதுவும் தெரியல... ஆனா பாடல் வரிகள் நல்லா இருந்தது...

ஒரு கல்... ஒரு கண்ணாடி..
உடையாமல் மோதிக்கொண்டால் காதல்...

ஒரு சொல்... சில மௌனங்கள்...
பேசாமல் பேசிக்கொண்டால் காதல்....

நல்லா இருக்குல்ல?

படித்தது : மியான்மரின் இன்றைய நிலை. ராணுவ அதிகாரிகள், உள்ளூர் தாதாக்கள், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் - இந்த முக்கோண அமைப்பு செய்யும் அட்டுழியமும், செய்யும் ஊழலும், அள்ளும் பணமும்.... அடேங்கப்பா. விரல் விட்டு எண்ணக்கூடிய சிலர் மேலும் மேலும் அளவிட முடியாத செல்வத்தை திரட்டுவதும் நாட்டிலுள்ள மீதி 99% கடும் ஏழ்மையில் உழல்வதும்.... படிப்பவர் கண்ணில் ஒரு சொட்டு கன்ணீர் வரவில்லையென்றால்... ஒருவேளை இடிஅமீனுக்கு சொந்தக்காரராய் இருக்கலாம்.

இடித்தது : குமுதத்தில் ஞானி. இந்திய ரூபாய்க்கு கிடைத்துள்ள சின்னம் பற்றி. இந்தியைத் திணிக்கிறார்களாம். எப்பேர்ப்பட்ட ஆளாய் இருந்தாலும் இந்த தமிழுக்கு குரல் கொடுக்கிறேன்னு எதற்காவது எப்போதாவது ஜல்லியடிக்கிறார்கள். ஆங்கில சின்ன எழுத்து "r" பயன்படுத்தியிருக்கலாமே என்று ஆலோசனை வேறு. புதிய சின்னத்துக்கு இந்தியா முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான யோசனைகள் வரப்பெற்று, பல நிலைகளில் பரிசீலனைக்குப் பிறகு தேர்ந்த்தெடுக்கப்பட்டுள்ளது. இவரும் அனுப்பியிருக்கலாமே.

Monday, June 14, 2010

ரத்தமும் தக்காளித் தண்ணியும்......

வடிவேல் காமெடி மாதிரிதான் இருக்கு. ஆனா வேதனை.......

1984 போபால் விஷவாயு கசிவுக்கு காரணமான யூனியன் கார்பைடு நிறுவனத்து மேல போட்ட வழக்குல ஒரு வழியா 26 வருஷத்துக்கு அப்பறம் தீர்ப்பு வந்தாச்சு. அவ்வளவு பெரிய பேரிடர். அன்னிக்கு ராத்திரி மட்டுமே 2500 உயிரிழப்பு. அதுக்கு அப்பறமா இந்த 25 வருஷத்துல சாவுகள், உடல் குறைபாடுகள், பிறவிக் குறைபாடுகள், குடிதண்ணீர் மாசு, நிலத்தடி நீர் மாசுன்னு இன்னிக்கு வரைக்கும் அதோட தாக்கம் தொடர்ந்து இருக்கு. இன்னும் எத்தனை உயிர்களை காவு வாங்குமோ தெரியாது.

2010. மெக்சிகோ வளைகுடால ப்ரிடிஷ் பெட்ரோலியம் கம்பெனியோட ஆழ்கடல் எண்ணை கிணறு. 10000 அடி கீழ குழாய் உடைஞ்சு ஒரு நாளைக்கு 40000 பீப்பாய் அளவுக்கு எண்ணைக் கசிவு. 2 மாசம் ஆச்சு. ஆயிரக்கணக்கான சதுரமைல் பரப்புக்கு கடல் மேல எண்ணை மிதக்குது. தண்ணிப் பரப்புக்கு கீழ இருக்கறது இன்னும் கணக்குல எடுத்துக்கல. எடுத்துக்க முடியல. கண்க்கில்லாத கடல் உயிரினங்கள், பறவைகளுக்கு பாதிப்பு. பரவிப் பரவி இப்ப கடற்கரைகளையும் தொட்டாச்சு. சுற்றுச் சூழல் பாதிப்பு, குடிதண்ணீர் பாதிப்பு, காத்துல எண்ணை வீச்சம், கடல்லயே பாதி எண்ணையை எரிக்கறதுல வர புகை, கடலோட மேல்பரப்பு சூடாகுதல்னு அழிவுகள் தொடருது. இன்னிக்கு வரைக்கும் உடைஞ்ச குழாயை முழுசா அடைக்க முடியல. எடுத்த சில முயற்சிகளும் தோல்வி. உலகமே உன்னிப்பா கவனிச்சுக்கிட்டு இருக்கு.

முதல் கொஞ்ச நாளைக்கு நான் இல்லை அவன், நானும் இல்லை இவன்னு ஜல்லியடிச்சுக்கிட்டிருந்தாங்க. ஆனா இந்த எண்ணைக்கசிவுனால ஆன இழப்புகளுக்கு ஒவ்வொரு பைசாவையும் ப்ரிடிஷ் பெட்ரோலியம் கம்பெனி திருப்பியே ஆகணும்னு ஒபாமா கண்டிப்பா சொல்லிட்டாரு. பல பில்லியன் டாலர்கள். இதுல நீக்குப்போக்குக்கு இடமே இல்லைன்னு சொல்லிட்டாரு. நல்ல விஷயந்தான். இது மாதிரி அழிவுகளுக்கு காரணமானவங்க எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும், எவ்வளவு பெரிய நிறுவனமா இருந்தாலும் விடவே கூடாது. முழுப் பொறுப்பையும் சுமந்தே தீரணும். ஒபாமான்னா சும்மாவா?

ஆனா அதே பெருந்தகையாளர் ஒபாமா போபால் விஷவாயு கசிவு இந்தியாவின் உள்நாட்டு ப்ரச்னைன்னு சொல்றாரு. எவ்வளவோ அழுத்தம் குடுத்து யூனியன் கார்பைடு முதலாளிகளுக்கு வெறும் 2500$ அபராதம், 2 வருஷம் சிறை, அதுலயும் அப்பீலுக்கு இடம் இருக்கு. சும்மா உலுலாயிக்கு. இதைப் பத்தி ஒபாமா வாயே திறக்கலியே. ஏன்னா எண்ணை கசிவு அமெரிக்காவுல. விஷவாயு கசிவு இந்தியாவுல. ரெண்டுமே பேரிடர்தான். பெரிய இழப்புகள்தான். மாற்றுக்கருத்தே கிடையாது. ஆனா ஒபாமாவுக்கு.... ஒரு கண்ணுல வெண்ணை இன்னொரு கண்ணுல சுண்ணாம்பு.

அமெரிக்காவுக்கு வந்தா அது ரத்தம். அதுவே இந்தியாவுக்கு வந்தா வெறும் தக்காளித்தண்ணி. ஹ்ம்ம்ம்ம்......

Saturday, May 22, 2010

க்ரீஸ்..... கிறீச்.... கிறீச்.....


அடுத்த பொருளாதார நெருக்கடி வந்தாச்சு. நாம எல்லாம் ஆஹா ஓஹோ அட்டகாசம்னு நினைச்சுக்கிட்டு இருக்கற ஐரொப்பிய யூனியன்ல இருக்கற க்ரீஸ் (Greece) நாட்டோட பொருளாதார இயந்திரம் இப்ப கிரீஸ் இல்லாம கிறீச்... கிறீச்சுன்னு கதறுது. நாரசமா இருக்கு சத்தம். என்னதான் ஆச்சு? சிம்பிளா சொன்னா வரவு எட்டணா செலவு பத்தணா. அதோட விளைவு. இது எல்லா நாட்டுலயும் நடக்கறதுதானே? நம்ம இந்திய பட்ஜெட்லயெல்லாம் சாதாரண துண்டா விழுகுது? ஈரோடு ஸ்பெஷல் ஜமுக்காளமே இல்ல விழுகுது. அங்க மட்டும் என்ன ஆச்சு? (போச்சுடா... எங்கயாவது பொருளாதார சரிவுன்னா இவன் ஆரம்பிச்சுடுவானேன்னு நீங்க முனகறது கேக்குது. அதைப்பத்தி எனக்கு கவலை இல்லை... எழுதி உங்களை குழப்பியே ஆகணும்)

மொத காரணம் போன வருஷம் க்ரீஸ் நாட்டோட கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தி (Gross Domestic Product - GDP) யில் 13%க்கு மேல. ரொம்ப ஒண்ணும் அதிகமில்ல ஜென்டில்மென்... ஜஸ்ட் 400 பில்லியன் டாலர்கள் மட்டுந்தான். சரி அதனால? அதனால என்ன.... அதிக வட்டி, அதிக தவணை, இன்னும் அதிக கடன், அதிக அவநம்பிக்கை. க்ரெடிட் ரேட்டிங் குறைவு. அனுமானிச்சதை விட பட்ஜெட் பற்றாக்குறை ரெண்டு பங்கு. அவ்வளவுதான். யாரும் முதலீடு செய்ய தயாரில்லை. ஐரோப்பிய யூனியனுடைய தலையீடு, க்ரிஸ் எடுத்த செலவு கட்டுப்பாடு மற்றும் சிக்கன நடவடிக்கைகள் எல்லாம் முதலீட்டளர்கள் கிட்ட நம்பிக்கையை உண்டாக்கலை. கொஞ்சம் ஊதாரித்தனமான செலவுக் கொள்கைகள். உதாரணத்துக்கு, அரசு ஊழியர்கள் 40 வயசுலயே ஓய்வு பெறலாம். அவ்ஙளுக்கு ஏதாவது ஆச்சுன்னா அவங்க மனைவி அல்லது மணமாகாத பிள்ளைகள்/பெண்கள் இவங்க அந்த ஓய்வூதியத்தை தொடர்ந்து வாங்கிக்கலாம். இன்னும் மத்த ஐரோப்பிய நாடுகள்ல இல்லாத அதிகப்படியான சலுகைகள். எப்பிடி சமாளிக்க முடியும்?

இப்ப சர்வதேச நிதியும், யூனியனும் சேர்ந்து பணத்தைக் கொட்டி மீட்கறோம்னு சொல்றாங்க. யூனியன்ல 15க்கு மேல நாடுகள் இருக்கு. "நான் இங்க ராப்பகலா உழைக்கிறேன். எவனோ அளவுக்கு அதிகமா செலவு பண்ணி போண்டியானதுக்கு என் நாடு ஏன் பணம் குடுத்து அந்த அழுகிப் போன கடன்களை வாங்கி வெச்சுக்கணும்? தலையெழுத்தா?"னு கேக்கறாங்க. நியாயந்தானே.

ஐரொப்பிய யூனியன்ல சேரறதுக்கு உண்டான தகுதிகளை காமிச்சு யூனியன் சேர்ந்த எல்லா நாடுகளும், பொருளாதாரத்தைப் பொறுத்தவரையில பல கட்டுப்பாடுகளையும் விதிகளையும் அனுசரிக்கணும். ஒவ்வொரு பட்ஜெட்லயும் இவ்வளவு உற்பத்தி, இவ்வளவு செலவு, இவ்வளவு முன்னேற்ற இலக்குன்னு காமிக்கணும். இந்த இலக்கு யூனியனோட மொத்த பட்ஜெட்டோட ஒத்துப் போகணும். இப்பிடியெல்லாம் இருந்தும் ஏன் இந்த மாதிரி சரிவுகள்?

ஐரொப்பிய யூனியனில் 27 நாடுகள் இப்ப இருந்தாலும் 16 நாடுகள்தான் "யூரோ"வுக்கு மாறியவை. இந்த 16 சேர்ந்தது Euro Zone. பொதுவான நிர்வாகம் ஒரு மையத்துல இருந்தாலும் , "யூரோ"வைப் பொறுத்தவரை, அது ஒரு கரன்ஸி அடிப்படையிலான யூனியன் (monetary union). அரசியல் அடிப்படையிலோ அல்லது முழுமையான பொருளாதார யூனியனோ அல்ல. பொருளாதார அடிப்படையில் சில கட்டுப்பெட்டியான நாடுகளும் உண்டு சில ஊதாரி நாடுகளும் உண்டு. கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் ஆகியும் இன்னமும் முதிர்வடையாத கரன்ஸி யூரோ. உள்நாட்டு உற்பத்தி, செலவு வகைகள், சேமிப்பு வழிகள், பல்முனை வளர்ச்சி என்று எல்லா வகையிலும் வேறுபட்ட நாடுகள்.

இப்படியான ஒரு கூட்டமைப்பில், கரன்ஸி மட்டும் ஒன்றே என்ற நிலையில் போட்டித்தன்மையை (competitive edge) தக்கவைத்துக் கொள்வது கொஞ்சம் கடினமே. முன்பு இருந்த நிலையை விட ஏற்றுமதிகள் குறையலாம். உதாரணத்திற்கு, இத்தாலி தானியங்கி வாகன வடிவமைப்பு மற்றும் உற்பத்தியில் முன்னணியில் உள்ள நாடு. இருந்தாலும் யூரோ அடிப்படையில், ஜெர்மனி உற்பத்தி ஆகும் வாகனத்துடன் ஒப்பிடும்போது விலையில் போட்டித்தன்மை குறையும்போது, அந்த விலை வேறுபாடு கூட வாகனத்தை விற்பனையிடத்திற்கு கொண்டு சேர்க்கும் போக்குவரத்துக் கட்டணத்தில் அடிபட்டுப் போகும் எனும்போது ஏற்றுமதி பாதிக்கப்படுகிறது. கரன்ஸி ஒன்றாகும்போதிலிருந்தே, வருமான குறைபாடுகளை எதிர்பார்த்து செலவினங்களையும் மாற்றியமைப்பது கட்டாயம் என்ற நிலையையும் ஏற்படுத்தியிருக்க வேண்டும். அன்னியச் செலாவணி ஏற்றத்தாழ்வுகளை சமாளிக்கும் வேலை குறைவு, சுலபமான வியாபாரம் போன்றவைகளைக் கருத்தில் கொண்டு சில ஆண்டுகளுக்குப் பிறகு என்ன மாதிரியான விளைவுகள் இருக்கலாம், எப்படி சமாளிப்பது போன்றவற்றை பின்னுக்குத் தள்ளி வைத்தனர். போகப் போக சரியாகும் என்ற அனுமானங்களும் இருந்தன. இப்போது சர்வதேச நிதியமும், யூனியனும் சேர்ந்து க்ரீஸின் கடன்களை வாங்கி 1 ட்ரில்லியன் டாலர் அளவுக்கு பணத்தைக் கொட்டினாலும் மட்டும் உடனே எல்லாம் சரியாகி விடப் போவதில்லை. க்ரீஸ் தனது செலவினங்களை இறுக்கிப் பிடிக்க வேண்டும். மக்கள் அதிக கட்டுப்பாடுகள், வரிவிதிப்புகள், வங்கி கெடுபிடிகள் எல்லாம் இருக்கும். மக்களோட வாழ்க்கை முறையே மாறலாம். ரொம்ப சிரமமாத்தான் இருக்கும்.

க்ரீஸ்க்கு பின்னால் போர்ச்சுகல், இத்தாலி, ஸ்பெயின் என்று சரிவுகள் வரிசை கட்டி நிற்கின்றன. ஸ்பெயினும் இத்தாலியும் கூட சமாளித்து விடும். ஆனால் போர்ச்சுகல் சவாலாக இருக்கும்.

இது இப்பிடியேதான் இருக்குமா? நிலையான வழி எதுவும் இல்லையா? க்ரீஸ்க்கு தனியான கரன்ஸி இருந்தா அதை மதிப்பு குறைச்சு போட்டித்தன்மையை கொண்டுவர முடியும். ஆனா யூரோவுல இருந்து வெளியில வர அரசியல் உறுதி வேணும். அது இப்போதைக்கு இன்னும் கடினமா இருக்கலாம் ஆனா நீண்டகால தீர்வு அதுவாத்தான் இருக்க முடியும்.

மக்கள் ஒப்புதலோடதான் யூரோவுக்கு வந்தோம்னு சொல்லலாம். ஆனா பின்னணி அரசியல் விளையாட்டுகள் ரொம்ப. கரன்ஸியை வெச்சுதான் இன்னிக்கு சர்வதேச அளவுல போட்டித்தன்மையை தக்க வெச்சுக்க முடியும். இல்லைன்னா அமெரிக்கா சைனா கிட்டப் போய் யுவான்-டாலர் மதிப்பை சரி பண்ணச் சொல்லி ப்ரஷர் குடுப்பாங்களா?

1999ல அர்ஜென்டினால இதே மாதிரி நிலைமை வந்து 3 வருஷம் ஆச்சு நிமிர்ந்து உட்கார. அப்ப பெசொவைத் தவிர இன்னொரு கரன்ஸியை உருவாக்கி உள்நாட்டு புழக்கத்துக்காக விட்டு, பெசோவை டாலருக்கு எதிரா குறைச்சு ஏற்றுமதியை அதிகரிச்சு, இறக்குமதிகளை தடை பண்ணி, வங்கிகள்ல இருந்த டாலரை எல்லாம் பெசோவா மாத்தின்னு தலைகீழா நின்னு தண்ணி குடிச்சு ஒருவழியா மேல வந்தது. பார்க்கலாம் க்ரீஸ் என்ன ஆகுதுன்னு. இப்போதைக்கு நம்ம நாட்டு பங்கு மார்க்கெட் ரொம்ப விழாம இருக்கணும்னு வேண்டிக்கிட்டு இருக்க வேண்டியதுதான்.