Wednesday, May 18, 2011

யூ டூ யூரோ?


போர்ச்சுகல். உலக வரைபடத்தை உருவாக்குவதற்கு மிகவும் உதவிய நாடு. கிட்டத்தட்ட 6 நூற்றாண்டுகள் உலகின் பல்வேறு பகுதிகளை ஆண்ட நாடு. கடைசியாக (90களின் பிற்பகுதியில்) இடத்தைக் காலி செய்தது மக்காவ் (சைனா) என்று நினைக்கிறேன். "ஐரோப்பிய பொருளாதார யூனியன்" (European Economic Zone) என்று பேச ஆரம்பித்த காலத்திலிருந்து யூனியனில் இருந்து வரும் நாடு. பொருளாதாரத்தில், வாழ்க்கைத்தரத்தில் முன்னேறிய, மனித வளம் மிக்க, அமைதியான நாடு.

ஆனால் இதெல்லாம் இன்று "பொய்யாய்... பழங்கதையாய்..." போய், கிரீஸ், அயர்லாந்துக்கு அடுத்ததாக பொருளாதாரத்தில் அதல பாதாளத்தில் வீழ்ந்து தவிக்கிறது. வீழ்ச்சி என்றால் சாதாரண வீழ்ச்சி இல்லை. மொத்த உள்நாட்டு உற்பத்தியைப் போல 225% கடன். தற்போதைய நிலையை சமாளிக்க ஏறத்தாழ 80 பில்லியன் யூரோ தேவைப்படலாம். சென்ற மாதத்தில்உலக வங்கியும், யூனியனும் கடன் ஒப்பந்தங்கள் செய்துள்ளன. போர்ச்சுகலும் தன் பங்குக்கு செலவினங்களை அடியோடு குறைத்தாக வேண்டும். ஒரு யூரோவிற்கு நூறு காசுகள் என்று ஒவ்வொரு யூரோவின் மதிப்பையும் உணர வேண்டும்.

ஆனால், இப்படியே எவ்வளவு காலத்திற்கு ஒவ்வொரு ஐரோப்பிய நாட்டின் பொருளாதார பிரச்னைகளை சமாளிக்க முடியும்? சென்ற வருடம் கிரீஸ் வீழ்ச்சியின்போதே இந்தக் கேள்வி எழுந்தது. (இது பற்றிய முந்தைய இடுகை) இந்த வீழ்ச்சிகளின் காரணம் "யூரோ"தானா? கிடையவே கிடையாது.... இருக்கலாம்.... வேறென்ன... என்று பல சித்தாந்தங்கள் கிளம்பின. ஆனால் பொதுவான பொருளாதார விதிகள், நாணய மதிப்பு மற்றும் நாணயமாற்று முறைகள், முதலீடுகள் என்றெல்லாம் பார்க்கும்போது, ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு போட்டித்தன்மை என்பது மிக முக்கியமான ஒன்று. மனிதவளம், உள்நாட்டு உற்பத்தி இவற்றுடன் கூட சர்வதேச சந்தை பொருளாதாரத்தில் நாணயமாற்று இன்றியமையாத ஒன்று.

சீனாவின் நாணயமாற்று கொள்கையில் குற்றம் கண்டுபிடித்தவர்கள் பலர். ஆனால் இன்று குறைந்த முதலீடு ; கூடுதல் உற்பத்தி ; மிகக்குறைந்த விலை ; மிகப்பெரிய சந்தை என்று வேறு எந்த நாட்டைச் சொல்ல முடியும்? அமெரிக்க கருவூல செயலர்கள் சீனாவுக்கு நேரில் சென்று நாணயமாற்று விகிதங்களை சிறிதளவாவது தளர்த்தக் கோருமளவுக்கு போட்டித்தன்மையை தக்க வைத்துக்கொண்டுள்ளது. அதே சமயம் நாணயச் சந்தையில் நேரடியாகத் தலையிட்டு 'யுவான்' மதிப்பை ஏற்றத் தாழ்வுகளில் இருந்து பாதுகாக்க, நாணயச்சந்தைக்கென ஒரு தனி பண முறையைக் கொண்டு வந்து அதிலும் தன் போட்டித்தன்மையை வளர்க்கிறது.

ஒருங்கிணந்த ஐரோப்பிய பொருளாதாரம் என்ற கனவை நனவாக்கி சாதனை படைத்தாலும், கொஞ்சம் அவசரப்பட்டு விட்டோமோ என்ற எண்ணம் இப்போது வலுப்பெற ஆரம்பித்திருக்கிறது. சீனாவைப் போல வேறு ஒரு மாற்று நாணய முறை வரும் சாத்தியக் கூறுகளும் உள்ளன. ஒரு நேர்மையான, பாரபட்சமில்லாத பொருளாதார அழுத்த சோதனைகள் (economic stress tests) மூலம் யூனியனுக்குள் இருக்கும் நாடுகளை வகைப்படுத்தி ஒரு 'மென் யூரோ' (soft euro) அறிமுகப்படுத்தப்படலாம். நாடுகள் இந்த மாற்று நாணயத்தை கையாண்டு தங்கள் போட்டித்தன்மையைத் தக்கவைத்துக் கொள்ள ஒரு வாய்ப்பு இருக்கிறது. காத்திருந்து பார்க்க வேண்டும்.

இப்போது போர்ச்சுகலுக்குப் பிறகு அடுத்த நெருக்கடி இத்தாலியில். அதன் அளவு 1 டிரில்லியன் யூரோ அளவுக்கு இருக்கலாம் என்ற அனுமானங்கள் மிகுந்த கலக்கத்தை ஏற்படுத்துகின்றன. எத்தனை காலம் ஜெர்மனி இந்த சரிவுகளை தாங்க முன்வரும் என்பது கேள்விக்குறி. வரி செலுத்தும் சாமானியன் அரசாங்கத்தை எதிர்க் கேள்வி கேட்கும் காலம் தொலைவில் இல்லை.

இரண்டு உலகப் போர்களின் தொடக்கமும் ஜெர்மனி. இன்று உலக பொருளாதார சரிவை தாங்குவதிலும் பெரும்பங்கு வகிப்பது ஜெர்மனி.


5 பேர் என்ன நெனைக்கிறாங்கன்னா..:

Thamira said...

கட்டுரை ரொம்ப பெரிய ஒலக விசயமா இருக்குதுங்கோ.. நன்றி.

(ஆமா.. கடையில ஒத்த நாதியக்காணோமே.. பயம்மா இருக்கு :-)))

Raghu Sesh said...

Very good article. Nicely scripted. Good read articles in Tamil :)

மங்களூர் சிவா said...

/
வரி செலுத்தும் சாமானியன் அரசாங்கத்தை எதிர்க் கேள்வி கேட்கும் காலம் தொலைவில் இல்லை.
/

ம்

அறிவிலி said...

ஊருக்கு போயிட்டு வந்த்துலேருந்து ஒரு 20 யூரோ தங்கிப் போச்சு...

ஹ்ம்ம்ம்ம்... போற போக்க பாத்தா, ஹர்ஷத் மேத்தா பீரியட்ல வாங்கின ஷேர் மாதிரி வெத்து பேப்பரா மாறிரும் போல இருக்கே...

பழமைபேசி said...

மகேசு அண்ணே... நான் மெம்பிசுக்கு குடி போயிட்டனுங்க