சமீபத்துல ஐ.நா. சபைக்கு ஒரு விசிட் போய்ட்டு வந்ததுல இருந்து இது மாதிரி ஒரு அமைப்பு இருந்தும் பெரிய அளவுல ப்ரச்னைகளுக்கு ஒரு தீர்வு கிடைக்கறதில்லையேன்னு யோசனையா இருந்துது. அப்பத்தான் யதேச்சையா ரெண்டு நாளைக்கு முந்தி ஃபினான்சியல் டைம்ஸ் பத்திரிக்கைல கிடியன் ரஷ்மான் (Gideon Rachman) எழுதின ஆர்டிகில் படிச்சேன். (இவுரு எழுதறது எல்லாம் நல்லா இருக்கும். சுருக்கமா, நிறைவா எழுதுவாரு.) உலக அரசு அமைவதற்கான வாய்ப்புகள் பற்றி எழுதியிருந்தாரு. அதை ஒட்டிய பதிவு இது.
ஒரு "உலக அரசு" (world governance)ங்கறது உலகத்தின பல்வேறு நாடுகளுக்கிடையேயான கூட்டுறவை அடிப்படையாக் கொண்டது. அதுவும் ஒரு தனி அமைப்பா, அதுக்குன்னு சில சட்ட திட்டங்களோட இருக்கும். இப்ப ஐரொப்பிய யூனியனை எடுத்துக்காட்டா எடுத்துக்கலாம். 27 நாடுகள் சேந்து இருக்கற ஒர் அமைப்பு. இதையே ஒரு மாடலா வெச்சுக்கலாம். அவங்களுக்குன்னு ஒரு கரன்ஸி, பல ஆயிரம் பக்கங்கள் உள்ள சட்டபுத்தகம், ஒரு சிவில் சர்வீஸ் அமைப்பு, ராணுவம்னு எல்லாம் இருக்கு. ஒரு கண்டத்தின் அளவுல இதை செய்ய முடிஞ்சா உலக அளவுலயும் செய்ய முடியணும். சாத்தியமா?
சாத்தியம்னுதான் தோணுது. முதலாவதா, இன்னிக்கு நாம சந்திக்கிற பல ப்ரச்னைகள் உலகத்துக்கே பொதுவானதாத்தான் இருக்கு. இப்ப இருக்கற பொருளாதார சுருக்கம், ஒசோன் படல இழப்பு, சுற்றுசூழல் ப்ரச்னைகள், உலகம் சூடாகுதல், உலக தீவிரவாதம்... இதெல்லாம். இதுக்கு எல்லா நாடுகளும் கூட்டுப் பொறுப்பு. இவுங்கனாலதான் ஆச்சு, அவுங்கனாலதான் ஆச்சுன்னு சொல்லீட்டு போய்ட்டடே இருக்க முடியாது.
ரெண்டாவது இன்னிக்கு தொலைதொடர்பும், போக்குவரத்தும் முன்னேற்றம் அடைஞ்சு எல்லா நாடுகளுக்கும் இடையே உள்ள இடைவெளியை ரொம்பவே குறைச்சுடுச்சு. நீரால் சூழப்பட்ட நாடுங்கற புவியியல் காரணம் ஒண்ணைத் தவிர யாரும் இப்ப தீவு கிடையாது. ஆஸ்திரேலிய வரலாற்றாசிரியர் ஜ்யொஃப்ரி ப்லைனி சொன்ன மாதிரி, மனிதகுல வரலாற்றுல முதல் முறையா ஒரு உலக அரசு அமைகிற வாய்ப்பு வந்திருக்கு. உடனே இல்லாட்டாலும் அடுத்த இரண்டு நூற்றாண்டுகளுக்குள்ளாவது வரலாம்கறாரு.
மூணாவதா, முக்கியமா இந்த பொருளாதார மற்றூம் சுற்றுசூழல் ப்ரச்னைகள்ல பல நாடுகள் - சைனா, அமெரிக்கா உள்பட - ஒரு உலக அளவிலான வழிமுறைகள் உருவாக்கப்படணும்னு உரக்கச் சொல்ல ஆரம்பிச்சுருக்காங்க. இது ஒரு நல்ல சிக்னல். இன்னுங்கூட சீக்கிரமாவே உலக அரசு அமைய சாத்தியக்கூறுகள் உருவாகலாம்.
இப்ப ஒபாமா கூட ஐ.நா. சபைக்கு அதையும் ஒரு நாடுங்கற உயர்ந்த மதிப்புக் குடுத்து, சூசன் ரைஸை ஐ.நா. தூதர்னு நியமிச்சு, கேபினட்ல ஒரு இடமும் குடுத்துருக்காரு. அவரோட புத்தகமான Audacity of Hope ல கூட "உலக வல்லரசு நாடு ஒண்ணு, சர்வதேச ஒழுங்குமுறைகளுக்கு தானாகவே முன்வந்து கட்டுப்படுதுன்னா, அந்த ஒழுங்குமுறைகளோட மதிப்பு என்னங்கறதை எல்லா நாடுகளும் உணரணும்"னு எழுதியிருக்காரு. (இராக், ஆப்கானிஸ்தான் நாடுகள்ள அமெரிக்கா செஞ்சது இந்த ஒழுங்குமுறைகளுக்கு உள்ள வராதான்னு கேட்டவங்களுக்கு இன்னி வரைக்கும் பதில் இல்லை)
அமெரிக்காவுல "உலக பாதுகாப்பின்மை மேலாண்மை" (Managing Global Insecurity) திட்டத்துல சில அம்சங்கள் - தீவிரவாதத்துக்கு எதிரா ஒரு ஐ.நா. கமிஷனரை நியமிக்கலாம், தட்பவெப்பத்தை பாதுக்காக்க ஒரு உலக அளவிலான ஒப்பந்தம் போடலாம், குறைந்தது 50000 பேர் கொண்ட ஒரு உலக ராணுவத்தை அமைக்கலாம். ஆனா இதுக்கெல்லாம் உலகத்துல இருக்கற ஒவ்வொரு நாடும் பொறுப்பு ஏத்துக்கணும். ஏன்னா இது ஒரு "உலக அரசு"ங்கற ஒரு பொதுவான அமைப்பு. உலக அரசாங்கம் கிடையாது.
ஐரோப்பிய தலைவர்கள் சிலர் கொஞ்சம் எதிர்மறையாவும் பேசறாங்க. ஃப்ரான்ஸ் அதிபர் சர்கோஸியோட ஆலோசகர்கள்ல ஒருத்தரான ஜாக் அத்தாலி (Jaques Attali) என்ன சொல்றார்னா "உலக பொருளாதாரப் ப்ரச்னைக்குக் காரணம் இப்ப சந்தை உலகமயமானதுதான். ஆனா நமக்கு உலக அளவுல சட்டதிட்டங்கள்னு ஒண்ணும் கிடையாது. அதுனால இப்போதைக்கு உலக அரசுங்கறது சாத்தியமில்லாத ஒண்ணு". சரியான வாதம்தான்.
இருந்தாலும், குகைல படம் போட்டு நாம வாழ ஆரம்பிச்சதுல இருந்து, உலக அரசு அமையவும், அதுக்கான முனைப்புகள் எடுக்கவும் இப்ப வாய்ப்புகள், நேரம் காலமெல்லாம் கூடி வந்துட்டுருக்குங்கறது தெரிய ஆரம்பிச்சுருக்கு. ஸ்டார்டிங் டிரபில்கள் இருந்தாலும், கொஞ்சம் மெதுவா நகர ஆரம்பிச்சாலும், அங்கங்க சில வலிகளோட இலக்கு நோக்கிய பயணம் தொடங்கிடுச்சுன்னே சொல்லலாம்.
இதை நடைமுறைப்படுத்த திடமான எண்ணங்களும், மன உறுதியும் நம்ம அரசியல்வாதிகளுக்கு கண்டிப்பா வேணும். அவங்கள்லாம் "ஆஹா... உலகம் அழியுது... எதாவது பண்ணணுமே"ன்னு வெளியில துடிச்சாலும், உள்ளுக்குள்ள அவங்க நாட்டுல அவங்க சந்திக்க வேண்டிய அடுத்த தேர்தலைப் பத்தித்தான் கவலைப் படுவாங்க. இது ஒண்ணுதான் பெரிய தடைகல். இதை அப்புறப்படுத்த முடியுமா?
இன்னும் சில விஷயங்கள். இப்ப ஐரோப்பிய யூனியன்லயே பரிபூரண ஜனநாயகம்னு சொல்ல முடியாது. சில சமயங்கள்ல அடிமட்ட மக்களோட சம்மதத்தை எதிர்பார்த்தபோது தோல்விகள்தான் கிடைச்சுருக்கு. சில முக்கியமான முடிவுகள்லாம் கேபினட் மட்டத்துலயே முடிச்சு அமல்படுத்திட்டாங்க. ஒரு அரசு எல்லைகள் கட்ந்து பெருசா இருக்கும்போது சில சமயங்கள்ல அ-ஜனநாயகம் (சர்வாதிகாரம்னு சொல்ல முடியாது) எட்டிப் பாக்குது. இது தவிர்க்க முடியாதது.
இப்ப நாம பாக்கற ப்ரச்னைகள் உலகளாவியதா இருந்தாலும், ஒரு சாதாரண குடிமகனுக்கு அவனுடைய அரசியல் அடையாளம் அவனச் சுத்தி இருக்கற இம்மிடியட் உள்ளூர் ப்ரச்னைகதான். இந்த அடிப்படை எண்ணங்கள்ல பெரிய அளவுல மாற்றம் வந்தா உலக அரசு சாத்தியம்னு தோணுது. இல்லேன்னா ஒரு 20000 பக்க டாகுமெண்டா ஐ.நா. சபை லைப்ரரில பத்தோட பதினொண்ணா இதையும் பத்திரமா பெட்டில வெக்க வேண்டியதுதான். என்ன சொல்றீங்க?
18 பேர் என்ன நெனைக்கிறாங்கன்னா..:
// இல்லேன்னா ஒரு 20000 பக்க டாகுமெண்டா ஐ.நா. சபை லைப்ரரில பத்தோட பதினொண்ணா இதையும் பத்திரமா பெட்டில வெக்க வேண்டியதுதான். என்ன சொல்றீங்க? //
கண்டிப்பா அதான் நடக்கப் போகுது. சாத்தியமான்னு கேட்டா, சாத்தியம். நடக்குமான்னு கேட்டா, நடக்காது. ஏன்? மேல இருக்குறவன் கொஞ்சம் கீழ இறங்கி வரணும். அப்பத்தான் கீழ இருக்குறவன் மேல போக முடியும், அப்பத்தான் எல்லாரும் சம நிலையில இருக்க முடியும். இது நடக்கணுமின்னா, எல்லார்த்துகிட்டயும் சம பலம் இருக்கணும். அது சின்ன நாடுகளுக்கு சாத்தியம் இல்லை. இந்தியா மாதிரி நாடுகளுக்கு சாத்தியம். ஆனாலும், மேல இருக்குறவிங்களோட கடும் எதிர்ப்பை மீறித்தான் அது நடக்கணும். என்னங்க, பயங்கரவாதின்னு அறிவிச்ச, தனி மனுசனை இந்தியாவால இன்னும் கேட்டுப் பெற முடியலை. இதெல்லாம் நடக்குற வரையிலும், அது கோப்பாத் தூங்கிட்டுத்தான் இருக்கும். மத்தபடி பதிவு, அருமை!
ஜநா.வல்லரசுகளின் தலையாட்டியாக இருக்கும் வரை கஸ்டம் தான்
/*"ஆஹா... உலகம் அழியுது... எதாவது பண்ணணுமே"ன்னு வெளியில துடிச்சாலும், உள்ளுக்குள்ள அவங்க நாட்டுல அவங்க சந்திக்க வேண்டிய அடுத்த தேர்தலைப் பத்தித்தான் கவலைப் படுவாங்க*/
மிகச் சரியாக சொன்னீர்கள்
அருமையான கட்டுரை
அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி இதைப் பற்றி விரிவாவே சொல்லி இருக்காரு. எனக்கென்னவோ இது சாத்தியம்தான்னு தோனுது.
@ பழமைபேசி :
கரெக்டுங்க.... அடிப்படையா ஒரு நல்ல மனமாற்றம் வேணும். தனித்தனி நாடுகள இல்லாட்டாக் கூட இப்ப ஜி 20, சார்க், யூரோ மாதிரி பல கூட்டமைப்புகள் இருக்கறதால, அந்த கூட்டமைப்புகளோட ஃபெடரேஷன் மாதிரி ஒரு அபமிப்பு கொண்டு வரலாம்...முதல் படியா. அதுக்கு சாத்தியம் இருக்குனு நினைக்கிறேன்.
@ டொன் லீ :
மிகச் சரி. இப்ப இருக்கற நிலைமைல வாலாட்டறது கொஞ்சம் நிக்க சாத்தியங்கள் இருக்கு.
நன்றி நசரேயன்.....
அப்துல்லா அண்ணே... நீங்க மஹரிஷியோட Unified Force மற்றும அதனோட applications பற்றி சொன்னதை சொல்றீங்களா? அந்த கான்செப்ட் ரொம்பவே abstract ங்கறது என்னோட அபிப்ராயம். ஆனா அதன் படி இந்த மாதிரி உலகளாவிய பயன்கள் அதிகம்.
சாத்தியமா என்பதை விட தேவையா என்பது தான் கேள்வி...உலகம் தழுவிய கம்யூனிஸம்...எண்பதுகளில் நடந்த சோவியத் யூனியனின் அட்டூழியங்களுக்கு காரணம்...உலகமெங்கும் கிறிஸ்தவம்...சிலுவைப்போர்கள், காலனி ஆதிக்கத்திற்கு முக்கிய காரணம்...உலகமெங்கும் ஒரே மதம்..இப்பொழுது நடக்கும் பல குண்டு வெடிப்புகளுக்கு காரணம்...
உலகமெல்லாம் ஒரே அரசு என்றால் அதன் நோக்கம் என்ன? ஏற்றத்தாழ்வை ஒழிப்பதா? ஒரே அரசு அமைந்து விட்டால் ஆஃப்கனிஸ்தானும் அமெரிக்காவும் ஒன்றாகி விடுமா?
என்னைப் பொறுத்தவை, யூரோப்பியன் யூனியனே அசிங்கமாக இருக்கிறது..எங்கோ இங்கிலன்டில் நடக்கும் பிரச்சினைக்கு பெல்ஜியத்தில் இருந்து தலையிடுவது கடும் எரிச்சலையே கிளப்புகிறது...
சார்க் போன்றவை எல்லாம் டம்மி...இரண்டு நாள் ஃபோட்டோவுக்கு போஸ் கொடுப்பதை தவிர இவர்கள் செய்வது ஒன்றும் கிடையாது...வெட்டிச் செலவு..
இதில் உலக அரசு அமைந்து என்ன செய்வது?
வேற்றுமைகள் காக்கப்பட்டால்தான் அது உலகம். உலக அரசு என்ற பெயரில் அனைவரும் ஒரு மதத்திற்கு மாறச்சொல்வார்கள்.இந்தியாவை எடுத்துக்கொள்ளுங்கள், அனைத்து மொழிகளும் காக்கப்பட்டால்தான் அது இந்தியா.
@ அது சரி & குடுகுடுப்பை:
வருகைக்கு நன்றி.....
இந்த உலக அரசுங்கறதை நான் purely for administrative purposes என்றுதான் பர்க்கிறேன். இது ஒரு utopian concept ஆகவும் இருக்கலாம். இப்போது உள்ள ஐ.நா.வை விட இன்னும் கொஞ்சம் அதிகாரம் உள்ளதாக. மதம், உள்நாட்டு வேற்றுமைகளுக்கு அப்பாற்பட்டதாகதா இருந்தால் மட்டுமெ இது சாத்தியம். இல்லயென்றல் இது இன்னொரு உலகப் போரில் சென்று முடியக் கூடிய அபாயமும் இருக்கிறது.
இன்றைக்கு இங்கிலாந்துக்கு எரிச்சல் வருகிறது என்றால் யூனியன் இணைவதற்கு முன்னரே தெரியாதா? யூனியனின் காக்பிட் ப்ருசெல்ஸ் என்று நன்றாக உணர்ந்துதானே இணைந்தார்கள்? அதேபோல் தானே ஐநா வும்? யு கே இந்த யூனியனில் சேர்ந்த்தே ஒரு கேலிக்கூத்து. கூழுக்கும் ஆசை... மீசைக்கும் ஆசை என்ற நிலையில் சேர்ந்தது. ராணி மகாராணி என்றால் தனியாகவே இருந்திருக்கலாம்.
//தீவிரவாதத்துக்கு எதிரா ஒரு ஐ.நா. கமிஷனரை நியமிக்கலாம், //
மிச்சு..???
மிக நல்ல பதிவு தல.. ஆழ்ந்து படித்ததை.. அசால்ட்டா சொல்லிட்டீங்க!!
நன்றி நர்சிம்....
//தீவிரவாதத்துக்கு எதிரா ஒரு ஐ.நா. கமிஷனரை நியமிக்கலாம், //
....மிச்சு..???
...மிச்சு உடனடியா ஒண்ணும் பண்ண முடியாது. ஆனா ஐ நா மூலமா எவ்வளவோ நடந்துருக்கு. நடக்கும்னு நம்புவோம்.
//
Mahesh said...
@ அது சரி & குடுகுடுப்பை:
வருகைக்கு நன்றி.....
இந்த உலக அரசுங்கறதை நான் purely for administrative purposes என்றுதான் பர்க்கிறேன். இது ஒரு utopian concept ஆகவும் இருக்கலாம். இப்போது உள்ள ஐ.நா.வை விட இன்னும் கொஞ்சம் அதிகாரம் உள்ளதாக. மதம், உள்நாட்டு வேற்றுமைகளுக்கு அப்பாற்பட்டதாகதா இருந்தால் மட்டுமெ இது சாத்தியம். இல்லயென்றல் இது இன்னொரு உலகப் போரில் சென்று முடியக் கூடிய அபாயமும் இருக்கிறது.
//
மகேஷ் அண்ணா,
Administrative Purpose என்றால் அந்த அரசின் அதிகாரங்கள் என்ன? ஒரு நாடு அந்த உலக அரசின் அதிகாரத்தை ஏற்றுக் கொள்ளாவிட்டால் என்ன செய்வதாக உத்தேசம்? இப்பொழுது காவிரியில் கர்நாடகம் தண்ணீர் விட மறுக்கிறது..மத்திய அரசால் ஒன்றும் செய்ய முடியவில்லை...இதே போல் உலக அரசின் உத்தரவை மீறி இந்திய அரசு நடந்தால் என்ன செய்வீர்கள்? உலக நாடுகள் எல்லாம் இணைந்து இந்தியா மீது போரா?
இல்லை, அப்படி அதிகாரம் எல்லாம் இல்லை...இது வெறும் அறிவுரை சொல்லும் அரசாங்கம் என்றால், அந்த அதிகாரம் இல்லா அரசை எந்த நாடும் மதிக்கப் போவதில்லை...நான் சொன்னது போல் அது வெட்டி அரசாங்கம்!
//
இன்றைக்கு இங்கிலாந்துக்கு எரிச்சல் வருகிறது என்றால் யூனியன் இணைவதற்கு முன்னரே தெரியாதா? யூனியனின் காக்பிட் ப்ருசெல்ஸ் என்று நன்றாக உணர்ந்துதானே இணைந்தார்கள்? அதேபோல் தானே ஐநா வும்? யு கே இந்த யூனியனில் சேர்ந்த்தே ஒரு கேலிக்கூத்து. கூழுக்கும் ஆசை... மீசைக்கும் ஆசை என்ற நிலையில் சேர்ந்தது. ராணி மகாராணி என்றால் தனியாகவே இருந்திருக்கலாம்.
//
Blimey!
ஒரு உலக அரசின் தீங்க என்ன என்பதற்கு உங்கள் மறுமொழியில் நீங்களே விடை சொல்கிறீர்கள்!
யூரோப்பியன் யூனியனில் இணைவதற்கு பிரிட்டிஷ் மக்களுக்கும் விருப்பமில்லை, அரசுக்கும் விருப்பமில்லை.. ஆனாலும் இணைய காரணம், யூரோப்பியன் யூனியன் என்ற பெயரில் பல நாடுகள் ஒன்றிணைந்து ஏற்படுத்திய பொருளாதார, அரசியல், நடைமுறைச் சிக்கல்களே...வேறு வழியின்றியே பிரிட்டன் இணைந்தது...பிரிட்டன் விரும்பி இணையவில்லை..இப்பொழுதும் இருக்க விருப்பமில்லை...ஒரு வகையில் இது கட்டாயக் கல்யாணம்...நீங்கள் கட்டாய கல்யாணத்தை ஆதரிப்பவர் அல்ல என்று நம்புகிறேன்!
உலகின் பல நாடுகளை விட வலிமையான பிரிட்டனுக்கே இந்த நிலை என்றால், உலகில் இருக்கும் பல குட்டி நாடுகளை கொஞ்சம் நினைத்து பாருங்கள். பல நாடுகள் விருப்பமில்லா விட்டாலும், வேறு வழியின்றி இணைய நேரிடும்..இது தேவையா??
====
உங்களுக்கு எதிர்கருத்து சொல்ல வேண்டும் என்ற நோக்கமில்லை..ஆனால், வேறு வழியின்றி சொல்ல நேரிட்டது..மன்னிக்க!
//
குடுகுடுப்பை said...
வேற்றுமைகள் காக்கப்பட்டால்தான் அது உலகம். உலக அரசு என்ற பெயரில் அனைவரும் ஒரு மதத்திற்கு மாறச்சொல்வார்கள்.இந்தியாவை எடுத்துக்கொள்ளுங்கள், அனைத்து மொழிகளும் காக்கப்பட்டால்தான் அது இந்தியா.
//
இதை நான் அப்படியே வழிமொழிகிறேன்... நான் நாற்பது வரியில் சொல்வதை குடுகுடுப்பை நாலு வார்த்தையில் சொல்லி விடுகிறார்!
நீங்க அழகா பெரிசா ஒரு உலக அரசு வீடு கட்டினா எப்படியிருக்கும்ன்னு நினைக்கிறீங்க!
இப்ப இருக்குற ஐ.நா வீடே குப்பையும் கூழமா இருக்குது.அதை முதலில் பெருக்கி ,சுத்தம் பண்ணி பராமரிப்பு செஞ்சமுன்னா கொஞ்ச நாளைக்கு தங்குவதற்கு வசதியா இருக்கும்.அப்புறம் பெரிய வீடு பட்ஜெட் போடலாமே!
@ அது சரி:
என் கருத்து எதிர் கருத்துன்னேல்லாம் ஒன்ணும் இல்லீங்க..
வெட்டி அரசாங்கம்னு பாத்தா பஞ்சாயத்து ஆபீஸ்ல இருந்து ஐ நா வரைக்கும் எல்லாமே வெட்டிதான். எல்லாரும் இதுல எனக்கு என்ன லாபம்னுதான் கணக்குப் போட்டுக்கிட்டு இருக்காங்க.
எந்த அரசாங்கமும் உருப்படி இல்ல. அப்பறம் ஜனநாயகம் எதுக்கு? தேர்தல் எதுக்கு? எல்லாத்தயும் கலச்சுப் போட்டுறலாமே? என்னதான் சட்டம் போட்டாலும் போலீசுக இருந்தாலும் திருடறவன் திருடிக்கிட்டுதான் இருக்கான். இதெல்லாம் எதுக்கு வெட்டி கோர்ட்டு, போலீஸ் ஸ்டேசன்? இப்பிடி நீட்டிக்கிட்டே போலாம்.
அப்பறம் கட்டாயக் கல்யாணம். நிச்சயமா அதுல எனக்கு ஒப்புதல் இல்ல. ஆனா அதுக்காக எல்லாரும் சொல்றாங்களேன்னு போய் கல்யாணம் பண்ணிக்கிடற முட்டாளும் இல்ல... பண்ணிக்கிட்டு குத்துதே கொடயுதேன்னு புலம்புறது அத விட முட்டாள்தனம்.
யூ கே வுக்கு யூனியனில் இருக்க விருப்பமில்லை, மக்களுக்கும் விருப்பமில்லை என்றால் வெளியே வர தடை என்ன? எது அவர்களை அப்படி கட்டிப் போட்டு வைத்திருக்கிறது? நீங்கள் யூ கே வில் இருப்பதால் ஒரளவுக்கு உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.
வாங்க ராஜ நடராஜன்... கருத்துக்கு நன்றி...
உலக அரசு வேணும்னு நான் நினைக்கலீங்க... அது மாதிரி அமைப்பு வரலாம்னு பேசிக்கிறாங்க. அதப் படிச்சுட்டுதான் நானும் எழுதினேன். ஐ நாவை விடுங்க. எந்த நாட்டு அரசாங்கந்தான் இன்னிக்கு சுத்தமா இருக்குது.
எல்லாம் "ஒய்யாரக் கொண்டையாம்... உள்ள ஈரும் பேனுமாம்"னுதான் இருக்கு.
உலக அரசு எதிர்காலத்துலே ஒரு கட்டாயத்தினால் ஏற்பட வாய்ப்பிருக்கலாம்னு தோணுது.
நல்லா சொல்லியிருக்கீங்க தல.
Post a Comment