போன வாரத்தில் ஒரு நாள்...
"ஒரே டயர்டா இருக்கு... இன்னிக்கி நைட் நீங்களே எதாவது டிஃபன் பண்ணிடுங்க"
"ம்..."
"உப்புமாவே பண்ணிடுங்க... சீக்கிரம் ஆகும். சாப்ட்டுட்டு தூங்கலாம்.."
"ம்..."
"வெங்காயம் சின்னதா நறுக்குங்க... மொடா மொடாவா நறுக்கிடாதீங்க..."
"ம்..."
"எண்ணை அளவா.... அடுப்பை 'பே'ன்னு எரிய விட்டு கடுகைக் கருக்கிடாதீங்க.. ரவையை நல்லா வறுத்துடுங்க... இல்லாட்டா பச்சை வாசனை புரட்டும்... "
"ம்..."
"ஒரு டம்ளருக்கு 2 டம்ளர் தண்ணி.... ஜாஸ்தி விட்டு களி மாதிரி ஆக்கிடாதீங்க... தண்ணில ரவையை கொஞ்ச கொஞ்சமாப் போட்டு கிளறிக்கிட்டே இருங்க.... கட்டி தட்டிடப் போகுது... உப்பு அளவாப் போடுங்க... உப்புமா ஆக்கிடாதீங்க "
"ம்..."
(10 நிமிஷம் கழிச்சு...........)
"அட.... நல்லா டேஸ்டாவே இருக்கே.... உங்க பொண்ணு இன்னிக்கு ஒரு பிடி பிடிக்கப் போறா... தேங்கா எண்ணையா போட்டீங்க... வாசனையா இருக்கே... கேரட்லாம் போட்டு... அட முந்திரி வேற... மஞ்சள் கொஞ்சமாப் போட்டு அப்பிடி கோல்ட் கலர்ல டாலடிக்குதே... தக்காளி எல்லாம் பொடிப் பொடியாப் போட்டு.... ம்ம்ம்... கொத்தமல்லி தூவி... அட்டகாசமா இருக்கே.... அம்மாடி... ஒரு உப்புமாவை உங்களைப் பண்ண வெக்கறதுக்குள்ள உம்பாடு எம்பாடுன்னு ஆகுதே...."
ஙே !! நெஜமாவே கிச்சடி பண்ணினேன் !!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
போன வாரம் ஒரே சண்டை வாரமாப் போச்சு !! போன மாசம் பூரா ஜெனிவாவுல செலவு பண்ணதுக்கு (கார்பொரேட் கார்டுலதான்) ஸ்டேட்மென்ட் வந்தது. நேத்திக்கு ட்யூன்னு போட்டு. பொறுமையாப் பேசிப் பிரயோஜனம் இல்லாம காச் மூச்சுனு கத்தி 3 வாரம் எக்ஸ்டென்ஷன் குடுத்தா மகராசி.
3 மாசம் முன்னாடியே கம்பெனி ஸ்பான்சர்ல ஒரு ட்ரெய்னிங் கோர்ஸுக்கு புக் பண்ணி வெச்சுருந்தேன். ஊர்ல இல்லாததால போக முடியல. கோர்ஸ் ஆரம்பிக்கறதுக்கு ஒரு நாள் முன்னாடி மெயில் வருது. "நாளைக்கு க்ளாசுக்குப் போ. இல்லாட்டி கோர்ஸை ட்ராப் பண்ணு"ன்னு. சரி நாம சிங்கப்பூர் போக இன்னும் 2 நாள் இருக்கேன்னு ட்ராப் பண்ணினா "ஓகே. நோ ப்ராப்ளம்ஸ். ட்ராப் ஃபீஸ் 1450$. தேங்க்ஸ்"னு மெயில் வருது. நோ ப்ராப்ளம்ஸா? இப்பத்தானே ஸ்டார்ட் ஆகுது? நமக்கு ஒதுக்கறதே சின்ன பட்ஜெட். அதுலயும் புடுங்குனா? HR-ஐக் கூப்ட்டு "என்னாய்யா சிஸ்டம் வெச்சுருக்கீங்க... எம்ப்ளாயீஸ்க்கு உபயோகப்படாத சிஸ்டம்..."னு வெளு வெளுன்னு வெளுத்ததுக்கப்பறம் "அவன் கூடப் பேசு... இவ கிட்டப் பேசு"ன்னு மெயில் மேல மெயில் போட்டு "அய்யா... இனிமே பண்ண மாட்டோம்... இன்னொரு கோர்ஸ் அப்பறமா சேந்துக்குங்க"ன்னு சொல்ற வரைக்கும் "விட்டேனா பார் !!"னு ஆயிடுச்சு.
இதுதான் இப்பிடின்னா பேங்க்கோட ரெக்ரியேசன் க்ளப் மூலமா ஒவ்வொரு மே 1ந் தேதியும் எதாவது ஒரு தியேட்டர்ல சினிமாக்கு ஃபேமிலி டிக்கட் கிடைக்கும். என்ன கோளாறோ இந்த வருஷ ஆரம்பத்துல இருந்தே க்ளப்போடை ஈவண்டுகளுக்கு எனக்கு மெயிலே வரல. ஊருக்கு திரும்பி வந்த பிறகு பாத்தா எல்லாரும் போய் டிக்கட் வாங்கிட்டு வராங்க. உள்ள தூங்கிக்கிட்டு இருந்த விஜயகாந்த் ஏற்கெனெவே போன ரெண்டு சம்பவத்துல எழுந்து உக்காந்து கண்ணைக் கசக்கிக்கிட்டுருந்தாரு. இப்ப அவருக்கு கண்ணு "ஜிவு ஜிவு"ன்னு செவந்து போச்சு. புள்ளி விவரமாப் போட்டு இன்னொரு "விட்டேனா பார் !!" போர். டிக்கட் எல்லாம் தீந்து போச்சேன்னு கைய விரிச்சவனை வெரட்டி 3 டிக்கட் வாங்கின பிறகு "மன்னிப்பு - எனக்குப் புடிக்காத வார்த்தை"ன்னு சொல்லி அனுப்பிச்சேன்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சமீபத்துல "சுகி சிவம்" ஐயாவோட "கீதை அனுபவம்" சொற்பொழிவு mp3 கிடைச்சுது. சுமார் 18 மணிநேரம் இருக்கும். I-Podல போட்டு ஆபீஸ்க்கு போற வர நேரத்துல கேட்டேன். எனக்கு அவரோட ஸ்டைல் ரொம்பப் பிடிக்கும். ரொம்ப யதார்த்தமா தினசரி வாழ்வியலோட ஒட்டியே பேசுவார். அனாவசிய ஜோடனைகள் இருக்காது. சில சமயம் மழுப்பாம மூஞ்சில அடிச்சாப்லயே இருக்கும். அது பலருக்குப் பிடிக்காம இருக்கலாம். ஆனா எனக்கு அதுதான் அவர் கிட்ட பிடிச்ச விஷயம். உள்ளது உள்ளபடி சொல்லணும்.. எதுக்கு, யாருக்கு பயப்படணும்கற அவரோட நேர்மை வணக்கத்துக்குரியது.
க்ஷெ கீதை சொற்பொழிவு மிக மிக மிக மிக அருமை. சில இடங்கள்ல அவருடைய சிந்தனைக் கோணம் 'அட... இப்பிடியும் பாக்கலாமே இதை... அப்ப இப்பிடி அனுபவிக்கலாமே'ன்னு ஆச்சரியப் பட வெச்சுது. நம்ம சிந்தனையும் அதை ஒட்டி பல திசைகள்ல கிளைத்து வேறு மாதிரியான வித்தியாசமான அனுபவங்களைக் கொடுத்தது. தொய்வு இல்லாம இருக்கறதுக்காக அங்கங்க சின்னச் சின்னக் கதைகளும் சொல்லியிருந்தார். ரொம்ப ரசிச்சேன்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இந்த மாதிரி கிச்சடி, பிரியாணின்னு போட்டா கடேசில ஒரு கவிதை போடணுமாமில்ல. பயப்படாதீங்க (தாமிரா எனப்பட்ட) ஆதி. சொந்தக் கவிதை கிடையாது.
சுஜாதா ஒரு கட்டுரைல "ஹைக்கூ" அப்பிடின்னா ஒரு ஃபோட்டோ மாதிரி, ஒரு கண சிலிர்ப்பு மாதிரி, முடிஞ்சா ஈற்றடில ஒரு முரண் அல்லது திருப்பம் இருக்கணும்னு சொல்லியிருப்பார். சமீபத்துல பதிவர்
ரவி ஆதித்யா பதிவுல படிச்சது.
மழை ஒய்ந்த நேரம்
மரத்தடியில்
மீண்டும் மழையோசிச்சுப் பாத்தா நான் உப்புமா பண்ணினது கூட ஒரு ஹைக்கூ மாதிரி....