Showing posts with label நட்பு. Show all posts
Showing posts with label நட்பு. Show all posts

Friday, April 10, 2009

மொளச்சு வரும்போது.... 6

முந்தைய இடுகைகள் ...1 ...2 ...3 ...4 ...5


அஞ்சாம் வகுப்பு வரைக்கும் என்னோட க்ளோஸ் ஃப்ரெண்டுனா அது சிராஜ். க்ளாஸ்லயே அவந்தான் ஒசரமா இருப்பான். நான் அப்ப குள்ள புஸ்கா. ஒரு பாதுகாப்புக்காகவே அவனோடயே சுத்திக்கிட்டுருப்பேன். அவனுக்கு படிப்பு அவ்வளவா ஏறல. பாஸ் பண்றதைப் பத்தியெல்லாம் அவனுக்கு கவலையே இருக்காது. அவனைப் பாஸ் பண்ண வெக்கறதுக்குள்ள வாத்தியார் பாடுதான் திண்டாட்டமாப் போயிடும். சுகுணா டீச்சர், மல்லிகா டீச்சர், பங்கஜம் டீச்சர் இவுங்க மூணு பேரும் அவனை எப்பிடியாவது பாஸ் பண்ண வெச்சுடணும்னு அவனுக்குன்னு தனியா க்ளாஸ் போட்டெல்லாம் முசுவா வேலை பாத்தாங்க. அப்பிடி இப்பிடி தாக்காட்டி அவனை 6ம் வகுப்புக்கு ஹைஸ்கூலுக்கு தள்ளி விட்டுட்டா கொஞ்சம் மூச்சு விட்டுக்கலாம்னு பாத்தாங்க. ம்ம்ம்... நம்மாளு இதுக்கெல்லாம் அசருவானா? ஸ்டூல், குதர, ஏணி, லிஃப்ட்... எது வெச்சாலும் அவன் மண்டைக்கு மட்டும் ஒண்ணும் ஏறல. "நீங்க ரெண்டு பேருந்தான் ஈயும் பீயுமாச்செ... நீயாச்சும் அவனுக்கு சொல்லிக் குடுத்து உங்கூட ஐஸ்கூலுக்கு கூட்டிட்டுப் போயேன்" னாங்க.


சரின்னு லாஜிஸ்டிக்ஸ் எல்லாம் முடிவாச்சு. அதாவது சாயங்காலம் பள்ளியோடம் விட்டதும் நான் அவங்கூட அவன் வீட்டுக்குப் போய் கூடவே படிக்கணும், சொல்லிக் குடுக்கணும். நல்ல முகூர்த்த நாளாப் பாத்து ஆரம்பிச்சோம். அவன் வீடு ரயில்வே கேட்டுக்குப் பக்கத்துல. இன்னும் ஒரு 300 மீட்டர் தள்ளி ரயில்வே ஸ்டேசன். அதுக்கு பக்கத்து வீடு உடுமலைல ரொம்ப ஃபேமஸான ஒரு பேக்கரிக்காரங்க வீடு. பின்னாலயே பன்,ரஸ்க் எல்லாம் பண்றது வாசனை மூக்கத் தொளைக்கும். சிராஜ் வீட்டுக்குள்ளயே ஒரு சின்ன தோட்டம். ரெண்டு ஆடு வேற வளத்துக்கிட்டுருந்தாங்க. இப்பிடி ஒரு இடத்துல படிக்கத் தோணுமா? மொத நாள் மட்டும் கொஞ்ச நேரம் படிச்சோம்னு பேர் பண்ணினோம். அதுக்குள்ளயே அவுங்க அம்மா என்னென்னவோ இனிப்பு காரம்னு திங்கக் குடுத்துக்கிட்டே இருந்தாங்க. அடுத்த நாள்ல இருந்து சிராஜ் அவன் வேலையை காமிக்க ஆரம்பிச்சான்.

மொதல்ல ஆட்டைத் தொரத்திப் புடிச்சு பால் கறந்து குடிப்போம். பச்சைப் பால் லேசா வெதுவெதுன்னு எளஞ்சூட்ல இருக்கும். சும்மா ஒரு கால் டம்ளர்தான் கறப்பான். அதுக்குள்ளயே நாலு ஒதை வாங்குவோம். அப்பறம் பேக்கரி வீட்டுக்குள்ள எட்டிக் குதிச்சு கிச்சனுக்குள்ள போவோம். ரொட்டி பண்றவரு அவனுக்கு ஃப்ரெண்டு. ஆளுக்கு இம்புட்டு ரொட்டி மாவு குடுப்பாரு. சவ சன்னு இனிப்பா இருக்கும். ஒரு பெரிய்ய்ய்ய்ய்ய கரண்டியை அடுப்புக்குள்ள விட்டு தட்டு தட்டா வெளிய எடுத்து வெப்பாரு. ஆறாறு பன்னு ஒரு தட்டுக்கு. அதெல்லாம் கண்ணாடிக் காய்தம் சுத்தி வெக்கறது, பெட்டில அடுக்க்றது, நடுவுல நாங்க ரெண்டு உள்ள தள்றதுன்னு இப்பிடியே பொழுது போயிரும். பன்னா சாப்ட்டுட்டு வயிறு புர்..புர்..ன்னு பொறுமிக்கிட்டே இருக்கும். அஞ்சே முக்காலுக்கு பழனி-பொள்ளாச்சி பாசஞ்சர் ட்ரெய்ன் வரும். கேட்டு போட்டதும் ரெண்டு பேரு ஒடிப் போய் தண்டவாளத்துல கொட்டியிருக்கற ஜல்லிக்கல்லெல்லாம் எடுத்து வரிசையா தண்டவாளத்து மேல வெச்சுருவோம். ரயில் மேல ஏறி எல்லாம் பொடிப் பொடியா ஆயிரும். கேட் கீப்பர் ஜாகீர் மாமா தினமும் எங்களை வெரட்டுவாரு. கல்லு மேல ஏறி ரயில் கவுந்துதுன்னா ரெண்டு பேரும் ஜெயிலுக்குப் போகணும்னு அவர் மெரட்டுனதுல கொஞ்சம் பயந்துதான் போனோம்.

அப்பறம் அதை விட்டுட்டு ரயில் வரதுக்கு முன்னாடி ஸ்டேசனுக்கு போய் நின்னுக்குவோம். கேங்மேன் செல்வராஜ் கூட டவர் மேல ஏறிப் போய் அவர் லைன் மாத்தறதெல்லாம் வேடிக்கை பாப்போம். டவர் மேல இருந்து தூரத்துல் ரயில் லைன் மாறறது, கைகாட்டி எறங்கறது எல்லாம் பாக்க பாக்க ஆசையா இருக்கும். டவர்ல இருக்கற லீவர்கள்ல இருந்து கம்பிக கட்டி தண்டவாளத்தை ஒட்டி சின்ன சின்ன உருளைக வழியா போய் எங்கியோ தூரத்துல இருக்கற கைகாட்டி படக்குனு எறங்கறதெல்லாம் ஆச்சரியமா இருக்கும். மாசம் ஒருக்கா எல்லா உருளைகளுக்கும் கிரீஸ் வெப்பாங்க. நாங்களும் ஒத்தாசை பண்றோம்னு போய் கிரீஸ் டப்பாவை கவுத்த பிறகு "கண்ணுகளா... இனிமே இக்கட்ட வந்தீங்க... வெரலை ஒடிச்சுப் போடுவேன்"ன்னு பாசமா சொன்ன பிறகு அதுவும் போச்சு. ஆறு மணியாச்சுன்னா கேட்டு, கைகாட்டி இதுகள்ல இருக்கற வெளக்குக்கெல்லாம் மண்ணெண்ணை ஊத்தி திரியைத் தூண்டி ஏத்தி வெக்க ஜாகீர் மாமா போவாரு. அவர் கூட கொஞ்ச நாள்.

இப்பிடி வெளையாட்டாவே பொழுது போக்குனமே தவிர மொத நாள் மட்டும் படிச்சதுதான்.அப்பறம் படிக்கவே இல்லை. சிராஜ் வீட்டுலயும் இதைப் பெருசா கண்டுக்கலை. நல்ல பெரிய வசதியான குடும்பம். கடைசில அந்த வருசம் அவன் ஃபெயில் ஆயிட்டான். எனக்குத்தான் ரொம்ப வருத்தமா இருந்துது. வெளயாட்டுத் தோழனை இனிமே அடிக்கடி பாக்க முடியாதுன்னு. அதுக்கு ஏத்த மாதிரி ஹைஸ்கூல்ல ஷிஃப்ட் முறை. காத்தால 6:45 ல இருந்து 1 மணி வரைக்கும்தான் ஸ்கூல். வகுப்பறை பத்தாக்குறையால அப்படி ஒரு ஏற்பாடு. கொஞ்ச நாள்லயே சிராஜோட குடும்பம் பள்ளபட்டிக்கு போயிடுச்சு. பஸ்ஸ்டாண்டுல அவுங்க ஈரோடு பஸ்ல ஏறும்போது ரொம்ப சங்கடமா இருந்துது. சிராஜ் எங்கூட பேசவே இல்ல. அவனோட அம்மாவும் அப்பாவுந்தான் பேசினாங்க. அதுக்கப்பறம் இன்னிக்கு வரைக்கும் அவனை சந்திக்கவே இல்லை. எங்க இருக்கான், என்ன பண்றான் எதுவும் தெரியல.எப்பவும் எதைப்பத்தியும் கவலை இல்லாம வேடிக்கையும் துள்ளலுமா துறுதுறுன்னு இருக்கற அவன் முகம் கடைசியா பஸ்ல ஏறும்போது வாடி இருந்தது மட்டும் ஃபோட்டொ புடிச்ச மாதிரி பச்சக்னு இன்னும் மனசுக்குள்ள இருக்கு. எப்பா சிராஜ்... நீ எங்கடா இருக்க?


எல்லாரும் பழைய தொடர்பு விட்டுப் போன நண்பர்களுக்கு கடுதாசி போட்டுக்கிட்டுருக்காங்க.... இந்த இடுகையை சிராஜ் படிச்சு மறுபடி அவனை சந்திக்க முடிஞ்சா எம்புட்டு நல்லா இருக்கும்?


சிராஜுக்குப் பிறகு 6ல இருந்து 10 வரைக்கும் ஜிகிரி தோஸ்தா இருந்த கிஷோரைப் பத்தி..... அப்பறமா.... இன்னொரு நாளைக்கு....

Friday, March 6, 2009

சாக்லெட் நட்பு


2002 நவம்பர் :


பெல்ஜியத் தலைநகர் ப்ருசெல்ஸ். தி க்ராண்ட் ப்ளேஸ். உலக்ப் புகழ் பெற்ற உச்சா போகும் சிறுவனின் சிலையைச் (Manneken Pis) சுற்றி டூரிஸ்டுகளின் கூட்டம். நானும் என்னோட ஓட்டை கேமராவில ஒண்ணு ரெண்டு படங்க எடுத்துக்கறேன். இந்த க்ராண்ட் ப்ளேஸ்லதான் ரெண்டு வருஷத்துக்கு ஒருமுறை பிகோனியாப் பூக்களால மொத்த மைதானத்தையும் அடைச்சு ஒரு பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய "மலர் விரிப்பு" (Flower Carpet) போட்டு உலகத்தயே அசத்துவாங்க. அது ஒரு பெரிய டூரிஸ்ட் அட்ராக்சன்.


பெல்ஜியத்துல வீடுகள்ல செய்யற ஹோம்-மேட் சாக்லேட்டுக ரொம்ப ஃபேமஸ். அங்க போயிட்டு அத வாங்காம வந்தா சொந்தமெல்லாம் எதிரியாயிடும்னு பயந்து அதக் கொஞ்சம் வாங்கணும்னு கெளம்பினேன். எங்க நல்லாருக்கும்னு யாரைக் கேட்டாலும் என்னவோ பெனாத்தறாங்களே ஒழிய நமக்கு ஒண்ணும் புரியல. அப்பிடி ஒரு கடைப் பக்கம் போய் விசாரிச்சுட்டு இருக்கும்போது ஒரு குரல். "ஹான் ஜி... க்யா சாஹியே ஆப்கோ?" திரும்பிப் பாத்தா ஆஹா.... ஆஜானுபாகுவா ஒரு சர்தார்ஜி. 35 வயசுக்கு மேல இருக்கும். பக்கத்து கடை அவரோடதாம். மளிகைக்கடை மாதிரி இருக்கு. அய்யா... இன்னது வேணும்... எங்க நல்லதா கிடைக்கும்னு அவர் கிட்ட கேட்டேன். "அப்பிடியா? ஒரு நல்ல இடம் இருக்கு. கொஞ்சம் தூரம் கண்ட்ரி சைட் போகணும். ஒண்ணு பண்ணுங்க. சரியா 1 மணிக்கு கடைக்கு வாங்க. லன்ச் ப்ரேக்ல நானே கூட்டிக்கிட்டுப் போறேன்"னு சொன்னாரு.


சரின்னு நானும் அங்க இங்க கொஞ்ச சுத்திட்டு மறுபடியும் டாண்ணு 1 மணிக்கு அந்த கடைக்குப் போயிட்டேன். அவரும் கிளம்பிக்கிட்டுருந்தாரு. கடைய சாத்திட்டு பக்கத்து சந்துக்கு போய் கார் எடுத்துட்டு வந்து ஏறச் சொன்னாரு. சிடிய விட்டு வெளிய வந்து ரொம்ப தூரம் வந்துட்டோம். உள்ளூர எனக்கு பயம் "இவர(ன?) நம்பி வந்துட்டமே? நல்லவந்தானா? அடிச்சு போட்டு இருக்கறத புடுங்கிட்டான்னா? பாஸ்போர்ட் திருட்டு வேற இங்க ரொம்ப ஜாஸ்திங்கறாங்களே"ன்னு என்னென்னவோ நினைப்பு. தன்னப் பத்தி (புபிந்தர் சிங்) குடும்பத்தை பத்தியெல்லாம் சொல்லிக்கிட்டே வந்தாரு. 12 வருஷமா ப்ருசெல்ஸ்ல இருக்காரு. அப்பிடி பேசிக்கிட்டே ஒரு கிராமத்துக்குள்ள நுழைஞ்சு ஒரு வீட்டுக்கு முன்னால நிறுத்துனாரு. உள்ள கூட்டிக்கிட்டு போய் என்னவோ பேசி வித விதமா சாக்லேட்டுக வாங்கிக் குடுத்தாரு. விலையும் கொஞ்சம் சகாயமா இருந்துது. திரும்ப கார்ல ஏறி கடைக்கே கொண்டு வந்து விட்டாரு. அப்பறந்தான் நமக்கு நம்பிக்கையே வந்துது. அவர் சாப்பிடக் கூட இல்ல. மறுபடி கடையைத் திறந்து வியாபாரம். கொஞ்ச நேரம் பேசிட்டு கிளம்பிட்டேன். அவர் எதுவும் காசு வாங்கிக்கல. சும்மா சொல்லக்கூடாது... சாக்லேட் அவ்வளவு டேஸ்ட்... இப்பிடியும் ஆளுக இருக்காங்களேன்னு மனசுக்குள்ள வாழ்த்திக்கிட்டே ஊருக்கு கிளம்பினேன்.


2009 மார்ச் 6 :

ஜெனீவா. காலை மணி 10. ட்ரெயின் ஸ்டேஷன் முன்னால ட்ராமுக்காக காத்துக்கிட்டு இருக்கேன். ஒரே பனிப் பொழிவு. மூக்கெல்லாம் மறத்துப் போச்சு. மூக்கு மூஞ்சில இருக்கான்னு அப்பப்ப தடவி தடவி பாத்துக்கிட்டு நிக்கறேன். பின்னால யாரோ ஒரு ஃபேமிலி இந்தில பேசிக்கிட்டு இருக்காங்க. பாத்தா ஒரு சர்தார், சர்தார்ணி, 10-12 வயசுல ஒரு பொண்ணும் பையனும். அவர் கொஞ்சம் சத்தமா பேசிக்கிட்டுருந்தாரு. எங்கேயோ கேட்ட குரலா இருக்கேன்னு திரும்பி நின்னு கவனிச்சுப் பாத்தா..... அட... இவர் அந்த புபிந்தர் சிங்கா? இங்க எப்பிடி? போய் பேசலாமா? நமக்கு வேணா ஞாபகம் இருக்கு... அவருக்கு இருக்குமா? இப்பிடி பல யோசனைகளோட இன்னும் கொஞ்சம் கவனிச்சு பாத்துட்டு, அவராத்தான் இருக்கணும்னு கிட்டப் போய்,


"எக்ஸ்க்யூஸ் மி... நீங்க.... நீங்க புபிந்தர் சிங்கா?". நாலு பேரும் என்னயே உத்துப் பாக்கறாங்க.


"ஆமாம்... நீங்க யாரு? உங்களுக்கு என்னைத் தெரியுமா? எப்பிடி?". நான் ப்ருசெல்ஸில் நடந்ததை ஞாபகப்படுத்துகிறேன்.

"வாவ்... ஏழு வருஷம் முன்னால நடந்தது. எனக்கு சுத்தமா நினைவில்ல. நீங்க இப்ப சொன்ன பிறகு லேசா ஞாபகம் வருது."


"உங்க கடைக்கு ஆயிரம் பேர் வராங்க... போறாங்க... உங்களுக்கு நினைவு வெச்சுக்க அவசியமில்ல... ஆனா என்னை யாருன்னே தெரியாதபோது எனக்கு நீங்க செஞ்ச உதவியை நான் மறக்க முடியாதே"


ஆனா தன்னை ஒருத்தன் அடையாளம் கண்டுக்கிட்டு வந்து பேசறதைப் பாத்து அவரும் குடும்பமும் குஷி ஆயிட்டாங்க. அவங்க ப்ருசெல்ஸை விட்டுட்டு இப்ப இங்க வந்து 3 வருஷம் ஆயிடுச்சாம். இங்க ஒரு கடைல பார்ட்னரா இருக்காராம். இந்த மே மாசம் எல்லாம் செட் ஆனா லண்டன் போயிடுவாங்களாம்.


"வீடு பக்கத்துலதான். வாங்களேன்.... அப்பிடி சாய் சாப்டுக்கிட்டே பேசுவோம்" சரின்னு ட்ராம் ஏறி அவர் கூடவே அவங்க வீட்டுக்கு போய் டீ குடிச்சு, பூரியும் ஹல்வாவும் சாப்டுட்டு கொஞ்ச நேரம் பேசிட்டு ரூமுக்கு வந்துட்டேன். போட்டோவெல்லாம் வேண்டாம்னு அன்பா கண்டிப்பா மறுத்துட்டாரு. நானும் ஏன்னு கேக்கலை.


முதல் சந்திப்புலயும் சரி, இன்னிக்கும் சரி அவரோட பேச்சுல இருந்த கனிவும், உண்மையும், நேர்மையும் ரொம்ப ஆச்சரியப்பட வைக்குது. முதல் சந்திப்பின்போது எனக்கு உள்ளூர ஒரு சந்தேகம் இருந்துக்கிட்டே இருந்தாலும், அதை அவர் கண்டுக்காம இயல்பா இருந்து அந்த சந்தேகத்தை தானா போக்கடிச்சாரு. இன்னிக்கு அந்த சம்பவத்தை ஞாபகப்படுத்தின உடனேயே ரொம்ப நாள் பழகின மாதிரி இயல்பா பேசி டக்குனு வீட்டுக்கும் கூட்டிக்கிட்டுப் போய் உபசரிச்சதும், அந்த குடும்பமும் அதே மாதிரி வித்தியாசமா எடுத்துக்காம நல்லா பழகினதும்.... இன்னும் ஆச்சரியம் தீரல.


இப்பிடியும் அன்பான அனுசரணையான மனுஷங்க இருக்காங்களா? இவுங்க மாதிரி ஆளுகளாலதான் இன்னிக்கும் ரெண்டு சொட்டு மழையாவது பெய்யுதா? ஒரு தனி மனுஷனோட இயல்பு அவன் குடும்பத்தையே இன்ஃப்ளூயன்ஸ் பண்ணுது? பல கேள்விகளோடயும் விலகாத ஆச்சரியத்தோடயும் ஹோட்டலுக்கு திரும்பினேன்.