Thursday, April 11, 2013

அவன்.

அது ஒரு அடர்ந்த காடு. அந்தி சாயும் நேரம். பறவைகள் கூடு திரும்பிக் கொண்டிருந்தன. பல வகையான பறவைகளின் கீச்சொலிகள் ஒரு இலக்கணத்திற்கு உட்படாத ரம்மியமான இசை விருந்து. வீழ்ந்து கொண்டிருந்த கதிரவனின் கடைசிக் கணங்களின் கிரணங்கள் மரக்கிளைகளினூடே இலைகளினூடே காற்றின் அசைவிற்கு ஏற்ப கண்ணாமூச்சி விளையாட்டு. பாதையில் தனியாகச் செல்பவனுக்கு மயக்கத்தையும் பயத்தையும் கலவையாக அனுபவிக்க நேரிடும். ஒளித் தேவன் இருள் தேவனிடம் உலகைக் காக்கும் பணியை ஒப்படைத்து கைகுலுக்கி விடைபெற்றுக் கொண்டிருந்தான்.

அதோ.... அங்கே... யாரந்தத் துறவி? பார்க்க வெகு இளமையான தோற்றம். கண்களில் அதீத அமைதி. சிறு புன்னகைக் கீற்று. இந்த இளம் வயதிலேயே துறவு மேற்கொள்ள வேண்டிய அவசியம் என்னவோ? பெற்றோரா மனையாளா மக்களா.... அல்லது பொருளாதாரமா.... துறவறத்துக்கு இவற்றில் ஏதோ ஒன்றுதானே காரணம்... காலங்காலமாக.... இருக்கட்டும்.... இவனுக்காவது மன நிம்மதி சித்திக்கட்டும்... அப்படி ஒன்று உண்மையிலேயே இவ்வுலகில் இருக்குமானால்.

நீண்ட பயணமாக இருந்திருக்க வேண்டும். களைப்புடன் அவன் அந்த பரந்த மரத்தினடியில் அமர்ந்தான்.

****************
சில வருடங்களுக்கு முன்பு....

"உண்மையாகவா சொல்கிறீர்கள்? அல்லது என்னுடன் விளையாடுகிறீர்களா?"

"உன்னுடன் என்ன விளையாட்டு எனக்கு? இது பலப்பல நாட்களுக்கு முன்பு பூவாய்ப் பூத்தபோதே உள்ளமர்ந்த வண்டு.... இப்போது பழமான பின்னரும் உள்ளே குடைந்து கொண்டிருக்கிறது... வெளியேறும் தருணம் வந்து விட்டதாகவே உணருகிறேன்..."

"இல்லை.... இது நடவாத காரியம்.... என்னால் ஒப்புக்கொள்ள முடியாது. மாட்டேன். உங்கள் பெற்றோர் என்னைத்தானே குறை கூறுவர்?"

"நீ அவர்களைப் புரிந்தது அவ்வளவுதானா? அவர்களுக்கு என் மீது வருத்தம் இருக்கலாமே தவிர, உன்னிடம் குறை காணுவதற்கு எள்ளளவும் நியாயம் இல்லை.... கவலையே வேண்டாம்..."

"என்னை சமாதானப்படுத்த வேண்டாம்....இதோ... இந்தப் பிஞ்சின் முகத்தைப் பாருங்கள்.... இவனை விட்டுப் போக எப்படி உங்கள் மனம் இடம் கொடுக்கிறது? அவ்வளவு கல் நெஞ்சமா?"

"நெஞ்சம் கல் அல்ல பேதையே.... கனிந்து வருகிறது... அந்தப் பேருவகையைச் சொல்ல வார்த்தை இல்லை.... உன்னை விடவும் மேலாக அவன் என்னைப் புரிந்து கொள்வான்...."

"இறுதியாகச் சொல்கிறேன்... நான் இதற்கு ஒருபோதும் சம்மதிக்க மாட்டேன்.... இது பற்றி மேலே விவாதங்களோ விளக்கங்களோ கேட்க நான் தயாரில்லை..."

"ஹஹஹ.... இது இறை ஆணை.... "

"என் காதுகள் கேட்கும் சக்தியை இழந்து விட்டன.... உள்ளே போவோம் வாருங்கள்.... சயன நேரம்...."

அன்று இரவு.... அவன்....
உறக்கம் துறந்து,
உடையவளைத் துறந்து,
உற்றாரையும் பெற்றோரையும் துறந்து,
உலகைக் காண விழைந்து,
உண்மையைக் காண விழைந்து,
உள்ளத்தை விசாலமாகத் திறந்து வெளியேறினான்.
கதவோடு சேர்த்து கனவுகளையும் மூடினான்.
உண்மையை அறியும் வேட்கை உந்தித் தள்ள ஒரு புதிய பயணம் தொடங்கியது.

*********************

கிளையில் துளிர்த்திருந்த அந்த இலை மரத்திடம் கேட்டது.

"அம்மா.... என்னை உதிர்த்து விடேன்..."

"அதற்கு இன்னமும் காலமிருக்கிறது குழந்தாய்.... என்னோடு இரு... நீ இன்னமும் காண வேண்டியவை பல....."

மௌனம் சூழ்ந்தது.

கிளையில் அமர்ந்த பறவையிடம் அந்த இலை இறைஞ்சியது.

"பறவையே.... ஒரு சிறு உதவி வேண்டும். என்னைக் கொத்தி உதிர்த்து விடுவாயா?"

"அதற்கு இன்னமும் காலமிருக்கிறது குழந்தாய்.... உன் தாயுடனேயே இரு... நீ இன்னமும் காண வேண்டியவை பல....."

மறுபடியும் மௌனம் சூழ்ந்தது.

கிளையின் மீது ஊர்ந்து வந்த சிலந்தியிடம் இலை கெஞ்சியது.

"சிலந்தியே.... தயவு கூர்ந்து என்னை இந்தக் கிளையிலிருந்து விடுவிப்பாயா?"

"ஏன்? காரணம்?"

"அதோ.... கீழே அமர்ந்திருக்கும் அந்த இளம் துறவியைப் பார்த்தாயா? அவர் மடியில் சென்று சேர வேண்டும்.... நீயாவது என்னைப் புரிந்து கொள்.... உதவி செய்...."

புதிய நண்பன் உதவி செய்தான்.

**************

அந்த அபலைப் பெண் பலரிடம் விசாரித்து, தன் மகனுடன் அந்தக் காட்டில் அலைந்து திரிந்து இறுதியில் அந்த மரத்தடியில் அவனைப் பார்த்து விட்டாள். கண்டு கொண்ட மகிழ்ச்சியில் கண்ணீர் பெருக ஓடி வந்து துறவியின் காலடியில் விழுந்தாள்.

கண் விழித்த துறவி காலடியில் கிடப்பது யாரென்று அறிந்து கொண்டான். அமைதியான புன்னகையுடன், கருணை பொங்கும் கண்களுடன் கையில் ஒரு இலையுடன் எழுந்து நின்றான்.

"யசோதரா.... எழுந்திரு...."

அவள் எழுந்து அவன் கண்களைப் பார்த்தாள். நீண்ட மௌனம். ஒரு வார்த்தை கூட பேசப்படவில்லை. சில ஆண்டுகளின் பிரிவு கண நேரத்தில் நீர்த்துப் போனது. மௌனமெனும் உன்னத மொழி புலன்களுக்கு உட்படாத பேருண்மையை போதித்துக் கொண்டிருந்தது. பேசப்படாத வார்த்தைகளின் பொருள் இன்னும் சிறிது நேரத்தில் சூழப் போகும் இருளை விடவும் அடர்த்தியாக இருந்தது.

குழந்தை ராகுலன் அந்த இலையைத் தன் தலையில் அணிந்து கொண்டு விளையாடிக் கொண்டிருந்தான்.

புத்தம் சரணம் கச்சாமி.

0 பேர் என்ன நெனைக்கிறாங்கன்னா..: