Showing posts with label புத்தகம். Show all posts
Showing posts with label புத்தகம். Show all posts

Wednesday, July 22, 2009

(சு)வாசித்ததும்.... யோசித்ததும்...

முந்தைய பதிவுகள் ...1 ...2 ...3 ...4 ...5 ...6 ..7



Tao of Physics
Author : Dr Fritjof Capra

விஞ்ஞானம், ஆன்மிகம் இரண்டிலும் நம்பிக்கை உள்ளவர்களுக்கு இந்தப் புத்தகம் மிகவும் பிடிக்கலாம். நவீன இயற்பியலையும் கீழை நாடுகளின் நம்பிக்கைகளையும் இணையாய் வைத்து பார்க்கும் புத்தங்களில் முக்கியமான ஒன்று. பல சர்ச்சைகளைக் கிளப்பியிருந்தாலும் பலராலும் ஏற்றுக்கொள்ளப் பட்டது.

பொதுவா எல்லாரும் சொல்றதுண்டு "நம்ம வேதங்களில் சொல்லாததா? இன்னிக்கு அறிவியல் சொல்ற எல்லாம் எங்காளுக என்னிக்கொ சொல்லி வெச்சுட்டாங்க"ன்னு. இதுவும் அதேமாதிரி வரிசைல ஒரு புத்தகம்னு சிலர் நினைக்கலாம். ஆனால் என் பார்வையில், அவர் சொல்லியிருக்கறது, நவீன இயற்பியல் எப்பிடி கீழை நாடுகளின் தத்துவ கட்டமைப்புக்குள்ள (philosphical framework) தன்னை பொருத்திக் கொள்ள இடம் கொடுக்குதுங்கறதுதான். அதாவது ஒரு அறிவியலாளனுக்கு 'ஆராய்ச்சி'யின் மூலம் ஞானம் கிடைச்சா கீழை நாட்டவருக்கு 'அனுபவ'த்தின் மூலமாவே கிடைச்சுருக்கு. இந்த ஒப்புமை மேலாக பாக்கும்போது கொஞ்சம் வினோதமாத் தெரியலாம். ஏன்னா அறிவியல் சோதனைகள்ங்கறது பல பேர் சேர்ந்து நூதன தொழில்நுட்பங்கள் மூலமாவும் கருவிகள் மூலமாவும் ஆராய்ச்சி செய்து ஒரு முடிவுக்கு வரது. ஆனா மற்றது ஒரு சிலரோட தனிமைல அவங்க தியானத்தின் மூலமா ஒரு அனுபவம் கிடைச்சு அதை ஒரு நம்பிக்கையா வெளியிடறது. அறிவியல் சோதனைகள் மூலமா மறுபடி மறுபடி செய்து பார்த்து ஒரே முடிவுகளை பலமுறை கண்டறியலாம். ஆனா ஆன்மிக அனுபவங்கள்கறது ஒரு சிலருக்கு மட்டுமே ஒரு சில நேரங்களில் நிகழறது. புத்தக ஆசிரியர் சொல்றது என்னன்னா அணுகுமுறைகள் வேற மாதிரி இருந்தாலும் சொல்ல வந்த கருத்துகளோட ஸ்திரத்தன்மையும் நம்பகமும் ஒண்ணேதான்.

"டாவோ"ங்கறதை "பாதை" அல்லது "வழி"ன்னு சொல்லலாம். அறிவியலின் பாதையும் கீழை நாடுகளின் மதம் / நம்பிக்கை சார்ந்த பாதைகளும் கடைசியில் ஒரே இடத்துலதான் சந்திக்கும்... சந்திச்சாகணும். நவீன இயற்பியலாளர்களான நீல்ஸ் போர், ஒப்பன்ஹீமெர், ஹீசென்பெர்க் இவங்கள்லாம் கூட இந்து, புத்த மதங்கள், டாவோயிச தத்துவங்களுக்கும் அறிவியலுக்கும் உள்ள இணைகளைப் பத்தி பேசியிருக்கறதையும் ஆசிரியர் மேற்கோள் காட்டியிருக்காரு.

ஆரம்பத்துலயே ஆசிரியர் காரண ஞானத்துக்கும் (rational knowledge) முழு ஞானத்துக்கும் (absolute knowledge) இருக்கற வித்தியாசங்களை (ஆராய்ச்சி , அனுபவம்) சொல்லி, ஆராய்ச்சியில் நமக்கு இருக்கற எல்லைகள், புலன்களோட திறன் போன்ற நெருக்கடிகளையும், அனுபவத்திற்கு இந்த கட்டுப்பாடுகள் எதுவுமே இல்லாததையும் விளக்கி எழுதியிருக்காரு. ஆனா எதுவா இருந்தாலும் செய்தியின் நம்பகத்தன்மை ரெண்டுலயும் ஒத்துக்கற மாதிரிதான் இருக்குங்கறதையும் தெளிவாக்கிடறாரு.

இன்னும் க்வாண்டம் அறிவியல் பத்தியும், கீழை நாட்டு சித்தாந்தங்களையும் ஒப்புமைப் படுத்தி சொல்லும்போது நமக்கும் இந்து, புத்த மத கோட்பாடுகளுக்கு கொஞ்சம் அறிமுகம் இருக்கறதால சுலபமா புரியுது. ஏத்துக்கவும் முடியுது. ஒரு சின்ன உதாரணம். ஒளி அலையா, துகளான்னு கேக்கும்போது விஞ்ஞானி ஷ்ரோடிங்கர் தன் ஆராய்ச்சி முடிவுல, அது பார்வையைப் பொறுத்தது; சாட்சி பார்க்கும்போது அலையாகவும் பார்க்காதபோது துகளாகவும் (photon) இருக்குன்னு சொன்னார். அறிவியலில் அடிப்படையா everything is objective. No influence from a subject is accepted. இருந்தாலும் அந்த ஒளி அலை ஒரு mathematical wave னு சொன்னதால ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதே மாதிரி, கீழை நாட்டு சித்தாந்தங்கள்ல இந்த ப்ரபஞ்சத்தின் இயக்கத்துக்கெல்லாம் ஒரு பரமசாட்சி இருக்குன்னு சொல்றதையும் சுட்டியிருக்கார்.

பிரபஞ்சத்தோட இயக்கம் ரொம்ப dynamic ஆ இருந்தாலும் அதுல ஒரு ஒழுங்கும் (rhythm) ஒத்திசைவும் (harmony) இருக்கறதையும், இதையே இந்து மதத்தின் நம்பிக்கைப்படி சிவனோட தாண்டவம் (நடராஜர்) உருவகப் படுத்தறதையும் ஒப்பிட்டுப் பேசும்போது ஆச்சரியமாத்தான் இருக்கு.

இந்தப் புத்தகத்தைப் பத்தி என்னால் ரொம்ப எழுத முடியல. அவரே சொல்லியிருக்கற மாதிரி சில விஷயங்களை சுயமா நம்ம புலன்களோட ஆராய்ஞ்சும், கட்டுப்பாடுகள் எதுவுமே இல்லாம கற்பனைலயும் அனுபவிச்சும் பாக்கும்போது ஒவ்வொருவர் பார்வைலயும் கொஞ்சமாவது வித்தியாசம் இருக்கும்கறதால 'புரிதல்'ங்கறதே ஒரு தனி அனுபவமாயிடும்.

படிச்சுப் பாருங்க.... உங்க பார்வை மாறலாம்....

Saturday, February 28, 2009

(சு)வாசித்ததும்.... யோசித்ததும்...

முந்தைய பதிவுகள் ...1 ...2 ...3 ...4 ...5 ...6

இந்த புத்தக அறிமுகத் தொடருக்கு "அவனோடே ராவுகள்"னு தலைப்பு வெச்சுருந்தேன். போன முறை அப்துல்லா அண்ணன் தலைப்பை மாத்த சொல்லி வேண்டுகோள் விடுத்தாரு. அவருடைய கருத்தை மதித்து தலைப்பை மாத்தியாச்சு. நன்றி அப்துல்லா.


The Five People You Meet in Heaven
Author : Mitch Albom

இது ஒரு நாவலா, கட்டுரையா, தத்துவ விளக்கப் புத்தகமான்னு ஒரு பட்டிமன்றமே வைக்கலாம். நாவல் வடிவிலான ஒரு உளவியல் புத்தகம்னும் சொல்லலாம். எதுவா இருந்தாலும் படிக்க ரொம்ப சுவாரஸ்யமா இருக்கு. மனித உணர்வுகளை வலிக்கற அளவுக்கு தூண்டி விடுது. கதாநாயகனை நம்மளோட பிரதிநிதின்னு வெச்சு படிச்சா ஆசிரியர் சொல்ல வர செய்திகளோட நம்மள சுலபமா இணைச்சுக்க முடியுது.

படிக்க ஆரம்பிச்சதுமே வித்தியாசம். கதையோட முதல் வரியிலேயே கதாநாயகன் எட்டி (Eddie) இறந்து போகிறான். 86 வயசு. ஒரு அம்யூஸ்மென்ட் பார்க்ல இயந்திரங்களைப் பராமரிக்கிற மெக்கானிக். ஒரு ஜயன்ட் வீல் மாதிரியான ரைட்ல ஒரு பெட்டி கழண்டு விழ, அதுல இருக்கற ஒரு சிறுமிய காப்பாத்தற முயற்சியில் இறந்து போகிறான். இறப்புக்குப் பின்னால அவனுக்கு நிகழ்கிற அனுபவங்கள்தான் புத்தகம்.

எட்டி சொர்க்கத்துக்குப் போகிறான்(ர்?). அது "சொர்க்கம்"தான் அப்படிங்கறது அவனுடைய எண்ணம். தான் இறப்பதற்கு முன் அந்தச் சிறுமியைக் காப்பாற்றினானா இல்லயா என்பது அவனுக்கு தெரியவில்லை. அது ஒரு முள்ளாக குத்துகிறது. அங்கே அவனுக்காக 5 பேர் காத்திருக்கிறார்கள். ஒவ்வொருவரும் அவன் வாழ்க்கையில் ஏதோ ஒரு வகையில் அவனோடு சம்பந்தப்பட்டவர்கள். சிலரை அவனுக்கே தெரியாது. ஒவ்வொருவரும் அவனை சந்திக்க வேண்டும், அவனுக்கு ஒரு செய்தியைச் சொல்ல வேண்டும் என்பதற்காகவே காத்திருக்கிறார்கள். இதெல்லாம் சாத்தியமா, உண்மையா, சொர்க்கம் என்ற ஒன்று உண்டா, இறந்த பின் "சந்திப்புகள்" எப்படி, இது ஆத்திகத்தை ஊக்குவிக்கும் புத்தகமா என்றெல்லாம் பல சந்தேகங்கள் வரலாம். என்னைப் பொறுத்த வரையில் அந்த சந்தேகங்கள் எல்லாம் அநாவசியம். நம்மை நாமே ஒரு தளம் மேலேயிருந்து நமது நிறை குறைகளைப் பார்ப்பது போல இருக்கிறது. அந்த ஒரு அனுபவத்துக்காகவே இந்தப் புத்தகத்தைப் படிக்கலாம்.

தெருவில் குறுக்கே ஓடிய சிறுவன் எட்டியை தவிர்க்க காரைத் திருப்பி ஆக்ஸிடென்டில் இறந்த "ப்ளூ மேன்" அவனது அறியாமையைப் பற்றிப் பேசுகிறார். (இவரை இதற்கு முன் தன் வாழ்வில் எட்டி சந்தித்ததில்லை) பிலிப்பைன்ஸுக்கு போருக்குப் போன எட்டியின் கேப்டன் தனது தியாகத்தைப் பற்றி சொல்கிறார். (வீட்டின் பிரச்னனகளிலிருந்து தப்பிக்க சிறிது காலம் போருக்குச் சென்று கால் ஊனமாகிறான் ) எட்டி வேலை செய்த "ரூபி பியர்" பார்க்கின் நிறுவனரின் மனைவி எட்டியின் அப்பாவின் மறுபக்கத்தை விளக்கி அவரை மன்னித்து விடும்படி சொல்கிறாள். (எட்டியின் அப்பா ஒரு கடுகடு பேர்வழி. அவனுடன் ஒருபோதும் இணக்கமாக இருந்ததில்லை. சிறு வயது முதலே அவர் மீது கடும் வெறுப்புடன் இருக்கிறான் எட்டி. அவன் தாயார்தான் அவனுடைய நெருங்கிய தோழி.) நான்காவதாக அவனுடைய மனைவி மார்கரெட். அன்பைப் பற்றிய சாஸ்வதமான உண்மைகளை விளக்குகிறாள். (எட்டி தன் மனைவியை மிக மிக மிக நேசித்தவன். அவனுடைய 50வது வயதில், கேன்சரில் அவள் இறந்தவுடன் உலகமே இருண்டு போனது போல உணர்ந்தவன்.) கடைசியாக அவனை சந்தித்து ஒவ்வொருவர் வாழ்விற்கும் ஒரு காரணமும் அர்த்தமும் இருக்கிறது என்று எடுத்துச் சொல்வது ஒரு பிலிபினோ சிறுமி. எட்டி இறப்பதற்கு முன்பு அவன் ஜெயண்ட் வீலில் மாட்டிக்கொண்ட சிறுமியைக் காப்பாற்றி விட்டுத்தான் இறந்தான் என்ற உண்மையைச் சொல்லி அவன் மனதில் முள்ளாய்க் குத்திய கேள்விக்கு பதிலளிக்கிறாள். (பிலிப்பைன்ஸில் அவனும், நண்பர்களும், கேப்டனும் சிறையிலிருந்து தப்பி ஓடும்போது சிறைக்கு தீ வைக்கிறார்கள். கடைசி நிமிடத்தில் கட்டிடத்துக்குள் யாரோ இருப்பது போல உணர்ந்து அவரைக் காப்பாற்ற எட்டி முயற்சிப்பதற்குள் எல்லாம் காலி. அந்தச் சிறுமிதான் இவள்.)

வாழும்போது தன் வாழ்க்கை முழுவதும் தான் ஒரு அர்த்தமில்லாத வாழ்க்கை வாழ்வதாகவும், எதற்கும் உபயோகமற்றதாகவும், தன் மீது அன்பு செலுத்தாத தந்தையினால் தான் அடைந்திருக்க வேண்டிய பலவற்றை இழந்து விட்டதாகவும், தன் அன்பு மனைவியை அவளை நேசித்த அளவுக்கு நல்ல நிலைமையில் வைத்திருக்க முடியவில்லை என்ற குற்ற உணர்ச்சியுடனுமே கழித்த எட்டி, இறந்த பின்பு இந்த 5 பேர் சொன்ன செய்திகளின் மூலம் அனைத்திற்கும் விடை காண்கிறான்.

புத்தகத்தை ஆழ்ந்து படிக்கும்போது எட்டி வேறு யாரும் அல்ல, அது நாம்தான் என்பது புரியும். நாம் ஒவ்வொருவரும் மற்றவர்களுடன் எப்படி பிணைந்திருக்கிறோம் என்பதும் புரியும். மனித வாழ்வை சிறந்த முறையில் கழிக்க தேவையான சக மனிதர்களை மதிப்பது/புரிவது (empathy) , தியாகம், மன்னிக்கும் குணம், அன்பு மற்றும் இரக்க குணங்கள் - இவற்றை அவனைச் சந்திக்கும் ஒவ்வொருவரும் வலியுறுத்துகிறார்கள்.

சொல்லியிருக்கிற செய்திகள் போலவே, ஒவ்வொரு அத்தியாயத்துக்கு நடுவிலும் எட்டியின் எதாவது ஒரு பிறந்த நாளில் நடந்த சம்பவத்தைச் சொல்வது என்று கதையின் வடிவமும் வித்தியாசமாக இருக்கிறது. சிறிய புத்தகம்தான். ஆனால் நம்முடன் நெருங்கிய தொடர்பு உள்ளது என்ற வகையில் படித்து முடிக்க தாமதமாகலாம். இது போன்ற புத்தகங்களை ஒரே மூச்சில் படித்து விட்டு அடுத்த புத்தகத்தை எடுப்பது கடினம். மெதுவாக அனுபவித்து படித்தால் அதில் கிடைக்கும் கிளர்ச்சியே தனி. படித்துப் பாருங்கள்.

Saturday, February 7, 2009

அவனோடே ராவுகள் .... 6

முந்தைய பதிவுகள் ...1 ...2 ...3 ...4 ...5


Many Lives Many Masters
Author : Dr Brian Weiss

"இந்த செய்திகளை உலகத்துக்கு சொல்ல வேண்டும் என்ற வைராக்கியத்தை எனக்குள் ஏற்படுத்திக்கொள்ள - அதுவும் நிச்சயமாக என் தொழிலுக்கு ஊறு விளைவிக்கலாம் என்ற ஆபத்துடன் - எனக்கு 4 வருடங்கள் பிடித்தது. ஆனால் இதை பகிர்ந்து கொள்வதால் எனக்கு நேரக்கூடிய இன்னல்களை விட சொல்லாமல் இருப்பது இன்னமும் மோசம் என்று தோன்றியது. நான் ரிஸ்க் எடுக்கத் தயங்கும்போதெல்லாம் என் ஹங்கேரிய தாத்தா மிகுந்த பிரியத்துடனும் குறும்பாகச் சொல்வார் - vat the hell?" - புத்தகத்தின் முன்னுரையில் ஆசிரியர் சொல்லியிருப்பது.

புத்தக ஆசிரியர் ஒரு மனநல மருத்துவர். வாழ்க்கையில் அறிவியல் பூர்வமாக நிறுவ முடியாத எந்த கோட்பாடையும் நியதியையும் மறுத்தவர். ஒன்றை நிரூபிக்கமுடியாது என்றால் அது கிடையாது என்று தீர்மானமாக இருந்தவர். அவர் வாழ்வில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை அவரே சொல்வதுதான் இந்தப் புத்தகம்.

இவர் கொலம்பியா பல்கலைக்கழகத்திலும் யேல் மருத்துவக் கல்லூரியிலும் படித்தவர். அவரிடம் ஒருநாள் கேத்தரின் (27) என்ற மன அழுத்த நோயாளி வருகிறாள். வழக்கமான மருத்துவ முறைகளில் முன்னேற்றம் ஏதும் இல்லாததால் hypnotic regression என்ற ஆழ்நிலை மனக்கட்டுப்பாட்டுக்கு உட்படுத்துகிறார். அப்போது அவருக்கு நேரும் வித்தியாசமான, அதுவரை அவர் அனுபவித்திராத, அவருடைய அறிவுக்கு சவாலாக விளங்கிய அனுபவங்களே இந்தப் புத்தகம். இந்த சிகிச்சையின்போது கேதரின் தன்னுடைய முன்பிறவிகளைப் பற்றியும் (கிட்டத்தட்ட 89 முற்பிறவிகள் !!), இரு பிறவிகளுக்கு இடைப்பட்ட நிகழ்ச்சிகளையும் கூட மிகவும் தெளிவாக நினைவு கூறுகிறாள். டாக்டரால் மறுக்க முடியவில்லை.

தன் ஆராய்ச்சியைத் தொடர்ந்து விர்ஜினியா பல்கலைக்கழகத்தின் டாக்டர் இயான் ஸ்டீவன்சனுடைய ஆய்வுகளில் சில குழந்தைகள் தமக்கு கொஞ்சமும் அறிமுகம் இருக்க வாய்ப்பில்லாத மொழிகளில் கூட பேசுவதைப் (xenoglossy) பற்றி எழுதியிருப்பதை அறிகிறார். கேதரினிடம் இன்னும் சில ஆராய்ச்சிகள் நடத்துகிறார். அதில் முற்பிறவி/மறுபிறவிகளைப் பற்றிய குறிப்புகள் பழைய ஏற்பாட்டில் இருந்ததையும், பின்னால் வந்த ரோமாபுரி மன்னன் கான்ஸ்டன்டைனும் அவன் தாயார் ஹெலினாவும் சர்ச்சுகளின் வளர்ச்சிக்கு இது இடைஞ்சலாக இருக்கும் என்று கருதி அந்தக் குறிப்புகளை நீக்கியதையும் சுட்டியிருக்கிறார்.

புத்தகத்தில் முற்பிறவிகளை விட, கேதரினுக்கு சில ஆசான்களின் குரல்கள் மூலமாகக் கிடைத்த சில செய்திகள் (messages) மிகவும் ஆச்சரியமாக இருக்கின்றன. அவைகளைப் அர்த்தத்தின் ஆழத்தைப் பார்க்கும்போது இந்து மதத்தின் அடிப்படைக் கோட்பாடுகளுடன் மிகவும் ஒத்துப்போவது தெரியும். "கற்று அறிந்து கொள்வது நமக்கிடப்பட்ட கடமை. கற்பதன் மூலம் கடவுளை அறிந்து கொள்வது, கடவுளை நெருங்குவது". வேதம் சொல்வது போல "ஞானானாத் ஏவ கைவல்யம்" - ஞானமே கடவுளை அடையும் வழி. பிரமிப்பாக இருக்கிறது.

ஒருமுறை டாக்டர் ப்ரையன் தனது தந்தையின் மற்றும் இறந்து போன மகனின் குரல்களில் சில செய்திகளை கேட்க நேருகிறது. மற்ற எவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லாத சில செய்திகளை கேதரின் தெளிவாகக் கூறுகிறாள். டாக்டரின் தந்தையின் ஹீப்ரு பெயர், டாக்டரின் மகன் ஒரு இதய நோயின் காரணமாக இறந்துபோனது பற்றி, டாக்டர் மனநல மருத்துவத்துறையை ஏன் தேர்ந்தெடுத்தார் என்பதெல்லாம் விளக்கமாகச் சொல்கிறாள். அவருடைய மகன் பிறந்து ஒரு குறுகிய வாழ்வு வாழ்ந்தது சில கடன்களை தீர்ப்பதற்காக என்று சொல்வது நமது வேதாந்தத்தின் அடிப்படையான கர்மா. "நமக்கு தீர்ப்பதற்கான கடன்கள் இருக்கின்றன. அவை தீராத பட்சத்தில் அவற்றை இன்னொரு பிறவிக்கு எடுத்துச் சென்று தீர்த்தே ஆகவேண்டும்" என்று தனக்கு ஒரு ஆசான் செய்தி சொன்னதாக கேதரின் கூறுகிறாள். இது இந்து மதத்தின் ஆணிவேரான நியதி.

இந்து மதத்தில் பிறந்ததாலோ, அல்லது இந்து மதக் கோட்பாடுகளைப் பற்றி சிறிதளவு தெரிந்திருப்பதாலோ என்னவோ, கேதரினுக்கு ஆசான்களிடமிருந்து கிடைக்கும் ஒவ்வொரு செய்தியையும் நமது வேதாந்தத்தோடு ஒப்பிட்டு அதன் உண்மையான, ஆழமான, தீர்க்கமான அர்த்தத்தை புரிந்து கொள்ள முடிகிறது. தனிப்பட்டமுறையில் எனக்கு இன்னமும் மறுபிறவி போன்ற தத்துவங்களை ஏற்க முடியவில்லை என்றாலும் வேதாந்த்தத்திற்கும் இந்த செய்திகளுக்கும் உள்ள நேரடித் தொடர்பை சுலபமாக உணர முடிகிறது.

இந்தப் புத்தகமே வெறும் கட்டுக்கதையோ என்று பல விமர்சனங்கள் உள்ளன. ஆனால், என்னைப் பொறுத்தவரை, புத்தக ஆசிரியர் தன்னுடைய 50 வருட தொழிலை பணயமாக வைத்து ஒரு கற்பனையான கதையை எழுத வேண்டிய எந்த அவசியமும் இல்லையே !! இத்தனைக்கும் அவர் ஒரு மரியாதைக்குரிய பழுத்த மனநல மருத்துவர். அதோடு மியாமியில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரியில் மனநல மருத்துவப் பிரிவின் தலைவர். நடைமுறையில் இப்படி ஒரு அறிவியலுக்கு அப்பாற்பட்ட செய்தியை புத்தகமாக கொடுப்பதில் அவருக்கு இழப்புதான் அதிகமாக இருக்கலாமே தவிர அடைய ஏதும் இருப்பதாக நான் நினைக்கவில்லை.

ஆசான்களின் சில செய்திகள் - புத்தகத்திலிருந்து :

"கற்பதும், அறிவதும், அதன் மூலம் கடவுளைப் போல ஆவதும் நமது கடமை. அறிவின் மூலம் கடவுளை அடைந்து பிறகு ஓயலாம். பின்பு நாம் திரும்ப வந்து பலருக்கு இதை அறிவுறுத்தி உதவ வேண்டும்"

"பல கடவுளர்கள் உள்ளனர் - நம் ஒவ்வொருவருக்குள்ளும் கடவுள் இருப்பதால்"

"நாம் ஒவ்வொருவரும் எவ்வளவு 'உணர்ந்திருக்கிறோம்' என்பதில் வெவ்வேறு தளங்களில் இருக்கிறோம்.... அது நாம் எந்த அளவுக்கு 'உணர்ந்து ' # எவ்வளவு முன்னேறியிருக்கிறோம் என்பதைப் பொறுத்தது..."

"சர்வம் சக்தி (energy) மயம்... மனிதர்களால் வெளிப்புறத்தை மட்டுமே உணர முடியும். ஆனால் முயன்றால் உட்புறமும் உணர முடியும். சொல்லப்போனால் இயல்பு நிலையில் (physical state) இருப்பது அசாதாரணம். உணர்வு நிலையில் (spiritual state) இருப்பதுதான் நமக்கு இயற்கையாக விதிக்கப்பட்டது"

"மனிதர்கள் அனைவருக்கும் மரணத்தைப் பற்றிய ஒரு விதமான பயம் உண்டு. ஆனால், வாழ்க்கை என்பது முடிவற்றது, இதில் பிறப்பும் இல்லை ; இறப்பும் இல்லை என்பது தெளிவாகி விட்டால் அந்த பயம் அழிந்து விடும்"

இந்தப் புத்தகத்தை ஒரு அறிவியல் சார்ந்த ஆன்மிகப் புத்தகமாகவே நான் பார்த்தேன். மிகவும் வித்தியாசமான வழக்கத்திற்கு மாறான மருத்துவப் புத்தகம். மனநலத்துறையில் பல சர்ச்சைகளைக் கிளப்பி விட்டாலும், யாரும் இந்தப் புத்தகத்தில் உள்ள செய்திகளை ஆணித்தரமாக மறுக்கவில்லை. மாறாக இன்னும் பல ஆராய்ச்சிகளை தூண்டி விட்டு, இன்னும் ஆழமான, அறிவியலுக்கு அப்பாற்பட்ட நிகழ்வுகளை மருத்துவத்திற்கு காட்டியுள்ளது. நான் இதை 6 வருடங்களுக்கு முன்பு படித்ததிலிருந்து இதைத் தொடர்ந்த பல செய்திகளைப் படித்து மிகவும் ஆச்சரியமடைந்துள்ளேன். வாய்ப்பு கிடைக்கும்போது படியுங்கள். உங்களுக்கும் வாழ்வோடு கூடிய ஒரு
வித்தியாசமான வாசிப்பனுபவம் கிடைக்கும்.

# இங்கே 'உணர்வு' என்பது consciousness என்ற அர்த்தத்தில்

Wednesday, October 8, 2008

அவனோடே ராவுகள்... 4

முந்தைய பதிவுகள் ...1 ...2 ...3



ONE
Author : Richard Bach


"இன்றைக்கு நிகழக்கூடிய ஒரு ஒரு சிறிய மாற்றம், முற்றிலும் மாறுபட்ட நாளையை நமக்கு அளிக்கக்கூடும். கடினமான பாதையை தேர்ந்தெடுப்பவர்களுக்கு ஆச்சரியகரமான பரிசுகள் காத்திருக்கும். ஆனால் அவை காலத்தினுள் மறைந்திருக்கும். நாம எடுக்கற கவனமற்ற, குருட்டுத்தனமான ஒவ்வொரு முடிவுக்கும் நம்மைச் சுற்றியுள்ள உலகத்தில் ஒரு உத்தரவாதமும் கிடையாது"

புரியற மாதிரியும் இருக்கு... புரியாத மாதிரியும் இருக்கா? அப்பிடி இருந்தா அது ரிசர்ட் பாக்-க்கோட தப்பு இல்ல. மொழி பெயர்த்த என்னொட தப்பா இருக்கும்.

இப்ப ஒரு சின்ன கற்பனை. கடந்த காலத்துல இருந்த 'நாமும்' நிகழ் கால 'நாமும்' சந்திச்சா எப்பிடி இருக்கும்? இணயா இருக்கற இரு வேறு உலகங்கள்ல இருக்கற 'நாம' நேருக்கு நேர் பாத்துக்கிட்டா எப்பிடி இருக்கும்? காலத்துக்கு பின்னால நமக்காக என்ன காத்துக்கிட்டிருக்குன்னு 'இப்ப' தெரிஞ்சா, அத நாம எப்பிடி மாத்தவோ, ஏத்துக்கவோ நம்மளை தயார் பண்ணிப்போம்? (ஏண்டா இப்பிடி போட்டு கொழப்பற? இப்ப, அப்பறம்னு.... சரி... சரி... எவ்வளவு நாளைக்குத்தான் கொலை, கொள்ளை, சொத்து தகராறுன்னே படிச்சுக்கிட்டிருக்கறது?) ரிசர்ட் பாக்கும், மனைவி லெஸ்லியும் ஒரு வித்தியாசமான பயணத்துல அவுங்க போகாத பாதையில என்ன கத்துக்கறாங்க, அதுல நம்ம எல்லாருக்கும் பொதுவானதா என்ன இருக்குங்கறதுதான் இந்த புத்தகம். அவங்க போற அந்த பயணத்துல கற்பனையும், பயமுந்தான் உலகத்தை மீட்கவோ (அல்லது அழிக்கவோ) தேவையான கருவிகள். (என்ன... பாய பிறாண்ட ஆரம்பிச்சாச்சா?)

12B படம் பாத்துருப்பீங்களே.... கிட்டத்தட்ட அதுமாதிரியான 'கதை'தான் இதுவும். வாழ்க்கைல நாம எடுக்கற ஒவ்வொரு முடிவும் நம்மையும், நம்ம சுத்தி இருக்கற உலகத்தையும் எப்பிடி மாத்தி அமைக்குதுங்கறதை அலசற மாதிரியான புத்தகம். இன்னிக்கு காலைல பஸ்ல பக்கத்து உக்காந்தவங்களைப் பாத்து சிரிச்சது, பஸ் ஸ்டாண்டுல பப்ளிக் டாய்லட்டுக்குள்ள போறதா வேண்டாமான்னு 5 நிமிஷம் யோசிச்சுட்டு தாங்க முடியாம போகலாம்னு முடிவு பண்ணது, லிஃப்ட் கேட்டது ஒரு காலேஜ் பொண்ணுங்கிற ஒரே காரணத்துக்காக வண்டிய நிறுத்தினதுன்னு நம்மளோட ஒவ்வொரு முடிவும் நம்மோட அடுத்த சில விநாடிகளையோ அல்லது மீதி வாழ்க்கையையுமோ பல விதங்கள்ல பாதிக்கலாம். ரொம்பவே ஆச்சரியகரமான அல்லது எதிரிக்குங்கூட வரக்கூடாத விளைவுகளை ஏற்படுத்தலாம். அது மாதிரி சமயங்கள்ல வேற மாதிரி முடிவு எடுத்திருந்தா என்ன ஆகியிருக்கும்? ரிவர்ஸ் கியர் போட்டு அந்த விநாடிக்குப் போயிட்டு, அங்கிருந்து பயணத்தை தொடர்ந்தா.... போற வழில அங்க ஒரு முடிவு எடுக்கறோம்.... அது வேற மாதிரி இருந்தா.... இப்பிடி கற்பனை பண்ணிக்கிட்டே போனா? எப்பிடி சுத்தினாலும் மறுபடி எங்க வருவோம் தெரியுமா? என்ன ஒண்ணு தெளிவாத் தெரியும்? இவரோட மொதல் புத்தகம் "ஜொனாதன் லிவிங்ஸ்டன் - ஸீ கல்" ல சொன்ன அதே செய்திதான். அன்பு, மன்னிப்பு, அமைதி. இதுதான் எல்லாத்துக்கும் மருந்து.

இவரோட எல்லாப் புத்தகங்கள்லயும் (இன்னொரு புத்தகம் Illusions [காட்சிப் பிழைகள்]) 'பறத்தல்'ங்கறது ஒரு முக்கியமான அம்சமா இருக்கு. யோசிச்சுப் பாத்தா, ஒரு வித்தியாசமன கோணத்துல உலகத்தையும், நம்ம சுத்தி நடக்கறதையும், நம்மளை நாமே பாக்கறதுக்கும் பறக்கறதுங்கற உத்திய இவர் கையாளுகிறாருன்னு நெனைக்கத் தோணுது. இந்தப் புத்தகத்தை பொறுத்த வரைக்கும், பல ஐடியாக்களை அங்கங்க விதைச்சிருந்தாலும் சிலதுகள விவரமா தொடர்ந்து விளக்கல. அது ஒரு குறை மாதிரி தெரிஞ்சாலும், படிக்கறவருக்கு ஒரு சுதந்திரத்தைக் கொடுத்துட்டார்னு வெச்சுக்கலாம். படிக்க ரொம்ப சுவாரசியமா இருந்தாலும், அங்கங்க போர் அடிக்கற மாதிரியும் தோணுச்சு. சில பக்கங்களை அப்பிடியே வேகமா புரட்டிட்டு போயிட்டேன். ஆனா சில பத்திகள மூணு நாலு தடவ படிச்சாத்தான் புரியற மாதிரி இருந்தது. அது கூட என்னுடைய புரிதல்ல இருந்த குறைபாடா இருக்கலாம். அல்லது நெஜமாவே அது அவருக்கே குழப்பமில்லாம எழுத முடியாம இருக்கலாம். ஏன்னா, வேற ஒரு புத்தகத்துல அவரே சொல்லியிருக்காரு "என்னோட எண்ண ஓட்டங்களுடைய வேகத்துக்கு வார்த்தைகள் கிடைப்பதில்லை"ன்னு. அது ஒரு பக்கம் இருந்தாலும், இது மாதிரியான வித்தியாசமான, சிக்கலான கற்பனைகளை எழுத்தில் கொண்டு வரதுல சவால்கள் நிறையவே இருக்கு.

நேரம் கிடைக்கும்போது படிச்சுப் பாருங்க. முடிஞ்சா உங்க கருத்தை இந்த பதிவுல பின்னூட்டமாவோ அல்லது ஒரு தனி பதிவாகவோ போடுங்க. ஒவ்வொருத்தரோட வாசிப்பனுபவமும் ஒவ்வொரு மாதிரி. என்ன சொல்றீங்க?

சிறு விளக்கம்: நண்பர் பழமைபேசியோட பின்னூட்டத்த படிக்கும்போதும், நண்பர்கள் அப்துல்லா, விஜய் ஆனந்த் - இவங்களோட ச்சாட் பண்ணினபோதும், நான் (அல்லது இந்தப் புத்தகம்) சொல்ல வந்ததை வேற மாதிரியா புரிஞ்சுக்கிட்ட மாதிரி தோணுச்சு. அதுதான் இந்த விளக்கம்.

அதாவது, இதுல 'சம கால' நிகழ்வுகள் எதுவும் இல்ல. வாழ்க்கைல ஒரு கட்டத்துல ஒரு முடிவு எடுத்து முன்னால போறோம். அப்பிடி முன்னால போன பிறகு, அந்த குறிப்பிட்ட கட்டத்துல வேற மாதிரி முடிவு பண்ணியிருந்தா என்ன ஆகியிருக்கும், அதோட தாக்கம் தொடர்ந்து எப்பிடி இருந்திருக்கும்னு கற்பனை பண்றதுதான் ஐடியா. நடந்தத மாத்த முடியாது. ஆனா மாத்தினா எப்பிடி இருக்கும்னு யோசிச்சுப் பாக்கறது. அந்த படிப்பினைய எதிர்காலத்துல சில முடிவுகள் எடுக்கும்போது உபயோகப்படுத்திக்கறது. இதுதான் ஐடியா.

இப்ப, மேல சொன்ன உதாரணத்துல, பஸ்ல பக்கத்துல உக்காந்திருக்கறவரப் பாத்து சிரிக்கலாம், பேசலாம்னு முடிவு பண்றோம். ஒண்ணு, அவரும் ஒரு சக பதிவரா இருக்கலாம், நல்ல பெரிய பதவில (அப்துல்லா அண்ணன் மாதிரி), மோகனப்ரியா மாதிரி இன்னொரு ஹரிப்ரியாவுக்கு கேரம் விளையாட்டுல முன்னேற உதவி செய்யலாம். அது ஒரு உலகம். அல்லது அந்தாளு ஒரு தப்பிச்சு ஓடி வந்த கைதியா இருந்தா, பின்னால ஒடி வந்து புடிச்ச போலீசு (சும்மா ஒரு கற்பனைதான் ஹி..ஹி) நமக்கும் சேத்து லாடம் கட்டலாம். வாழ்க்கையே மாறிப்போகும். இது வேறு உலகம். ஆனா அந்த குறிப்பிட்ட கட்டத்துல இருந்து காலக்கணக்குப்படி பாத்தா ரெண்டும் "இணையா" இருக்கற உலகங்கள். இந்த "கால இணை"யத்தான் வேற வேற உலகங்களா கற்பனை பண்ணிக்கிறது. ஒண்ணு நாம ஒரிஜினலா முடிவெடுத்த நிஜ உலகம். இன்னொன்று வேற முடிவு எடுத்திருந்தான்னு யோசிச்சு பாக்கற "இணை"யான கற்பனை உலகம். (என்னது...பாய சுத்தமா பிறாண்டி சேமியா உப்புமான்னு நெனச்சு சாப்ட்டு முடிச்சாச்சா??)


இது ஒரு அடிப்படையான, சுலபமான உதாரணம். அப்பறம் உங்க கற்பனை.

Wednesday, September 10, 2008

அவனோடெ ராவுகள்...3

முந்தைய பதிவுகள் ...1 ...2

நீங்க இதுவரைக்கும் போகவே போகாத இடத்துல நீங்க உங்க வாழ்க்கையோட ஒரு பகுதிய கழிச்ச மாதிரியா உணர்ந்திருக்கீங்களா? நீங்க இதுவரைக்கும் உணராத சில உணர்வுகளை அனுபவிச்சுருக்கீங்களா? ரெண்டுமே இந்த புத்தகத்தை படிச்சா கிடைக்கும்.


The Kite Runner
Author : Khaled Hosseini

இந்த புத்தகத்தைப் பத்தி யாரும் சொல்லாத ஒண்ணை நான் சொல்லிட முடியாது. அந்த அளவுக்கு நிறைய பேரு எழுதித் தீர்த்துட்டாங்க. இரண்டு சிறு வயது நண்பர்களுக்கிடையேயான உறவையும், உணர்வுகளையும் பத்தின கதை. காலீத் ஹொஸெய்னியோட முதல் கதைன்னு கற்பூரம் அணைச்சு சத்தியம் பண்ணினாக் கூட நம்ப முடியாது. மனித உணர்வுகள அவ்வளவு அற்புதமா எழுத்துல கொண்டு வந்திருக்காரு.

போர்னாலயும் தீவிரவாதத்துனாலயும் சீரழிஞ்சுக்கிட்டுருக்கற ஆப்கானிஸ்தான்ல நடக்கற கதை. அமீர் ஒரு பணக்கார வீட்டு பையன். ஹாஸன் அவுங்க வீட்டுல வேலைக்காரனோட பையன். கதைல பல அடுக்குகள் இருக்கற மாதிரி தோணலாம். ரெண்டு சிறுவர்களுக்கு நடுவுல இருக்கற நட்பு ஒரு பக்கம், உலகத்தால புறக்கணிக்கப்பட்ட, காலத்தின் கோலத்தால சின்னாபின்னமான ஒரு நாடு மறுபுறம். அப்பாவோட இருவேறு முகங்களை ஏத்துக்கமுடியாத, கோழைத்தனத்தோட போராடுற, குற்ற உணர்ச்சியால மருகுகிற அமீர்ங்கற பணக்கார சிறுவனோட போராட்டம் இன்னொரு பக்கம்.

ஆனா எனக்கென்னமோ, நம்ம எல்லாருக்கும் பொதுவான, சுலபமா நம்மளோட தொடர்பு படுத்திக்க கூடிய, ஆழமான 2 உணர்வுகளை பத்தின கதை மாதிரி தோணுது. கதை நடந்த இடத்துல இருந்து நேர்ல அனுபவிச்ச மாதிரி நம்ம உணர முடியறதுதான் இந்த கதையோட வெற்றின்னு நான் நினைக்கிறேன்.

ஓண்ணு, பழய நினைவுகள். அதுல எதுவுமே சரியாக இல்லாட்டாக் கூட. ஒரே ஆத்துல மறு முறை இறங்க முடியாதுன்னு சொல்லுவாங்க. (One cannot step into the same river) காலம்கற சக்தி பழச முழுசாவோ, பாதியாவோ அழிச்சுடுது. அதுனாலதானோ என்னவோ, நாம் படிச்ச பள்ளிக்கு இன்னிக்கு போனா, கட்டடங்கள் அதே மாதிரி அதே இடத்துல இருந்தாக் கூட, அந்த பழய நினைவுகளை அதே வீரியத்தோட திரும்ப அனுபவிக்க முடியாம போகுது. அதுனாலதான், அமீர் அமெரிக்காவுக்கு போனலும் தன் நண்பனோட பட்டம் விடுற சுகத்தை இழந்து தவிக்கறதை நாமும் உணர முடியுது. அதே மாதிரி, அமீர் காபூலுக்கு திரும்ப வந்து அதோட இன்றைய கோலத்த பாத்து சகிக்க முடியாம மருகறதையும் பார்க்கும்போது எப்பிடி ஆறுதல் சொல்றதுன்னு தவிக்கிறோம்.

ரெண்டாவது குற்ற உணர்ச்சி. நம்மள்ல யாருக்கு இல்லை? தன்னோட உயிர் நண்பனை செய்யாத ஒரு குற்றத்துக்காக தண்டனை அனுபவிக்க வெச்சதுக்கக அமீர் வாழ்க்கை பூராவும், அதை விட்டு வெளிய வர போராடுறான். அது முடியுமா? அமீரோட அப்பா பிறகு ஏதோ காரணத்துனால அமெரிக்கவுக்கு குடும்பத்தோட இடம் பெயர்ந்தாலும், அமீருக்கு நல்ல கல்வியும், நல்ல வாழ்க்கையும் அமைஞ்சாலும், கண் முன்னால நண்பனை எல்லாரும் திருடன்னு ஏசுரதப் பாத்தப்பறமும் தான் ஒண்ணும் செய்ய முடியாம இருந்தத நினைச்சு வருந்தாத நாளே இல்லை. இத்தனைக்கும் அமீர் வேற ஒருத்தனால பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணுக்கு மறு வாழ்வு கொடுக்கறான். ஒரு ஆப்கானிக்கு, இது ஒரு உயர்ந்த தியாகம். அப்பாவோட மறு புறத்தையும் அவர் செய்த, செய்யற கூடாத செயல்களையும் பார்த்து ரொம்பவே வெறுத்துப் போறான்.

பின்னால, தன் நண்பன் ஹாஸனின் மகனோட காபூலுக்கு திரும்ப வரும்போது, அமீருக்கு கிடைச்ச ஒரு சுதந்திரத்தை நாமும் கூடவே முழுமையா உணரலாம். சுமையில்லாத, லேசான ஒரு மனச விட சுதந்திரம் வேற என்ன இருக்க முடியும்னு கேக்கத் தோணுது. அமீர், அந்த சின்னப் பையனோட பட்டத்தை துரத்திக்கிட்டு ஓடும்போது, தொலைந்து போன எல்லாத்தையும் மீட்டுக்க ஒரு வழி கிடைச்சுட்ட மாதிரி தெரியுது.

இதை திரைப்படமாப் பாத்தபோது இன்னும் அழுத்தமா என்னை பாதிச்சுது. முடிஞ்சா இந்த கதைய புத்தகமாகவோ, படமாகவோ பார்க்க முயற்சி பண்ணுங்க. இது மாதிரி நம்ம உணர்வுகளை முழுமையா ஆளுகிற கதைகள் ரொம்ப குறைவு.

Friday, September 5, 2008

அவனோடெ ராவுகள்...2

முந்தய பதிவு ...1

இப்பொ இங்க அறிமுகப்படுத்தப் போற புத்தகம் ரொம்பவே பிரபலமான புத்தகம். உங்கள்ல நிறய பேரு படிச்சுருப்பீங்கன்னு நெனக்கறேன். பெஸ்ட் செல்லர்ஸ் பட்டியல்ல மொதப் பத்துக்குள்ள எடம் புடிச்ச புத்தகம்.

Jonathan Livingston Seagull
Author : Richard Bach






ஜொனாதன் லிவிங்ஸ்டன் ஒரு கடல் நாரை. ஸீ கல் -க்கு தமிழ் இதுதான்னு நினைக்கறேன். தன் கூட்டத்துல இருக்கற மத்த பறவைகள விட ரொம்ப வித்தியாசமானது. மத்ததுகள்லாம் மீன்பிடி படகுக கரைக்கு வந்தொடனே பறந்தடிச்சுக்கிட்டுப் போய் சிந்துனது செதறுனதெல்லம் திங்கணும், வயித்த ரொப்பணும்னு இருக்கறப்போ, ஜொனாதன் மட்டும் வேற மாதிரி யோசிக்கும். இதுதான் வாழ்க்கையா? இதுக்காகத்தான் நாம பொறந்துருக்கமா? அப்பிடி இருக்கவே முடியாது... நமக்கு பறக்கற சக்தி இருக்கு... அதை நல்லா கத்துக்கணும்... உலகத்துலயே மிகச் சிறந்த, மிக வேகமா, மிகுந்த ஆளுமையோட பறக்க கூடிய கடல் நாரையாகணும்னு தீராத ஆசை. அதுக்காக ஒரு நாளைக்கு பல மணி நேரம் தன்னந் தனியா உயரப் போய் பறந்து பழகும். யோசிச்சு யோசிச்சு பறந்து பறந்து பழகி பழகி 215 கி.மீ. வேகத்துல பறக்கக் கத்துக்குது. ரெக்கய எப்பிடி மடக்கி வெச்சுக்கணும், எப்பொ விரிக்கணும், எவ்வளவு விரிக்கணும்கிறதெல்லாம் நிறய தடவ விழுந்து, அடிபட்டு, உயிரே போற மாதிரியான வலிகள உணர்ந்து, தன்னுடைய எல்லைகள தெரிஞ்சு கொஞ்சம் கொஞ்சமா விடா முயற்சியோட பழகி ஓரளவுக்கு தன்னுடைய கனவ நனவாக்குது. ஜொனாதன் இந்த மாதிரி இருக்கறது அதனுடைய அம்மா அப்பவுக்குக் கூட சம்மதமில்ல. அந்த்க் கூட்டத்தோட தல ஜொனாதன பஞ்சாயத்துல நிக்க வெச்சு 'விசாரணை' பண்ணி கூட்டத்தை விட்டு ஒதுக்கி வெச்சுடுது.

ஆனா ஜொனாதன் அதப் பத்தி கவலப்படாம தன்னுடைய பயிற்சிய வேற எடத்துக்குப் போய் தொடருது. ஒரு நாள் அங்க வேற சில கடல் நாரைகள ஜொனாதன விடவும் வேகமா அழகா பறந்துக்கிட்டுருக்கறத பாக்குது. அங்க சல்லிவன்கிற நாரைய சந்திக்குது. அப்பறம்தான் தெரியுது அங்க இருக்கற நாரைகளெல்லாம் ஜொனாதன மாதிரியே பறக்க ஆசைப்பட்டு கூட்டத்துல இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டதுகன்னு. அங்க ஜொனாதன் ரொம்ப சீக்கிரமாவே இன்னும் நெறய கத்துக்குது.
ஒரு நாள் இப்பிடி பறந்துக்கிட்டிருக்கும்போது இன்னொரு மூத்த நாரை 'சியாங்'க சந்திக்குது. சியாங் மணிக்கு 300 கி.மீ வேகத்துல ரொம்ப சுலபமா பறக்கறதயும், கண நேரத்துல பல மைல்கள் தாண்டி போய் வரதயும் பாத்து ஆச்சரியப்பட்டுப் போய் அதுகிட்ட கத்துக்க ஆரம்பிக்குது. இது எப்பிடி சாத்தியம்னு ஜொனாதன் கேக்கறதுக்கு சியாங் சொல்லுது "நினைவோட வேகத்துல எந்த இடத்துக்கு வேணாலும் பறக்கறதுக்கு, மொதல்ல அந்த இடத்துக்கு நாம வந்து சேந்தாச்சுன்னு நம்பணும்". இது புரிய கொஞ்சம் கஷ்டமா இருக்கலாம். ஆனா நம்பிக்கை ஒரு முக்கியமான சக்தின்னு உணர வெக்குது.

இப்பிடி சியாங் கிட்ட நெறய கத்துக்கும்போது சியாங் சொல்ற மாதிரி அன்புதான் எல்லத்தையும் விட பெரியது, நெறய கத்துக்க கத்துக்க, மனமுதிர்ச்சி கிடச்சு, எல்லாத்தயும் விட அன்பு மேலோங்கி நிக்கும்னு புரிஞ்சுக்குது. ஒரு நாள் தன்னோட கூட்டத்துக்கு திரும்பி போய் தன்னுடைய அனுபவத்தையெல்லம் பகிர்ந்துக்கணும், மத்த நாரைகளுக்கும் இப்பிடி உயர வேகமா பறக்கறதையும், அன்போட வலிமையையும் புரிய வெக்கணும்னு தோணுது, சியாங்க் கிட்டயும், சல்லிவன் கிட்டயும் சொல்லீட்டு திரும்புது. ஆனா மத்த நாரைக ஜொனாதன கூட்டத்துல சேத்திக்காம மறுபடி வெரட்டி விட்டுடுதுக. ஆனாலும் ஜொனாதன் கவலப் படாம பறக்கறதுல ஆர்வமிருக்கற ஒரு சில நாரைகள கூட்டிக்கிட்டு போய் தான் கத்துக்கிட்டத எல்லாம் பொறுமயா சொல்லிக் குடுக்குது. வெறுமனே சாப்பிட்டு உயிர் வாழரத விட ஒரு ரெக்கயோட இந்த முனயிலிருந்து மறு ரெக்கயோட அந்த முன வரைக்கும் வெறும் உடம்பு இல்ல, எண்ணங்கள். ஒரு நாரைக்கு இருக்கிற அளவில்லாத சுதந்திரம் பறக்கறது. அத முழுமையா அதனுடைய எல்லை வரைக்கும் கத்துகணும். முடிவுல நம்முடைய திறமைகள் அளவற்றதுன்னு தெரிஞ்சு அதுல ஒரு புரிதல் வரும்போது அளவில்லாத அன்பும் மன்னிக்கிற தன்மையும், இயற்கையோட இணையில்லாத சக்திக்கு முன்னாடி நாம ஒண்ணுமேயில்லங்கற விழிப்புணர்வும் வரும்கிறது ஜொனாதனோட செய்தி. ஜொனாதன் அடுத்த பயணத்த தொடங்குது.

இதுல ஜொனாதன்கிறது வேற யாரும் இல்ல. நாமதான். நம்முடைய திறமையோட எல்லைகள் நமக்குத் தெரியுமா? யோசிச்சுப் பாருங்க. நம்ம வாழ்க்கைல வரப்போற சல்லிவன் யாரு? சியாங் யாரு? நாம அவங்கள சந்திச்சுட்டோமா இல்ல இனிமேத்தானா? கத்துக்க நாம தயாரா? மத்தவங்களுக்கு கத்துக் குடுக்கவும் தயாரா? நாம போக வேண்டிய எடத்துக்கு போய் சேந்தாச்சுன்னு நம்மால தீர்மானமா நெனைக்க முடியுமா? எவ்வளவு கேள்விக.

இந்த புத்தகம் வெறும் 20 பக்கந்தான். மிஞ்சிப் போனா 1 மணி நேரத்துல படிச்சு முடிச்சுரலாம். ஆனா சொல்லியிருக்கற செய்தி.......? அத புரிஞ்சுக்க ஒரு சென்மம் போதாது.

புத்தகத்தோட வரி வடிவத்த மட்டும் படிக்க இங்க க்ளிக் பண்ணுங்க. படிச்சுட்டு முடிஞ்சா இதுல ஒரு பின்னூட்டம் போடுங்க.

Friday, August 29, 2008

அவனோடெ ராவுகள்

வந்தீங்களா? வாங்க.. வாங்க.. தலைப்பப் பாத்துட்டு என்னமோ ஏதோன்னு தோணுச்சா? ரொம்ப சாரி... அது சும்மனாச்சிக்கு வெச்சது... "சிறந்த புத்தகங்கள் - ஒரு எளிய அறிமுகம்" அப்பிடின்னு போட்டிருக்கலாம்தான்.... ஆனா இந்த புத்தகங்களையெல்லாம் பொதுவாக நான் ராத்திரி வேளைகள்ல படிச்சதுனால அப்பிடி தலைப்பு வெச்சேன். (அப்பாடா... தலைப்புக்கு நியாயம் சொல்லியாச்சு)

நான் ரியாத்ல சில மாசங்கள் வேலை செய்ய போனபோது, அங்க வேற ஒண்ணும் பொழுதுபோக்கு இல்லங்கறதால நாங்க தங்கியிருந்த அபார்ட்மென்ட்டுக்கு பக்கத்துல இருந்த "ஜரீர் புக் ஷாப்"தான் ஒரே ஆறுதல். அப்ப படிக்கக் கிடைத்த சில புத்தகங்களை எல்லோருக்கும் அறிமுகம் செஞ்சு வெக்கலாம்னு தோணுச்சு.


The Book of Mirdad : The Strange Story of a Monastery Which Was Once Called the Ark
Author : Mikhail Naimy

இந்த லெபனீய எழுத்தாளருடைய உண்மையான ஒரு அனுபவத்தை ஒட்டி எழுதியதுன்னு சொல்றாரு. பெய்ரூட்டுக்குப் பக்கத்துல இருக்கற ஒரு மலையை ஏற முயற்சி செய்யும்போது மேல ஒரு வித்தியாசமான மனிதரை சந்திக்கறாரு. அந்த மனிதர் 'நீ வருவன்னு தெரியும். மீர்தாத் உன்னப் பத்தியும், உன் அடையாளங்களையும் எழுதி வெச்சுருக்கான்' அப்பிடிங்கறாரு. அந்த புத்தகத்தையும் குடுக்கறாரு. அதுதான் "மீர்தாதின் புத்தகம்". இதப் படிக்கும்போது, நம்ம கீதை, வேதாந்தம், குர்-ஆன், விவிலியம் எல்லாம் நினவுக்கு வர்றதை தவிர்க்கவே முடியாது. மீர்தாத் சொல்ற ஒவ்வொரு கருத்தும் அந்த அளவுக்கு நமக்கு ரொம்ப பரிச்சயமானதா இருக்கு.

மேல சொன்ன மலை மேல இருக்கற மடத்துக்கு ஒரு நாள் மீர்தாத் வந்து சேர்றாரு. ஆனா அந்த மடத்தோட தலைவரா இருக்கறவருக்கு இந்த வரவு ரசிக்கும்படியா இல்ல. மத்த உறுப்பினர்களோட விருப்பத்துக்காக அனுமதிக்கறாரு. மடத் தலைவருக்கு நிறைய நன்கொடை வாங்கி மடத்தை விரிவு படுத்தணும்கறதுதான் குறிக்கோள். நோவாவின் படகு பற்றி படிச்சுருக்கோம். மிர்தாதும் அப்பிடி மனித குலத்தை இன்னொரு பிரளயத்துல இருந்து மீட்டெடுக்க வந்தவன்னு சித்தரிக்கப் படுறாரு. மடத்துக்கு வந்த நாளிலிருந்து மீர்தாத் மெல்ல அவருடைய கருத்துக்களை சொல்ல ஆரம்பிக்கறாரு. தலைவரைத் தவிர மற்ற உறுப்பினர்கள் ஒவ்வொருத்தரா புரிஞ்சுக்கிட்டு மீர்தாத் பக்கம் சாயத் தொடங்கறாங்க. தலைவருக்கு பிடிக்காததுனால பல விதங்கள்ல தொல்லை குடுக்கறாரு. ஆனா அதயெல்லாம் தாண்டி மீர்தாதோட புகழ் பரவ ஆரம்பிக்குது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கருத்தை எடுத்துக்கிட்டு அதப் பத்தி ஆழமா தர்க்கம் பண்ணி, முகத்துல அறையற மாதிரி உண்மைகள எடுத்துச் சொல்லி, மனிதனுடைய (சுய)உணர்வை (consciousness) விரிவு படுத்தி, கடவுளை "உணரவும்", மனிதன் தன்னுடைய "இரட்டைத் தன்மை" (duality) யிலிருந்து வெளிய வரவும் வழிகளைச் சொல்றாரு.

இந்த புத்தகத்தை படிச்சப்பறம் மீர்தாத் ஒரு புனைவுங்கற மாதிரி கூட தோணும். ஏன்னா, எழுதின மிக்கயில் நைமி ரொம்பவுமே கலீல் கிப்ரானின் எழுத்துக்களால பாதிக்கப்பட்டது தெளிவா தெரியுது. கவிதை மாதிரியான நடை. பொறுக்கி எடுத்த மிதமான, மென்மையான வார்த்தைகளைப் படிக்கும்போதே, அதை மீர்தாத் நம்ம முன்னாடி உக்காந்து மென்மையா சொல்ற மாதிரியான உணர்வைக் குடுக்குது. புத்தகத்துல உள்ள கருத்துக்களோட நமக்கு உடன்பாடு இருக்கோ, இல்லயோ, ரொம்பவே ஒரு வித்தியாசமான அனுபவத்தை உணர்ரத்துக்காகவாவது கட்டாயம் படிக்கணும். எனக்கு இதுவரை வேறெந்தப் புத்தகத்தையும் படிக்கும்போதும் கிடைச்சதில்ல. கீதையத் தவிர, கீதைய புத்தகம்னு நெனச்சா. ஒரு உதாரணத்துக்கு கூட புத்தகத்துல இருந்து சில வரிகள எடுத்து போடலாம்னா, என்னோட புரிதல முன் நிறுத்த இஷ்டமில்ல. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமா அதனோட அர்த்தம் புரியலாம். அதுதான் சரியும் கூட. மூலம் லெபனீய மொழியில் இருந்தாலும், ஆங்கில பதிப்புதான் ரொம்ப பாப்புலர். தமிழ் பதிப்பும் இருக்கு. ஆனா, நான் படிக்கல. வாய்ப்பு கிடைச்சா படிங்க. இந்த புத்தகத்தை படிச்சவங்களை எதாவது ஒரு விதத்துல கண்டிப்பா பாதிக்கும்.
டிஸ்கி 1: நான் எந்த மதத்தயோ, மத உணர்வுகளையோ, தனி மனிதக் கருத்துக்களையோ திணிக்கறதாகவோ, மறுக்கிறதாகவோ தயவு பண்ணி நினைக்காதீங்க. இத ஒரு புத்தகம்ங்கற அளவுல மட்டுமே பார்த்தேன். ஆனா, அதுல அடஞ்ச ஒரு பாஸிடிவ்வான பாதிப்பு எல்லாருக்கும் கிடைக்கணும்னு ஒரு ஆசை. அவ்வளவே. புரிஞ்சுக்கிட்டதுக்கு நன்றி.

டிஸ்கி 2: முதல் முறையா எழுதறதால, ஒரு நல்ல புத்தகத்தை நல்ல முறையில உங்களுக்கு அறிமுகப் படுதியிருக்கேனான்னு தெரியல.