Tuesday, December 30, 2008

"க‌ன‌வு மெய்ப்ப‌ட‌ வேண்டும்"

நம்ம ஒவ்வொருத்தருக்கும் 'வேணும்'னு கேக்கறதுக்கு நிறைய இருக்கு. குடுக்கறது யாரு? அது யாரா வேணும்னாலும் இருக்கட்டும். அத வாங்கிக்கறதுக்கு நம்ம தயாரா இருக்கணுமே. வாங்கிக்கிட்டேவும் இருக்க முடியாது. நாமளும் எதாவது திருப்பி குடுக்கணுமே. இந்தப் புத்தாண்டுல நம்ம ஒவ்வொருத்தரோட கனவுகள் நனவாகவும், தேவைகள் பூர்த்தியாகவும், நம்மால் ஒரு சிலரின் தேவைகள் பூர்த்தி செய்விக்கப் படவும் நம்மை விட வலிமையுள்ள ஏதோ ஒரு சக்தியிடம் பிரார்த்திக்கிறேன்.

இந்த சந்தர்ப்பத்துல என் நெருங்கிய நண்பர் ஒருத்தரோட பாடல். எந்தக் காலத்திலும் யாருக்கும் பொருந்தும்.

நம் அனைவரின் கனவுகள் விரைவில் மெய்ப்பட.....



மனதில் உறுதி வேண்டும்
வாக்கினிலே இனிமை வேண்டும்
நினைவு ந‌ல்ல‌து வேண்டும்
நெருங்கின‌ பொருள் கைபட‌வேண்டும்

க‌ன‌வு மெய்ப்ப‌ட‌ வேண்டும்
கைவ‌ச‌மாவ‌து விரைவில் வேண்டும்
த‌ன‌மும் இன்ப‌மும் வேண்டும்
த‌ர‌ணியிலே பெருமை வேண்டும்
பெண் விடுதலை வேண்டும்
பெரிய‌ க‌ட‌வுள் காக்க‌ வேண்டும்

க‌ண் திற‌ந்திட‌ வேண்டும்
காரியத்தில் உறுதி வேண்டும்
மண் ப‌ய‌னுற‌ வேண்டும்
வான‌க‌மிங்கு தென்ப‌ட‌ வேண்டும்
உண்மை நின்றிடல் வேண்டும்


- சுப்பிரமணிய பாரதி

Wednesday, December 24, 2008

50-ஆவது 'சூடான பதிவு' !! 'சோ' வாட்?



துக்ளக் ஆசிரியர் (அட நாந்தாங்க....) இடும் 50வது சூடான பதிவு இது. என்னது? என்னை யாரென்றே தெரியாதா? அதுவும் இது என்னுடைய 50வது சூடான பதிவு என்பதும் தெரியவே தெரியாதா உங்களுக்கு? உங்களைப் பார்த்தால் பாவமாக இருக்கிறது. இப்படியும் ஒரு அப்பாவி பதிவுலகத்தில் உண்டா என்று. அட... மறுபடியும்... என் பதிவுகளை 'சூடான இடுகைகள்' பட்டியலில் பார்த்ததே இல்லையே என்று சொல்கிறீர்களே? அய்யா... நான் அந்த பட்டியலைப் குறிப்பிடவே இல்லையே.. என் வரையில் என்னுடைய ஒவ்வொரு பதிவும் சூடான பதிவுதான். அந்த வகையில் இது 50வது. இதற்கு ஏன் நெற்றியில் அடித்துக் கொள்கிறீர்கள்? பாருங்கள்... உங்கள் நெற்றி எப்படி சிவந்து விட்டது!! சரி சரி... இனிமேலாவது கவனமாக இருங்கள். மேலே படியுங்கள்.

நிற்க. விளையாட்டாக ஆரம்பித்தது... வினையாகி விட்டது. உங்களின் ஆர்வக் கோளாறு காரணமாக நீங்கள் என் பதிவுகளைப் படித்து (அதோடு நிற்காமல்) பின்னூட்டமும் போட... இன்று இது 50வது பதிவில் - அதுவும் சூடான பதிவில் - வந்து நிற்கிறது. இதற்கு நானா காரணம்? இல்லவே இல்லை. முழுப் பொறுப்பும் உங்களுடையதுதான். இனிமேல் இந்த சங்கிலித் தொடர் வினையை தடுக்க என்னால் முடியாது. யாருக்குத் தெரியும்... இது ஐம்பதோடு நின்று விடுமா அல்லது 100, 1000 என்று சுடச் சுடப் போய் "பதிவுலக வெப்ப உயர்வு" (இதற்கு BLOGAL WARMING என்று நான் பெயர் சூட்டியிருக்கிறேன்) என்ற ஒரு புதிய, நாம் எல்லோரும் எதிர்கொள்ள வேண்டிய ஒரு சூழலை உருவாக்குமா என்று தெரியவில்லை. அப்படி ஒரு சூழல் ஏற்படுமானால் அதற்கும் நீங்கள்தான் பொறுப்பு ஏற்க வேண்டி வரும்.

ஆனாலும் அது ஒரு தவிர்க்க முடியாத, நாம் அனைவரும் சந்தித்தே தீர வேண்டிய ஒன்றுதான் எனபது நிச்சயமாகத் தெரிகிறது. எனவே, இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், "நாளைய பலாக்காயை விட இன்றைய களாக்காயே மேல்" என்ற சொல்வழக்குக்கு ஏற்ப நான் தொடர்ந்து "சூடான" பதிவுகள் இட வாழ்த்தி விட்டு வழமை போல் (பற்களைக் கடித்துக்கொண்டேனும்) பின்னூட்டங்களை இட்டு வரவும். இதனால் உங்களது திரவியங்களுக்கு யாதொரு கேடும் வந்து விடாது என்பது திண்ணம்.

அம்மாடி... நானும் அப்பிடி இப்பிடி தட்டிக் கொட்டி லதானந்த் அங்கிளுக்கு பகிரங்கக் கடிதத்துல ஆரம்பிச்சு, புத்தகம், டமாரம், பொருளாதாரம், சினிமா, கதை, கட்டுக்கதை, புளுகு, புண்ணாக்குன்னு 50 பதிவு போட்டுட்டேன். ஆதரவு தந்து ஊக்குவித்த எல்லா நல்ல உள்ளங்களுக்கும்...

நன்றி... நன்னி... ஷுக்ரியா... தேங்ஸ்... ஷுக்ரன்... மெர்சி... டாங்கே...

Monday, December 22, 2008

கன்ஸ் ஆஃப் நவரோன்



The Guns of Navarone (1961)

Gregory Peck, Anthony Quinn, David Nevin


இதுவும் மத்த உலகப் போர் படங்கள் மாதிரி Alistair Maclean எழுதிய நாவலை அடிப்படையாக் கொண்டு எடுத்த படம். உங்கள்ல பல பேர் இந்தப் படத்தைப் பார்த்திருக்கலாம். Star Moviesலயும் HBOலயும் பல முறை போட்டிருக்காங்க.

துருக்கிக்கு பக்கத்துல ஏஜியன் கடல்ல இருக்கற கெரோஸ் தீவுகள்ல ஒரு 2000 பேர் கொண்ட ப்ரிட்டிஷ் துருப்பு இருக்கு. அவங்கள வெளிய கொண்டு வரலாம்னா, பக்கத்துல இருக்கற நவரோன் தீவுல (கிரீஸ்) ஜெர்மனி ரெண்டு பெரிய கப்பலை தாக்கற பீரங்கிகள் வெச்சுருக்காங்க. அதுகளை மீறி கடலைக் கடக்கறது ரொம்ப கஷ்டம். வான் வழியா போற முயற்சிகளும் தோல்வி அடைஞ்சதுனால அவசரமா ஒரு 6 பேர் கொண்ட குழு அமைக்கிறாங்க. அவங்க வேலை எப்படியாவது நவரோன் தீவுக்கு போய் அந்த பீரங்கிகளை தகர்க்கணும். சரியா 6 நாள் தவணை. போறதுக்கு ஒரே வழி அவ்வளவா செக்யூரிடி இல்லாத செக்குத்தான நவரோன் cliff ல ஏறி போறதுதான்.


மேஜர் ஃப்ரான்க்லின், கேப்டன் மல்லாரி (க்ரெகொரி பெக்), கார்பொரல் மில்லர் (டேவிட் நெவின்), கர்னல் ஆண்ட்ரியா (ஆண்டனி க்வின்) இன்னும் ரெண்டு பேர் குழுவுல. மில்லர் ஒரு வெடிமருந்து நிபுணர். ஆண்ட்ரியா ஒரு கிரேக்க கர்னல். எல்லாருக்குமே ஓரளவுக்கு கிரெக்க மொழி பேசத் தெரியும். எல்லாம் மீனவர்கள் மாதிரி ஒரு காயலங்கடை படகுல போறாங்க. வழில ஜெர்மன் coast guards வந்து விசாரிக்கும்போது அவங்களை சுட்டுக் கொன்னுட்டு அவங்க பேட்ரோல் போட்டையும் அழிச்சுடறாங்க. கிட்டத்தட்ட மலை அடிவார-த்துக்குப் போய் சேரும்போது புயல்ல சிக்கி இருக்கற ஓட்டை போட்டும் உடைஞ்சு போய் மருந்து, உணவுப் பொருட்கள் எல்லாம் காலி.


முதல்ல மல்லாரி cliffல ஏறி கயிறு கட்டினதும் ஒவ்வொருத்தரா மேல வராங்க. கடைசியா மேஜர் ஃப்ரான்க்லின் ஏறும்போது மழை அதிகமாகி வழுக்கி விழுந்து கால்ல அடி. நடக்க முடியாது. அவரை தூக்கிக்கிட்டே மேல நடக்கறாங்க. அங்கியே விட்டுட்டுப் போனா கண்டிப்பா ஜெர்மன் வீரார்கள் கிட்ட சிக்கிடுவாரு. அப்பறம் அவங்க தர டார்ச்சர்ல இவங்க ப்ளானை சொன்னாலும் சொல்லிடுவாருன்னு, எப்பிடியாவது மண்ட்ராகோஸ் போயிட்டா அவருக்கு சிகிச்சை குடுத்துடலாம்னு திட்டம் போடறாங்க. இப்ப கூட இன்னும் ரெண்டு உள்ளூர் புரட்சிப் பெண்களும் வந்து குழுவுல சேரறாங்க. மண்ட்ராகோஸ் போய் ஒரு சர்சுல தங்கறாங்க. ஆண்ட்ரியா ஃப்ரான்லினை ஒரு டாக்டர் கிட்ட கூட்டிக்கிட்டு போகும்போது விசஹயம் தெரிஞ்சு அங்க வர ஜெர்மன் வீரர்க கிட்ட மாட்டிக்கறாங்க. மத்த 4 பேரும் ஊருக்குள்ள நடக்கற ஒரு விழாக்கூட்டத்துல போய் மறைஞ்சாலும், அங்கியும் ஜெர்மன் வீரர்கள் வந்து எல்லாரையும் புடிச்சிடறாங்க. இப்ப 6 பேரும் விசாரணைல. திடீர்னு ஆண்ட்ரியா தான் ஒரு ஏழை மீனவன்னும், தன் படகை அபகரிச்சுட்டு அவனையும் ஒரு கைதி ஆக்கிட்டாங்கன்னு நாடகம் போட்டு எல்லாத்தையும் திசை திருப்பி ஒரு திடீர் தாக்குதல் நடத்தி எல்லாரும் ஜெர்மன் ராணுவ உடுப்புகளைப் போட்டுக்கிட்டு ராணுவ லாரில தப்பிச்சுடறாங்க. ஃப்ரான்க்லினை (அவருக்கு காயம் கெட்டுப் போய் gaangrene டெவலப் ஆயிடுது) அங்கியே விட்டுட்டு போயிடறாங்க.


இப்ப மில்லர் வந்து வெடிமருந்துகள், டெடொனேட்டர்கள் எல்லாம் சேதமடைஞ்சுருக்கறதா சொல்றாரு. "ப்ளான் எப்பிடியோ ஜெர்மனிக்கு லீக் ஆகுது, இல்லேன்னா அவங்க எப்பிடி மோப்பம் புடிச்சுருப்பாங்க, நம்ம கூட்டதுல ஒரு கருப்பு ஆடு இருக்கு. சம்பவங்களைக் கோர்த்துப் பாத்தா கடைசியா வந்து சேந்த பெண்கள்ல ஒருத்தியான 'ஏனா' தான் ஒற்று வேலை பாத்திருக்கா. உடனடியா அவளை தீர்த்துக் கட்டணும்". அவளும் ஜெர்மனியோட டார்ச்சர் தாங்காம அவங்களுக்காக ஏஜண்ட் வேலை பாத்ததா ஒப்புக்கறா. அங்கியே அவளை மரியா சுட்டுக் கொன்னுடறா. பிறகு மரியாவும், ஸ்பைரோசும் ஒரு ஸ்பீட் போட் ஏற்பாடு பண்ணணும்னும், ஆண்ட்ரியாவும் ப்ரௌனும் பீரங்கி இருக்கற இடத்துக்கு வெளிய ஒரு சின்ன கலவரம் உண்டாக்கி ஜெர்மனிய திசை திருப்பணும்னும் ப்ளான் பண்ணிட்டு, மல்லாரியும் மில்லரும் கிளம்பி நவரோன் பீரங்கி இருக்கற இடத்துக்கு போறாங்க. அங்க அடிபட்டு இருக்கற ஃப்ராங்லினுக்கு (மல்லாரி எதிர்பார்த்தமாதிரியே) மயக்க மருந்து குடுத்து உண்மையை வரவழைக்க முயற்சிக்க அவரோ வேணும்னே தப்பான தகவல் குடுத்து அவங்களை திருப்பி விட்டுடறாரு.


மல்லாரியும் மில்லரும் சில தில்லுமுல்லுகளுக்குப் பிறகு பீரங்கி அறைக்குள்ள நுழைஞ்சு கதவை உள்ள இருந்து சாத்திடறாங்க. கதவை சாத்தினதும் அபாய அலார்ம் அடிக்குது. வெளிய ஆண்ட்ரியாவும், ப்ரௌனும் ஒரு சின்ன சண்டையை ஆரம்பிக்க, சண்டைல ப்ரவுன் இறந்துடறான். ஸ்பீட் போட் திருடப் போன மரியாவும், ஸ்பைரோசும் ஒரு போட் கேப்டன் கூட சண்டை போடும்போது ஸ்பைரோசும் இறந்துடறான். மில்லர் தன் கிட்ட இருக்கற வெடி மருந்துகளை ரெண்டு பீரங்கிகள்லயும் வெச்சுடறாரு. கூடவே எக்ஸ்ட்ராவா லிஃப்டுக்கு கீழயும் வெச்சுட்டு, லிஃப்டோட சக்கரம் மேல ஏறும்போது வெடிக்கற மாதிரி செட் பண்ணிடறாரு.


இதுக்குள்ள ஜெர்மன் வீரர்கள் அந்த இரும்புக் கதவை வெல்டிங் பண்ணி கட் பண்ணி உள்ள வரதுக்குள்ள மல்லாரியும் மில்லரும் மலை மேல இருந்து கடலுக்குள்ள குதிச்சு திருடின ஸ்பீட் போட்ல ஏறி, ஆண்ட்ரியாவையும் காப்பாத்தி கூட்டிக்கிட்டு போயிடறாங்க. ஜெர்மன் வீரர்கள் எப்பிடியோ பீரங்கிகள்ல இருக்கற வெடி மருந்துகளை எடுத்துட்டாலும், அந்த லிஃப்ட்ல இறங்கும்போது மில்லர் செட் பண்ணின ட்ரிக்கர்னால லிஃப்டுக்கு கீழ வெச்ச வெடிமருந்துகள் வெடிச்சு அந்த பீரங்கிக் கோட்டையே சின்ன பின்னமாயிடுது. கரெக்டா ப்ரிட்டனோட கடல் படையும் கடலைக் கடந்து போய் கெரோஸ்ல மாட்டிக்கிடுருக்கற துருப்புகளை மீட்கப் போறாங்க.


ஒரிஜினல் நாவல்ல இருந்து நிறைய வேறுபட்டு இருந்தாலும் திரைகதைக்காக நல்லாவே செஞ்சுருக்காங்க. ஆண்டனி க்வின்னோட நடிப்பு டாப் க்ளாஸ். அதுவும் அந்த ஜெர்மன் ராணுவத்து கிட்ட மாட்டும்போது நடிச்சு தப்பிக்கும்போது... ஏ ஒன். டேவிட் நெவினோட டயலாக் டெலிவரி அவரோட 10 வருஷ தியேட்டர் அனுபவங்களோட ரிசல்ட். அற்புதம். அதே மாதிரி அந்த கடைசி 1/2 மணி நேரம் நம்மளை சீட் நுனிக்கே கொண்டு வந்துடும். இது மாதிரி படங்களைப் பாத்ததுக்கப்பறம் வேர்ல்ட் வார் படங்கள் எல்லாத்தையுமே பாத்துடணும்னு தோணுது.

Saturday, December 20, 2008

கிச்சடி 20.12.2008


சே... ஒரு கிச்சடி பண்ண 3 வாரமாகுது... அப்ப நான் அவியல் பண்ண ஒரு வருஷமாகும் போல..... போடறதுதான் போடறோம் ஒரு thematic -ஆ போடலாம்னு ஒரு (விபரீத!!) யோசனை... இந்த கிச்சடியோட theme - "பயணம்".

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

உடுமலைல இருக்கும்போது நானும் அண்ணனும் (சித்தப்பா மகன்) திடீர்னு பழனிக்கு நடை பயணம் கிளம்பிடுவோம். சாயங்காலம் 6 மணிக்கு குட்டைப்பிள்ளையாருக்கு ஒரு தேங்கா பிரிமியம் கட்டீட்டு நடக்க ஆரம்பிச்சா, விடியக்காலை 4 அல்லது 5 மணிக்கு பழனி போய் சேந்துரலாம். 36 கி.மீ.

ஒரு தடவை அப்பிடி போய்ட்டு வரும்போது பழனி பஸ்ஸ்டாண்டுல ஒரே கூட்டம். அண்ணன் மொட்டை வேற. உடுமலைக்குன்னு தனியா பஸ் கிடையாது. பொள்ளாச்சி அல்லது கோவை போற பஸ்ல ஏறணும். கண்டக்டர் "உடுமலை டிக்கட் எல்லாம் வெய்ட் பண்ணுங்க. பொள்ளாச்சி, கோவை எல்லாம் முதல்ல ஏறுங்க"ன்னாரு. நாங்க பொள்ளாச்சின்னு சொல்லிக்கிட்டே போய் ஏறி உக்காந்துட்டோம். பஸ்ல இருந்த கூட்டத்துக்கு, கண்டக்டர் டிக்கட்டுக்கு எங்க கிட்ட வரும்போது பஸ் பழனிலேருந்து ஆறேழு கி.மி. வெளிய வந்தாச்சு. அண்ணன் பந்தாவா "உடுமலை 2"ங்கவும், கண்டக்டருக்கு ஒரே கோவம். "ஏய் மொட்டை, நாந்தான் உடுமலையெல்லாம் ஏறாதேன்னு சொன்னேனில்ல... திமிர் புடிச்சவனுக... உம் மொட்டையும் கண்ணாடியும்..."னு திட்டிக்கிட்டே டிக்கட் குடுத்தாரு. அண்ணன் ஒண்ணும் பேசல. அப்பறம் உடுமலைல இறங்கும்போது அண்ணன் கண்டக்டர் கிட்டப் போய் "யோவ்... உன் வீட்டுக்கு நான் வந்து பொண்ணு கேட்டா மொட்டை, கண்ணாடி பத்தியெல்லாம் பேசு... இல்லாட்டி...$%^!@^#$%&!@&*....."எனக்கா ஒரே சிரிப்பு. கண்டக்டர் இதை எதிர்பார்க்கல. அதுவும் பத்து பேர் முன்னாடி சொல்லவும் ஒரு மாதிரி ஆயிடுச்சு. "சாரி தம்பி... எதோ கோவத்துல சொல்லிட்டேன்... அதுக்குன்னு இப்பிடியா..."ன்னு சமாதானம் பேசுனாரு. அதுக்கப்பறம் பழனிலேருந்து உடுமலைக்கு பஸ்ல வரும்போதெல்லாம் இந்த சம்பவம் ஞாபகத்துக்கு வந்து சிரிப்பு வரும்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

லக்சம்பர்க்ல வேலை நிமித்தமா கொஞ்ச நாள் இருந்தபோது, ஒருமுறை ரயில்ல ப்ருஸல்ஸ் போனேன். 4 மணி நேரப் பயணம். போய்ட்டு அன்னிக்கு இரவே திரும்பிடலாம்னு ப்ளான். போகும்போதே அந்த ரூட்டுக்கான டைம்டேபிளையும் எடுத்துக்கிட்டேன். ப்ருஸ்லஸ் போயிட்டு ஊரெல்லாம் சுத்திட்டு சாயங்காலம் 6:35 ரயிலப் புடிச்சுடலாம்னு ப்ளான் போட்டேன். ஒருமணி நேரத்துக்கு ஒரு ரயில் இருக்கு. மறுநாள் விடிகாலை சென்னைக்கு வேற கிளம்பணும்.

சாயங்காலம் 6:25க்கு ஸ்டேஷன் வந்துட்டேன். "இப்பதாங்க ரயில் கெளம்பிப் போச்சு"ன்னாங்க. "என்னடாது... நம்மூர்ல லேட்டாத்தான் கெளம்புவாங்க, இவுங்க நேரத்துக்கு கெளம்புவாங்கன்னு பாத்தா முன்னாலயே கெளம்பறாங்களே... ஒரு வேளை நம்ம வாட்சுதான் ஸ்லோவான்னு பாத்தா ஸ்டேஷன் கடிகாரமும் வாட்சும் சரியாத்தானெ இருக்கு..." இப்பிடியெல்லாம் யோசிச்சுக்கிட்டே, அடுத்த ரயிலுக்கு ஒரு மணி நேரம் இருக்கேன்னு பக்கத்துல இருக்கற ஒரு ம்யூசியத்துல போய் சுத்திட்டு மறுபடி 7:20க்கெல்லாம் வந்தேன். நான் போக வேண்டிய ரயில் கதவைச் சாத்தி கெளம்பி போயிட்டுருக்கு. ஒண்ணுமே புரியல. என்னடா... இப்பிடி கோட்டை விடுறமேன்னு எரிச்சல். இனிமே எங்கயும் போகக் கூடாது. அடுத்த ரயிலையும் விட்டா மறுநா காலைல 4 மணிக்கு மேலதான். ஒரு பென்சுல உக்காந்துட்டேன். இங்க கூடவா நம்மள இப்பிடி சுத்த விடுறானுகன்னு அந்த டைம் டேபிளத் திருப்பித் திருப்பிப் பாத்துக்கிட்டுருந்தேன். அது ஒரு நோட்டிஸ் மாதிரி இருந்துது. ஒரு பக்கம் லக்ஸ்-ப்ருஸல்ஸ் ரயில் நேரங்கள், பின் பக்கம் ப்ருஸல்ஸ்-லக்ஸ் ரயில் நேரங்கள். நான் மாத்திப் பாத்துருக்கேன். வர ரயிலுக ஒவ்வொரு மணி 35 நிமிஷத்துக்கும் போற ரயிலுக ஒவ்வொரு மணி 20 நிமிஷத்துக்கும். மூஞ்சில மூணு லிட்டர் அசடு வழிய 1 மணி நேரம் உக்காந்து கடைசி ரயிலப் புடிச்சு 12:30 மணிக்கு லக்ஸ் வந்து சேந்தேன். ஹோட்டலுக்குப் போய் பேக் பண்ணி, 1 மணி நேரம் மட்டும் தூங்கி காலைல கெளம்பி சென்னை. ம்ம்ம்... மறக்கவே முடியாது.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

இந்த வருஷம் ஆரம்பத்துல குடும்பத்தோட சென்னைல. சென்னைல இருந்து சிங்கப்பூருக்கு விடிகாலை 2 மணிக்கு ஒண்ணு, மதியம் 2 மணிக்கு ஒண்ணுன்னு ஏர் இண்டியா எக்ஸ்ப்ரஸ் விமானம் இருந்துது. (இப்ப டைம் மாத்திட்டாங்க). மனைவிக்கும், குழந்தைக்கும் ஏஜண்ட் கிட்ட ஞாயித்துக்கிழமை மதியம் ரெண்டு மணி விமானத்துக்கு புக் பண்ண சொன்னேன். அவங்களும் போன் பண்ணி "சார் ரெண்டு மணி ஃப்ளைட் புக் பண்ணியாச்சு. டிக்கட் வீட்டுக்கு அனுப்பிச்சுட்டோம்"னாங்க.

நாங்க கூலா ஞாயித்துக்கிழமை காலைல சாப்டுட்டு 11 மணிக்கு கெளம்பும்போது யதேச்சையா டிக்கட்டப் பாத்தா, அது விடிகாலை ரெண்டு மணிக்கு புக் ஆகியிருக்கு. ஒருத்தர ஒருத்தர் மூஞ்சியப் பாத்துக்கிட்டோம். அப்பறம் என்ன... தூக்கிட்டு ஓடு ஏர் இண்டியா ஆபீஸுக்கு. அவங்க "பாத்தா படிச்சவன் மாதிரி இருக்க..."ங்கற மாதிரி ஒரு பார்வை பாத்துட்டு "சார்.. நோ-ஷோவுக்கு ரீஃபண்ட் டிக்கட் ஃபேர் மட்டுந்தான். அதுவும் 15 நாள் கழிச்சுதான். நீங்க வேற டிக்கத்தான் வாங்கணும்"னு நிர்தாட்சண்யமா சொல்லிட்டாங்க. வேற வழி?

இந்த பட்ஜெட் ஏர்லைன்ஸ்ல எல்லாம் டிக்கட் காசு கால் பங்குதான். மீதி முக்காவாசியும் ஏர்போர்ட் டேக்ஸ். அது திரும்ப கிடைக்காது. நம்ம முதல்வரே சொல்ற மாதிரி என் ஜாதகத்தை நொந்துக்கிட்டேன்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

அதேமாதிரி நம்ம மாமா ஒருத்தர் முதல்லயே போக வர டிக்கட் புக் பண்ணிட்டு, அப்பறமா எதோ காரணத்துக்காக பயணத்தை ஒரு நாள் prepone பண்ணிட்டாரு. போற டிக்கட்ட மாத்தினவரு வர டிக்கட்ட மாத்த மறந்துட்டாரு. கோவைல வேலையை முடிச்சுட்டு திரும்ப சென்னைக்கு வர நீலகிரில ஏறி தூங்கிட்டாரு. திருப்பூர்ல ஒருத்தர் ஏறி "சார்.. இது என்னோட பெர்த்..."ங்க இவருக்கு தூக்கக் கலக்கத்துல ஒண்ணும் புரியல. டி.டி.ஆர் வந்து பாத்துட்டு சொன்னப்பறம்தான் தெரிஞ்சுது அது மறுநாளைக்கான டிக்கட். அப்பறம் ஜெனெரல் கம்பார்ட்மெண்ட்ல உக்காந்து காட்பாடிக்கப்பறம் பெர்த் கிடைச்சு....

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

இப்பல்லாம் டைம் டேபிள், டிக்கட் எல்லாம் ஒரு தடவைக்கு ரெண்டு தடவை பாத்துடறது. சந்தேகத்துக்கு பக்கத்துக இருக்கறவங்க கிட்ட சங்கிலி முருகன் மாதிரி 'ஏங்க... நான் கரெக்டாத்தானே படிக்கிறேன்னு" அவங்களையும் ஒரு தடவை பாக்க சொல்லி கேட்டுக்கறது. என்ன பண்றது? பட்டாத்தானே தெரியுது படிச்ச முட்டாளுக்கு.

Wednesday, December 17, 2008

ஒரு உலக அரசு சாத்தியமா?


சமீபத்துல ஐ.நா. சபைக்கு ஒரு விசிட் போய்ட்டு வந்ததுல இருந்து இது மாதிரி ஒரு அமைப்பு இருந்தும் பெரிய அளவுல ப்ரச்னைகளுக்கு ஒரு தீர்வு கிடைக்கறதில்லையேன்னு யோசனையா இருந்துது. அப்பத்தான் யதேச்சையா ரெண்டு நாளைக்கு முந்தி ஃபினான்சியல் டைம்ஸ் பத்திரிக்கைல கிடியன் ரஷ்மான் (Gideon Rachman) எழுதின ஆர்டிகில் படிச்சேன். (இவுரு எழுதறது எல்லாம் நல்லா இருக்கும். சுருக்கமா, நிறைவா எழுதுவாரு.) உலக அரசு அமைவதற்கான வாய்ப்புகள் பற்றி எழுதியிருந்தாரு. அதை ஒட்டிய பதிவு இது.

ஒரு "உலக அரசு" (world governance)ங்கறது உலகத்தின பல்வேறு நாடுகளுக்கிடையேயான கூட்டுறவை அடிப்படையாக் கொண்டது. அதுவும் ஒரு தனி அமைப்பா, அதுக்குன்னு சில சட்ட திட்டங்களோட இருக்கும். இப்ப ஐரொப்பிய யூனியனை எடுத்துக்காட்டா எடுத்துக்கலாம். 27 நாடுகள் சேந்து இருக்கற ஒர் அமைப்பு. இதையே ஒரு மாடலா வெச்சுக்கலாம். அவங்களுக்குன்னு ஒரு கரன்ஸி, பல ஆயிரம் பக்கங்கள் உள்ள சட்டபுத்தகம், ஒரு சிவில் சர்வீஸ் அமைப்பு, ராணுவம்னு எல்லாம் இருக்கு. ஒரு கண்டத்தின் அளவுல இதை செய்ய முடிஞ்சா உலக அளவுலயும் செய்ய முடியணும். சாத்தியமா?

சாத்தியம்னுதான் தோணுது. முதலாவதா, இன்னிக்கு நாம சந்திக்கிற பல ப்ரச்னைகள் உலகத்துக்கே பொதுவானதாத்தான் இருக்கு. இப்ப இருக்கற பொருளாதார சுருக்கம், ஒசோன் படல இழப்பு, சுற்றுசூழல் ப்ரச்னைகள், உலகம் சூடாகுதல், உலக தீவிரவாதம்... இதெல்லாம். இதுக்கு எல்லா நாடுகளும் கூட்டுப் பொறுப்பு. இவுங்கனாலதான் ஆச்சு, அவுங்கனாலதான் ஆச்சுன்னு சொல்லீட்டு போய்ட்டடே இருக்க முடியாது.

ரெண்டாவது இன்னிக்கு தொலைதொடர்பும், போக்குவரத்தும் முன்னேற்றம் அடைஞ்சு எல்லா நாடுகளுக்கும் இடையே உள்ள இடைவெளியை ரொம்பவே குறைச்சுடுச்சு. நீரால் சூழப்பட்ட நாடுங்கற புவியியல் காரணம் ஒண்ணைத் தவிர யாரும் இப்ப தீவு கிடையாது. ஆஸ்திரேலிய வரலாற்றாசிரியர் ஜ்யொஃப்ரி ப்லைனி சொன்ன மாதிரி, மனிதகுல வரலாற்றுல முதல் முறையா ஒரு உலக அரசு அமைகிற வாய்ப்பு வந்திருக்கு. உடனே இல்லாட்டாலும் அடுத்த இரண்டு நூற்றாண்டுகளுக்குள்ளாவது வரலாம்கறாரு.

மூணாவதா, முக்கியமா இந்த பொருளாதார மற்றூம் சுற்றுசூழல் ப்ரச்னைகள்ல பல நாடுகள் - சைனா, அமெரிக்கா உள்பட - ஒரு உலக அளவிலான வழிமுறைகள் உருவாக்கப்படணும்னு உரக்கச் சொல்ல ஆரம்பிச்சுருக்காங்க. இது ஒரு நல்ல சிக்னல். இன்னுங்கூட சீக்கிரமாவே உலக அரசு அமைய சாத்தியக்கூறுகள் உருவாகலாம்.

இப்ப ஒபாமா கூட ஐ.நா. சபைக்கு அதையும் ஒரு நாடுங்கற உயர்ந்த மதிப்புக் குடுத்து, சூசன் ரைஸை ஐ.நா. தூதர்னு நியமிச்சு, கேபினட்ல ஒரு இடமும் குடுத்துருக்காரு. அவரோட புத்தகமான Audacity of Hope ல கூட "உலக வல்லரசு நாடு ஒண்ணு, சர்வதேச ஒழுங்குமுறைகளுக்கு தானாகவே முன்வந்து கட்டுப்படுதுன்னா, அந்த ஒழுங்குமுறைகளோட மதிப்பு என்னங்கறதை எல்லா நாடுகளும் உணரணும்"னு எழுதியிருக்காரு. (இராக், ஆப்கானிஸ்தான் நாடுகள்ள அமெரிக்கா செஞ்சது இந்த ஒழுங்குமுறைகளுக்கு உள்ள வராதான்னு கேட்டவங்களுக்கு இன்னி வரைக்கும் பதில் இல்லை)

அமெரிக்காவுல "உலக பாதுகாப்பின்மை மேலாண்மை" (Managing Global Insecurity) திட்டத்துல சில அம்சங்கள் - தீவிரவாதத்துக்கு எதிரா ஒரு ஐ.நா. கமிஷனரை நியமிக்கலாம், தட்பவெப்பத்தை பாதுக்காக்க ஒரு உலக அளவிலான ஒப்பந்தம் போடலாம், குறைந்தது 50000 பேர் கொண்ட ஒரு உலக ராணுவத்தை அமைக்கலாம். ஆனா இதுக்கெல்லாம் உலகத்துல இருக்கற ஒவ்வொரு நாடும் பொறுப்பு ஏத்துக்கணும். ஏன்னா இது ஒரு "உலக அரசு"ங்கற ஒரு பொதுவான அமைப்பு. உலக அரசாங்கம் கிடையாது.

ஐரோப்பிய தலைவர்கள் சிலர் கொஞ்சம் எதிர்மறையாவும் பேசறாங்க. ஃப்ரான்ஸ் அதிபர் சர்கோஸியோட ஆலோசகர்கள்ல ஒருத்தரான ஜாக் அத்தாலி (Jaques Attali) என்ன சொல்றார்னா "உலக பொருளாதாரப் ப்ரச்னைக்குக் காரணம் இப்ப சந்தை உலகமயமானதுதான். ஆனா நமக்கு உலக அளவுல சட்டதிட்டங்கள்னு ஒண்ணும் கிடையாது. அதுனால இப்போதைக்கு உலக அரசுங்கறது சாத்தியமில்லாத ஒண்ணு". சரியான வாதம்தான்.

இருந்தாலும், குகைல படம் போட்டு நாம வாழ ஆரம்பிச்சதுல இருந்து, உலக அரசு அமையவும், அதுக்கான முனைப்புகள் எடுக்கவும் இப்ப வாய்ப்புகள், நேரம் காலமெல்லாம் கூடி வந்துட்டுருக்குங்கறது தெரிய ஆரம்பிச்சுருக்கு. ஸ்டார்டிங் டிரபில்கள் இருந்தாலும், கொஞ்சம் மெதுவா நகர ஆரம்பிச்சாலும், அங்கங்க சில வலிகளோட இலக்கு நோக்கிய பயணம் தொடங்கிடுச்சுன்னே சொல்லலாம்.

இதை நடைமுறைப்படுத்த திடமான எண்ணங்களும், மன உறுதியும் நம்ம அரசியல்வாதிகளுக்கு கண்டிப்பா வேணும். அவங்கள்லாம் "ஆஹா... உலகம் அழியுது... எதாவது பண்ணணுமே"ன்னு வெளியில துடிச்சாலும், உள்ளுக்குள்ள அவங்க நாட்டுல அவங்க சந்திக்க வேண்டிய அடுத்த தேர்தலைப் பத்தித்தான் கவலைப் படுவாங்க. இது ஒண்ணுதான் பெரிய தடைகல். இதை அப்புறப்படுத்த முடியுமா?

இன்னும் சில விஷயங்கள். இப்ப ஐரோப்பிய யூனியன்லயே பரிபூரண ஜனநாயகம்னு சொல்ல முடியாது. சில சமயங்கள்ல அடிமட்ட மக்களோட சம்மதத்தை எதிர்பார்த்தபோது தோல்விகள்தான் கிடைச்சுருக்கு. சில முக்கியமான முடிவுகள்லாம் கேபினட் மட்டத்துலயே முடிச்சு அமல்படுத்திட்டாங்க. ஒரு அரசு எல்லைகள் கட்ந்து பெருசா இருக்கும்போது சில சமயங்கள்ல அ-ஜனநாயகம் (சர்வாதிகாரம்னு சொல்ல முடியாது) எட்டிப் பாக்குது. இது தவிர்க்க முடியாதது.

இப்ப நாம பாக்கற ப்ரச்னைகள் உலகளாவியதா இருந்தாலும், ஒரு சாதாரண குடிமகனுக்கு அவனுடைய அரசியல் அடையாளம் அவனச் சுத்தி இருக்கற இம்மிடியட் உள்ளூர் ப்ரச்னைகதான். இந்த அடிப்படை எண்ணங்கள்ல பெரிய அளவுல மாற்றம் வந்தா உலக அரசு சாத்தியம்னு தோணுது. இல்லேன்னா ஒரு 20000 பக்க டாகுமெண்டா ஐ.நா. சபை லைப்ரரில பத்தோட பதினொண்ணா இதையும் பத்திரமா பெட்டில வெக்க வேண்டியதுதான். என்ன சொல்றீங்க?

Tuesday, December 16, 2008

தோரா! தோரா! தோரா!


தோரா! தோரா! தோரா! (1970)
சோ யமமுரா, தகஹிரோ தமுரா

1941ல பேல் ஹார்பர் (ஹவாய் தீவுகள்) மேல ஜப்பானிய தாக்குதல் பண்ணினதுக்கான காரணங்களையும், நிகழ்வுகளையும் விளக்கற படம். அட்மிரல் யமமோடோ கடற்படைத் தளபதியா பொறுப்பேத்துக்கறதுல ஆரம்பிக்குது. அது ஒரு இக்கட்டான சமயம். அமெரிக்கா ஜப்பான் மேல பொருளாதாரத் தடைகள் விதிச்சு பல மூலப் பொருட்களுக்காகா ஜப்பான் திண்டாட்டுது. அப்பத்தான் அது இத்தாலி ஜெர்மனியோட ஒரு முக்கூட்டு ஒப்பந்தம் (Tripartite Pact) பண்ணி புகழ் பெற்ற Axis Powersல ஒண்ணான சமயம். ராணுவமும் விமானப்படையும் அமெரிக்காவைத் தாக்கியே ஆகணும்னு ஒத்தக்கால்ல நிக்கறாங்க. ஆனா யமமோடோ இது ஒரு பயங்கர சூதாட்டம்னு உணர்ந்திருக்காரு. அம்ரிக்காவுல ஹார்வர்ட்ல படிச்சவரு. அவர் சொல்றாரு 'நீங்கள்லாம் அமெரிக்கர்கள் மேல ஒரு தப்பான அபிப்ராயம் வெச்சுருக்கீங்க; சுகபோக வாழ்க்கைல மயங்கி இருக்கறவங்க; நாட்டைப் பத்தி கவலையே படாதவங்க; சுயநலவாதிக அப்பிடின்னெல்லாம். ஆனா எனக்கு நல்லாத் தெரியும், போர்னு வந்துட்டா அவங்களை மாதிரி ஒரு அசைக்க முடியாத, ஒற்றுமையான எதிரியை சந்திக்கறது கடினம்'. ஆனா யாரும் கேக்கறதா இல்ல. அரைகுறை மனசோட போருக்கு கடல்படையோட சம்மதத்தை குடுக்கறாரு. இருந்தாலும் கடைசி வரைக்கும் அமைதிக்கான பேச்சு வார்த்தைகளை பண்ணிப் பாத்துடணும்னு சொல்றாரு. வாஷிங்டன்ல இருக்கற ஜப்பான் தூதரகத்துல அதுக்கான வேலைகள் நடந்துட்டும் இருக்கு.

ஆபரேஷன் தோரா. 'டார்பிடோ தாக்குதல்' - இதோட ஜப்பானிய சுருக்கம்தான் "தோரா". ஒரு ஞாயித்துக் கிழமை (1941 திசம்பர் 7) அமெரிக்காவை எதிர்பாராத விதமா தாக்கணும்னு முடிவாகுது. பாமிங் விமானங்களுக்கு லீடரா கேப்டன் ஃபுஷிடா. ப்ளானுக்கு மாஸ்டர்மைண்ட் கமாண்டர் கெண்டா.

அமெரிக்காவும் சும்மா இல்ல. ஜப்பானோட ரேடியோ சிக்னல்களை குறுக்கிட்டு 'டீகோட்' பண்றதுல வெற்றி அடைஞ்சு அவங்களோட ஒவ்வொரு அசைவையும் கண்காணிக்கறாங்க. புது ராடார்லாம் தயார் பண்ணி ஒரு மலை மேல வெச்சு வேவு பாக்கறாங்க. இப்ப ஜப்பான் எந்நேரமும் தாக்கலாம்னு தெரிய வருது. ஆனா எப்ப, எங்கன்னு தெளிவா இல்ல.

6ம் தேதி ஜப்பானிய தூதரகத்துக்கு ஒரு செய்தி வருது. "14பக்க செய்தி வரப் போகுது. எல்லாத்தயும் டீகோட் பண்ணி 7ம் தேதி மத்தியானம் 1 மணிக்குள்ள அமெரிக்க அரசாங்கத்து கிட்ட குடுத்துடணும்"னு. 13 பக்கம் வந்துடுது. 14வது பக்கம் மறுநாள் காலைல வரும். தூதரகத்த விட வேகமா அமெரிக்கர்கள் செய்திய படிச்சுட்டு எல்லாப் பக்கமும் அலர்ட் பண்றாங்க. கர்னல் ப்ரட்டன் கண்டிப்பா எதோ ஒரு தாக்குதல் இருக்கப் போகுதுன்னு ராணுவ சீஃப் கிட்டயெல்லாம் போய் முட்டி மோதறாரு. பலருக்கு நம்பிக்கையே இல்ல. "ஜப்பானா? நம்மளயா ? ம்ஹூம்.. சான்ஸே இல்ல...". இருந்தாலும் கர்னல் முடிஞ்ச வரைக்கும் எல்லாரயும் அலர்ட் பன்ணிடறாரு.

7ம் தேதி. ஞாயித்துக்கிழமை. காலைலயே ஜப்பானிய விமானம் தாங்கும் கப்பல்ல இருந்து ஒரு 25 விமானங்கள் ஃபுஷிடா தலைமைல கிளம்பி ஹவாய் பேல் ஹார்பர் நோக்கி பறக்குது. 11 மணி சுமாருக்கு அந்த கடைசி 14ம் பக்கம் வருது. ஜப்பான் தூதரகத்துல அதை டீகோட் பண்ணி டைப் பண்ண நேரமாகுது. ஆனா அதுக்குள்ள அமெரிக்க ராணுவம் அதை டீகோட் பண்ணி ஜப்பான்ல இருந்து தெற்குப் பகுதில, விமானம் தாங்கும் கப்பல் அல்லது நீமூழ்கிக்கப்பல் மூலமா தாக்குதல் இருக்கலாம்னு அனுமானிக்கறாங்க. கடற்படை தளபதி அது பிலிப்பைன்ஸா இருக்கலாம்னு அசால்டா இருக்காரு. 12 மணி சுமாருக்கு மலை உச்சில இருக்கற ராடார்ல நிறைய விமானங்களைப் பார்த்துட்டு கமாண்ட் செண்டர்க்கு தகவல் சொல்றாங்க. ஆனா அன்னிக்கு சில B-17 விமானங்கள் ரெகுலர் சார்ட்டில வரதா ஏற்கெனவே ஒரு ப்ளான் இருந்த்தால அதுவாத்தான் இருக்கும்னு "டோண்ட் வொரி.."ங்கறாங்க. 14வது பக்கத்தோட கடைசில இருக்கற வாக்கியம் "உடனே நம்மளோட டீகொடிங் மெஷினெல்லாம் அழிக்கப்படணும்".கர்னல் ப்ரட்டன் அதோட அர்த்தத்தை ஓரளவுக்குப் புரிஞ்சுக்கிட்டு மேல கீழ் போய் பலரைப் பாத்து நெருங்கிக்கிட்டுருக்கற அபாயத்தை சொல்றாரு. பல பேர் அன்னிக்கி லீவுங்கறதால கோல்ஃப் விளையாடப் போயிடறாங்க. இவுரு கெடந்து அல்லாடறாரு.

1 மணிக்குள்ள டைப் பண்ணி முடியாதுங்கறதால அமெரிக்க அரசோட இருக்கற அப்பாயிண்ட்மெண்டை 2 மனிக்கு தள்ளி வெக்கறாரு ஜப்பான் தூதர் நொமுரா. ஜப்பானோட திட்டம் என்னன்னா, சமாதானம் முடியாது போல இருக்கு, போர்தான் ஒரே வழின்னு 1 மணிக்கு அமெரிக்காவுக்கு தெரிவிச்சுட்டா, திட்டப்படி விமானங்கள் பேல் ஹார்பருக்கு 1:30க்கு மேல போய் தாக்குதல ஆரம்பிக்கலாம். ஜெனீவா போர் ஒப்பந்தங்களின் படி இது சரியாயிருக்கும். இப்ப நடக்கறதே வேற. 1:30க்கு ஜப்பானிய விமானங்கள் பேல் ஹார்பர் வந்து சேந்துடறாங்க. அவங்க எதிர்பார்த்ததுக்கு மாறா இங்க ஒரு தற்காப்பு வேலைகளும் நடக்கற மாதிரி தெரியல. எல்லாம் கூல இருக்கு. ஃபுஷிடாவுக்கு குஷி. கோட் வேர்ட் "தோரா! தோரா! தோரா!" ன்னு எல்லா விமானங்களுக்கும் சிக்னல் குடுக்கறான்.

அவ்வளவுதான். அட்டகாசம் ஆரம்பம். பேல் ஹார்பர் 40அட்தான் ஆழம்கறதால நீர்மூழ்கில வந்து டார்பிடோ தாக்குதல் முடியாத காரியம். ஏன்னா குறஞ்சது அதுக்கு 90அடியாவது ஆழம் வேணும். ஜப்பானோட ப்ளான், டார்பிடோகளை விமானங்கள்ல இருந்து ட்ராப் பண்றது. அடுத்த 1/2 மணி நேரம் ஹார்பர்ல இருக்கற ஒவ்வொரு கப்பலும், USS Arizona, USS Nevada உள்பட. நிக்கிற, பறக்கிற எல்லா அமெரிக்க விமானங்களும், ஆயில் டேங்குகளும், ஹேங்கர்களும், ஃபைர் சர்வீஸ்களும் துவம்சம். அமெரிக்காவுக்கு பதில் தாக்குதல் நடத்தக்கூட சான்ஸே குடுக்காம அடிக்கறாங்க. சண்டைல விமானத்துல இருந்து சுடற ஒரு புல்லட், கட்டடத்துக்குள இருந்து பாத்துக்கிட்டுருக்கற கர்னல் ப்ரட்டன் பக்கத்துல ஒரு ஜன்னல துளைச்சுக்கிட்டு வந்து விழுது. மயிரிழைல தப்பறாரு. "பேசாம அது என்னைக் கொன்னிருக்கலாம்"னு விரக்தியா சொல்றாரு.ஜப்பான் விமானங்கள் நாசகார வேலையை முடிச்சுட்டு திரும்பிப் போகுது.


ஒரு வழியா 2 மணிக்கு தூதர் நொமுரா, உள்துறை செக்ரடரி கார்டெல் ஹல்லை சந்திச்சு ஜப்பானோட செய்தியை குடுக்கறாரு. ஹல் சொல்றாரு "என்னோட பல வருஷ சர்வீஸ்ல, இந்த உலகத்துல எந்த ஒரு நாடும் உச்சரிக்கக் கூடத் தயங்கற வார்த்தைகள் கொண்ட இப்பிடி ஒரு டாகுமெண்ட பாத்ததே இல்ல". நொமுரா எதோ சொல்ல வர, "போயிடுங்க"ன்னு கத்தறாரு.


அங்க ஜப்பான்ல ராணுவ அதிகாரிகளுக்கு தாக்குதல் திட்டப் படி நடந்துடுச்சுன்னு செய்தி வந்ததும் ஒரே கொண்டாட்டம். ஆனா அட்மிரல் யமமோடொ இறுக்கமா உக்காந்திருக்காரு. அவரோட இந்த வார்த்தைகள்ல எவ்வளவு அர்த்தம் இருக்கு பாருங்க. "நாம போர் தொடுக்கற செய்தி தாக்குதல் ஆரம்பிச்சு 55 நிமிஷம் கழிச்சுதான் அமெரிக்காவுக்குக் கிடைச்சுருக்கு. நாம இப்ப செஞ்சிருக்கறதெல்லாம் ஒரு தூங்கற அரக்கனை எழுப்பிவிட்டு, அவனை ஒரு கடுமையான தீர்மானத்தையும் போட வெச்சுருக்கோம்" ("I fear that all we have done is awakened a sleeping giant, and filled him with a terrible resolve.")


அதுக்கப்பறம் நடந்த பயங்கரமான துயரச்செயல்தான் உலகத்துக்கே தெரியுமே......


படத்துல எடிட்டிங் சூப்பரோ சூப்பர். ஆர்ட் டைரக்சன் அட்டகாசம். அந்த விமானங்களும், கப்பல்களும் அவ்வளவு தத்ரூபமா இருக்கு. ரொம்ப டெக்னிகலா பாத்து அரிசோனா, நெவாடா கப்பல்கள்லாம் வேற மாதிரி இருக்கும்னெல்லாம் சொல்லியிருக்காங்க. ...ப்ச்...அதெல்லாம் விடுங்க... ஆனா படத்துல ஆரம்பத்துல இருந்து கடைசி வரைக்கும் அந்த pace நல்லா மெய்ண்டைன் ஆயிருக்கு. புது பேல் ஹார்பர் படத்தை விட இந்தப் படம் ரொம்பவே நல்லா இருக்கு. A must-see film.

Sunday, December 14, 2008

அவனோடே ராவுகள் .... 5

முந்தைய பதிவுகள் ...1 ...2 ...3 ...4


Code name GOD
Author : Mani Bhaumik


கண் பார்வைக் குறைபாட்டை நீக்க இப்ப "லசிக்"ங்கற லேசர் முறையை பயன்ப்டுத்தறாங்க இல்லயா? அந்த "லசிக்" முறையைக் கண்டுபுடிச்சவர் இவர்தான். சுதந்திரப் போராட்டம் தீவிரமா இருந்த கால கட்டத்துல மேற்கு வங்காளத்துல ஒரு மிகவும் பின்தங்கிய கிராமத்துல பிறந்தவர். இவருடைய அப்பா ஒரு சாதாரண ஸ்கூல் வாத்தியார். அவரும் ஒரு சுதந்திர போராட்ட வீரர். மணியோட ஆரம்ப கால வாழ்க்கை கடும் வறுமையில. பல நாள் பட்டினி.அந்த சமயங்கள்ல அவரோட பாட்டி தன்னோட பங்கு உணவை இவருக்குக் கொடுத்து கூடவே காந்தியப் பத்தியும் மத்த சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பத்தியும் சொல்லிச் சொல்லியே வளர்த்தாங்களாம். புத்தகம் முழுவதுமே அங்கங்க தன்னோட அப்பா, பாட்டி, முக்கியமா காந்தி இவுங்கள்லாம் தன் வாழ்க்கைய் எந்த அளவு பாதிச்சுருக்காங்கன்னு சொல்லியிருக்காரு.

இந்தப் பின்னணியிலிருந்து வந்து ஒரு பெரிய விஞ்ஞானியாகவும்,பெரும் பணக்காரராகவும் ஆகியிருக்காரு. வாழ்க்கைல பணம் நிறைய வந்ததும் அத எந்த அளவுக்கு எஞ்சாய் பண்ணினார்னும் மனசாட்சிக்கு விரோதமில்லாம சொல்லியிருக்காரு. [ கொஞ்சம் அதிகமாவே :( ] தன்னோட அறிவியல் சார்ந்த ஆன்மீகப் பயணத்தின் மூலமா கடவுளை எப்படி உணர்ந்தாருங்கறதுதான் புத்தகத்தோட சாராம்சம். கடவுளை இயற்பியல் ரீதியா விளக்க முயற்சி பண்ணி அதுல வெற்றி அடைஞ்சிருக்காருன்னே சொல்லலாம். அதை எப்பிடி எளிமையா விளக்கறாருங்கறது புத்தகத்தைப் படிச்சா புரியும். முதல்ல தான் ஒரு விஞ்ஞானி அப்பறமாத்தான் ஆன்மீகவாதிங்கறதை தெளிவா சொல்லிடறாரு.

புத்தகத்துல இருந்து சில செய்திகள்:

- பெருவெடிப்பின்போது (Big Bang) பிரபஞ்சம் விரிவடைஞ்ச விகிதம் 1/1050 ங்கற அளவுல மாறுபட்டிருந்தா, உயிர் வாழ லாயக்கில்லாமப் போயிருக்கும்

- பிரபஞ்சத்தின் 'மொத்த' ஆற்றல் பூச்சியம் (net energy of the universe is zero)

- பிரபஞ்சத்தின் எந்த ஒரு இடத்திலும் ஒரே மாதிரி உணரக்கூடிய ஒரு க்வாண்டம் வெளி (quantam field) பிரபஞ்சம் பூரா பரவியிருக்கு

- பெருவெடிப்பின்போது பிரபஞ்சத்தின் அளவு ஒரு பில்லியனே 100 மில்லியனில் ஒரு பங்கு (இதையும் ஒரு 'அளவு'ன்னு நாம மதிப்புக் குடுத்து எடுத்துக்கறதா இருந்தா !!)

- ஒரு காஸ்மோலாஜிகல் சித்தாந்தத்தின்படி பார்வையாளனுக்கும் பிரபஞ்ச உருவாக்கத்தில் பங்கு உண்டு [ எதாச்சி பிரியுதா?? யோசனை /கற்பனை பண்ணிப் பாருங்க :) ]

- நம்மால ஒரு 'இணை ஃபோட்டான்'களை உருவாக்க முடிஞ்சா, இந்த பிரபஞ்சத்துல அதுக ரெண்டும் எவ்வளவு தூர இடைவெளியில இருந்தாலும், ஒண்ணோட நிலை (state) மாறினா இன்னொரு ஃபோட்டானும் அதே கணத்துல அதே நிலைக்கு மாறிடும் (க்வாண்டம்.... க்வாண்டம் !!)

பெரியவங்க சொல்லுவாங்க, நம்ம எண்ணங்கள் எவ்வளவு பெரியதோ அவ்வளவு பெரியதுதான் உலகம்னு. இந்த மாதிரி விஞ்ஞானிகளைப் பத்தியும் அவங்களோட எண்ணங்களைப் பத்தியும் படிக்கும்போது அவங்களோட உலகம் எவ்வளவு பெரியதா இருந்திருக்குன்னு ஆச்சரியமா இருக்கு.

அடிமட்ட வறுமைல இருந்து பெரும் புகழும் செல்வமும் அடைஞ்ச ஒரு விஞ்ஞானியோட இந்தப் புத்தகம் ரொம்பவே இன்ஸ்பயரிங்கா (இதுக்கு தமிழ்ல என்ன? ) இருக்கு. தன்னோட வெற்றியோட எல்லைகளைத் தெரிஞ்சு இருக்கறது இவரோட ப்ளஸ் பாயிண்ட். தன்னைப் பத்தி சொல்லும்போது, பணம் கிடைச்சப்பறம் தான் வாழ்க்கைல அனுபவிச்சதை கொஞ்சம் கர்வத்தோடயும் அலட்சியத்தோடயும் சொல்லும்போது "கொஞ்சம் ஓவராத்தான் அல்டிக்கிறாருப்பா"ன்னுதான் தோணுது. ஆனா கூடவே தன்னோட ஆரம்ப நாட்களை மறக்காம உண்மையா சொல்றதை படிக்கும்போதும்,அவருடைய ஒரு உன்னதமான கண்டுபிடிப்பு இன்னிக்கு உலகத்துல பார்வைக் குறைவுள்ள பலபேருக்கு நம்பிக்கையும் புதுவாழ்வும் குடுத்திருக்கறதை பாக்கும்போது "ரைட்..வுடு..கண்டுக்காத"ன்னு போயிடலாம்.

இன்னும் இந்தப் புத்தகத்தைப் பத்தி நிறைய எழுதலாம். ஆனா பல ஃபிஸிக்ஸ் டெர்ம்ஸ்க்கு சரியான தமிழ் சொற்களும் தெரியல, எப்பிடி எளிமையா எழுததறதுன்னும் தெரியல. நான் எதயாவது எழுதப் போய் ஏடாகூடமா அர்த்தமாகி புத்தகத்தோட மதிப்பைக் குறச்சிடக்கூடாதில்ல? அதுக்காக,புரியவே புரியாதோனு தப்பா நினைச்சுடாதீங்க. புத்தகம் கிடைச்சா கண்டிப்பா படிங்க. ரொம்ப ரெஃப்ரெஷிங்கா இருக்கும்.

Thursday, December 11, 2008

இரண்டு இங்கிலிபீஸ் படங்கள்

இப்ப என்னவோ திடீர்னு பழைய இங்கிலிபீஸ் படங்கள் மேல ஆர்வம் மறுபடி வந்துருச்சு. க்ளிண்ட் ஈஸ்ட்வுட், க்ரெகொரி பெக், ஆண்டனி க்வின் இவுங்களோட படங்களா தேடிப் புடிச்சு கொஞ்சம் பாத்தேன். அதுல சில....


எஸ்கேப் ஃப்ரம் அல்கட்ராஸ் (1979)
க்ளிண்ட் ஈஸ்ட்வுட்


அல்கட்ராஸ் ஒரு சூப்பர் செக்யூரிடி ஜெயில். சான் ஃப்ரான்ஸிஸ்கோவுக்கு பக்கத்துல கடலுக்கு நடுவுல இருக்கற ஒரு தீவுல இருக்கு. அதுலேருந்து தப்பிக்கறது குதிரைக் கொம்பு. இந்த ஜெயிலுக்கு ஃப்ராங்க் மோரிஸ் வரான். இவன் முன்னாடியே பல ஜெயில்கள்ல இருந்து தப்பிச்சு ட்ராக் ரெகார்ட் வெச்சுருக்கறவன். அதுக்காகத்தான் கடைசியா இங்க அனுப்பிச்சுருக்காங்க. ஜெயில் வார்டன் ஒரு முசுடு. யாரும் தப்பிக்க முடியாது அப்பிடியே தப்பிச்சாலும் கடல்ல நீந்திப் போறதுக்குள்ள குளிர்ல வெறச்சே செத்துப்போயிடுவாங்கன்னு உறுதியா நம்பறாரு.

மோரிஸ் உள்ள வந்ததுமே வார்டன் அவனைத் தனியாக் கூப்பிட்டு வார்ன் பண்றாரு. வெளிய வரும்போது நம்மாளு வார்ட்ன் ரூமுல இருந்து ஒரு நெய்ல் கட்டர சுட்டுட்டு வந்துடறாரு. வந்த மொத நாள்ல இருந்தே எப்பிடி தப்பிக்கலாம்னு யோசிக்க ஆரம்பிச்சுடறான். சாப்பாட்டு கூடத்துல இன்னும் சில கைதிகளோட பேசும்போது இன்னொரு 3 பேருக்கு தப்பிக்கற ஆசை இருக்குன்னு தெரிஞ்சு 4 பேரும் ப்ளான் பண்றாங்க. அவுங்கவுங்க வேலை செய்யற இடத்துல இருந்து சில பொருட்களை செல்லுக்கு கடத்திக் கொண்டு வந்து சில டகாய்டி வேலையெல்லாம் பண்ணி தப்பிக்க முயற்சி பண்றாங்க. 4 பேருல ஒருத்தன் மட்டும் தப்பிக்க முடியாமப் போகுது. மத்த மூணு பேரும் தப்பிச்சுடறாங்க. இத தாங்கிக்க முடியாத வார்டன் அவங்க கடல்ல மூழ்கி இறந்துட்டாங்கன்னு ஃபைல க்ளோஸ் பண்ணிடறாரு.

ஒரு உண்மைச் சம்பவத்தை ஒட்டி 1979ல் எடுக்கப்பட்ட இந்தப் படம் பாக்ஸ் ஆபீஸ்ல ஹிட். படத்துல கடைசில 3 பேரும் தப்பிச்சுட்ட மாதிரி காமிச்சாலும் உண்மைல அவங்க தப்பிச்சாங்களாங்கறது ஒரு மிஸ்ட்ரி. இந்த சம்பவத்துக்கப்பறம் அல்கட்ராஸ் சிறையை மூடீட்டாங்களாம்.

படத்துல பல சின்னச் சின்ன லாஜிக்கல் ஒட்டைகள் இருந்தாலும் படத்தோட grandeur அதயெல்லாம் மறைச்சுடுது. தமிழ் படங்கள்ல "இதோ இப்ப பாத்துருவாங்களோ"ங்கறபோது பூனையை காமிச்சு கதைய நகத்தி ஹீரோவை காப்பாத்தற மாதிரியான சில காட்சிகளும் உண்டு. ஆனா ஈஸ்ட்வுட் எப்பவும் போல நேர்த்தியான் நடிப்பு. ஒவ்வொரு நடிகரும் அவங்க பார்ட்டை சிறப்பா செஞ்சிருக்காங்க. கடைசி சீன் சூப்பர்.

கெல்லீஸ் ஹீரோஸ் (1970)
க்ளிண்ட் ஈஸ்ட்வுட், டெல்லி சவலாஸ், டொனால்ட் சுதர்லேண்ட்

இது கொஞ்சம் காமெடி கலந்த ஆக்சன் படம். நாயகன் கெல்லி (வேற யாரு? ஈஸ்ட்வுட்தான்) எதோ ஒரு காரணத்துக்காக ஒரு லெவல் பதவி இறக்கிடறாங்க. அவரு கொஞ்சம் கோவத்துல இருக்காரு. ஒரு ஜெர்மன் கர்னலை சிறைப் புடிச்சு வந்து விசாரிச்சிட்டுருக்கும்போது, ஜெர்மன் ராணுவம் அமெரிக்க கேம்ப தாக்கறாங்க. அந்த கர்னல் கிட்ட ஒரு தங்கக்கட்டி இருக்கறதைப் பாக்கற கெல்லி அந்தாளுக்கு நல்லா ஊத்திக்குடுத்து ஜெர்மனில ஒரு பாங்குல 14000 தங்கக் கட்டிக இருக்கற விஷயத்த தெரிஞ்சுக்கறான். ஜெர்மன் தாக்குதல் , அந்தாளை அங்கியே விட்டுட்டு கேம்பை விட்டுப் போயிடறாங்க. கேம்போட அந்த கர்னலும் காலியாயிடறாரு.

இப்ப கெல்லி அந்தத் தங்கத்தை தானே அடையணும்னு திட்டம் போட்டு, அவனோட சார்ஜெண்ட் மேஜர் பிக் ஜோ (சவலாஸ்), ஆட்புல் (சுதர்லேண்ட்) இவுங்களையும் இன்னும் சில ஆசை புடிச்ச வீரர்களையும் சேத்துக்கிட்டு தங்க வேட்டைக்குக் கிளம்பறாங்க. 3 நாள் அவகாசம். அதுக்குள்ள தூக்கிடணும். ஒரு ஓட்டை பீரங்கிய வெச்சுக்கிட்டு அவங்க பண்ற அட்டகாசம், ஒரே காமெடிதான். போற வழில ரெண்டு வீரர்கள் கன்ணி வெடில இறந்துடறாங்க. படத்துல கொஞ்சம் சோகமான சீன் இதுதான்.

சில சாதுரியமான ஆக்சன் ப்ளான்களுக்கு அப்பறம் அந்த பேங்க் இருக்கற ஜெர்மன் ஊருக்குப் போய் சேந்துடறாங்க. அங்க இவுங்களோட பீரங்கிய விட ரொம்ப அட்வான்ஸ்டான 'டைகர்' பீரங்கிக 3 காவலுக்கு இருக்கு. சாமர்த்தியமா எல்லாத்தையும் அடிச்சு தூள் கிளப்பிட்டு தங்கத்தை எடுத்துட்டுப் போயிடறாங்க.

நடுவுல அமெரிக்க ஜெனெரல் இவுங்க முன்னேறிப் போறதை நாட்டுக்காக சண்டை போடறாங்கன்னு தப்பா அர்த்தம் பன்ணிக்கிட்டு அடிக்கிற கூத்து இன்னும் காமெடி.

வழக்கம்போல இதுலயும் சில லாஜிக் சறுக்கல்கள். இருந்தாலும் ரொம்ப ரசிக்கும்படியா இருக்கு. இதுவும் ஒரு பாக்ஸ் ஆபீஸ் ஹிட் படம். ஈஸ்ட்வுட் நடிப்பு சொல்லவே வேணாம். சவலாஸ்... டாப் க்ளாஸ். சுதர்லேண்ட் எல்லாத்தையும் தூக்கி சாப்டுடறாடு. அவரோட வித்தியாசமான கெட்டப்பும், பேச்சும் ஓஹோ.

இப்பத்திக்கு இது போதும்னு நினைக்கிறேன். இன்னும் சில படங்களப் பத்தி பின்னால.....

Wednesday, December 10, 2008

"கிங் ஆஃப் ஹ்யூமர்" - டுபுக்கு

சமீபத்தில் தான் இந்தப் பேட்டியைப் படித்தேன். கொஞ்சம் கூட ஏமாற்றவில்லை டுபுக்கு. நீங்கள் இன்னும் பதிவைப் படிக்கவில்லை என்றால் 'நீயே சொல்லேன்' என்று கேட்டுவிடாதீர்கள். நானே மெத்தையில் உட்கார்ந்து கொண்டு படித்ததால் உருண்டு விழுந்து சிரிக்கும்போது அடிபடாமல் தப்பித்தேன். பேட்டியில் பூராவும் உண்மை இருந்தாலும் நகைச்சுவையில் கலக்கியிருக்கிறார்.

கல்யாணமாகி இருந்தால் நீங்கள் மட்டும் மதியம் தூங்கி, மனைவி மற்றும் குழந்தைகளை சாயங்காலமாக வெளியே ஹோட்டலுக்கு கூட்டிப் போய் சாப்பிட்டு விட்டு ராத்திரி பத்து மணி வாக்குக்கு வீட்டுக்கு வந்தீர்களானால் அவர்கள் எல்லோரும் சீக்கிரம் தூங்கப் போய்விடுவார்கள். பர்சுக்கும் பாதகம். அதனால எல்லாத்தையும் நடு வீட்ல உட்கார வெச்சு, ஆளுக்கு 4 தலகாணி நாலு பக்கமும் வெச்சுட்டு, இந்த பேட்டியை சத்தமா எல்லாருக்கும் படிச்சுக் காமிச்சா எல்லாரு சிரிக்கிற சிரிப்பு "மெட்ராசுக்கு அடுத்த 48 மணி நேரம் கழிச்சுதானே மழை வரும்னு ரமணன் சொன்னாரு, இப்பவே இடி இடிக்குதே"ன்னு பக்கத்து வீட்டுக்காரங்களை பயமுறுத்தலாம். எல்லாரும் சிரிச்சுக்கிட்டுருக்ககும்போது படித்தீர்களானால் சூப்பரான சில ஜோக்குகள் மிஸ் ஆகிடலாம். அதனால பொறுமையாப் படிச்சு, அப்பப்ப இடைவேளை விட்டு கண்ணுல வழியற தண்ணியத் தொடச்சுட்டு மீதியப் படிக்கவும்.

"உங்க வாழ்க்கைக் கதையச் சொல்லுங்க, இன்றைய இளைஞர்களுக்கு உங்க அறிவுறை என்னா" என்ற ரீதியில் பேட்டி எடுக்காமல் இப்பிடிப் பட்ட தமாஷான பேட்டியை திறமையாக எடுக்க முடியும் என்று அழகாக எடுத்திருக்கிறார். கேள்விகள் கேட்ட விதம் அருமை. ஒரு நிறைவான பேடியை 'லைவ்' ஆகப் பார்த்த திருப்தி எனக்கு. சம்பிரதாயமாக எல்லோரும் கேட்கும் கேள்விகளைக் கேட்காமல் நாம் (மனதுக்குள்) கேட்க நினைக்கும் கேள்விகளை அனாயாசமாகக் கேட்டு அதற்கு பதிலும் வாங்கிய திறமைக்கு ஒரு சபாஷ்.

பேட்டி எடுப்பது, குபீர் சிரிப்புப் பதிவு போடுவது மட்டுமல்லாது, இவரே ஒரு பெரிய டைரடக்கர். இவரின் முதல் குறும்படமான "The Door" படம் பார்த்தேன். இவ்வளவு தூரம் செய்தவர் இவர் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாமோ என்று தோன்றியது.

எனக்கு மனோஜ் நைட் ஷ்யாமளனைத் தெரியாது. ஆனால் அவரை மாதிரி படம் எடுத்து கூடிய சீக்கிரம் ஜொலிப்பார் என்று டுபுக்கு மேல் அசாத்தியமான, அசைக்க முடியாத, உறுதியான இன்னபிற ...ன நம்பிக்கை இருக்கிறது. டுபுக்கைத் தெரியாதவர்களுக்கு - இங்கே சென்று அவரது குபீர் சிரிப்புப் பதிவுகளைப் படிக்கலாம்.

PS- டுபுக்கு..அம்மா தாயே.... சார் போஸ்ட் இது மாதிரி ரோலெல்லாம் நானும் பின்னிப் பிரிச்சுருவேன் ஹீ ஹீ ஒரு சான்ஸூ.....:P உங்களுக்குக்காக் பதிவெல்லாம் போட்டு துண்டு போட்டுருக்கேன். ஹி ஹி ஹி...

பி.கு: இது டுபுக்கு சாரின் இந்தப் பதிவுக்கு ஒரு துணைப் பதிவு. எதிர் பதிவு அல்ல.

ஐ.நா. சபை - ஜெனீவா


3 வாரத்துக்குப் பிறகு மறுபடியும் ஜெனீவா பயணம். போன முறை வந்தபோது ஐ.நா சபையைப் பாக்க முடியல. இன்னிக்கு நமக்கு சிவராத்திரி ஆபீஸ்ல. அதனால காலைல ஒரு 10 மணிக்கு ஐ நா சபைக்கு போனேன். (சபைக்குன்னா..... சபை கட்டடத்துக்கு !! ) காலைல இருந்தே லேசா பனி பெஞ்சுக்கிட்டுருந்துது. ஸ்வெட்டர், ஜேக்கெட், குல்லா, க்ளவுஸ்னு எல்லாம் போட்டும் குளிர் பின்னுது. மெயின் கேட்டுக்குப் போனா "இந்த கேட்டு இல்ல, அந்தபக்கம் 400 மீட்டர் தூரத்துல இருக்கற இன்னொரு கேட்டுக்குப் போங்க"ன்னுட்டாங்க. சரின்னு பக்கத்துல இருக்கற பூங்கா வழியாப் போனா... அட.. நம்ம காந்தி புத்தகம் படிச்சுட்டு உக்காந்துருக்காரு. பார்ரா....ன்னு அவரை ரெண்டு போட்டோ எடுத்துக்கிட்டு மேல போனா "ஏரியனா"ன்னு ஒரு பெரிய ம்யூசியம். நாம சத்தரத்துக்குப் போனா, நமக்கு முன்னால தரித்திரம் போகுமாம். செவ்வாக்கிழமை மூடியிருக்குமாம். "உங்களையெல்லாம்...."னு பல்லக் கடிச்சிட்டு நேரா ஐ நா சபை விசிட்டர்ஸ் கேட்டுக்குப் போனேன்.



பயங்கர செக்யூரிடி. கொண்டு போற பொருளெல்லாம் (பெல்ட் ஷூ உள்பட) x-ரே பண்ணி அனுப்பறாங்க. (பலபேருக்கு பேண்ட் இடுப்புல நிக்கறதே பெல்ட்னாலதான். அவுங்க பாடு திண்டாட்டந்தான்). பிறகு பாஸ்போர்ட் வாங்கி பாத்துட்டு, ஒரு போட்டொவும் புடிச்சு அட்டகாசமா ஒரு விசிட்டர் ID கார்ட் குடுக்கறாங்க. பேஸ்மெண்டுல 10 ஃப்ரான்க் குடுத்து ஒரு guided tour டிக்கட் வாங்கிட்டு போய் லைப்ரரி ரிசப்ஷன்ல உக்காந்துக்கலாம். ஒரு மணி நேரத்துக்கு ஒரு டூர். நான் போனபோது ஒரு க்ரூப் அப்பத்தான் உள்ள போயிருந்தாங்க. நாங்க ஒரு 15 பேர் முக்காமணி நேரம் காத்திருக்க வேண்டியதாப் போச்சு. தனியா உள்ள எங்கியும் சுத்த முடியாது. கைட் கூடத்தான் போகணும்.

முதல்ல போன குரூப் திரும்பி வந்ததும், 10 நிமிஷம் கழிச்சு எங்களை கூட்டிக்கிட்டுப் போனாங்க. லிங் சோ ங்கற சைனாக்காரப் பொண்ணுதான் கைட். முதல்ல ஐ நா அமைப்பப் பத்தி ஒரு பெரிய லெக்சர் குடுத்தாங்க. ஐ நா அமைப்போட அங்கங்கள் என்ன, திட்டங்கள் என்ன, அலுவலகங்கள் எங்கெல்லாம் இருக்குன்னு விவரமா சொன்னாங்க. பெரும்பாலான அலுவலகங்கள் அமெரிக்காவுலயும் ஐரோப்பாவுலயுந்தான் இருக்கு. ஆசியால டோக்யோல ஒண்ணும், ஆப்பிரிக்கால நைரோபில ஒண்ணும் இருக்கு.

பிறகு மெயின் கான்ஃப்ரன்ஸ் ஹாலுக்குப் போனோம். மேல விசிட்டர்ஸ் கேலரிக்குதான் போகலாம். கீழ ஹால்ல அகர வரிசைல ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு நாற்காலி போட்டுருக்கு. எல்லா நாற்காலிகள்லயும் (விசிட்டர்ஸ் உள்பட) ஒரு இண்டர்ப்ரெடர் கருவியும் இயர் போனும் இருக்கு. ஐ நா வோட 6 பொது மொழிகள்ல மொழிபெயர்க்கும். ஆங்கிலம், அராபிக், ஃப்ரென்ச், ஸ்பானிஷ், ரஷ்யன் மற்றும் சைனீஸ். நமக்கு எந்த மொழி வேணுமோ அந்த மொழிக்கு செட் பண்ணி வெச்சுட்டுக் கேட்டுக்கலாம். (பான் கி மூன் நம்ம பங்காளிதான்... இன்னிக்குப் பாத்து அவுருக்கு ஜலதோஷம்னு வரமுடில. இல்லாட்டி நாமுளும் ஒரு உரயாத்தீருக்கலாம்... ஹ்ம்ம்ம்ம்)



பிறகு மெயின் அசெம்ப்ளி ஹால் இருக்கற கட்டடத்துக்குப் போனோம். கட்டடத்துக்குள்ள கிட்டத்தட்ட 200 கான்ஃப்ரன்ஸ் ஹால்கள் இருக்கு. ஒவ்வொண்ணுலயும் எதாவது மீட்டிங் நடந்துக்கிட்டே இருக்கு. இந்த வாரம் பூரா மனித உரிமைகள் மற்றும் பெண் உரிமைகள் பத்தி பல கூட்டங்கள். போன பத்து வருஷமா மெயின் அசெம்ப்ளி ஹாலுக்கு விசிட்டர்களுக்கு அனுமதி இல்லை. வெளிய ஒரு பெரிய பார்க் இருக்கு. அதுக்கும் அனுமதி இல்லை. (அய்யா தீவிரவாதிகளே... நல்லாயிருங்கடே...)







கடைசியா கவுன்சில் ஹால். பல நாடுகளுக்கிடையேயான் அமைதி ஒப்பந்தங்கள் இங்கதான் கையெழுத்தாயிருக்கு. அந்தா ஹாலே கொஞ்சம் வித்தியாசமா இருக்கு. நாலு சுவர்கள் மற்றும் மேற்கூரை எல்லாத்திலயும் பெரிய பெரிய ஓவியங்கள். எல்லா ஓவியங்கள்லயும் இந்த ஐம்பெரும் நாடுகளும் உலகத்தை எப்பிடி 'காப்பாத்தறாங்க'ங்கறது சித்தரிக்கப்பட்டிருக்கு. இதெல்லாம் கொஞ்சம் ஓவர்னு தோணுச்சு. ஆனா அட்டகாசமான ஓவியங்கள். அந்த ஹாலுக்கே ஒரு தனிக் கலரையும் மூடையும் குடுக்குது.








பிறகு கைட் எங்களை பத்திரமா திரும்ப அந்த லைப்ரரிக்கே கூட்டிக்கிட்டு வந்து விட்டுட்டு "அம்புட்டுதான்... இன்னும் பத்து நிமிஷத்துல எடத்தக் காலி பண்ணிரணும்"னு சொல்லிட்டு போயிட்டாங்க. சின்ன வயசுதான்னாலும் 5-6 மொழிகள்ல அந்தப் பொண்ணு பொளந்து கட்டறதப் பார்க்க ஆச்சரியமா இருந்துது.

பொதுவா இந்தக் கட்டடமே எல்லா உலக நாடுகளிலிருந்து பெறப்பட்ட நன்கொடைகள்ல இருந்துதான் கட்டியிருக்காங்க. உள்ள எல்லா இடங்கள்லயும் பல நாடுகளிலிருந்து அளிக்கப்பட்ட பல ஓவியங்கள், சிலைகள், மத்த கலைப் பொருட்கள்னு எக்கச்சக்கமா இருக்கு.

வால் : இந்த ஜெனீவா ஐ நா மெயின் அசெம்ப்ளி ஹால் கட்டறதுக்கு இடம் குடுத்து உதவினவரு குஸ்தோ (Gusteau). அவர் கேட்டுக்கிட்டபடி உள்ள இருக்கற பார்க்குல அவரோட சமாதி இருக்கு. அதோட அவர் சாகும்போது 10 மயில்கள வளத்திக்கிட்டுருந்தாராம். அதனால இப்பவும் அங்க 10 மயில்களைப் பராமரிச்சுட்டு வராங்க. ஒண்ணே ஒண்ணுதான் எங்கண்ல பட்டுச்சு.

அப்பறம் இந்த ஐ நா லோகோவப் பத்தி ஒரு விஷயம் இப்பதான் தெரிஞ்சுக்கிட்டேன். அதுல இருக்கற பூமி படம் வடதுருவத்துல இருந்து பூமியப் பாக்கற மாதிரி இருக்கு. ஏன்னா எந்த ஒரு நாட்டுக்கும் முக்கியத்துவம் குடுக்கற மாதிரி இருக்கக் கூடாதுங்கறதுக்காகவாம்.


ஐ நா ஜெனீவாவோட வலைத்தளம் http://www.unog.ch

Saturday, December 6, 2008

கொங்கு நாடு - ஒரு அறிமுகம்

மற்றொரு வலைப்பூவான "வருங்கால முதல்வரில்" நான் பதிந்த இடுகைக்கு இங்கே சொடுக்கவும்.

நன்றி.

Sunday, November 30, 2008

கிச்சடி 30.11.2008

ஹி ஹி ஹி ஹி எல்லாரும் அவியல், கதம்பம், நொறுக்ஸ், துணுக்ஸ்னு போட்டு பட்டய கெளப்புராய்ங்களே... நாமுளும் ஒண்ணு போட்டாத்தேன் என்ன கொறஞ்சுரும்னு "கழிவறையில் அமர்ந்து யோசிக்கும்போது கண நேரத்தில்" தோணுச்சு. அவிங்களோடதெல்லாம் சுவையா மணமா பதமா பக்குவமா இருக்கலாம். மொதல்ல 'பேல்பூரி'ன்னு சொல்லலாம்னு பாத்தேன். அதவிட 'கிச்சடி' பெட்டர்னு தோணுச்சு. கிச்சடில ஒரு சௌகர்யம் எத வேண்ணாலும் போட்டு பண்ணலாம். பாப்போம்... நாம பண்ற கிச்சடி மொத சட்டிய விட்டு எடுக்க முடியுதான்னு.....

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

இந்தியாவை விட்டு வெளிய போயிட்டா, எம்பேரு மகேஷ்ங்கறது நண்பர்க மத்தியில மட்டுந்தான். பாஸ்போர்ட்ல அப்பா பேரு மொதல்ல இருக்கறதால விமானத்துல ஏறுனதுலருந்து 'ராமமூர்த்தி'தான் எங்க போனாலும். எங்கப்பா கிட்ட வெளயாட்டா சொல்றதுண்டு... "பல ஊருகளுக்குப் போறது நானாயிருந்தாலும், உண்மையாப் போறது உங்க பேருதாம்பா"ன்னு. பல சமயம் வேற யாரையோ கூப்புடறாங்களோன்னு ஏமாந்ததும் உண்டு.

ஒருமுறை துபாய் ஏர்போர்ட்ல லவுஞ்சுல போய் நல்லா தூங்கிட்டேன். 9 மணிக்கு ப்ளைட். 8 3/4 மணிக்கு 'மிஸ்டர் ரமாமுர்தி... மிஸ்டர் ரமாமுர்தி..."ன்னு அனவுன்ஸ் பண்ணிக்கிட்டே இருக்காங்க. லேசா காதுல விழுந்தாலும், வேற யாரோன்னு தூக்கத்தை கண்டின்யூ பண்ணேன். நல்லவேளை லவுஞ்ச் மேனேஜர் நான் உள்ள வந்ததை கம்யூட்டர் லிஸ்ட்ல பாத்துட்டு ஒவ்வொருத்தரையா கேட்டுக்கிட்டே வந்து நம்மளை எழுப்பி அனுப்பிச்சு வெச்சாரு. அடிச்சு புடிச்சு ஓடி வந்து விமானத்துல ஏறுனா, எல்லாரும் மேலயும் கீழயும் பாத்துட்டு மூஞ்சியத் திருப்பிக்கறாங்க. பிஸினஸ் க்ளாஸ்ங்கற ஒரே காரணத்துக்காக அந்தப் பணிப்பெண்கள் ஒரு சின்ன சிரிப்பு சிரிச்சுட்டு 'டப்'னு கதவை மூடினாங்க.அப்பவும் எங்கப்பா கிட்ட சொன்னேன் 'நீ கிருஷ்ணன் மாதிரிப்பா... போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் உம்பேருக்குத்தான். இவ்வளவு வயசுக்கு அப்பறமும் நான் பண்ற தப்புக்கு உம்பேருதான் ரிப்பேராகுது". அவுருக்கு சிரிப்பு தாங்கல.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ரீடர்ஸ் டைஜஸ்டுல ஒருமுறை படிச்சது... தேவையேயில்லாத, ஆனா உலகத்துல பலபேரு பண்ற வேலைக:

1. பேஸ்டை கீழ இருந்துதான் அமுக்கி எடுக்கணும்னு ரூல் போடறது
2. கடிகாரத்தை 5 அல்லது 10 நிமிஷம் முன்னால அட்ஜஸ்ட் பண்ணி வெச்சுக்கறது
3. ஹோட்டல் ரூம்கள்ல வெக்கற சின்னச் சின்ன சோப்புகளை சேத்து வெச்சு எடுத்துட்டு வரது
...
...
...

இப்பிடி பலது இருந்துது. முழுசா ஞாபகம் இல்ல. 1 வது நான் பண்றதில்ல. 2வது எனக்கும் உடன்பாடு கிடையாது. இப்பவும் நான் என் வாட்ச்சை ஆபீஸ் கடிகாரத்தோட sync ல வெச்சுருக்கேன். முன்னால வெக்கறவங்க பலபேரு "8:20 ஆ... இது 20 நிமிஷம் ஃபாஸ்ட்.. 8 தான் ஆகுது"ன்னு சொல்லிக்கிட்டே 8:30 க்கு கிளம்பி ஆபீஸ்ல திட்டு வாங்குவாங்க. 3வது நானும் பண்றதுண்டு. கை கழுவ வெச்சுக்கலாம், மொகங்கழுவ வெச்சுக்கலாம்னு... ஆனா உபயோகப்படுத்துனதே இல்ல. ரொம்ப நாள் கழிச்சு எங்கயாவது தட்டுப்படும். அப்பறம் தூக்கி எறியுவோம்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

கடிகாரம்னு சொன்னதும் ஞாபகம் வருது. எங்கூட ஸ்கூல்ல படிச்ச சிராஜ், எவ்வளவோ தடவை சொல்லிக் குடுத்தும் "கெணியாரம்"னு தான் எழுதுவான். அப்ப ராதான்னு ஒரு டீச்சர். அவன் ஒருதடவை பணியாரம் கொண்டு வந்தபோது அவங் கிட்ட அது "படிகாரம்"னு சொல்லிச் சொல்லி அவனைக் கிண்டல் பண்ணி, புரிய வெச்சு அவனைத் திருத்துனாங்க. கடிகாரம் கெணியாரம்னா, பணியாரம் படிகாரம்தானே !!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

5வது வரைக்கும் தமிழ் மீடியத்துல் படிச்சுட்டு, 6வதுக்கு ஆங்கில மீடியம் போனபோது நமக்கு ஏ ஃபார் ஆப்பிள் பி ஃபார் பாய் அளவுக்குத்தான் தெரியும். மொதல் நாள் இங்கிலீஷ் டீச்சர் வந்து (அவர்தான் க்ளாஸ் டீச்சர்) என்னென்ன பாடங்களுக்கு என்னென்ன நோட்டு, எவ்வளவு நோட்டு வாங்கணும்னு லிஸ்ட் சொல்லிக்கிட்டே வந்தாரு. 'ஹோம் ஒர்க்'குக்கு ஒரு நோட் போடச் சொன்னாரு. நான் பின்னால உக்காந்து இருந்ததால சரியா காதுல விழல. 'போமக்' நோட்டுன்னு எழுதிக்கிட்டேன். வீட்டுல போய் காமிச்சா, அப்பாவுக்கு புரியவே இல்ல. 'அது என்னடா போமக் நோட்டு? கேள்விபடாததா இருக்கு?'ன்னாரு. 'அதெல்லாம் தெரியாது... நாளைக்கு ஸ்கூலுக்குப் போகும்போது வேணும்'னு சொன்னேன். அவரும் ரொம்ப நேரம் கொழம்பிப் போயிட்டு அப்பறம் சொன்னாரு 'டேய்.. அது ஹோம் ஒர்க் நோட்டாயிருக்கும்'னு. ஆனாலும் எனக்கு உள்ளூர பயம். நாம எழுதுனது சரியா, அவர் சொன்னது சரியான்னு. ஆனா 6வது முடியற வரைக்கும் க்ளாஸ் டீச்சர் 'போமக்' நோட்டுன்னு எதுவும் மறுபடி கேக்காமலே இருந்து என்னய காப்பாத்துனாரு.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

டெல்லில போய் அண்ணனோட நண்பர்களோட தங்கினபோது, அவங்கதான் சமைப்பாங்க. ஒரு நாள் நான் சீக்கிரம் வந்ததால நான் சமைக்கலாம்னு (முதல் முறையா) ஆரம்பிச்சு உப்புமா பண்ணினேன். சாப்டுட்டு முகுந்தன் கேட்டாரு "எப்பிடி கேவலமா பண்ணினாலும் சுமாரா வரது உப்புமா... அதையே உன்னால எப்பிடி கேவலமா பண்ண முடிஞ்சுது?'ன்னு.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

கிச்சடி இதுக்கு மேல தீஞ்சுரும். டெல்லி உப்புமா மாதிரி இருக்காதுன்னு நினைக்கிறேன்....

Monday, November 24, 2008

லாரென்ஸ் ஆஃப் அரேபியா

முன்னுரை





கர்னல் ஒருவர் மோட்டார் பைக்கில் ஏறி வேகமா போறாரு. போய்க்கிட்டே இருக்காரு. திடீர்னு ரெண்டு சைக்கிள்காரங்க ரோட்டுல எதிர்ல வர, இவுரு தடுமாற சறுக்கி பைக் ஒரு பக்கம் போய் விழுது. கர்னல் போட்டிருந்த கண்ணாடி ஒரு மரத்து கிளைல மாட்டிக்கிட்டு ஊசலாடுது. இப்பிடி படம் ஆரம்பிக்குது.

சர்ச்சுல அவருக்கு இறுதி மரியாதைகள். யார் அந்த கர்னல்? "ஆங்.. கேள்விப் பட்டுருக்கேன்.. பெரிய கவிஞர்... படிப்பாளி..." "அவரைப் பத்தி எனக்கு ரொம்ப அதிகம் தெரியாது" "பெரிய வீரர்... ஒரு சின்னப் படைய வெச்சுக்கிட்டு என்னெல்லாம் பண்ணினாரு..அடேயப்பா..."

லெஃப்டினண்ட் டி.இ.லாரென்ஸ் பிரிட்டிஷ் ராணுவத்துல ஒரு சாதாரண மேப் வரைபவர் (cartographer). ரொம்ப அமைதியான, ஜாலியான, தைரியமான ஆளு. அரசியல் தெரிஞ்சவர். முக்கியமா மத்திய-கிழக்கு நாடுகளைப் பத்தி ரொம்ப தெரியும். முதல் உலகப் போர்ல துருக்கி ஜெர்மனியோட சேந்துக்கிட்டு அரேபியாவை தாக்க முயற்சிக்கும்போது, பிரிட்டனும் ஃப்ரான்சும் அரேபியாவுக்கு ஆதரவு. அரபிகளுக்கு துப்பாக்கி, பீரங்கி, வான்வழி தாக்குதல் இதெல்லாம் புதுசு. அவங்களுக்கு தெரிஞ்சதெல்லாம் ஒட்டகம், குதிரை, வாள்.

அரேபியாவுல இருக்கற இராக் மன்னர் ஃபைசலுடைய நோக்கம் என்ன, நிலைமை எப்படின்னு தெரிஞ்சுக்க, அரேபிய இனமான 'பெதுவன்'களைப் பத்தி நல்லா அறிஞ்ச லாரென்ஸை தந்திரமா அரேபியாவுக்கு வேவு பாக்க அனுப்பறாங்க. அவரும் குஷியா கெளம்பிப் போறாரு. ஆனா அவருக்கே தெரியாது இது அவர் வாழ்க்கைலயும், உலக வரலாற்றுலயும் ஒரு திருப்புமுனையா இருக்கப் போகுதுன்னு. ஒரு வழிகாட்டியோட பாலைவனத்துல ஒட்டகத்துல சவாரி. அரேபியாவுல பல பழங்குடி இனத்தவர்கள் அங்கங்க. ஒற்றுமை கிடையாது. எப்பவும் ஒருத்தரோட ஒருத்தர் சண்டை, வன்மம். எல்லாம் தண்ணிக்காக. வழியில வேற ஒரு இனத்தோட கிணத்துல தண்ணி எடுத்ததுக்காக வழிகாட்டி கொலை செய்யப்படறான். தைரியமா தனி ஆளா எப்பிடியோ ஃபைசல் கிட்ட போய் சேர்றாரு.

ஃபைசலோட பேசும்போதுதான் தெரியுது அவங்களுக்கு பிரிட்டிஷால அவ்வளவா உதவ முடியலன்னு. யோசிச்சுப் பாத்தா துருக்கி துறைமுகமான அகபா (Aqaba) வை கைப்பற்றினாத்தான் அடுத்த அடி எடுக்க முடியும்னு தெரியுது. முக்கியமா இதுக்கு அரேபிய பழங்குடி இனமெல்லாம் ஒண்ணு சேரணும். அகபால இருக்கற பீரங்கிப் படையெல்லாம் கடலைப் பாத்து இருக்கு. ஏன்னா சூயஸ் கால்வாய் வழியாத்தான் அவங்களை அடைய முடியும். இதுதான் வாய்ப்பு, நாம பாலைவனம் வழியாப் போய் தரைத்தாக்குதல் நடத்தலாம்னு முடிவு பண்ணி, ஃபைசல் கிட்டப் பேசி (பிரிட்டனுக்குத் தெரியாம) தலைவன் ஷெரிஃப் அலி கூட ஒரு 50 வீரர்களைக் கூட்டிக்கிட்டு கிளம்பறாங்க. மிகக் கொடுமையான நெஃபுத் பாலைவனத்தைக் கடக்கணும். கடும் வெயில். தண்ணி கிடையாது. 90 மைல் பயணம். இரவுகள்லயே பிரயாணம். போற வழில வேற ஒரு பழங்குடி இனம் ஹுவெதைத் தலைவன் ஔதா கூட ஒரு சமரசம் பேசி, அவங்களும் ஹரித் இனத்தோட சேந்து போருக்கு வராங்க. இது முதல் வெற்றி. லாரென்ஸுக்கும் அரபு உடைகள் போட்டு அவரையும் ஒரு அரபியாவே பாக்க ஆரம்பிக்கறாங்க.

எதிர்பார்த்தது மாதிரியே தரைப்பகுதி பாதுக்காப்பு வீக். அகாபா சுலபமா கைக்கு வருது. கெய்ரோல இருக்கற பிரிட்டிஷ் அதிகாரிகள் கிட்டப் போய் வெற்றியை சொன்னா அவங்களால நம்பவே முடியல. லாரென்ஸ்க்கு பதவி உயர்வு. இப்பொ மேஜர் லாரென்ஸ். அடுத்து டேராவை கைப்பற்ற ஆணை. கொஞ்சம் தடவாளங்கள் எடுத்துக்கிட்டு திரும்பப் போய் துருக்கி ரயில் போக்குவரத்துக்கு குறிவெச்சு அதை தகர்க்கராங்க. பழங்குடிப் படையைக் கூட்டிக்கிட்டுப் போய் டேராவையும் முற்றுகையிடறாங்க.

ஒரு அசட்டுத் தைரியத்துலயும், தானும் ஒரு அரபிங்கறதை யாரும் மறுக்க முடியதுங்கற கர்வத்துலயும் வீதில அலையும்போது துருக்கி ராணுவம் புடிச்சுக்கிட்டுப் போய் லாரென்ஸ் அரப் இல்லன்னு கண்டுக்கறாங்க. அந்த நீலக் கலர் பூனைக் கண்களும், வெள்ளைத்தோலும் காட்டிக் குடுத்துடுது. துருக்கிய தளபதி பே லாரென்சை உடைகளைக் களைஞ்சு அவமானப்படுத்தி
(raped or sodomised-னு வரலாறு சொல்லுது) தூக்கி எறியறாங்க. இந்த அவமானம் தாங்க முடியாம மறுபடி கெய்ரோவுக்கு போய் எனக்கு இந்த வேலையே வேணாம்னு சொல்றாரு. ஆனா அங்க வேற மாதிரி ப்ளான் வெச்சுருக்காங்க அரசியல்வாதிக. டமாஸ்கஸ் கைப்பற்றப்படணும்னு திரும்பவும் தடவாளங்கள் குடுத்து, நீதான் அரபிகளுக்கு தலைமையேற்க முடியும்னு அனுப்பறாங்க. வேற வழியில்லாம, ஒரு வன்மத்தோட டேராவுக்குத் திரும்பறாரு. வன்மத்துல அவருடைய அடிப்படையான் அமைதிக் குணம் போய் போர்க் குணம். படையைக் கூட்டிக்கிட்டுப் போய் "கைதிகள் கிடையாது"ன்னு கோஷம் போட்டுக்கிட்டே துவம்சம் பண்றாங்க. (இந்த "No Prisoners" கோஷம் உலகப்புகழ்) நூத்துக்கணக்குல தலைக உருளுது. லாரென்ஸோட துப்பாக்கிக்கு ரொம்ப வேலை. ரத்தம் படிஞ்ச கத்தியோட லாரென்ஸைப் பாக்க ஷெரிஃப் அலிக்கே முடியல. 'நீயா இப்பிடி...நீயா இப்பிடி..'ன்னு மாஞ்சு போறான்.

இப்பத்தான் சிக்கல். பிரிட்டனும் ஃப்ரான்சும் டமாஸ்கஸ் கைக்கு வந்தா துருக்கியையும் கூடவே அரேபியாவையும் பங்கு போட்டுக்கலாம்னு ஏற்கெனவே ஒப்பந்தம் போட்டாச்சு. லாரென்ஸைப் பொறுத்த வரை, எல்லாத்தையும் அரேபியாவுக்கே குடுத்துடணும். யாரும் கேக்கற மாதிரி இல்ல. இப்ப துருக்கி கையில இருக்கே தவிர, மின்சாரம், தண்ணீர், மருத்துவம் இதையெல்லாம் பராமரிக்க ஃபைசல் கிட்ட போதுமான அறிவோ ஆட்களோ இல்ல. இதத்தான் பிரிட்டனும் எதிர்பார்த்தது. போதாக்குறைக்கு, ஃபைசல் தலைமைல லாரென்ஸ் ஏற்படுத்திய "அரபு தேசிய கவுன்சில்"குள்ளயே மறுபடியும் பழங்குடியினரோட பழைய தகராறுகள ஆரம்பம். ஷெரிஃப் அலியும், ஔதாவும் விலகிப் போக மத்த அரபிகளும் விலக ஆரம்பிக்கறாங்க. இப்ப பிரிட்டனும், ஃப்ரான்சும் ஃபைசல் கிட்ட வந்து பேச்சு வார்த்தை நடத்த ஆரம்பிக்கறாங்க. வேற வழியில்ல. பேருக்கு ஃபைசல் ராஜா. அவரே வேதனையா சொல்றாரு "அரபிக் கொடிக்குக் கீழ பிரிட்டிஷ் பராமரிப்புத்துறைகள்..." பிரிட்டன் தான் நினைச்சதை சாதிச்சுடுது.

லாரென்ஸுக்கு மறுபடி பதவி உயர்வு குடுத்து கர்னல் ஆக்கிடறாங்க. அவரோ இந்த அரசியல் எல்லாம் வெறுத்துப் போய், தன்னுடைய 'ஒன்றுபட்ட அரேபியா" கனவு பாலைவன காத்துல கரைஞ்சு போக சோகமா பிரிட்டனுக்கு திரும்பறாரு.

படத்துல குறிப்பிட்டு சொல்ல வேண்டியது கேமரா. நாயகன் பீட்டர் ஓ'துல் (ஒரிஜினலா மார்லன் ப்ராண்டோ நடிக்க வேண்டியது) ஆண்டனி க்வின் (ஔதா) ஒமர் ஷெரிஃப் (ஷெரிஃப் அலி) மற்றும் அலெக் கின்னஸ் (ஃபைசல்). என்னா நடிப்பு என்னா நடிப்பு !! அதுலயும் தன்னால காப்பாத்தப்பட்ட காசிமை தானே சுட்டுக் கொல்ல வேண்டி வந்ததையும், தன்னோட உதவியாளன் வெடிமருந்து கையாளும்போது விபத்துக்குள்ளாக துருக்கியர் கிட்ட மாட்டக்கூடாதுன்னு தானே சுட்டுக் கொன்னதையும் நினைச்சு குற்ற உணர்ச்சில மருகும்போது...க்ளாஸ் !! அதே ஆளு துருக்கி தளபதி பே கிட்ட நடந்த அவமானத்துக்கப்பறம் அப்பிடியே வெறி புடிச்ச ஆளா மாறும்போதும், அரசியல் வெறுத்து அமைதியா நாடு திரும்பும்போதும்.... என்ன சொல்றது போங்க..... ராஜா ஃபைசலோட அரபிகளுக்கே உரிய typical இங்கிலீஷ் accent - சூப்பர். படம் முழுக்க வசனங்கள்ல இழையோடற மெல்லிய நகைச்சுவை. எல்லாத்துக்கும் மேல எடிட்டிங்கும், சம்பவங்களை கோர்வையா சொன்ன விதமும்... 1962ல 7 Academy விருதுகள் வாங்கத் தகுதியான படம்.

ஒரு வெறி புடிச்ச போரை ஒரு சொட்டு ரத்தத்தைக் காமிக்காம suggestive-ஆ சொல்லியிருக்கற விதத்தைப் பார்க்கும்போது பருத்தி வீரன், சுப்பிரமணியபுரம் படத்துல எல்லாம் அவ்வளவு கொடூரமான க்ளைமாக்ஸ் காட்சிகள் தேவைதானான்னு யோசிக்க வெக்குது.

நிஜ டி.இ.லாரென்ஸ்


ரொம்ப நீளமான பதிவாப் போச்சோ? படமும் நீளந்தான். 218 நிமிடங்கள். வாய்ப்பு கிடைச்சா பாருங்க. படிக்கறதை, சொல்லிக் கேகறதை விட பாக்கும்போது கிடைக்கிற அதிர்வு ரொம்ப நாளைக்கு மனசுல இருக்கும்.

Sunday, November 23, 2008

ஹோட்டல் ர்வாண்டா

மிக சமீபத்தில் பார்த்த, உண்மை சம்பவங்களை ஒட்டிய இரண்டு படங்களைப் பற்றி உங்களோடு கட்டாயமாக பகிர்ந்து கொள்ள வேண்டும். நீங்கள் முன்னமே பார்த்ததாக இருக்கலாம். இரண்டு படங்களிலும் நிகழும் சம்பவங்கள் நம்மை ரொம்பவும் பாதிப்பது ஒருபுறம். ஒரு சிறந்த திரைப்படம் எப்படி இருக்க வேண்டும், அதன் குணாதிசயங்கள் என்ன, சொல்ல வந்ததை இதை விட சிறப்பாக சொல்ல முடியுமா, ஒரு உண்மைச் சம்பவத்தைக் கையாளும்போது எவ்வளவு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்ற பல கேள்விகளுக்கு இந்தப் படங்கள் பதிலளிக்கின்றன.

ஹோட்டல் ர்வாண்டா (Hotel Rwanda)



உகாண்டா, காங்கோ, தான்சானிய நாடுகளுக்கு இடையே பல்லிடுக்குல மாட்டின மாதிரி இருக்கற ஒரு குட்டி மத்திய ஆப்பிரிக்க நாடு ர்வாண்டா. மத்த ஆப்பிரிக்க நாடுக போலவே இதுவும் ஒரு கலவர பூமி. ஹுடு (hutu)மற்றும் டுட்ஸி (tutsi) இன மக்களுக்கு இடையே தீராத சச்சரவு. ஹுடு இனத்தவர் டுட்ஸிக்காரங்களை 'கரப்பான்பூச்சி'ன்னு சொல்ற அளவுக்கு வெறுப்பு. ஒரு கட்டத்துல கலவரம் அதிகமாகி, ஹுடுக்கள் டுட்ஸிக்களை ஆயிரக்கணக்குல கொன்னு குவிக்கறாங்க. கையாலாகாத பூஞ்சை அரசு... ஐ.நா.அமைதி காக்கும் படை வருது. இங்கதான் கதை ஆரம்பிக்குது.

கதை நாயகன் பால் ருஸேஸபகீனா தலைநகர் கிகாலில இருக்கற 'மீ கொலீன்'ங்கற நட்சத்திர ஹோட்டலோட மேனேஜர். ஹுடு இனத்தவர். ஆனா மனைவி தாத்ஸியானா டுட்ஸி இனம். ஹோட்டலை பாதுகாக்கறதுக்காக உள்ளூர் சண்டைகட்சி தலைவர்க, ராணுவ தளபதிகன்னு எல்லாருக்கும் பணம் குடுத்து, ஊத்திக் குடுத்துன்னு ஒரு மாதிரி 'ரேப்போ' மெய்ண்டைன் பண்றாரு. கூடவே தன்னோட குடும்பத்தைக் காப்பாத்தணும்னு ஒரு சுயநலம். ஒரு நாள் கலவரம் அதிகமாகி, பால் தங்கியிருக்கற பகுதில உள்ள எல்லா டுட்ஸிக்களையும் அடிச்சு துவம்சம் பண்ணி, பால் குடும்பத்தையும் சேர்த்து இழுத்துக்கிட்டு போறாங்க. ஆனா பால் கலவரக்காரர்களோட பேரம் பேசி ஹோட்டலுக்குப் போய் கொஞ்சம் பணம் எடுத்து அவங்களுக்குக் குடுத்து எல்லாத்தையும் மீட்டு ஹோட்டல்லயே தங்க வெக்கறாரு.

கொஞ்சம் கொஞ்சமா ஹோட்டல் ஒரு அகதிகள் முகாம் மாதிரி ஆகுது. கலவரக்காரர்கள் தொந்தரவும் அதிகம். ராணுவமும் கண்டுக்காம இருக்குது. பால் தன்னுடைய சக்திக்கு மீறி பலருக்கு லஞ்சம் (பணம், தண்ணி)குடுத்து எப்பிடியோ ஐ.நா. படை உதவியோட ஒரு லாரில எல்லாத்தையும் காப்பாத்த முயற்சி செய்ய, சக ஊழியன் ஒருத்தன் எட்டப்பனா மாறி கலவரக்காரர்களுக்கு தகவல் குடுத்து அந்தத் திட்டத்தை முறியடிக்கறான். பிறகு ஹோட்டலுக்கு தண்ணீர், மின்சார சப்ளை நிறுத்திடறாங்க. ஆனாலு பால் தன்னோட புத்தி சாதுரியத்தாலயும், தைரியத்தாலயும் ஹோட்டல் முதலாளிக, கலவரக்காரர்க, ராணுவத்தினர்னு எல்லார் கிட்டயும் நைச்சியமா பேசி சமாளிக்கறது ஹைலைட். கடைசியா ஒண்ணும் முடியலங்கறபோது தைரியமா ராணுவ தளபதி பிஸிமுங்கோவை ப்ளாக் மெய்ல் பண்ணி மக்களைக் காப்பாத்தறபோது ஒரு தனி மனிதனோட வீரம் அதிர வெக்குது. ஒரு வழியா ஐ.நா.படை உதவியோட உயிரிழப்பு இல்லாம எல்லா மக்களும் பாதுகாப்பா அடுத்த ஊருக்கு போயிடறாங்க.

ஹோட்டலுக்கு காய்கறி, அரிசி வாங்கறதுக்காக கலவரக்காரர்களோட தலைவன் ரடகுண்டா கிட்டயே போய் அதிகப் பணம் குடுத்து வாங்கிகிட்டு வரும்போது இருட்டுல கார் கரடு முரடானா சாலைல போற மாதிரி குதிச்சு குதிச்சு போகுது. சந்தேகப்பட்டு நிறுத்தி எறங்கிப்பாத்தா சாலைல பூரா கொன்னு வீசப்பட்ட உடல்கள். ரூமுக்கு வந்து பால் ஒரு அழுகை அழுவார் பாருங்க, நாயகன் கமல் அழுகையெல்லாம் ரெண்டாவது எடத்துக்கு போயிடும்.

ஒரு உண்மை சம்பவத்தை குரூரமான காட்சிகள் எதுவுமே இல்லாம நிலைமையோட பயங்கரத்தை அவ்வளவு அழகா உணர்த்தியிருக்காங்க. பால் மாதிரி ஒரு சுயநலமான ஆள் கூட சூழ்நிலையால ஒரு பொதுநல ஹீரோவா ஆகறது இயல்பா இருக்கு. பால் நிஜமாவே ர்வாண்டா மக்களோட பெரிய ஹீரோ. பிறகு அவருக்கு பல சர்வதேச விருதுகள் கிடைச்சுது.

நிஜ பால் ருஸேஸபகீனா ஐ.நா விருது வாங்கும்போது...

இது மாதிரி திரைப்படங்கள் இந்தியாவுல ஏன் வருகிறதில்லைன்னு ஏக்கமாவும் வருத்தமாவும் இருக்கு.

இன்னொரு படம் "லாரென்ஸ் ஆஃப் அரேபியா" பத்தி அடுத்த பதிவில்.....

Sunday, November 16, 2008

ஜெனீவா - ஆல்ப்ஸ் டைரி

முன்னாடி, அதுக்கும் முன்னாடின்னு ரெண்டு பதிவு போட்ட பிறகு இது மூணாவது. (இதே வேலையாப் போச்சு... இப்பிடியே ஓட்றா நீயி...)

இன்னிக்கு சனிக்கிழமை காலைல 8 மணி வாக்குல கெளம்பி தங்கியிருக்கற ஹோட்டலுக்கு நேர் எதிர்க்க இருக்கற ட்ரெய்ன் ஸ்டேஷனுக்குப் போனேன். ரோஷெ தி நே (Rochers de Naye) ங்கற ஒரு ஆல்ப்ஸ் உச்சிக்குப் போகலாம்னு திட்டம். ஜெனீவால இருந்து மோந்த்ரூ (Montreux) 1 மணி நேரம். அங்கிருந்து மலை ரயில். நம்ம ஊட்டி மாதிரி தண்டவாளங்களுக்கு நடுவுல பல் சக்கரத்துக்கு ரெண்டு வரிசை இருக்கு. ஏற்றம் சில இடங்கள்ல 220%இருக்கு. ரயில் சாவகாசமா மேல ஏறுது. கிட்டத்தட்ட 1 மணி நேரம். பாதி ஒசரம் போனதுமே எங்க பாத்தாலும் பனியா இருக்கு. மேகங்கள் எல்லாம் நமக்குக் கீழ. நடுவுல அங்கங்க மலை உச்சிகள் மட்டும் தெரியுது. கொள்ளை அழகு. "வானம் கீழே வந்தாலென்ன..." பாட்டு ஞாபகம் வந்தது.







போற வழியில அங்கங்க ஆளுக மப்ளர ஆட்டி ரயில நிறுத்தி ஏறிக்கறாங்க. பெரும்பாலும் பனிச்சறுக்கு விளயாடரவங்க. கீழ சறுக்கி வந்துட்டு, மறுபடி ரயில்ல ஏறி மேல போறாங்க. ரோஷெ தி நே ஸ்டேஷனுக்கு போய் இறங்கிப் பாத்தா சுத்திலும் எங்க பாத்தாலும் பனி ஒரு அடி உசரத்துக்கு விழுந்துருக்கு. செடி கொடியெல்லாம் கருகிப் போய் நுனியில பனிய சொமந்துக்கிட்டு நிக்குதுக. மேல ஒரு பெரிய ரெஸ்டாரண்ட் இருக்கு. வெளியில மலை மேல அஞ்சாறு குடில்கள் இருக்கு. எல்லாம் எஸ்கிமோ மாதிரி இக்ளூ வீடுகள். அதிகபட்சம் 5 பேரு தங்கலாம். ஒரு ராத்திரிக்கு 250 ஃப்ரான்க். (நம்மூரு கணக்குக்கு10000 ருவா...கொள்ளை !!) அதுக்கே பாருங்க பிப்ரவரி வரைக்கும் முன்பதிவு ஆயிருச்சாம். ரெஸ்டாரண்டுக்கு வெளிய மர டேபிள், பென்ச் எல்லாம் பனி விழுந்து பெட் மாதிரி இருக்கு.






இதுக்கு மேல ஒரு 200 மீட்டர் ஒசரத்துல வ்யூ பாயிண்ட் இருக்கு.200 மீட்டர்தான்னாலும் ஒரு கிலோமீட்டர் தூரம் நடக்கணும். நேரா ஏறினா அப்பறம் நேரா சறுக்கி எறங்க வேண்டியதுதான். குறுக்கு மறுக்கா (zig zag) நடக்கணும். கால வெச்ச பொசுக் பொசுக்னு 1 அடி உள்ள எறங்கி ஷூ சாக்ஸ்குள்ள எல்லாம் பனி போய் கிச்சு கிச்சு முட்டுது. அதுனால நமக்கு முன்னால போறவங்க கால வெச்ச குழிலயே நாமளும் மொள்ள கால எட்டு வெச்சு வெச்சு ஏறணும். அப்பிடியும் சில எடங்கள்ல கொஞ்சம் சறுக்கி எழுந்துதான் போனேன். மூச்சு முட்டிருச்சு. தஸ் புஸ்னு மாடு மாதிரி மூக்கு வாய் வழியா பொக பொகயா வருது. மேல போய் அப்பாடான்னு பாத்தா... அட அட அட...என்ன ஒரு panoramic வ்யூ !!! கீழ மேகம்... நடுவுல பனித் தொப்பி போட்ட மலை உச்சிகள்... மேல பிரகாசமா சூரியன்..... இயற்கை... இயற்கை (அபிராமி... அபிராமி...)







திரும்ப கீழ எறங்கரது சர்க்கஸ் மாதிரி ஆயிடுச்சு. எங்க எப்ப சறுக்கும்னே தெரியல. ஒரு வழியா கீழ எறங்கிப் பாத்தா பேண்ட் சூச்சா போன மாதிரி பூரா ஈரம். மறுபடி ட்ரெய்ன் ஏறி வழியில க்ளீயோ (Glion) ங்கற ஸ்டேஷன்லயே எறங்கீட்டேன். அங்கிருந்து மோந்த்ரூவுக்கு நடந்தே கீழ எறங்க யானைப்பாதை மாதிரி இருக்கு. 1 மணி நேர நடை. கீழ எறங்கினப்பறங் கூட கொஞ்ச நேரத்துக்கு கால் தானா மடங்குது. பெறகு ட்ரெய்ன் புடிச்சு ஜெனீவா திரும்பினேன். அதுக்குள்ள சாயங்காலம் மணி 4:30. ரூமுக்கு வந்து சூடா ஒரு காப்பி குடிச்சுட்டு, இதோ பதிவும் போட்டு முடிச்சாச்சு.







நாளைக்கு கிளம்பலாம்னா ஃப்ளைட் எல்லாம் ஃபுல். திங்கள் காலங்காத்தால ஃப்ளைட். சிங்கை போய் சேரும்போது செவ்வாய் அதிகாலை ஆயிடும். அப்பறம் இருக்கவே இருக்கு ஆபீஸ்...ஊடு...

வரலாறு, புவியியல் ஆர்வலர்களுக்காக ஸ்விட்சர்லாந்தைப் பத்தி ஒரு சிறு குறிப்பு: மேற்கு ஐரோப்பிய நாடு. சுத்திலும் ஃப்ரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரியா, ஸ்லொவீனியா நாடுகள். தனி விசா.ஷெங்கன் விசா முறைல ஜனவரி 2009 ல இருந்து சேரலாம்னு எதிர்பார்க்கறாங்க. சேந்தா வசதி. பெரும்பாலான ஐரொப்பிய நாடுகளுக்கு ஒரே விசாவுலா போய் வரலாம். இன்னும் யூரோ நாணயத்துக்கு மாறல. ஆனா யூரோ செல்லுபடியாகும். (கடைகள்ல யூரோ வாங்கிகிட்டு ஃப்ரான்க்ல பாக்கி குடுப்பாங்க யூரோ : ப்ரான்க் கிட்டத்தட்ட 1.3) பெரிய நகரங்கள் ஜெனீவா, ஸ்யூரிக், பெர்ன், லூசெர்ன், லூசேன், லுகானோ, பேசல்.....இதெல்லாம். மிகப் பெரிய நன்னீர் ஏரி 'லெமான் ஏரி' ஒரு பிறை வடிவத்துல இருக்கு. ஜெனீவாவுல ஆரம்பிச்சு வோட் வரைக்கும் கிட்டத்தட்ட 80 கி.மி நீளம், 15 கி.மி அகலம். 600 சதுர கி.மி பரப்பு. பெரும்பாலும் ஜெர்மன் மொழி. தெற்கு, மேற்குல (ஜெனீவா உள்பட) ப்ரென்ச். போதுங்க....


Thursday, November 13, 2008

முத்தமிழ் - எந்தத் திக்கில்?

உலகம் யாவையும் தாம்உள வாக்கலும்
நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார் - அவர்
தலைவர், அன்னவர்க்கே சரண் நாங்களே.
- கவி கம்பன்

எதையோ யோசிச்சுக்கிட்டிருக்கும்போது திடீர்னு இந்த பாட்டு ஞாபகம் வந்தது. (இது பாட்டா, செய்யுளா?) இது ஞாபகம் வந்ததும் கூடவே புலவர் கீரனோட ஞாபகமும் வந்தது.

உடுமலை அரசினர் மேல் நிலைப்பள்ளியில படிக்கும்போது, தி.சு.செந்தில் ஆறுமுகம்னு ஒரு ஆசிரியர் இருந்தாரு. இவர் திரு. சுந்தர ஓதுவா மூர்த்தி சுவாமிகளோட மகன். வருஷத்துக்கு ஒருமுறை இலக்கிய மன்றம் சார்புல "முத்தமிழ் விழா"ன்னு 9 நாளைக்கு நடத்துவாரு. இயல், இசை, நாடகம் ஒண்ணொண்ணுக்கும் 3 நாள். கூடவே வாரியார் சுவாமிகள், புலவர் கீரன், திருக்குறளார் முனுசாமி இவுங்களோட சொற்பொழிவுகளும் தினமும் இருக்கும். முனுசாமி அய்யாவோட சொல்லாடலை விட அவருடைய குரல் வளமும், ஏற்ற இறக்கங்களோட பேசுறதும் கேக்க ரொம்ப சுகமா இருக்கும். வாரியார் சுவாமிகள் சொற்பொழிவுன்னா மொதல் பத்து வரிசை சின்னப் பசங்களுக்குதான். கதை சொல்லிக்கிட்டே வரும்போது திடீர்னு எதாவது கேள்வி கேட்டு டக்குனு பதில் சொல்ற பையனுக்கோ பொண்ணுக்கோ கந்தரனுபூதி, கந்தரலங்காரம்னு ஒரு சின்ன புத்தகத்தை பரிசாக் குடுப்பாரு. ரொம்ப சுலபமான கேள்விகள்தான். சின்னப் பசங்க கிட்ட ஒரு ஈடுபாடு உண்டாக்கணும்கற நோக்கத்துல 3 மணி நேர சொற்பொழிவுக்குள்ள ஒரு 40 பரிசுகளாவது பட்டுவாடா ஆயிரும். நடு நடுவுல துணுக்குகள் சொல்றதும், அதுக்கு அவுரே குலுங்கிக் குலுங்கிச் சிரிக்கரதும் தனி அழகு. அவரோட "கைத்தல நிறைகனி....." உலகப் புகழ். தமிழ் மிமிக்ரி கலைஞர்கள் எல்லாம் முதல்ல கத்துகிற குரல் இவரோடதாத்தான் இருக்கும்.

அப்பறம் புலவர் கீரன். தன்னுடைய ஊனத்தைக் கூட பொருட்படுத்தாம 3 மணி நேரம் உக்காந்த இடத்துல கணீர்னு "உலகம் யாவையும்..." சொல்லி ராமாயணமோ, வில்லிபாரதமோ சொன்னார்னா, அந்தந்த பாத்திரங்களே நம்ம முன்னாடி நின்னு பேசர மாதிரி இருக்கும். திரும்ப திரும்ப படித்த, கேட்ட கதைகளை ஒவ்வொரு முறையும் வித்தியாசமான செய்திகளோடயும், சிந்தனைகளோடயும் கேக்கறவங்களை கட்டிப் போடற மாதிரி சொல்றது புலவர் கீரனுக்கு இணை அவர்தான். நடுவுல சொல்ற கிச்சு கிச்சு மூட்டற குட்டிக் கதைகளும் சுவாரசியமா இருக்கும்.



எல்லாத்துக்கும் மகுடம் வெச்சது மாதிரி இருப்பது R.S.மனோகரின் நாடகங்கள். எங்க பள்ளிக்குள்ள இருக்கற கலா மண்டபத்திலும், GVG கலையரங்கத்திலும் மனோகர் நாடகங்களை பார்ப்பதே ஒரு சுகானுபவம். "இலங்கேஸ்வரன்" நாடகத்தை முதல் முதல்ல "ட்ராமாஸ்கோப்" முறையில கலா மண்டபம் மாதிரியான சுமாரான இடத்துலயே அதை அட்டகாசமா நடத்தி, வழக்கத்துக்கு மாறா பள்ளியிலயே தொடர்ந்து 10 நாள் நடத்தி அசத்தியவர் அவர்.

இப்ப இதெல்லாம் எதுக்குச் சொல்றேன்னா, 90களுக்குப் பிறகு இந்த மாதிரி நிகழ்ச்சிகள் ரொம்பவே குறைஞ்சுக்கிட்டே வந்து, இப்பல்லாம் நடக்கறதே இல்லன்னு கேள்விப்பட்டபோது ரொம்ப சங்கடமா இருந்தது. அதவிட சங்கடம் இதெல்லாம் நேரத்தை வீணாக்கற விஷயம்ங்கற மாதிரி பேசினது.

செந்தில் ஆறுமுகம் மாதிரியான ஆசிரியர்களும் இப்ப இல்ல. இதையெல்லாம் ரசிக்கறதுக்கு மக்களும் இல்ல. இப்ப மக்கள் பாத்து ரசிக்கற ஒரே மேடை 21 இன்ச் டி.வி பொட்டிதான். காலைல எழுந்ததிலிருந்து ராத்திரி தூங்கப் போகற வரைக்கும் மெகாத்தொடர்கள்ங்கற பேர்ல மக்களை மக்கிப் போக வெக்கற அரைவேக்காடு நிகழ்ச்சிகள்தான். எங்க பகல்ல பாக்காம விட்டுப் போச்சுன்ன என்ன பண்றதுன்னு ராத்திரி ஒரு ரௌண்ட் மொதல்லேருந்து திரும்பப் போட்டு வேற படுத்தறாங்க. இதயெல்லாம் பாக்க சகிக்காதுன்னுதான் மேல சொன்னவங்கள்லாம் மேலயே போய் சேந்துட்டாங்க. அங்க இருக்கறவங்க பாக்கியசாலிக.

மங்காத தமிழ்னு எட்டுத் திக்கும் கொட்டச் சொன்னான் ஒரு போக்கத்த கவி. நாம எந்தத் திக்குக்கும் போல. நம்ம வீட்டு சாக்கடையிலயே கொட்டீட்டு, பீட்சா தருவிச்சு சாப்டுட்டு, மினரல் வாட்டர் குடிச்சுட்டு குப்பறப் படுத்து குறட்டை விட்டாச்சு. அட போங்கப்பா.....

Wednesday, November 12, 2008

ஜெனீவா டயரி

முந்தாநாள் போட்ட பதிவப் பாத்தீங்களா?

Jet-de-aqua : World's highest fountain

திங்கள் கிழமை காலைல பேங்குக்கு போயிட்டு எல்லாருக்கும் ஒரு 'ஹாய்' சொல்லிட்டு கெளம்பிட்டேன். ராத்திரிதான் வேலை ஆரம்பிக்கும். வெளிய வந்தா சுள்ளுன்னு சூரியன், கூடவே ஊதக் காத்து. லேசா சாரல். பேங்குல இருந்து ஜன்னல்ல எட்டிப் பாக்கும்போதே தெரிஞ்சுது, இன்னிக்கு ஃபௌண்டன் இருக்குன்னு. அப்பிடியே ஆத்தோரமாவே நடந்து ஏரிக்கு வந்தா ஈயாடுது. குளுருக்கு டூரிஸ்டுக கூட ரூம்லயே மொடங்கி கெடக்காங்க போல. ஃபோட்டோ எடுக்க நல்ல சூழல். கூட்டம் கூட்டமா அன்னங்களும், வாத்துகளும், நாரைகளும். யாரோ ஒரு பாட்டி ஒரு ஒரமா உக்காந்து ரொட்டித் துண்டெல்லாம் பிச்சு பிச்சு அதுகளுக்கு வினியோகம். படம் புடிக்கலாம்னு போனா பாட்டிக்கு ஒரே கோவம். அதுகளையெல்லாம் நான் வெரட்டி விட்டுடுவேன்னு. படம் எடுக்கவே விடல. நமக்கு ஃப்ரென்ச் ஓரளவுதான் புரியும். திட்ட ஆரம்பிக்கறதுக்குள்ள இடத்த காலி பண்ணிட்டேன்.

பக்கத்துலயே தாவரவியல் பூங்கா (Botanical Garden) இருக்கு. வெளிய ஒரு பெரிய திடல்ல போதைமருந்துகளுக்கு எதிராக ஒரு விழிப்புணர்வுக் கூட்டம் நடந்துக்கிட்டுருந்துது. கொஞ்ச நேரம் நின்னு கவனிச்சா ஸ்விஸ் டீனேஜர்க எந்த அளவுக்கு இந்த பழக்கத்துக்கு அடிமையாகிக் கிடக்காங்கன்னு தெரிஞ்சுது. (போன முறை வந்தபோதே சாயங்காலத்துல இருந்தே ஏரிக்கரையோரமா பசங்களும் பொண்ணுகளும் கஞ்சா மாதிரியான பொருட்களை சர்வ சாதாரணமா உபயோகிக்கறதப் பாத்து அரண்டு போயிருக்கேன்.) ஸ்விஸ் நார்கோடிக்ஸ் ப்யூரோவோட சட்டங்கள் இன்னும் கடுமையாக்கப்படணும்னு பேசினாங்க.

Caption: What is the future for our children? Say double no to drugs !!

வெளிய பாலத்துக்கு ரெண்டு பக்கமும் இருந்த குதிரைவீரன் சிலைக என்னை ரொம்ப கவர்ந்தது. போருக்கு போற (கழுகுடன் வீரன்) குதிரை தலை குனிஞ்சும், சமாதானத்துக்குப் போற (புறாவுடன் வீரன்) தலை நிமிர்ந்தும் இருக்கற மாதிரி தோணுச்சு. பூங்காவுக்குள்ள போனா, ஒவ்வொரு மரமும் ஒவ்வொரு கலர்ல இருக்கு. இலையுதிர் காலத்தோட கடைசி நாட்கள். இன்னும் ரெண்டு வாரத்துல எல்லா மரமும் மொட்ட மொட்டயா நிக்கும். சில படங்கள் எடுத்துட்டு ரூமுக்கு திரும்பிட்டேன். கொஞ்சமாவது தூங்கினாத்தான் ராத்திரி பூரா உக்கார முடியும். புதுசா ஒரு இந்திய ரெஸ்டாரண்ட் ஆரம்பிச்சுருக்காங்கன்னு அங்க சாப்பிடப் போனா, அது பேருதான் 'இந்தியா ப்ளாசா' நடத்தறது ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படிக்க வந்த பங்ளாதேஷ் பசங்க. கடுகு எண்ணை சமையல். சுமாரா இருந்துது. இனிமே அந்தக் கடைக்கு போகக்கூடாதுன்னு முடிவு பண்ணிக்கிட்டேன்.

இந்த வாரக்கடைசிக்குள்ள வேலை முடியணும். அப்பிடி முடிஞ்சா, ஒரு நாள் ஆல்ப்ஸ் மலைத்தொடர்ல எதாவது ஒரு மலையுச்சிக்காவது போயிட்டு வரணும். உச்சிகள்ல நல்ல பனி விழுந்திருக்கு. மழை இல்லாம இருக்கணும். இன்னிக்கு காலையிலிருந்து மழை விடாம பெஞ்சுக்கிட்டுருக்கு. வாரம் பூரா இப்பிடித்தான் இருக்கும்கறாங்க. பாக்கலாம்...

கலர் கலரா மரங்களப் பாருங்க....

Tuesday, November 11, 2008

மென் பொருட்களில் என் பொருட்கள்

கொக்கி போட்ட அணிமா வுக்கு வாழ்த்துக்கள்... நல்லாயிருப்பா நல்லாயிரு !!

அது என்ன மேட்டர்னா, நாம அடிக்கடி உபயோகிக்கற மென்ப்பொருட்களப் பத்தி நாலு நல்ல வார்த்தை சொல்லணுமாம். சொல்லிட்டாப் போச்சு....



PDF கோப்புகள் பண்றதுக்கு. இத ஒரு ப்ரிண்டரா சேத்துட்டோம்னா, இது வழியா ப்ரிண்ட் பண்ணும்போது நாம சொல்ற இடத்துல சொல்ற பேர்ல PDF கோப்பா எழுதிரும். சாதாரண ப்ரிண்டரை கையாளர மாதிரியேதான். இலவச வரிசைல கொஞ்சம் விளம்பரங்கள் 15 வினாடிகளுக்கு வரும். அதை பொறுத்துக்கிடோம்னா போதும்.


இது ஒரு 'அகராதி' புடிச்ச மென்பொருள். இத நிறுவியாச்சுன்னா ஸிஸ்டம் ட்ரேல உக்காந்துக்கும். திடீர்னு யாராச்சும் இங்கிலிபீச்சுல மெய்ல் அனுப்பிச்சாலோ, மேனேஜர் குடுத்த டாக்குமெண்ட்ல எதாவது வார்த்தைக்கு அர்த்தம் புரியலைன்னாலோ, அந்த வார்த்தை மேல கர்சர வெச்சு Ctrl+Alt+W அமுக்குங்க.


அப்துல்லா அண்ணன் அறிமுகப் படுத்தினாரு. தமிழ்ல டைப் பண்ண ரொம்ப சுலமான வழி. வசதி என்னன்னா தமிழ் இங்கிலீஷ் ரெண்டுலயும் மாத்தி மாத்தி டைப் பண்ணிக்கிட்டு போய்ட்டே இருக்கலாம். இன்னொரு எடிட்டர்ல எழுதி, காப்பி பண்ணின்னு வில்லங்கமே இல்லை.


நெஜமா சொல்றேன்... இத போட்டதுக்கு அப்பறம் இந்த ரெண்டு வருஷத்துல வைரஸ் தொந்தரவு இல்லவே இல்ல. வாரம் ஒரு தடவையாவது வைரஸ் டேடாபேசை அப்டேட் பண்ணிக்கிறது நல்லது.


Net Meeting -ஐ விட ஒசத்தி. இண்டர்நெட்டும் கண்ட்ரோல் பண்ண வேண்டிய கம்ப்யூட்டர்ல அனுமதியும் இருந்தா போதும். எங்க இருந்தும் எந்த கம்ப்யூட்டரையும் இயக்கலாம். வீட்டுல இருந்து ஆபீஸ் வேலை செய்யணும்னா நமக்கு இதுதான் வசதி.

அவ்வளவுதான்... மத்தபடி சொல்லிக்கற மாதிரி ஒண்ணும் உபயோகிக்கறதில்ல. எதாச்சும் உங்களுக்கு உருப்படியா தேறுதா?

இன்னும் ரெண்டு பேர மாட்டி உடணுமே? நம்ம நண்பர்கள் எல்லாருமே நல்லவங்கதானே? நீங்களா யாராவது எடுத்து தொடருங்களேன்... ப்ளீஸ்....

Sunday, November 9, 2008

ஜெனீவா !!


வேலை நிமித்தமா நேத்து ஜெனீவா வந்தேன். சிங்கப்பூரிலிருந்து 13 மணி நேரம் பறந்து ஸ்யூரிக் (Zurich) வந்து 2 மணி நேரம் காத்திருந்து 1/2 மணி நேரத்தில் ஜெனீவா. (இதுக்கு ஸ்யூரிக்லயே வெளிய வந்து ரயில் புடிச்சு வந்திருந்தாக் கூட சீக்கிரமா வந்திருக்கலாம்.) பிஸினஸ் க்ளாஸ்ல நல்லா தூங்கிட்டு வந்தாலும் 7 மணி நேர வித்தியாசம் இருக்கறதால ஒரு மாதிரி கெறக்கமா இருந்துது. ராத்திரி 12 மணிக்கு மேல வந்து சேந்து ஹோட்டல்ல போய் மறுபடி தூக்கத்தை கண்டின்யூ பண்ணினேன்.

சனிக்கிழமை காலை. நல்ல குளிர். மழைத் தூரல். விசு விசுன்னு காத்து வேற. காலைல இருந்து ராத்திரி 9 மணி வரைக்கும் பேங்குல வேலை. நண்பர்களோட ராத்திரி இந்தியன் ரெஸ்டாரெண்டுல டின்னர். இது ஒரு சோம்பேறி ஊரு. இதுக்கு முன்னால 2-3 தடவை வந்திருக்கேன். இப்ப கொஞ்சம் பரவால்ல. சாயங்காலம் 6 மணி ஆச்சுன்னா ஆபீஸ் மாதிரி கடைகள மூடிட்டு அவனவன் வீட்டுக்கு போயிடுவான். ரெஸ்டாரெண்டுக மட்டும் ஒரு 10:30 மணிக்கு கடைசி ஆர்டர் எடுப்பாங்க. இன்னிக்கு ஞாயிறு லீவு. காலைல எழுந்து ஐக்கிய நாடுகள் சபைக்கு போனேன். ஹோட்டல்ல் இருந்து நடக்கற தூரந்தான். மழை, காத்துனால 13 நம்பர் ட்ராம் புடிச்சு போனேன். கரெக்டா இன்னிக்கு பாத்து சுத்திப் பாக்க அனுமதி இல்லைன்னுட்டாங்க. ஐ.நா. சபைக்கு வெளிய சர்வதேச ஊனமுற்றோர் சங்கம் (Handicap International) , கண்ணி வெடிகளால் ஊனமுற்றவர்கள் நினைவாக பெரிய மர நாற்காலி நினவுச் சின்னம் வெச்சுருக்காங்க. ஒரு கால் உடஞ்ச மாதிரி இருக்கும். அதிகார வர்க்கத்தின் அலட்சியப் போக்கையும் இந்த் சின்னம் ஒரு இடி இடிக்குது.

இப்ப இது இலையுதிர் காலம்கறதால ஊர் பூரா மேபில் மரத்தோட (காஷ்மீர்ல சினார் மரம்னு சொன்னேனே... அதே மர வகைதான் இதுவும்) இலைகள். சின்னதும் பெருசுமா, மஞ்சள், பழுப்பு, ப்ரவுன்னு பாக்கற எடமெல்லாம் இலைக்குப்பை. குப்பைன்னாலும் பாக்க அழகா இருக்கு.


மழை தூரலப் பாத்தா வேலைக்காகாதுன்னு அப்பிடியே நடந்து ஜெனீவா ஏரிப் (Lake Leman) பக்கம் வந்தேன். கரையோரமா நாரைகளும், வாத்துகளும், அன்னங்களும் நீந்திபோறது பாக்க அவ்வளவு அழகு.


ஏரிக்கு நடுவுல உலகின் பெரிய ஃப்வுண்டன் இருக்கு. 500 மீட்டருக்கு மேல பீச்சி அடிக்கும். கெரகம் அதுக்குங்கூட இன்னிக்கு லீவு. போங்கடா.. நீங்களும் உங்க ஊரும்னு மறுபடி ஹோட்டலுக்கே வந்துட்டேன். நண்பர் ஒருத்தரு வீட்டுல மதிய சாப்பாடுக்கு போகணும். அவருக்காக காத்துக்கிட்டுருக்கேன். ராத்திரி வேற ஒரு நண்பரோட டின்னருக்கு போகணும். ரொம்ப டைட் ஷெட்யூல் பாருங்க.. :)

ஐரொப்பிய கட்டுமானக் கலைக்கு உதாரணமா பல பழங்காலக் கட்டிடங்க, சர்ச்சுக, சிற்ப வேலைகன்னு ஊர்ல நிறைய இருக்கு. அடுத்த ஒரு வாரத்துல இன்னுங் கொஞ்சம் ஊரச் சுத்திட்டு எழுதறேன். இப்போதைக்கு இந்தப் படங்களைப் பாருங்க. (படங்களை க்ளிக்கினா பெருசா பாக்கலாம்)