அண்ணனோட நண்பர் அவரே கைப்பட சமைச்சு ரெடியா வெச்சுருந்தாரு. நல்லா மூக்குப்புடிக்க சாப்டுட்டு, அப்பிடியே கொஞ்சம் மேல போனோம். அங்க ஆர்மியோட விருந்தினர் குடில்கள் இருக்கு. (குடில்களா அது.... 7 ஸ்டார் ஹோட்டல் சூட் மாதிரி இருக்கு... ஜகுஸி கூட இருக்கு) நல்ல இளம் வெயில். அங்கங்க மேக மூட்டம். மலை உச்சிகள்ல பனி படிஞ்சு வெயிலுக்கு சின்ன ஆறு மாதிரி உருகி ஓடி வருது. வெயில்ல பாக்க ஒரு வெள்ளி ரிப்பன் மாதிரி மினுக்குது. குடிலுக்கு வெளிய பெரிய பூந்தோட்டம். நல்ல சூடா டீ கெடச்சா நல்லா இருக்குமேன்னு நினைக்கும்போதே டீ வந்துடுது. அட.. நாம நிக்கறது எதாவது கற்பக மரத்துக்கு கீழயான்னு ஆச்சரியமா இருந்துது.
குலமார்க்ல விசேஷமானது "கோண்டோலா"ன்னு (Gondola) சொல்ற கேபிள்கார் பயணம். டூரிஸ்டுக இல்லாததால ஒடாதுன்னு சொல்லிட்டாங்க. ஒரே ஏமாத்தமாப் போச்சு. ஆனாலும் விடல. இன்னும் சில ஆர்மிக் காரங்களும் இதுக்குன்னெ வந்திருந்தாங்க. அதனால சரின்னு ஓட்ட சம்மதிச்சாங்க. இந்த கேபிள் கார் ரென்டு கட்டமா இருக்கு. முதல் கட்டத்துல குல்மார்க்ல இருந்து ஒரு 500 மிட்டர் உசரத்துல இருக்கற கோங்டோரிக்கு (Kongdori) போகலாம். ரெண்டாவது கட்டத்துல, அங்க இருந்து இன்னும் மேல 500 மீட்டர் போகலாம். ஆனா ரெண்டாவது கட்டம் டுரிஸ்டுக இல்லாததால சில மாசங்களாவே ஓட்டமே இல்ல. அத ஓட்ட முடியாதுன்னு சொல்லிட்டாங்க. வந்தவரைக்கும் லாபம்னு கோங்டோரி போனோம். குட்டி குட்டி கேபிள் கார்ல நாலு பேர் உக்காரலாம். வரிசையா பெட்டிக வந்துகிட்டே இருக்கும். ஸ்டேஷனுக்குள்ள வந்ததும் வேற ட்ராக்குக்கு மாறி மெதுவா நகரும். கதவு தானா தெறந்துக்கும். அப்பிடியே ஏறி உக்காந்துட்டம்னா மறுபடி மெயின் ட்ராக்குக்கு மாறி வேகமா மேல போகுது. சுமாரா 20 மிட்டர் உயரம் இருக்கலாம். 50 மிட்டருக்கு ஒரு டவர் இருக்கு.
15 நிமிஷ பயணம். மேல போயிட்டோம். அப்பிடியே பெட்டி மெதுவா நகரும்போதெ இறங்கி வெளிய போனோம். பின்னால பெரிய மைதானம் மாதிரி இருக்கு. குதிரைக்காரங்க கிட்டப் பேசி ஆளுக்கொரு குதிரை மேல ஏறி கொஞ்ச தூரத்துல இருக்கற ஒரு சின்ன அருவிய பாக்கப் போனோம். 2 கி.மி தூரம்தான்னாலும், கரடு மொரடான பாதைல குதிரை எப்ப நம்மள கீழ தள்ளுமோங்கற பயத்தோடயே சவாரி. நம்ம குதிரைக்காரர் வேற தனியா விட்டுட்டாரு. குதிரை நம்மள விட புத்திசாலின்னாரு. அதுக்கு மேல நான் ஒண்ணும் பேசல. சும்மா கொஞ்ஞ்ஞ்ஞ்சமா தண்ணி ஓடிக்கிட்டுருந்துது. சுத்திப் பாத்துட்டு திரும்பிட்டோம். திரும்ப வரும்போதுதான் இன்னும் கஷ்டம். இறக்கத்துல குதிரை தட்டு தடுமாறிக்கிட்டே போகுது. புரவிபாளையம் அய்யனார்தான் காப்பாத்தணும்னு வேண்டிகிட்டேன்.
இங்க ஒரு சின்ன செய்தி. பொதுவா எல்லாரும் நினைக்கறது காஷ்மீர்ல இருக்கறது இமய மலைன்னு. ஆனா காஷ்மீர்ல பல மலைத்தொடர்கள் இருக்கு. காரகோரம், ஷிவாலிக், பீர் பஞ்சால், மேற்கு இமயம்... இப்பிடி இன்னும் சிலது கூட இருக்கு. குல்மார்க் இருக்கறது பீர் பஞ்சால் மலைத்தொடர்ல. காரகோரம்ல தான் K2 (எவெரெஸ்டுக்கு அடுத்தது) மலைஉச்சி, பல்டோரோ க்ளேசியர் எல்லாம் இருக்கு. நங்க பர்பத் தொடர் POKல இருக்கு.
அடுத்த நாள் சோனாமார்க் பயணம். அதுவும் 3 மணி நேர தூரத்துல இருக்கு. மலைப்பாதை வளைஞ்சு வளைஞ்சு போகுது. ட்ரக்குகளும் டேங்கர் லாரிகளும் (99% டாடா வண்டிக) சர்புர்னு போறதப் பாத்தாலே பயமா இருக்கு. வலப்பக்கம் சரிவுல சிந்து நதி சலசலன்னு ஓடுது. பல இடங்கள்ல மலைச்சரிவுனால பாதிரோடுதான். குளிர் வரதுக்குள்ள வேல முடியணும்னு ரோடு போடற வேலை ஜரூரா நடந்துக்கிடுருந்துது. நிறைய இடங்கள்ல நதியக் கடக்க வேண்டியிருக்கு. பல பாலங்கள் இரும்புதகடுகளால் ஆனது. ஒரு வண்டி அகலந்தான். எதிர்ல வர வண்டி போகற வரை காத்திருந்துதான் போகணும். பஸ்களை குறிப்பிட்டு சொல்லணும். நாலு டயர்களுக்கு மேல ஒரு பெரிய இரும்புப்பெட்டி. அது எப்பிடி ஓடுது, மக்கள் எப்பிடி அதுல தைரியமா பயணம் பண்றாங்கங்கறது இன்னும் எனக்கு தெளிவாகல.
ஒருவழியா சோனாமார்க் போய் சேந்தோம். அதி உயர போர்ப் பள்ளி (High Altitude War School - HAWS) அங்கதான் இருக்கு. கேம்பஸ்க்கு உள்ள இருக்கற மெஸ்லதான் மதிய உணவுக்கு சொல்லி வெச்சுருந்துது. அந்த மெஸ் இருக்கற எடத்தப் பாக்க கண்ணு ரெண்டு போதாது. சுத்திலும் மலை. அடிவாரத்துல மெஸ், வெளிய அரை வட்டமா படிப்படியா ஒரு பூந்தோட்டம். என்னா கலருக, டிசைனுக... அதெல்லாம் சென்மத்துக்கும் மறக்க முடியாத அனுபவம்.
அப்பிடி ஒரு ரம்மியமான இடத்துல மதிய உணவு. சுடச்சுட பூரி சென்னா, வெஜிடபில் புலவு. வாயத் தொறந்தா காக்கா வ்ந்து கொத்திக்கிட்டு போற அளவுக்கு சாப்டுட்டு... கேமரா பேட்டரி தீரற வரைக்கும் பூக்களயும் மக்களயும் ஃபோட்டோ புடிச்சுட்டு திரும்ப மனசில்லாம திரும்பினோம். வர வழியில நதியில கொஞ்சம் கையக் கால நனச்சுக்கிட்ட்டோம். உருகி வர பனிதானே...சும்மா ஜில்ல்ல்ல்ல்ல்லுனு... ஆஹ்ஹ்ஹா...
ரொம்ப பெரிய பதிவாப் போயிருச்சு.... இன்னொரு பகுதி போட்டு முடிச்சுரலாம்.. சரியா?