"வாய்யா கனகு... ஏன்யா லேட்டு? மணியப் பாரு எட்டே முக்கால்.... இதோட ஒனக்கு 4 வார்னிங் குடுத்தாச்சு... டைம் ஆபீஸ் முருகேசன் வேற எதுரா சாக்குன்னு பாத்துக்கிட்டே இருக்கான்....
"இல்லீங்கய்யா... வாரைல சைக்கிள் மேல ஒரு பன்னி வந்து மோதி டிச்சுக்குள்ள விளுந்துட்டனுங்... அதான் பாருங் பேண்டெல்லாம் சகதியாயிருச்சுங்..."
"எதாச்சும் சொல்லுய்யா.... பாதிநா லேட்டா வரது. அப்பறம் நான் ரோஸ்டர் போடறதுக்கு என்ன மரியாத? அவன் மூர்த்தியா கத்தறான். ரிலீவர் எங்க ரிலீவர் எங்கன்னு. உன்னிய பேசாமா வெல்டிங்குக்கு மாத்தீர்ரேன். எக்கேட்டும் கெட்டுப்போ
"அய்யா வேணாம்யா... கண்ணு வலி தாங்க முடியாதுங்கய்யா... இனிமே சரியா வநதருவனுங்..."
"சாமி... வேணாம்யா... குடிகாரன் பேச்சக் கூட நம்பலாம். உன்ற பேச்சக் கேட்டா..."
"அப்பிடியெல்லாம் சொல்லாதீங்கய்யா.... நாந்தான் சரியா வரேன்னு சொல்றனல்லங்... சத்தியமுங்.."
"நீயும் உஞ்சத்தியமும். போய் வேலயப் பாரு. மூர்த்திய ரிலீவ் பண்ணு போ.."
அந்த மில்லில் தனபால் ஒரு சூப்பர்வைசர். 4 டீசல் இஞ்சின்கள் நாள் முழுசும் திணறித் திணறி ஓடி 4MW கரண்ட் நுரை தள்ளும். போடற சத்தத்துல நாம பேசறது நமக்கே கேக்காது. ஷெட் பாத்துக்க ஏழு பேர். மூணு மெக்கானிக், மூணு எலக்ட்ரீசியன், ஒரு கையாள். ஷெட்டுக்குப் பின்னால மிசின் ரூம். லேத், ஷேப்பர், ட்ரில்லர்னு அது வேற ஒரே இறைச்சலா இருக்கும். வெளியில வெல்டிங் வேற ப்ர்ர்ர்ர் ப்ர்ர்ர்ர்னு கண்ணு கூசும். சைடுல சின்ன சின்னதா கூலிங் டவருக ரெண்டு. ஷிப்ட் மெக்கானிக் இஞ்சின்களை கவனிக்க, எலக்ட்ரீஷியன் லோடு பாத்துக்க. கையாள், பம்ப் ஓட்டி டேங்குகள்ல டீசல் நெரப்ப, கூலிங் டவர் தண்ணிக்கு உப்பு கொட்ட, அடைப்பு எடுக்கன்னு வேலை பெண்டு நிமுந்துரும்.
தனபால்தான் எல்லாத்துக்கும் சூப்பரவைசர். ரொம்ப கறாரான ஆளு. அவனைக் கண்டாலே எல்லாருக்கும் கொஞ்சம் பயந்தான். டீ குடிக்கக் கூட 8 நிமிஷம்னா 8 நிமிஷந்தான். பின்னாலயே வந்து நின்னுடுவான். "ம்ம்ம்ம்.. இன்னம் ரெண்டு நிமுசத்துல சாப்பாட்டு சங்கே புடிச்சுருவானுக. தொரைக்கி டீ சாப்ட 1 மணி நேரமா?" வேலையும் நல்லாத் தெரியும். சும்மாவா வாசவி மில்லுல இருந்து தேடிப் புடிச்சு கூட்டியாந்தாங்க. "என்ன லச்சணமா வெல்டிங்.... சும்மா மரவட்டை கணக்கா வரிவரியா இருக்க வேணாம்? கை இந்த நடுங்கு நடுங்குனா...."
தனபால் இந்த வாரம் மெயிண்டனன்ஸ் ஷெட்யூல் போட்டுருந்தான். கிர்லாஸ்கர் கம்பெனியிலருந்து இஞ்சினீயருக வருவாங்க. எந்த இஞ்சினுக்கு எங்க நோவுன்னு பாத்து சொல்லுவானுக. அதுக்கு முந்தி இங்க லாக்புக்கு எல்லாம் ரெடியா இருக்கணும். மூர்த்தியும் சங்கரும் ஒழுங்கா எழுதுவாங்க. மணிக்கொருக்கா எட்டு சிலிண்டர்லயும் டெம்ப்ரேச்சர், டீசல் அளவு, தண்ணி ப்ரசர், லோடு, ஸ்பீடு எல்லாம் அந்த பெரிய ரிஜிஸ்தர்ல பதியணும். கனகு மட்டும் தூங்கிட்டு கடைசி மணியில 8 எண்ட்ரியும் ஒட்டுக்கா எழுதுவான். சும்மா கொஞ்சம் முன்னப்பின்ன மாத்தி மாத்தி.
கனகு மூர்த்திய ரிலீவ் பண்ணிட்டு சேர்ல உக்காந்து பெருசா ஒரு கொட்டாவி விட்டான்.
"அப்பிடியே கவுந்து தூங்கிரு.... வந்த ஒடனே லாக் புக்க பாக்கரானா பாரு. எதுக்கோ என்னவோ போச்சுன்னு வாயப் பொளந்துக்கிட்டு.... " பின்னாலயே தனபால் வந்ததை கவனிக்கலை.
"கிர்லாஸ்கர் ஆளுக 10 மணிக்கு வந்துருவாங்க. ஒண்ணும் மூணும் இன்னக்கி. ரெண்டும் நாலும் நாளை கழிச்சு. இப்பயே போன வருச மெயிண்டனன்ஸ் கார்டுக, பார்ட் இஸ்ட்ரியெல்லாம் எடுத்து வெய்யி. எல்லாம் சொன்னாத்தான் செய்வீங்களோ?" தனபால் கத்தி விட்டு இஞ்சினியருக்கு போன் போட போனான்.
கனகு எல்லாம் எடுத்து வெக்க ஆரம்பிச்சான். அப்படியே எதிர் ஷெட்டுல ஸ்பின்னிங்ல வள்ளி இருக்குதான்னு எட்டிப் பாத்துக்கிட்டான். இஞ்சின்களை ஒரு ரவுண்டு வந்தான்.
"டேய் கதிரு... இங்க வாடா. என்ரா இது? ஆயில் மாத்துனியா? தொடைக்க மாட்ட? இந்நேரம் வளுக்கீருக்கும். அதான் அங்க அம்புட்டு காட்டன் வேஸ்ட் கெடக்குதல்ல. தொட மொதல்ல..." தனபால் மேல இருந்த கோவம் எல்லாம் அவன் மேல கொட்டினான்.
இதுக்குள்ள எலக்ட்ரீஷியன் சேகர் போய் 2 இஞ்சின் நின்னு போனா எந்தெந்த மிசினுகளுக்கு நெறி கட்டும்னு பாத்து பேஸ் மாத்தி விட்டுட்டு வந்தான். தலைல ஒட்டீட்ருந்த பஞ்சை எடுக்க கொஞ்சம் ஏர் புடிச்சுக்கிட்டான்.
"சும்மா அவனைப் போயி வெரட்டிக்கிட்டு... விடு கனகா... வேலையப் பாப்போம். மொத டீ சாப்டு வருவோம். வண்டி வந்துருச்சு". டோக்கனை எடுத்துக்கிட்டு ரெண்டு பேரும் போயிட்டாங்க.
10 மணி. சொன்ன மாதிரியே கரெக்டா வந்துட்டானுக இஞ்சினீயருக. சின்ன பசங்கதான். துறுதுறுன்னு. தனபாலும் வந்ததும் வெளிச்சமா ஒரு மூலைல டேபிளப் போட்டுக்கிட்டு லாக்புக்கை ஒரு நோட்டம். லோடு, டிஸ்ட்ரிப்யூஷன் பழய மெயிண்டனன்ஸ் குறிப்புக எல்லாம் பாத்துட்டு 1ம் இஞ்சின் கிட்ட போய் நின்னாங்க. ஸ்லோ ஸ்பீட் இஞ்சின். "தடக்.. தடக்... தடக்...தடக்..." லோடு "0" ன்னு ஆனதும் ஆஃப் பண்ணியாச்சு. டெம்பரேச்சர் கொறஞ்சதும் மேல ஏறி ஒவ்வொரு சிலிண்டரா செக்கிங் ஆரம்பமாச்சு.
"அஞ்சாவது சிலிண்டர் ஏன் இன்னும் இம்புட்டு சூடா இருக்கு? கூலிங் சரியில்லயா? மேல போய் பாக்கறேன்"னு கனகு சைட் ரெய்லிங் புடிச்சு மேல ஏறினான். ஹெட் இன்னும் சூடு. எக்ஸாஸ்ட் வால்வு ஸ்பிரிங் டைட். சரியா ஓப்பன் ஆகல போல. கீழ எறங்கி இஞ்சினியர் கிட்ட சொல்லிட்டு மறுபடி அடுத்த டீ குடிக்க போனான்.
டீ குடிச்சுட்டு இருக்கும்போதே "தொம்"னு ஒரு சத்தம். அப்பிடியே டீ டம்ளரைப் போட்டுட்டு ஓடி வந்தான். ப்ளாட்ஃபாரத்துல சிந்தியிருந்த ஆயில கதிர் தொடைக்காமயே போயிருக்கான். கணக்கா இஞ்சினீயர் அது மேலயே கால வெச்சு வழுக்கி விழுந்துருக்கான். சைட் ரெய்லிங்ல தலை பட்டு மண்டைக் காயம். ரத்தம் ஒழுகுது.
"சேகரு.... சேகரு...கதிரு.. ஒடியாங்கடா... அய்யய்யோ...."
சேகரும் கதிரும் ஒடி வர, எல்லாருமாச் சேந்து ஆளைத்தூக்கிட்டு ஸ்டோருக்கு ஓடுனாங்க. அங்கதான் பெரிய பஸ்டெய்டு பொட்டி இருக்கு. இஞ்சினீயர் மயக்கமாயிட்டாரு போல. ஓட்டமா ஓடி, ஆளைப் படுக்க வெச்சு, டெட்டால வெச்சு தொடச்சு, பஞ்சு வெச்சு, கட்டுத் துணியால மண்டைய சுத்தி பெரிய கட்டாப் போட்டு விட்டாங்க. அதுக்குள்ள ஓ.எம். கார் ட்ரைவரைக் கூப்ட்டு விட்டு கார் ரெடியா ஸ்டோர் வாசலுக்கு வந்துருச்சு. அப்பிடியே அள்ளிப் போட்டுக்கிட்டு தர்மாஸ்பத்திரிக்கு விரட்டினாங்க.
அட்மிட் பண்ணி, டாக்டருக பாத்துட்டு 4 தையல் போட வேண்டியதாயிடுச்சு. மயக்கம் தெளியில. எப்பிடியும் இன்னும் 2,3 மணி நேரம் ஆகும்னு சொல்லிட்டாங்க. சேகரும் திரும்ப மில்லுக்கு போயிட்டான். இஞ்சினியர் பையனுக்கு வேற தமிழ் தெரியாது. என்ன பண்றதுன்னு புரியாம கனகு மட்டும் அங்கியே தொணைக்கு ஒக்காந்துட்டான்.
தனபால் கிர்லாஸ்கர் கோயமுத்தூர் ஆபீசுக்கு போனைப் போட்டு விசயத்தை சொல்லிட்டான். அவுங்க ஆளை அனுப்பி பாத்துகிறதா சொல்லிட்டாங்க. கோயமுத்தூர்ல இருந்து ஆள் வர அந்தா இந்தான்னு 4 ம்ணி ஆயிருச்சு. வந்தவன் கிட்ட விசயத்தை சொல்லிட்டு கனகு 5 மணியாச்சேன்னு வீட்டுக்கே போயிட்டான்.
மறுநா காலைல மில்லுக்கு போகைல மறுக்கா ஆஸ்பத்திரி வந்து எப்பிடி இருக்கு நெலமைன்னு பாத்துட்டு போனான். சாயங்காலம் டிஸ்சார்ஜ் பண்ணிருவாங்களாம். எதிர்காத்துல மிதிச்சு மில்லுக்கு போய் சேர மணி 8:50.
"வாய்யா கனகு... என்னய்யா லேட்டு? மணியப் பாத்தியல்ல.... நீ இனிமே வெல்டிங்தாய்யா..."
"அய்யா.... இல்லீங்கய்யா... இஞ்சினீயரை பாக்க ஆஸ்பத்திரி போயிருந்தனுங்... எதிர் காத்துல மிதிச்சு வர லேட்டாயிருச்சுங்..."
"எதாச்சும் சாக்கு சொல்லிட்டே இரு... போ..... போய் மூர்த்திய ரிலீவ் பண்ணு... கத்திக்கிட்டு கெடக்கான்........."
பக்கத்துல இருந்த டைம் ஆபீஸ் முருகேசன் சிரிச்சுக்கிட்டான். ஸ்பின்னிங்ல இருந்து வள்ளி எட்டிப் பாத்து தோளை மோவாக்கட்டைல இடிச்சுக்கிட்டா. மேகத்துல மறைஞ்சு கெடந்த சூரியன் பொளீர்னு வெளிய வந்துச்சு.