Friday, January 30, 2009

மனிதாபிமானம்


அந்தக் கிழவி அழுது கொண்டிருந்தாள்...
பிள்ளைகளால் துரத்திவிடப்பட்டதைச்
சொல்லி அழுதாள்....
பெண்களும் கண்டுகொள்ளாததைச்
சொல்லி அழுதாள்..
'சே... இப்படியும் மக்கள் இருப்பார்களா?'
நான் பொறுமினேன்...

அந்தக் கிழவி அரற்றிக் கொண்டிருந்தாள்....
நாலு நாளாகக் காய்ச்சலாம்...
மருந்து வாங்கக் காசில்லையாம்..
ஒரு மாத்திரையோ மருந்தோ கேட்டு
உடல் வலியால் அரற்றினாள்...
'இவ்வளவு பேர் கடந்து போகிறார்களே..
யாராவது ஒருவர் உதவுங்களேன்..'
நான் மனதுக்குள் கூவினேன்....

அந்தக் கிழவி இறைஞ்சிக் கொண்டிருந்தாள்...
பசிக்கிறது போலும்...
ஒரு இட்டிலியாவது கிடைக்குமா என்று
போவோர் வருவோரை
ஏக்கக் கண்களுடன் பார்த்தாள்...
'இரக்கமேயில்லாத உலகம்..மக்கள்..'
நான் சற்று உரக்கவே சொன்னேன்...

'சீக்கிரம்... சீக்கிரம் பேக் பண்ணிக் குடுங்க..'
நான் கடைக்காரனை அவசரப்படுத்தினேன்...
ஒரு கண்ணால் அந்தக் கிழவியைப் பார்த்தபடி
பார்சலை வாங்கிக் கொண்டு கடைக்கு வெளியே வந்தேன்..

அந்தக் கிழவி தொய்ந்து போயிருந்தாள்..
இருந்த சக்தியெல்லாம் அழுது, அரற்றி, இறைஞ்சியதில்
வடிந்து போக கண்கள் சொருக
சுவற்றில் சாய்ந்திருந்தாள்....

'என்ன உலகம்.. ஒரு ஏழைக் கிழவிக்கு உதவ
யாருமே இல்லையா?'
பார்சலுடன் விரைந்தேன்..
'சீக்கிரம் போகவேண்டும்...
முதல் டேட்... அவள் எனக்காக காத்திருப்பாள்...
ஏற்கெனவே கடைக்காரன் லேட் பண்ணியதில் 10 நிமிஷம் போச்சு...'

Sunday, January 25, 2009

தன்பால் எனையீர்த்த வெண்பா !!


தேடுதலே வாழ்வாகிப் போனதன் விளைவு
வேடனமு தாவின்வலைப் பூவழியில் - மூடன்
என்போல் தமிழறியா தொருவனைக் கரம்நீட்டித்
தன்பால் ஈர்த்த வெண்பா !

இந்தப் பதிவு திரு.அகரம்.அமுதா அவர்களுக்கு நன்றி சொல்லும் விதமாக....

நண்பர் அகரம்.அமுதா அவர்களின் அழகாக வெண்பாக்கள் எழுதக் கற்றுக் கொடுக்கவென்றே ஒரு வலைப்பூ நடத்தி வருகிறார். அமுதாவை சிங்கை பதிவர் சந்திப்பில் பார்த்தபோதும் பேருந்தில் விக்னேசுவரனுக்கு வெண்பாவின் அடிப்படைகளை சொல்லிக் கொடுத்துக்கொண்டே வந்தார். அதன் பின் சில மாதங்களுக்குப் பிறகு சென்ற வாரம் அமுதாவின் வலைப்பூவிற்குச் சென்று பார்த்து பதிவுகளைப் படித்தபின் நானும் வெண்பாக்கள் எழுத வேண்டுமென்ற உத்வேகம் புறப்பட்டது.

அதுவும் அவர் தன்னுடைய ஒவ்வொரு பதிவின் இறுதியிலும் ஈற்றடியைக் கொடுத்து அதற்கு வெண்பா எழுத ஊக்குவித்தது என்னை மிகவும் ஈர்த்தது. இது வரை கவிதை என்று இரண்டு வரிகள் எழுதியது கிடையாது. வெண்பாவின் இலக்கணம் தெரியாது. இருந்தாலும் முயற்சித்துத்தான் பார்ப்போமே என்று முயன்றதில் சற்று சுமாராகவே எழுத வந்தது. அமுதாவும் பொறுமையோடு தளை தட்டும் இடங்களை சிறிது சரி செய்து கொடுக்க போதை தலைக்கேறியது. நண்பர் பழமைபேசியும் பச்சைக்கொடி காட்ட மூன்று நாட்களில் 4 வெண்பாக்கள் எழுதினேன். அவை இங்கே உங்கள் பார்வைக்கும் கருத்துக்கும்....

விதி வலியது... என்னென்னெ ரூபத்துல எப்பிடியெல்லாம் வருது பாருங்க... தீந்தீங்க நீங்கள்லாம்... தப்பிக்கவே முடியாது. தமிழ்க்கடவுள், தமிழ்த்தாத்தா, தமிழ்ப்பாட்டி இப்பிடி யாரையாவது கும்புட்டு படையல் போடறேன்னு வேண்ணா வேண்டிப் பாருங்க. எதாவது நல்லது நடந்தாலும் நடக்கலாம்.


புகைப்படத் தொகுப்பு

பாரெங்குஞ் சுற்றிவர பாங்காய் பவனிவர
யாரெங் கெதுவென் றுணர்ந்தே - ஊரெங்கும்
கண்பார்த்த காட்சியெலாம் கருத்துடனே விண்டுரைக்க
வெண்பா விரித்தேன் விரைந்து !


பெண்கள்

பேரிடர் வரினும் நேர்கொண்டு பொருதப்
பாரினில் பாவையர் உண்டாம் - வீரமிகு
மங்கையர் சீறினும் சிரிப்பினும் மேல்நோக்க
நங்கைக்கு நாணம் நயம் !

கோபம்

கோபம் எனும்தீ இறையெனக் கீந்த
சாப மெனவுறுத்தும் போதெலாம் - லோபியின்
கண்மணி தாமரைக் கண்ணாற் சிரித்திடத்
தண்ணென மாறும் தழல் !

ஈழம்

மண்ணை யிழந்து மக்களை யிழந்து
தன்னையு மிழந்த சோதரர்காள் ! - இன்னமும்
ஏழேழ் சென்மமுந் தொடர்ந் திடுமோ
ஈழத் தமிழர் இடர்?


பாலுந் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலுங் கலந்துனக்கு நான்தருவேன் - கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்
சங்கத் தமிழ் மூன்றுந் தா ! - ஔவை.


பயப்படாதீங்க... கோவப்படாதீங்க... அடுத்த முயற்சியில இன்னும் கொஞ்சம் நல்லா பண்ணறேன்...

Thursday, January 22, 2009

பிரபல பன்னாட்டுப் பதிவர்கள் திடீர் சந்திப்பு !!


..... மற்றும் பலர்

எச்சரிக்கை 1 :
இது எனக்கே. தர்ம அடி வாங்காம இருக்க அந்த தர்மசாஸ்தாதான் காப்பாத்தணும்.

எச்சரிக்கை 2 : இது உங்களுக்கு. இந்தப் பதிவு முழுக்க முழுக்க கற்பனையே. உங்கள்ல யாரையாவது குறிப்பிடுதோன்னு நீங்க நினைச்சா அதுவும் உங்களோட கற்பனையே.

சந்தித்த பிரபலங்கள் : பரிசல், நர்சிம், புதுகை அப்துல்லா, கோவி கண்ணன், பழமைபேசி, வெயிலான், ச்சின்னப்பையன், குடுகுடுப்பை, அணிமா, நைஜீரியா ராகவன்.

ராகவன் : வாங்க... வாங்க... உங்க எல்லாரையும் ஒண்ணா சந்திக்கறதுல ரொம்ப சந்தோஷம்...

அணிமா : இருங்க...... நாங்க ஒண்ணா? பல பேரா?

பழமைபேசி : இஃகி !! இஃகி !!

குடுகுடுப்பை : அண்ணனுக்கு விக்குது.. ஒரு மினரல் வாட்டர் பார்சல்...

நர்சிம் : ஏடாகூடமா மாட்டிக்கிட்டோமோ... இந்த மீட்டிங்குக்கு டக்-இன் பண்ணிட்டு வந்துட்டோமே... வெறும் பனியனோடயே வந்திருக்கலாமோ...

ச்சின்னப்பையன் : (போனில்) ஆமா தங்ஸ்... இங்க ஒரு முக்கியமான மீட்டிங். பாஸுக்கு பதிலா நாந்தான் மினிட்ஸ் எடுக்கணும்... அவருக்கு ரெண்டு வெரல்லயும் நெகச்சுத்தி... என்னது கட் ஆயிடுச்சு...

பரிசல் : (போனில்) யெஸ் மேடம்... இட் ஈஸ் ஆன் தி வே... மே பி ட்ராஃபிக் ஜாம்... வில் பி தேர் இன் தர்டி மினிட்ஸ்... ஓகே மேடம்.... யெஸ் மேடம்...

கோவி கண்ணன் : கஷ்டகாலம்... இனிமே பதிவர் சந்திப்புக்கு வந்தா செல்ஃபோனை ஆஃப் பண்ணணும்னு ரூல் போடணும்.

அணிமா : ரூல்ஸ் காலத்தால் மாறும்....

பழமைபேசி : இஃகி !! இஃகி !! இப்பத்தான் காளமேகம் அப்பிச்சி வந்து என்ன சொல்லிச்சின்னா...

குடுகுடுப்பை : இங்க வந்தும் தூங்கறீங்களே....

அப்துல்லா : அண்ணே... சாரிண்ணே... கொஞ்சம் லேட்டாயிருச்சுண்ணே... டீ சொல்லிட்டிங்களாண்ணே... சரிண்ணே....

வெயிலான் : அடடா.. அவசரத்துல டீ ஷர்ட் கொண்டு வர மறந்துட்டேன்... எல்லாரும் அட்ரஸ் குடுங்க... கூரியர்ல அனுப்பிடறேன்.

அணிமா, கு.கு. : எங்களுக்கு ரெண்டு ரெண்டு...

ராகவன் : அடடா... எல்லாருக்கும் தாகசாந்திக்கு ஏற்பாடு பண்ணணும், நாமளும் கொஞ்சம் சாந்தி பண்ணிக்கலாம்னு நினைச்சு ஞாபகமா மறந்துட்டேன்...

கோவி.கண்ணன் : இது சிங்கை நாதன் குடுக்கற அல்வாவை விட பெரிய அல்வாவா இருக்கே...

நர்சிம் : இதைத்தான் நம்ம தல கம்பர் கூட எப்பிடி சொல்லுவார்னா...

ச்சின்னப்பையன், அப்துல்லா : அட்டகாசம், சூப்பர் தல....

ராகவன் : ரிப்பீட்டேய்...

நர்சிம் : ஹலோ.... நான் இன்னும் சொல்லவே இல்லயே...

அப்துல்லா : இல்லண்ணே... நீங்க சொன்னா சரியா இருக்கும்ணே...

நர்சிம் : சரி.... நான் சொல்லவே இல்ல...

பரிசல் : அது விஷயம் என்னன்னா... மிஸ்டர் ஃபோர் ஹெட்ஸ் போய் மிஸ்டர் த்ரீ ஐஸ் கிட்ட "எக்ஸ்க்யூஸ் மீ... உங்க ட்ரங்க் ஹெட்டெட் பையனோட ப்ரான்க்ஸும், வேல் பையனோட வாலும் தாங்க முடியலன்னாராம்... அது மாதிரி...

கு.கு. : வால்பையன் எங்க இங்க வந்தாரு?

அணிமா : அதானே...

பரிசல் : இவுங்க எதயுமே சொல்ல விடமாட்டாங்க போல இருக்கே... படுக்கற வசதியோட அடுத்த பஸ் எப்பன்னு நர்சிம் கிட்ட கேக்கணும்...

வெயிலான் : இது எந்த ஸ்தல புராணம்? சமீபத்துல நீங்க போனது திருச்செங்கோடு... அதுவா?

பழமைபேசி : பேச்சு ஒரு திட்டமில்லாமப் போகுதே... சார்லோட்டுல எங்க குழுவுல நாங்க ஒவ்வொரு வாரமும் ஒரு தலைப்ப எடுத்துக்கிட்டு பேசுவோம்... அது மாதிரி இந்த சந்திப்பையும்....

அணிமா : இந்த சந்திப்பே திடீர் சந்திப்பு... எப்பிடி திட்டம் போடறது?

ச்சின்னப்பையன் : ஆமாங்க... நம்ம துக்ளக் மகேஷ் திடீர்னு வெண்பா எழுதற மாதிரி....

கு.கு. : நம்ம சந்திப்பு அவ்வளவு மோசமில்லீங்க....

பழமைபேசி : இஃகி !! இஃகி !!

பரிசல் : சரி சரி... ரொம்ப நேரமா மொக்கை போட்டாச்சு... இந்த வருஷம் நம்ம மாதிரி பதிவர்களுக்கு எப்பிடி இருக்கும்னு எல்லாரும் ஒரு கருத்து சொல்லீட்டு கடையைக் கட்டலாம்... ஓக்கேவா? கோவியாரே... நீங்க ஆரம்பிங்க....

கோவி கண்ணன் : இந்த வருஷம் நமக்கெல்லாம் நல்ல காலம்தான். போன 6 மாசத்துல மட்டுமே தமிழ் பதிவர்கள் 2 மடங்கு ஆகியிருக்கலாம்... தினசரி போடற பதிவுகள் 4 மடங்கு... தமிழ்மணத்தை கவனிச்சு சொல்றேன்...

கு.கு. : கேப்டன் கண்ணன் வாழ்க...

ராகவன் : அடாடா.. பேச விடுங்கப்பா....

கோவி கண்ணன் : பதிவுகளோட தரமும் நல்லா இருக்கு. ஆனா சில கருப்பு ஆடுகளும் இடைல பூந்து வேண்டாத வேலைக பண்றதுதான் கோவம் வருது...

பரிசல் : ஆமாங்க... அது வருத்தமான விஷயம். கண்டிக்கத்தக்கது. மோதி மிதித்து விட்டு முகத்தில் உமிழ்ந்து விடலாம்னா... எல்லாம் அனானியா இருக்குக...

நர்சிம் : கோவியார் சொன்னது 100% சரி. ப்ளாக் ரன் பண்ற அளவுக்கு படித்த, விஷயம் தெரிந்தவர்கள் தாழ்ந்தது தனி ஒருவரை அல்லது சிலரை குறிப்பிட்டு தாக்கற மாதிரி எழுதறது, கீழ்த்தரமான பின்னூட்டம் போடறதெல்லாம் ஆரோக்கியமா இல்ல. இதுல யாரும் யாரையும் நிர்ப்பந்தப்படுத்த முடியாது. சுய கட்டுப்பாடுதான் வழி.

கு.கு. : அப்ப அது பின்னூட்டமா இருக்காது... 'பீ'ன்னூட்டமா இருக்கும்....

பழமைபேசி : இஃகி !! இஃகி !!

பரிசல் : ஜூப்பரா ஜொன்னீங்க தல.... நான் எழுத ஆரம்பிச்ச பிறகுதான் கவனிச்சேன்... பதிவுலக அரசியல் ரொம்பவே இருக்கு....

அப்துல்லா : அரசியல உடுங்கண்ணே... அதுகூட சமாளிச்சுக்கிடலாம்ணே... என் ப்ளாக்கையே கடத்திட்டாங்கண்ணே.... ப்ளாகக் கடத்தறது ஆளக் கடத்தற மாதிரிங்கண்ணே...

பழமைபேசி : ஆமுங்க... உப்பல்லாம் வலைத்திருட்டு நெம்ப சாஸ்தி ஆயிருச்சுங்... இனிமே நம்ம உயில்ல நம்ம வலைத்தளத்தயுமு சேத்துக்கணுமுங்.... அடிக்கடி கடவுச்சொல்ல மாத்தி வெச்சுக்கணும்... அப்பப்ப பதிவுகளை சேமிச்சு வெச்சுக்கணுமுங்... இல்லாட்டி சல்லடங் கிழிஞ்சுருங்...

அணிமா : சல்லடை ஏன் கிழியுது? ஓ... லங்கோடா?

கு.கு. : ஆமா... அமெரிக்க டவுசர் கிழிஞ்ச மாதிரி....

ராகவன் : இது தேறாது.....

ச்சின்னப்பையன் : என் அடுத்த பதிவு "பரிசல்காரன் மென்பொருள் நிபுணரானால்..."

கு.கு. : ஆரம்பிச்சுட்டாருய்யா....

கோவி கண்ணன் : லேட்டாயிருச்சோ?

பரிசல் : (போனில்) யெஸ் மேடம்... இட் ஈஸ் ஆன் தி வே... வில் பி தேர் சூன் மேடம்.. ஐ வில் ஃபாலோ மேடம்... ஓகே மேடம்.... யெஸ் மேடம்...

நர்சிம் : பரிசலுக்கு அடுத்த பஸ் எப்பன்னு பாக்கணும்... மனுசன் இப்பிடி பரபரப்பா இருக்காரே..

ராகவன் : நானும் கிளம்பணும்... வீட்டுல தங்கமணி...

ச்சின்னப்பையன் : தங்ஸா..... ஜூட்.....

பழமைபேசி : நானும் பொட்டி கட்டி, பொட்டி தூக்கி, பொட்டி அடிக்கணும்...

கு.கு. : அப்பீட்ட்டேய்ய்....

அணிமா : என்ன யாரு எப்ப கடத்துனாங்க.... நான் எப்பிடி காங்கோ காட்டுக்குள்ள வந்தேன்?

வெயிலான் : சரி வேலையை கவனிப்போம்...

அப்துல்லா : வரேண்ணே... பிறகு சந்திப்போம்ணே...

பரிசல் : (போனில்) எஸ்... கமிங் மேடம்.....

.....................................................................

யாருக்காவது எதாவது புரிஞ்சுதா? புரிஞ்சா சொல்லுங்க... அவ்வ்வ்வ்வ்... மொக்கைன்னா இதுதாண்டா மொக்கை...

Saturday, January 17, 2009

பொருள் - ஆதாரமா சேதாரமா ?



Magician Bernard Madoff makes funds disappear

இருக்கற பணமெல்லாம் மேடாஃப்ட்ட குடுத்து
சறுக்கற சந்தைல மிச்சத்தப் போட்டு - கிறுக்குன
காய்தமெல்லாம் பாண்டுன்னு வாங்கி வெச்சு
தேஞ்சுதே சேத்த சொத்து.


(போச்சுடா..இவனும் வெண்பா பாட ஆரம்பிச்சுட்டானான்னு சிரிக்க வேண்டாம். என்னவோ ஒரு சின்ன முயற்சி... ஹி ஹி ஹி)


பொருளாதார சரிவைப் பத்தி போன வருசம் பதிஞ்ச பழைய பதிவுகள் ...1 ...2


1995 பிப்ரவரி - நிக் லீசன், பேரிங்ஸ் பேங்க்
2008 பிப்ரவரி - ஜெரோம் கெர்வியெ, சொசைட்டி ஜெனரல்
2008 டிசம்பர் - பெர்னாட் மேடாஃப், பல பெரிய பெரிய பேங்குக


மேல உள்ள பட்டியலப் படிச்சதுமே புரிஞ்சுருக்குமே.... மூணு பேருமே பேங்கர் அல்லது டிரேடர். நிக் லீசன் ஒரு தெளிவான வியூகமோ திட்டமோ இல்லாம ஃப்யூச்சர்ஸ் டிரேடிங்ல ஒரு சுபதினத்துல பேரிங்ஸ் பேங்கை கவுத்து மஞ்சக் கடுதாசி குடுக்க வெச்சாரு. ஜெரோம் தன்னோட கம்ப்யூட்டர் அறிவை தவறான முறைல உபயோகிச்சு கம்பெனிக்குத் தெரியாமயே கன்னா பின்னான்னு டிரேடிங் பண்ணி ஒரு நா காலைல பாத்தா பல பில்லியன் டாலர் நட்டம். இவுங்க ரெண்டு பேரும் தான் வேலை செய்யற பேங்குக்கு லாபம் பண்றோம்; நமக்கும் கொழுத்த போனஸ் கிடைக்கும்கற மாதிரி ஒரு சுயநலத்துல டிரேடிங் பண்ணப் போய் பெருத்த நட்டமாகி பேங்குகளையே மூடவேண்டிய நிலைமை வந்துது.


ஆனா இந்த மேடாஃப் தாத்தா (70 வயசு) இருக்காரே, இவுரை அழிச்சா நாலு நிக் லீசன், ஆறு ஜெரோம் பண்ணி கொசுறா ரெண்டு ஹர்ஷத் மேத்தா பண்ணலாம். என்னா அழும்பு பண்ணியிருக்காரு? ஒரு 15 வருசம் முன்னால நம்மூர்ல ஒரு ஸ்கீம் ஓடீட்டு இருந்துது. கோல்டு மைன் திட்டம், செயின் திட்டம்னெல்லாம் பேரு வெச்சு. 100 ரூபா மணி ஆர்டர் அனுப்பணும், 3 பேரைப் புடிச்சு அவுங்களும் அனுப்பணும், அவுங்க மூணு பேரை புடிச்சு....... அப்பிடி போகும். நமக்குக் கீழ ஆளுக சேரச் சேர நமக்கும் கொஞ்சம் பணம் வருமாம். இதை நம்பி சம்பாதிச்சவன் கையளவு, நொந்து சேமியாவாகிப் போனவன் கடலளவு. இதை அமெரிக்காக்காரனுக "பொன்ஸி ஸ்கீம்"னு சொல்லுவானுக. சார்லஸ் பொன்ஸீங்கற ஒரு பேத்துமாத்து ஆளுதான் அங்க இதுக்கு தகப்பன். கிட்டத்தட்ட அதுமாதிரிதான் நம்ம மேடாஃபோட 'ஸ்கீமும்'.


மொதல்ல கொஞ்ச நாள் இவரோட அஸெட் மேனேஜ்மென்ட் கம்பெனிய நல்ல புள்ளயாத்தான் நடத்திக்கிட்டு இருந்தாரு. பழைய பதிவுகள்ல படிச்சீங்கள்ல அது மாதிரி இவுரும் பல முதலீடுகள்ல பெரிய அளவுல நட்டம் பாத்தாரு. அவர் கிட்ட சொத்துகள, பணத்தை, இதர முதலீடுகளைக் குடுத்து "சவலையா இருக்கு, கொஞ்சம் பாத்து வளத்துக்குடு"ன்னு சொன்னவனுகளுக்கு என்ன பதில் சொல்றது? பாத்தாரு. புதுசா கொண்டு வந்து குடுக்கறவனோட பணத்தை தூக்கி பழைய ஆளுகளுக்கு குடுத்து நிலைமைய சமாளிக்க ஆரம்பிச்சாரு. Rob Peter to pay Paul. இப்பிடி எவ்வளவு நாளைக்கு வண்டி ஓடும்? பலநா திருடன் ஒருநா அகப்பட்ட கதைதான். சுமாரா 50 பில்லியன் டாலர் நட்டம். ஒரு நாள் காலைல எர்லி முகூர்த்தத்துல சாரோட பசங்களே (அவுங்களும் கம்பெனில டைரக்டருக) சொல்ல வேண்டியவங்களுக்கு எல்லாம் சொல்லி அனுப்பி அப்பாவ பத்திரமா கம்பி வெச்ச ரூமுக்குள்ள உக்கார வெச்சுட்டானுக. இந்தாள நம்ம்ம்ம்ம்ப்ப்ப்ப்பி பணத்தக் குடுத்து இன்னிக்கு தலைல துண்டு, பெட்சீட், ஜமுக்காளம்னு எல்லாத்தயும் போட்டுக்கிட்ட HSBC, Fortis, BNP Paribas, RBS, Nomura, AXA மாதிரி பெரிய பெரிய பேங்க்குக, இன்சூரன்ஸ் கம்பெனிகளுக்கு பில்லியன் கணக்குல நட்டம்.


போன வருசம் ஆரம்பத்துல பங்குச் சந்தையும், அமெரிக்க ரியல் எஸ்டேட் சந்தையும் இருந்த இருப்பைப் பாத்துட்டு "ஆஹா !! இன்னும் 20 வருசத்துக்கு ஒரு கொறையும் இல்ல... அப்பிடியே பிக்கப் பண்ணி போயிட்டெ இருக்க வேண்டியதுதான்"னு மௌஸ் ஜோஸியம் சொல்லி, முதலீடு பண்ணுன / பண்ணச் சொன்ன சந்தை ஆய்வாளர்கள் எல்லாம் இப்ப தலைல கைய வெச்சுக்கிட்டு உக்காந்திருக்காங்க. ஒரு கட்டுப்பாடில்லாத பங்கு வர்த்தகம், பாதுகாப்போ உத்திரவாதமோ இல்லாத புதுசு புதுசா சந்தைக்கு வந்த டெரிவேடிவ் பத்திரங்கள், சந்தைல என்ன நடக்குது, எங்க கடிக்கும், எப்பிடி வெடிக்கும்னு எதைப் பத்தியுமே ஆராயாம, யோசிக்காம வேலை செய்யப் போக அணுஆயுத அழிவை விட பெரிய அழிவு. அணு உலைகள்ல சங்கிலித் தொடர் வினையைக் கட்டுப் படுத்த அடர் நீர் (heavy water) மாதிரியான மாடரேட்டர்களை உபயோகிப்பாங்க. ஆனா இந்த முதலீட்டு சங்கிலித் தொடர் வினையை பொருளாதாரத்துக்கு நல்லதுன்னு நெனச்சோ அல்லது காத்து இருக்கறபோதே தூத்திக்கணும்னு நெனச்சோ அல்லது பேராசையோ எதோ ஒண்ணு அதை கட்டுப்படுத்தத் தவறியதோட விளைவை இன்னிக்கு நாம கண்கூடாப் பாக்கறோம்.


இன்னும் இதுமாதிரி எத்தனை பாக்கி இருக்குதோ வெளிய வராம. அடுத்தது கடனட்டை கடன்கள் (Credit Card Debt Consolidations) அதுல குறைஞ்சது 1 டிரில்லியன் டாலர் அளவுல நட்டம் எதிர்பார்க்கலாம்ங்கறாங்க. எந்த அளவுக்கு உண்மைன்னு தெரியல. இன்னும் ஆட்டோ லோன், ஆட்டு லோன், மாட்டு லோன் என்னென்ன இருக்கோ? கொஞ்ச நாள்ல சரியாயிடும்னாங்க. போற போக்கைப் பாத்த்தா எந்திரிச்சு நிக்கவே இன்னும் கொஞ்ச வருசங்கள் ஆகும் போல இருக்கு. அப்பறமா நடந்து, ஓடி.....


சரி. நமக்கு அரைகுறையா தெரிஞ்சதை வெச்சு உங்களையும் கொழப்பியாச்சு. இனிமே நிம்மதியா தூங்கலாம். "அது_சரி" அண்ணே, தப்பா சொல்லியிருந்தா பின்னூட்டத்துல சரி பண்ணிடுங்க.

Thursday, January 15, 2009

மொளச்சு வரும்போது... 5


பழைய பதிவுகள் ...1 ...2 ...3 ...4

தொடர்ல கொஞ்சம் கேப்பு விழுந்து போச்சு. நடுவுல உலகத்துல என்னென்னமோ நடந்து நாம அதப் பத்தியெல்லாம் எழுதிக்கிட்டுருந்தமா? அதான்... அப்துல்லா அண்ணன் வேற சிங்கைல சந்திச்சபோது ஏன் எழுதலன்னு கேட்டாரா... பார்ரா... இன்னுமா இவுங்க நம்பளை நம்புறாங்கன்னு ஒரே ஃபீலிங்ஸ். சரின்னு ஆரம்பிச்சாச்சு.

ஸ்கூல்ல சாரணர், ரோவர்ஸ், என் ஸி ஸி எல்லாம் இருந்துது. எதுலயாச்சும் சேரணும்னு நானும் நண்பன் செந்திலும் (இப்ப உடுமலைல லீடிங் பல் மருத்துவர்) யோசிச்சோம். என் ஸி ஸின்னா காலை ட்ரில் முடிஞ்சதும் சரஸ்வதி கஃபேல இருந்து இட்லியோ, பொங்கலோ, உப்புமாவோ கிடைக்கும். ஆனா அதுக்கு காலங்காத்தால 6 மணிக்கு எழுந்து 6:30 க்கு ஸ்கூல் க்ரவுண்ட்ல இருக்கணும். இது சரிப்படாது. ரோவர்ஸ்னா +1 +2 பசங்களுக்கு மட்டுந்தான்னு சொல்லிட்டாங்க. சரி பாக்கி சாரணர் தான். அதுலயே சேருவோம்னு சேந்துட்டோம். நிறைய டூர் கூட்டிக்கிட்டுப் போவாங்க. போன முதல்நாளே சாரணர் இயக்கப் பாட்டு சொல்லிக் குடுத்தாங்க. "ஜண்டா ஊஞ்சா ரஹே ஹமாரா..." நானும் செந்திலும் "என்னது, சண்டை ஓஞ்சா ரசமும் மோருமா?"ன்னு பேசிக்கிட்டது சார் காதுல விழுந்துடுச்சு. அவர் கைல வெச்சுருந்த குச்சி ரெண்டு பேரு இடுப்புலயும் விழுந்துடுச்சு. என்ன.... ரெண்டு நாளைக்கு ஒக்காரும்போது கொஞ்சம் அசௌகரியமா இருந்துது.

பொரட்டாசி மாசமாச்சுன்னா, சனிக்கிழமைகள்ல நேதாஜி க்ரவுண்டுல வெளயாட முடியாது. டெம்பரரியா பஸ் ஸ்டாண்டு க்ரவுண்டுக்கு மாறிடும். சந்தைப்பேட்டை சைடுல இருந்து பூரா கட்டை கட்டி "ஏழுமலையான் கோயில் ஸ்பெஷல்"னு போட்டு பஸ் பூரா இங்க நிப்பாட்டிருவாங்க. காலைல 4 மணிலேந்து 10 நிமுசத்துக்கு ஒரு பஸ் போகும். அமராவதி நகர் போற வழில சட்டுனு வலது பக்கமா திரும்பி மலை அடிவாரத்துல எறக்கி விட்டுடுவாங்க. மேல கோயிலுக்கு நடந்து போக ஒருமணி நேரம் ஆயிரும். நாங்க சாரணர்கள்தான் "டெம்பில் சர்வீஸ் வாலண்டியர்"க. காலைல மொத பஸ்ல போய் மேல ஏறி எங்களுக்கு ஒரு டெண்ட் அடிச்சு, சாமான்லாம் வெச்சுட்டு கட்டைக கட்டி க்யூ வரிசைய கண்ட்ரோல் பண்ணணும். ரெண்டு பேர் டெண்ட் அடிக்க, ரெண்டு பேரு தண்ணி கிண்ணி (அது என்ன கிண்ணின்னு கேக்கப்படாது... அதெல்லாம் ஒரு ரைமிங்கா வரும்) புடிச்சு வெக்க, குப்பைத் தொட்டி வெக்கன்னு போயிருவானுக. மீதியெல்லாம் க்யூ சரி பண்ண.

மலைக்கோயில் சின்னக் கோயில்தான். பொரட்டாசி மாசம் மட்டும் 4 அல்லது 5 சனிக்கிழமை மட்டும் தொறப்பாங்க. திருப்பதிக்கு போக முடியாதவிங்க இங்க வந்து கும்புட்டா திருப்பதிசாமிய கும்புட்ட மாதிரின்னு சொல்லுவாங்க. எப்பிடியும் ஒரு 10000 பேராச்சும் சுத்துப்பட்டு கிராமங்கள்ல இருந்து வருவாங்க. வரவங்க எல்லாம் தேங்கா, அவுல், வெல்லம் கொண்டு வந்து, அங்கங்க உக்காந்து தேங்கா ஒடச்சு, துருவி, வெல்லம் அவுல் சேத்துப் பெணஞ்சு சாமிக்கு படையல் ரெடி பண்ணுவாங்க. அப்பறம் க்யூவுல நின்னு கோயிலுக்குள்ள போய் படையல் வெச்சுட்டு வெளிய வந்து மத்தவங்களுக்கும் குடுத்து அவிகளும் கொஞ்சம் சாப்புடுவாக.

இப்பத்தான் எங்களுக்குள்ள சண்டை ஆரம்பிக்கும். யாரு தேங்கா ஒடைக்கிற எடத்துல நிக்கிறது, யாரு கோயில் வாசல்ல நிக்கிறதுன்னு. தேங்கா ஒடைக்கிற எடத்துல நின்னா எளநி குடிக்கலாம். கோயில் வாசல்ல நின்னா பூசை முடிஞ்சு வெளிய வரவங்க மொதல்ல நமக்குத்தான் பிரசாதம் குடுப்பாங்க. மத்தபடி க்யூ கண்ட்ரோல் பண்ண கீழ கிட்டத்தட்ட 1/2 கி.மீ. தூரத்துக்கு அங்கங்க நாங்க நிக்கணும். அதுலயெல்லாம் ஒண்ணுங் கெடைக்காது. மேல நிக்கறவன் எவனையாவது வாங்கி சேத்து வெக்கச் சொல்லி அப்பப்ப மேல வந்து சாப்டுக்கணும். கால் வலி கண்டுரும். அதுனால டெம்பில் ட்யூட்டின்னு ஷெட்யூல் வந்ததுமே எங்களுக்குள்ள ஒரு ஷெட்யூல் போட்டுக்குவோம். (சாரணர் இயக்கத்தோட மோட்டோவே Be Prepared ! ) 4 சனிக்கிழமையும் நாங்களே பிரிச்சுக்கிட்டு எளநி, அவுலுன்னு வளச்சுக் கட்டிருவோம். இதுல வேற திடீர்னு அழுகத் தேங்கா எளநி வாயை கெடுத்து நாறடிச்சுடும். இல்லேன்னா யாராவது ஒரே புளிப்பு வெல்லமா கொண்டாந்து படையல்ல கலந்துருப்பாங்க. அது சாப்ட்டா மூஞ்சி ஒரு கோணல் கோணும். ரெண்டு வாழைப்பழம் சாப்டாத்தான் வாய் சரியாகும். எல்லாத்துக்கும் மேல கொரங்குக அட்டகாசம் பண்ணிக்கிட்டுருக்கும். அதுக கிட்டதான் கொஞ்சம் சாக்கிரதையா இருந்துக்கணும். எது கெடச்சாலும் அதுகளுக்கு மொதல்ல கந்தாயங் கட்டீட்டுதான் சாப்புடுவோம். டெம்பில் சர்வீஸ் போனா ஒரு ஆதாயம், திங்கள் கிழமை ஸ்கூலுக்கு போக வேண்டாம். பின்ன? சனிக்கிழமைய 'திங்கற' கிழமையா ஆக்குனா ஞாயிறும் திங்களும் அடைப்பெடுக்க வேண்டாம்?

இது ஆச்சா? இந்த லயன்ஸ் க்ளப்பு, ரோட்டரி க்ளப்புக்காரங்க அடிக்கடி எதாவது மருத்துவ முகாம்க உடுமலைய சுத்தி இருக்கற கிராமங்கள்ல நடத்துவாங்க. அதுக்கும் நாங்கதான் சர்வீஸ் வாலண்டியர்ஸ். முகாம் நடக்கற ஸ்கூல், மில், கல்யாண மண்டபம் இதெல்லாம் ரெடி பண்றது, நோயாளிக ரெஜிஸ்ட்ரேஷன், குறிப்பிட்ட டாக்டர்ட அனுப்பறது, டாக்டர் பக்கத்துல நின்னு அவர் சொல்றத கார்டுல எழுதறது, மருந்து குடுக்க கூட்டிக்கிட்டு போறதுன்னு இதெல்லாம் செய்யணும். மூணு வேளையும் மூக்குப் புடிக்க சாப்படலாம். டாக்டருகளும் எதாவது சின்ன சின்ன பரிசுப் பொருட்கள் குடுப்பாங்க. சைடுல மருந்து பாட்டில்களோட சின்ன ரப்பர் மூடிக கலர் கலரா கிடைக்கும். சிகரட் பாக்கெட்டுக்கு அந்த மூடிகள சக்கரமா ஃபிட் பண்ணி ஓட்டலாம்.

ஒருதடவை பெதப்பம்பட்டி கொங்குரார் மில்லுல கண் பரிசோதனை முகாம். நானும் செந்திலும் மருந்துப் பொட்டிகளுக்கு காவல். எதோ டெஸ்ட் பண்றதுக்காக டாக்டருக சின்ன லிட்மஸ் பேப்பர் பட்டைக வெச்சுருந்தாங்க. அது லிட்மஸ்னு எங்க ரெண்டு பேருக்கும் தெரியாது. எதேச்சையா அதுல தண்ணி படப்போக சிலது நீலமா, சிலது கரும்பச்சையான்னு கலர் மாறுச்சு. அவ்வளவுதான்... நானும் அவனும் அங்க இருந்த எல்லா பேப்பர்களையும் தண்ணித் தொட்டி கிட்டப் போய் நின்னு நனைச்சு நனைச்சு போட்டுட்டோம். திடீர்னு டாக்டர் வந்து லிட்மஸ் கொண்டாங்கன்னாரு. நமக்கு பப்ளிமாஸ்தான் தெரியும். அப்பறம் அவரே தேடிப் பாத்துட்டு "40 அட்டை கொண்டு வந்தேனே, எங்க போச்சு"ன்னு சொல்லிக்கிட்டே போயிட்டாரு. நாங்க ரெண்டு பேரும் ஒருத்தனை ஒருத்தன் பாத்துக்கிட்டு நின்னோம். கொஞ்ச நேரத்துக்கு பிறகு பின்னால இருந்து "வாங்கடா இங்க"ன்னு சார் சத்தம் போட்டாரு. எதுக்கு அப்பிடி 'அன்பா' கூப்படறாருன்னு ஓரளவுக்கு புரிஞ்சு போச்சு. அப்பிடியே பூனை மாதிரி போய் நின்னா, அவர் பக்கத்துல நாங்க நனைச்சுப் போட்ட லிட்மஸ் காய்தம் பூரா கெடக்கு. அப்பறம்? அப்பறம் தாராபுரம் இப்பறம் கல்லாபுரம். ஒண்ணும் ஒண்ணும் ரெண்டுதான்.

ஒருமுறை இது மாதிரி முகாமுக்கு கெளம்பும்போது தமிழ் வாத்தியார் ஒரு கேள்வி கேட்டார். நீங்க முன்னாடியே கேள்விப் பட்டிருக்கலாம்.
"ஆனையை பூனை தின்னுச்சாம்... பூனையை தேனீ தின்னுச்சாம்" இதுக்கு என்ன அர்த்தம்? பதில்...... நாளைக்கு....

Tuesday, January 13, 2009

சாதிகள் உள்ளதடி பாப்பா...


வால்பையனின் "சாதி ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று!" என்ற பதிவை ஒட்டிய பதிவு இது.

ஆமாங்க. சாதி தேவையில்ல, அது ஒழிக்கப்பட வேண்டிய ஒண்ணுதாங்கறதுல ரெண்டு கருத்துக்களுக்கு இடமேயில்லை. அதுனால நமக்கு இது வரைக்கும் கிடைச்ச நன்மை தீமைகளைப் பட்டியல் போட்டா தீமைப் பட்டியலுக்கு உலகத்துல உள்ள அத்தனை காய்தங்கள்ளயும் எழுதினாலும் தீராது. ஆனா நிதர்சனம் என்னன்னா அது ஒழியாது, அதை ஒழிக்கவும் முடியாது.

மனுசன் அங்கங்க குகைகளுக்குள்ள இருந்த காலத்துலயும், பெறகு சின்னச் சின்னக் கூட்டமா குழுக்களா வாழ்ந்தபோதும், கொஞ்சம் பெரிய கூட்டமா குடி(clan)களா வாழ்ந்தபோதும் தான் இன்ன இடத்தை, இன்ன குழுவை, இன்ன குடியைச் சேந்தவன், இன்ன குறியீட்டை(totem) கும்புடறவன்னு அடையாளப் படுத்திக்கறதுக்காக ஒரு பேர் வெச்சுக்கப் போக, அது சாதிங்கற தீமை(evil)யா மாறி மனுசன பாடாப் படுத்துது. அது வெறும் அடையாளமா மட்டுமே பார்க்கப் பட்ட வரைக்கும் அது பிரச்னையா இல்லை. அப்பறமா தொழில் சார்ந்து, இடம் சார்ந்து, மொழி சார்ந்துன்னு பல விதமா அடையாளங்கள் உருவாக உருவாக, ஒரளவு பொருளாதார சுதந்திரம் உள்ளவன்-இல்லாதவன், யார் யாரை சார்ந்து இருக்காங்க (உ.ம்: விக்கறவன் - வாங்கறவன்) அப்பிடிங்கற பேதங்கள் கொஞ்சம் கொஞ்சமா முத்தி உசந்தவன் - தாழ்ந்தவன்னு போய், அப்பிடியே அடையாளத்துக்காக அவன் இன்ன இனத்தவன், நான் இன்ன இனத்தவன்னு வளந்து, அவனவனோட தனித்துவத்தை நிலை நாட்டவோ அல்லது ஈகோவுக்காகவோ அடுத்தவனை மட்டந் தட்ட ஆரம்பிச்சு அது இரட்டைக்குவளை வரைக்கும் வந்துருக்கு.

நதிக்கரை நாகரீகம் ஆரம்பிச்சபோதே, காட்டுக்குள்ள இருந்தவனும், மலைமேல வாழ்ந்தவனும் மட்டமாப் போயிட்டாங்க. ஆனா அப்ப பொதுவுடைமை சித்தாந்தமெல்லாம் இல்லாததால, கொஞ்சம் லேட்டா நாகரீகத்துக்கு அறிமுகமானவன் முன்னாலயே அங்க இருந்தவனை விட தாழ்ந்தவன் ஆயிட்டான்.

அப்பறம் வர்ணாசிரமம்கற கட்டுக்கதைகள வேற உண்டாக்கி, எல்லாரும் அது என்னன்னு புரிஞ்சுக்கறதுக்கு முன்னாடியே அதுதான் நிலையான கோட்பாடுன்னு ஆக்கிட்டாங்க. பிரம்மனோட கால், தலை, இடுப்புன்னெல்லாம் கட்டம் போட்டு "இது எங்க ஏரியா... உள்ள வராத"ன்னு சொன்னது எப்பிடி? இதைச் சொன்னவன் கண்டிப்பா ஞானியா இருக்க முடியாது. ஏன்னா, "பிரம்மம்"ங்கறது அருவம். அது நம்முடைய அகம். ஞானம். புரிதல். உணர்வு. Conscience. அதுக்கு கால் ஏது தலை ஏது?

மனுசனாப் பொறந்த ஒவ்வொருத்தனும் அவன் பிறந்த இடம் மற்றும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப ஏதாவது ஒரு குழுவுல இருப்பான், ஏதாவது ஒரு தொழில் செய்வான். சிலர் வசதி வாய்ப்புனால படிக்கலாம், வித்தைக கத்துக்கலாம், வீரமா இருக்கலாம். இதுல பல விஷயங்கள் அறிவியல்பூர்வமாப் பாத்தா, இதெல்லாம் அவனவன் பிறக்கும்போதே ஜீன்கள்ல பதிவானது. ஒற்றை செல் அமீபாவுல இருந்து ஹோமோசேபியன் வரைக்குமான பரிணாம வளர்ச்சி இயற்கையும் ஜீன்களும் சேந்து நடத்தற சித்து விளையாட்டு. "வீரம் எங்க ரத்தத்துலயே இருக்கு, வியாபார நேக் எல்லாம் எனக்குள்ள ஊறியிருக்கு"ன்னா, ஆமா ஊறித்தான் இருக்கு. அதை முதலா வெச்சு பொழச்சுக்கலாம். இதுல நான் ஒசத்தி, நீ கீழன்னு சொல்றது எப்படின்னு புரியல.

எத வெச்சு இந்த சமுதாய அடுக்குகள (social strata) உருவாக்குனாங்க? மறுபடி வர்ணாசிரம முறைய வெச்சுன்னா, அத விட முட்டாள்தனமுங் கிடையாது, கயமைத்தனமுங் கிடையாது. மனுசனுக்கும் மிருகங்களுக்கும் வித்தியாசம் ஒரு அறிவுங்கறோம். அப்ப மனுசனுகளுக்குள்ளயே என்ன வித்தியாசம் இருக்க முடியும்?

இன்னிக்கு சாதி சாதிங்கறவங்கள்லாம், உடம்புக்கு சொகமில்லாமப் போச்சுன்னா டாக்டர் என்ன சாதின்னு பாக்கறாங்களா? ரெண்டு பாட்டில் ரத்தம் ஏத்தணும்னா ரத்த வங்கில இருந்து வர ரத்தம் தன் குரூப்பான்னு பாப்பாங்களா அல்லது தன் சாதி ரத்தமா இருக்கணும்னு எதிர்பார்ப்பாங்களா? அப்பிடி ஒருவேளை தாழ்ந்த சாதின்னு அவங்க நினைக்கற ரத்தம் வந்துடுச்சுன்னா, அவங்க சாதி மாறிடுமா? சென்னைல இருக்கற வில்லிவாக்கம் ஒரு 20 வருஷம் முன்னாடி "கிட்னிவாக்கம்"ங்கற பேர்ல ரொம்ப ஃபேமஸ். அங்க இருக்கற குடிசைகள்ல இருந்த ஒவ்வொருத்தனும்/தியும் ஒரு கிட்னிய வித்துருப்பாங்க. அதெல்லாம் யார் யாருக்கு பொருத்தினாங்களோ அவங்கள்லாம் என்ன சாதி? அப்ப.... உயிர் பிழைக்க சாதி தேவையில்லை. ஆனா ஈகோவுக்கு தீனி போட சாதி தேவைன்னு ஆகுதா?

வால்பையன்.... நாம என்னதான் சொன்னாலும் "சாதிதான் என் அடையாளம்"ன்னு நினைக்கறவங்க இருக்கற வரைக்கும் அத ஒழிக்கவே முடியாது. சாதி கிடையாதுன்னு சொல்லிட்டு சாதிச் சங்கங்களுக்கு ஒப்புதல் குடுத்து பதிவும் பண்ற அரசாங்கங்களும், சுயநலம் புடிச்ச அரசியல்வாதிகளும், அவங்க சொல்றதைக் கேடுக்கிட்டு அடிச்சுக்க ரெடியா இருக்கற அடுத்த தலைமுறை இருக்கற வரைக்கும்..... அது ஒழியாது, அழியாதுங்கறது நிதர்சனமான வருத்தம். அது ஒழியற வரைக்கும் ஓய மாட்டேன்னு சொல்லியிருக்கீங்க. உங்க கனவு நனவாக வாழ்த்துகள். அப்பிடி ஆச்சுன்னா, ராமானுசர், பாரதியார், பெரியார், அம்பேத்கர் வரிசைல நீங்களும் வரலாம்.


ஒரு பட்டாம்பூச்சிக்கு பட்டாம்பூச்சிகள் அளித்த "பட்டாம்பூச்சி" விருது !!!



அன்பு நண்பர்கள் பழமைபேசியும் தாமிராவும் அடியேனுக்கு பொங்கல் பரிசாக "பட்டாம்பூச்சி" விருது கொடுத்து கவுரவித்ததற்கு நன்றி. பல இடங்களில் பல வழிகளில் பலவற்றைக் கண்டு, கேட்டு, அறிந்து, பல தலைப்புகளில் பல விஷயங்களைப் பற்றி பல விதமாக அலசும் நாம் ஓவ்வொருவருமே ஒரு பட்டாம்பூச்சிதான்.

எனக்குக் கிடைத்த இந்த விருதை நான் மேலும் சிலருக்குக் கொடுத்து கவுரவிக்க கடமைப்பட்டிருக்கும் காரணத்தினால் தோழர்கள் வெயிலான் ரமேஷ், புதுகை அப்துல்லா அண்ணன், கிரி, ஆயில்யன் ஆகியோரை அன்புடன் மேடைக்கு அழைக்கிறேன்.

!!!! அனைவருக்கும் இனிய "தைத்திருநாள்" நல்வாழ்த்துகள் !!!!

Saturday, January 3, 2009

புதிய ஆண்டு : புதிய பதிவு


புத்தாண்டே வருக புத்துணர்ச்சி தருக
பல்வளமும் பெருக நல்முயற்சி தருக !!
எத்திக்கும் சிறக்க அத்தனையும் கற்க
சொல்வளமும் பெருக நல்நினைவும் தருக !!

நீர்வளமும் பெருக நிலவளமும் சிறக்க
மண்மணமும் நிலைக்க நல்வரமும் தருக !!
போரெலாம் நிற்க பாரெலாம் வளர
நின் தாளை வணங்க நன்மனமும் தருக !!


புத்தாண்டுல புது முயற்சியா ஒரு பாட்டெழுதலாம்னு...ஹி ஹி ஹிஹி.. போன வருஷம் பதிய ஆரம்பிச்சு காதுகுத்துல மொய் எழுதுன மாதிரி 51 பதிவு. இந்த வருஷம் அதுமாதிரி உங்களையெல்லாம் சோதிக்கப்படாதுன்னு உறுதி எடுத்துக்கலாம்னா, புத்தாண்டு உறுதி எடுத்துக்கறதில்லைன்னு 1990ல உறுதி எடுத்தது ஞாபகம் வருது. அதனால இந்த வருஷம் தடாலடியா ஒரு பாட்டோட ஆரம்பிச்சாச்சு. பாட்டைப் படிச்சதுமே தோணியிருக்குமே... வருஷ ஆரம்பமே இந்தப்பாடுன்னா, வருஷம் பூரா படப்போற பாடு எப்பிடி இருக்குமோன்னு... அது எனக்கெப்பிடித் தெரியும்? இனிமே எழுதற எம்பாடு படிக்கற உங்கபாடு.

சரி... புத்தாண்டு எப்பிடி இருக்கப் போகுது, தலைவர்கள் எண்ணம் என்னன்னு ஒரு ரவுண்டு வந்தேன்.

ஒபாமா : மாறுங்க... நம்புங்க... நம்மால முடியும்... எல்லாம் மாறும். முதல்ல நான் வீட்டை சிக்காகோல இருந்து வாஷிங்டனுக்கு மாத்தணும். என் புள்ளைங்களோட பல்ளிக்கூடத்தை மாத்தணும். ப்ரெசிடெண்ட் ரூம் செவுரு பெயிண்டை மாத்தணும். பாத்துக்கிட்டே இருங்க... அம்புட்டும் மாறப் போகுது... பாருங்க பேட்டின்னதும், குளிச்சுட்டு துண்டோடவே வந்துட்டேன். முதல்ல போய் துணி மாத்தணும்.

டோனி ப்ளேய்ர் : ஓ... வருஷம் பொறந்துடுச்சா? புஷ் சொல்லவேயில்ல....

பான் கி மூன் : அட போங்க... ஏண்டா புது வருஷம் பொறக்குதுன்னு இருக்கு. உடனே வந்துடறாங்க... இந்தப் போர் நிக்குமா, அந்தப் போர் நின்னுடுமான்னு. ஒரே அக்கப்போரா இருக்கு. ஆஃப்டர் ஆல் நான் ஒரு சாதாரண ஐ.நா. சபைத் தலைவர். நான் என்ன பண்ண முடியும்?அட... என் பேச்சை விடுங்க... முதல்ல என் பேர் எத்தனை பேருக்கு தெரியும்?

மன் மோகன் சிங் : மேடம் கிட்டதான் கேக்கணும். என்னயும் ஒரு ஆளுன்னு நினைச்சு கேக்க வந்தீங்களே... ரொம்ப நன்றி.

சோனியா : இஸ் தேஷ் கோ சிர்ஃப் காங்ரஸ் பசா சக்தா ஹை... ராஹுல் ..... ப்ரியங்கா.... ஆங்... என்ன கேட்டிங்க?

கருணாநிதி : சென்ற வருடம் முழுதும் பொறுமல்களும் குமுறல்களும் நிலவினாலும், வருட இறுதியில் கண்கள் பனித்தன; இதயம் இனித்தது. கழகத்தின் கடைசி கண்மணி, என் கண்மணி கனிமொழி வரையிலும் ஏற்றம் கண்டனர். புத்தாண்டில் பல புது"வரவு"களை எதிர்நோக்கியிருக்கிறது கழகம். ஒ,,, நீங்கள் கேட்டது நாட்டைப் பற்றியா? அம்மையாரின் அவதூறு அறிக்கைகளிலும், அலட்டல் அரசியலிலும், ஆணவ அதிகாரத்திலும் சிக்குண்டு சீரழிந்து கிடக்கிறது. கனவில் வந்த காமராசரும், அண்ணாவும் அமைதி காத்திடும் பண்பையே வலியுறுத்தும்போது நான் என்ன செய்வேன்? வரியா.. வரியா... ரெண்டு பேரும் சேந்து சண்டை போடலாம்....

ஜெயலலிதா : போனவருடம் தமிழகத்தின் இருண்ட வருடம். இந்த வருடம் கற்காலத்துக்கே போய் விடும் போல உள்ளது. ஆளுங்கட்சியின் அராஜகம் அதிகமாகப் போகிறது. மக்கள் அல்லல் படப் போகிறார்கள். சொல்லொணாத் துயரத்துக்கு ஆளாகப் போகிறார்கள். நான் கொடநாடுக்கு போகிறேன். நீங்க எல்லாரும் இப்ப வீட்டுக்குப் போங்க.

விஜயகாந்த் : ஏய்ய்... இங்க பாரு... போன வருசத்துக்கு மொத்தம் 366 நாள். இந்த வருஷத்துக்கு 365 நாள்தான். ஒரு நாளைக் குறைச்சது யாரு? உங்களுக்கே தெரியும். அதைப் போராடி வாங்கற வரைக்கும் ஓயமாட்டான் இந்த விஜயகாந்த். நான் ஆட்சிக்கு வந்தா ஒவ்வொருத்தருக்கும் ஒரு நாளைக்கு 24 மணி நேரத்தை அவங்கவங்க கைலயே கொண்டு வந்து குடுக்க ஏற்பாடு செய்வேன். இது புரட்சி தலைவர் மேல சத்தியம்.

சுப்பிரமணியம் சாமி : தோ... வந்துட்டேன். புது வருஷத்துல இந்தியாதான் வல்லரசு ஆகப் போறது. இட்லிக் கடையைத் தாக்கப் போறதா ஜர்தாரி ரகசியமாப் பேசின CD எங்கிட்ட இருக்கு. சோனியாவும், அத்வானியும் என்னோட கூட்டணி வெச்சுக்க ரகசியமா பேசிண்டுருக்கா. என்னையே பிரதமர் பதவிக்கும் சிபார்சு பண்றா. நான் பிரதமர்... இந்தியா வல்லரசு.... ஒபாமா கூட நேத்து பேசிட்டேன்... பின் லேடன் LIC பில்டிங்கை ப்ளேனை வெச்சு இடிக்க போறான்.... கர்சாய் கிட்ட பேசி லேடன் கிட்ட இடிக்க வேண்டாம்னு சொல்ல சொல்லீட்டேன். .....

ரஜினி காந்த் : போன வருஷம்...ம்ம்ம்... 2008.... இந்த வருஷம்...ஹஹ் ஹா ஹாஹ் ஹா... 2009... எப்டி..எப்டி..இருக்கும்? எந்திரன் வரட்டும்.... நாம ஒக்காந்து பேசுவோம்.

தமாசெல்லாம் (!!) கிடக்கட்டும். இந்த புது வருஷம் ஏகப் பட்ட படிப்பினைகளோட ஆரம்பிச்சுருக்கு. பொருளாதாரம், பொது வாழ்வு, சொந்த வாழ்வுன்னு ஆடாத ஆட்டம் ஆடி அடங்கியாச்சு. நிதானமா சிந்திச்சு நல்லபடியா முன்னேறுவதற்கு நல்ல வாய்ப்பு. கிடைச்ச படிப்பினைகளை சரியாப் புரிஞ்சுக்கிட்டு பயன்படுத்தி எல்லாரும் வாழ்க்கைல முன்னேற எல்லாம் வல்ல இயற்கையை வேண்டிக்கிறேன்.

வரப்புயர நீர் உயரும்
நீர் உயர நெல் உயரும்
நெல் உயரக் குடி உயரும்
குடி உயரக் கோன் உயர்வான்
!!