நீண்ட நாட்களுக்கு பிறகு மறுபடியும் வெண்பா முயற்சி. வழக்கம்போல நண்பர் திரு.அகரம்.அமுதாவின் உதவியுடன். ஈற்றடிகளை அவர் கொடுக்க, பாக்களை நான் இயற்ற (சரி.. சரி.. இதெல்லாம் கொஞ்சம் ஓவர்தான்) சிலவற்றிற்கு அவர் தளை தட்டும் இடங்களை சரி செய்து கொடுக்க, அவற்றை நான் இங்கு படைக்க, அவற்றை நீங்கள் படிக்க..... அவரது/உங்களது பொறுமைக்கும், நன்றிகள் பல.
உலகம் சூடாகுதல்
மரங்களை வெட்டியே பிழைப்பினை நடத்தும்
கரங்களை வெட்டிட வேண்டாமோ - மறக்காமல்
கப்பந்தான் கேட்குமே தட்பமது குறைந்திட
வெப்பம் உயரும் உலகு !
கூட்டணி
கூறுவோர் கூறிடவும் மாறுவோர் மாறிடவும்
சேருவோர் யாரெனக் கேட்டேன் - பெருமைமிகு
நாட்டினிலே நாற்பது கட்சிகள் !! உன்றன்
கூட்டணி யாருடனோ கூறு !
ஊருக்கு உழைத்தல்
கரும்பெனவே இனிதாகப் பேசிடினும் சின்னத்
துரும்பையுங் கிள்ளாத் தலைவரே ! - இரும்பில்செய்
(ச்)சேரிலே இருந்தபடி நாட்டாமை செய்வதினும்
ஊருக்(கு) உழைத்தல் உயர்வு.
டாஸ்மாக்கும் படிப்பும்
டாஸ்மாக்கைத் தேடி ப்ரெண்டுகளைக் கூட்டிக்கிட்டு
ரோஸ்மில்க் குடிக்கவா போவாங்க? - பாஸ்மார்க்கு
வாங்கத்தான் முடியாம அரியர்ஸை வெச்சுவெச்சு
தேங்கியே போனதே படிப்பு.
சரியாயிருந்தா வெண்பா... இல்லைன்னா என் பா. என்னப்பா நண்பா? சொல்றது தப்பா?
என்னோட முதல் முயற்சி உங்களுக்கெல்லாம் மறந்து போயிருக்கலாம்... மறுபடி இங்க ஒரு தடவை ஞாபகப்படுத்திடறேன்.

