தோரா! தோரா! தோரா! (1970)
சோ யமமுரா, தகஹிரோ தமுரா
1941ல பேல் ஹார்பர் (ஹவாய் தீவுகள்) மேல ஜப்பானிய தாக்குதல் பண்ணினதுக்கான காரணங்களையும், நிகழ்வுகளையும் விளக்கற படம். அட்மிரல் யமமோடோ கடற்படைத் தளபதியா பொறுப்பேத்துக்கறதுல ஆரம்பிக்குது. அது ஒரு இக்கட்டான சமயம். அமெரிக்கா ஜப்பான் மேல பொருளாதாரத் தடைகள் விதிச்சு பல மூலப் பொருட்களுக்காகா ஜப்பான் திண்டாட்டுது. அப்பத்தான் அது இத்தாலி ஜெர்மனியோட ஒரு முக்கூட்டு ஒப்பந்தம் (Tripartite Pact) பண்ணி புகழ் பெற்ற Axis Powersல ஒண்ணான சமயம். ராணுவமும் விமானப்படையும் அமெரிக்காவைத் தாக்கியே ஆகணும்னு ஒத்தக்கால்ல நிக்கறாங்க. ஆனா யமமோடோ இது ஒரு பயங்கர சூதாட்டம்னு உணர்ந்திருக்காரு. அம்ரிக்காவுல ஹார்வர்ட்ல படிச்சவரு. அவர் சொல்றாரு 'நீங்கள்லாம் அமெரிக்கர்கள் மேல ஒரு தப்பான அபிப்ராயம் வெச்சுருக்கீங்க; சுகபோக வாழ்க்கைல மயங்கி இருக்கறவங்க; நாட்டைப் பத்தி கவலையே படாதவங்க; சுயநலவாதிக அப்பிடின்னெல்லாம். ஆனா எனக்கு நல்லாத் தெரியும், போர்னு வந்துட்டா அவங்களை மாதிரி ஒரு அசைக்க முடியாத, ஒற்றுமையான எதிரியை சந்திக்கறது கடினம்'. ஆனா யாரும் கேக்கறதா இல்ல. அரைகுறை மனசோட போருக்கு கடல்படையோட சம்மதத்தை குடுக்கறாரு. இருந்தாலும் கடைசி வரைக்கும் அமைதிக்கான பேச்சு வார்த்தைகளை பண்ணிப் பாத்துடணும்னு சொல்றாரு. வாஷிங்டன்ல இருக்கற ஜப்பான் தூதரகத்துல அதுக்கான வேலைகள் நடந்துட்டும் இருக்கு.
ஆபரேஷன் தோரா. 'டார்பிடோ தாக்குதல்' - இதோட ஜப்பானிய சுருக்கம்தான் "தோரா". ஒரு ஞாயித்துக் கிழமை (1941 திசம்பர் 7) அமெரிக்காவை எதிர்பாராத விதமா தாக்கணும்னு முடிவாகுது. பாமிங் விமானங்களுக்கு லீடரா கேப்டன் ஃபுஷிடா. ப்ளானுக்கு மாஸ்டர்மைண்ட் கமாண்டர் கெண்டா.
அமெரிக்காவும் சும்மா இல்ல. ஜப்பானோட ரேடியோ சிக்னல்களை குறுக்கிட்டு 'டீகோட்' பண்றதுல வெற்றி அடைஞ்சு அவங்களோட ஒவ்வொரு அசைவையும் கண்காணிக்கறாங்க. புது ராடார்லாம் தயார் பண்ணி ஒரு மலை மேல வெச்சு வேவு பாக்கறாங்க. இப்ப ஜப்பான் எந்நேரமும் தாக்கலாம்னு தெரிய வருது. ஆனா எப்ப, எங்கன்னு தெளிவா இல்ல.
6ம் தேதி ஜப்பானிய தூதரகத்துக்கு ஒரு செய்தி வருது. "14பக்க செய்தி வரப் போகுது. எல்லாத்தயும் டீகோட் பண்ணி 7ம் தேதி மத்தியானம் 1 மணிக்குள்ள அமெரிக்க அரசாங்கத்து கிட்ட குடுத்துடணும்"னு. 13 பக்கம் வந்துடுது. 14வது பக்கம் மறுநாள் காலைல வரும். தூதரகத்த விட வேகமா அமெரிக்கர்கள் செய்திய படிச்சுட்டு எல்லாப் பக்கமும் அலர்ட் பண்றாங்க. கர்னல் ப்ரட்டன் கண்டிப்பா எதோ ஒரு தாக்குதல் இருக்கப் போகுதுன்னு ராணுவ சீஃப் கிட்டயெல்லாம் போய் முட்டி மோதறாரு. பலருக்கு நம்பிக்கையே இல்ல. "ஜப்பானா? நம்மளயா ? ம்ஹூம்.. சான்ஸே இல்ல...". இருந்தாலும் கர்னல் முடிஞ்ச வரைக்கும் எல்லாரயும் அலர்ட் பன்ணிடறாரு.
7ம் தேதி. ஞாயித்துக்கிழமை. காலைலயே ஜப்பானிய விமானம் தாங்கும் கப்பல்ல இருந்து ஒரு 25 விமானங்கள் ஃபுஷிடா தலைமைல கிளம்பி ஹவாய் பேல் ஹார்பர் நோக்கி பறக்குது. 11 மணி சுமாருக்கு அந்த கடைசி 14ம் பக்கம் வருது. ஜப்பான் தூதரகத்துல அதை டீகோட் பண்ணி டைப் பண்ண நேரமாகுது. ஆனா அதுக்குள்ள அமெரிக்க ராணுவம் அதை டீகோட் பண்ணி ஜப்பான்ல இருந்து தெற்குப் பகுதில, விமானம் தாங்கும் கப்பல் அல்லது நீமூழ்கிக்கப்பல் மூலமா தாக்குதல் இருக்கலாம்னு அனுமானிக்கறாங்க. கடற்படை தளபதி அது பிலிப்பைன்ஸா இருக்கலாம்னு அசால்டா இருக்காரு. 12 மணி சுமாருக்கு மலை உச்சில இருக்கற ராடார்ல நிறைய விமானங்களைப் பார்த்துட்டு கமாண்ட் செண்டர்க்கு தகவல் சொல்றாங்க. ஆனா அன்னிக்கு சில B-17 விமானங்கள் ரெகுலர் சார்ட்டில வரதா ஏற்கெனவே ஒரு ப்ளான் இருந்த்தால அதுவாத்தான் இருக்கும்னு "டோண்ட் வொரி.."ங்கறாங்க. 14வது பக்கத்தோட கடைசில இருக்கற வாக்கியம் "உடனே நம்மளோட டீகொடிங் மெஷினெல்லாம் அழிக்கப்படணும்".கர்னல் ப்ரட்டன் அதோட அர்த்தத்தை ஓரளவுக்குப் புரிஞ்சுக்கிட்டு மேல கீழ் போய் பலரைப் பாத்து நெருங்கிக்கிட்டுருக்கற அபாயத்தை சொல்றாரு. பல பேர் அன்னிக்கி லீவுங்கறதால கோல்ஃப் விளையாடப் போயிடறாங்க. இவுரு கெடந்து அல்லாடறாரு.
1 மணிக்குள்ள டைப் பண்ணி முடியாதுங்கறதால அமெரிக்க அரசோட இருக்கற அப்பாயிண்ட்மெண்டை 2 மனிக்கு தள்ளி வெக்கறாரு ஜப்பான் தூதர் நொமுரா. ஜப்பானோட திட்டம் என்னன்னா, சமாதானம் முடியாது போல இருக்கு, போர்தான் ஒரே வழின்னு 1 மணிக்கு அமெரிக்காவுக்கு தெரிவிச்சுட்டா, திட்டப்படி விமானங்கள் பேல் ஹார்பருக்கு 1:30க்கு மேல போய் தாக்குதல ஆரம்பிக்கலாம். ஜெனீவா போர் ஒப்பந்தங்களின் படி இது சரியாயிருக்கும். இப்ப நடக்கறதே வேற. 1:30க்கு ஜப்பானிய விமானங்கள் பேல் ஹார்பர் வந்து சேந்துடறாங்க. அவங்க எதிர்பார்த்ததுக்கு மாறா இங்க ஒரு தற்காப்பு வேலைகளும் நடக்கற மாதிரி தெரியல. எல்லாம் கூல இருக்கு. ஃபுஷிடாவுக்கு குஷி. கோட் வேர்ட் "தோரா! தோரா! தோரா!" ன்னு எல்லா விமானங்களுக்கும் சிக்னல் குடுக்கறான்.
அவ்வளவுதான். அட்டகாசம் ஆரம்பம். பேல் ஹார்பர் 40அட்தான் ஆழம்கறதால நீர்மூழ்கில வந்து டார்பிடோ தாக்குதல் முடியாத காரியம். ஏன்னா குறஞ்சது அதுக்கு 90அடியாவது ஆழம் வேணும். ஜப்பானோட ப்ளான், டார்பிடோகளை விமானங்கள்ல இருந்து ட்ராப் பண்றது. அடுத்த 1/2 மணி நேரம் ஹார்பர்ல இருக்கற ஒவ்வொரு கப்பலும், USS Arizona, USS Nevada உள்பட. நிக்கிற, பறக்கிற எல்லா அமெரிக்க விமானங்களும், ஆயில் டேங்குகளும், ஹேங்கர்களும், ஃபைர் சர்வீஸ்களும் துவம்சம். அமெரிக்காவுக்கு பதில் தாக்குதல் நடத்தக்கூட சான்ஸே குடுக்காம அடிக்கறாங்க. சண்டைல விமானத்துல இருந்து சுடற ஒரு புல்லட், கட்டடத்துக்குள இருந்து பாத்துக்கிட்டுருக்கற கர்னல் ப்ரட்டன் பக்கத்துல ஒரு ஜன்னல துளைச்சுக்கிட்டு வந்து விழுது. மயிரிழைல தப்பறாரு. "பேசாம அது என்னைக் கொன்னிருக்கலாம்"னு விரக்தியா சொல்றாரு.ஜப்பான் விமானங்கள் நாசகார வேலையை முடிச்சுட்டு திரும்பிப் போகுது.
ஒரு வழியா 2 மணிக்கு தூதர் நொமுரா, உள்துறை செக்ரடரி கார்டெல் ஹல்லை சந்திச்சு ஜப்பானோட செய்தியை குடுக்கறாரு. ஹல் சொல்றாரு "என்னோட பல வருஷ சர்வீஸ்ல, இந்த உலகத்துல எந்த ஒரு நாடும் உச்சரிக்கக் கூடத் தயங்கற வார்த்தைகள் கொண்ட இப்பிடி ஒரு டாகுமெண்ட பாத்ததே இல்ல". நொமுரா எதோ சொல்ல வர, "போயிடுங்க"ன்னு கத்தறாரு.
அங்க ஜப்பான்ல ராணுவ அதிகாரிகளுக்கு தாக்குதல் திட்டப் படி நடந்துடுச்சுன்னு செய்தி வந்ததும் ஒரே கொண்டாட்டம். ஆனா அட்மிரல் யமமோடொ இறுக்கமா உக்காந்திருக்காரு. அவரோட இந்த வார்த்தைகள்ல எவ்வளவு அர்த்தம் இருக்கு பாருங்க. "நாம போர் தொடுக்கற செய்தி தாக்குதல் ஆரம்பிச்சு 55 நிமிஷம் கழிச்சுதான் அமெரிக்காவுக்குக் கிடைச்சுருக்கு. நாம இப்ப செஞ்சிருக்கறதெல்லாம் ஒரு தூங்கற அரக்கனை எழுப்பிவிட்டு, அவனை ஒரு கடுமையான தீர்மானத்தையும் போட வெச்சுருக்கோம்" ("I fear that all we have done is awakened a sleeping giant, and filled him with a terrible resolve.")
அதுக்கப்பறம் நடந்த பயங்கரமான துயரச்செயல்தான் உலகத்துக்கே தெரியுமே......
படத்துல எடிட்டிங் சூப்பரோ சூப்பர். ஆர்ட் டைரக்சன் அட்டகாசம். அந்த விமானங்களும், கப்பல்களும் அவ்வளவு தத்ரூபமா இருக்கு. ரொம்ப டெக்னிகலா பாத்து அரிசோனா, நெவாடா கப்பல்கள்லாம் வேற மாதிரி இருக்கும்னெல்லாம் சொல்லியிருக்காங்க. ...ப்ச்...அதெல்லாம் விடுங்க... ஆனா படத்துல ஆரம்பத்துல இருந்து கடைசி வரைக்கும் அந்த pace நல்லா மெய்ண்டைன் ஆயிருக்கு. புது பேல் ஹார்பர் படத்தை விட இந்தப் படம் ரொம்பவே நல்லா இருக்கு. A must-see film.