Showing posts with label லுலுலாய். Show all posts
Showing posts with label லுலுலாய். Show all posts

Thursday, September 3, 2009

தலையில் தட்டியது யார்?

சனிக்கிழமை காலை. அவசரமாக ஒரு நண்பரை காணக் கிளம்பிக்கொண்டிருந்தேன். எங்கள் வீட்டில் கிச்சனுக்கும் ஹாலுக்கும் இடையே ஒரு குட்டி அறை உள்ளது (டைனிங் ஹாலெல்லாம் இல்லை. சும்மா ஒரு அறை, அவ்வளவுதான்). அதில்தான் ஃபிரிட்ஜ், வாஷிங்மெஷின் வகையறாக்கள் வைத்திருக்கிறோம். அந்த அறையில் வலப்புறம்தான் பாத்ரூம் உள்ளது.

இங்கே ஹாலில் லதா மற்றும் உஷாவின் உணவு நேர போராட்டம் நடந்துகொண்டிருந்தது. சாப்பாடு மற்றும் உணவுப்பாத்திரங்களுக்கு நடுவே லதாவை வைத்துவிட்டு கிச்சனுக்குள் நுழைந்து பூரிக்கட்டையை (கொஞ்சம் பெரிது, ஏனெனில்.... ஹிஹி... இதெல்லாம் சொல்லணுமா பாஸ்..) எடுத்துத் தருவது எப்போதும் என்னுடைய பணியாகையால் என்னையே எடுத்துத வருமாறு பணித்தார். என் அவசரத்தில் 'என்ன மறுபடியுமா? வேணாம்.... அழுதுருவேன்..'' என்று பணிவாகச் சொல்லிவிட்டு என் வேலையைப் பார்க்கத் துவங்கினேன். வலிய வந்த சண்டையை விட அவருக்கும் மனமில்லாததால் அவரே எழுந்து கிச்சனுக்குள் நுழைந்து பூரிக்கட்டையை எடுக்க விரைந்தார். அதற்குள் எங்கோ லதாவை விட்டு விட்டு கிளம்பிவிட்டார் என நினைத்தாளோ என்னவோ லதா அவரைத் தடுக்கும் வண்ணம் 'யீயீயீயீய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்' என அழத்துவங்கியிருந்தாள். பூரிக்கட்டையை எடுத்துக்கொண்டு 'ஏம்ல உயில வாங்குத, இங்கனதான நிக்கேன்' என்று கூறிக்கொண்டே விருட்டென திரும்பினார். நான் அந்த நேரத்தில் சரியாக பாத்ரூமுக்குள் ஒளிந்து கொள்ள எண்ணி அந்த அறைக்குள் நுழைய எத்தனித்தேன். ப்ச்... கொஞ்சம் டைமிங் மிஸ் ஆயிடுச்சு... அவ்வளவுதான், மிக பலமாக பிடித்திருந்தாரோ என்னவோ பூரிக்கட்டை என் தலையில் கொஞ்சம் அழுத்தமாகவே முத்தமிட்டது. ஹைய்ய்ய்யோ. அறை முழுதும் அலறல்....

அடுத்த விநாடியே உச்சஸ்தாயியில் கத்தினேன், "ஏன் இப்பிடி ஓங்கி அடிச்சிங்க?"

"அய்யய்யோ, பச்சைப்பொய்யி... லேசாத்தானே தட்டினேன்..." என்று அவள் பதிலுக்கு அலறினாள். அதற்குள் ஹாலில் லதா அவளால் முடிந்த சேவையாய் ஊளையிட்டுக்கொண்டே வாட்டர் ஜக்கை கொட்டிவிட்டிருந்தான். அந்த எரிச்சல், நானே எடுத்துத்தராத கோபம், அதிலும் ஓடி ஒளிய எத்தனித்தது, லீவு நாளில் நான் மட்டும் தப்பித்து வெளியே கிளம்பும் கோபம் என அனைத்தும் சேர்ந்து பூரிக்கட்டை என் தலையின் மீது விழுவது புரிந்தாலும் இதெல்லாம் அரசியலில் சகஜம். அடுத்தடுத்த வசனங்களிலேயே இருவருக்கும் சிரிப்பு வந்துவிட்டது.

"ஏங்க, நான் பூரிக்கட்டையால லேசாத் தட்டினதுக்கே இப்படி பழி போடுறியளே, நான் மட்டும் அந்த ஒலக்கையால தட்டியிருந்தேன்னா என்ன சொல்லியிருப்பியளோ?" என்றாள். அதற்கு அப்புறமும் அவர் சொன்னதைக் கேட்டுவிட்டுதான் பதில் பேச இயலாமல் நான் தலை வீக்கம் வெளியில் தெரியாமல் மறைக்கும் வழியைப் பார்க்க ஆரம்பித்தேன்.

முறைக்காமலே சொன்னார், "நான் பூரிக்கட்டையோட வர்றது தெரிஞ்சாவே எப்பவும் போல நீங்களாவே வந்து தலையைக் குனிஞ்சு வாங்கிக்கிட்டுப் போவ வேண்டியதுதான? இன்னிக்கு ஏன் ஓடி ஒளியப் பாத்திக?"


என்னவோ போங்க..... ஆதியோட இந்தப் பதிவுக்கும் இதுக்கும் எதாவது தொடர்பு இருந்தாலும் இருக்கலாம்.... அது புனைவாகவும் இது 'உள்ளது உள்ளபடி'யாகவும் இருக்கலாம்.... நமக்கு என்ன தெரியும்? அவரெல்லாம் அப்பளத்தை உடைச்சே சாப்பிடறவர். இட்லியை பிட்டு சாப்பிடறவர். தண்ணியை அப்பிடியே குடிக்கறவர்.