Wednesday, May 18, 2011

யூ டூ யூரோ?


போர்ச்சுகல். உலக வரைபடத்தை உருவாக்குவதற்கு மிகவும் உதவிய நாடு. கிட்டத்தட்ட 6 நூற்றாண்டுகள் உலகின் பல்வேறு பகுதிகளை ஆண்ட நாடு. கடைசியாக (90களின் பிற்பகுதியில்) இடத்தைக் காலி செய்தது மக்காவ் (சைனா) என்று நினைக்கிறேன். "ஐரோப்பிய பொருளாதார யூனியன்" (European Economic Zone) என்று பேச ஆரம்பித்த காலத்திலிருந்து யூனியனில் இருந்து வரும் நாடு. பொருளாதாரத்தில், வாழ்க்கைத்தரத்தில் முன்னேறிய, மனித வளம் மிக்க, அமைதியான நாடு.

ஆனால் இதெல்லாம் இன்று "பொய்யாய்... பழங்கதையாய்..." போய், கிரீஸ், அயர்லாந்துக்கு அடுத்ததாக பொருளாதாரத்தில் அதல பாதாளத்தில் வீழ்ந்து தவிக்கிறது. வீழ்ச்சி என்றால் சாதாரண வீழ்ச்சி இல்லை. மொத்த உள்நாட்டு உற்பத்தியைப் போல 225% கடன். தற்போதைய நிலையை சமாளிக்க ஏறத்தாழ 80 பில்லியன் யூரோ தேவைப்படலாம். சென்ற மாதத்தில்உலக வங்கியும், யூனியனும் கடன் ஒப்பந்தங்கள் செய்துள்ளன. போர்ச்சுகலும் தன் பங்குக்கு செலவினங்களை அடியோடு குறைத்தாக வேண்டும். ஒரு யூரோவிற்கு நூறு காசுகள் என்று ஒவ்வொரு யூரோவின் மதிப்பையும் உணர வேண்டும்.

ஆனால், இப்படியே எவ்வளவு காலத்திற்கு ஒவ்வொரு ஐரோப்பிய நாட்டின் பொருளாதார பிரச்னைகளை சமாளிக்க முடியும்? சென்ற வருடம் கிரீஸ் வீழ்ச்சியின்போதே இந்தக் கேள்வி எழுந்தது. (இது பற்றிய முந்தைய இடுகை) இந்த வீழ்ச்சிகளின் காரணம் "யூரோ"தானா? கிடையவே கிடையாது.... இருக்கலாம்.... வேறென்ன... என்று பல சித்தாந்தங்கள் கிளம்பின. ஆனால் பொதுவான பொருளாதார விதிகள், நாணய மதிப்பு மற்றும் நாணயமாற்று முறைகள், முதலீடுகள் என்றெல்லாம் பார்க்கும்போது, ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு போட்டித்தன்மை என்பது மிக முக்கியமான ஒன்று. மனிதவளம், உள்நாட்டு உற்பத்தி இவற்றுடன் கூட சர்வதேச சந்தை பொருளாதாரத்தில் நாணயமாற்று இன்றியமையாத ஒன்று.

சீனாவின் நாணயமாற்று கொள்கையில் குற்றம் கண்டுபிடித்தவர்கள் பலர். ஆனால் இன்று குறைந்த முதலீடு ; கூடுதல் உற்பத்தி ; மிகக்குறைந்த விலை ; மிகப்பெரிய சந்தை என்று வேறு எந்த நாட்டைச் சொல்ல முடியும்? அமெரிக்க கருவூல செயலர்கள் சீனாவுக்கு நேரில் சென்று நாணயமாற்று விகிதங்களை சிறிதளவாவது தளர்த்தக் கோருமளவுக்கு போட்டித்தன்மையை தக்க வைத்துக்கொண்டுள்ளது. அதே சமயம் நாணயச் சந்தையில் நேரடியாகத் தலையிட்டு 'யுவான்' மதிப்பை ஏற்றத் தாழ்வுகளில் இருந்து பாதுகாக்க, நாணயச்சந்தைக்கென ஒரு தனி பண முறையைக் கொண்டு வந்து அதிலும் தன் போட்டித்தன்மையை வளர்க்கிறது.

ஒருங்கிணந்த ஐரோப்பிய பொருளாதாரம் என்ற கனவை நனவாக்கி சாதனை படைத்தாலும், கொஞ்சம் அவசரப்பட்டு விட்டோமோ என்ற எண்ணம் இப்போது வலுப்பெற ஆரம்பித்திருக்கிறது. சீனாவைப் போல வேறு ஒரு மாற்று நாணய முறை வரும் சாத்தியக் கூறுகளும் உள்ளன. ஒரு நேர்மையான, பாரபட்சமில்லாத பொருளாதார அழுத்த சோதனைகள் (economic stress tests) மூலம் யூனியனுக்குள் இருக்கும் நாடுகளை வகைப்படுத்தி ஒரு 'மென் யூரோ' (soft euro) அறிமுகப்படுத்தப்படலாம். நாடுகள் இந்த மாற்று நாணயத்தை கையாண்டு தங்கள் போட்டித்தன்மையைத் தக்கவைத்துக் கொள்ள ஒரு வாய்ப்பு இருக்கிறது. காத்திருந்து பார்க்க வேண்டும்.

இப்போது போர்ச்சுகலுக்குப் பிறகு அடுத்த நெருக்கடி இத்தாலியில். அதன் அளவு 1 டிரில்லியன் யூரோ அளவுக்கு இருக்கலாம் என்ற அனுமானங்கள் மிகுந்த கலக்கத்தை ஏற்படுத்துகின்றன. எத்தனை காலம் ஜெர்மனி இந்த சரிவுகளை தாங்க முன்வரும் என்பது கேள்விக்குறி. வரி செலுத்தும் சாமானியன் அரசாங்கத்தை எதிர்க் கேள்வி கேட்கும் காலம் தொலைவில் இல்லை.

இரண்டு உலகப் போர்களின் தொடக்கமும் ஜெர்மனி. இன்று உலக பொருளாதார சரிவை தாங்குவதிலும் பெரும்பங்கு வகிப்பது ஜெர்மனி.


Saturday, April 30, 2011

உறங்குவது போலும்........


நண்பருடன் ஒரு சிறிய விவாதம். தூக்கத்தில் நாம் மிகுந்த நேரத்தை விரயம் செய்கிறோம் (non-productive) என்றார். அதுவும் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் 2 மணி நேரத்துக்கு மேல் தூங்குவது அவசியமற்றது ; ஒரு நாளைக்கு 16 மணி நேரம் என்று வாரத்துக்கு 6 நாட்கள் (96 மணி நேரம்) வேலை செய்ய அனுமதிக்கும்படி பணியாளர் சட்டங்கள் மாற்றப்பட வேண்டும் என்றார். இத்தனைக்கும் அவருடையே சகோதரர் ஒரு மருத்துவர்.

நல்ல பொழுதையெல்லாம் தூங்கிக் கழிப்பவர்களைப் பற்றி பேசவில்லை. நிஜமாகவே தூக்கம் என்பது நேர விரயமா? மனிதனுக்கு ஒரு நாளைக்கு 6 மணி நேரத் தூக்கம் அவசியம் என்று மருத்துவ அறிவியல் சொல்கிறது. இல்லாது போனால், மனித உடல்கூற்றுப் படி, இயக்கமும் உற்பத்தி திறனும் மங்கி, வளரும் நாடு என்ற நிலையிலிருந்து இறங்கி வளர்ச்சி குன்றிய நாடாகத்தான் போகும்.

அது நிற்க. விவாதம் தொடர்ந்தது. அறிவியல், மருத்துவம் , வானவியல் இவையெல்லாம் வாழ்வியலில் கலக்கும் முன்பிருந்து இருக்கும் வேதம் என்ன சொல்கிறது? ("வேதம்" என்பது, மதம் - குறிப்பாக இந்து மதம் -மற்றும் ஆத்திகம் தொடர்புடையது என்ற கருத்து உடையவர்கள் இந்த வரியுடன் திரும்பி விடலாம்). வேதங்களைப் பொறுத்தவரை மதம், ஆத்திகம் போன்றவை மிக மலிவான விஷயங்கள். அவற்றின் ஆழமும், அகலமும் இந்த பிரபஞ்சத்தை விடவும் அதிகம்.

இன்று அறிவியல் பிரபஞ்சம் தோன்றியது எப்படி என்ற கேள்விக்கு பதில் தேட முயன்று கொண்டிருக்கிறது . (இது பற்றிய முந்தைய இடுகை) அறிவியல் முயல வேண்டும். உண்மை என்பது தேடி அறிந்தே தீர வேண்டிய ஒன்று. ஆனால், இன்றைய நிலையில் அறிவியலின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ள பல் செய்திகள் எத்தனையோ காலத்திற்கு முன்பே வேதங்களில் இருக்கின்றன என்பது ஒரு ஆச்சரியமே.

கடவுள் ஒளி உண்டாகட்டும் ; பூமி உண்டாகட்டும் ; உயிர்கள் உண்டாகட்டும் என்று நினைத்தார், படைத்தார் என்பது பரவலான நம்பிக்கை. போலவே, 2012-ல் பிரளயத்தில் (deluge) உலகம் அழியும் ; உலகமே நீரில் மூழ்கி விடும் என்பது போன்ற நம்பிக்கைகளும் பல மதங்களிலும் பரவலாக நம்பப்படுகிறது. ஆனால் வேதமோ, இதையெல்லாம் விடு ; 'நித்யப் பிரளயம்" என்று ஒன்று நாள்தோறும் உனக்குள்ளேயே நிகழ்வது உனக்குத் தெரியுமா என்கிறது. அதுதான் 'தூக்கம்'. எப்படி?

"லயம்" என்றால் ஓய்தல் அல்லது ஒன்றுதல் என்று கூறலாம். நாம் சுய உணர்வுடன் (consciousness) இருக்கும்போது நம் மனதில் உள்ள என்ணங்கள், நாம் தூங்கும்போது கொஞ்சம் கொஞ்சமாக அடங்கி, ஒடுங்கி, ஓய்ந்து, ஒரு புள்ளியில் 'லயித்து' (withdrawn / unmanifest) விடுகின்றன. மறுபடி விழிக்கையில், 'மனம்' என்பதும் அதில் எண்ணங்கள் என்பதும் மறுபடி 'தோன்றி' (manifest) நம் சுய உணர்வின் புலனுக்கு தென்படுகின்றன. (இது பற்றிய முந்தைய இடுகை) நாம் தூங்கி விழிக்கும்போது, உடலுக்கு ஒரு புத்துணர்ச்சியும் கிடைக்கிறது. இது எங்கிருந்து வந்தது?

இந்தப் பிரபஞ்சத்தில் நம் சுயஉணர்வுக்கு புலப்படும் / புரியும் ஒவ்வொரு பொருளும் அணுக்கள் / துகள்களால் ஆனது என்று அறிவியல் கூறுகிறது. அந்த அணுக்கள் / துகள்களுக்கும் அப்பாற்பட்டதை "வெளி" (field) என்கிறது. அதை அறியத்தான் அறிவியல் முயன்று கொண்டிருக்கிறது. அந்த ஒன்றை, அந்த ஆனந்தமான அமைதியை, அந்த மூலசக்தியை (energy) வேதம் "பிரம்மம்" என்றும், நம் சுய உணர்வில் புலப்படுவை எல்லாம் அதன் வெளிப்பாடுகளே (manifests) என்றும் கூறுகிறது. தூக்கம் ஒரு வகையான தியானம். நாம் தூங்கும்போது நிகழும் பிரளயத்தில், நம் மனம் அதன் மூலமான சத்தில் லயித்து, மீண்டும் வெளிப்படும்போது புத்துணர்வுடன் வெளிப்படுகிறது. எப்படி கடலில் ஒரு அலை எழுந்து, கடலிலேயே விழுந்து, கடலோடு லயித்து, மறுபடி இன்னொரு அலையாக எழுகிறதோ அதைப் போலவே. எந்த மூலசக்தியின் வெளிப்பாடாக மனமும், எண்ணங்களும் தோன்றினவோ, அதே மூலசக்தியிடம் லயித்து மீண்டும் தோன்றும்போது புத்துணர்வும், அதன் காரணமாக உடலியக்கமும், நமது அன்றாட வாழ்வும் நிகழ்கின்றன. அந்தப் புத்துணர்வு இல்லாமல் உடல் உழைப்பும், உற்பத்தித் திறனும் இல்லை. மனம் ஓயாமல், உடலுக்கு சக்தி கிடைக்காது. புத்துணர்ச்சி பெறுவது என்பதையும் தாண்டி, நம் இருப்பை, இந்தப் பிரபஞ்சத்தின் பேருண்மையை நமக்குப் புரிய வைப்பதும் தூக்கமே.

நாம் உணரும் இந்தப் பிரபஞ்சத்தின் தோற்றமும், மறைவும், அதில் உயிர்களின் பிறப்பும், இறப்பும் கூட அந்த மூலசக்தியின் அலைகளே.

"உறங்குவது போலும் சாக்காடு ; உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு"

"புனரபி ஜனனம் ; புனரபி மரணம்"

வால் : இதையெல்லாம் ஒருபுறம். மறுபுறம், பணியாளர் நலன்கள், அது தொடர்பான சட்டங்கள், அடிப்படை பொருளாதார விதிகள் இவற்றையெல்லாம் பார்க்கும்பொழுதும் வாரத்திற்கு 40 மணி நேரம் பணி என்பது சரியான ஒன்றுதான். மேலும் மேலும் பணி நேரத்தைக் கூட்டுவது பல விதங்களிலும் பாதிப்புதான். Only be counter productive.

Wednesday, April 20, 2011

மீண்டும் ஜே.கே.பி. !!!


பட்ட கால்லயேதான் படும். மறுபடியும் எழுத வந்தாச்சு. மீண்டும் ஜே.கே.பி. !!! பயப்படாதீங்க. ஒரேடியா அடிக்க மாட்டேன். தெளிய வெச்சு தெளிய வெச்சுதான் அடிப்பேன்.

6 மாசமா எழுத முடியாம போனாக் கூட அப்பிடி இப்பிடின்னு 98 பேர் இன்னும் நம்மளை நம்பிக்கிட்டிருக்காங்க. 1 மாசம் முன்னால எதேச்சையா பார்த்தபோது 100 பேர் !!! அடடா.. .எழுதாததுக்கே 100ன்னா எழுதியிருந்தா 1000 ஆயிருக்குமோ... அலெக்ஸால அலேக்கா தூக்கி மொத 10ல உக்காத்தி வெச்சுருப்பாங்களோன்னு நினைச்சதும் உண்டு. இப்பதான் தெரியுது... வழி தவறி வந்து ரெண்டு நிமிஷம் திண்ணைல உக்காந்துட்டு... இந்த அக்கப்போருக்கு வெயில்லயே அலையலாம்னு ஓடிட்டாங்க. பாவம்... பொழச்சுப் போகட்டும்.

* * * * * * * * * * *

தேர்தல் முடிஞ்சு எல்லாரும் நகம், விரல், கை, கால், பக்கத்துல இருக்கறவங்க குரல்வளைன்னு எதையாவது கடிச்சுக்கிட்டே பதட்டமா இருக்கலாம். அல்லது "ஹ்ம்ம்ம்.... பச்சாப் பசங்க.... 1 மாசம்... 30 நாள்.... எவ்வளோ சவுகரியம்... என்னென்ன பண்ணலாம் தெரியுமா?"ன்னு குமரிமுத்து மாதிரி சிரிச்சுக்கிட்டு இருக்கலாம். ஆனா பத்திரிக்கைகளுக்கு அல்வா டைம். "கிராமங்களில் கருத்து கணிப்பு", "மக்களின் மனத் துடிப்பு"ன்னு எதையாவது அடிச்சு விட்டு, குட்டையக் கொழப்பி கல்லா கட்டலாம். எஞ்சாய் பண்ணுங்க மக்களே !!

* * * * * * * * * * *

துக்ளக்ல (அட.. .ஒரிஜினல் துக்ளக்ல...) 'சோ' எழுதியிருந்ததைப் படிக்கும்போது சிப்பு சிப்பா வந்தது. இவங்களும் இலவசம், அவங்களும் இலவசம்னு சொல்லிட்டதால "இலவசம்"ங்கற ஃபேக்டர் அடிபட்டு போகுதாம். என்னா லாஜிக் !!! வடிவேலு, சிங்கமுத்துவை எல்லாம் இஞ்சித்தண்ணில கரைச்சு குடிச்சு ஏப்பம் விட்டுட்டார். சரி.... ஆதரிக்கறதுன்னு முடிவு செஞ்ச பிறகு லாஜிக்கெல்லாம் பாத்தா முடியுமா? ஆனா இப்பிடியே லாஜிக் பாத்தா எப்பிடி இருக்கும்னு யோசிச்சு பாத்தா.....

"ரெண்டு பேரும் இனிமே லட்சம் கோடிக்கு அதிகமா ஊழல் பண்றதில்லைனு சொல்லிட்டதால ஊழல் ஃபேக்டர் அடிபட்டு போகுது."

"ரெண்டு பேரும் எதிர்கட்சி பிரமுகர்களை குண்டு வெச்சு மட்டுமே கொல்வோம், அருவாளால வெட்டமாட்டோம்னு சொல்லிட்டதால வன்முறை ஃபேக்டர் அடிபட்டு போகுது."

"சொந்தப் பிரச்னைன்னா மட்டுமே டெல்லிக்கு போவோம் ; மத்த பிரச்னைக்கு எல்லாம் புறா கால்ல சீட்டு கட்டி அனுப்புவோம்னு ரெண்டு பேருமே சொல்லிட்டதால டெல்லிக்கு காவடி தூக்கற ஃபேக்டர் அடிபட்டு போகுது."

'சோ' மேல இருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையும் போயிடுச்சு.

* * * * * * * * * * *

சிங்கைலயும் அடுத்த மாசம் 7ந் தேதி தேர்தல். முதல் முறையா இங்க நேரடியா பாக்கறேன். என் வரையில இங்க ரொம்ப வித்தியாசமா இருக்கு. தேர்தல் முறைகள்ல இல்ல ; அரசியல்வாதிகளும் மக்களும் தேர்தலை அணுகற முறைல. நேரடியான கேள்விகள் கேக்கறாங்க. பிரதமர்ல இருந்து எல்லாரும் அதை விட வெளிப்படையா பதில் சொல்றாங்க. நெகடிவ்வா பார்க்கறவங்களும் இருக்காங்க. நான் ரொம்ப ஆர்வமா பாத்துக்கிட்டுருக்கேன். அநேகமா அங்க ரிசல்ட் வரும்போது இங்கயும் வந்துடும்னு நினைக்கிறேன்.

* * * * * * * * * * *

வழக்கம்போல போரடிச்சாச்சு. அப்பறம் பாக்கலாம். _/\_