Thursday, April 11, 2013

விண்ணின் கொடை

காரிருள் சூழக் கார்மேகம் கண்டதும்
பேருவகை கொண்டதொரு காலம் - ஏருழவன்
கண்ணீர் உகுத்தும் கல்மனங் கொண்டே
விண்நீர் பொழியாக் கொண்மூ.


நல்லார் ஒருவர்க்கு ப் பெய்மழை ஆங்கே
அல்லார் அவர்க்கும் உண்டாம் - எல்லாரின்
எண்ணத்தில் மேன்மை இரு ப் பின் கிட்டுமே
மண்ணுக்கு விண்ணின் கொடை.


மரங்களை வெட்டியே வயிற்றை வளர்க்கும்
கரங்களை வெட்டிட வேண்டாமா? - மறக்காமல்
க ப் பந்தான் கேட்குமே தட் பமது குறைந்து
வெ ப் பந்தான் உயரும் உலகு.
 

அவன்.

அது ஒரு அடர்ந்த காடு. அந்தி சாயும் நேரம். பறவைகள் கூடு திரும்பிக் கொண்டிருந்தன. பல வகையான பறவைகளின் கீச்சொலிகள் ஒரு இலக்கணத்திற்கு உட்படாத ரம்மியமான இசை விருந்து. வீழ்ந்து கொண்டிருந்த கதிரவனின் கடைசிக் கணங்களின் கிரணங்கள் மரக்கிளைகளினூடே இலைகளினூடே காற்றின் அசைவிற்கு ஏற்ப கண்ணாமூச்சி விளையாட்டு. பாதையில் தனியாகச் செல்பவனுக்கு மயக்கத்தையும் பயத்தையும் கலவையாக அனுபவிக்க நேரிடும். ஒளித் தேவன் இருள் தேவனிடம் உலகைக் காக்கும் பணியை ஒப்படைத்து கைகுலுக்கி விடைபெற்றுக் கொண்டிருந்தான்.

அதோ.... அங்கே... யாரந்தத் துறவி? பார்க்க வெகு இளமையான தோற்றம். கண்களில் அதீத அமைதி. சிறு புன்னகைக் கீற்று. இந்த இளம் வயதிலேயே துறவு மேற்கொள்ள வேண்டிய அவசியம் என்னவோ? பெற்றோரா மனையாளா மக்களா.... அல்லது பொருளாதாரமா.... துறவறத்துக்கு இவற்றில் ஏதோ ஒன்றுதானே காரணம்... காலங்காலமாக.... இருக்கட்டும்.... இவனுக்காவது மன நிம்மதி சித்திக்கட்டும்... அப்படி ஒன்று உண்மையிலேயே இவ்வுலகில் இருக்குமானால்.

நீண்ட பயணமாக இருந்திருக்க வேண்டும். களைப்புடன் அவன் அந்த பரந்த மரத்தினடியில் அமர்ந்தான்.

****************
சில வருடங்களுக்கு முன்பு....

"உண்மையாகவா சொல்கிறீர்கள்? அல்லது என்னுடன் விளையாடுகிறீர்களா?"

"உன்னுடன் என்ன விளையாட்டு எனக்கு? இது பலப்பல நாட்களுக்கு முன்பு பூவாய்ப் பூத்தபோதே உள்ளமர்ந்த வண்டு.... இப்போது பழமான பின்னரும் உள்ளே குடைந்து கொண்டிருக்கிறது... வெளியேறும் தருணம் வந்து விட்டதாகவே உணருகிறேன்..."

"இல்லை.... இது நடவாத காரியம்.... என்னால் ஒப்புக்கொள்ள முடியாது. மாட்டேன். உங்கள் பெற்றோர் என்னைத்தானே குறை கூறுவர்?"

"நீ அவர்களைப் புரிந்தது அவ்வளவுதானா? அவர்களுக்கு என் மீது வருத்தம் இருக்கலாமே தவிர, உன்னிடம் குறை காணுவதற்கு எள்ளளவும் நியாயம் இல்லை.... கவலையே வேண்டாம்..."

"என்னை சமாதானப்படுத்த வேண்டாம்....இதோ... இந்தப் பிஞ்சின் முகத்தைப் பாருங்கள்.... இவனை விட்டுப் போக எப்படி உங்கள் மனம் இடம் கொடுக்கிறது? அவ்வளவு கல் நெஞ்சமா?"

"நெஞ்சம் கல் அல்ல பேதையே.... கனிந்து வருகிறது... அந்தப் பேருவகையைச் சொல்ல வார்த்தை இல்லை.... உன்னை விடவும் மேலாக அவன் என்னைப் புரிந்து கொள்வான்...."

"இறுதியாகச் சொல்கிறேன்... நான் இதற்கு ஒருபோதும் சம்மதிக்க மாட்டேன்.... இது பற்றி மேலே விவாதங்களோ விளக்கங்களோ கேட்க நான் தயாரில்லை..."

"ஹஹஹ.... இது இறை ஆணை.... "

"என் காதுகள் கேட்கும் சக்தியை இழந்து விட்டன.... உள்ளே போவோம் வாருங்கள்.... சயன நேரம்...."

அன்று இரவு.... அவன்....
உறக்கம் துறந்து,
உடையவளைத் துறந்து,
உற்றாரையும் பெற்றோரையும் துறந்து,
உலகைக் காண விழைந்து,
உண்மையைக் காண விழைந்து,
உள்ளத்தை விசாலமாகத் திறந்து வெளியேறினான்.
கதவோடு சேர்த்து கனவுகளையும் மூடினான்.
உண்மையை அறியும் வேட்கை உந்தித் தள்ள ஒரு புதிய பயணம் தொடங்கியது.

*********************

கிளையில் துளிர்த்திருந்த அந்த இலை மரத்திடம் கேட்டது.

"அம்மா.... என்னை உதிர்த்து விடேன்..."

"அதற்கு இன்னமும் காலமிருக்கிறது குழந்தாய்.... என்னோடு இரு... நீ இன்னமும் காண வேண்டியவை பல....."

மௌனம் சூழ்ந்தது.

கிளையில் அமர்ந்த பறவையிடம் அந்த இலை இறைஞ்சியது.

"பறவையே.... ஒரு சிறு உதவி வேண்டும். என்னைக் கொத்தி உதிர்த்து விடுவாயா?"

"அதற்கு இன்னமும் காலமிருக்கிறது குழந்தாய்.... உன் தாயுடனேயே இரு... நீ இன்னமும் காண வேண்டியவை பல....."

மறுபடியும் மௌனம் சூழ்ந்தது.

கிளையின் மீது ஊர்ந்து வந்த சிலந்தியிடம் இலை கெஞ்சியது.

"சிலந்தியே.... தயவு கூர்ந்து என்னை இந்தக் கிளையிலிருந்து விடுவிப்பாயா?"

"ஏன்? காரணம்?"

"அதோ.... கீழே அமர்ந்திருக்கும் அந்த இளம் துறவியைப் பார்த்தாயா? அவர் மடியில் சென்று சேர வேண்டும்.... நீயாவது என்னைப் புரிந்து கொள்.... உதவி செய்...."

புதிய நண்பன் உதவி செய்தான்.

**************

அந்த அபலைப் பெண் பலரிடம் விசாரித்து, தன் மகனுடன் அந்தக் காட்டில் அலைந்து திரிந்து இறுதியில் அந்த மரத்தடியில் அவனைப் பார்த்து விட்டாள். கண்டு கொண்ட மகிழ்ச்சியில் கண்ணீர் பெருக ஓடி வந்து துறவியின் காலடியில் விழுந்தாள்.

கண் விழித்த துறவி காலடியில் கிடப்பது யாரென்று அறிந்து கொண்டான். அமைதியான புன்னகையுடன், கருணை பொங்கும் கண்களுடன் கையில் ஒரு இலையுடன் எழுந்து நின்றான்.

"யசோதரா.... எழுந்திரு...."

அவள் எழுந்து அவன் கண்களைப் பார்த்தாள். நீண்ட மௌனம். ஒரு வார்த்தை கூட பேசப்படவில்லை. சில ஆண்டுகளின் பிரிவு கண நேரத்தில் நீர்த்துப் போனது. மௌனமெனும் உன்னத மொழி புலன்களுக்கு உட்படாத பேருண்மையை போதித்துக் கொண்டிருந்தது. பேசப்படாத வார்த்தைகளின் பொருள் இன்னும் சிறிது நேரத்தில் சூழப் போகும் இருளை விடவும் அடர்த்தியாக இருந்தது.

குழந்தை ராகுலன் அந்த இலையைத் தன் தலையில் அணிந்து கொண்டு விளையாடிக் கொண்டிருந்தான்.

புத்தம் சரணம் கச்சாமி.

Wednesday, March 13, 2013

சேமித்த கணங்கள்

பரந்து கிடக்கும்
பாலைவானத்தைப் போன்றது
உன் மௌனம்

விடாது ஆர்ப்பரிக்கும்
அலைகளைப் போன்றது
என் மௌனம்

மழைத் துளிக்குள் தெறிக்கும்
வானவில்லைப் போன்றது
உன் சிரிப்பு

குளத்து நீரில் பிரதி பலிக்கும்
நிலவின் களங்கம் போன்றது
என் சிரிப்பு

எனினும்
என்னிடம் என்ன இருக்கிறதென்று
என்னை வந்தடைந்தாய்?

என்னை 'அப்பா'வென அழைத்த
அந்த நொடியை
என் காலக் குடுவையில்
உறைய வைத்திருப்பதை
அறிவாயா?

நடிப்பு

வீட்டினில் பழக ஆரம் பித்து
பள்ளியில் பாங்காய் வளர்த்து
கல்லூரியில் கையாண்டு பார்த்து
காதலியிடமும் கோடி காட்டி
நேர்முகத் தேர்வில் முயன்று பார்த்து
அலுவலகத்திலும் செறிவு சேர்த்து....
பின்னர் தேடியலைந்து,
ஒரு வாய் ப் புக் கிடைத்த போது
நன்றாக வெளிக்காட்டிய பின்
கிடைத்த முதல் விமரிசனம்:
"நடி ப் பு இவன் ரத்தத்துலயே இருக்குய்யா!!"

ம்ம்ம்ம்....
நாம பட்ட பாடு நமக்குத்தான் தெரியும்....
நடிக்கறதுக்கும்,
இந்த கவிதையை விதைக்கறதுக்கும்....

Tuesday, February 19, 2013

அன்பு

அன் பெனும் பெருநிலத்தில்
விளையும் பயிரனைத்தும்
அண்டத்தின் பசி தீர்க்கும்.

அன் பெனும் பெருமழையின்
ஒவ்வொரு துளியிலும்
உயிர்த்தெழுதல் நிகழும்.

அன் பெனும் பெருநெரு ப் பில்
வேறு பாடுகளின் வேர்கள்
திண்ணமாய் அழியும்.

அன் பெனும் பெருவளி
செல்லும் வழியெங்கும்
நேசத்தின் வாசம் வீசும்.

அன் பெனும் பெருவெளியில்
அகிலமே சுயமிழக்க
அகண்ட பெருஞ்சோதியாய்.....
அன் பே சிவம் !!

Thursday, February 14, 2013

நினை ப் பதெல்லாம்............

"டேய் எங்க இருக்க இ ப் ப நீ?"
"கோகுல்ஸ் ... ஜஸ்ட் இப்பதான்.... சுபீர் கூட ...."
"மறுபடி ஆரம்பிச்சுட்டியா அவன் கூட .... டேய்... உன் தொப்பையைப் பாரு.... பெல்ட் கண்ணுக்குத் தெரியுதா?"
"இல்லடா... நான் ஜஸ்ட் கோக்...."
"படவா.... பிச்சுப் புடுவேன் பிச்சு.... இன்னும் 20 நிமிஷத்துல சர்னி ரோட் கோவில் வாசல்ல இருக்க... கெளம்புடா.... "
"இப்பதாம்மா வந்தோம்...ஒரு சின்ன டிஸ்கஷன்... முடிச்சுட்டு வரேனே..."
"மவனே செத்தடா நீ இன்னிக்கு.... இப்ப மணி ஆறரை ... ஆறு அம்பதுக்கு வர.... "
"ஏய்ய்ய்ய்.... பத்து.... அடச் சே !! கட் பண்ணிட்டாளா மகராசி..."
"கோன்? ராஷ்மி? தம்கி தேதி க்யா?"
"நீட் டு லீவ் மேன்.... ஸீ யு லேடர்...."
"அபே கதே.... பாக் ஜா கமீனே..."

அனூப் தலையை ஆட்டிக் கொண்டே பைக்கை ஸ்டார்ட் செய்து கிளம் பினான்.
............................
வொர்லி சிக்னல். மைக்கல் ஜேக்ஸன் நானூற்று முப்பத்தாறாவது முறையாக சந்திர நடை நடந்து பாடிக் கொண்டிருக்க, உதட்டில் சிகரெட்டுடன் ("க்விட்டிங் நெக்ஸ்ட் மன்த் டியர்") ஏசி குளிரில் ஸ்டியரிங்கில் தாளம் போட்ட படி மோசஸ். மோசஸ் பெரெரா. லேசான அலட்சியமும், தொழில் கர்வமும் இயல் பாகவே எப்போதும் கண்களில் ஒட்டிக்கொண்டிருக்கும். அனிதாவால் ("ஹனீடா...") கவரப்பட்டு, பெற்றொரிடமிருந்து அவளைக் கவர்ந்து வந்த பின் அந்த மந்தகாசமும் சேர்ந்து கொண்டதில் கொஞ்சம் பளபளப் பு கூடவே.

பச்சை விழுந்த பின்னரும் வாகன ஓட்டிகளின் பொறுமையின்மையால் தள்ளு முள்ளு. "திஸ் சிடி இஸ் ராட்டிங்.... இடியட்ஸ்....". ஸ்டியரிங்கை ஓங்கிக் குத்தியதில் கை வலித்தது. நான்கெழுத்து வார்த்தையை நாற் பது முறை சொன்னான். இன்னும் சாந்தாக்ரூஸ் போக குறைந்தது 20 நிமிடங்கள் பிடிக்கும். ப்ரீஃபிங் முடிந்து தயாராவதற்குள் மிக்லானியிடம் பேசி விட திட்டமிட்டது தப்பி விடுமோ என்ற பதட்டம் முகத்தில் லேசாக படர ஆரம் பித்தது.

ஒருவழியாக வந்து சேர்ந்து கே ப்டன்னுடனான டிஸ்கஷன் முடிந்ததும் கா ஃ பியுடன் ஒரு சிகரெட் புகைத்த பின்னரே கொஞ்சம் நிம்மதி. மிக்லானியை அழைக்க வேண்டும்.

"எஸ்.... மிஸ்டர் பெரெரா.... ஹவ் இஸ் த டே?"
"வெரி வார்ம். ஓகே. நான் சொன்னது என்னாச்சு?"
"அன்னிக்கே சொன்னேன். கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க.... இது டம் ப் பண்ற நேரமில்ல.... பாத்திருப்பீங்களே இந்த வாரம்.... 31 பாயிண்ட்ஸ் சார்.... இன்னும் 2 மாசத்துக்கு ரைடிங் நார்த்...."
"மிக்லானி.... எனக்கு பாடம் எடுக்க வேண்டாம்.... வி ஆர் ஜஸ்ட் கெட்டிங் அவுட்... காட் இட்?"
"மிஸ்டர் பெரெரா.... நீங்க இவ்வளவு அலட்சியமாக இருக்கறது ஆச்சரியமா இருக்கு... என்ன ப்ளான் சார்?"
"3 மணிக்கு டாக்கெட் எம்ப்டியா இருக்கணும்.... நோ மோர் டிலேஸ்.."
"சார்.... இது ஒரு தப்பான... "
" பை..."

ஒரு பைலட் எப்படி இவ்வளவு துல்லியமாக மார்கெட்டை படிக்கிறான் என்று மிக்லானி பல முறை வியந்திருந்தாலும் இது கொஞ்சம் ஏமாற்றமாகவும் ஆயாசமாகவும் இருந்தது. இருக்காதா பின்னே? வாங்கிய கமிஷனில் சூரத்தில் துணிக்கடையை ஆரம்பித்தாகி விட்டது. அடுத்தடுத்து மேலே போக வேண்டாமா? ம்ம்ம்ம்ம்.....
..........................
சர்னி ரோட் பெருமாள் தரிசனம் முடிந்து வெளியே வந்து கோல்கப்பா சாப்பிடும் போது கேட்டாள்.
"டேய்.... வீட்டுல சொல்லிட்ட இல்ல?"
"வ்வ்வ்...வீட்டுலயா? எங்க வீட்லயா?"
"இல்ல.... இதோ இந்த டிக்கிவாலா வீட்ல. காது மட்டும் கொஞ்சம் நீளமா இருந்தா நீ கழுதைதாண்டா..."
"நீ மட்டும் என்னவாம்? சரி.... வேண்டாம் விடு..."
"அந்த பயம் இருக்கட்டும்.... நீ ஏண்டா வீட்ல சொல்லல? என்ன ப் பாரு.... எவ்வளவு தைரியமா.... சொல்லாமயே
இருக்கேன்"
"வெரி ஃ பன்னி.... என்ன விளையாடறியா? இப்ப போய் வீட்ல சொல்லி நான் குட்டையக் கொழப்ப மாட்டேம்பா... 14ந் தேதி வேலண்டைன்ஸ் டே அன்னிக்கு பெங்களூர்ல ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கறோம்.... அல்சூர் ரெஜிஸ்டர் ஆ பிஸ்ல.... ப்ரவீன் எல்லா எற்பாடும் பண்ணி வெச்சாச்சு...."
"சரி.... ப்ளான் என்ன?"
"எப்பவும் போல கார்த்தால 9 மணிக்கு கிளம் பறோம். நேரா ஏர் போர்ட். 11 மணிக்கு ஃ ப்ளைட். ஒண்ணரைக்கு பெங்களுர். 3மணிக்கு மாங்கல்யம் தந்துனானேனா. சாப்டுட்டு 6 மணி ஃப்ளைட்ல ரிடர்ன். 9 மணிக்கு அவங்க அவங்க வீடு. 20ம் தேதி உன் அக்கா கல்யாணம் முடிஞ்சதும் நம்ம கதை.... சரியா?"
"ஒரே த்ரில்லிங்கா இருக்கு"
"இருக்கும்..... எங்க அப்பா ஆடப் போற ருத்ர தாண்டவத்துக்கு இப்பவே என் காதுல பிஜிஎம் கேக்குது...."
"அய்யய்யோ.... சொல்லாத.... இன்னிக்கு தேதி 10. இன்னும் நாலே நாள்தான்...."
........................
"மிஸ்டர் பெரெரா.... ஆல் டன். மொத்தம் 167.36 லட்சம். என்னதான் உத்தேசம்? இப்பவாவது சொல்லுங்க"
"அவ்வளவுதானா? 168.21 இருக்கணுமே..."
"கமிஷன்..."
"ஊரான் காசுலயே தொப்பை... ம்ம்ம்....... ஓகே... ஆர்டர் எடுத்துக்கோ... 25க்கு ரோல்ஸ் ராய்ஸ்.... 50 போயிங்... மீதி ஏர் பஸ் இன்டஸ்ட்ரீ..... சிம்பிள்... காட் இட்?"
"வ்வாட்? இது என்ன ஸ்ட்ராடஜி? ரெண்டும்.... போன ஆகஸ்ட்ல ஆரம்பிச்ச ப்ளீடிங்.... இன்னும் நிக்கல..."
"சொன்னத செய்...."
"சார்.... இது ஒரு தப்பான..."
" பை..."

14ந் தேதி நான் பண்ணப் போறது ஆயிரமாவது லேண்டிங்.... வித் A320. இந்த மார்க் மட்டும் முடிச்சுட்டா.... அடுத்த வாரமே இண்டியன் ஏர்லைன்ஸ் நெக்ஸ்ட் லாட் 14க்கு ஆர்டர் சைன் ஆகும். பைப்ல இருக்கற 61ம் சைன் ஆயிடும். பி அன் ட பிள்யு, ஏர் பஸ் ரெண்டு பேரோட ஆர்டர் புக்கும் நிரம்பும். போயிங் பொசிஷனை அப்பிடியே மெயின்டைன் பண்ணலாம்.... ஒரே வாரம். என் போர்ட்ஃபோலியோ அ ப்பிடியே டபில். மினிமம் 75% கேரண்டி. என்னோட 3C டார்கெட்டுக்கு மேலயே.... கடுதாசியைக் குடுத்துட்டு அடுத்த மாசமே கனடா. ஊலல்ல்லா......
...............................
14 காலை.
"டேய்... எல்லாம் சரியா நடக்குமில்ல?"
"இருபத்தி ஓராவது தடவையாக் கேக்கற..... டென்ஷன் பண்ணாத..."
"அப்ப.... உனக்கும் பயமா இருக்கா?"
"அ.... அப்பிடியெல்லாம் இல்ல.... கொஞ்சம் நெர்வஸா ஃபீல் பண்றேன்"
"முப்பது நிமிஷத்துல மூணு காபி குடிக்கும் போதே நினைச்சேன்..."
"சரி வா.... போர்டிங் கால்....."
" பிள்ளயாரப்பா....."
" பிரம்மச்சாரியக் கூப்படறியே.... அர்ஜுனனைக் கூப்பிடு. அவனுக்குதான் ஆயிரம் பொண்டாட்டி...."
" பிச்சுப்புடுவேன் பிச்சு.... ராஸ்கல்...."
.....................
"வெல்கம் அ போர்ட்.... ஐம் கே ப்டன் பெரெரா.... அலாங் வித் சிதார்த்..............."
"டேய் அனூப்... டேக் ஆஃப் ஆயிட்டா நிம்மதியா இருக்கும்...."
"சும்மா புலம்பாத.... வி ஆர் சேஃ ப்...."
"மறக்க முடியாத நாள்.... வேலண்டைன்ஸ் டே அன்னிக்கே நம்ம கல்யாணம்.... எல்லாம் நல்ல படியா முடிஞ்சா உனக்கு திருப்பதில மொட்டை..."
"என்னக் கேக்காமயேவா..... ஓகே... ஓகே.... ராஷ்மி.... இப்ப ரொம்ப ரஷ் பண்ணாத..."
................
"டைம் என்ன?"
"12:45"
"லேடீஸ் அன் ஜென்டில்மென்.... கேப்டன் பெரெரா அகைன் ஃப்ரம் ஐஏ 605.... அப்ரோச்சிங் பேங்கலோர்... ஸ்டார்டிங் த டிஸன்ட்... வாம் வெதர்.... வி ஷல் டச் டௌன் பை தர்டீன் ஓ டூ.... இன் த பே பை தர்டீன் டென். தேங்க் யூ ஆல் ஃபர் சூஸிங் இண்டியன் ஏர்லைன்ஸ்... அவர் A320 ரெடி ஃபர் தவுசண்த் லேண்டிங்...."
.................
...................
.................
பெங்களூர் விமான நிலையத்திற்கு பின்னால்..... கோல்ஃப் விளையாடிக் கொண்டிருந்த கனவான்கள் அந்த விமான அவ்வளவு தாழ்வாகப் பறப்பானேன் என்று ஆச்சரியப்பட்டுக் கொண்டிருக்கும் போதே....... அதன் பின் சக்கரங்கள் காம்பௌண்ட் சுவற்றில் இடித்து உடைத்தபடியே தரையில் இறங்கி ஓடுதளத்தை விட்டு விலகி, சக்கரங்கள் புல்வெளியில் புதைந்து.......

டவரிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தவர்கள் நிலைமையை உணர்வதற்குள்.... பெரும் தீ மூண்டது.
........................

இது நடந்தது பிப்ரவரி 14, 1990. 62 பிரயாணிகள் உயிரிழந்தனர். அனூப், ராஷ்மி உள்பட. அவர்கள் திருமணம் சொர்க்கத்திலேயே நடந்திருக்கக் கூடும். முதல் முறையாக கேப்டன் பெரெராவின் கணக்கு தவறியது. விபத்துக்கான காரணம் பைலட்டின் கவனக் குறைவு என்று தீர்மானிக்கப்பட்டது. பெரெரா இப்போது கோவாவில் கலங்குட் பகுதியில் ஒரு உல்லாச விடுதியில் மேனேஜராகவும், ஹனீடா அவள் பெற்றோருடன் இருப்பதாகக் கேள்வி.

பி.கு:
1. உண்மை சம் பவத்தை ஒட்டிய ஒரு புனைவு.
2. இன்று விமான நிலையத்தில் காத்திருக்கும் போது எழுதியது.

Wednesday, January 16, 2013

அவர்கள் காத்திருக்கிறார்கள்....

அவர்கள் காத்திருக்கிறார்கள்....
ஆள் பவர்களின் செவிகளும்
இதயங்களும் திறக்குமா என்று.
ஈரமுள்ள நெஞ்சம் கொண்ட அரசியலாரும்
உலகத்தில் உள்ளனரா என்று.
ஊனமில்லாத கொள்கைகள் இருக்காதா என்று.
எண்ணிய படியெல்லாம் இயங்கி, மக்களை
ஏமாளிகளாக்கும் காலம் கலையாதா என்று.
ஐநூறு நாட்கள்.....
ஒன்று பட்டு நின்று ஒற்றுமையோடு
ஓங்கிக் குரலெழு ப் பி, குறை தீர ஓர்
ஔடதம் கிடைக்காதா என்று.
எஃகு போன்றதோர் தலைவன் பின்னால்....
.......
.......
இடிந்தகரையில்
நம் பிக்கை இடியாமல்
அவர்கள் காத்திருக்கிறார்கள்.

அதே உலகம்

"அ ப் பா.... நான் வரைஞ்சிருக்கறதை ப் பாரேன்..."
"அட.... நல்லா இருக்கே... இது என்ன பாம் பா?"
"ஐயோ.... விரலை நீட்டாத.... கொத்திடும்..."
"இது.... தாமரை ப் பூதானே?"
"தள்ளி நில்லு ப் பா.... குளத்துக்குள்ள விழுந்திடுவ..."
....
....
குழந்தைகளின் உலகில் அனைத்தும் உயிர் ப் புடன்.

"சரி. வேற வெளயாட்டு வெளயாடலாம்....
நீதான் தென்ன மரம்... நான் மேல ஏற ப் போறேன்."
...
...
அதே உலகம். அ ப் பன் மரம்.

நம் பிக்கை நன்னாள்

நம் பிக்கை நன்னாள்

ஆசைதான்.....
தமிழர் அனைவருக்கும் உளங்கனிந்த
பொங்கல் வாழ்த்துகள் சொல்ல ஆசைதான்....
....
....
விவசாய நிலங்கள் வீட்டு மனைகள் ஆனதும்,
விவசாயம் ஒரு வாழ்வாதாரம் என்ற நிலை அருகி ப் போனதும்,
விளைக்க விரும் பு பவனுக்கு மின்சாரம் இல்லாமற் போனதும்,
கழனி நீர் கானல் நீர் ஆனதும்,
விளைந்த பயிருக்கு விலையில்லாமல் போனதும்,
தொடரும் சுய உயிர் மாய் ப் புகளும்,
ஆள்வோரின் அலட்சியங்களும்,
போராடிக் களைத்த சீவன்களும்,
வறண்ட நதிகளும்,
மழை தவறிய பருவங்களும்,
பருவந் தவறிய மழைகளும்,
சாவியாய் ப் போன விளைச்சலும்,
மூழ்கி மடிந்த பயிர்களும்
நினைவிலிருந்து அகல மறுத்தாலும்
...
....
தை மலர்ந்தால் பாதை மலரும் ; பார்வை தெளியும்
என்ற நம் பிக்கை ஊறிய தமிழரின் உணர்வுக்கு மரியாதையாய்.....
....
....
"உலகத்தார் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்"