Tuesday, September 22, 2009

தமிழ் சினிமாவில் மதவாதம், சாதீயம் !!


"உன்னைப் போல் ஒருவன்" படத்துல கமல் இந்துத்வாவை சப்போர்ட் பண்ணியிருக்காருன்னு விமர்சனங்கள் படிச்ச பிறகு அப்பிடியே உறைஞ்சு போயிட்டேன். மறுபடி பழைய நிலைக்கு உருகி வர 4 நாளாயிடுச்சு. அப்பறம் யோசிச்சுப் பாத்தபோதுதான் தெரிஞ்சுது தமிழ் படங்கள்ல மதவாதம் எப்பிடி தலை விரிச்சு தையா...தக்கா...ன்னு ஆடுதுன்னு. மறுபடி உறைஞ்சு போறதுக்குள்ள யோசிச்சதை பதிவாப் போட்டுடலாமேன்னு...

ராமராஜன் : அவர் படங்கள்ல பெரும்பாலும் ஆரஞ்சுக் கலர் சட்டை போட்டிருப்பார். சரி... கூட்டத்துல தொலைஞ்சுடாம இருக்கத்தான் போலன்னு அப்ப தோணுச்சு. இப்பத்தான் புரியுது அவர் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துக்கு அப்பவே கன்னாபின்னான்னு ஆதரவு குடுத்துருக்காருன்னு. என்னா வில்லத்தனம்?

கவுண்டமணி : முறைமாமன் படத்துல பச்சை சட்டை போட்டு பாகிஸ்தானுக்கு விலை போயிட்டாரு. அய்யய்யோ... நம்ம இண்டெலிஜன்ஸ் பீரோ என்னதான் பண்ணிக்கிட்டுருந்தாங்க?

மாளவிகா : "கருப்புத்தான் எனக்குப் புடிச்ச கலரு..." வெறும் பாட்டு இல்லய்யா.... பெரியாரோட கொள்கைகளை பரப்பி பார்ப்பன எதிர்ப்பை தூண்டியிருக்காங்க. இது கூட புரியாம நீங்க எல்லாம் 'பே...'ன்னு படம் பாத்துருக்கீங்க. உங்களையெல்லாம்.....

சத்தியராஜ் : 'தங்கம்' படத்துல விவேகானந்தர் மாதிரி கெட்டப்புல வந்தாரு. ஆஹா.. கமலுக்கப்பறம் இவனுக்குத்தாண்டா எந்த வேஷமும் கச்சிதமா பொருந்துதுன்னு சிலாகிச்சீங்க.... போங்கய்யா.... உண்மைல அது இந்துத்வாவுக்கு சப்போர்ட்டு. இது கூட புரியலைன்னா நீங்க எல்லாம் என்னதான் படம் பாத்து பாழாப் போனீங்களோ?

ரஜினிகாந்த் : எல்லாப் படத்துலயும் கழுத்துல ருத்திராட்சத்தோட வந்து 'ஆண்டவன்... ஆண்டவன்..."னு சொன்னதெல்லாம் என்னங்கறீங்க? அப்பட்டமான இந்துத்வா. பாஷா படத்துல கூட ஒரு முஸ்லீம் பேரை வெச்சிக்கிட்டு மும்பை தாதாவா இருப்பாரு. தமிழ்நாட்டுக்கு வந்ததும் 'மாணிக்கம்'னு இந்து பேர் வெச்சு நல்லவனாயிடுவாரு. நோட் பண்ணீங்களா? இன்னொரு வாட்டி டிவிடியோ, .... தொ(ல்)லைக்காட்சில 1000வது முறையாவோ பாருங்க. அப்பவாவது புரியுதான்னு பாக்கலாம்.

கமலஹாசன் : அய்யய்யோ... பேர்லயே எவ்வளவு சிக்கல் பாருங்க? "கமல்ஹாசன்"னு சமஸ்கிருதப் பேரா இல்ல 'கமால் ஹசன்'ன்னு முஸ்லீம் பேரான்னு குழப்பறாரே.... பேர்லயே இவ்வளவு பேஜார்னா... படமெல்லாம்.... நினக்கவே குலை நடுங்குது... இப்பிடி ஒரு மதவாதியா?

இதெல்லாம் போக விக்ரம், ஆர்யா, ஷாம், நயன், அஸின்.... இவுங்களுக்கெல்லாம் அவங்க உண்மையான பேரைச் சொல்ல விடாம இந்து பேரா வெச்சு நம்மளையெல்லாம் முட்டாளா ஆக்கியிருக்காங்க.

அட... இதுதான் இப்பிடின்னா... பழைய படங்கள்ல வில்லனோட அல்லக்கைக பேரெல்லாம் பீட்டர், ஜான், ஸ்டெல்லா... .ஏங்க கிறிஸ்டியன் பேரா வெச்சாங்க? எப்பவாவது யோசிச்சிருக்கீங்களா? இப்பதான் சொல்லிட்டனே... இனிமேவாவது யோசிங்க.

அய்யய்யோ... தமிழ் படங்கள்ல எல்லாரும் எல்லாக் காலத்துலயும் மதவாதத்தையும் சாதீயத்தையும் சப்போர்ட் பண்ணி இருக்காங்களே... பதிவர்களாகிய நாம போட்டு கிழி கிழின்னு கிழிக்க வேண்டாம்? இன்னும் எவ்வளவோ சொல்லாங்க... அதுக்குள்ள நான் மறுபடியும் உறைஞ்................

Tuesday, September 15, 2009

முத்தமிழ் - எந்தத் திக்கில்?

உலகம் யாவையும் தாம்உள வாக்கலும்
நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார் - அவர்
தலைவர், அன்னவர்க்கே சரண் நாங்களே.
- கவி கம்பன்

எதையோ யோசிச்சுக்கிட்டிருக்கும்போது திடீர்னு இந்த பாட்டு ஞாபகம் வந்தது. (இது பாட்டா, செய்யுளா?) இது ஞாபகம் வந்ததும் கூடவே புலவர் கீரனோட ஞாபகமும் வந்தது.

உடுமலை அரசினர் மேல் நிலைப்பள்ளியில படிக்கும்போது, தி.சு.செந்தில் ஆறுமுகம்னு ஒரு ஆசிரியர் இருந்தாரு. இவர் திரு. சுந்தர ஓதுவா மூர்த்தி சுவாமிகளோட மகன். வருஷத்துக்கு ஒருமுறை இலக்கிய மன்றம் சார்புல "முத்தமிழ் விழா"ன்னு 9 நாளைக்கு நடத்துவாரு. இயல், இசை, நாடகம் ஒண்ணொண்ணுக்கும் 3 நாள். கூடவே வாரியார் சுவாமிகள், புலவர் கீரன், திருக்குறளார் முனுசாமி இவுங்களோட சொற்பொழிவுகளும் தினமும் இருக்கும். முனுசாமி அய்யாவோட சொல்லாடலை விட அவருடைய குரல் வளமும், ஏற்ற இறக்கங்களோட பேசுறதும் கேக்க ரொம்ப சுகமா இருக்கும். வாரியார் சுவாமிகள் சொற்பொழிவுன்னா மொதல் பத்து வரிசை சின்னப் பசங்களுக்குதான். கதை சொல்லிக்கிட்டே வரும்போது திடீர்னு எதாவது கேள்வி கேட்டு டக்குனு பதில் சொல்ற பையனுக்கோ பொண்ணுக்கோ கந்தரனுபூதி, கந்தரலங்காரம்னு ஒரு சின்ன புத்தகத்தை பரிசாக் குடுப்பாரு. ரொம்ப சுலபமான கேள்விகள்தான். சின்னப் பசங்க கிட்ட ஒரு ஈடுபாடு உண்டாக்கணும்கற நோக்கத்துல 3 மணி நேர சொற்பொழிவுக்குள்ள ஒரு 40 பரிசுகளாவது பட்டுவாடா ஆயிரும். நடு நடுவுல துணுக்குகள் சொல்றதும், அதுக்கு அவுரே குலுங்கிக் குலுங்கிச் சிரிக்கரதும் தனி அழகு. அவரோட "கைத்தல நிறைகனி....." உலகப் புகழ். தமிழ் மிமிக்ரி கலைஞர்கள் எல்லாம் முதல்ல கத்துகிற குரல் இவரோடதாத்தான் இருக்கும்.

அப்பறம் புலவர் கீரன். தன்னுடைய ஊனத்தைக் கூட பொருட்படுத்தாம 3 மணி நேரம் உக்காந்த இடத்துல கணீர்னு "உலகம் யாவையும்..." சொல்லி ராமாயணமோ, வில்லிபாரதமோ சொன்னார்னா, அந்தந்த பாத்திரங்களே நம்ம முன்னாடி நின்னு பேசர மாதிரி இருக்கும். திரும்ப திரும்ப படித்த, கேட்ட கதைகளை ஒவ்வொரு முறையும் வித்தியாசமான செய்திகளோடயும், சிந்தனைகளோடயும் கேக்கறவங்களை கட்டிப் போடற மாதிரி சொல்றது புலவர் கீரனுக்கு இணை அவர்தான். நடுவுல சொல்ற கிச்சு கிச்சு மூட்டற குட்டிக் கதைகளும் சுவாரசியமா இருக்கும்.



எல்லாத்துக்கும் மகுடம் வெச்சது மாதிரி இருப்பது R.S.மனோகரின் நாடகங்கள். எங்க பள்ளிக்குள்ள இருக்கற கலா மண்டபத்திலும், GVG கலையரங்கத்திலும் மனோகர் நாடகங்களை பார்ப்பதே ஒரு சுகானுபவம். "இலங்கேஸ்வரன்" நாடகத்தை முதல் முதல்ல "ட்ராமாஸ்கோப்" முறையில கலா மண்டபம் மாதிரியான சுமாரான இடத்துலயே அதை அட்டகாசமா நடத்தி, வழக்கத்துக்கு மாறா பள்ளியிலயே தொடர்ந்து 10 நாள் நடத்தி அசத்தியவர் அவர்.

இப்ப இதெல்லாம் எதுக்குச் சொல்றேன்னா, 90களுக்குப் பிறகு இந்த மாதிரி நிகழ்ச்சிகள் ரொம்பவே குறைஞ்சுக்கிட்டே வந்து, இப்பல்லாம் நடக்கறதே இல்லன்னு கேள்விப்பட்டபோது ரொம்ப சங்கடமா இருந்தது. அதவிட சங்கடம் இதெல்லாம் நேரத்தை வீணாக்கற விஷயம்ங்கற மாதிரி பேசினது.

செந்தில் ஆறுமுகம் மாதிரியான ஆசிரியர்களும் இப்ப இல்ல. இதையெல்லாம் ரசிக்கறதுக்கு மக்களும் இல்ல. இப்ப மக்கள் பாத்து ரசிக்கற ஒரே மேடை 21 இன்ச் டி.வி பொட்டிதான். காலைல எழுந்ததிலிருந்து ராத்திரி தூங்கப் போகற வரைக்கும் மெகாத்தொடர்கள்ங்கற பேர்ல மக்களை மக்கிப் போக வெக்கற அரைவேக்காடு நிகழ்ச்சிகள்தான். எங்க பகல்ல பாக்காம விட்டுப் போச்சுன்ன என்ன பண்றதுன்னு ராத்திரி ஒரு ரௌண்ட் மொதல்லேருந்து திரும்பப் போட்டு வேற படுத்தறாங்க. இதயெல்லாம் பாக்க சகிக்காதுன்னுதான் மேல சொன்னவங்கள்லாம் மேலயே போய் சேந்துட்டாங்க. அங்க இருக்கறவங்க பாக்கியசாலிக.

மங்காத தமிழ்னு எட்டுத் திக்கும் கொட்டச் சொன்னான் ஒரு போக்கத்த கவி. நாம எந்தத் திக்குக்கும் போல. நம்ம வீட்டு சாக்கடையிலயே கொட்டீட்டு, பீட்சா தருவிச்சு சாப்டுட்டு, மினரல் வாட்டர் குடிச்சுட்டு குப்பறப் படுத்து குறட்டை விட்டாச்சு. அட போங்கப்பா.....

நேத்து உடுமலைல இருக்கற நண்பரோட பேசிக்கிடிருக்கும்போது இந்தப் பேச்சு மறுபடி வந்தது. ஞாபகங்கள் தீ மூட்டி மறுபடி ஞாபகங்கள் நீர் ஊத்தறதுக்குள்ள ஒரு மீள் பதிவு....

Sunday, September 6, 2009

Inglourious Basterds (2009) - சினிமா விமர்சனம்



க்வென்டின் டரென்டினோவோட இந்தப் படத்தை ஜெனீவால போன மாசம் ரிலீஸான அன்னிக்கே ராத்திரி ஷோவுக்கு போனோம். நாவல் படிக்கிற மாதிரி 5 அத்தியாயங்கள். கொஞ்சம் உண்மை;கொஞ்சம் கற்பனை கலந்த கதை.

இரண்டாம் உலகப் போர் காலத்துல நாசிக்களால் ஆக்கிரமிக்கப் பட்ட ஃப்ரான்ஸ் பகுதில இருக்கற மிச்ச மீதி யூதர்களை தேடிக் கண்டுபிடிச்சு 'மேல' அனுப்பற 'யூத வேட்டைக்காரன்' மேஜர் ஹனஸ் லாண்டா (க்ரிஸ்டஃப் வால்ட்ஸ்). படம் ஆரம்பமே டெரரா இருக்கு. யூதர்கள் ஒளிஞ்சுருக்கற வீட்டுக்குப் போய் பேசிப் பேசியே பயத்தை உண்டாக்கி ஒரு குடும்பத்தையே நாசமாக்கறான். ஒரே ஒரு பொண்ணு 'ஷோசானா' மட்டும் தப்பிச்சு போக விட்டுடறாங்க.

அமெரிக்கப் படையோட ஒரு சின்ன யூதர்கள் பிரிவு (பாஸ்டர்ட்ஸ்) நாசிக்களை வேட்டையாட நார்மண்டிக்கு ரகசியமா வராங்க. ஒரே நோக்கம்... கண்ல படற நாசிக்களையெல்லாம் கொன்னு தலையை (தலையவே இல்லை... ஸ்கால்ப் மட்டும்) சீவணும். குறைஞ்சது 100 பேரை சீவணும். படைத் தலைவன் ஆல்டோ (ப்ராட் பிட்).

முதல் ரீல்ல தப்பிச்சுப் போன பொண்ணு அவங்க அத்தையோட சினிமா தியேட்டரை நிர்வாகம் பண்றா. யதேச்சையா நாசி கொ.ப.செ ஜோசஃப் கோயபல்ஸ் (நம்ம கருணாநிதி சொல்வாரே... அதே ஆளுதான்) எடுத்த ஒரு படத்தோட பிரிவ்யூக்கு இந்த சினிமா ஹாலை தேர்ந்தெடுக்கறாங்க. எல்லா மேல்நிலை நாசித் தலைவர்களும் - ஹிட்லர் உள்பட - எல்லாரும் வருவாங்கன்னு தெரிஞ்சு மொத்தமா பழிவாங்க திட்டம் போடறா ஷோசானா.

இந்த சினிமா ப்ரிவ்யூ விஷயம் தெரிஞ்சு 'ஆபரேஷன் கினோ'ன்னு ஒண்ணு ப்ளான் பண்ணி நாசிக்களை தீத்துக்கட்ட சைடுல ஒரு கும்பல் திட்டம் போட்டு அதுல பாஸ்டர்ட்ஸ் படையும் கூட்டு. உதவிக்கு ஒரு நடிகை வேற.

இப்பிடி ரெண்டு ப்ளான்க கொஞ்சம் கொஞ்சமா நடந்தேறி வர, கடைசில என்னதான் ஆச்சு? ஹிட்லரைக் கொன்னாங்களா? ப்ளான் ஒர்க் அவுட் ஆச்சா? நான் சொல்லி ஸ்பாயில் பண்ண விரும்பல. படத்தையே பார்க்கறது பெட்டர்.

க்வெண்டின் டரென்டினோவோட பெஸ்ட் படம்னு சொல்லலாம். வழக்கம் போல அமர்த்தலான ஃப்ளோ. டயலாக் அதிகமா இருந்தாலும் அதுதான் படத்தோட ஹைலைட். அதுலயும் ப்ராட் பிட்டோட அலட்சியமான அமெரிக்கன் ஆக்ஸெண்ட் கலக்கல்னா, க்ரிஸ்டஃப் வால்ட்ஸோட பேச்சு, பாடி லேங்குவேஜும் கலக்கலோ கலக்கல். பெஸ்ட் ஆக்டர் அவார்ட் வேற. இவர் நடிப்பைப் பாக்கறதுக்காகவே இன்னொரு தடவை போலாம்.

காமெடி கலந்த ஆக்சன் படம்னாலும் (ஹிட்லரைக்கூட காமெடி பீஸ் ஆக்கிட்டாங்க) படத்துல கொஞ்சம் வன்முறை அதிகம். அதுவும் பேஸ்பால் பேட்டால அடிச்சே கொல்றது, நெத்தில கத்தியால அழுத்தமா ஸ்வஸ்திக் போடறது, தொடைக்கு நடுவுல பிஸ்டலை வெச்சு டுமீல், டுமீல்.... இதெல்லாம் சிலரை கொஞ்சம் நெளிய வெக்கலாம். டயலாக் ஃப்ரென்ச், ஜெர்மன், இங்கிலீஷ்னு மாறி மாறி இருக்கு. சப்டைட்டிலோட பாக்கறது பெட்டர்.

மொத்தத்துல கலக்கலான காமெடி கலந்த cold post-WW2 adventure film.

Friday, September 4, 2009

வினையாகும்....


அடித்துத் துரத்தினேன்
பிடித்துத் தள்ளினேன்

திட்டித் தீர்த்தேன்
மிரட்டிப் பார்த்தேன்

கெஞ்சினேன்
கொஞ்சினேன்

முறைத்தேன்
அலுத்துக் கொண்டேன்

....
....

'என்ன வேண்டும் உங்களுக்கு?'
'ஏன் விலக மறுக்கிறீர்கள்?'

....
....

என் முன்பு நின்றிருந்த
பல நூறு வினாக்களுடன்
இன்னும் இரண்டு சேர்ந்து கொண்டன...

....
....

சலிப்பாய் இருக்கிறது...

'என்னதான் சொல்கிறாய்?' என்று கேட்பவர்களுக்கு:
தயவு செய்து வேண்டாம்...
எண்ணிக்கையில் இன்னொன்றைக் கூட்டாதீர் !!


ஆதி.. நீங்க என்னதான் சொன்னாலும் கவிதையை ஒரு கை பாக்காம விடறதில்லை. அதுக்காச்சு...எனக்காச்சு... (மத்தவங்களுக்கு என்ன ஆனாலும் கவலையில்லை)

கவிதை எமக்குத் தொழில்...
(அய்யோ.. கைய முறுக்காதீங்க... வலிக்குது)
என் கடன் கவிதை எழுதிக் கிடப்பதே..(அம்மா... வெரல ஒடிக்கிறீங்களே)
ஒங்க கடன் படிச்சு பின்னூட்டம் போடுவதே (அய்யய்ய.. லேப்டாப்ப ஜன்னல் வழியே வீசிட்டீங்களே.. இனிமே எப்பிடி பதிவு போடப் போறீங்க?)
ஆனாலும் உங்களுக்கு கோவம் ஜாஸ்திதான்...கண்ட்ரோல்..

Thursday, September 3, 2009

தலையில் தட்டியது யார்?

சனிக்கிழமை காலை. அவசரமாக ஒரு நண்பரை காணக் கிளம்பிக்கொண்டிருந்தேன். எங்கள் வீட்டில் கிச்சனுக்கும் ஹாலுக்கும் இடையே ஒரு குட்டி அறை உள்ளது (டைனிங் ஹாலெல்லாம் இல்லை. சும்மா ஒரு அறை, அவ்வளவுதான்). அதில்தான் ஃபிரிட்ஜ், வாஷிங்மெஷின் வகையறாக்கள் வைத்திருக்கிறோம். அந்த அறையில் வலப்புறம்தான் பாத்ரூம் உள்ளது.

இங்கே ஹாலில் லதா மற்றும் உஷாவின் உணவு நேர போராட்டம் நடந்துகொண்டிருந்தது. சாப்பாடு மற்றும் உணவுப்பாத்திரங்களுக்கு நடுவே லதாவை வைத்துவிட்டு கிச்சனுக்குள் நுழைந்து பூரிக்கட்டையை (கொஞ்சம் பெரிது, ஏனெனில்.... ஹிஹி... இதெல்லாம் சொல்லணுமா பாஸ்..) எடுத்துத் தருவது எப்போதும் என்னுடைய பணியாகையால் என்னையே எடுத்துத வருமாறு பணித்தார். என் அவசரத்தில் 'என்ன மறுபடியுமா? வேணாம்.... அழுதுருவேன்..'' என்று பணிவாகச் சொல்லிவிட்டு என் வேலையைப் பார்க்கத் துவங்கினேன். வலிய வந்த சண்டையை விட அவருக்கும் மனமில்லாததால் அவரே எழுந்து கிச்சனுக்குள் நுழைந்து பூரிக்கட்டையை எடுக்க விரைந்தார். அதற்குள் எங்கோ லதாவை விட்டு விட்டு கிளம்பிவிட்டார் என நினைத்தாளோ என்னவோ லதா அவரைத் தடுக்கும் வண்ணம் 'யீயீயீயீய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்' என அழத்துவங்கியிருந்தாள். பூரிக்கட்டையை எடுத்துக்கொண்டு 'ஏம்ல உயில வாங்குத, இங்கனதான நிக்கேன்' என்று கூறிக்கொண்டே விருட்டென திரும்பினார். நான் அந்த நேரத்தில் சரியாக பாத்ரூமுக்குள் ஒளிந்து கொள்ள எண்ணி அந்த அறைக்குள் நுழைய எத்தனித்தேன். ப்ச்... கொஞ்சம் டைமிங் மிஸ் ஆயிடுச்சு... அவ்வளவுதான், மிக பலமாக பிடித்திருந்தாரோ என்னவோ பூரிக்கட்டை என் தலையில் கொஞ்சம் அழுத்தமாகவே முத்தமிட்டது. ஹைய்ய்ய்யோ. அறை முழுதும் அலறல்....

அடுத்த விநாடியே உச்சஸ்தாயியில் கத்தினேன், "ஏன் இப்பிடி ஓங்கி அடிச்சிங்க?"

"அய்யய்யோ, பச்சைப்பொய்யி... லேசாத்தானே தட்டினேன்..." என்று அவள் பதிலுக்கு அலறினாள். அதற்குள் ஹாலில் லதா அவளால் முடிந்த சேவையாய் ஊளையிட்டுக்கொண்டே வாட்டர் ஜக்கை கொட்டிவிட்டிருந்தான். அந்த எரிச்சல், நானே எடுத்துத்தராத கோபம், அதிலும் ஓடி ஒளிய எத்தனித்தது, லீவு நாளில் நான் மட்டும் தப்பித்து வெளியே கிளம்பும் கோபம் என அனைத்தும் சேர்ந்து பூரிக்கட்டை என் தலையின் மீது விழுவது புரிந்தாலும் இதெல்லாம் அரசியலில் சகஜம். அடுத்தடுத்த வசனங்களிலேயே இருவருக்கும் சிரிப்பு வந்துவிட்டது.

"ஏங்க, நான் பூரிக்கட்டையால லேசாத் தட்டினதுக்கே இப்படி பழி போடுறியளே, நான் மட்டும் அந்த ஒலக்கையால தட்டியிருந்தேன்னா என்ன சொல்லியிருப்பியளோ?" என்றாள். அதற்கு அப்புறமும் அவர் சொன்னதைக் கேட்டுவிட்டுதான் பதில் பேச இயலாமல் நான் தலை வீக்கம் வெளியில் தெரியாமல் மறைக்கும் வழியைப் பார்க்க ஆரம்பித்தேன்.

முறைக்காமலே சொன்னார், "நான் பூரிக்கட்டையோட வர்றது தெரிஞ்சாவே எப்பவும் போல நீங்களாவே வந்து தலையைக் குனிஞ்சு வாங்கிக்கிட்டுப் போவ வேண்டியதுதான? இன்னிக்கு ஏன் ஓடி ஒளியப் பாத்திக?"


என்னவோ போங்க..... ஆதியோட இந்தப் பதிவுக்கும் இதுக்கும் எதாவது தொடர்பு இருந்தாலும் இருக்கலாம்.... அது புனைவாகவும் இது 'உள்ளது உள்ளபடி'யாகவும் இருக்கலாம்.... நமக்கு என்ன தெரியும்? அவரெல்லாம் அப்பளத்தை உடைச்சே சாப்பிடறவர். இட்லியை பிட்டு சாப்பிடறவர். தண்ணியை அப்பிடியே குடிக்கறவர்.