Saturday, May 23, 2009

முன்னும்....பின்னும்

முன்னும்.....

உதிர்ந்த இலைகள்
உதிக்கத் தயங்கும் சூரியன்

வண்டு குடைந்த அழுகிய மாம்பழம்
ஆணி இல்லாத பம்பரம்

பஞ்சரான சைக்கிள்
குஷ்டம் பீடித்த கை

சாணை பிடிக்காத அருவாள்
ஒளியற்ற நட்சத்திரம்

தோல் கிழிந்த முரசு
பேட்டரி இல்லாத டார்ச் லைட்

பூர்வாசிரமத்தில் ஓட்டைப் பிரித்தவர்கள்
இன்று(ம்) வோட்டைப் பிரிக்கிறார்கள்

முன்னேற்றம் முள்முனையளவும் இல்லை
பிரச்சனைகள் மட்டும் நிரந்தரம்.

அதனால் என்ன?
2 வருடங்களுக்கு ஒருமுறையாவது
ஏதாவது ஒரு தேர்தலை சாக்கிட்டு
சிவகாசியில் அச்சடித்த காந்தி படம் போட்ட தாள்களும்
காக்கா பிரியாணியும் கிடைக்கிறதே !!

தமிழகம் ஒளிர்கிறது !!

...... பின்னும்

பிச்சையெடுக்கும் கரங்கள்
பேப்பர் பொறுக்கும் சிறுவர்கள்

தீக்குளிக்கும் இளைஞர்கள்
தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகள்

நலிவடையும் நெசவாளிகள்
கும்பி குறுகிய குடிசைத்தொழிலாளிகள்

குடிநீரில்லா கிராமங்கள்
பள்ளிக்கூடமில்லாத பட்டிதொட்டிகள்

பேருந்து போகாத பேரூராட்சிகள்
மருத்துவ வசதியற்ற மலைவாழ் மக்கள்

முன்னேற்றம் முள்முனையளவும் இல்லை
பிரச்சனைகள் மட்டும் நிரந்தரம்.

அதனால் என்ன?
மகனுக்கும் மகளுக்கும் மருமகனுக்கும் மைத்துனனுக்கும்
மத்திய அரசை ஆட்டிவைத்து
மந்திரி பதவியைக் கேட்டுப் பெற
எங்களால் முடிகிறதே !!

தமிழகம் ஒளிர்கிறது !!

Monday, May 18, 2009

"கடவுள் இருக்கின்றது"



எச்சரிக்கை : கொஞ்சம் நீளமான பதிவு. ரொம்ப இல்லாட்டாலும் கொஞ்சம் டெக்னிகலான விஷயங்கள் உண்டு. ஆற அமரப் படிங்க.

தலைப்பே ஒருமாதிரியா இருக்கா? இருக்கட்டும்... இருக்கட்டும்... கடவுள்னு ஒருத்தர் இருக்காரா இல்லையா? கடவுள் அஃறிணையா உயர்திணையா? இல்லை உயர்ந்ததிணையா? ஆத்திகனோ நாத்திகனோ, கல்லுக்குள்ள தேரை மாதிரி மனசோட அடி ஆழத்துல இந்தக் கேள்வி நிச்சயம் இருக்கும். ஆன்மீக மார்க்கத்துல கடவுளை "விளக்க" அநேக வழிகள் இருக்கு. ஆனா பொதுவா எல்லா வழிகளுமே intangible or subtle or vague. Concrete-ஆ இதுதான் இதுன்னு எளிமையாச் சொல்ல முடியல - அல்லது சொல்வது convincing-ஆ இல்லை. ஆனா விஞ்ஞானத்துக்கு இந்த அசௌகரியமே கிடையாது. எதையாவது செஞ்சு நிரூபிக்க முடிஞ்சா சரி ; இல்லேன்னா ஒத்துக்கவே ஒத்துக்காது. பூமி தட்டையானது, பூமிதான் மத்தியில; மத்த கிரகங்கள் அதைச் சுத்தி வருதுங்கறதுல இருந்து பலப் பல மதம் சார்ந்த, கடவுள் சார்ந்த நம்பிக்கைகளை தகர்த்து 'இதுதான் உண்மை'ன்னு அறுதியிட்டுச் சொன்னது விஞ்ஞானம். ஆனா விஞ்ஞானமும் மெய்ஞானமும் ஒண்ணுக்கொண்ணு எதிர்ப்பு மாதிரி தோணினாலும், உண்மைல ரெண்டுமே complimenting each other. இருக்கட்டுமே... எனக்கு என்ன ஆச்சு? எதுக்கு இந்த பீடிகை எல்லாம்? சொல்றேன்.

நேற்று முன் தினம் இன்னொரு ஓய்வுக்கான வாய்ப்பு கிடைச்சதுனால சட்டுனு "செர்ன்" போகணும்னு முடிவு பண்ணி கிளம்பிட்டேன். என்னோட ட்ரீம் லிஸ்ட்ல இருந்த இடம். CERN - European Centre for Nuclear Reasearch. இப்பதான் கொஞ்ச நாளா பார்வையாளர்களுக்கு திறந்துருக்காங்க. இது 20க்கும் மேற்பட்ட உலக நாடுகளோட நிதி உதவியோட ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம். போன செப்டம்பர்ல பேப்பர்ல படிச்சுருக்கலாம்..."ஏதோ டெஸ்ட் பண்றாங்களாம்... கொஞ்சம் ஏமாந்தாலும் உலகமே அழிஞ்சுரும்னு சொல்றாங்கடா மாப்ள... அடுத்த மாசம் கல்யாணத்த வெச்சுக்கிட்டு இதெல்லாம் நமக்குத் தேவையா?"னு எங்கயாவது டயலாக் கேட்டிருக்கலாம்... அந்த முக்கியமான சோதனையை நடத்தியது CERN. இந்த பரிசோதனைக்காக 5 இடங்கள்ல சோதனைக்கூடங்கள் இருக்கு. அதுல நாலு ஃப்ரான்சுக்குள்ள. ஒண்ணு ஜெனீவாவுக்கு பக்கத்துல ஸ்விஸ்-ஃப்ரான்ஸ் பார்டர்ல இருக்கற "மெய்ரின்"ங்கற கிராமத்துல இருக்கு. அங்கதான் நான் போனேன். ஜெனீவால இருந்து டவுன் பஸ் போகுது. 25 நிமிஷத்துல போயிடலாம்.


அப்பிடி இங்க என்னதான் சோதனை பண்றாங்க? அதுக்கு முன்னால கொஞ்சம் சயன்ஸ் ரிவைஸ் பண்ண வேண்டியிருக்கும். எல்லாப் பொருட்களும் அணுக்களால் ஆனது, அணுவோட ந்யூக்ளியஸ்க்கு உள்ள புரோட்டான்ஸ் இருக்கு, எலக்ட்ரான்ஸ் அதை சுத்தி வருதுங்கறது தெரியும். அப்பறம் புரோட்டான்களுக்கு உள்ள க்வார்க், எலக்ட்ரானுக்குள்ள லெப்டான்.... இதெல்லாம் இருக்குங்கறதும் தெரியும். ஆனா அதுக்கும் நுணுக்கமா ஒரு துகள் இருக்கலாம்... அதுதான் GOD Particle னு Higgs சொல்ற வரைக்கும் தெரியாது. அவர் சொன்னதால அதுக்கு Higgs Boson னு ஒரு பேரும் உண்டு. அதைத் தேடித்தான் இங்க சோதனை. பிரபஞ்சம் தோன்றினபோது அது இருந்துருக்கணும். பிரபஞ்சம் தோன்றிய (Big Bang) 10^-43 செகண்ட்க்கு என்ன நடந்திருக்கலாமோ அதை மறுபடி நிகழ வைத்து அந்த பரம ரகசியத்தை தெரிஞ்சுக்க கடந்த 40 வருஷமா இந்த திட்டம் நடக்குது. அந்த ரகசியத்தைத் தெரிஞ்சுக்கற வரைக்கும் அறிவியலாளர்களுக்கு தூக்கமே வராது.

சரி.... அதை எப்பிடித் தேடறது? அணுவே கண்ணுக்குத் தெரியாத ஒண்ணு. அதையும் விட நுணுக்கமான ஒண்ணை எப்பிடி...? அங்கதான் நம்ம ஐன்ஸ்டீன் சொன்னது உதவிக்கு வரும். E=mc2. ஆற்றல்ங்கறது எந்த நிலைலயும் இருக்கு. ஆற்றலோட condensed form நிறை (mass). நிலையா இருக்கும்போது ஈர்ப்பு விசையைப் பொறுத்து ஒரு நில ஆற்றலும் (potential) இயங்கும்போது இயக்க ஆற்றலும் (kinetic) வெளிப்படுது. அப்ப ஒளியோட வேகத்துல ஒரு துகளோட ஆற்றல் எவ்வளவு இருக்கும்? நம்மால நினைச்சே பாக்க முடியாது. அந்த மாதிரி ரெண்டு எனர்ஜியை மோத விட்டா...? அப்பிடி ஒரு மோதல்ல... ஒரு ஆற்றல் மிக்க மூலத்துல இருந்துதான் பிரபஞ்சம் உண்டாச்சுங்கற சித்தாந்தத்தின் அடிப்படைல இந்த சோதனை. அப்பிடி ஒரு மோதல் நிகழும்போது இந்த GOD Particle வெளிப்படலாம். எல்லாத்துக்கும்.. எல்ல்ல்ல்ல்லாத்துக்கும்... மூல சக்தியான அந்த சக்தி என்னதுன்னு ஒருவேளை விடை கிடைக்கலாம்ங்கற முயற்சிதான் இது.

எப்பிடி இந்த மோதலை நிகழ்த்தறது? ரெண்டு புரோட்டன்களை ஒளியோட வேகத்துல ஒண்ணோட ஒண்ணு மோத வைக்கலாம். ஆனா ஒளி வேகத்துல புரோட்டான் துகளை முடுக்கணும்னா நேர்கோட்டுப் பாதைல முடியாது. அவ்வளவு தொலைவுக்கு பூமில சோதனைக்கூடம் வைக்க முடியாது. மாற்று என்னன்னா, அதை ஒரு வட்டப் பாதைல முடுக்கறது. இதுக்காக பூமிக்கு 100 மீட்டர் கீழ 27 கிமீ நீளத்துக்கு ஒரு வட்டப் பாதை அமைச்சுருக்காங்க. பேரு Large Hadron Collider (LHC). அந்தப் பாதைல 5 இடத்துல சோதனைக் கூடங்கள். ஒரு துகள் முடுக்கி(Particle Accelerator) மூலமா சில பில்லியன் புரொட்டன்களை எதிரெதிர் பாதைகள்ல கிட்டத்தட்ட ஒளி வேகத்துக்கு (99.99%) முடுக்கி இந்த 27 கிமீ பாதைல அங்கங்க அதுக மோதறதுக்கு வசதியா பாதைகளை குறுக்க ஓடவெச்சு..... எங்கயாவது மோதினா அந்த நிகழ்வுகளை துல்லியமா சேகரிச்சு அனுப்ப சூப்பர் கம்ப்யூட்டர்க... எல்லாமே அதிவேக கடத்திகள். Super conductors.

ப்ரோட்டான்களை முடுக்கி அதுகளை deflect பண்ணி வட்டப் பாதைல ஓட வைக்க அதிவேகக்கடத்தி இருமுனை மின்காந்தங்கள் (super conducting dipole electromagnets), புரோட்டான்களை நெருக்கமா pack பண்ணி மோதலுக்கான சாத்தியங்களை அதிகரிக்கரதுக்கு நால்முனை மின்காந்தங்கள் (quadrupole). (இந்த Dipole / Quadrupole பத்தியே ஒரு நாள் முழுக்க பேசலாம்) இந்த மின்காந்தங்கள் எல்லாமே -271Cலதான் முழுத் திறன்ல வேலை செய்ய முடியும். எல்லாமே superconductingனால ஒரு தனி cooling system. திரவ நைட்ரஜன், திரவ ஹீலியம் - மில்லியன் லிட்டர்களுக்கு மேல - இதெல்லாம் பயன்படுத்தி குளிர்விக்கறாங்க. எல்லாமே extreme technologies.

மோதும்போது சிதறல்ல வேறு சில துகள்களும் - GOD particle உள்பட - கிடைக்கலாம். அதைக் கண்டுபுடிச்சு சேகரிக்க Particle Detectors இருக்கு. மேலும் இந்த பரிசோதனையின்போது TB கணக்குல சேகரிக்கற டேடாவை அனுப்ப, சேகரிக்க, ஆய்வு பண்ணன்னு பல நூதனமான தொழில்நுட்பங்கள் (grid computing) கூட இந்த ஆராய்ச்சியோட பக்க விளவுகளாக உருவாகியிருக்கு. இன்னும் சில வருடங்கள்ல அதெல்லாம் day-to-day computing முறைல வந்துடலாம். இப்பவே இந்த தொழில் நுட்பங்களை மருத்துவத் துறைல பயன்படுத்த ஆரம்பிச்சுட்டாங்க.

போன செப்டம்பர் மாசம் இதை டெஸ்ட் பண்ணும்போது எதிர்பாராத ஒரு சின்ன மின் கசிவுல திரவ ஹீலியம் சூடாகி வாயுவாகி, அழுத்தம் அதிகமாகி 50 மின்காந்தங்களுக்கு மேல சேதமாயிடுச்சு. எல்லாம் சரியாகி மறுபடி அடுத்த டெஸ்டுக்கு இன்னும் வருஷங்கள் ஆகலாம். ஆனால் விஞ்ஞானம் "கடவுளை"த் தேடும் வேலையத் தொடர்ந்து செய்யும். விஞ்ஞானமும் மெய்ஞானமும் குவியற இடம் ரொம்ப தொலைவுல இல்லைன்னு தோணுது. மெய்ஞானத்துல கடவுளை "உணர" வைக்க முடியும்னா, அதை "காண" வைக்கறது விஞ்ஞானத்துனால முடியலாம். முடிக்கும். இப்பொதைக்கு இந்த Higgs Boson தான் அதுன்னு நாம தேடிக்கிட்டுருக்கோம். அதுவாகவும் இருக்கலாம் (அல்லது அதை விட சூட்சுமமான ஒன்றாகவும் இருக்கலாம்) அந்த ஆதார சக்தியை, மூலப் பொருளைத்தான் நம்ம வேதங்கள் எல்லாம் பரம்பொருள், மூலாதாரம், பரமார்த்த சத்யம், சத்தாமாத்ரம், சத்து அப்பிடின்னெல்லாம் பல பேர்கள்ல சொல்லுது. பார்க்கலாம்......

சரி... ரொம்ப நீளமாப் போச்சு.... ரொம்பவே மேலோட்டமா சொல்லியிருக்கேன். ஆழமா சொன்னா அறிவியல் பாடம் எடுக்கற மாதிரி ஆயிடும். சொல்ல நான் ரெடிதான்.... (கடைக்கு வர நாலு கஸ்டமரும் ஒடிட்டா?? :)))) இன்னும் சில interesting விஷயங்கள் - பொருள் ; அபொருள் (matter ; anti-matter) - சொல்ல வேண்டியிருக்கு... அடுத்த இடுகைல....
டிஸ்கி : இதைப் படிச்ச பிறகு, நான் ஆத்திகனா நாத்திகனா, அறிவியலாளனா ஆன்மீகவாதியான்னு கேட்டா.... முதல் பத்தில சொன்ன மாதிரி ரெண்டுமே complimenting each other.



















Thursday, May 14, 2009

ஒலிம்பிக்ஸ் தலைநகரம் "லூசான்"

பொதுவாவே நாம எங்கியோ தூரத்துல இருக்கற இடங்களுக்கு எல்லாம் லீவு போட்டு ப்ளான் பண்ணி போய் சுத்தினாலும், நம்ம ஊருக்குப் பக்கத்துல் இருக்கற இடங்களுக்கு போக மாட்டோம். "இங்கதானே இருக்கு... எப்ப வேணாப் போகலாம்.. எங்க போயிடப் போகுது..."ங்கற லேசான அலட்சியம்தான் காரணம். அது மாதிரிதான்.. பல முறை ஜெனீவாவுக்கு வந்தாலும் பக்கத்துல - ட்ரெயின்ல 1/2 மணி நேரத்துல - இருக்கற "லூசான்" (Lausanne) க்கு போக இப்பத்தான் அமைஞ்சுது.

இரவு வேலை முடிச்சுட்டு அபார்ட்மெண்டுக்கு வந்தா தூக்கம் வரலை. சட்டுனு யோசனை. "அட... இத்தனை நாள் மிஸ் பண்ணிட்டமே... இன்னிக்குப் போயிட்டு வந்துடலாம்"னு ஒரு 10 மணி சுமாருக்கு கிளம்பினேன். ஜெனீவா ஸ்விஸ்ஸோட தென்மேற்கு முனைல இருக்கறதால இங்கிருந்து போற 99% ட்ரெயின்க லூசான் போய்த்தான் போயாகணும். 11 மணிக்கெல்லாம் போய் சேர்ந்துட்டேன். போகறதுக்கு முன்னாலயே எங்கெங்க போகணும்னு முடிவு பண்ணி முதல்ல ஒலிம்பிக்ஸ் ம்யூசியம்னு லிஸ்ட்ல வெச்சேன். ஸ்டேஷன்ல இருந்து வெளில வந்து மெட்ரொ ட்ரெயின் புடிச்சு ஊஷி (Ouchy) போனேன். அங்க இருந்து ஒரு 1/2 கி.மீ. தூரத்துல ஏரிக்கரைச் சாலைலயே இருக்கு ம்யூசியம். ரம்மியமான சூழல். அதிகக் கூட்டம் இல்லாத அமைதியான ஊர்.

"லூசான்" ஸ்விட்சர்லாந்தோட முக்கியமான நகரம். ஒலிம்பிக்ஸின் தலைநகரம்னு சொல்லப்படுது. "சர்வதேச ஒலிம்பிக்ஸ் கமிட்டி"யோட தலைமையகமும், அதைத் தோற்றுவிச்ச "பியர் தி கூபெர்தின்" (Pierre de Coubertin) நினைவா இங்கதான் "ஒலிம்பிக்ஸ் ம்யூசியம்" இருக்கு. 1894ல, உலக நாடுகளோட ஒற்றுமைக்காகவும், அமைதிக்காகவும் மக்களை ஒருங்கிணைக்க விளையாட்டு ஒரு சரியான கருவியா இருக்கும்னு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை மறுபடி ஆரம்பிக்கணும்னு தீர்மானம் போட்டாங்க. 2 வருஷம் கழிச்சு 1896ல ஏதென்ஸ்ல முதல் ஒலிம்பிக்ஸ் ஆரம்பிச்சு போன வருஷம் பீஜிங் வரைக்கும் 29 போட்டிகள் நடத்தியாச்சு.

ம்யூசியத்தோட அமைப்பே ஒரு ஆச்சரியம். ஒரு சின்ன குன்றுக்கு பின்பக்கமா இருக்கு. முன்பக்கத்துல இருந்து மேல ஏறிப் போகப் போக கட்டடம் கொஞ்ச கொஞ்சமா தெரியற மாதிரியான ஒரு அமைப்பு. ஏறிப் போற வழில எல்லாம் அங்கங்க கலைநயமான சிற்பங்கள். எல்லாமெ விளையாட்டு, உடல் வலிமை, அமைதி இதையெல்லாம் வலியுறுத்தற மாதிரி. வன்முறையே கூடாதுன்னு சொல்றமாதிரி ஒரு ரிவால்வரோட முனைய முடிச்சு போட்டு வெச்ச மாதிரியான் சிற்பம் உலகப்புகழ் பெற்றது. அதுவும் இங்கதான் இருக்கு.

ம்யூசியத்துக்கு வெளிய ஒரு ஒலிம்பிக் தீபம் ஒண்ணு வெச்சு அது தினமும் பகல் 12 மணிக்கு ஏத்தி ஒலிம்பிக் கீதம் பாடறாங்க. வாசல்ல 8 பெரிய தூண்கள். முதல் ரெண்டு தூண்கள்ல முதலாவது ஒலிம்பிக்ல இருந்து ஒவ்வொரு வருடமும் எங்க நடந்துதுனு பொறிச்சு வெச்சுருக்கு. ரெண்டாவது தூண்லயே இன்னும் நிறைய இடம் இருக்கு. இன்னும் ஒரு 10 நூற்றாண்டுக்கு எழுதலாம்).



ம்யூசியம் சுத்திப்பாக்க நுழைவுக்கட்டணம் 15 ஃப்ரான்க். சில எக்ஸிபிஷன் ஹால்களுக்கு உள்ள ஃபோட்டோ எடுக்க அனுமதி கிடையாது. முதல் மாடில ஒலிம்பிக் வரலாறு, மெடல்கள், இதுவரை நடந்த எல்லா ஒலிம்பிக் விளையாட்டுகளோட ஜோதிகள் (சிட்னி, பீஜிங் ஜோதிகள் அவ்வளவு அழகு!!) எல்லாம் அழகா காட்சிக்கு வெச்சுருக்காங்க. ஒவ்வொரு விளையாட்டின்போதும் ஜோதியை எப்பிடி ஏத்தினாங்கங்கற க்ளிப்பிங்குக ஒரு பெரிய (பார்சிலோனால அம்பு விட்டு ஏத்தினது ஞாபகம் இருக்கா?) ஓடிக்கிட்டே இருக்கு. பக்கத்து ஹால்ல ஒலிம்பிக் விளையாட்டுக் கருவிகள், பயன்படுத்தற உடைகள் எல்லாம் பார்வைக்கு. இன்னொரு ஹால்ல ஒலிம்பிக் "ஹீரோஸ்". எல்லா சிறந்த விளையாட்டு வீரர்களைப் பத்திய படங்கள், குறிப்புகள், அவங்களோட உடைகள், உபயோகப் படுத்திய கருவிகள்....... அருமை !!

இரண்டாவது மாடில விண்டர் ஒலிம்பிக்ஸ், யூத் ஒலிம்பிஸ், பாரலிம்பிக்ஸ் பற்றியது. அந்த விளையாட்டுகளுக்கான கருவிகள், உடைகள், மெடல்கள் எல்லாம் பார்வைக்கு. கூடவே "ஹீரோஸ்". பல விளையாட்டுகளை டிவில பாத்திருக்கோமே தவிர அதையெல்லாம் நேர்ல பாக்கும்போது பிரமிப்பா இருக்கு. சில கருவிகளையெல்லாம் பாத்தா இதை எப்பிடி பிடிப்பாங்க, இந்த உடைகளை எப்பிடிப் போட்டுக்கறாங்கன்னு சந்தேகம் வருது.


பேஸ்மெண்டுல பெரிய்ய்ய்ய்ய லைப்ரரியும் ஒலிம்பிக்ஸ் ஆராய்ச்சி மையமும். ஒலிம்பிக் சம்பந்தப்பட்ட புத்தகங்கள், டிவிடிக்கள்னு குமிஞ்சு கிடக்கு. நிறையப் பேர் காலேஜ் மாதிரி வந்து விளையாட்டுகளைப் பத்தி ஆராய்ச்சி பண்ணிக்கிடுருக்காங்க. உள்ளயே ஒரு 3D சினிமா ஹால் வேற. 1/2 மணி நேரத்து ஒரு படம். நான் ரெண்டு படம் பாத்தேன். ஸ்கீ ஜம்பிங் பண்றது நம்ம முகத்து மேலயே வந்து விழற மாதிரி இருந்தது.

லைப்ரரி & ஜெஸ்ஸீ ஒவன்ஸ் ஷூ

வெளிய வரும்போது சொவீனியர் ஷாப்புல பார்சிலோனா ஒலிம்பிக் கை விசிறி ஒண்ணும், மாஸ்கோ ஒலிம்பிக் டை ஒண்ணும் வாங்கிக்கிட்டு வந்தேன். விளையாட்டு வெறியர்கள் வந்தாங்கன்னா அப்பிடி 'ஆ'ன்னு வாயைத் திறந்துக்கிட்டு அங்கியே உக்காந்துடுவாங்க. அவ்வளவு விஷயங்கள் இருக்கு. அட்டகாசம் !!

மத்தபடி ஊர்ல பாக்கறதுக்கு பெரிசா ஒண்ணும் இல்லை. எல்லா ஐரொப்பிய நகரங்கள் மாதிரி நாலு கதீட்ரல்க, ஒரு சிடி ஹால், அங்கங்க ஃபவுண்டன்க. ஊரே ஒரு மலை மேலதான் இருக்கு. ஏரிக்கரையை விட சிடி சென்டர் 200 மீட்டர் உசரத்துல இருக்கு. ரோடெல்லாம் ஏற்றத்துல நடந்து கால் வலி கண்டுருச்சு. அப்பிடியே ஒரு ரவுண்டு வந்துட்டு நிறைய க்ளிக்கிட்டு திரும்ப ஸ்டேஷனுக்கு வந்து ட்ரெயினைப் புடிச்சு திரும்ப வந்தேன். "ஆஹா... நாம தூங்கி 30 மணி நேரத்துக்கு மேல ஆச்சே... அதான் கண்ணு இப்பிடி சொருகுது"ன்னு படுத்தா ஆபீஸ்ல அவங்களுக்கு மூக்குல வேர்த்துது போல. போன் பண்ணி "தூங்கறயா... தூங்கு தூங்கு... ஒண்ணும் அவசரமில்ல... இன்னும் 1 மணி நேரம் கழிச்சு வந்தாப் போதும்"னாங்க. அப்பறம் தூக்கமாவது வெங்காயமாவது :(


சிடி சென்டர் & சிடி ஹால் பகுதி

Wednesday, May 13, 2009

"பாயசம் வித் பரிசல்"


பரிசலின் பிறந்தநாளை ஒட்டி "துக்ளக் டிவி"யில் ஒரு நேர்காணல்.


"தமிழ் வலையுலகம்கறது சுஜாதா சார் "விக்ரம்"க்கு கதை எழுத காலத்துல இருந்து இருக்கு. இருந்தாலும் தமிழ் வலைப்பூக்கள், அதாவது 'டமில் ப்ளாக்ஸ்', போன சில வருஷங்களாத்தான் இருக்கு. அதுவும் கடந்த 2 வருஷமா ரொம்ப பிரபலமா ஆகி பல பதிவர்கள் உலகத்தோட பல பகுதிகள்ல இருந்து வெரைட்டியா எழுதிக்கிட்டுருக்காங்க. வலைப்பூக்களை படிக்கறவங்கங்களும் நாளுக்கு நாள் அதிகமாயிட்டுருக்காங்க. இந்த நேரத்துல ஒரு வலைப்பூவுக்கு மக்களை கவர்வதுங்கறது ஒரு சின்ன சவாலாவே இருக்கு. அந்த சவாலை ஏத்துக்கிட்டு ஜனரஞ்சகமா எழுதி ஒரு குறுகிய காலத்துலயே பிரபலமாயிருக்கற ஒரு பதிவரை இப்ப சந்திக்கப் போறோம். இன்னிக்கி அவரோட பிறந்த நாள்ங்கறது கூடுதல் மகிழ்ச்சி. வாங்க பேசலாம் 'பரிசல்காரன்'கற க்ருஷ்ணகுமாரோட."


"வாங்க பரிசல்...சாரி க்ருஷ்ணா... முதல்ல எங்க எல்லார் சார்புலயும் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்"


"ரொம்ப நன்றிங்க.... "


"பரிசல்காரன்... பேரே ரொம்பப் புதுமையா இருக்கு... அந்தக் காரணத்தை நீங்க உங்க பதிவுல சொல்லியிருந்தாலும் நேயர்களுக்காக ஒருமுறை நீங்களே நேர்ல சொல்லிடுங்களேன்"


"நன்றிங்க. அது... நாங்க சில நண்பர்கள் சேந்து ஒரு குழுவா சின்னச் சின்ன சமூக சேவைகள் செஞ்சுக்கிட்டுருந்தோம். அந்த குழுவுக்கு "பரிசல்"னு பேர். அதாவது கஷ்டத்துல இருக்கறவங்களை கரையேத்த உதவற மாதிரி... பதிவு எழுத ஆரம்பிக்கும்போது அந்த குழுவைச் சேர்ந்தவன்கற அடையாளத்துக்காக 'பரிசல்காரன்'ன்னு பேர் வெச்சேன். சிலபேர் கேட்ட மாதிரி எனக்கும் ஹொகேனக்கல் ஃபால்ஸ்ல பரிசல் விடறவங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லைங்க"


"ரொம்ப தமாஷா பேசறீங்க.... பதிவு எழுத ஆரம்பிச்சு 1 வருஷத்துல இப்ப உங்களுக்கு 300 ஃபாலோயர்ஸ். ஜூனியர் விகடன்ல உங்க படைப்பு. பிறந்த நாள் பரிசு மாதிரி ஆனந்த விகடன்ல உங்க எழுத்து. கூடவே உங்க நண்பர்களோட படைப்புகளும். எப்பிடி உணரறீங்க?"


"ரொம்ப சந்தோஷமா இருக்குங்க. மனசுக்கு நிறைவா இருக்கு. எல்லாருக்கும் இந்த சந்தர்ப்பத்துல் நன்றி சொல்லணும்."


"பதிவு + பத்திரிக்கை.... இது உங்க தற்போதைய வேலைக்கோ ஃபேமிலி லைஃப்க்கோ எந்த விதத்துலையாவது பாத்ப்பை ஏற்படுத்துதா?"


"கண்டிப்பா இல்லைங்க. என் எல்லைகளை உணர்ந்தே இருக்கேன். தெளிவா இருக்கேன். எதுவும் அடுத்ததை பாதிக்க விடாம பாத்துக்கறேன். ஆனா இப்ப கொஞ்சம் பொறுப்பு கூடியிருக்கறதால இன்னும் ஜாக்கிரதையா இருக்கணும்."


"குடும்பத்தாரோட ஒத்துழைப்பு இருக்கா? அட்லீஸ்ட் உங்களை அவங்க கிட்ட இருந்து கொஞ்சம் அன்னியப்படுத்தறதா நினைக்கிறாங்களா?"


"இல்லைங்க. இதைப் பத்தி ஒரு பதிவே போட்டுருக்கேன். அவங்களையும் கூட அழைச்சுக்கிட்டேதான் இந்த பயணம்...."


"நண்பர்கள்....?"


"அவங்களோட ஊக்கமும், ஒத்துழைப்பும், அன்பும்தான் என்னை இவ்வளவு தூரத்துக்கு கொண்டு வந்துருக்குன்னு சொல்றதுல எனக்கு ஒரு தனி பெருமை... மகிழ்ச்சி...."


"அடுத்தது...?"


"இன்னி தேதிக்கு எழுத்துத் துறைல வளர்ச்சிங்கறது எந்த திசைலயும் சாத்தியம்.... புதுசு புதுசா பாதைகள் நிறைய இருக்கு... எதைப் பத்தி எழுதறதுன்னு அசந்து போகாம எழுத விஷயங்கள் நிறைய இருக்கு.... அதனால எந்த விதத்துல எல்லாம் என் எண்ணங்களை எழுத்துகளால வெளிப்படுத்த முடியுமோ அதுல எல்லாத்துலயும் சாதிக்கணும்... உயரங்களை அடையணும்....."


"ரொம்ப மகிழ்ச்சி க்ருஷ்ணகுமார்.... உங்களோட இந்த நேர்காணல் ரொம்ப ஃப்ரீஃபா இருந்தாலும் நிறைவா இருந்தது.... "


"ரொம்ப நன்றிங்க...."


"விடை பெறுவதற்கு முன்னால.... மறுபடி ஒருமுறை எல்லாருடைய சார்பாவும் பிறந்த நாள் வாழ்த்துகள் !!"


"நன்றி... நன்றி..."


"ஒரு நிமிஷம்... இந்த பாயசத்தை சாப்டுட்டு... பாயச கப்புல உங்க ஆட்டோக்ராஃப் போட்டுடுங்க.... உங்க சார்பா அதை ஏலம் விட்டு வர தொகையை "உதவும் கரங்க"ளுக்கு குடுத்துடறோம்....."

"அட... பாயசமும் நல்லா இருக்கு... உங்களோட இந்த பாசமும் நல்லா இருக்கு"


டிஸ்கி: பரிசல், உங்களைக் கேக்காமயே உங்களோட alter ego-வா உங்க பேட்டியை வெளியிட்டதுக்கு "ரைட்... விடு"ன்னு சொல்வீங்கன்னு நினைக்கிறேன். :)

Saturday, May 9, 2009

நலம்... நலமறிய ஆவல்...


போன 3 மாசமா அமெரிக்காவுல இருக்கற பேங்குகளையெல்லாம் டாக்டர் ஒபாமா "மாஸ்டர் செக்கப்" பண்ணி இந்த வாரம் ஒரு வழியா ரிபோர்ட் குடுத்துட்டாரு. "இப்பத்திக்கு யாரும் நட்டுக்கவோ புட்டுக்கவோ மாட்டாங்க... தெகிரியமா இருங்க... கொஞ்சம் சவலையா இருக்கப்பட்டவங்களுக்கு ட்ரிப்ஸ் ஏத்தறோம்"னு சொல்லிட்டாரு. என்னமோ "ஸ்ட்ரெஸ் டெஸ்ட்" அது இதுன்னு ரொம்ப அலப்பறையா இருக்குதேன்னு என்னதான் நடக்குது / நடந்துதுன்னு நாலு பேர் கிட்ட கேட்டுப்பாத்து நமக்குப் புரிஞ்சதைச் சொல்லி உங்களையும் தெளிவா கொழப்பி விட்டாத்தானே தின்ன சோறு ஜீரணமாகும்.

அதாகப்பட்டது, அடுத்தது எந்த பேங்க் திவாலாகப் போகுதோன்னு பேங்குலயோ, பேங்கோட பங்குகள்லயோ பணம் போட்டவங்க எல்லாம் அரண்டு போய் இருக்க, ஒபாமா அரசாங்கம் பேங்குகளுக்கு ட்ரில்லியன் கணக்குல பணத்தைக் குடுத்து கீழ விழாம முட்டுக்குடுக்கறதுக்கு முன்னால, சம்பந்தப்பட்ட பேங்குகளோட நிலைமை என்ன, எவ்வளவு ஆழத்துல இருக்காங்க, எந்த அளவு பணம் குடுக்க வேண்டியது இருக்கும்னு பாக்கறதுக்காக ஃபெடரல் ரிசர்வைக் கேட்டுக்கிட்டாங்க. ஏன்னா அரசாங்கம் முதலீடு பண்ணப்போறது மக்களோட வரிப்பணத்தை. ஆத்துல போட்டாலும் அளந்து போடணுமில்லையா?

சரி... ஒரு பேங்க் எந்த அளவுக்கு தாக்குப்பிடிக்கும்கறதை எப்பிடிப் பாக்கறது? அது என்ன "ஸ்ட்ரெஸ் டெஸ்ட்"? இதை ரொம்ப விலாவாரியா விளக்க முடியாட்டாலும் (நமக்கு அவ்வளவுதானே தெரியும்? :)) மேலோட்டமாப் பாத்தா, சில மோசமான எதிர்பார்ப்புகளை முன்வெச்சு, அந்த நெருக்கடியை பேங்குக எப்படி சமாளிக்கும், அப்படி சமாளிக்க எவ்வளவு நிதி தேவையா இருக்கும்னு அனுமானிக்கறதுதான் இந்த ஸ்ட்ரெஸ் டெஸ்ட். அடிப்படையான சில எதிர்பார்ப்புகள் என்னன்னா:



  • இந்த வருஷம் பொருளாதார சுருக்கம் 3.3% அளவுல இருக்கும்

  • 2010லயும் எந்த மாற்றமும் இருக்கப் போறதில்லை

  • வீட்டு விலைகள் இன்னும் 22% அளவுக்கு சரியும்

  • வேலையில்லாத் திண்டாட்டம் இந்த வருஷம் சுமாரா 9% அளவுக்கும் அடுத்த வருஷம் 10%க்கு மேலயும் இருக்கும்

இந்த மாதிரி நெருக்கடியான நிலைமைல பேங்கோட சொத்துக எந்த அளவுக்கு தேஞ்சு போகும், மஞ்சக்காய்தம் குடுக்கற அளவுக்குப் போயிடுமா, அப்பிடி மோசமாச்சுன்னா எவ்வளவு பணம் புரட்ட வேண்டியிருக்கும்னு பாக்கறாங்க. அப்படி அசாங்கம் நிதி குடுத்து காப்பாத்த வேண்டி வந்தா, சம்பந்தப்பட்ட பேங்கோட பங்குகளை எப்பிடி மாத்தணும், எந்த விலைக்கு வாங்கணும்னெல்லாம் - பிப்.9 ந் தேதி என்ன சந்தை விலையோ அதை விட கொஞ்சம் கம்மியா - திட்டம் போட்டுருக்காங்க.

டிமொதி கீத்னர் தலைமைல நடந்த இந்த டெஸ்டோட வழிமுறைகளை விவரமா வெளியிட மறுத்துட்டாங்க. அதனாலயே இந்த டெஸ்டோட நம்பகத்தன்மை கொஞ்சம் கேள்விக்குறியதாயிடுச்சு. அதுமட்டுமில்லாம பொருளாதார நிபுணர்களோட சில விமர்சனங்கள் கடுமையா இருக்கு.



  • இன்னுங் கூட மோசமான எதிர்பார்ப்புகளை வெச்சுருக்கணும்

  • இந்த முடிவுகள் கேக்க நல்லா இருக்கலாம், ஆனா நாம இன்னும் நெருக்கடியான ஒரு நிலைமைக்குதான் திட்டம் போட்டிருக்கணும்

  • பிப்.9ந் தேதி சந்தை விலையை விட பேங்குகளோட பங்கு விலை இன்னும் மோசமாகலாம் ; அப்ப அரசு அதிக விலை குடுக்குதா?

  • அரசு எவ்வளவு நிதி குடுக்கும்கறதுக்கு ஒரு உச்ச வரம்பு வெச்சுருக்கணும்

  • இதை சாக்கா வெச்சு எந்த பேங்கோ, காப்பீட்டுக் கம்பெனியோ சும்மாவாச்சும் நிதி கேட்டு மனுக் குடுக்கறதைத் தடுக்க அரசு திட்டம் / வழிமுறைகள் வெச்சுருக்கணும்

  • ஒவ்வொரு பேங்கோட வியாபார முறையும் (Business Model) ஒவ்வொரு விதமா இருக்கும்போது, அதையும் இந்த ஸ்ட்ரெஸ் டெஸ்ட்ல ஒரு காரணியா (factor) வெச்சுருக்கணும்.

இப்பிடி பல கேள்விகள். இப்போதைக்கு நிதி குடுத்து வங்கிகளைக் காப்பாத்தி முதலீட்டாளர்களோட ந்ம்பிக்கையைக் காப்பாத்திடலாம். ஆனா தொலை நோக்கோட பாத்து, இன்னும் கடுமையான வழிமுறைகளை வெச்சு, பேங்குகளோட நடவடிக்கைகளை இன்னும் அணுக்கமா கண்காணிக்கணும். எந்த ஒரு வங்கிக்கும் - அது எவ்வளவு பெரிய வங்கியா இருந்தாலும் - தனிச் சலுகைகள் இருக்கக்கூடாது.


மொத்தம் டெஸ்டுக்கு உட்படுத்தப்பட்டது 19 நிறுவனங்கள். பேங்குகளும் சில காப்பீட்டு நிறுவனங்களும். டெஸ்டெல்லாம் முடிஞ்சு பேங்க் ஆஃப் அமெரிக்காவுக்குதான் ஆக அதிகமா 34 பில்லியன் டாலர் வேண்டியிருக்குனு சொல்லியிருக்காங்க. ஆச்சரியமா, எல்லாரும் படுமோசமா இருக்கும்னு எதிர்பார்த்த சிடி பேங்குக்கு 5 பில்லியன் டாலர் போதும்னு சொல்லியிருக்காங்க.

"இதெல்லாம் வெறும் அரசியல் சார். இந்த ஸ்ட்ரெஸ் டெஸ்டோட ரிசல்ட் என்னன்னு இவங்களுக்கு முன்னாலயே தெரியாதா? சும்மா சார்... பணத்தை கொட்டறதுன்னு முடிவாயாச்சு... இதுனாலதான் குடுக்கறோம்னு ஒரு காரணத்தை கிண்டி நமக்கெல்லாம் அல்வா குடுக்கறாங்க சார்...."னு அலுத்துக்கறவங்க ரொம்பப் பேர்.

இருக்கலாம். ஆனா இப்ப உலகம் சந்திச்சுக்கிட்டு இருக்கற இந்த சரிவு இதுவரைக்கும் நாம பாக்காதது. இப்ப இருக்கற உலகளாவிய பின்னிப் பிணைஞ்ச பொருளாதாரம், சிக்கலான சந்தை முறைகள், பேங்குகளோட பணிகள், காப்பீடு வழிமுறைகள், பணமாற்று எல்லாமே முன்னாடி இருந்ததை விட ரொம்பவே வித்தியாசமானவை. இப்பிடி ஒரு நிலைமல பேங்க் மாதிரி ஒரு முக்கியமான துறைல ஒரு சரிவை அனுமதிச்சோம்னா அது எங்க எப்பிடி வெடிக்கும், என்ன மாதிரியான மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்கறது நினைச்சுக்கூடப் பாக்க முடியாது.

தவறு நடந்துடுச்சு. திருத்த முயற்சி பண்ணணும். மனிதனுடைய தனிப்பட்ட குணமே தவறுகளிலிருந்து பாடம் கத்துக்கிட்டு அதிலிருந்து மீண்டு வந்து, மறுபடி நடக்காமப் பாத்துக்கறதுதான். பார்ப்போம்... இது சரின்னு சொல்றதுக்கு 1000 காரணங்கள் இருந்தா தப்புன்னு சொல்றதுக்கு 1000 காரணங்கள் இருக்கு. ஆனா இப்போதைய தேவை banking system சரிஞ்சுடாம பாத்துக்கறதுதான்.

" தவறு என்பது தவறிச் செய்வது ; தப்பு என்பது தெரிந்து செய்வது

தவறு செய்தவன் திருந்தியாகணும் ; தப்பு செய்தவன் வருந்தியாகணும் "


இதை "குட் ப்ளாக்ஸ்"-ல் சேர்த்த யூத்ஃபுல் விகடனுக்கு நன்றி

Wednesday, May 6, 2009

அலர் மலர்ந்த நாள் !! அகம் மகிழ்ந்த நாள் !!











மே 9. செல்ல மகள் சஹானாவின் 4 வது பிறந்த நாள். ப்ராஜெக்ட் வேலைக்காக இன்று மறுபடி ஜெனீவா போக வேண்டி இருப்பதால, 2 வாரம் கழிச்சு திரும்பி வந்த பிறகுதான் கொண்டாட்டம் எல்லாம் வெச்சுக்க முடியும். ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் எதாவது போஸ்டர் வரைவேன். இந்த முறையும் ஒண்ணு வரைஞ்சாச்சு. அதுவும், கூடவே அவள் வரைஞ்ச சில போஸ்டர்களும் உங்கள் பார்வைக்கு.


ஹி.. ஹி... அப்பிடியே ஒரு வெண்பா... ரொம்ப நாளாச்சுல்ல... அதான்...


எனக்கும் துணைக்கும் யாண்டும் இன்பம்
தனக்குள் கொண்ட கலைமகள் - மனத்துள
காயங்கள் மாறிடவே மழையெனப் பொழிந்திட்ட
நீயெங்கள் வாழ்வின் வளம்.


இதெல்லாம் பாப்பா வரைஞ்சது...









இது அப்பா வரைஞ்சது.....





Monday, May 4, 2009

புலியும் புலி சார்ந்த வனமும்...


"அலோக், ராகேஷ், வெங்கட்..... வாங்கடா போய் தூங்கலாம்... நாள் பூரா பஸ்ல வந்தது அலுப்பா இருக்கு.... காலைல சீக்கிரம் வேற கிளம்பணும்... எவ்வளவுதாண்டா குடிப்பீங்க? ஓசில கிடைச்சா ஒம்பது பாட்டிலாடா?"

"ஓயே... பப்பு.. ஜா.. ஜா... தூத் பீ கே சோ ஜா... ஜா மேரா முன்னா..."

"ஹா.... ஹா... ஹ்ஹோஹோ... ஹா"

"சிரிங்கடா... நல்லா சிரிங்க... குடிச்சு கொடல் வெந்து ஓஞ்சு போங்க... எவனாவது காட்டேஜுக்குள்ள வாந்தி கீந்தி பண்ணினீங்க... மவனுகளா... நாளைக்கு டெல்லிக்கு நாலு தந்திதான் போகும்..."

நான் வெறுப்புடன் அவர்களை சபித்துக் கொண்டே எங்கள் காட்டேஜுக்குத் திரும்பினேன்.

'மணி இப்பவே பத்தரை. இனி எப்ப வந்து எப்ப தூங்குவானுக? 7 மணிக்காவது கெளம்பினாத்தான் சரியா இருக்கும்... இவுனுகளை நம்பி ப்ரொகிராம் போட்டேனே... நம்ம புத்தியை எதால அடிச்சா தேவலாம்?'

எங்கள் டெல்லி அலுவலகத்தின் நிறுவன நாளை ஒட்டி எல்லாருமாக நைனிதால் டூர். ஒரு வாரத்துக்கு நைனிதால், பீம்தால், சாத்தால் எல்லாம் போவதாக திட்டம். இன்று காலை கிளம்பி மாலை 6 மணிக்கு ராம்நகர் வந்து க்ளாரிட்ஜஸ் ரிசார்ட்ஸ் வந்து சேர்ந்தோம். முதல் 3-4 மணி நேரங்கள் வ.வா.ச. மாதிரி பாட்டும் கூத்துமாக ஜாலியாகப் போனாலும், டேராடூன் தாண்டியதும் மலைப்பாதைப் பயணம் மிகவும் அலுப்பாக இருந்தது. வந்து இறங்கி எல்லோருக்கும் காட்டேஜ் கொடுத்து, குளித்து விட்டு வந்து சுவையான இரவு சாப்பாட்டிற்குப் பின் தூங்கலாம் என்றால் இந்தக் கழுதைகள் என்னவோ இனிமேல் உலகத்தில் குடிப்பதற்கு வெறும் தண்ணீரைத் தவிர எதுவும் கிடைக்காது என்பது போல மண்டுகிறார்கள்.

டிசம்பர் மாதம் என்பதால் நல்ல குளிர். ஸ்வெட்டர் போட்டு மேலே மூன்று அடுக்கு ஜேக்கெட்டையும் தாண்டி குளிர் உறைத்தது. நானும் வர்கீஸும் அசெம்பிளி ஹாலில் இருந்த விறகு அடுப்பிற்குப் பக்கத்தில் சிறிது நேரம் குளிர் காய்ந்து விட்டு எங்கள் காட்டேஜுக்குச் சென்றோம். நான் கொஞ்ச நேரத்தில் ரஜாய்க்குள்ளே சுகமாக உறங்கிப் போனேன்.

காலை 6:30 க்கு எழுந்தபோது ஒவ்வொருவனும் ஒவ்வொரு இடத்தில் கோணல் மாணலாய் படுத்திருந்தனர். நிலைமையைப் பார்த்தால் மட்டையால் அடித்து எழுப்பினால் ஒழிய இந்த மட்டைகள் எழுந்திருக்க மாட்டார்கள் போலத் தோன்றியது. காலைக்கடன்களை முடித்து குளித்துவிட்டு வெளியே வந்து பார்த்தேன். அப்போதுதான் கவனித்தேன். எங்கள் காட்டேஜுக்கு பின்புறம் "கோசி" ஆறு அமைதியாக ஓடிக் கொண்டிருந்தது. இந்த ரிசார்ட் மலையடிவாரத்தில் ஒடுங்கி இருந்ததிலும் ஒரு அழகு இருந்தது. அந்த அதிகாலைக் குளிரிலும் வர்கீஸ் ஆற்றில் நீந்திக் குளித்துக் கொண்டிருந்தான். எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

"அதெல்லாம் முதல்ல குதிக்கற பாரு... அப்பத்தான் விர்ர்ர்ர்ர்னு குளிர் ஏறர மாதிரி இருக்கும். நல்லா ரெண்டு முங்கல் போட்டுட்டேன்னு வெச்சுக்க... குளுராவது... கிளுராவது.... ஒண்ணும் தெரியாது.... என்னமா இருக்கு தெரியுமா?"

"அட போப்பா... தண்ணியைப் பாத்தாலே கண்ணு வெறைக்குது... குளிக்கிறதா? நன நல்லா சுடு தண்ணில குளிச்சுட்டு வந்துட்டேன்... சரி... சீக்கிரம் வா... பசிக்குது... சாப்ட்டுட்டு போவோம்..."

"இதோ வந்துட்டேன்... ரெண்டே நிமிஷம்..."

தொபீர் என்று அவன் நீரில் குதிக்கும் சத்தக் கேட்டது. நான் காலைக் குளிரையும் ரம்மியமான சுற்றுப்புறத்தையும் ரசித்தபடி மெள்ள நடந்து உணவுக்கூடத்துக்கு வந்தேன். எங்கள் அலுவலகத்தின் டைரக்டர்கள் இருவர் அங்கே பேசிக் கொண்டு அமர்ந்திருந்தனர். நானும் கொஞ்சம் ரொட்டி, ஜாம், பழங்கள், தேனீர் எல்லாம் எடுத்துக் கொண்டு அவர்கள் அருகே சென்று அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது வர்கீசும் இன்னும் சிலரும் வந்தனர்.

உணவுக்குப் பிறகு நான், வர்கீஸ், அலோக் மூவரும் ஆளுக்கொரு சைக்கிளை எடுத்துக் கொண்டு வெளியே வந்தோம். நாங்கள் தங்கியிருந்த ரிசார்டில் இருந்து 8 கி.மீ தூரத்தில் "ஜிம் கார்பெட் தேசிய பூங்கா ம்யூசியம்" இருப்பதாக மேப்பில் பார்த்து விட்டு வெளியே வந்த பிறகுதான் தெரிந்தது மலையின் மேலே ஏற வேண்டும் என்று. ஆனாலும் போயே தீர்வது என்ற முடிவு செய்யும்போது ராகேஷும் வந்து சேர்ந்தான்.

"முஜே சோட் கர் நிகல் கயே ந? கமீனே...."

"சாலே... தூ கூப் பீகர் சோ ரஹா தா... பதா நை கப் உடேகா.... பியகர் சாலா...."

"டீக் ஹை.. டீக் ஹை... சல்...சல்... ஸ்யாதா ஜபான் மத் சலாவ்..."

நால்வரும் மெதுவாக மேலே ஏற ஆரம்பித்தோம். வழியில் யாரோ ஒருவன் சொன்னதைக் கேட்டு தார்ச்சாலையில் வளைந்து வளைந்து போகாமல், சைக்கிளைத் தலைக்கு மேலே தூக்கிக் கொண்டு ஆற்றின் குறுக்கே நடந்து சென்று அக்கரையில் ஏறி காட்டுப் பாதை வழியாக சென்றோம். வழியில் ஆற்றின் நடுவே இருந்த உயரமான ஒரு மண் குன்றின் மேலே இருக்கும் ஒரு தேவி கோயிலையும் பார்த்து விட்டு கார்பெட் ம்யூசியம் சென்று சேர்ந்தோம்.

ம்யூசியத்தின் உள்ளே ப்ரிட்டிஷ் ராணுவ அதிகாரியும், சிறந்த வேட்டைக்காரரும், குமாவோன், தெராய் பகுதிகளில் சுற்றிக் கொண்டிருந்த சில ஆட்கொல்லிப் புலிகளை வேட்டையாடி அந்தப் பகுதி மக்களைக் காப்பாற்றியவருமான "ஜிம்" கார்பெட் என்ற மனிதரின் வாழ்க்கை வரலாறு, அவர் எடுத்த புகைப்படங்கள், பாடம் செய்த அவரால் கொல்லப்பட்ட புலிகள் எல்லாம் பார்வைக்கு இருந்தன. அவர் எழுதிய "Maneaters of Kumaon" புத்தகமும் விற்பனைக்கு இருந்தது. அவர் நினைவாகவே 4000 அடி உயரத்தில் 500 சதுர கி.மி பரப்பில் "கார்பெட் தேசிய பூங்கா" அமைக்கப்பட்டு புலிகளின் சரணாலயமாக ஆக்கப்பட்டு, "பெங்கால் டைகர்" போன்ற அழிவின் விளிம்பில் இருக்கும் புலி இனங்களை அரசு பாதுகாத்து வருகிறது.

ம்யூசியத்தை சுற்றிப் பார்த்து விட்டு வெளியே வரும்போது நல்ல மேகமூட்டம். வெளிச்சம் மிகவும் குறைவாக இருந்தது. வரும்போதுதான் ஏற்றம் என்று குறுக்கு வழியில் வந்தோம். இறங்குபோது சாலை வழியாகவே போகலாம், சும்மா உட்கார்ந்திருந்தால் போதும் என்று முடிவு செய்தோம். இரண்டு சைக்கிள்களின் சக்கரங்கள் பஞ்சர் ஆகியிருந்ததை அப்போதுதான் கவனித்தோம். அந்த இடத்தில் சைக்கிள் ரிப்பேர் செய்யும் கடைகள் எதுவும் கிடையாது என்றும் ராம்நகர்தான் போகவேண்டும் என்று ம்யூசியம் கீப்பர் சொன்னார். எல்லாமே ஸ்போர்ட்ஸ் வகை சைக்கிள்களாக இருந்ததால் கேரியர் கிடையாது. இருந்தால் கேரியரில் ஒருவர் உட்கார்ந்து கொண்டு மற்ற சைக்கிளை கையால் பிடித்துக் கொண்டு ஓட்டி வந்து விடலாம். அதற்கும் வழியில்லை. பிறகு எல்லாருமே சைக்கிள்களைத் தள்ளிக் கொண்டு நடக்க ஆரம்பித்தோம். சாலையின் இரு புறமும் உயர்ந்த அடர்ந்த மரங்கள் இருந்ததால் வெளிச்சம் ரொம்பவே குறைவாக இருந்தது. மறைந்த தேவன் அவர்கள் எழுதுவது போல "கையெழுத்து மறையும் நேரம்" போல இருந்தது. அவ்வப்போது தாண்டிச் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்குடன் சென்றன.

ராகேஷ் கொஞ்ச நேரத்திலேயே சோர்ந்து விட்டான். நடுவில் அலோக் வேறு அந்த இடத்தில் அந்த நேரத்தில் புலி வந்து விட்டால் என்ன செய்வது என்று புலம்பிக் கொண்டிருந்தான். அந்த ம்யூசியம் கீப்பர் வேறு எங்களிடம் பேசுகையில், குளிர் காலங்களில் பகல் நேரத்தில் புலிகள் வெயிலுக்காக சுதந்திரமாகச் சுற்றி வரும் என்றும், அந்த 500 சது கி.மீ மொத்தப் பரப்பும் சரணாலயம் என்பதால் எங்கு வேண்டுமானாலும் அவற்றைப் பார்க்க முடியும் என்றும் சொல்லியிருந்தார். எல்லோருக்குமே கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது.

பயத்தை விரட்ட சத்தமாகப் பேசிக் கொண்டும் அட்டகாசமாகச் சிரித்துக் கொண்டும் நடந்தோம். பசி வேறு அதிகமாகிக் கொண்டிருந்தது. ஒருவனும் ஒரு பாட்டில் தண்ணீர் கூட கொண்டு வரவில்லை. ஒரே ஒரு கேமிரா மட்டும்தான் இருந்தது. அது கூட ம்யூசியம் வருவதற்குள்ளாகவே 36 படமும் எடுத்து முடிந்திருந்தது.

சாலையோரத்தில் அத்தி பூத்தாற் போல இருந்த அந்த டீக்கடையைப் பார்த்தோம். காணாது கண்டவர்கள் போல சைக்கிளைப் போட்டு விட்டு போய் டீ குடித்து, பிஸ்கட் தின்று விட்டு, கொறித்துக் கொண்டே போக சமோசா, ப்ரெட் பகோடா எல்லாம் சேகரித்துக் கொண்டு மறுபடி நடக்க ஆரம்பித்தோம். இன்னும் இருட்டு. அப்போது சாலையின் ஒரு பக்கத்திலிருந்து யாரோ ஒரு பெரியவர் வந்து எங்களோடு நடக்க ஆரம்பித்தார். பார்வைக்கு நன்கு படித்தவர் போல இருந்தார். 75 வயது இருக்கும். ஏதோ ஒரு பாட்டை முனகிக் கொண்டே வந்தார். நாங்கள் அவரை கவனித்ததும் பேசுவதை நிறுத்தி விட்டோம்.

அவரே எங்களோடு பேச ஆரம்பித்தார். நாங்கள் யார், எங்கிருந்து வருகிறோம், என்ன செய்கிறோம் என்றெல்லாம் கேட்டு விட்டு, அலோக்கின் புலி பற்றிய பயங்களையும் புலம்பல்களையும் கேட்டவுடன் சிரிக்க ஆரம்பித்தார். அவர் அந்த பகுதியில் பல ஆண்டுகளாக இருப்பதாகவும், பலமுறை புலிகளை நேரில் பார்த்திருப்பதாகவும் சொன்னார். பிறகு புலிகளின் சில விசித்திரமான பழக்கங்கள், குணங்கள் போன்றவற்றை விவரித்துக் கொண்டு வந்தார். நாங்கள்தான் சோர்ந்து போய் நடை தளர்ந்ததே தவிர அவர் களைப்படைந்ததாகவே தெரியவில்லை. அவர் ராம்நகர் மார்கெட்டுக்கு போக வேண்டும். அது நாங்கள் தங்கியிருந்த ரிசார்டையும் தாண்டி 5 கி.மீ. தூரத்தில் இருந்தது. எங்களுக்கோ ஆச்சரியம். அதுவும் அவர் தினமும் மார்கெட்டுக்கு போய்வருவதாக சொன்னதும் ஆச்சரியம் அதிகமானது.

புலிகள் தொடர்பான சுவையான பல நிகழ்ச்சிகளையும், செய்திகளையும் எங்களுடன் பகிர்ந்து கொண்டார். சிறிது நேரத்தில் எங்கள் ரிசார்டுக்கு அருகில் வந்து விட்டோம். மற்ற சில நண்பர்களும் அங்கே சாலையோரத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். சிலர் எங்கள் அருகே வந்து விசாரித்தனர். அவர்களுக்கும் அந்த பெரியவரை அறிமுகம் செய்து வைக்க விரும்பியும், முடிந்தால் புலிகளைப் பற்றி அவரை நிறையப் பேசவைக்க வேண்டும் என்று கேட்கலாம் என்றும் நினைத்து அவரை அழைக்கத் திரும்பினோம்.

அங்கே..... யாரும் இல்லை !!

சாலையின் மறுபக்கம் அவர் நின்றிருந்த இடத்தில் ஒரு சிறிய அறிவிப்புப் பலகை இருந்தது. அதில் காணப்பட்டது :

"The great hunter, saviour of Kumaon, Jim Corbett ,was fatally attacked by a tiger here in April 1955"

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

அடுத்த இரண்டு நாட்கள் நாங்கள் ஜீப்பிலும், யானை மீதும் அமர்ந்து பூங்காவினுள் புலிகளைப் பார்க்க காடு முழுவதும் சுற்றியதும், ஒரு புலியைக் கூட பார்க்க முடியாததும், புலிகளின் கால்தடங்களை மட்டுமே பார்த்ததும், பீம்தால், சாத்தால் எல்லாம் பார்த்து டில்லி திரும்பும் வரை அலோக்கின் ஜுரம் குறையாமல் இருந்ததும் அவ்வளவு முக்கியமில்லாத விஷயங்கள்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


டிஸ்கி : இது 99% உண்மைக் கதை. எந்த 1% கற்பனை என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகிறேன்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


Edward James "Jim" Corbett (25 July 1875 – 19 April 1955)


படங்களுக்கு நன்றி : விக்கிபீடியா