Monday, June 14, 2010

ரத்தமும் தக்காளித் தண்ணியும்......

வடிவேல் காமெடி மாதிரிதான் இருக்கு. ஆனா வேதனை.......

1984 போபால் விஷவாயு கசிவுக்கு காரணமான யூனியன் கார்பைடு நிறுவனத்து மேல போட்ட வழக்குல ஒரு வழியா 26 வருஷத்துக்கு அப்பறம் தீர்ப்பு வந்தாச்சு. அவ்வளவு பெரிய பேரிடர். அன்னிக்கு ராத்திரி மட்டுமே 2500 உயிரிழப்பு. அதுக்கு அப்பறமா இந்த 25 வருஷத்துல சாவுகள், உடல் குறைபாடுகள், பிறவிக் குறைபாடுகள், குடிதண்ணீர் மாசு, நிலத்தடி நீர் மாசுன்னு இன்னிக்கு வரைக்கும் அதோட தாக்கம் தொடர்ந்து இருக்கு. இன்னும் எத்தனை உயிர்களை காவு வாங்குமோ தெரியாது.

2010. மெக்சிகோ வளைகுடால ப்ரிடிஷ் பெட்ரோலியம் கம்பெனியோட ஆழ்கடல் எண்ணை கிணறு. 10000 அடி கீழ குழாய் உடைஞ்சு ஒரு நாளைக்கு 40000 பீப்பாய் அளவுக்கு எண்ணைக் கசிவு. 2 மாசம் ஆச்சு. ஆயிரக்கணக்கான சதுரமைல் பரப்புக்கு கடல் மேல எண்ணை மிதக்குது. தண்ணிப் பரப்புக்கு கீழ இருக்கறது இன்னும் கணக்குல எடுத்துக்கல. எடுத்துக்க முடியல. கண்க்கில்லாத கடல் உயிரினங்கள், பறவைகளுக்கு பாதிப்பு. பரவிப் பரவி இப்ப கடற்கரைகளையும் தொட்டாச்சு. சுற்றுச் சூழல் பாதிப்பு, குடிதண்ணீர் பாதிப்பு, காத்துல எண்ணை வீச்சம், கடல்லயே பாதி எண்ணையை எரிக்கறதுல வர புகை, கடலோட மேல்பரப்பு சூடாகுதல்னு அழிவுகள் தொடருது. இன்னிக்கு வரைக்கும் உடைஞ்ச குழாயை முழுசா அடைக்க முடியல. எடுத்த சில முயற்சிகளும் தோல்வி. உலகமே உன்னிப்பா கவனிச்சுக்கிட்டு இருக்கு.

முதல் கொஞ்ச நாளைக்கு நான் இல்லை அவன், நானும் இல்லை இவன்னு ஜல்லியடிச்சுக்கிட்டிருந்தாங்க. ஆனா இந்த எண்ணைக்கசிவுனால ஆன இழப்புகளுக்கு ஒவ்வொரு பைசாவையும் ப்ரிடிஷ் பெட்ரோலியம் கம்பெனி திருப்பியே ஆகணும்னு ஒபாமா கண்டிப்பா சொல்லிட்டாரு. பல பில்லியன் டாலர்கள். இதுல நீக்குப்போக்குக்கு இடமே இல்லைன்னு சொல்லிட்டாரு. நல்ல விஷயந்தான். இது மாதிரி அழிவுகளுக்கு காரணமானவங்க எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும், எவ்வளவு பெரிய நிறுவனமா இருந்தாலும் விடவே கூடாது. முழுப் பொறுப்பையும் சுமந்தே தீரணும். ஒபாமான்னா சும்மாவா?

ஆனா அதே பெருந்தகையாளர் ஒபாமா போபால் விஷவாயு கசிவு இந்தியாவின் உள்நாட்டு ப்ரச்னைன்னு சொல்றாரு. எவ்வளவோ அழுத்தம் குடுத்து யூனியன் கார்பைடு முதலாளிகளுக்கு வெறும் 2500$ அபராதம், 2 வருஷம் சிறை, அதுலயும் அப்பீலுக்கு இடம் இருக்கு. சும்மா உலுலாயிக்கு. இதைப் பத்தி ஒபாமா வாயே திறக்கலியே. ஏன்னா எண்ணை கசிவு அமெரிக்காவுல. விஷவாயு கசிவு இந்தியாவுல. ரெண்டுமே பேரிடர்தான். பெரிய இழப்புகள்தான். மாற்றுக்கருத்தே கிடையாது. ஆனா ஒபாமாவுக்கு.... ஒரு கண்ணுல வெண்ணை இன்னொரு கண்ணுல சுண்ணாம்பு.

அமெரிக்காவுக்கு வந்தா அது ரத்தம். அதுவே இந்தியாவுக்கு வந்தா வெறும் தக்காளித்தண்ணி. ஹ்ம்ம்ம்ம்......

Saturday, May 22, 2010

க்ரீஸ்..... கிறீச்.... கிறீச்.....


அடுத்த பொருளாதார நெருக்கடி வந்தாச்சு. நாம எல்லாம் ஆஹா ஓஹோ அட்டகாசம்னு நினைச்சுக்கிட்டு இருக்கற ஐரொப்பிய யூனியன்ல இருக்கற க்ரீஸ் (Greece) நாட்டோட பொருளாதார இயந்திரம் இப்ப கிரீஸ் இல்லாம கிறீச்... கிறீச்சுன்னு கதறுது. நாரசமா இருக்கு சத்தம். என்னதான் ஆச்சு? சிம்பிளா சொன்னா வரவு எட்டணா செலவு பத்தணா. அதோட விளைவு. இது எல்லா நாட்டுலயும் நடக்கறதுதானே? நம்ம இந்திய பட்ஜெட்லயெல்லாம் சாதாரண துண்டா விழுகுது? ஈரோடு ஸ்பெஷல் ஜமுக்காளமே இல்ல விழுகுது. அங்க மட்டும் என்ன ஆச்சு? (போச்சுடா... எங்கயாவது பொருளாதார சரிவுன்னா இவன் ஆரம்பிச்சுடுவானேன்னு நீங்க முனகறது கேக்குது. அதைப்பத்தி எனக்கு கவலை இல்லை... எழுதி உங்களை குழப்பியே ஆகணும்)

மொத காரணம் போன வருஷம் க்ரீஸ் நாட்டோட கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தி (Gross Domestic Product - GDP) யில் 13%க்கு மேல. ரொம்ப ஒண்ணும் அதிகமில்ல ஜென்டில்மென்... ஜஸ்ட் 400 பில்லியன் டாலர்கள் மட்டுந்தான். சரி அதனால? அதனால என்ன.... அதிக வட்டி, அதிக தவணை, இன்னும் அதிக கடன், அதிக அவநம்பிக்கை. க்ரெடிட் ரேட்டிங் குறைவு. அனுமானிச்சதை விட பட்ஜெட் பற்றாக்குறை ரெண்டு பங்கு. அவ்வளவுதான். யாரும் முதலீடு செய்ய தயாரில்லை. ஐரோப்பிய யூனியனுடைய தலையீடு, க்ரிஸ் எடுத்த செலவு கட்டுப்பாடு மற்றும் சிக்கன நடவடிக்கைகள் எல்லாம் முதலீட்டளர்கள் கிட்ட நம்பிக்கையை உண்டாக்கலை. கொஞ்சம் ஊதாரித்தனமான செலவுக் கொள்கைகள். உதாரணத்துக்கு, அரசு ஊழியர்கள் 40 வயசுலயே ஓய்வு பெறலாம். அவ்ஙளுக்கு ஏதாவது ஆச்சுன்னா அவங்க மனைவி அல்லது மணமாகாத பிள்ளைகள்/பெண்கள் இவங்க அந்த ஓய்வூதியத்தை தொடர்ந்து வாங்கிக்கலாம். இன்னும் மத்த ஐரோப்பிய நாடுகள்ல இல்லாத அதிகப்படியான சலுகைகள். எப்பிடி சமாளிக்க முடியும்?

இப்ப சர்வதேச நிதியும், யூனியனும் சேர்ந்து பணத்தைக் கொட்டி மீட்கறோம்னு சொல்றாங்க. யூனியன்ல 15க்கு மேல நாடுகள் இருக்கு. "நான் இங்க ராப்பகலா உழைக்கிறேன். எவனோ அளவுக்கு அதிகமா செலவு பண்ணி போண்டியானதுக்கு என் நாடு ஏன் பணம் குடுத்து அந்த அழுகிப் போன கடன்களை வாங்கி வெச்சுக்கணும்? தலையெழுத்தா?"னு கேக்கறாங்க. நியாயந்தானே.

ஐரொப்பிய யூனியன்ல சேரறதுக்கு உண்டான தகுதிகளை காமிச்சு யூனியன் சேர்ந்த எல்லா நாடுகளும், பொருளாதாரத்தைப் பொறுத்தவரையில பல கட்டுப்பாடுகளையும் விதிகளையும் அனுசரிக்கணும். ஒவ்வொரு பட்ஜெட்லயும் இவ்வளவு உற்பத்தி, இவ்வளவு செலவு, இவ்வளவு முன்னேற்ற இலக்குன்னு காமிக்கணும். இந்த இலக்கு யூனியனோட மொத்த பட்ஜெட்டோட ஒத்துப் போகணும். இப்பிடியெல்லாம் இருந்தும் ஏன் இந்த மாதிரி சரிவுகள்?

ஐரொப்பிய யூனியனில் 27 நாடுகள் இப்ப இருந்தாலும் 16 நாடுகள்தான் "யூரோ"வுக்கு மாறியவை. இந்த 16 சேர்ந்தது Euro Zone. பொதுவான நிர்வாகம் ஒரு மையத்துல இருந்தாலும் , "யூரோ"வைப் பொறுத்தவரை, அது ஒரு கரன்ஸி அடிப்படையிலான யூனியன் (monetary union). அரசியல் அடிப்படையிலோ அல்லது முழுமையான பொருளாதார யூனியனோ அல்ல. பொருளாதார அடிப்படையில் சில கட்டுப்பெட்டியான நாடுகளும் உண்டு சில ஊதாரி நாடுகளும் உண்டு. கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் ஆகியும் இன்னமும் முதிர்வடையாத கரன்ஸி யூரோ. உள்நாட்டு உற்பத்தி, செலவு வகைகள், சேமிப்பு வழிகள், பல்முனை வளர்ச்சி என்று எல்லா வகையிலும் வேறுபட்ட நாடுகள்.

இப்படியான ஒரு கூட்டமைப்பில், கரன்ஸி மட்டும் ஒன்றே என்ற நிலையில் போட்டித்தன்மையை (competitive edge) தக்கவைத்துக் கொள்வது கொஞ்சம் கடினமே. முன்பு இருந்த நிலையை விட ஏற்றுமதிகள் குறையலாம். உதாரணத்திற்கு, இத்தாலி தானியங்கி வாகன வடிவமைப்பு மற்றும் உற்பத்தியில் முன்னணியில் உள்ள நாடு. இருந்தாலும் யூரோ அடிப்படையில், ஜெர்மனி உற்பத்தி ஆகும் வாகனத்துடன் ஒப்பிடும்போது விலையில் போட்டித்தன்மை குறையும்போது, அந்த விலை வேறுபாடு கூட வாகனத்தை விற்பனையிடத்திற்கு கொண்டு சேர்க்கும் போக்குவரத்துக் கட்டணத்தில் அடிபட்டுப் போகும் எனும்போது ஏற்றுமதி பாதிக்கப்படுகிறது. கரன்ஸி ஒன்றாகும்போதிலிருந்தே, வருமான குறைபாடுகளை எதிர்பார்த்து செலவினங்களையும் மாற்றியமைப்பது கட்டாயம் என்ற நிலையையும் ஏற்படுத்தியிருக்க வேண்டும். அன்னியச் செலாவணி ஏற்றத்தாழ்வுகளை சமாளிக்கும் வேலை குறைவு, சுலபமான வியாபாரம் போன்றவைகளைக் கருத்தில் கொண்டு சில ஆண்டுகளுக்குப் பிறகு என்ன மாதிரியான விளைவுகள் இருக்கலாம், எப்படி சமாளிப்பது போன்றவற்றை பின்னுக்குத் தள்ளி வைத்தனர். போகப் போக சரியாகும் என்ற அனுமானங்களும் இருந்தன. இப்போது சர்வதேச நிதியமும், யூனியனும் சேர்ந்து க்ரீஸின் கடன்களை வாங்கி 1 ட்ரில்லியன் டாலர் அளவுக்கு பணத்தைக் கொட்டினாலும் மட்டும் உடனே எல்லாம் சரியாகி விடப் போவதில்லை. க்ரீஸ் தனது செலவினங்களை இறுக்கிப் பிடிக்க வேண்டும். மக்கள் அதிக கட்டுப்பாடுகள், வரிவிதிப்புகள், வங்கி கெடுபிடிகள் எல்லாம் இருக்கும். மக்களோட வாழ்க்கை முறையே மாறலாம். ரொம்ப சிரமமாத்தான் இருக்கும்.

க்ரீஸ்க்கு பின்னால் போர்ச்சுகல், இத்தாலி, ஸ்பெயின் என்று சரிவுகள் வரிசை கட்டி நிற்கின்றன. ஸ்பெயினும் இத்தாலியும் கூட சமாளித்து விடும். ஆனால் போர்ச்சுகல் சவாலாக இருக்கும்.

இது இப்பிடியேதான் இருக்குமா? நிலையான வழி எதுவும் இல்லையா? க்ரீஸ்க்கு தனியான கரன்ஸி இருந்தா அதை மதிப்பு குறைச்சு போட்டித்தன்மையை கொண்டுவர முடியும். ஆனா யூரோவுல இருந்து வெளியில வர அரசியல் உறுதி வேணும். அது இப்போதைக்கு இன்னும் கடினமா இருக்கலாம் ஆனா நீண்டகால தீர்வு அதுவாத்தான் இருக்க முடியும்.

மக்கள் ஒப்புதலோடதான் யூரோவுக்கு வந்தோம்னு சொல்லலாம். ஆனா பின்னணி அரசியல் விளையாட்டுகள் ரொம்ப. கரன்ஸியை வெச்சுதான் இன்னிக்கு சர்வதேச அளவுல போட்டித்தன்மையை தக்க வெச்சுக்க முடியும். இல்லைன்னா அமெரிக்கா சைனா கிட்டப் போய் யுவான்-டாலர் மதிப்பை சரி பண்ணச் சொல்லி ப்ரஷர் குடுப்பாங்களா?

1999ல அர்ஜென்டினால இதே மாதிரி நிலைமை வந்து 3 வருஷம் ஆச்சு நிமிர்ந்து உட்கார. அப்ப பெசொவைத் தவிர இன்னொரு கரன்ஸியை உருவாக்கி உள்நாட்டு புழக்கத்துக்காக விட்டு, பெசோவை டாலருக்கு எதிரா குறைச்சு ஏற்றுமதியை அதிகரிச்சு, இறக்குமதிகளை தடை பண்ணி, வங்கிகள்ல இருந்த டாலரை எல்லாம் பெசோவா மாத்தின்னு தலைகீழா நின்னு தண்ணி குடிச்சு ஒருவழியா மேல வந்தது. பார்க்கலாம் க்ரீஸ் என்ன ஆகுதுன்னு. இப்போதைக்கு நம்ம நாட்டு பங்கு மார்க்கெட் ரொம்ப விழாம இருக்கணும்னு வேண்டிக்கிட்டு இருக்க வேண்டியதுதான்.



Sunday, May 9, 2010

கிச்சடி 11.05.2010

"சொறா" படத்தைப் பாக்காமயே நிறையப் பேர் நிறைய எழுதியாச்சு. நான் ஒருத்தந்தான் பாக்கின்னு நினைக்கிறேன். அது ஒரு குறையா இருக்கலாமா? நம்ம நண்பர்கள் வட்டத்துல பேசும்போது கேட்டவை:

"கமல் ஒரே படத்துல் பத்து ரோல்ல நடிச்சாரு ; விசய் பத்து படத்துல ஒரே ரோல்ல நடிக்கிறாரு (!!) "

"நல்ல வேளை.... ஒவ்வொரு படத்துலயும் வேற வேற ஹீரொயின்க... இல்லாட்டா என்ன படம் பாத்துக்கிட்டுருக்கோம்னே தெரியாது"

"இது ஒருதடவை பாக்கறதுக்கு வேட்டைக்காரன் 100 தடவை பாக்கலாம்"

"அம்பது படம் ஆயிடுச்சா? சீக்கிரம் அரசியலுக்கு இழுத்துக்கிட்டு போங்கப்பா.... அங்கயாவது வேற மாதிரி நடிக்கிறாரான்னு பாக்கலாம்"

*****************************



சிங்கப்பூரின் ரொம்பவும் எதிர்பார்க்கப்பட்ட "மரினா பே சேண்ஸ்" உல்லாச/சூதாட்ட நகரம் (சிலருக்கு நரகம்) திறந்தாச்சு. (அதுலயும் அந்த டி.என்.ஏ ஏணி மாதிரி நடைபாலம்... க்ளாஸ்... அது ஒரு ஆர்கிடெக்சுரல் மார்வல்!!) சூதாடறதுக்கு க்யூவுல நின்னு என்னவோ தலைவர் படம் ரிலீஸ் முதல் ஷோ பாக்கற மாதிரி திடுதிடுன்னு ஓடறாங்க மக்கள். யார் அதிர்ஷ்டம் எப்பிடியோ? திறந்து 3 வாரம் ஆச்சு. தினமும் ஏதாவது பிரச்னைக இருந்துக்கிட்டே இருக்கு போல. "கரண்ட் இல்ல ; ஏசி நின்னு போச்சு ; லிஃப்ட்ல மாட்டிக்கிட்டாங்க ; சிங்கப்பூர் இமேஜ் டேமேஜ்"ன்னு தினம் ஒரு புலம்பல். இதெல்லாம் நமக்கு சாதாரணமப்பா.




*****************************

நண்பர் ஒருத்தர் சவுதில வேலை பாக்கறார். ஊருக்கு வந்துபோக 3 மாசம் முன்னாலயே லீவு வாங்கி, டிக்கட் எல்லாம் புக் பண்ணிட்டு, கிளம்பறதுக்கு 2 நாள் முன்னால போய் ஆபீஸ்ல பாஸ்போர்ட் கேட்டிருக்காரு. பகீர் !!! பாஸ்போர்ட்டைக் காணோமாம் !! மறுநாளும் அகப்படல. நொந்து போய், கிளம்பற அன்னிக்கு கார்த்தால போய் நானே தேடிப் பாக்கறேன்னு சொல்லி தேடியிருக்காரு. இன்னொரு பகீர் !! டேபிள் ஆடுதுன்னு டேபிள் காலுக்கு முட்டுக் குடுக்கறதுக்காக ரெண்டு பாஸ்போர்ட்டுகளை வெச்சுருக்காங்க. எப்பிடிடா இப்பிடியெல்லாம் யோசிக்கிறீங்கன்னு மனசுக்குள்ள வசவு பாடிட்டு, அடிச்சு புடிச்சு ஊர் வந்து சேந்தாச்சு. ஆனா அவங்க ரொம்ப சாதாரணமா "அதான் கிடைச்சுடுச்சுல்ல... கெளம்பு கெளம்பு காத்து வரட்டும்"னு விரட்டிட்டாங்களாம். மூளை தலைக்குள்ளதான் இருக்கா இல்லை முட்டில இருக்கான்னு புலம்பித் தள்ளிட்டாரு. ராட்சசன் உசுரு ஏழு கடல் ஏழு மலை தாண்டி ஒரு கிளி கிட்ட இருக்குங்கற மாதிரி, நம்ம உசுரு அந்த பாஸ்போர்ட். அதுவும் சவுதி மாதிரி நாட்டுல.... ம்ம்.... என்ன சொல்ல?

*****************************

ஓசில டிக்கட் கிடைச்சுதுன்னு "அயர்ன் மேன் 2" குடும்பத்தோட போனோம். காமிக் புக்கை விடவும் காமிக்கலா இருந்தது. படம் அமெரிக்காவுல ஹிட்டாம். என்னங்கடா உங்க ரசனை? டைட்டானிக், பொசைடான், ஐடி4, ஆர்மகெட்டான்ன்னு பிரமாண்ட படங்களை எடுத்த கை காயறதுக்குள்ள இது மாதிரி பேத்தல் படங்களும் எடுக்கறீங்க. அம்புட்டு பெருசா ஒரு வில்லனை டெவலப் பண்ணிட்டு பொசுக்குனு அவன் கதையை முடிச்சுட்டு, கதையை முடிக்க முடியாம.... போங்கப்பா. அடுத்த"அயர்ன் மேன்3" ஓசி டிக்கட் கிடைச்சா ....பாக்கலாம்......பாத்துட்டு இதே மாதிரி......

*****************************

Wednesday, April 28, 2010

ஆழ்கடல்... ஒற்றைப்படகு... உறுதியான மனம்

Solo Circumnavigation - உலகத்தை தன்னந்தனியாக ஒரு படகில் சுற்றி வருவது. இமயத்தின் உச்சியை அடைவது போல ஒரு உலக சாதனையாகக் கருதப்படும் இந்தப் பயணத்தை வெகு சிலரே முயற்சி செய்துள்ளனர். 15-ஆம் நூற்றாண்டில் மெகலனின் பயணத்தை ஒப்பிட்டு அதிலிருந்து சில விதிமுறைகளை வகுத்து இந்த "தனி உலகப்பயணம்" மிகச் சிறந்த சாதனையாகக் கருதப்படுகிறது.

விதிகள் ரொம்பவே "சுலப"மானவை:
1. பூமியின் விட்டத்தில் இரண்டு நேரெதிர் இடங்களைக் கடக்க வேண்டும்.
2. பூமத்திய ரேகை, அட்சரேகை, தீர்க்க ரேகை இவைகளை இரண்டு முறை கடக்க வேண்டும்.
3. குறைந்தது 40,000 கி.மீ. தூரம் பயணம் செய்ய வேண்டும்.
4. பனாமா, சூயஸ் போன்ற பெருங்கால்வாய் வழிகளைத் தவிர்க்க வேண்டும். எனவே தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ந்யூசிலாந்து போன்ற நாடுகளின் தென்முனைகளை சுற்றியே வர வேண்டும்.
5. பயணத்தை ஆரம்பித்த இடத்திற்கே திரும்ப வந்து சேர வேண்டும்.

இப்படிப்பட்ட ஒரு கடுமையான சாதனைப் பயணத்தை மேற்கொள்ள உடல்வலிமையை விட அதிகமான மனவலிமை தேவை. நமது இந்தியக் கடற்படையின் கமாண்டர் திலிப் டோண்டே சென்ற ஆகஸ்ட் 15 அன்று இந்த பயணத்தை மும்பையிலிருந்து துவக்கி கிட்டத்தட்ட 75% தூரத்தைக் கடந்து விட்டார். இந்த பயணத்திற்காகவே கோவாவில் உள்ள ஒரு கப்பல் கட்டுமான நிறுவனத்தால் "மாதெய்" என்ற கண்ணாடிநார் பாய்மரப்படகு (fibreglass sail) பலவிதமான பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் தகவல் தொடர்பு வசதிகளுடன் விசேடமாக வடிவமைக்கப்பட்டது. இந்த பயணத்திற்கான எல்லா ஏற்பாடுகளையும் இந்திய கடற்படை செய்துள்ளது. ஏறத்தாழ ஒரு வருட காலம் பிடிக்கும் இந்த பயணத்தை தொடர்ந்து கண்காணிக்க ஒரு சிறப்பு குழுவே அமைக்கப்பட்டிருக்கிறது.

சுவாரஸ்யாமான அவரது பயண அனுபவங்களை அவருடைய இந்த வலைப்பூவில் காணலாம். இந்திய விமானப்படையில் இருக்கும் என் அண்ணன் கமாண்டர் திலிப் டோண்டேவின் நண்பர் என்பது ஒரு பெருமையான செய்தி.



ஆகஸ்ட் 28, 2009



ஏப்ரல் 22, 2010


கொசுறு: இந்த செய்தியை ஒரு நண்பரிடம் மிகவும் சிலாகித்து சொன்னபோது, "அடப் போய்யா, நாட்டுல ஆயிரம் பிரச்னைக.... முக்காவாசி ஜனத்துக்கு கஞ்சிக்கு காசில்ல.... இவுங்க கடல்ல உலகத்தை சுத்தறாங்களாம்.... உருப்படியா எதாவது பண்ணச்சொல்லு" என்றார். ஒருவகையில் நியாயமான கேள்விதான் என்றாலும், சிக்கல்கள் தீர்ந்த பின்னரே சாதனை என்றிருந்தால் நாம் என்றுமே சாதனை புரிய முடியாது.

Monday, April 26, 2010

நான் என்றால் அது கவிதை !!


என் கவிதைகளைப் வாசித்ததும்
உன் கண்களில் வழியும் ரௌத்திரம்தான்
என் மகிழ்ச்சியின் இடுபொருளாகிறது,
காரணம் நானெனில் நொடிப்பொழுதில் மிதக்கிறேன்.

உனது கோபமோ அழகைக்கூட்டிச் செய்யப்பட்டது,
ரசித்துக்கொண்டேயிருக்கலாம்.
எனது மகிழ்ச்சியோ நறநறக்கும் உன் பற்களின் ஓசையில்
பிறந்து தொடரும் உனது சினத்தில் பல்கிப் பெருகுகிறது.
அந்தப்பல் வரிசையை பார்த்துக்கொண்டேயிருக்கிறேன்.

எந்தக் கவிதையில் எந்த கருப்பொருளில் ஒளிந்திருக்கிறது
என் கவிதையின் ஜீவன் எனும் தேவரகசியங்களையெல்லாம்
நீதான் கற்றுத்தருகிறாய்.
உன் கோபங்கள் பசியாற்றுவதாய் ஒருபோதும் இருப்பதில்லை,
அதை மேலும் கிளறிக்கொண்டேயிருப்பதாயிருக்கின்றன.

நீ என் கவிதைகளின் மீது கொண்டிருக்கும் எதிர்பார்ப்பு ,
ஐ பி எல் போட்டி முடிவுகள் மீது ரசிகர்களுக்கிருக்கும்
எதிர்பார்ப்பை விடவும் அதிகமானது
என்பதை பெருமிதத்தோடு ஒப்புக்கொள்கிறேன்.

உன் சினம் அது என்னால், கவிதை எனில் அது நான் என்றிருக்க
நான் எண்ணத்தான் செய்கிறேன்.
ஆனால் நீ அதை சொல்லியே விடுகின்றாய் உன் பின்னூட்டத்தில்...

கவிதையின் முதல் வரிக்கு நீ சொல்வது,

'அய்யோ... அய்யோ... அய்யோ....'

உனக்கான எனது இரண்டாவது கவிதைக்கு நீ சொல்வது,

'முடியல.... முடியவே இல்ல....'


*****************************

கவிஞர் ஆதியின் விருப்பத்திற்கிணங்க நிகழ்ந்த கவிதை இது. இது அவருடைய இந்தக் கவிதைக்கு எதிர் கவிதையாக இருக்குமோ என்று நினைப்பீர்களேயானால் அதற்கு நான் பொறுப்பல்ல.

@ ஆதி : ச்சாட்ல வந்து கவிதையா கேட்கிறீர் கவிதை? இந்த கவிதை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா?

Wednesday, March 24, 2010

த்யானமும் வியாக்யானமும்


போன மாதம் பதிவர்கள் ஸ்வாமி ஓம்காரும் கேபிள்காரும் ... மன்னிக்க... கேபிள் சங்கரும் வந்திருந்தனர். வேலைப்பளு காரணமாக முதல் இரண்டு நாட்கள் தவிர சந்திக்க முடியவில்லை. பதிவர் சந்திப்புக்கும் செல்ல இயலாத நிலை. வந்த மறுநாள் வடபத்திரகாளியம்மன் கோவிலில் திரு.ஓம்காரின் "தினம் தினம் திருமந்திரம்" சொற்பொழிவுக்குப் போனதில் செவிக்கும் வயிற்றுக்கும் நிறையவே உணவு கிடைத்தது.

சொற்பொழிவின் முடிவில் கேள்வி நேரத்தின்போது "த்யானம் செய்வதன் மூலம் நாம் அடையும் பயன்கள் என்ன?" என்ற கேள்வி எழுந்தது. அதற்கு ஸ்வாமி ஓம்கார் பதிலிறுக்கும்போது "பயன்கள் என்று எதுவும் சொல்ல முடியாது. அது ஒரு அனுபவம். அது தனிப்பட்ட முறையில் அவரவர் அனுபவத்தில் உணர வேண்டியது" என்று சொன்னார். அதை ஒட்டி நாமும் ஒரு இடுகை இடலாமே என்று கணநேரத்தில் தோன்றினாலும், இன்றுதான் அதை தட்டச்ச நேரம் கிடைத்தது.

பொறுப்பி : இந்த இடுகையிலுள்ள கருத்துகள் நான் படித்து, கேட்டு, உணர்ந்ததன் மூலமான சொந்தக் கருத்துக்களே.

***

அரசன் ஒருவனுக்கு திடீரென ஒருநாள் ஒரு கேள்வி எழுந்தது. அந்த ஊரிலிருந்த ஒரு ஆசிரமத்தில் உள்ள துறவிகள் என்ன செய்து உயர்ந்த நிலையை அடைந்தார்கள்? தன்னை விட அதிகமாக மக்களால் மதிக்கப் படுவதற்கு என்ன காரணம்? இதை தெரிந்து கொண்டு வரலாம் என்று அங்கே சென்று தலைமை குருவை சந்தித்தான்.

"நீங்களெல்லாம் இங்கே என்ன செய்து இப்படி ஒரு உயர்ந்த நிலையை அடைந்திருக்கிறீர்கள் என்று தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன். கொஞ்சம் விளக்க முடியுமா?

"தாராளமாக. என்னோடு வாருங்கள். இதோ படித்துறை. இங்கே நாங்களெல்லாம் குளிக்கிறோம். இதோ கற்கள். இங்கே துணிகளைத் துவைத்து அந்த மரங்களில் உலர்த்தி காய வைக்கிறோம். பிறகு அதோ அந்த சிறிய கூடத்தில் அமர்ந்து உண்கிறோம். இந்த மடத்தில் மக்களை சந்திக்கிறோம். அவ்வளவுதான்..."

மிகுந்த கோவத்துடன் கேட்டான். "என்னை கேலிக்குள்ளாக்குவது போல இருக்கிறதே? அதோ... அந்த தியான மண்டபத்தில் என்ன செய்கிறீர்கள்? அங்கேதானே விஷயமே இருக்கிறது...."

"அதுவா? நீ என்னிடம் கேட்டது நாங்கள் என்ன செய்கிறோம் என்பது. நாங்கள் செய்வதையெல்லாம்தான் உனக்கு எடுத்துச் சொன்னேன். அந்த தியான மண்டபத்தில் நாங்கள் ஒன்றும் செய்வதில்லை. அதனால்தான் உன்னிடம் சொல்லவில்லை. "

***

த்யானம் "செய்தல்" என்பதே சரியா? த்யானிப்பதே நாம் செய்து கொண்டிருக்கிறவற்றை எல்லாம் ஒவ்வொன்றாக விடுவதற்காகத்தான். தியானம் என்பதன் பொருள் "ஆழ்ந்து நோக்குதல்". மனம் அமைதியாவது ஒன்றுதான் நாம் தியானத்தில் இருப்பதன் மூலம் "அடைவது". ஆனால் மனத்தை ஒருமுகப்படுத்தி தியானத்தில் அமர்வது அவ்வளவு சுலபம் அல்ல. இன்றைய பரபரப்பான உலகில் ஒரே சமயத்தில் பல வேலைகளை (multi tasking) செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கும்போது தியானிப்பது என்பது கடினமான காரியமே. தியானத்தில் இருக்கலாம் என்று அமரும்போதுதான் ரேஷன் சர்க்கரை, மின்வெட்டு, தண்ணீர் வராதது, கொடுத்த கடன் எல்லாம் நினைவில் ஓடும். மனதை ஒருமுகப் படுத்தி எண்ணங்களே இல்லாமல் ஓயச் செய்வது என்பது எளிதில் கைகூடாத ஒரு கலை.

அதனால்தான் நம் முன்னோர்கள் ஏதோ ஒன்றில் மனதை நிறுத்தி அதனை ஆழ்ந்து கவனிப்பதன் மூலம் மனதை அமைதிப்படுத்த முடியும் என்று உணர்ந்தனர். உணர்த்தினர். அதற்கு பக்தி ஒரு சிறந்த வழி எனவும் வலியுறுத்தினர். கண்ணனோ கீதையில் கர்ம யோகத்தை வலியுறுத்தினான். ஏனெனில் பக்தியை வலியுறுத்துவது கூட ஒரு சாராருக்கு ஏதோ ஒன்றைத் திணிப்பது போல இருக்கலாம் என்பதாலும், உலக வாழ்க்கையில் செயல் (கர்மம்) இல்லாமல் இருக்க முடியாது என்பதால் செய்யும் செயலில் மனதை நிறுத்தி செயலையே தியானிப்பதன் மூலம் மனம் அமைதி பெறும் என்பது கண்ணனின் பார்வை.

(ஒரு இடைச்செருகல். கர்ம யோகத்தை சொல்லும்போது "செயலைச் செய்; பலனை எதிர்பாராதே" என்ற விளக்கம் பரவலாக இருக்கிறது. ஆனால் கீதையில் சொன்னது "செயலைச் செய்வதில் மட்டுமே நமக்கு choice உண்டு ; அதன் விளைவில் அல்ல ; எப்போதும்... ; எனவே விளைவில் பற்று இல்லாமல் இரு ; அதற்காக செயல் செய்யாதவனாகவும் இருக்காதே" என்பதே. அதனால்தான் செய்யும் செயலையே தியானித்து செய் என்கிறான் கண்ணன்)

என்றாலும் இப்படித்தான் தியானிக்க வேண்டும், இதுதான் சிறந்த வழி என்றெல்லாம் எதுவும் இல்லை. அவரவருக்கு தெரிந்த முறையில் ஒரு பொருளையோ, ஒரு கருத்தையோ பற்றி ஆழ்ந்து கவனிப்பது கூட ஒரு வகையில் தியானமே. நமக்குப் பிடித்த நடிகர், தலைவர், சினிமா, மலர், பாடல் , முதுகு வலி, கொசுக்கடி.... இப்படி எதை வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் ஆழ்ந்து அனுபவிக்கும்பொழுது முடிவில் அது தன்னை - ஒரு உண்மையை, ஒரே உண்மையை - வெளிப்படுத்தும். அது ஒரு அனுபவம். ஆனந்த அனுபவம். ஒரு உணர்வு. ஒரு awareness. விவரிக்க வார்த்தைகளற்ற உணர்வு. பிறரிடம் விவரிக்க தோன்றக் கூட செய்யாத ஒரு உணர்வு. அந்த awarenessதான் மோட்சம், நிர்வாணம், சூன்யம், enlightenment, liberation என்று பல விதமான வார்த்தைகளால் சொல்லப்படுகிறது.

பக்தி யோகமோ, கர்ம யோகமோ, நாத யோகமோ, ஸ்புரண யோகமோ எதை வேண்டுமானாலும் - அதன் மையக்கருத்து அல்லது தன்மை மனத்தை அமைதிபடுத்துவது ஒன்றே என்று இருக்கிற வரையில் - பின்பற்றலாம். வழி எதுவாக இருந்தாலும் முடிவு ஒன்றுதான். அவரவர் சொந்த அனுபவத்தில் பெறவேண்டிய ஒன்றை யாரும் யாருக்கும் விளக்கவோ, விளங்க வைக்கவோ முடியாது.

அப்படி விளங்க முடியாத ஒன்றுக்காக எதற்காக மெனக்கெட வேண்டும்? விளங்காத புதிராகவே இருந்து விட்டுப் போகட்டுமே.... எனக்கு என்ன இழப்பு வந்து விடும்? மிகச்சரி. தியானத்தில் "அடைவது" என்று ஒன்றும் இல்லை என்பதால் "இழப்பு" என்றும் எதுவும் இல்லை. சரியா?

Sunday, February 21, 2010

கிச்சடி 08.03.2010


மன்னிக்கணும் மக்களே.... ரொம்ப நாளாச்சு வலைப்பக்கமா வந்து. "ஏன் இன்னும் எழுதல? என்னதான் வேலைன்னாலும் ஒரு இடுகை கூட எழுத முடியாதா என்ன? எப்ப அடுத்த இடுகை வரும்னு உங்க திண்ணைலயே குத்த வெச்சு உக்காந்து முட்டி வலிக்குது. சீக்கிரம்... சீக்கிரம்.... " இப்பிடியெல்லாம் தினமும் ஏகப்பட்ட கடுதாசி, மெயில், ஃபோன் வந்ததுன்னு சொன்னா நீங்க நம்பவா போறீங்க? ஒரு 'பிரபல' பதிவன் வாழ்க்கைல இதெல்லாம் சாதாரணமப்பான்னு கவுண்டர் தட்டிக் குடுத்ததுனால போனாப் போகுதுன்னு விட்டுட்டு மறுபடி வந்தாச்சு. ம்ம்..ம்ம்.. மேல... மேல....

* * * * * * * * * * * * * * *

கொஞ்ச நாள் அசந்து மறந்து இருந்தா நாட்டுல என்னென்னமோ நடந்து போச்சு.

முதல்ல மகிழ்ச்சிகள் :

- கேபிளார் & பரிசலாரின் புத்தக வெளியீடுகள்
- கேபிளார் வழக்கம்போல தினம் 5000, 6000 ஹிட்டுனு போட்டு 8 லட்சம்
தாண்டிட்டார்
- நண்பர் அருமை அண்ணன் அப்துல்லா மூணு இடுகைகள் எழுதிட்டார்
- சிங்கை சிங்கம் "அறிவிலி ராஜேஷ்" இடுகைகளை கடுகு, ஜெ.மோ. போன்ற ஜாம்பவான்கள் பரிந்துரைத்திருக்கிறார்கள்
- பல புதிய பதிவர்கள் வருகை

எல்லாருக்கும் ஊர்ல உலகத்துல இருக்கற எல்லா சாமி மற்றும் ஆசாமிகளோட ஆசிகளும் வாழ்த்துகளும். சும்மா வெச்சுக்கோங்க.....

சில அசௌகரியங்கள் :

- பழமையார் vs வினவு குரூப்
- தண்டோரா vs வினவு குரூப்
- பரிசலாருக்கு நேர்ந்த விபத்து

எல்லாரும் இப்ப பரம சௌக்கியம்.

* * * * * * * * * * * * * * *

கதவைத் தொறந்து வெச்சா காத்து வருமா? வரும் வரும். ஆனா கேமராவை ஆன் பண்ணி வெச்சா? என்னென்னமோ வந்துது.

"நித்தமும் ஆனந்தமே" சொன்னவர் வீட்டினுள்
சத்தமின்றி யோர்கருவி வைத்து - அத்தனையும்
அம்பலம் ஏற்றிட அயராது (உ)ழைத்திட்ட
பின்புலத் தாருக்கு நன்றி.

* * * * * * * * * * * * * * *

சமீபத்துலதான் "அபியும் நானும்" டிவில பாத்தேன். சில டயலாக்குகள் அற்புதம். குறிப்பா "உனக்கு சரியான வாழ்க்கைத் துணையைத் தேடிக்கறது உன்னோட உரிமை மட்டுமில்லை; கடமையும் கூட"ன்னு பிரகாஷ்ராஜ் த்ரிஷா கிட்ட சொல்றது.... அருமை. ராதாமோகனுக்கு சுத்திப் போடணும்.

இன்னொரு படம் "The Shahshawnk Redemption". படத்தைப் பத்தியோ மார்கன் ஃப்ரீமன் நடிப்பைப் பத்தியோ, டைரக்சன், எடிட்டிங் பத்தியோ சொல்ல எனக்கு அவ்வளவு அறிவு இல்லை. வாய்ப்பு கிடைச்சா நீங்களே பாத்து அனுபவியுங்க.

நம்மாளு க்றிஸ்டஃப் வால்ட்ஸ் ஆஸ்கார் வாங்கிட்டாரு. Inglourious Bastards பத்தி நான் ரொம்ப சிலாகிச்சு எழுதும்போதே நினைச்சேன். இதெல்லாம் போய் ஊருக்குள்ள சொல்லுங்க "அண்ணன் நல்லவரு ; ம்ம்ம்ம்... வல்லவரு ; ஆஸ்காராலாஜி தெரிஞ்சவரு "ன்னு.

* * * * * * * * * * * * * * *

கீ போர்ட் கத்துக்கணும்னு ரொம்ப நாளா ஆசை. நம்ம ஆசையைப் பாத்து புல்லரிச்சுப் போன ஒரு நண்பர் "ஆஹா... அதுக்கென்ன... நானாச்சு"ன்னு சொல்லிக் குடுக்க ஆரம்பிச்சுட்டாரு. அடுத்த மாசம் "பில்ஹார்மோனிக்" ஆர்கெஸ்டிராவுல ஒரு சிம்ஃபனி பண்ணலாமான்னு யோசிச்சுக்கிட்டுருக்கேன். "ஹங்கேரில அவுக கூப்டாக ; லண்டன்ல இவுக கூப்டாக ; ஆஸ்திரியாவுல அல்லாரும் கூப்டாக" அப்பிடின்னெல்லாம் நான் பீலா உடற ஆள் கிடையாதுன்னு உங்களுக்குத் தெரியாதா என்ன?

ஆகவே, ஆன்றோர்களே சான்றோர்களே... கீ போர்ட் (அல்லது எதோ ஒண்ணு) கத்துக்க ஆசையிருந்தா உட்னே ஆரம்பிங்க. என்ன மாதிரி ஏப்ப சாப்பைகளே கத்துக்க முடியும்போது நீங்கள்லாம் ஓஹோ..... அப்பறம் நான் "தேவாரம்" கம்போஸ் பண்ண ஹங்கேரிக்கு கூட்டிக்கிட்டு போகலைன்னு வருத்தப் பட்டு பிரயோஜனம் இல்லை

* * * * * * * * * * * * * * *