Monday, June 15, 2009

மனத்திரை

பாரிஸ். மே 29, 2009:

"கவலை வேண்டாம் திரு. பாட்ரிக். இது ஒரு சிறிய பிரச்னைதான்.... சில வாரங்களில சரியாகி விடும். உங்கள் ஒத்துழைப்பு மட்டும் மிக முக்கியம். முடிந்தால் ஒரிரு மாதங்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு ஓய்வெடுக்கலாமே. யோசித்துப் பாருங்கள்... மற்றபடி பயப்படும்படியாக ஏதுமில்லை... மகிழ்ச்சியாக இருங்கள்...."

"நன்றி டாக்டர் கொன்சலெஸ். நீங்கள் இவ்வளவு சொன்னபிறகு எனக்கு இறுக்கம் கொஞ்சம் குறைந்த மாதிரி இருக்கிறது. விடுப்பு எடுப்பது பற்றி யோசிக்கிறேன். நன்றி.... "

"சரி.... இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் வாருங்கள். அதற்குள் நானும் டாக்டர்.லினர்ட் அப்பாயிண்ட்மென்ட் ஏற்பாடு செய்கிறேன்."

"நன்றி டாக்டர்... வருகிறேன்"

இரண்டு வாரங்களாகவே எனக்கு இந்த வினோதமான பிரச்னை. கனவுகள். இரவில் தூங்கும்போதுதான் என்றில்லை. எந்த நேரத்திலும்... எந்த இடத்திலும்... என்ன செய்து கொண்டிருக்கும்போதும்..... மூளைக்குள் கனவு போல காட்சிகள் ஓடுகின்றன. திடீர் திடீரென்று வந்து... தொந்திரவு அதிகம். பல சமயங்களில் ஓரிரு வினாடிகள் என் சுயகட்டுப்பாட்டை இழந்து மூளைக்குள் நிகழும் காட்சிகளில் நானும் ஒரு பாத்திரமாகி ஏதேதோ விநோதங்கள் நிகழ்ந்து சிலசமயம் பிறர் சிரிக்கும்படியாகவோ முகஞ்சுளிக்கும்படியாகவோ அல்லது அதிர்ச்சியடையும்படியாகவோ ஆகிவிடுகிறது.

அப்படித்தான்... போன மாதம் ஒரு நாள்... பாஸ்தா சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது வேலைக்குக் கிளம்புவது போல காட்சிகள் வந்து பாஸ்தாவை இடுப்பில் பெல்ட் போல அணிய முயற்சித்து மனைவியும் மகனும் புரையேறும் அளவுக்கு சிரித்தார்கள். முதலில் ஏதோ விளையாட்டாகத் தோன்றினாலும் அடிக்கடி நிகழவே கொஞ்சம் கலக்கமானேன். வேலைக்கு இடையேயும் வர ஆரம்பிக்கவே பயந்துதான் போனேன். பிறகு என் மனைவி தன் நண்பர்களிடம் விசாரித்து.... இதோ இப்போது பாரிஸின் தலைசிறந்த "சைக்கொ அனலிஸ்ட்"டான டாக்டர் வின்சென்ட் கொன்சலெஸ்ஸை சந்தித்து விட்டு வருகிறேன்.

என் பிரச்னையை முழுவதும் கேட்டபின்னர், "சைக்கோ அனாலிசிஸ்" என்று சில "இங்க் ஸ்ப்லாஷ்" படங்களைக் காண்பித்து, அவற்றைப் பார்த்தது மனதிம் முதலில் எழும் நினைப்பை அப்படியே சொல்லச் சொன்னார். நானும் வண்ணத்துப்பூச்சி, கழுகு, மீன் பிடிக்கும் கிழவன்... என்று மனதில் தோன்றியவைகளைச் சொன்னேன். இன்னும் ஏதேதோ கேள்விகள் கேட்ட பிறகு இது ஒரு வகையான "பார்டிஸிபேடிவ் ஹலூசினேஷன்" என்றும் இன்னுமொரு டாக்டரிடமும் ஆலோசனை கேட்டுக் கொள்ளலாம் என்றும் கூறியிருக்கிறார். பார்ப்போம்....

* * *

மனைவி காரை செலுத்திக் கொண்டிருந்தாள். "எனக்கு மட்டும் ஏன்?" என்ற வழக்கமான கேள்வியை மனதுக்குள்ளேயே உருட்டி புரட்டிக்கொண்டிருந்தேன். என் மனைவி "ஃப்ரெண்ட்ஸ்" தொடரின் சில நகைச்சுவைக் காட்சிகளை விவரித்து என்னை சிரிக்க வைக்க முயற்சித்து தோல்வியடைந்து மௌனமானாள்.

கார் ட்ரைவ்-இன் மெக்டொனல்டில் நிற்க நான் இரண்டு பர்கர்கள் ஆர்டர் செய்தேன். ஜன்னலுக்கு வெளியே இரண்டு கைகளையும் நீட்டி பர்கரை வாங்கினேன். ஏனோ அவன் பர்கரை கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருந்தான். நான் இன்னும் கெட்டியாகப் பிடித்து வாங்க முயற்சி செய்தேன்.

"ஏசுவே.... பார்கோமீட்டரை ஏன் பிடித்து இந்த இழு இழுக்கிறாய்? என்ன ஆச்சு உனக்கு?" மனைவி கத்த.... நான் சட்டென்று விழித்தேன். கைகளை உள்ளே இழுத்துக் கொண்டேன். பாழாய்ப்போன கனவு.....

"என்ன... மறுபடியும் கனவா? சரி. டாக்டர்தான் சரியாகி விடும் என்று சொல்லி விட்டாரே? அதையே நினைத்து கவலைப்படாதே......"

காரை விட்டு இறங்கி அசட்டுச் சிரிப்புடன் அவளுடன் கடைக்குள் நுழைந்தேன்.

* * *

மே 30, 2009.

மேலதிகாரியிடம் எவ்வளவோ மன்றாடியும் ஒரு பயனும் இல்லை. ஏற்கெனவே ஆட்கள் குறைவு என்பதாலும், அதுவும் இந்த இரண்டு வாரங்களுக்கான திட்டத்தை மாற்றவே முடியாது என்பதாலும் அதற்குப் பிறகு என் விருப்பம் போல விடுப்பு அளிப்பதாகச் சொல்லி விட்டார். சில மாதங்களுக்கு முன்பு, ஒரு முக்கிய பயிற்சிக்காக என்னைத் தேர்வு செய்து "துலூஸ்"க்கு 2 வாரங்கள் அனுப்பியதை வேறு நினைவு கூர்ந்து கொஞ்சம் தர்மசங்கடத்திற்கு உள்ளாக்கினார். வேறு வழியில்லாமல் நாளைக் காலை வருவதாக ஒப்புக் கொண்டு விட்டேன். மனைவியின் தோழியின் ஆலோசனைப் படி அரை மணி நேரம் தியானத்தில் அமர்ந்ததில் மனது கொஞ்சம் லேசானது போல் தோன்றியது. எந்த கனவுத் தொந்திரவுகளும் இல்லாமல் நிம்மதியாக உறங்கினேன். மறு நாள் காலை சீருடைகளை அணிந்து கொண்டு வேலைக்குக் கிளம்பி விட்டேன்.

* * *

மே 31, 2009. இரவு 8 மணி.

போன் மணி அடித்தது.

"ஹலோ.... வியோலா பாட்ரிக் பேசுகிறேன்..."

"ஹலோ... திருமதி பாட்ரிக். நான் டாக்டர் வின்சென்ட். திரு. பாட்ரிக் இருக்கிறாரா? நாளை மாலை 5:30க்கு டாக்டர்.லினர்ட்டை சந்திக்க வேண்டும். உங்கள் கணவரிடம் சொல்லி விடுங்கள். நீங்களும் அவசியம் வர வேண்டும். "

"அவர் இப்போது பாரிஸில் இல்லை. நேற்று காலையில் வேலைக்குப் போனார். அவருக்கு இந்த வாரம் ரியோ-டி-ஜனெரோ வழித்தடம் கொடுக்கப்பட்டுள்ளது. இன்று இரவுதான் அவர் அங்கிருந்து கிளம்புகிறார். நாளைக் காலை வீட்டிற்கு வந்து விடுவார்."

"ஓ..."

"2 மாதங்களுக்கு முன்னால் துலூஸில் மேல்நிலை விமானப் பயிற்சிகள் முடித்த பின்னர் அவருக்கு இந்த நீண்ட தூர வழித்தடங்கள் கொடுக்க ஆரம்பித்துள்ளனர்..."

"நல்லது... நாளை மாலை 5:30க்கு சந்திப்போம்...."

* * *

பாரிஸ். ஜூன் 1, 2009. காலை 7:30.

வியோலா தான் வேலைக்குக் கிளம்புவதற்கு முன் ஓட்மீல் சாப்பிட்டுக் கொண்டே தொலைக்காட்சியில் செய்திகளைப் பார்த்துக் கொண்டு இருந்தாள். திரையில் "சற்று முன் வந்த செய்தி" என்று ஒளிர்ந்தது. கவனித்தாள். "நேற்று இரவு ரியோ டி ஜெனெரோவில் இருந்து பாரிஸுக்குக் கிளம்பிய ஏர் ஃப்ரான்ஸ் விமானம் இடையில் கட்டுப்பாட்டு மையங்களுடனான தன் தொடர்பை திடீரென இழந்தது. பிரேசில் மற்றும் ஃப்ரான்ஸ் விமானப்டை விமானங்கள் தொலைந்து போன விமானத்தைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்"


"ஏசுவே..... என் பாட்ரிக்......"

* * *


அதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு... பிரேசில் நேரம் அதிகாலை 2:15 ....

நான் நீரில் மூழ்கிக் கொண்டிருக்கிறேன். கொஞ்ச நேரம் முன்பு நான் குதிரைச் சவாரி செய்து கொண்டிருக்கும்போது எதிரே கருப்பு பூதம் போல திடீரென்று ஏதோ தோன்ற, குதிரையை நிறுத்தும் நோக்கில் நான் வலக்கையில் பிடித்திருந்த லகானை சடாரென்று பின்னால் இழுத்தது லேசாக நினைவிருக்கிறது.

ஆ..... நான் செலுத்திக் கொண்டிருந்த விமானம் என்ன ஆயிற்று? ஐயோ... 216 பயணிகள்.... என் நண்பர்கள் 12 பேர்.... என்ன ஆனார்கள்?? ஏசுவே...........

ஏர் ஃப்ரான்ஸ் பைலட் பாட்ரிக் கார்னியே அட்லாண்டிக் பெருங்கடலில் மூழ்கி.....


* * *

இது 'உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது.



Wednesday, June 10, 2009

கிச்சடி 13.06.2009

போன வாரம் ஒரு சொந்த வேலையா அடியேன் சென்னை விஜயம். வந்த அன்னிக்கே நண்பர் ஆதிக்கு போன் பண்ணி அட்டெண்டன்ஸ் போட்டுட்டேன். ஆச்சச்சச்சச்சரியமா சாயுங்காலம் அவரே வீட்டுக்கு வரேன்னு சொன்னார். ஆஹா... இதை விட என்ன வேணும்? தலைவர் வந்தார். வீட்டுக்குள்ள 10 நிமிஷமும் பார்க்கிங்ல 1 மணி நேரமும் பேசினோம். அவரோட ரசனைகள், எண்ண ஓட்டங்கள்... எல்லாமே ஒருவித ஆச்சரியமா இருந்தது. எல்லாத்துக்கும் மேல அவரிடம் ரொம்ப பிடிச்சது நெகடிவ் விமர்சனங்களை எந்த விதமான வெறுப்பும் இல்லாம சொல்றது. Being critical without prejudice is an art....யாரோ சொன்னது.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சிடிக்குள்ள ஒரு வேலையா சுத்திக்கிட்டுருந்தபோது அண்ணன் அப்துல்லாவையும் சந்திச்சு ஒரு சலாம் போட்டுட்டு வந்தேன். கவுண்டமணி மாதிரி "நாங்கள்லாம் பிசி.... பிசி மீன்ஸ் பிசி...."ன்னெல்லாம் அலப்பறை பண்ணாம வழக்கம் போல கலகலப்பான சந்திப்பு. கொஞ்சமே கொஞ்ச நேரம்னாலும் நிறைவா இருந்தது. அதுலயும் அவர் "ஆதி உங்க வீட்டுக்கே வந்தாரா? நீங்க பெரிய ஆளுதான்..."னு சொன்னபோது ஆதியை நெனைச்சு பெருமையா இருந்தது. If I only had a little humility, I'd be perfect - டெட் டர்னர் சொன்னது எவ்வளவு உண்மை !!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

பொருளாதாரம் சறுக்குதா சுருங்குதான்னு அனலிஸ்டுக மண்டையை ஒடச்சுக்கிட்டுருக்காங்க. ஆனா ஜவுளிக்கடைலயும், நகைக்கடைலயும் மக்கள் அலைமோதறதைப் பாத்தா தலை சுத்துது. ரியல் எஸ்டேட்காரங்க "எங்க போயிடுவீங்க? எங்க கிட்டத்தானே வந்தாகணும்..."ன்னு பல்லைக் குத்திக்கிட்டு சாவகாசமா உக்காந்திருக்காங்க. ஸ்பென்சர்லயும், சென்னை சென்டர்லயும் பார்க்கிங் கிடைக்க 1 மணி நேரம் ஆகுது. சத்யம், ஐ-நாக்ஸ் வீக் எண்ட்லயெல்லாம் ஹவுஸ் ஃபுல்லாம். பிஸ்ஸா டெலிவரி சுறுசுறுப்பா நடந்துக்கிட்டுதான் இருக்கு. மொபைல் நெட் ஒர்க் ட்ராஃபிக் அதிகமாயிருக்காம். புதுசா இன்னும் சில மொபைல் ஆபரேட்டர்க வேற.

எங்க ஏரியால இருக்கற ஒரு சிறுவர் இல்லத்துக்குப் போனபோது கேட்ட செய்தி: அந்த இல்லத்துக்கு ஐ.டி.ல வேலை செய்யற பலர் - குறிப்பா பேச்சிலர்ஸ் - கிட்ட இருந்து வர நன்கொடைகள் அறவே நின்னு போச்சாம். போன பத்திக்கும் இந்த செய்திக்கும் தொடர்பு இருக்கா? When you need to trim the corners, try not to choose left or right. Choose the wrong one.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சென்னை இன்டெர்நேஷனல் டெர்மினல். ராத்திரி 10 மணிக்கும் 2 மணிக்கும் நடுவுல கிட்டத்தட்ட ஒரு டஜன் டிபார்ச்சர்ஸ் ஏழெட்டு அரைவல்ஸ். பயணிகள் கூட்டம் அலை மோதுது. ரெண்டே ரெண்டு எக்ஸ்-ரே மெஷின்கதான். செக்-இன் க்யூ க்ளியர் ஆக 3 மணி நேரம் ஆகுது. "ஏர்போர்ட் மேனேஜர்" கிட்ட போய் புகார் பண்ணலாம்னு போனா அவர் மேஜை மேல காலைப் போட்டுக்கிட்டு கண்ணை மூடிக்கிட்டு இருக்காரு (யோசிக்கிறாராம் !!). இன்னும் ஏழெட்டு பேர் அரட்டை அடிச்சுக்கிட்டு இருக்காங்க. "போங்க சார்.... இவ்வளவு பேர் நிக்கிறாங்க இல்ல... எல்லாம் க்ளியர் ஆகும் போங்க.... ராத்திரி நேரம் ஸ்டாஃப் கம்மி. நீங்கதான் சீக்கிரம் வரணும்..."

இமிக்ரேஷன்ல க்யூ. செக்யூரிடி செக் க்யூ பயமுறுத்துது. லவுஞ் அக்சஸ் இருக்கறவங்க கூட நேரமாயிடும்னு பயந்து போகாததால லவுஞ்செல்லாம் ஈயாடுது. "டிபார்ச்சர் அனௌன்ஸ் பண்ணிட்டாங்க.... என்னை முன்னாடி அனுப்புங்க"ன்னு அவனவன் கதறரான். "அட... போய் க்யூல நில்லுங்க... போர்டிங் பாஸ் வாங்கிட்டீங்க இல்ல... உங்களை விட்டுட்டு போயிட மாட்டாங்க...." எல்லா ஃப்ளைட்டும் குறைஞ்சது 1/2 மணி நேரமாவது டிலே. ப்ளானிங்குக்கு ஸ்பெல்லிங் கூட தெரியாது போல. Failing to plan is planning to fail.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

2 பவர் 5


பெரும்பாலோருக்கு சலிப்பை ஏற்"படுத்தியுள்ள" இந்த சங்கிலித் தொடர் இடுகைக்கு அழைத்த ஆதிமூலகிருஷ்ணன் மற்றும் குசும்பனுக்கு ந(ர நர நர)ன்றி !!!


1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

இந்தப் பேரு வந்ததில்லீங்க.... பெத்தவங்க வெச்சது :) ரொம்பப் பிடிக்கும் !!

2.கடைசியாக அழுதது எப்பொழுது?

மகள் பிறந்தபோது... ஆனந்தம் மிகுந்து அழுகைல முடிஞ்சுது !!

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

இருங்க... அதைத்தான் ரொம்ப நேரமா முயற்சி பண்ணிட்டே இருக்கேன்... என்ன எழுதினேன்னே தெரியல... யாராவது மருந்துக்கடைக்காரங்க கிட்ட காமிச்சு தெரிஞ்சுக்கிட்டு வந்து சொல்றேன்...

4).பிடித்த மதிய உணவு என்ன?

மதியத்துக்கு உணவு கிடைச்சாலே போதும். பிடிச்சது பிடிக்காததெல்லாம் நீங்களாவது கேக்கறீங்களே.... அவ்வ்வ்வ்வ்வ்....

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

நண்பர்களோடதானே.... கண்டிப்பா !!

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

உடுமலைக்கு பக்கத்துல இருக்கற திருமூர்த்தி அருவி கிட்ட கேட்டுப் பாருங்க... அதுவே "போதும்டா... போய்த் தொலைங்கடா..."ன்னு சொல்ற வரைக்கும் குளியலோ குளியல்தான்.


7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

கண்கள் !!

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடித்த விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

டாய்... யாரைப் பாத்து என்ன கேள்வி? எட்றா வண்டியை...

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விஷயம் எது?

கிட்ட வாங்க சொல்றேன்.... . . . . . . . . . அதான் !! யார் கிட்டயும் சொல்லிடாதீங்க. சரியா?

10.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?

இதை எழுதக் கூப்ட்ட ஆதியும் குசும்பனும். இது ஒரு போர் தொடர்னு தெரிஞ்சும் கோத்து விட்டதுக்கு முதுகுல நாலு போட வேணாம்? :))))))))))))

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?

எனக்கு கலர் ப்ளைன்ட்னஸ் !! இஃகி !! இஃகி !!

12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

வீட்டுல "பாட்டு" கேக்கறதெல்லாம் சபைல வெச்சு சொல்லச் சொல்றீங்களே... நியாயமா?

13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்குஆசை?

ரெஃபர் கொஸ்டீன் நம்பர் 11.

14.பிடித்த மணம்?

நண்பர்களின் திருமணம். நல்லா மூக்கு பிடிக்க மூணு வேளை சாப்பாடு கிடைச்சா விடுவமா?

15.நீங்க அழைக்கப் போகும் நபர்கள் யார் யார் ? ஏன் உங்களுக்கு அவர்களை பிடித்து உள்ளது. அவர்களை அழைக்கக் காரணம் என்ன ?
அழைச்சதுக்கு அப்பறம் அவங்களுக்கு என்னைப் பிடிக்காம போயிட்டா என்ன செய்யறதுன்னு யோசனையா இருக்கு :(

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?

அது ஒரு பெரிய குசும்புலம்பலுங்க !!

17. பிடித்த விளையாட்டு?

பல்லாங்குழி, பிள்ளையார் பந்து.

18.கண்ணாடி அணிபவரா?

மூக்குக் கண்ணாடின்னா - ஆமாம். முகம் பாக்கற கண்ணாடின்னா - இல்லை.

19.எப்படிப் பட்ட திரைப்படம் பிடிக்கும்?

"எலிப்பத்தாயம்" பாத்துருக்கீங்களா? அது மாதிரி படங்கள்.

20.கடைசியாகப் பார்த்த படம்?

நண்பர் வீட்டுல நேத்து பாத்த (அவரோட மனைவி வரைஞ்ச) மயில் படம்.

21.பிடித்த பருவ காலம் எது?

அந்த மாதிரி புத்தகமெல்லாம் படிச்சதில்லீங்க. என்ன கண்றாவி கேள்வி இது?
சே !!

22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்:

இது கேள்வி. LKG படிக்கற மகளோட ABCD புத்தகம்.

23. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

ப்ளூ ஸ்க்ரினை எப்படி மாத்தறது? புரியலயே...

24.உங்களுக்கு பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

நாம விடற குறட்டை ; மத்தவங்க விடற குறட்டை.

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

அடச்சே... இதுக்குதான் கிளம்பும்போது மீட்டர் ஸ்கேல் எடுத்துக்கிட்டு வரணும்கறது. இப்ப பாருங்க அவஸ்தைய....

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

இன்னும் அது வேறயா?

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

நானெல்லாம் எப்பிடி பதிவு எழுத வந்தேன்?? எப்பிடி கவிதையெல்லாம் எழுதறேன்? அதுவும் ஆதிமூலகிருஷ்ணனே ஃபோன் போட்டு கூப்ட்டு பாராட்ற அளவுக்கு !!

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

இப்ப இந்த பதிவை எழுதிக்கிட்டுருக்கறது யாருங்கறீங்க? (அட... இப்ப வெளிய வந்து படிச்சுக்கிட்டுருக்கு பாருங்க !!)

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

ஆபீஸ் !!

30.எப்படி இருக்கணும்னு ஆசை?

எப்பிடி இருக்கக் கூடாதோ அப்பிடி இல்லாம இருக்கணும்னு ஆசை.

31.மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம் ?

நம்ம கற்பனைக்கு எல்லாம் ஒரு எல்லை உண்டுங்க.

32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..?

வாழ்வு- இந்த பதிவு மாதிரி மொக்கையா இல்லாம ஜ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜாலியா இருக்கணும் !!


டிஸ்கி : 2, 6, 7, 30, 32 க்கு மட்டும் எப்பிடியோ மொக்கையா பதில் வந்துடுச்சு. மத்த பதிலெல்லாம் நிஜம்மா சீரியஸ் !!

Monday, June 8, 2009

கி.பி.2209ல் ஒரு நாள்...


கினோவா கிரகம். கிட்டத்தட்ட பூமியைப் போன்ற வளிமண்டலத்துடன் கூடிய ஆனால் ஈர்ப்பு சக்தி குறைவான கிரகம். கண்டுபிடிக்கப்பட்டு மனிதன் குடியேறி 20 பூமி ஆண்டுகள் ஆகியிருக்கும். அங்கங்கு சுற்றித் திரிந்து கொண்டிருக்கும் பெரிய பெரிய "ஆபோ" வகை பறக்கும் தட்டுகள். அவற்றில் ஒரு பறக்கும் தட்டில் அமைந்த "கினோவா செப்டகன்" என்ற ப்ளானடரி செக்யூரிடி சென்டரில் மிதந்தபடி வேலை செய்யும் டாப் க்ளாஸ் விஞ்ஞானிகள்.

மேலே இருந்த பெரிய திரையில் மூலையில் சில எண்கள் ஒளிர்ந்து கொண்டிருந்தன. திரையின் நடுவில் இரண்டு புள்ளிகள் ஒன்றை ஒன்று நோக்கி மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தன. எல்லார் முகங்களிலும் பெரும் பதட்டம். பக்கத்து (ஒரு மில்லியன் ஒளி ஆண்டுகள் தூரம்தான்) கிரகமான "ஹூரா"விலிருந்து சில தீவிரவாதிகள் லேசர் போன்ற கதிர்வீச்சுகள் மூலம் செலுத்திய 'ரே பாம்' வருவதை அறிந்து அதை எதிர் கொள்ள 'கௌண்டர் ரே பாம்' செலுத்திவிட்டு பதட்டத்துடன் திரையை கவனித்துக் கொண்டிருந்தனர். ரே பாம் தாக்குதலை சமாளிக்க வேண்டிய அளவு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்தாலும், அதை முறியடிக்கும் முயற்சி இதுவே முதல் முறை.

பல விஞ்ஞானிகள் பரபரப்பாக தங்களது டேப்லட்டுகளிலிருந்து சில கட்டளைகளை அனுப்பிக் கொண்டிருந்தார்கள். பூமி கிரகத்திற்கான அதிகார பூர்வ நிருபரான மேக்ஸ் செய்திகளை சேகரித்து அனுப்புவதற்கான ஏற்பாடுகளில் இருந்தான்.

திரையில் புள்ளிகள் இரண்டும் நெருங்கிக் கொண்டிருந்தன. சூழ்நிலையின் இறுக்கம் ஒவ்வொருவர் முகத்திலும் அப்பட்டமாக பிரதிபலித்தது. புள்ளிகள் இன்னும்... இன்னும்... இன்னும்... நெருங்ங்ங்ங்கி...... ஒரு பெரிய வெளிச்சம் உண்டாகி பின் இரண்டு புள்ளிகளும் மறைந்து போயின.

"ஹூரே....ஹூரே.... வீ டிட் இட் ! வீ ஆர் சேவ்ட் !! ரிமார்க்கபில் !! "

மிதந்தபடியே ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். மேக்ஸ் செய்தியை பூமிக்கு அனுப்பி விட்டு திரும்பினான். அலுவலகத்தின் மறு மூலையில் இந்த அமளியிலிருந்தெல்லாம் விலகி இரண்டு விஞ்ஞானிகள் ஏதோ ஆழ்ந்த சிந்தனையில் இருப்பது போல கண்ணை மூடி மிதவைப் படுக்கையில் படுத்திருந்தனர். அருகே கினோவாவில் மிக மிக அரிதாகக் காணக் கிடைக்கும் கார்பைடு பென்சிலும், பாலிமர் தாள்களும். மேக்ஸ் அவர்கள் அருகே வந்தான்.

"இவ்வளவு பரபரப்பா இருக்கு... என்னவோ பயங்கர யோசனைல இருக்கீங்க ரெண்டு பேரும்? என்ன விஷயம்?"

நிமிர்ந்து பார்த்தனர் இருவரும். நெடு நேரம் யோசித்துக் கொண்டிருந்த களைப்பு இருவர் முகத்திலும்.

"ஒண்ணுமில்லைப்பா.... பூமி கிரகத்துல "ஆனந்த விகடன்" பத்திரிகைக்கு "கி.பி. 2409ல் ஒரு நாள்..."னு சயன்ஸ் ஃபிக்சன் கதை ஒண்ணு கேட்டிருக்காங்க. அதான் யோசிச்சிட்டுருக்கோம்" என்றனர் ப்ரொஃபசர் N.R.Sam என்ற "நர்சிம்"மும் டாக்டர் V.N.Poh என்ற "வெண்பூ"வும்.


நர்சிம் / வெண்பூ : கோச்சுக்கலைதானே? இஃகி ! இஃகி !!

Saturday, May 23, 2009

முன்னும்....பின்னும்

முன்னும்.....

உதிர்ந்த இலைகள்
உதிக்கத் தயங்கும் சூரியன்

வண்டு குடைந்த அழுகிய மாம்பழம்
ஆணி இல்லாத பம்பரம்

பஞ்சரான சைக்கிள்
குஷ்டம் பீடித்த கை

சாணை பிடிக்காத அருவாள்
ஒளியற்ற நட்சத்திரம்

தோல் கிழிந்த முரசு
பேட்டரி இல்லாத டார்ச் லைட்

பூர்வாசிரமத்தில் ஓட்டைப் பிரித்தவர்கள்
இன்று(ம்) வோட்டைப் பிரிக்கிறார்கள்

முன்னேற்றம் முள்முனையளவும் இல்லை
பிரச்சனைகள் மட்டும் நிரந்தரம்.

அதனால் என்ன?
2 வருடங்களுக்கு ஒருமுறையாவது
ஏதாவது ஒரு தேர்தலை சாக்கிட்டு
சிவகாசியில் அச்சடித்த காந்தி படம் போட்ட தாள்களும்
காக்கா பிரியாணியும் கிடைக்கிறதே !!

தமிழகம் ஒளிர்கிறது !!

...... பின்னும்

பிச்சையெடுக்கும் கரங்கள்
பேப்பர் பொறுக்கும் சிறுவர்கள்

தீக்குளிக்கும் இளைஞர்கள்
தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகள்

நலிவடையும் நெசவாளிகள்
கும்பி குறுகிய குடிசைத்தொழிலாளிகள்

குடிநீரில்லா கிராமங்கள்
பள்ளிக்கூடமில்லாத பட்டிதொட்டிகள்

பேருந்து போகாத பேரூராட்சிகள்
மருத்துவ வசதியற்ற மலைவாழ் மக்கள்

முன்னேற்றம் முள்முனையளவும் இல்லை
பிரச்சனைகள் மட்டும் நிரந்தரம்.

அதனால் என்ன?
மகனுக்கும் மகளுக்கும் மருமகனுக்கும் மைத்துனனுக்கும்
மத்திய அரசை ஆட்டிவைத்து
மந்திரி பதவியைக் கேட்டுப் பெற
எங்களால் முடிகிறதே !!

தமிழகம் ஒளிர்கிறது !!

Monday, May 18, 2009

"கடவுள் இருக்கின்றது"



எச்சரிக்கை : கொஞ்சம் நீளமான பதிவு. ரொம்ப இல்லாட்டாலும் கொஞ்சம் டெக்னிகலான விஷயங்கள் உண்டு. ஆற அமரப் படிங்க.

தலைப்பே ஒருமாதிரியா இருக்கா? இருக்கட்டும்... இருக்கட்டும்... கடவுள்னு ஒருத்தர் இருக்காரா இல்லையா? கடவுள் அஃறிணையா உயர்திணையா? இல்லை உயர்ந்ததிணையா? ஆத்திகனோ நாத்திகனோ, கல்லுக்குள்ள தேரை மாதிரி மனசோட அடி ஆழத்துல இந்தக் கேள்வி நிச்சயம் இருக்கும். ஆன்மீக மார்க்கத்துல கடவுளை "விளக்க" அநேக வழிகள் இருக்கு. ஆனா பொதுவா எல்லா வழிகளுமே intangible or subtle or vague. Concrete-ஆ இதுதான் இதுன்னு எளிமையாச் சொல்ல முடியல - அல்லது சொல்வது convincing-ஆ இல்லை. ஆனா விஞ்ஞானத்துக்கு இந்த அசௌகரியமே கிடையாது. எதையாவது செஞ்சு நிரூபிக்க முடிஞ்சா சரி ; இல்லேன்னா ஒத்துக்கவே ஒத்துக்காது. பூமி தட்டையானது, பூமிதான் மத்தியில; மத்த கிரகங்கள் அதைச் சுத்தி வருதுங்கறதுல இருந்து பலப் பல மதம் சார்ந்த, கடவுள் சார்ந்த நம்பிக்கைகளை தகர்த்து 'இதுதான் உண்மை'ன்னு அறுதியிட்டுச் சொன்னது விஞ்ஞானம். ஆனா விஞ்ஞானமும் மெய்ஞானமும் ஒண்ணுக்கொண்ணு எதிர்ப்பு மாதிரி தோணினாலும், உண்மைல ரெண்டுமே complimenting each other. இருக்கட்டுமே... எனக்கு என்ன ஆச்சு? எதுக்கு இந்த பீடிகை எல்லாம்? சொல்றேன்.

நேற்று முன் தினம் இன்னொரு ஓய்வுக்கான வாய்ப்பு கிடைச்சதுனால சட்டுனு "செர்ன்" போகணும்னு முடிவு பண்ணி கிளம்பிட்டேன். என்னோட ட்ரீம் லிஸ்ட்ல இருந்த இடம். CERN - European Centre for Nuclear Reasearch. இப்பதான் கொஞ்ச நாளா பார்வையாளர்களுக்கு திறந்துருக்காங்க. இது 20க்கும் மேற்பட்ட உலக நாடுகளோட நிதி உதவியோட ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம். போன செப்டம்பர்ல பேப்பர்ல படிச்சுருக்கலாம்..."ஏதோ டெஸ்ட் பண்றாங்களாம்... கொஞ்சம் ஏமாந்தாலும் உலகமே அழிஞ்சுரும்னு சொல்றாங்கடா மாப்ள... அடுத்த மாசம் கல்யாணத்த வெச்சுக்கிட்டு இதெல்லாம் நமக்குத் தேவையா?"னு எங்கயாவது டயலாக் கேட்டிருக்கலாம்... அந்த முக்கியமான சோதனையை நடத்தியது CERN. இந்த பரிசோதனைக்காக 5 இடங்கள்ல சோதனைக்கூடங்கள் இருக்கு. அதுல நாலு ஃப்ரான்சுக்குள்ள. ஒண்ணு ஜெனீவாவுக்கு பக்கத்துல ஸ்விஸ்-ஃப்ரான்ஸ் பார்டர்ல இருக்கற "மெய்ரின்"ங்கற கிராமத்துல இருக்கு. அங்கதான் நான் போனேன். ஜெனீவால இருந்து டவுன் பஸ் போகுது. 25 நிமிஷத்துல போயிடலாம்.


அப்பிடி இங்க என்னதான் சோதனை பண்றாங்க? அதுக்கு முன்னால கொஞ்சம் சயன்ஸ் ரிவைஸ் பண்ண வேண்டியிருக்கும். எல்லாப் பொருட்களும் அணுக்களால் ஆனது, அணுவோட ந்யூக்ளியஸ்க்கு உள்ள புரோட்டான்ஸ் இருக்கு, எலக்ட்ரான்ஸ் அதை சுத்தி வருதுங்கறது தெரியும். அப்பறம் புரோட்டான்களுக்கு உள்ள க்வார்க், எலக்ட்ரானுக்குள்ள லெப்டான்.... இதெல்லாம் இருக்குங்கறதும் தெரியும். ஆனா அதுக்கும் நுணுக்கமா ஒரு துகள் இருக்கலாம்... அதுதான் GOD Particle னு Higgs சொல்ற வரைக்கும் தெரியாது. அவர் சொன்னதால அதுக்கு Higgs Boson னு ஒரு பேரும் உண்டு. அதைத் தேடித்தான் இங்க சோதனை. பிரபஞ்சம் தோன்றினபோது அது இருந்துருக்கணும். பிரபஞ்சம் தோன்றிய (Big Bang) 10^-43 செகண்ட்க்கு என்ன நடந்திருக்கலாமோ அதை மறுபடி நிகழ வைத்து அந்த பரம ரகசியத்தை தெரிஞ்சுக்க கடந்த 40 வருஷமா இந்த திட்டம் நடக்குது. அந்த ரகசியத்தைத் தெரிஞ்சுக்கற வரைக்கும் அறிவியலாளர்களுக்கு தூக்கமே வராது.

சரி.... அதை எப்பிடித் தேடறது? அணுவே கண்ணுக்குத் தெரியாத ஒண்ணு. அதையும் விட நுணுக்கமான ஒண்ணை எப்பிடி...? அங்கதான் நம்ம ஐன்ஸ்டீன் சொன்னது உதவிக்கு வரும். E=mc2. ஆற்றல்ங்கறது எந்த நிலைலயும் இருக்கு. ஆற்றலோட condensed form நிறை (mass). நிலையா இருக்கும்போது ஈர்ப்பு விசையைப் பொறுத்து ஒரு நில ஆற்றலும் (potential) இயங்கும்போது இயக்க ஆற்றலும் (kinetic) வெளிப்படுது. அப்ப ஒளியோட வேகத்துல ஒரு துகளோட ஆற்றல் எவ்வளவு இருக்கும்? நம்மால நினைச்சே பாக்க முடியாது. அந்த மாதிரி ரெண்டு எனர்ஜியை மோத விட்டா...? அப்பிடி ஒரு மோதல்ல... ஒரு ஆற்றல் மிக்க மூலத்துல இருந்துதான் பிரபஞ்சம் உண்டாச்சுங்கற சித்தாந்தத்தின் அடிப்படைல இந்த சோதனை. அப்பிடி ஒரு மோதல் நிகழும்போது இந்த GOD Particle வெளிப்படலாம். எல்லாத்துக்கும்.. எல்ல்ல்ல்ல்லாத்துக்கும்... மூல சக்தியான அந்த சக்தி என்னதுன்னு ஒருவேளை விடை கிடைக்கலாம்ங்கற முயற்சிதான் இது.

எப்பிடி இந்த மோதலை நிகழ்த்தறது? ரெண்டு புரோட்டன்களை ஒளியோட வேகத்துல ஒண்ணோட ஒண்ணு மோத வைக்கலாம். ஆனா ஒளி வேகத்துல புரோட்டான் துகளை முடுக்கணும்னா நேர்கோட்டுப் பாதைல முடியாது. அவ்வளவு தொலைவுக்கு பூமில சோதனைக்கூடம் வைக்க முடியாது. மாற்று என்னன்னா, அதை ஒரு வட்டப் பாதைல முடுக்கறது. இதுக்காக பூமிக்கு 100 மீட்டர் கீழ 27 கிமீ நீளத்துக்கு ஒரு வட்டப் பாதை அமைச்சுருக்காங்க. பேரு Large Hadron Collider (LHC). அந்தப் பாதைல 5 இடத்துல சோதனைக் கூடங்கள். ஒரு துகள் முடுக்கி(Particle Accelerator) மூலமா சில பில்லியன் புரொட்டன்களை எதிரெதிர் பாதைகள்ல கிட்டத்தட்ட ஒளி வேகத்துக்கு (99.99%) முடுக்கி இந்த 27 கிமீ பாதைல அங்கங்க அதுக மோதறதுக்கு வசதியா பாதைகளை குறுக்க ஓடவெச்சு..... எங்கயாவது மோதினா அந்த நிகழ்வுகளை துல்லியமா சேகரிச்சு அனுப்ப சூப்பர் கம்ப்யூட்டர்க... எல்லாமே அதிவேக கடத்திகள். Super conductors.

ப்ரோட்டான்களை முடுக்கி அதுகளை deflect பண்ணி வட்டப் பாதைல ஓட வைக்க அதிவேகக்கடத்தி இருமுனை மின்காந்தங்கள் (super conducting dipole electromagnets), புரோட்டான்களை நெருக்கமா pack பண்ணி மோதலுக்கான சாத்தியங்களை அதிகரிக்கரதுக்கு நால்முனை மின்காந்தங்கள் (quadrupole). (இந்த Dipole / Quadrupole பத்தியே ஒரு நாள் முழுக்க பேசலாம்) இந்த மின்காந்தங்கள் எல்லாமே -271Cலதான் முழுத் திறன்ல வேலை செய்ய முடியும். எல்லாமே superconductingனால ஒரு தனி cooling system. திரவ நைட்ரஜன், திரவ ஹீலியம் - மில்லியன் லிட்டர்களுக்கு மேல - இதெல்லாம் பயன்படுத்தி குளிர்விக்கறாங்க. எல்லாமே extreme technologies.

மோதும்போது சிதறல்ல வேறு சில துகள்களும் - GOD particle உள்பட - கிடைக்கலாம். அதைக் கண்டுபுடிச்சு சேகரிக்க Particle Detectors இருக்கு. மேலும் இந்த பரிசோதனையின்போது TB கணக்குல சேகரிக்கற டேடாவை அனுப்ப, சேகரிக்க, ஆய்வு பண்ணன்னு பல நூதனமான தொழில்நுட்பங்கள் (grid computing) கூட இந்த ஆராய்ச்சியோட பக்க விளவுகளாக உருவாகியிருக்கு. இன்னும் சில வருடங்கள்ல அதெல்லாம் day-to-day computing முறைல வந்துடலாம். இப்பவே இந்த தொழில் நுட்பங்களை மருத்துவத் துறைல பயன்படுத்த ஆரம்பிச்சுட்டாங்க.

போன செப்டம்பர் மாசம் இதை டெஸ்ட் பண்ணும்போது எதிர்பாராத ஒரு சின்ன மின் கசிவுல திரவ ஹீலியம் சூடாகி வாயுவாகி, அழுத்தம் அதிகமாகி 50 மின்காந்தங்களுக்கு மேல சேதமாயிடுச்சு. எல்லாம் சரியாகி மறுபடி அடுத்த டெஸ்டுக்கு இன்னும் வருஷங்கள் ஆகலாம். ஆனால் விஞ்ஞானம் "கடவுளை"த் தேடும் வேலையத் தொடர்ந்து செய்யும். விஞ்ஞானமும் மெய்ஞானமும் குவியற இடம் ரொம்ப தொலைவுல இல்லைன்னு தோணுது. மெய்ஞானத்துல கடவுளை "உணர" வைக்க முடியும்னா, அதை "காண" வைக்கறது விஞ்ஞானத்துனால முடியலாம். முடிக்கும். இப்பொதைக்கு இந்த Higgs Boson தான் அதுன்னு நாம தேடிக்கிட்டுருக்கோம். அதுவாகவும் இருக்கலாம் (அல்லது அதை விட சூட்சுமமான ஒன்றாகவும் இருக்கலாம்) அந்த ஆதார சக்தியை, மூலப் பொருளைத்தான் நம்ம வேதங்கள் எல்லாம் பரம்பொருள், மூலாதாரம், பரமார்த்த சத்யம், சத்தாமாத்ரம், சத்து அப்பிடின்னெல்லாம் பல பேர்கள்ல சொல்லுது. பார்க்கலாம்......

சரி... ரொம்ப நீளமாப் போச்சு.... ரொம்பவே மேலோட்டமா சொல்லியிருக்கேன். ஆழமா சொன்னா அறிவியல் பாடம் எடுக்கற மாதிரி ஆயிடும். சொல்ல நான் ரெடிதான்.... (கடைக்கு வர நாலு கஸ்டமரும் ஒடிட்டா?? :)))) இன்னும் சில interesting விஷயங்கள் - பொருள் ; அபொருள் (matter ; anti-matter) - சொல்ல வேண்டியிருக்கு... அடுத்த இடுகைல....
டிஸ்கி : இதைப் படிச்ச பிறகு, நான் ஆத்திகனா நாத்திகனா, அறிவியலாளனா ஆன்மீகவாதியான்னு கேட்டா.... முதல் பத்தில சொன்ன மாதிரி ரெண்டுமே complimenting each other.



















Thursday, May 14, 2009

ஒலிம்பிக்ஸ் தலைநகரம் "லூசான்"

பொதுவாவே நாம எங்கியோ தூரத்துல இருக்கற இடங்களுக்கு எல்லாம் லீவு போட்டு ப்ளான் பண்ணி போய் சுத்தினாலும், நம்ம ஊருக்குப் பக்கத்துல் இருக்கற இடங்களுக்கு போக மாட்டோம். "இங்கதானே இருக்கு... எப்ப வேணாப் போகலாம்.. எங்க போயிடப் போகுது..."ங்கற லேசான அலட்சியம்தான் காரணம். அது மாதிரிதான்.. பல முறை ஜெனீவாவுக்கு வந்தாலும் பக்கத்துல - ட்ரெயின்ல 1/2 மணி நேரத்துல - இருக்கற "லூசான்" (Lausanne) க்கு போக இப்பத்தான் அமைஞ்சுது.

இரவு வேலை முடிச்சுட்டு அபார்ட்மெண்டுக்கு வந்தா தூக்கம் வரலை. சட்டுனு யோசனை. "அட... இத்தனை நாள் மிஸ் பண்ணிட்டமே... இன்னிக்குப் போயிட்டு வந்துடலாம்"னு ஒரு 10 மணி சுமாருக்கு கிளம்பினேன். ஜெனீவா ஸ்விஸ்ஸோட தென்மேற்கு முனைல இருக்கறதால இங்கிருந்து போற 99% ட்ரெயின்க லூசான் போய்த்தான் போயாகணும். 11 மணிக்கெல்லாம் போய் சேர்ந்துட்டேன். போகறதுக்கு முன்னாலயே எங்கெங்க போகணும்னு முடிவு பண்ணி முதல்ல ஒலிம்பிக்ஸ் ம்யூசியம்னு லிஸ்ட்ல வெச்சேன். ஸ்டேஷன்ல இருந்து வெளில வந்து மெட்ரொ ட்ரெயின் புடிச்சு ஊஷி (Ouchy) போனேன். அங்க இருந்து ஒரு 1/2 கி.மீ. தூரத்துல ஏரிக்கரைச் சாலைலயே இருக்கு ம்யூசியம். ரம்மியமான சூழல். அதிகக் கூட்டம் இல்லாத அமைதியான ஊர்.

"லூசான்" ஸ்விட்சர்லாந்தோட முக்கியமான நகரம். ஒலிம்பிக்ஸின் தலைநகரம்னு சொல்லப்படுது. "சர்வதேச ஒலிம்பிக்ஸ் கமிட்டி"யோட தலைமையகமும், அதைத் தோற்றுவிச்ச "பியர் தி கூபெர்தின்" (Pierre de Coubertin) நினைவா இங்கதான் "ஒலிம்பிக்ஸ் ம்யூசியம்" இருக்கு. 1894ல, உலக நாடுகளோட ஒற்றுமைக்காகவும், அமைதிக்காகவும் மக்களை ஒருங்கிணைக்க விளையாட்டு ஒரு சரியான கருவியா இருக்கும்னு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை மறுபடி ஆரம்பிக்கணும்னு தீர்மானம் போட்டாங்க. 2 வருஷம் கழிச்சு 1896ல ஏதென்ஸ்ல முதல் ஒலிம்பிக்ஸ் ஆரம்பிச்சு போன வருஷம் பீஜிங் வரைக்கும் 29 போட்டிகள் நடத்தியாச்சு.

ம்யூசியத்தோட அமைப்பே ஒரு ஆச்சரியம். ஒரு சின்ன குன்றுக்கு பின்பக்கமா இருக்கு. முன்பக்கத்துல இருந்து மேல ஏறிப் போகப் போக கட்டடம் கொஞ்ச கொஞ்சமா தெரியற மாதிரியான ஒரு அமைப்பு. ஏறிப் போற வழில எல்லாம் அங்கங்க கலைநயமான சிற்பங்கள். எல்லாமெ விளையாட்டு, உடல் வலிமை, அமைதி இதையெல்லாம் வலியுறுத்தற மாதிரி. வன்முறையே கூடாதுன்னு சொல்றமாதிரி ஒரு ரிவால்வரோட முனைய முடிச்சு போட்டு வெச்ச மாதிரியான் சிற்பம் உலகப்புகழ் பெற்றது. அதுவும் இங்கதான் இருக்கு.

ம்யூசியத்துக்கு வெளிய ஒரு ஒலிம்பிக் தீபம் ஒண்ணு வெச்சு அது தினமும் பகல் 12 மணிக்கு ஏத்தி ஒலிம்பிக் கீதம் பாடறாங்க. வாசல்ல 8 பெரிய தூண்கள். முதல் ரெண்டு தூண்கள்ல முதலாவது ஒலிம்பிக்ல இருந்து ஒவ்வொரு வருடமும் எங்க நடந்துதுனு பொறிச்சு வெச்சுருக்கு. ரெண்டாவது தூண்லயே இன்னும் நிறைய இடம் இருக்கு. இன்னும் ஒரு 10 நூற்றாண்டுக்கு எழுதலாம்).



ம்யூசியம் சுத்திப்பாக்க நுழைவுக்கட்டணம் 15 ஃப்ரான்க். சில எக்ஸிபிஷன் ஹால்களுக்கு உள்ள ஃபோட்டோ எடுக்க அனுமதி கிடையாது. முதல் மாடில ஒலிம்பிக் வரலாறு, மெடல்கள், இதுவரை நடந்த எல்லா ஒலிம்பிக் விளையாட்டுகளோட ஜோதிகள் (சிட்னி, பீஜிங் ஜோதிகள் அவ்வளவு அழகு!!) எல்லாம் அழகா காட்சிக்கு வெச்சுருக்காங்க. ஒவ்வொரு விளையாட்டின்போதும் ஜோதியை எப்பிடி ஏத்தினாங்கங்கற க்ளிப்பிங்குக ஒரு பெரிய (பார்சிலோனால அம்பு விட்டு ஏத்தினது ஞாபகம் இருக்கா?) ஓடிக்கிட்டே இருக்கு. பக்கத்து ஹால்ல ஒலிம்பிக் விளையாட்டுக் கருவிகள், பயன்படுத்தற உடைகள் எல்லாம் பார்வைக்கு. இன்னொரு ஹால்ல ஒலிம்பிக் "ஹீரோஸ்". எல்லா சிறந்த விளையாட்டு வீரர்களைப் பத்திய படங்கள், குறிப்புகள், அவங்களோட உடைகள், உபயோகப் படுத்திய கருவிகள்....... அருமை !!

இரண்டாவது மாடில விண்டர் ஒலிம்பிக்ஸ், யூத் ஒலிம்பிஸ், பாரலிம்பிக்ஸ் பற்றியது. அந்த விளையாட்டுகளுக்கான கருவிகள், உடைகள், மெடல்கள் எல்லாம் பார்வைக்கு. கூடவே "ஹீரோஸ்". பல விளையாட்டுகளை டிவில பாத்திருக்கோமே தவிர அதையெல்லாம் நேர்ல பாக்கும்போது பிரமிப்பா இருக்கு. சில கருவிகளையெல்லாம் பாத்தா இதை எப்பிடி பிடிப்பாங்க, இந்த உடைகளை எப்பிடிப் போட்டுக்கறாங்கன்னு சந்தேகம் வருது.


பேஸ்மெண்டுல பெரிய்ய்ய்ய்ய லைப்ரரியும் ஒலிம்பிக்ஸ் ஆராய்ச்சி மையமும். ஒலிம்பிக் சம்பந்தப்பட்ட புத்தகங்கள், டிவிடிக்கள்னு குமிஞ்சு கிடக்கு. நிறையப் பேர் காலேஜ் மாதிரி வந்து விளையாட்டுகளைப் பத்தி ஆராய்ச்சி பண்ணிக்கிடுருக்காங்க. உள்ளயே ஒரு 3D சினிமா ஹால் வேற. 1/2 மணி நேரத்து ஒரு படம். நான் ரெண்டு படம் பாத்தேன். ஸ்கீ ஜம்பிங் பண்றது நம்ம முகத்து மேலயே வந்து விழற மாதிரி இருந்தது.

லைப்ரரி & ஜெஸ்ஸீ ஒவன்ஸ் ஷூ

வெளிய வரும்போது சொவீனியர் ஷாப்புல பார்சிலோனா ஒலிம்பிக் கை விசிறி ஒண்ணும், மாஸ்கோ ஒலிம்பிக் டை ஒண்ணும் வாங்கிக்கிட்டு வந்தேன். விளையாட்டு வெறியர்கள் வந்தாங்கன்னா அப்பிடி 'ஆ'ன்னு வாயைத் திறந்துக்கிட்டு அங்கியே உக்காந்துடுவாங்க. அவ்வளவு விஷயங்கள் இருக்கு. அட்டகாசம் !!

மத்தபடி ஊர்ல பாக்கறதுக்கு பெரிசா ஒண்ணும் இல்லை. எல்லா ஐரொப்பிய நகரங்கள் மாதிரி நாலு கதீட்ரல்க, ஒரு சிடி ஹால், அங்கங்க ஃபவுண்டன்க. ஊரே ஒரு மலை மேலதான் இருக்கு. ஏரிக்கரையை விட சிடி சென்டர் 200 மீட்டர் உசரத்துல இருக்கு. ரோடெல்லாம் ஏற்றத்துல நடந்து கால் வலி கண்டுருச்சு. அப்பிடியே ஒரு ரவுண்டு வந்துட்டு நிறைய க்ளிக்கிட்டு திரும்ப ஸ்டேஷனுக்கு வந்து ட்ரெயினைப் புடிச்சு திரும்ப வந்தேன். "ஆஹா... நாம தூங்கி 30 மணி நேரத்துக்கு மேல ஆச்சே... அதான் கண்ணு இப்பிடி சொருகுது"ன்னு படுத்தா ஆபீஸ்ல அவங்களுக்கு மூக்குல வேர்த்துது போல. போன் பண்ணி "தூங்கறயா... தூங்கு தூங்கு... ஒண்ணும் அவசரமில்ல... இன்னும் 1 மணி நேரம் கழிச்சு வந்தாப் போதும்"னாங்க. அப்பறம் தூக்கமாவது வெங்காயமாவது :(


சிடி சென்டர் & சிடி ஹால் பகுதி